விலைமகளிரைக் கருப்பொருளாகக் கொண்டு வரைந்த வண்ணமயமான போஸ்டர்கள் மூலம் 19ம் நூற்றாண்டின் இணையற்ற ஓவியர்களில் ஒருவராக இன்றளவும் நினைவும் கூறப்படுவர் ஹென்றி டி டாலேஸ் லாட்ரெக். மிக மிக வசதியான குடும்பத்தில் பிறந்தவர் லாட்ரெக். இவருக்கு சிறுவயதிலேயே இரு கால்களிலும் ஊனம் ஏற்பட்டு, அதன் காரணமாக வளர்ச்சி குன்றியவராகக் காணப்பட்டார். ஓவியராக மாறிய பின்பு, லாட்ரெக் பெரும்பான்மையான தனது நேரத்தை இரவு விடுதிகள், டான்ஸ் கிளப் மற்றும் விபசார விடுதிகளில் செலவிட்டார். குடிப்பது, விலைமகளிரை மையமாகக் கொண்டு ஓவியம் வரைவது ஆகியவையே இவரது தினசரி வாழ்க்கையாக இருந்தது. 26ம் வயதில் ஓவியத் துறையில் புகழின் உச்சத்தை அடைந்தார். ஆனால் மிதமிஞ்சிய குடிப்பழக்கம் அற்புதமான இவரது ஓவிய வாழ்க்கையை வெகு சீக்கிரமே முடிவுக்குக் கொண்டு வந்தது.


1. ஹென்றி டி டாலஸ் லாட்ரெக் அவர் காலத்தில் பெரிதும் போற்றப்பட்டார். அவருடைய வண்ண மிக படைப்புகளான போஸ்டர்களுக்காவும் அவருடைய ஓவியங்களுக்காகவும் வாழ்வில் அன்பைத் தேடி அலைந்தவர். ஆனால் தன் ஓவியங்களில் வாழ்வில் நம்பிக்கையூட்டும் வண்ணங்கள் நிறைந்த கேளிக்கை நிறைந்த காட்சிகளும் இரவு விடுதிகளும் நிறம்பி இருந்தது. வெகு சொற்ப காலமே வாழ்ந்த லாட்ரெகின் ஓவியங்கள் பாரிஸின் ஒரு வாழ்வைக் காண்பிப்பதோடு வண்ண அச்சு முதல் இன்றை வண்ண அச்சுக் சேர்க்கையின் கடைசி நிலையான டிஜிட்டல் முறை ஆகியவற்றில் மூலகூறுக்கு பயனித்தால் இவர் அங்கு இருப்பார்.
Henri De Toulouse Lautrec


லாட்ரெக் குடும்பம் பிரான்சின் செல்வ செழிப்பு மிக்க குடும்பங்களில் ஒன்று. இந்தக் குடும்பங்களுக்கு 19ம் நூற்றாண்டில் அரசு அதிகாரத்திலும் சிறிது பங்கு இருந்தது. லாட்ரெக் குடும்பத்திற்கு தென் மேற்கு பிரான்சில் ஏறாளமான அடுக்கு மாடி வீடுகளும், தோட்டங்களும் இருந்தன. வறுமை, துயரம் இவை எதுவும் அறியாதவராகவே லாட்ரெக் வளர்ந்தார். இவரது அப்பா, அம்மா இருவரும் எதிரெதிர் குணாம்சங்கள் கொண்டவர்களாக இருந்தனர். அப்பா தடாலடி மனிதராகவும், பெண்களையும் மிருகங்களையும் வேட்டையாடுவதை முழு நேரத் தொழிலாகக் கொண்டவராகவும் இருந்தார். ஆனால் அம்மாவோ சாந்த சொரூபியாகவும், தெய்வ பக்தி மிக்கவராகவும் வாழ்ந்தார். இந்த இருவருக்கும் முதல் மகனாகப் பிறந்தவர் லாட்ரெக்.

உல்லாசப் பேர்வழியான அப்பா குடும்பத்தைப் பற்றி கவலைப்படாதவராக இருக்க, லாட்ரெக்யை வளர்ப்பதில் அவரது அம்மா மிகுந்த அக்கறை காட்டினார். பின்னாளில் மிகப்பெரும் ஓவியராகவும், குடிகாரராகவும் லாட்ரெக் உருமாறியபோதும், அம்மாவின் அக்கறை மட்டும் குறையவேயில்லை. சிறுவயதில் லாட்ரெக் மிக அழகான குழந்தையாகக் காணப்பட்டார். அவரது வசீகர தோற்றத்தைப் பார்த்தவர்கள், ‘குட்டித் தங்கம்’ என்றே அழைத்தனர்.

ஆனால் அதிக வலுவில்லாத கால்கள் அவரது தோற்றத்தை பின்னாளில் மாற்றியது. இரு முறை (ஒரு முறை நாற்காலியில் இருந்தும், மறு முறை ஒரு பள்ளத்திலும்) கீழே விழுந்து அவரது கால் எழும்புகளில் முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக உடலின் மற்ற பகுதிகளில் முழு வளர்ச்சி இருக்க, கால் பகுதி மட்டும் வளர்ச்சி குன்றியும், வலுவின்றியும் காணப்பட்டது. இதனால் அவரது உருவம் ஐந்தடி உயரத்தைத் தாண்டவில்லை. ‘குட்டித் தங்கம்’ என சிறுவயதில் அழைக்கப்பட்ட லாட்ரெக்கின் அழகு குள்ள உருவமாக மாறியது. அவரது சுய உருவப் படங்களும், கடிதங்களில் தன்னைப் பற்றி அவர் எழுதியிருக்கும் வாசகங்களும் இதையே காட்டுகின்றன. 

Toulouse Lautrec
2. தனது 31வது வயதில் ஒரு டிரிக் புகைப்படத்திற்கு தானே ஓவியராகவும் தானே மாடலாகவும் போஸ் கொடுத்தது. புகைப்படத்தில் உள்ள ஓவியத் திரைச் சீலையில் அவருடைய கேலிச் சித்திரம் காண்க.


கால்முறிவு சம்பவங்களைத் தவிர்த்துப் பார்த்தால், லாட்ரெக்கின் சிறுவயதுப் பருவம் உற்சாகம் நிரம்பியதாகவே இருந்தது. தாத்தா சொந்தமான, அரண்மனை போன்ற வீட்டில்தான் வளர்ந்தார். அங்கு அவர் வயதையொத்த உறவினர் பிள்ளைகளுடன் பொழுது கழிந்தது. பேட்மின்டன் விளையாடுவதிலும், குதிரைப் பொம்மைகளை சேகரிப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஆங்கிலம் மற்றும் லத்தீன் மொழிகளைக் கற்றுக் கொண்டார்.

வசதியான குடும்பம் என்பதால் லாட்ரெக்கின் வீட்டிற்கு கட்டட வரைகலையாளர்கள் அடிக்கடி வருவதுண்டு. அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பு லாட்ரெக்கு ஓவியம் வரைவதில் நாட்டத்தை ஏற்படுத்தியது. 14வது வயதில் தொழில் முறை ஓவியர் ரேனி பிரின்ஸ்டெள-விடம் முறையாக ஓவியம் பயிலத் தொடங்கினார். வாய் பேசமுடியாதவராகவும், காது கேட்க முடியாதவராகவும் விளங்கிய ரேனிக்கு குதிரைகள், வேட்டையாடப்படும் இதர மிருகங்களை வரைவதில் சிறப்பான தேர்ச்சி இருந்தது. லாட்ரெக்கும் குதிரை என்றால் மிகவும் விருப்பமாதலால், ரேனியுடன் அதிக நேரத்தை செலவிட்டார். 

Divan
3. 1893ல் வரையப்பட்ட இந்த போஸ்டர் ஓவியம் லாட்ரெக்கின் லித்தோ முறைக்கு ஒரு சான்று. நான்கு வண்ணங்களே பயன்படுத்தப்பட்ட இதில் வளரும் நடிகை ஜேன் சுவரில் அழகாக உட்கார்ந்திருப்பதுவும், தலை துண்டிக்கப்பட்டபடி பாடுவர் தெரிந்தாலும் அவர் கையுறைகளால் அவரும் புகழ்பெற்ற பாடகர் கில்பர்ட் என்பதும் தெரிந்த ஒன்றுதான். லாட்ரெக்கின் லித்தோ டெக்னிக்கான பல்துலக்கும் பிரஷ்ஸை வைத்து ஓவியத்தின் மேல் பரப்பில் புள்ளிகள் உருவாக்கும் உத்தியும் புகழ்பெற்ற ஒன்றுதான்.


1882ல் லாட்ரெக் தனது அம்மாவுடன் பாரீஸ் நகரில் குடியேறினார். அங்கு போன்னெட் என்பவரிடம் ஓவியப் படிப்பைத் தொடர்ந்தார். போன்னெட், லாட்ரெக் வரைவதை ஓவியங்களாகவே ஏற்றுக் கொள்ளவில்லை. போன்னெட் தனது ஓவியக் கல்லூரியை மூடியபோது, கோர்மன் என்ற புகழ்பெற்ற வரலாற்று ஓவியரிடம் லாட்ரெக் மாணவராக சேர்ந்தார். இங்கு இவரது ஓவியங்கள் மதிக்கப்பட்டதோடு, தொடர்ந்து வரைய ஊக்கமும் கிடைத்தது. 21 வயதில் லாட்ரெக் முழுநேர ஓவியரானார். பாரீஸின் வட புறநகர்ப் பகுதியில் நிறைய கேளிக்கை விடுதிகள் இருந்தன. அங்கு தனது ஓவிய அரங்கை நிர்மாணிக்க லாட்ரெக் விரும்பினார். அதற்கு அவரது பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பணம் தரவும் மறுத்துவிட்டனர். இதனால் கோபமடைந்த லாட்ரெக் வீட்டை விட்டு வெளியேறினார்.

கோர்மனிடம் ஓவியம் பயின்ற க்ரேனிர் என்பவரும் அவரது மனைவியும் முன்னாள் ஓவிய மாடலும் ஆன லில்லியும், லாட்ரெக்கு ஆதரவாக இருந்தனர். லாட்ரெயை நடன விடுதிகள், இரவு விடுதிகளுக்கு அழைத்துச் சென்றனர். அதே நேரத்தில் கோர்மனிடம் ஓவியம் பயின்ற வேறு சில மாணவர்கள் ஓவியத்துறையின் வேறு சில எல்லைகளை லாட்ரெக்குக் காட்டியதோடு, அவருக்கென்று தனி பாணியை உருவாக்கிக் கொள்ளவும் உதவினர். 

Jane
4. இதுவும் லாட்ரெக்கின் புகழ்பெற்ற ஒரு போஸ்டர் ஓவியம். லாட்ரெக்கின் பிரிய நடிகை ஜேன் சுவரில் தான் இதில் கேன்கேன் நடனம் ஆடுபவர்.

லாட்ரெயின் ஓவியங்கள் அவருக்குப் பணத்தையும் புகழையும் பெற்றுத் தந்தன. சிறிது நாட்களில் லாட்ரெயின் பெற்றோர் அவர் சொந்தமாக ஓவிய அரங்கு அமைத்துக் கொள்ளவும், வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொள்ளவும் உதவும் வகையில் பெரும்பணத்தைக் கொடுத்தனர்.

இருபத்தி நாலாம் வயதில் லாட்ரெக் தனது ஓவியங்களை கண்காட்சியில் வைத்தார். அவற்றில் இருந்த தனித்துவமான அழகு அவருக்குப் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அவரது ஓவிய அரங்கும், வீடும் இரவு விடுதிகளுக்கு அருகிலேயே இருந்தது. குள்ளமான உருவம், வட்ட வடிவிலான தொப்பி, கையில் ஒரு ஊன்றுகோல் என இரவு விடுதிகளில் அனைவருக்கும் அறிமுகமான நபராக வெகு சீக்கிரமே லாட்ரெக் மாறினார். முன்னிரவுப் பொழுதுகளில் கேளிக்கை விடுதிகளுக்குச் செல்வது, குடிப்பது, நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டே ஓவியம் வரைவது இதுவே ஹென்றியின் தினசரி வாழ்க்கையாக மாறியது. குறைவான நேரம் தூங்கினார். அதிக நேரம் வரைந்தார்.

ஓவியத் துறையின் பல்வேறு பகுதிகளில் தனது கிளைகளைப் பரப்பினார். பல முக்கிய பத்திரிகைகளுக்கு ஓவியங்கள் வரைந்து கொடுத்தார். மெளலின் ரோக் என்ற நடன விடுதி ஒன்றுக்கு இவர் வடிவமைத்துக் கொடுத்த போஸ்டர் ஒன்று பாரீஸ் நகரம் முழுவதும் சிலாகிக்கப்பட்டது. இந்த போஸ்டர் லாட்ரெக்கு பெரும் புகழையும் மேலும் அதிக போஸ்டர்கள் வரைவதற்கான வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது. வெகு சீக்கிரத்தில் பாரீசின் முன்னணி போஸ்டர் வடிவமைப்பாளராக லாட்ரெக் மாறினார். அதோடு ஆல்பங்கள், மெனு கார்டுகள் வடிவமைப்பது, புத்தகங்களுக்கு முகப்பு ஓவியம் வரைவது ஆகியவற்றிலும் கவனம் செலுத்தினார். 

Moulin Rouge
5. ‘முலான் ரூச் சில்’ என்ற தலைப்பு கொண்ட ஓவியம், வலது புறம் பாதிமுகம் உள்ள பெண்மணியின் முகத்தில் மேடை வெளிச்சம் விழுவதும், லாட்ரெக்கும் இதில் பின்புறத்தில் அவருடைய உறவினர் நண்பருடன் நடந்து செல்வது போல் வரையப்பட்ட கேளிக்கை நிலைக் காட்சி..


எடுத்துக் கொண்ட வேலையில் அவர் காட்டிய சிரத்தை, பாரீஸ் நகர ஓவியர்களிடையே அவருக்கு தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுத் தந்தது. பெரும்பாலான காலை நேரங்களில் முன் தினம் அணிந்த உடைகளுடன் இரவு விடுதிகளில் இருந்து வெளியே வரும் லாட்ரெக், அன்றைய பொழுதும் ஓய்வெடுக்காமல் தொடர்ச்சியாக வரைவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார்.

இதே காலகட்டத்தில் அவரது இரவு வாழ்க்கையும் உச்சத்தை அடைந்தது. காபரே நடன விடுதிகளின் தினசரி வாடிக்கையாளராக அவர் இருந்தார். அளவுக்கு அதிகமாக குடித்தார். உயர்தர விலைமகளிர் விடுதிகளுக்குத் தொடர்ச்சியாக சென்றார். இது அத்தகைய விலைமகளிர் விடுதி ஒன்றிலேயே பின்னர் தனது ஓவிய அரங்கு ஒன்றையும் நிர்மாணிக்கும் அளவுக்குச் சென்றது. அரைகுறை ஆடையுடன் இருக்கும் விலைமகளிரே அவரது ஓவியங்கள் அனைத்துக்கும் மாடலாக விளங்கினர்.

விலைமகளிருடன் ஏற்பட்ட தொடர்பால் லாட்ரெக்கு ‘சிப்லிஸ்’ எனப்படும் பால்வினை நோய் ஏற்பட்டது. அதோடு குடிப்பழக்கமும் அதிகமானதால், உடல் நிலை சீர்கெட ஆரம்பித்தது. எப்போதும் டாக்டர் ஒருவர் உடன் இருந்து உடல்நிலையைக் கவனிக்கும்படி ஆயிற்று. அதே காலகட்டதில்தான் அவரிடம் இருந்து பல அற்புதமான ஓவியங்களும் வெளிவந்தன. 
லாட்ரெக் ஏராளமான பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தாலும் யாரையும் காதலித்தது இல்லை. யாருடனும் திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் சூசன்னா வாலடன் என்ற பெண்மணியிடம் மட்டும் நீண்ட நாள் தொடர்பு வைத்திருந்தார். இதற்குக் காரணம் சூசன்னா ஒரு மாடலாக இருந்ததோடு மட்டுமல்லாமல் அவரே ஒரு ஓவியராகவும் விளங்கியதுதான்.

ஒரு கட்டத்தில் சூசன்னா, லாட்ரெயை தீவிரமாகக் காதலிக்கத் தொடங்கினார். தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் லாட்ரெக் திருமணம் என்ற வட்டத்தில் சிக்கிக் கொள்ளவில்லை. அவரது மனதை மாற்ற சூசன்னா தற்கொலை நாடகம் கூட நடத்தினார். ஆனால் அந்த தற்கொலை முயற்சி, போலி என்பது தெரியவரவும் அவருடன் பழகுவதையே லாட்ரெக் ஒரேயடியாக நிறுத்திவிட்டார்.

Lautrec
6. ‘பெண் கோமாளி’ என்ற ஓவியம் 1895ல் வரையப்பட்டது, உடையைத் திருத்தும் லாட்ரெக்கின் மற்றொரு பிரிய நடிகை தான் இந்தப் பெண்.

உடல் நலம் மிகவும் மோசமாகவே, லாட்ரெக் தனது அம்மாவுடன் போய் சேர்ந்தார். ஆனாலும் குடிப்பழக்கமும் இரவு நேர கேளிக்கைகளும் குறையவில்லை. இதை அவரது வீட்டார் எதிர்த்ததோடு அவரது நடவடிக்கைகளில் தலையிடவும் தொடங்கினர். குறிப்பாக அவரது மாமாவுக்கு விலைமகளிரை வைத்து வரையப்பட்ட கவர்ச்சியான ஓவியங்கள் எதுவும் சுத்தமாகப் பிடிக்கவில்லை. பாரீஸில் தங்கள் குடும்பத்திற்கு இருக்கும் செல்வாக்கிற்கு இழுக்கு தேடித் தரும் வகையிலேயே லாட்ரெக் வரையும் ஓவியங்கள் இருப்பதாக அவரது அம்மாவிடம் சண்டை போட்டார். அதோடு லாட்ரெக் வரைந்த ஓவியங்கள் சிலவற்றை தீயிட்டுக் கொளுத்தவும் செய்தார். 

குடும்பத்தில் நிலவிய இந்த சச்சரவுகளின் காரணமாக ஓவியத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் வருமானம் குறைய ஆரம்பித்தது. அந்த வருத்தத்தில் மேலும் அதிகமாகக் குடித்தார். பாரீஸை விட்டு வெளியே அழைத்துப் போனால் திருந்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற கருதிய அவரது நண்பர்கள் லாட்ரெக்கை இங்கிலாந்து அழைத்துச் சென்றனர். ஆனால் எதுவும் பலிக்கவில்லை. குடிப்பழக்கம் அதிகமாகி, மூளை கட்டுப்பாட்டை இழந்தது. பொய்த் தோற்றங்கள் அதிகம் தோன்றி அவரைக் குழப்பின. இந்தக் காலகட்டத்தில் அவர் வரைந்த எவ்வித வரவேற்பையும் பெறவில்லை. அதைப் பற்றி லாட்ரெக் கவலைப்படவும் இல்லை.

மேலும் மேலும் குடித்துக் கொண்டே இருந்தார். இதைக் காணச் சகிக்கமால் லாட்ரெக்கின் அம்மா, பாரீஸை விட்டே வெளியேறினார். இது லாட்ரெக்கு மிகவும் வசதியாகப் போயிற்று. நாள் முழுவதும் குடித்துக் கொண்டே இருந்தார். கழிப்பிடத் தொட்டியில் செய்தித்தாள்களைப் போட்டு எரிப்பது போன்ற விநோதமான காரியங்களை செய்யத் தொடங்கினார்.

பிப்ரவரி 1899ல் லாட்ரெக்கின் புத்தி பேதலித்தது. இதைக் கேள்விப்பட்டு பொறுக்க முடியாத லாட்ரெக்கின் அம்மா, விரைந்து வந்து பாரிசுக்கு வெளியே இருந்த மருத்துவமனை ஒன்றில் சேர்த்தார். மருத்துவமனையின் கட்டுப்பாடுகளும், முறையான சிகிச்சையும் அவரது உடல்நிலையில் விரைவான முன்னேற்றத்தைக் கொண்டுவந்தன. மீண்டும் வரையக் கூட ஆரம்பித்தார்.

லாட்ரெக்கை கவனித்துக் கொள்ள ஏழை உறவினர் ஒருவர் வேலைக்கு அமர்த்தப்பட்டார். மீண்டும் பாரீசுக்கு செல்லாதவாறு பார்த்துக் கொள்ளப்பட்டார். ஆனாலும் அத்தகைய கவனிப்பு அவரது வாழ்நாளை நீண்ட நாள் நீட்டிக்க உதவவில்லை. நடுவயதிலேயே கிழவன் போன்ற தோற்றத்தை அடைந்து விட்டார். 1901ம் ஆண்டு கோடை காலத்தில் கடல் காற்றை சுவாசித்துக் கொண்டிருந்த லாட்ரெக் திடீரென கீழே விழுந்தார். மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் இந்த முறை சிகிச்சை பலனளிக்காமல், 1901 செப்டம்பர் 9ம் தேதி மரணமடைந்தார். அயராது வரையவும், அயராது குடிக்கவுமாக இருந்த அந்த ஓவியமேதை இறந்தபோது வயது 36. 

(நன்றி : புது விசை ஜூலை - செப்டம்பர் 06)

Pin It