கீற்றில் தேட...

ஒரு சமூகத்தின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், சமூகவரலாறு போன்றவற்றின் தொன்மையை எடுத்துரைப்பதாக அமைவது நாட்டுப்புற இலக்கியங்கள் ஆகும். 19 - ஆம் நூற்றாண்டின் இறுதியில் உலகம் எங்கும் நாட்டுப்புறவியல் ஆய்வுகள் பரவலாக மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக உலக மக்களிடையே காணப்படுகின்ற நாட்டுப்புற பழக்க வழக்கங்களின் ஒரு சார்த்தன்மைகள் கண்டறியப்பட்டன. குறிப்பாக உலக நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்த கிரீன் சகோதரர்கள் அக்கதைகளுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகளை உலகிற்கு எடுத்துரைத்தனர்.

அதனைத் தொடர்ந்து இத்துறை விரிவடைந்து உலகெங்கும் பரவியதன் விளைவாக தமிழகத்திலும் நாட்டார் வாழ்வியல் ஆராயப்பட்டது. தமிழக முன்னோடியாகத் திகழ்ந்தவர் நா.வானமாமலை ஆவார். இவர் நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து அதன் அடிப்படையில் நாட்டார் வாழ்வியலை ஆராய வழி வகுத்தார். மட்டுமன்றி தாலாட்டுப் பாடல்களைத் தொகுத்து நாட்டார் ஆய்வாளர்களான மு. அருணாச்சலம், அன்னகாமு போன்றோர் ஏட்டில் எழுதாத கவிதைகள், காற்றில் மிதந்த கவிதைகள் போன்ற அநேக நூல்களை வெளியிட்டனர்.

இதனைப் போன்று கேரளத்தில் அறிஞர் குண்டர்ட், டயசு, பி. கோவிந்தன் பிள்ளை போன்றோர் ஆய்வுகளை மேற்கொண்டனர். 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் நாட்டார் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாகக் காலனி ஆட்சியின் கலாச்சார திணிப்பால் கட்டமைக்கப்பட்ட பண்பாட்டுச் சூழல் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. நாட்டார் ஆய்வுகள் காலனிய ஆட்சிக்கு முன் இவ்விரு நிலப்பரப்புகளில் நிலவியிருந்த தொல்திராவிடப் பண்பாட்டை நமக்கு எடுத்துரைத்தன. தமிழகத்தைப் போன்று கேரளத்திலும் தென்னகப் பண்பாட்டின் அல்லது திராவிடப் பண்பாட்டின் எச்சங்கள் நாட்டுப்புற வழக்காறுகள் காணக் கிடைகின்றன.

பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே

அங்கதம் முதுச்சொல் அவ்வேழ் நிலத்தும்

வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின் (தொ.செ.இயல்:78)

எனும் நூற்பாவின் வழியாக தென்நாட்டில் வழக்கத்திலிருந்த வாய்மொழி இலக்கியங்களை தொல்காப்பியர் வரையறை செய்கின்றார். நாட்டுப்புறவியல் அறிஞர்கள் இவ்விலக்கியங்களை வாய்மொழி இலக்கியங்கள் என்றே குறிப்பிடுகின்றனர். மலையாள மொழியிலும் இவ்விலக்கியங்கள் ‘வாமொழி' என்ற பெயரில் வழக்கப்படுகின்றன.

 கேரளத்தில் நாட்டுப்புறப் பாடல்களை நாடன் பாட்டுகள்/ நாடோடி பாடல்கள் என்றும் நாட்டுப்புற கலை வடிவங்களை நாடன் கலாரூபங்கள் என்றும் அழைக்கின்றனர். (166-2007) நாட்டுப்புற ஆடலை நாடோடி நிருத்தம் என்றே அழைக்கின்றனர். நாடன் தனிமா (கிராமியத் தனித்தன்மை), நாடன்விபவங்கள், நாடன் பக்சனம் (கிராமிய உணவுகள்), நாடன் மருந்நுகள்( நாட்டு மருந்துகள்), நாடன் மல்சியம் (நாட்டுமீன்கள்) நாடன் சமஸ்காரம் (நாட்டார் பண்பாடு) போன்ற வார்த்தைகளை அன்றாட வாழ்வில் பரவலாக பயன்படுத்திவருகின்றனர்.

கிராமப்புறங்களை தமிழ் மொழியில் நாட்டுப்புறம் என்று குறிப்பிடுவதைப்போலவே நாடன்புறம் என்றும் நாடன் பிரதேசம் என்றும் மலையாளிகள் குறிப்பிடுகின்றனர். சங்க இலக்கியத்தில் மலைநாடன், தென்நாடன், கானல்நாடன் என்னும் குறிப்புக்கள் காணப்படுகின்றன. குறிஞ்சி நில ஊர்பகுதிகள் நாடு என்று அறியப்படுவதைப்போல குறிஞ்சி நிலத் தலைவன் நாடன் எனும் பொதுப்பெயரில் அழைக்கப்படுகிறான். சேரநாடு குறிஞ்சிநிலப் பகுதியில் அமைந்திருந்ததால் மலையாள மொழியில் நாடு, நாடன் என்னும் சொற்கள் இன்றளவும் வழங்கப்பெறுவதைக் காணமுடிகிறது. இத்தகைய சொற்கள் தொல்தமிழ் பண்பாட்டின் தொன்மைக்குச் சான்றாக அமைகின்றன.

நாடன் எங்கோ ஊரன் என்கோ

பாடிமிழ் பனிக்கடற் சேர்பன் என்கோ பு.நா (49.1முதல் 2வரை) (2010 - 70)

இப்புறநானூற்றுப் பாடல் நாடன் குறிஞ்சி நிலத்தைச் சார்ந்தவன் என்று குறிப்பிடுகிறது. மட்டுமன்றி அழகிய குளிர்ந்த அருவிகளை உடைய மலைநாடனே என்று பழமொழி நானூறும் தென்னாடனே என்று ஆழ்வார் பாடல்களும் குறிப்பிடுகின்றன. ஆகையால் நாடன் என்ற வார்த்தை குடியான மக்கள் வாழும் இடத்தையும் குறிக்கிறது.

தமிழக நாட்டுப்புறப்பாடல்களை தெம்மாங்குப்பாட்டு, தாலாட்டுப் பாட்டு, திருமணப் பாட்டு, உறவுமுறைப் பாட்டு, ஏற்றப் பாட்டு, உடுக்கைப் பாட்டு, பம்பைப் பாட்டு (2000-84-94) என்று வகை செய்வதுபோல கேரள நாட்டுப்புறப்பாடல்களை தோற்றம் பாட்டு, சர்ப்பப்பாட்டுக்கள், தீயாட்டுப் பாட்டுக்கள், தெய்யம் பாடி பாட்டுக்கள், அய்யப்பன் பாட்டு, பிரமாணி பாட்டு, பகவதி பாட்டு, ஆவியர் பாட்டு, பூரக்களிப்பாட்டு, பானேக்களிப்பாட்டு, கண்ணியர் களிப்பாட்டு, ஐவர்களிப்பாட்டு, முண்டியன் பாட்டு குருந்தினி பாட்டு கந்தர்வன்பாட்டு, களம்பாட்டு, மாரிப்பாட்டு, கல்யாணப் பாட்டுகள், க்ரிஷிப் பாட்டு, பரணிப் பாட்டு, பணிப்பாட்டுகள் என்று வகைமை செய்துள்ளார் நாட்டுப்புறவியல் அறிஞர் விஷ்ணு நம்பூதிரி (1996-166tஷீ176)

தோற்றப்பாட்டு

தோற்றத்தை குறித்தப் பாடல்கள் ஆகையால் இப்பாடல்கள் தோற்றப்பாட்டு என பெயர்பெற்றன. காளி,மாரி, கண்ணகி போன்ற தெய்வங்களின் தோற்றங்கள் தான் இப்பாடல்களுக்கு பாடுபொருளாக அமைகின்றன. காளியைப் பற்றிய தோற்றப் பாடல்களை வேலன் சமூகத்தைச் சார்ந்தவர்களே காலம்காலமாக பாடிவருகின்றனர். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் வேலன் வெறியாட்டு கேரளத்தில் இன்றளவும் வழக்கத்தில் உள்ளது. வேலன் வெறியாட்டை தெய்யங்ஙள் என்று அழைத்து வருகின்றனர். அருள் வந்து நாட்டுப்புறங்களில் சாமி ஆடுவதுபோன்றதே தெய்யங்ள். வேலன், வண்ணான், புலையன், பறையன், புல்லுவன், பாணன் போன்ற பூர்வகுடி வேளாண்மக்களே நாட்டார் கலைகளின் உரிமை மாந்தர்கள் ஆவர். கண்ணகியைப் பற்றிய பாடல்களை பறையர் இன மக்களே அதிகமாக பாடிவருகின்றனர். பாண்டியநாட்டை அழித்த கண்ணகி சேர நாட்டை சென்றடைந்தாளென சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. இக்கூற்றை மெய்பிக்கும் வகையில் கேரள- தமிழக எல்லையோர மாவட்டங்களான பாலக்காடு மாவட்டம் முதல் தென்திருவிதாங்கூரைச் சேர்ந்த திருவனந்தபுரம் வரை கண்ணகி வழிபாடு வருடம்தோறும் நடைபெற்று வருகிறது.

பாலக்காடு மாவட்டத்தில் கண்ணகியை கொண்டாடும் உரிமை பறையர் இனமக்களுக்கே உரியது. பாலக்காட்டின் நெல்லறை என்றறியப்படும் கினாசேரி என்னும் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சேம்பட்டக்காவு பகவதியம்மன் கோவில் திருவிழாவை முன்னின்று நடத்துபவர்கள் பறையர் சாதியை சார்ந்தவர்கள் ஆவர். எனினும் பிற சமுதாயத்தினரும் இத்திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். அம்மன் என்ற சொல்லுக்கு நிகராக பகவதி என்ற சொல்லையே மலையாளிகள் பயன்படுத்தி வருகின்றனர். குலதெய்வங்களை காவில் தெய்வங்கள் என்றே அழைக்கின்றனர். கா என்ற செந்தமிழ்ச் சொல்லின் பொருள் காடு என்பதாகும் எனவே காட்டில் உள்ள தெய்வங்கள் தான் காவில் தெய்வமானது. காவு என்றால் குலதெய்வ வழிபாடு செய்யும் இடமாகும். தமிழ் நாட்டார்வழக்கில் காவு என்றால் உயிர்பலி கொடுத்தல் என்று பொருள். எனவே உயிர்பலி கொடுக்கப்படுகின்ற குலதெய்வங்கள் தான் காவில் தெய்வங்கள் என அழைக்கப்படுகின்றன (களஆய்வு - 2017). கண்ணூரில் இரிக்கூர் எனும் கிராமத்தில் நாட்டுக் கோழியை இக்குலதெய்வங்களுக்கு காவு கொடுக்கின்றனர். தமிழர்களைப் போன்றே குடும்ப தெய்வமாக குலதெய்வங்களை மலையாளிகளும் வழிபட்டு வருவதை இங்கு காணமுடிகிறது.

கண்ணகி தோற்றப்பாட்டு

கொடுங்களூர் சேம்பட்டக்காவு, ஆற்றுக்கால் போன்ற இடங்களில் அம்மனாக கருதப்படும் கண்ணகியை குறித்த ஏராளமான தோற்றப் பாட்டுகள் கேரளத்தில் காண்படுகின்றன.

எடுத்துக்காட்டு :

பலிவாள் பத்ரவடகம்

கையில் ஏந்தும் தம்புராட்டி

நல்லச்சன்டெ திருமுன்பில்

சென்னு களித் துடங்கி

பலி வாங்கும் வாளையும் பத்ரவடகம் (காற்சிலம்பு) என்னும் ஆயுதத்தையும் கையில் ஏந்திய அரசியே உன் கணவனைக் கொன்றவனை பலிவாங்க களியாட்டம் ஆடத் தொடங்கினாயே, என்று பொருள்படும் இப்பாடல் கண்ணகியின் பெரும் சினத்தை குறிப்பிடுவதோடு அவளைப் போற்றிப்பாடும் பாடலாகவும் அமைகிறது.

களி என்னும் சொல் மகிழ்ச்சி என்ற பொருளையும் களிப்பு என்றால் கோபம் என்னும் பொருளையும் உணர்த்துகின்றது. களி என்ற சொல் ஆடல் என்னும் பொருளையும் தரும். கள்ளுண்டு களித்தனர் என்னும் தமிழ்ச்சொல் கள்ளுண்டு மகிழ்ந்தனர், கள் அருந்தி ஆடிமகிழ்ந்தனர் என்னும் பொருளைத் தருவது போன்றே களி - களிப்பு- என்னும் சொற்கள் சூழலுக்கேற்ப எதிர்மறைப் பொருளைத் தருகின்றன. திருவனந்தபுரம் மாவட்டத்தில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் களிப்பு என்னும் சொல் பரவலாக பயன்பாட்டில் உள்ளது. களிப்பு என்னும் சொல் இங்கு கோபம் என்னும் பொருளையே உணர்த்துகிறது.

தோற்றப் பாட்டுகளில் தமிழ்ச் சொற்கள் தாராளமாக பயின்று வருகிறது. இப்பாட்டுகளை வடக்கன் பாட்டு, தெக்கன் பாட்டு என இருவகையாகப் பிரிக்கலாம். கேரளத்தின் தென்பகுதியில் வழங்கப் பெறும் தெய்யப்பாடல்கள் தெக்கன் பாட்டுகள் என்றும் வட மலபார் பகுதியில் வழங்கப்பெறும் பாட்டுக்கள் வடக்கன் பாட்டுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. (1996.164)

விவசாயப் பாடல்கள்

நிலவுடைமையாளர்களை தம்புரான் என்றும் நாடுவாழி என்றும் கேரளமக்கள் அழைத்து வந்தனர். நாடு+வாழி நாட்டை ஆண்ட மன்னன் என்னும் பொருள் பெறுகிறது. நாட்டு ராஜாவ் என்றும் பிற்காலத்தில் அழைக்கப்பட்டனர். தமிழ் மொழியில் நாட்டரசன், குறுநிலமன்னர்கள் சிற்றரசர்கள் என்று அழைப்பது போன்றே இம்மக்கள் நாடுவாழிகள் என குறுநில மன்னர்களை அழைத்தனர்.

நிலவுடைமையாளர்களுக்கு எதிரான எதிர்ப்புக் குரலாக நாட்டுப்புறப் பாடல்கள் அமைந்தன என கூறுகிறார் கேரள நாட்டுப்புறவியல் கழகத்தின் முன்னாள் தலைவர் சி.ஜெ.குட்டப்பன். பறையர், வேலர், வண்ணான், புலையர், செருமர் போன்ற பூர்வ வேளாண்குடிகளின் உரிமைக் குரலாகவே விவசாய நாட்டுப்புறப் பாடல்கள் காணப்படுகின்றன.

சான்றாக:

ஊணில்லா உறங்கியில்லா

பின்னே உணரில்லா

அடிக்குயூலா தெளிக்கில்லா

அடுப்பில் தீ ஏரிகில்லா

திண்ணில்லா திமிர்க்கேற்றம் பறையில்லா....

உண்ணவும் மாட்டோம் உறங்கவும் மாட்டோம்

உறங்கினால் பின்பு எழும்பவும் மாட்டோம்

வீடுபெருக்க மாட்டோம்

சுத்தம் செய்ய மாட்டோம் சாப்பிட மாட்டோம்

திமிர்த்தெழமாட்டோம்

ஆகையால் உன்னை எதிர்த்து ஒன்றும் சொல்ல மாட்டோம் (1996)

அடித்தள மக்கள் பண்டைய காலத்தில் நிலவுடைமையாளர்களை எதிர்த்ததால் பட்டினி கிடந்து சாக வேண்டிய நிலையை அடைந்தனர் என்பதை இப்பாடல் சுட்டுகிறது

சந்தனம் சார்த்தி நடப்பூண்டு சோவர்

சேறுமணிஞ்சு நடப்புண்டு நாங்க

வெற்றிலை திண்ணு நடப்புண்டு சோவரு

அல்லிக்கா திண்ணு நடப்புண்டு நாங்க

பொன்கோய சூடி நடப்புண்டு சோவரு

மீங்கோய சூடி நடப்புண்டு நாங்க ( 1996:175)

சந்தனம் பூசி நடக்கிறார் எசமான்

சேற்றைப் பூசி நடக்கிறோம் நாங்க

வெற்றிலை மென்றுநடக்கிறார் எசமான்

அல்லிக்காய் தின்னுரோம் நாங்க

பொன் குடைசூடி நடக்கிறார் எசமான்

வியர்வையில் உப்புகொட புடிச்சு

நடக்கிறோம் நாங்க

வயலில் வேலை செய்யும் விவசாயியின் பாட்டை எடுத்துரைக்கிறது இப்பாடல். நிலவுடைமை - அடியாளன் வாழ்க்கை முறை எவ்வளவு துயரமாக இருந்தது என்பதையும் இப்பாடல் உணர்த்துகிறது. பண்டைய நிலவுடைமை சமூகத்தில் அடித்தள மக்களின் நிலையை உணர்த்துவதாக மலையாள நாட்டுப்புறப் பாடல்கள் அமைகின்றன.

தாரக பென்னாளே

கதிர் ஆடும் மிழியாளே

தம்புரான் எத்திடும் முன்பே

கரிங்காளி கோர பறிச்சாட்டே

வெற்றமான் தின்னோளே

வட்ட சுண்டுள்ள வா முடுக்கி

அந்திகொடருத்தி முருக்கி பெருத்தவள்

வீனது சேற்றிலானே

சூட்டும் கத்திசோராள்

பாடவரம்பத்து உறக்கமில்லாறு மாசம் (2010.17)

இப்பாடல் வரிகள் ஆறுமாதங்கள் ஊணுறக்கமில்லாமல் பண்ணையாரின் நிலத்தை உழுது பாதுகாத்த புலையர்கள் என்றறியப்படுகின்ற பூர்வ வேளாண்குடி மக்களின் நிலையை எடுத்துரைக்கின்றது. முதலாளி வருவதற்கு முன்னே கருங்காளி மரப்பட்டையை உரித்து நான் சேகரித்த விறகு சுள்ளிகளை கட்டிக் கொள்ளட்டுமா? இங்கு பந்தத்தை கையில் ஏந்தி வயல் வரம்பில் ஒருத்தன் விளைநிலத்தைக் காவல் காக்கிறானே அவன் வீட்டில் அடுப்பு எரிந்து எத்தனை நாட்கள் ஆனதோ? எனும் வினாவை எழுப்பும் விதமாக இப்பாடல் அமைவதை உணர முடிகிறது.

முடிவுரை

கி.பி.15ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே மலையாளம் ஒரு தனிமொழியாக உருவெடுக்கிறது. வடமொழியுடனான உடன்போக்கு நிகழ்ந்ததன் காரணமாக ஆரியப் பண்பாண்டின் தாக்கம் அம்மொழி சார்ந்த சமூகத்தில் நிலைபெற்றுவிடுகிறது. எனவே நாட்டார் வாழ்வியலை முன்னிறுத்தி அம்மக்களின் உணவு ,உடை, பேச்சு மொழி, விடுகதை, பழமொழி நாட்டார் கதைகள், நம்பிக்கைகள் போன்றவற்றை நுட்பமாக ஆராய்ந்தால் இதுபோன்ற ஏராளமான தொல்தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளை வெளிக்கொணரலாம்.

சான்றுநூட்கள்:

1. அச்சுதவாரியர் - கேரள சம்ஸ்காரம் - கேரள பாஷ. இன்ஸ்டியூட்திருவனந்தபுரம் 2010

2. கே.கே.பிள்ளை- தென்னிந்திய வரலாறு பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் 2020 (ஒன்பதாம்பதிப்பு)

3. கே.கே.பிள்ளை- தமிழகவரலாறும் மக்களும் பண்பாடும் -உலக தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை 2020 (16-ம் பதிப்பு)

4. சு.சக்திவேல் - 4.நாட்டுப்புறவியல் ஆய்வுகள்- மணிவாசகர் பதிப்பகம் சென்னை- 2016 (7 ஆம் பதிப்பு)

5. விஷ்ணு நம்பூதிரி- நடோடி விக்ஞானியம்- டி.சி புக்ஸ் கோட்டயம் 2007

6. பாஸ்கர உண்ணி- பத்தொன்பதாம் நூற்றாண்டிலே கேரளம்- கேரள சாகித்ய அக்கதெமி பதிப்பகம் திருச்சூர் -2012

7. சி.ஸி ராஜகோபலன்-நட்டறிவுகள்-ஞிசி புக்ஸ் கோட்டயம் 2014

- முனைவர் பிரபாஹரன்.கி, உதவிப் பேராசிரியர் அரசு கலை மற்றம் அறிவியல் கல்லூரி கொழிஞாம்பாறை, பாலக்காடு, கேரளா.