திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோற்றவுடன், சமூக வலைத்தளங்களில் உற்சாகம் பற்றிக் கொண்டது. மகிழ்ச்சியடைந்தவர்கள் ஆர்எஸ்எஸ், பாஜகவைச் சேர்ந்தவர்களா என்று பார்த்தால் பெரும் அதிர்ச்சி. பெரும்பான்மையானவர்கள் திமுகவினர் மற்றும் திராவிடர் கழகத்தை ஆதரிப்பவர்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது கிடையாது. யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். தேசியக் கட்சியாக இருப்பதால் ஈழம், முல்லைப்பெரியாறு, கூடங்குளம், காவிரிப் பிரச்சினை என்று அவர்கள் எடுக்கும் நிலைப்பாடுகளில் பல சந்தர்ப்பங்களில் அனைவராலும் விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள், நானும் விமர்சித்துள்ளேன். இதைத் தவிர தலித்துகளுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை, பார்ப்பனத் தலைமை போன்ற குரல்கள் எப்போதுமே இருக்கிறது. மேலும், 'இவர்கள் போலி கம்யூனிஸ்ட்கள், கம்யூனிசத்திற்கும், இவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை' என்று புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒரு பக்கம் விமர்சித்து வந்திருக்கிறார்கள். இந்த விமர்சனங்கள் அனைத்தையும் தாண்டியும், இந்தியாவில் இயங்கி வரும் எந்த ஓர் ஓட்டுக்கட்சியை விடவும், மார்க்சிஸ்ட்கள் ஒப்பீட்டளவில் சிறந்தவர்கள், மதவாதத்தையும், பாசிசத்தையும் தொடர்ச்சியாக களத்தில் எதிர்கொள்வதால் இடதுசாரிகள் மதிக்கப்பட வேண்டியவர்கள், அவர்களின் தோல்வி கொண்டாடப்படக் கூடியதல்ல.

manik sarkar

இடதுசாரிகளின் இருப்பு அனைத்து விதத்திலும் முக்கியமான ஒன்றாக இருக்கிற ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, நாட்டின் ஒற்றுமைக்கும், பன்மைத்துவத்திற்கும் ஊறு விளைவித்துக் கொண்டிருக்கும் பாசிச பாஜகவிடம் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியை இழந்திருப்பது உண்மையிலேயே வருத்தத்திற்கு உரியது. இதில் குறைந்த பட்ச நேர்மையுடையவர்கள் மகிழ்ச்சியடைவதற்கு ஏதாவது இருக்கிறதா? ஆனால், கம்யூனிஸ்ட்களை பார்ப்பனத் தலைமை என்ற காரணத்திற்காக வன்மம் கொண்டு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தாக்கி வருபவர்களாலும், இன்னமும் கடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு மக்கள் நலக் கூட்டணிதான் காரணம் எனப் பிதற்றிக் கொண்டிருப்பவர்களாலும் மட்டுமே 'நாடு எக்கேடு கேட்டால் எனக்கென்ன... கம்யூனிஸ்ட்கள் அழிவது நல்லது' என்று மகிழ்ச்சி அடைய முடியும். மார்க்சிஸ்ட்களின் மீது விமர்சனங்களே கூடாது என்பதல்ல, மாறாக இழவு வீட்டில் வந்து எக்காளமிடும் அரசியல் அநாகரித்தை, சில்வண்டுகளின் அராஜகத்தை, எந்த விஷயம் பற்றியும் போதிய அறிவில்லாமல் ஒரு வரிக் குற்றச்சாட்டு சொல்வதை எப்படி ஏற்பது?

'பார்ப்பன' கம்யூனிஸ்ட்களை விமர்சிப்பவர்களின் அரசியல் அறிவு எந்த அளவிற்கு இருக்கிறதென்றால், கம்யூனிஸ்ட்களும், காங்கிரசும் சேர்ந்திருந்தால் திரிபுராவில் பாஜகவை வீழ்த்தி இருக்கலாம் என்று அறிவுரை சொல்லும் அளவிற்கு இருக்கிறது. அகில இந்திய அளவில் கம்யூனிஸ்ட்கள் காங்கிரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதில் ஓர் அக்கறை, தர்க்கம் இருக்கிறது. ஆனால், திரிபுராவில் கம்யூனிஸ்ட்கள் 25 வருடங்களாக ஆட்சியில் இருக்கிறார்கள். 2013 சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட்களின் வாக்கு சதவீதம் 48.1, காங்கிரஸ் 36.87, பாஜக 1.7. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட்களின் வாக்கு சதவீதம் 44.7, காங்கிரஸ் 1.9, பாஜக 41.4.

முழுக்க முழுக்க காங்கிரசின் வாக்குகளைத் தான் பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தற்போது பெற்றுள்ளன. சிறிய சரிவு இருந்தாலும் கம்யூனிஸ்ட்களுக்கு வாக்கு வங்கியில் பாதிப்பு அவ்வளவாக இல்லை. கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை கம்யூனிஸ்ட்களுக்கு சமபலம் வாய்ந்த எதிரியாக இருந்தது காங்கிரஸ். எந்த வாத்து மடையனாவது 1.7% வாக்கு சதவீதம் இருக்கும் பாஜகவைத் தோற்கடிக்க 35% வாக்கு வாங்கி இருக்கும் தனது பாரம்பரிய எதிரியுடன் சேர்வானா? தமிழ்நாட்டில் பாஜகவைத் தோற்கடிக்க அதிமுகவும், திமுகவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று வடநாட்டில் இருந்து கொண்டு எவனாவது சொன்னால், அது எவ்வளவு முட்டாள்தனமானதோ, அதே போன்ற ஒரு முட்டாள்தனமான பார்வை தான் 'திரிபுராவில் காங்கிரசும், கம்யூனிஸ்ட்களும் ஏன் இணைந்து தேர்தலை சந்திக்கவில்லை?' என்று கேட்பது.

தோற்றபிறகு யாரும், யாருக்கும் அறிவுரை சொல்லலாம், விமர்சனங்கள் செய்யலாம். உண்மையாக இருப்பின் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், விமர்சனத்தில் இருக்கும் வன்மம்தான் பிரச்சினை.

'ஜெயலலிதா இறந்த பிறகு தமிழ்நாடு சந்திக்கும் அனைத்து அவலங்களுக்கும் மக்கள் நலக் கூட்டணிதான் காரணம், அக்கூட்டணியை ஆதரித்தவர்கள் அனைவரும் அயோக்கியர்கள்' என்றே ஒரு கூட்டம் பிதற்றி வருகிறது. இவர்களைப் பொருத்தவரை திமுக தோற்றதற்கு அதிமுகவிற்கு ஓட்டு போட்ட மக்கள் கூட காரணமில்லை; திமுகவின் ஊழல், இரண்டாம் கட்டத் தலைவர்கள் குறுநில மன்னர்கள் போல ஆடிய அராஜகங்கள் காரணமில்லை. ஆனால் எளிமையான கம்யூனிஸ்ட்கள், தலித் மக்களுக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்று நினைத்தவர்கள் தான் காரணம். இவர்களின் வாதப்படியே, ம.ந.கூட்டணிக்கு ஓட்டு போடுவதால் அதிமுக வெற்றி பெறும் என்று ஒருவன் அறிந்தே வாக்களித்திருந்தாலும், ஜெயலலிதா மரணம் நிகழலாம், ஓபிஎஸ், ஈபிஎஸ் அடிமைகளின் ஆட்சியில் தமிழகம் பாஜகவின் வேட்டைக்காடாக மாறலாம் என்று எப்படி ஒருவன் சிந்தித்து வாக்களித்திருக்க முடியும்?

'எப்படியும் மாறி, மாறி தானே ஓட்டுப் போடுவார்கள் இந்த வாத்து மடையர்கள் என்று கூட்டணிக் கட்சிகளை மதிக்காமல் தேர்தலைச் சந்தித்தது தோல்விக்குக் காரணம் கிடையாது, ஆனால் ம.ந.கூ. தான் காரணம்' என்று சொல்வதற்கு எவ்வளவு அரசியல் அறிவு இருக்க வேண்டும்? ம.ந.கூ. இல்லாமல் இருந்த தேர்தல்கள் அனைத்திலும் திமுக ஜெயித்து விட்டதா அல்லது ம.ந.கூ.வில் கம்யூனிஸ்ட்கள் மட்டும் தான் இருந்தார்களா? அவ்வளவு கறாரான நியாயவான்களாக இருந்தால் "1500 கோடி" புகழ் வைகோவை தற்போது திமுக மேடைகளில் ஏற்றியவுடன், வைகோவின் மீதான பழைய தரக்குறைவான விமர்சனங்கள் அனைத்தையும் மறந்து விட்டு தற்போது ஏன் ரசித்துக் கொண்டு இருக்கிறார்கள்?

மேலே சொன்னவர்கள் ஒரு வகை என்றால், இன்னொரு வகை திராவிட ஆதரவு அறிவுஜீவிகள் இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு, சமூக நீதி, திராவிடக் கொள்கைகள் என அனைத்தையும் ஆதரித்து விட்டு, திராவிட ஆட்சிகளின் மீது நியாயமான விமர்சனம் வைத்தால் கூட பிற மாநிலங்களை ஒப்பிட்டு, 'இட ஒதுக்கீடு வாங்கிட்டியா, படிச்சுட்டியா, வேலை வாங்கிட்டியா.. இதை எல்லாம் நாங்கள் தான் உனக்கு செய்தோம், எனவே பொத்திட்டு இரு.. ஊரை அடித்து உலையில் போடும் ஊழலைப் பற்றி பேசாதே, வாரிசு அரசியலைப் பற்றி பேசாதே, அரசியல் அராஜகத்தைப் பற்றி பேசாதே, மணல் திருட்டைப் பேசாதே, நில அபகரிப்பைப் பற்றி பேசாதே, டாஸ்மாக் கொள்ளையைப் பற்றி பேசாதே' என்பதாகத் தான் இவர்களின் பதில் இருக்கிறது. தமிழ்நாடு சமூக நீதியில் நெடும் பயணம் சென்றிருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளும் அதே வேளையில், தமிழ்நாடு தான் சமூக நீதியின் ஒட்டுமொத்த குத்தகைதாரர் போலவும், தமிழ்நாட்டின் வளர்ச்சி தான் அதிகபட்சம் என்பது போலவும், இங்கு பிரச்சினைகளே இல்லை என்பது போலவும் திராவிட அறிவுஜீவிகள் சித்தரிப்பது உண்மைக்கு எதிரானது. பொது சுகாதாரம், குழந்தை இறப்பு விகிதம், மருத்துவம் போன்ற பல விஷயங்களில் கேரளா நம்மை விட முன்னணியில் இருக்கிறது. எப்படி சாத்தியம் ஆயிற்று? அங்கேயும் சரிபாதி காலம் "பார்ப்பன" கம்யூனிஸ்ட்கள் தானே ஆண்டிருக்கிறார்கள். அங்கே ஊழலின் அளவு எப்படி இருக்கிறது என்று தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டுப் பார்ப்போமா?

இட ஒதுக்கீடு என்பது சமூக நீதியின் ஒரு அடிப்படை அம்சம் மட்டுமே, அதுவே இறுதித் தீர்வு கிடையாது என்பது புரியாமலும், மக்கள் வளம், அங்குள்ள சாதி வாரியான மக்கள் தொகை எண்ணிக்கை, தொழில்வாய்ப்பு, புவியியல் அமைப்பு போன்றவற்றிற்கு மாநிலங்களுக்கு இடையேயான வித்தியாசம் புரியாமலும், கம்யூனிஸ்ட்கள் ஆளும் மாநிலங்களில் நிலவும் இட ஒதுக்கீடு அளவை தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டு அவர்களுக்கு சமூக நீதிப் பார்வை கிடையாது என்று, தமிழ்நாட்டின் தொழில், வேலைவாய்ப்பு போன்றவற்றுடன் ஒப்பிட்டு ஜல்லி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். திரிபுராவில் கம்யூனிஸ்ட்கள் தோற்றதற்கும், இதற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் இட ஒதுக்கீடு பிரச்சினைக்காகப் போராடி, அதனால் இந்தத் தேர்தலில் தோற்கவில்லை. பழங்குடியினர் வங்காளிகள் உள்முரண், அதன் காரணமாக தனி மாநிலம் கேட்டுப் போராடியதாலும் அவர்கள் எதிரிகளுடன் இணைந்ததாலும், தொடர்ச்சியான ஆட்சியின் மீதான அதிருப்தியின் காரணமாகவும் தான் சிபிஎம் தோல்வியடைந்திருக்கிறது. ஆனாலும், இங்குள்ள திமுக ஆதரவு பெரியாரியவாதிகள், தங்கள் வன்மத்தின் காரணமாக தோல்வி அடைந்த அடுத்த நொடியே, 'திரிபுராவில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கிடையாது' என்று ஐன்ஸ்ட்டின் போல கண்டுபிடித்து அதற்கு பார்ப்பனத் தலைமை தான் காரணம் என்று லாவணி பாடி வருகிறார்கள்.

திரிபுரா, வட கிழக்கு மாநிலங்களுள் ஒன்று. பழங்குடியினர் பெரும் தொகையாக வாழும் மாநிலம். தற்போது வங்காளிகளின் குடியேற்றத்தால் பழங்குடியினரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. திரிபுராவில் தற்போதைய இட ஒதுக்கீடு 48%. அதில் பட்டியல் இனத்தவர்களுக்கு 17%ம், பழங்குடியினருக்கு 31%ம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்திரா சஹானி வழக்கில் அளிக்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக இடஒதுக்கீடு 50%க்கு மேல் மிகாமல் இருக்க வேண்டும் என்பதால், மீதமிருக்கும் 2% பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்குவது தீர்வாகாது என்பதால் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்று தனியே இட ஒதுக்கீடு அளிக்கவில்லை என்று அந்த அரசு அறிவித்துள்ளது. இந்திரா சஹானி உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக, தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டு வரும் 69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டபோது, உச்ச நீதிமன்றத்தின் சீராய்வுக்கு உட்படுத்தப்படுத்த முடியாத ஒன்பதாவது அட்டவணையில் இணைக்கும் ஒரு சட்டத்தை ஜெயலலிதா அரசு இயற்றியதாலும், அப்போதிருந்த காங்கிரஸ் அரசாங்கத்தின் தயவாலும் நமது இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டது. இதற்கு நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆதரவளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது 1994-ஆம் ஆண்டு நிலவரம்.

2007-ம் ஆண்டு வழங்கப்பட்ட ஒன்பது நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியலமைப்புச் சட்ட அமர்வின் தீர்ப்பின்படி ( I.R.Coelho (Dead) By Lrs vs State Of Tamil Nadu & Ors on 11 January, 2007), ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டங்கள் கூட அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இருந்தால் நீதிமன்றங்கள் ஆராய முடியும் என்று சொல்லிவிட்டது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாட்டின் 69% இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு இன்னும் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வருடமும் 69% இட ஒதுக்கீட்டின் காரணமாக "பாதிக்கப்படும்" மாணவர்களுக்கு கூடுதலாக 19% இடங்கள் கல்வியில் ஒதுக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30% (முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் உள் ஒதுக்கீடு உட்பட) தான் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்ட பரம்பரை, பேண்ட பரம்பரை சாதிகள் சொல்வதையே அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் கள நிலவரத்தின்படி கண்டிப்பாக 30% உரிய பிரதிநிதித்துவம் கிடையாது என்பதை ஏற்றுக் கொள்ள முடியும். தமிழ்நாட்டில் பழங்குடியினருக்கு 1% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது, திரிபுராவில் 31% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எங்கெங்கு யாருக்கு அதிகப் பிரதிநிதித்துவம் வழங்குவது என்பதை அந்த அரசு தான் முடிவு செய்யும். தமிழ்நாட்டை விட ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் இட ஒதுக்கீடு அதிகம். இதற்காக தமிழ்நாட்டை குறை சொல்ல முடியுமா?

இதைவிட முக்கியமான விஷயம் ஒன்று, திரிபுரா அரசு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்வதற்கு முயற்சி செய்யவே இல்லை என்பது அப்பட்டமான பொய். 48% இட ஒதுக்கீடு ஏற்கனவே அமலில் இருப்பதால் 50%க்கு மேல் (இந்திரா சஹானி உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக) கூடுதலாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால், அந்த சட்டத் திருத்தத்திற்கு மத்திய அரசின் அனுமதி இல்லாமல் ஒன்றும் நடக்காது. 17/08/2011 அன்று மத்திய சமூக நீதித்துறையின் இணை அமைச்சரை சந்தித்து, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான தீர்மானத்தை அளித்து திரிபுரா அரசு அனுமதி கோரியிருக்கிறது. ஆனால் அதன் மீது மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திரிபுரா அரசின் அதிகாரப்பூர்வ தளம் சொல்கிறது. 39 எம்பிக்களைத் தரும் தமிழ்நாட்டிலிருந்து ஒரு கோரிக்கை மத்திய அரசுக்கு சென்றாலே ஆயிரத்தெட்டு முட்டுக்கட்டைகளை போடும் மத்திய அரசு, ஒன்று, இரண்டு எம்பிக்களை கொண்டுள்ள வட கிழக்கு மாநிலங்களை எப்படி நடத்தும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

திரிபுரா அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கவில்லையே தவிர, அவர்களுக்காக தனியே பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் அமைத்து நிலம் வாங்க, கட்டிடம் கட்ட மானியம், மாணவிகளுக்கு இலவச சைக்கிள் திட்டம், இலவசப் பயிற்சி வகுப்புகள் என பல்வேறு நலத்திட்டங்களை அடுத்தடுத்து செயல்படுத்தி உள்ளது.

எப்படி வடகிழக்கு மாநிலங்களின் சமூக, அரசியல் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு பாராமுகம் காட்டுகிறதோ, அதே பாரபட்சமான அளவுகோல்தான் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதிப் பங்களிப்பிலும் நடைபெறுகிறது. திரிபுரா தொழில்வளர்ச்சி பெறுவதற்குரிய புவியியல் அமைப்பு கொண்ட மாநிலம் அல்ல. அரசு எவ்வளவு தான் முயற்சி எடுத்தாலும், வெளிநாட்டு முதலீடுகள், சேவைத்துறை வளர்ச்சி எல்லாம் சாத்தியம் அல்ல. இதையும் பிரிட்டிஷ் காலத்திலிருந்தே துறைமுகம், வர்த்தகம் என வளர்ச்சி பெற்ற ராஜதானிகளுள் ஒன்றான தமிழ்நாட்டையும் ஒப்பிட்டு, தமிழ்நாடு எவ்வளவோ மேல் என்று புராணம் பாடுவது சகிக்க முடியாததாக இருக்கிறது. மாநில வருவாயும் குறைவு, மத்திய உதவியும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. (இணைப்பில் புள்ளிவிபரங்கள் காண்க). இதனால் தான் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை 'முழுமையாக' செயல்படுத்த முடியவில்லை. ஆனாலும், பெரும்பான்மையான பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு சராசரியாக 19.68% ஊதிய உயர்வு ஏப்ரல் 1, 2017 முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், 'திரிபுரா 7வது ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தவே இல்லை, இவர்கள் எல்லாம் கம்யூனிஸ்ட்களா' என்று ஒரு எதிர்மறைப் பிரச்சாரம் அவிழ்த்துவிடப்படுகிறது.

மேலே சொன்ன விபரங்கள், திரிபுரா அரசின் பிற்படுத்தப்பட்டோருக்கான நலத்திட்டங்கள், ஊதிய உயர்வு என ஒன்றுமே இங்கிருப்பவர்களுக்குத் தெரியாது. ஆனால், 'திரிபுராவில் 25 வருடங்களாக ஒன்றுமே நடக்கவில்லை, நேர்மையாக இருந்தால் மட்டும் போதுமா' என்று வியாக்கியானம் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இது நிச்சயமாக ஒரு உளவியல் சிக்கல் தான். ஊழல், பகட்டு, அராஜகத்தில் திளைக்கும் கட்சிகளை ஆதரிப்பவர்களுக்கு லட்சியவாதத்தைக் கடைப்பிடித்து நேர்மையாக ஒருவன் இருப்பதே அருவருப்பாக இருக்கிறது. எனவே, செயலின்மை, வளர்ச்சியின்மை, பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லை, சம்பள உயர்வு இல்லை எனக் காரணங்களை மனம் தேடி அடைந்து திருப்தி கொள்கிறது.

கடைசியாக பார்ப்பனத் தலைமை பற்றி. தலித்துகளுக்கான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. அதே நேரத்தில் பார்ப்பன நலன்களுக்கானதாக மட்டும் செயல்படாமல், அனைத்து சமூகங்களுக்கான நீதி உறுதிப்படுத்தப்பட்டால் பார்ப்பனத் தலைமையை குற்றமாக சொல்ல முடியாது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீட்டில் க்ரீமி லேயர், பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீடு போன்ற மார்க்சிஸ்ட்களின் சமூக நீதிப் பார்வையில் பெரியாரியர்களுக்கு வேறுபாடு இருக்கிறது. ஆனால், மார்க்சிஸ்ட்கள் சாதி வாரியான இட ஒதுக்கீட்டுக்கே எதிரானவர்கள், வர்க்கப்பார்வை மட்டுமே கொண்ட வறட்டுவாதிகள் என்ற பொய்ப் பிரச்சாரம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பட்டியல் சாதியினருக்கு பொருளாதார வரம்பு பற்றி மார்க்சிஸ்ட்கள் பேசியது கிடையாது.

மேலும், திராவிட அறிவுஜீவிகள் சமூக வலைத்தளங்களில் பார்ப்பனர்களை அணுகும் விதமே மிகவும் போலித்தனமாக இருக்கிறது. பார்ப்பனியத்தை தூக்கிப் பிடிக்கக் கூடிய ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்களை வியந்து, புகழ்ந்து கொண்டும், மோடிக்கு பல்லக்கு தூக்கும் கழிசடைகளுடன் எந்தவித சுரணையும் இன்றி விவாதித்துக் கொண்டும் இருப்பவர்கள், குறைந்தபட்ச நேர்மையுடன் இருப்பவர்களை 'பார்ப்பன கம்யூனிஸ்ட்கள்' என்று நக்கலடிப்பதற்கு தடித்த தோல் இருக்க வேண்டும். அதிகார மையத்தில் இருக்கும் பார்ப்பனிய சிந்தனை கொண்ட பார்ப்பனர்களிடம் பல்லிளித்துக் கொண்டே, மென் இலக்குகளாக இருக்கும் பார்ப்பனப் பெண்களிடம் விசிலடிச்சான் குஞ்சுகள் போன்று ஆபாச கொலை வெறித் தாக்குதல்கள் நடத்துவதும், அவ்வாறு செயல்படும் நபர்களை மயிலிறகால் கண்டித்துவிட்டு அல்லது கண்டு கொள்ளாமல் போகும் சமூக நீதி பயின்ற கண்ணியவான்களும் இவர்கள் தான். நட்பு முரண் கொண்டவர்களின் தேர்தல் தோல்வியின் போதும், வன்மம் கொண்டு பாயும் நபர்களை வைத்துக் கொண்டு தான் பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியத்தை ஒன்றிணைத்து ஆர்எஸ்எஸ், பாஜகவைத் தோற்கடிக்கப் போகிறோம் என்று நினைக்கும்போது, ரஜினியை விட தலைசுற்றத்தான் செய்கிறது.

தரவுகள்:

http://cpim.org/content/obc-reservations

http://www.financialexpress.com/economy/fund-crisis-tripura-mizoram-unsure-of-meeting-7th-pay-commission-obligations/422613/

https://www.hindustantimes.com/india-news/tripura-govt-announces-19-68-pay-hike-for-its-employees-pensioners/story-xo4rqWtGLMcY3c3h4KE1fK.html

- இராஜகோபால் சுப்பிரமணியம்