travancoreகேரள சமூக வரலாற்றை எழுதியவர்கள் சுவாமி விவேகானந்தரின் ஒரு கிண்டல் பேச்சை சொல்லிவிட்டுக் கடந்து செல்லுகிறார்கள். விவேகானந்தர் 1882 டிசம்பரில் திருவிதாங்கூர் வந்துவிட்டு இதே மாதம் 24, 25, 26 ஆம் நாட்களில் கன்னியாகுமரிக்கு வந்தார். அப்போது அவர் திருவிதாங்கூரைப் பைத்தியக்காரர்களின் ராஜ்யம் என்றார். இப்படியாக அவர் சொன்னதற்கு இங்கு ஜாதி துவேசம் தலைதூக்கி நின்றதுதான் ஒற்றைக் காரணம். அவர் நேரில் பார்த்ததைத்தான் சொன்னார்.

திருவிதாங்கூரில் ஒடுக்கப்பட்ட சாதியினரை அவர்ணா என்று கூறுவர். இந்த வகையில் சக்கிலியர், கக்காளர் உட்பட 19க்கு மேற்பட்ட சாதியர் இருந்தனர். இவர்களுக்குக் கோவிலுக்குச் செல்லும் உரிமை கிடையாது. கோவில் குளங்களிலோ ஊர்க் குளங்களிலோ ஊர்ப் பொதுக்கிணறுகளிலோ குளிக்கும் உரிமையும் கிடையாது,

திருவிதாங்கூரில் வழங்கிய தீட்டு, புலை என்னும் சொற்கள் வாழ்க்கை வட்டச் சடங்குகள் சார்ந்தவை மட்டுமல்ல. சாதிகளின் உறவு சம்பந்தப்பட்டவையும் கூட. இப்போது கூட இச்சொற்களின் பொருள் மாறவில்லை; மாதவிடாய் சமயத்தில் பெண் தீட்டானவள்; குழந்தை பெற்றால் தீட்டு; இறப்பு நிகழ்வும் தீட்டு; இதைப் புலை என்றும் குறிப்பர். ஆனால் இந்தத் தீட்டுகள் காலவரையறைக்குள் அடங்கியவை. குழந்தை பெற்றவளுக்கு 41 நாட்களே தீட்டு. மற்ற தீட்டுகளுக்கும் விதிவிலக்குண்டு. ஆனால் பிறப்பால் வரும் தீட்டு அல்லது புலை எப்போதும் தீராதது.

புலை என்பதற்கு மணிமேகலையில் அசுத்தம் என்ற பொருள் வருகிறது. இச்சொல்லுக்கு இழிவு, தீட்டு, பொய், விபச்சாரம், கீழ்மகள் என்ற பொருள்களும் உள்ளன. இவை செவ்விலக்கியங்களில் வழங்குகின்றன. புலையன் என்ற சாதி இதன் அடிப்படையிலானது. நாட்டார் வழக்கிலும் இதே பொருள்தான். தென்திருவிதாங்கூரில் இப்போதும் இது வழக்காற்றில் உள்ளது.

ஈழுவர் பிராமணரிடமிருந்து 36 அடியும் நாயர் சாதியினரிடமிருந்து 12 அடியும் தள்ளி நிற்க வேண்டும். மிகவும் ஒடுக்கப்பட்ட பட்டியலில் வரும் புலையர் பிராமணரிடமிருந்து 96 அடியும் நாயர் சாதியினரிடமிருந்து 12 அடியும் தூரத்தில் நிற்க வேண்டும்; நாயர் நம்பூதிரியிடமிருந்து 7 அடி தொலைவில் நிற்க வேண்டும்.

புரதவண்ணார் உயர்சாதியினர் கண்ணில் படாமல் செல்ல வேண்டும். ஒடுக்கப்பட்ட பெண்கள் நீர் குடத்தை இடுப்பில் வைக்கக் கூடாது. தலையில் வைக்க வேண்டும். இவர்கள் குடைப்பிடிக்கக் கூடாது. சில சாதியினர் உயர்வர்க்கத்தினரின் பெயர்களைச் சூட்டிக் கொள்ளக் கூடாது.

கோவில்களுக்குக் காய்கறிகள் கொடுக்க வேண்டும். தெப்பத் திருவிழாவில் தெப்பம் கட்ட ஈறல் சேகரிக்க வேண்டும். எல்லாம் சரி ஆனால் இந்த சாதிகளுக்குக் கோவில்களில் உரிமை இல்லை. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படி எல்லாம் திருவிதாங்கூரில் இருந்தாலும் தேவதாசி ஒழிப்பு, அடிமை ஒழிப்பு, கோவில் நுழைவு உரிமை எனச் சமூகச் சீர்த்திருத்த விஷயங்களும் வேகமாக நடந்திருக்கின்றன. ஒரு வகையில் பிரிட்டீஷ் ஆட்சியின் கீழிருந்த தமிழகப் பகுதிகளை விட இங்கு மிக வேகமாகவே இச்செயல்பாடுகள் நடந்திருக்கின்றன.

narayanaguru and ayyankaliதிருவிதாங்கூரில் ஜாதி ரீதியாக உருவாக்கப்பட்ட அமைப்புகள் அந்த சாதிகளிடம் விழிப்புணர்வை உருவாக்கியிருக்கின்றன. 1903ல் தோன்றிய ஸ்ரீ நாராயணகுரு தர்மபரிபாலனம் கேரள ஈழுவமக்கள் வாழ்வில் புதிய சகாப்தத்தை உருவாக்கியது. 1907ல் உருவான யோக சேமா நம்பூதிரிகளின் சில பழக்கங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது.

வெங்கானூர் அய்யன்காளி உருவாக்கிய (1907) ஜாதி ஜன பரிபாலன யோகம் புலையர் சமூக விடுதலைக்குப் போராடியது. மன்னத்துப் பத்மநாபன் நிறுவிய (1914) நாயர் சர்வீஸ் சொசைட்டி நாயர் சமூகத்தை ஒத்த சாதிகளையும் உட்பிரிவுகளையும் ஒன்றாக்கியது.

சகோதரர் அய்யப்பனின் சகோதரர் சங்கம் (1917) ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுத்தது. அப்துல்காதர் மவுலவி என்ற பன்மொழிக் கவிஞரின் திருவிதாங்கூர் முஸ்லீம் மகாசபை பெரும்சாதனை செய்தது.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இது போன்ற அமைப்புகள் உருவாவதற்கு முன்பே 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தென் திருவிதாங்கூரில் தாமரைக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த அய்யா வைகுண்டர் என்ற ஞானி நாடார் சாதியினரின் சமூக மேம்பாட்டிற்காக தன் ஆன்மீகப் பலத்தைப் பயன்படுத்தினார்.

இவை எல்லாம் தனிமனிதர்கள் தனிப்பட்ட சாதிகளின் போராட்டங்கள். இவை அல்லாமல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சமூகத்தின் பொதுவான சில பிரச்சனைகள் எதிர்ப்பின் காரணமாகவோ, எதிர்ப்பில்லாமல் சாதாரணமாகவோ தீர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த இடத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

வேணாட்டு அரச வம்சத்தினரும் திருவிதாங்கூரின் முதல் அரசருமான அனுஷம் திருநாள் மார்த்தாண்ட வர்மா (1729-1758) தம் கால அரசியல் ரீதியான பகையை முறியடித்தார். இவர் திருவிதாங்கோடு என்ற ஊரின் பெயரைச் சமஸ்தானத்துக்கு வைத்துக் கொண்டார். இப்பெயர் பின்னர் திருவிதாங்கூர் ஆனது.

மார்த்தாண்ட வர்மாவிலிருந்து சித்திரைத் திருநாள் என்னும் அரசர் வரை 12 பேர்கள் 220 ஆண்டுகள் இந்த ராஜ்யத்தை ஆட்சி செய்தனர். இந்த ஆட்சியாளர்களில் மூன்று ராணிகளும் அடங்குவர். இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனி அரசும் பிரிட்டீஷ் அரசும் 18, 19, 20-ஆம் நூற்றாண்டுகளில் பொதுமக்களின் சாதிய விஷயங்களிலும் வேறு சமூக மாற்றங்களிலும் ஆர்ப்பாட்டத்துடன் செய்த மாற்றங்களை மூச்சு பேச்சில்லாமல் திருவிதாங்கூர் அரசு செய்திருக்கிறது.

திருவிதாங்கூரில் நம்பூதிரி ஆண், நம்பூதிரி பெண் குற்றவாளிகளைத் தண்டிப்பது, சோதனை செய்வது என்ற வழக்கம் பிரத்யாயம், ஸமார்த்த விசாரம் எனப்பட்டது. பெண் குற்றவாளி எனச் சந்தேகப்படப்பட்டவர் விஷப்பாம்பு இருக்கும் மண்குடத்துக்குள் கையைவிட்டு சத்தியம் செய்ய வேண்டும். ஆண் நம்பூதிரி குற்றவாளி கொதிக்கும் நெய்ப்பாத்திரத்துக்குள் கையைவிட்டு சத்தியம் செய்ய வேண்டும்.

இந்தக் கொடுமையைத் திருவிதாங்கூரின் கிழக்கிந்தியப் பிரதிநிதிகள் கண்டும் காணாதது மாதிரி தான் இருந்தார்கள். சுவாதித்திருநாள் என்ற அரசர் (1829 - 1847) நம்பூதிரி குற்றவாளிகளைத் தண்டிக்கும் நிகழ்வை ஓசையின்றித் தடைசெய்தார்.

விபச்சாரிகளை மொட்டையடித்து எருமைச்சாணியைத் தண்ணீரில் கரைத்து அவள் தலையில் ஊற்றி வெயிலில் நிற்க வைக்கும் தண்டனை என்று தென்திருவிதாங்கூர் கிராமங்களில் இருந்தது. இத்தண்டனையைக் கிராம அதிகாரிகளே நிறைவேற்றுவர். அரசர் அல்லது அவரது திவானின் (முக்கிய மந்திரி) காதுகளுக்குச் சில சமயம் போகாமலே நடக்கும், சில கிராம அதிகாரிகள் விபச்சாரிகளை ஊரைவிட்டுக் குடிபெயரும்படியும் தண்டனை கொடுத்தார்கள். இந்த வழக்கத்தைச் சுவாதித்திருநாள் ஓசையின்றி நிறுத்தினார்.

sethu lakshmibaiசேது லட்சுமிபாய் என்னும் அரசியின் காலத்தில் (1925 - 1931) மருமக்கள்வழி முறை ஒழிக்கப்பட்டது. (1926) கோவில்களில் தேவதாசிகளை நியமிக்கும் வழக்கம் நிறுத்தப்பட்டது. (1930) கிராமத் தெய்வங்களுக்கு உயிர்பலி கொடுக்கத் தடைச்சட்டம் வந்தது. ஸ்ரீ சித்திரை திருநாள் அரசர் காலத்தில் எல்லா சாதியினரும் கோவிலில் நுழையும் உரிமை பெற்றனர். (1936) இவற்றில் கோவிலில் நுழையும் போராட்டம் மட்டும் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடையது.

இப்படியாக உள்ள சமூக மாற்றங்கள் வேகமாக நிறைவேறும் அளவுக்குச் சமூகம் தன்னைத் தயார்படுத்திக் கொண்டதைத் திருவிதாங்கூரின் சிறப்பாகக் கொள்ளலாம்.

இந்த இடத்தில் திருவிதாங்கூர் வரலாறு நாட்டார் வழக்காற்றியல் செய்திகளுடன் எப்படி ஒத்துப் போகிறது என்று பார்க்கலாம். 1729 முதல் 1949 வரை உள்ள 220 ஆண்டுகளின் வரலாற்றை ஆவணங்கள், அரசு குறிப்புகள், கிழக்கிந்தியக் கம்பெனிக் கோப்புகள், நாட்குறிப்புகள், மிஷனரி அறிக்கைகள் போன்றவற்றின் அடிப்படையில் எழுதியுள்ளனர்.

இப்படி எழுதியவர்களில் பாச்சமுத்து, சங்குண்ணி மேனன், நாகம் அய்யா, வேலுப்பிள்ளை எனச் சிலர் முழுமையாகவும், இளங்குளம் குஞ்சம்பிள்ளை என்பவர்கள் உதிரியாகவும் எழுதியுள்ளனர். இந்த வரலாற்று நூற்களில் கூறப்படாத தகவல்கள் நாட்டார் வழக்காற்றுச் செய்திகளில் உள்ளன. இவை முழுமையாக வரையறை செய்யப்படவில்லை. வட்டார ரீதியான வரலாற்றுக்குச் சுவையான செய்திகளைக் கொடுப்பவை இவைதான்.

நாட்டார் வழக்காற்றியல் செய்திகளை ஆவணங்களாக மட்டுமல்ல, இதை வரலாற்று முறையியலாகவும் எடுத்துக் கொள்ளலாம். லூயிஸ் என்பவரின் இக்கருத்தை சுகோதுக்கோ என்பவர் ஆழமாக ஆராய்ந்து வாய்மொழிச் செய்திகளைக் கூட வரலாறாக பரிசீலனை செய்யலாம் என்கிறார்.

திருவிதாங்கூர் சுவடிப் பாதுகாப்பகத்திலும் கிராமங்களிலும் வில்லிசைக் கலைஞர்களிடம் உள்ள கதைப்பாடல்கள் 600-க்கு மேல் இருக்கலாம். இவற்றில் வரலாறு சமூகம் தொடர்பான விஷயங்களைக் கூறும் கதைப்பாடல்கள் 160 அளவில் தேறுகின்றன. திருவிதாங்கூர் வரலாற்றையும் சமூகத்தையும் அறிய 40 கதைப்பாடல்களிலிருந்து செய்திகள் சேகரிக்கலாம்.

இந்தக் கதைப்பாடல்கள் தவிர நாட்டார் கலைகள், வாய்மொழிப் பாடல்கள், கதைகள், ஓவியங்கள், கைவினைப் பொருள்கள் ஆகியவற்றிலிருந்து தென்திருவிதாங்கூரில் வட்டார ரீதியான ஒரு வரலாற்றை மீட்டெடுக்க முடியும். இவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

ஆரம்பகால திருவிதாங்கூர் அரசர்களான மார்த்தாண்டவர்மா, தர்ம ராஜா பற்றிய செய்திகள்;

தென்பாண்டி நாட்டுக்கும் தென் திருவிதாங்கூருக்கும் உள்ள உறவு தென்திருவிதாங்கூரில் குடியேறிய பிராமணர், நாடார், வேளாளர், அருந்ததியர், காட்டு நாயக்கர், புல்லுக்கட்டி நாயக்கர், செட்டி, செட்டு, கணிகர் பற்றிய செய்திகள்; சாதி காழ்ப்பு குறித்த தகவல்கள்.

விடுதலை போர் குறித்த செய்திகளும், பிற செய்திகளும் என வகைப்படுத்தலாம்.

திருவிதாங்கூர் அரசர்களில் நாட்டார் தலைவனாக (Folk Hero) அனுஷம் திருநாள் மார்த்தாண்டவர்மா என்ற அரசர் மட்டுமே உள்ளார். இவர் தன் தாய்மாமா இராமவர்மாவிடமிருந்து ஆட்சியைப் பெற்றார். திருவிதாங்கூர் அரசுரிமை மருமக்கள்வழிப் பட்டதால் இது சரியானது. ஆனால் ராமவர்மாவின் மக்கள் ஆட்சிக்கு உரிமை கோரி கலகம் செய்தனர். கடைசியில் அவர்கள் அழிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியைத் தம்பிமார் கதை, எட்டு கூட்ட தம்புரான் கதை ஆகிய இரண்டும் விரிவாகக் கூறுகின்றன.

தர்மராஜாவின் ராமேஸ்வர யாத்திரை என்னும் அச்சில் வராத கதைப்பாடல் கார்த்திகைத் திருநாள் இராமவர்மா என்ற அரசர் ராமேஸ்வரத்திற்கு தன் பரிவாரங்களுடன் சென்று திரும்பிய நிகழ்ச்சியை விவரிக்கிறது. இதில் திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டம் வழி உள்ள தர்மமடங்கள், கோவில்கள் பற்றிய செய்திகள் வருகின்றன.

தமிழகத்தில் பெருவழிச் செல்லும் பயணிகளுக்குப் புகலிடமாக இருந்த கல்மடங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நேரடியாகப் பார்த்து செயல்படுத்திய செய்தி “தர்மராஜாவின் யாத்திரை” கதைப்பாடலில் உள்ளது. அதோடு 18ஆம் நூற்றாண்டில் தென் திருவிதாங்கூர் மக்களின் உணவு, பயணம், உடை, உறவுமுறை, மகப்பேறு எனப் பல விஷயங்களை இக்கதைப்பாடல் கூறுகிறது.

கன்னியாகுமரி பகவதி கோவிலில் 18ஆம் நூற்றாண்டில் நடந்த திருட்டு பற்றிய செய்தி கன்னியாகுமரி களவு மாலை என்னும் கதைப்பாடலில் உள்ளது. இதில் அக்கால தேவதாசிகளின் நிலை பற்றியும் கோவில் வழிபாட்டில் பூசகர்கள் செய்த தில்லுமுல்லு பற்றியும் பல விஷயங்கள் உள்ளன. இவை வரலாற்றாசிரியர்கள் கூறாதவை.

தென் கேரளத்தில் தமிழர்களை - அவர்கள் திருச்சி, தஞ்சை மாவட்டத்தினராக இருந்தாலும் பாண்டிக்காரர்கள் என்று அழைப்பது மரபு. இதற்குக் காரணம் திருவிதாங்கூருக்கும் தென்பாண்டி குறுநில மன்னர்களுக்கும் 18, 19ஆம் நூற்றாண்டில் இருந்த தொடர்புதான் காரணம். இது குறித்து கிழக்கிந்தியக் கம்பெனி ஆவணங்களோ வேறு சான்றுகளோ இல்லை. ஆனால் பத்துக்கு மேற்பட்ட கதைப்பாடல்களில் இது பற்றிய செய்திகள் உள்ளன. அதோடு இங்கு நடைமுறையில் உள்ள நாட்டார் தெய்வ வழிபாட்டுச் செய்திகளும் இதற்கு உதவ முடியும்.

கன்னியாகுமரியில் குறுநிலத் தலைவர்களாகவும் படைத் தலைவர்களாகவும் கடற்கரை மீனவர்கள் இருந்தார்கள் என்பதற்கு வாய்மொழிச் செய்திகள் மட்டுமல்ல, மன்னன் மதிப்பன் கதை போன்ற சில கதைப்பாடல்களிலும் சான்றுகள் உள்ளன. இது குறித்த செய்தி செண்பகராமன் பள்ளு என்ற செவ்வியல் இலக்கியத்திலும் உண்டு. தென்கேரள வரலாற்றாசிரியர்கள் இது பற்றி ஏதும் கூறவில்லை.

தென் திருவிதாங்கூரில் குடியேறிய சாதிகள், குடியேறிய காலகட்டம் பற்றிக் கல்வெட்டுகளில் குறைவாகவே செய்திகள் உள்ளன. குறிப்பாக தெலுங்கு, கன்னடம் பேசிய மக்கள் தென்திருவிதாங்கூரில் வந்தது பற்றிய செய்திகள் கன்னடியன்போர் முதலான சில கதைப்பாடல்களில் காணப்படுகின்றன. நாட்டார் தெய்வ வழிபாடு தொடர்பான செய்திகளிலும் இதைத் தேடமுடியும்.

தெலுங்கு மக்கள் மட்டுமல்ல நாடார், விசுவகர்மா, மறவர், வேளாளர், யாதவர் எனப் பல சாதியினர் குடிபெயர்ந்துள்ளனர். வடகேரளப் பிராமணர்கள் தென்திருவிதாங்கூருக்கு வந்தனர். இதுபோன்ற பல செய்திகள் திவான் வெற்றி முதலாக 12க்கு மேற்பட்ட கதைப்பாடல்களில் உள்ளன.

18, 19 ஆம் நூற்றாண்டு தென் திருவிதாங்கூரில் சாதிக்கலவரம், சாதிக்காழ்ப்பு, சாதி வெறுப்பு குறித்த பல செய்திகள் கதைப் பாடல்கள், வாய்மொழிப் பாடல்கள், பழமொழிகள் ஆகியவற்றில் உள்ளன. தீண்டத்தகாதவர் யாவர்? ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கிடையே நிலவிய தாரகம்மியம், முக்குவர் இழிவானவர், குறவர் சேர்க்க முடியாத சாதி என்னும் பல செய்திகள் இந்தக் கதைப்பாடல்களில் உள்ளன.

ஒருவரின் பெயரைக் கேட்பது போலவே ஜாதியைக் கேட்பது சாதாரணமாயிருக்கிறது. பெண்கள் கூட சாதிப்பெயரைத் தன் பெயருடன் சேர்த்துக் கூறுவது வழக்கமாயிருந்தது. இது மிகக் குறிப்பிட்ட சாதியினரிடம் இருந்த வழக்கம்.

தென்திருவிதாங்கூரில் தெலுங்கு மக்களின் மேல் வெறுப்பு குறித்த செய்திகள் வெளிப்படையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தெலுங்குப் படையெடுப்புகள் நாஞ்சில் நாட்டில் தொடர்ந்து நடந்திருக்கின்றன. தெலுங்குப் படைகள் பெண்களின் தாலிகளை அறுத்தது, பாத்திரங்களைக் கொள்ளையடித்தது என்னும் செய்திகள் கதைப்பாடல்களில் மட்டுமல்ல, பழமொழிகளிலும் வழக்காறுகளிலும் உள்ளன.

தென் திருவிதாங்கூரில் குடியேறிய வடுகத்து வங்காளக்காரர் ஆடுமாடு மேய்ப்பவர்களாகவே தொழில் செய்தனர். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் இதே சாதியினர் அரசு அதிகாரிகளின் வீடுகளிலும் கோவில்களை அடுத்த தோட்டங்களிலும் மலம் அள்ளும் தொழிலுக்குத் தள்ளப்பட்டனர். மதுரை நாயக்க அரசர்கள் காலத்தில் பெரிய கட்டிடக் கட்டுமானம், குளம் கட்டுமானம் போன்றவற்றிற்காக இளம் கன்னிகளைப் பலி கொடுத்தார்கள்; தாந்திரிக வழிபாட்டில் இளம் கன்னிகளை நிர்வாணமாக அமர்த்தி பூஜை செய்யப் பயன்படுத்தினர் என்பன போன்ற காரியங்களால் தென்திருவிதாங்கூர் கிராமங்களின் தெலுங்கு மக்கள் சிலர் குடிபெயர்ந்தனர் என்னும் வாய் மொழிச் செய்திகள் உண்டு.

நாஞ்சில் நாட்டில் ‘வடுகச்சி’ (தெலுங்கு பேசிய பெண்) என்ற சொல் இழிவானதாகவே கருதப்பட்டிருக்கிறது. ‘அடுகிச்சி முடுகிச்சி வடுகச்சி கல்யாணம்’ என்னும் வழக்காறு ஐவர் ராசாக்கள் கதையில் கிண்டலான பிரயோகமாக வருகிறது. தர்மராஜாவின் ராமேஸ்வர யாத்திரை என்ற கதைப்பாடலில் தெலுங்குப் பெண்களிடம் கவனமாக இருங்கள் என்று தளவாய் வீரர்களிடம் எச்சரிப்பதான ஒரு செய்தி வருகிறது. கன்னியாகுமரி களவுமாலை நூலில் திருடர்களின் பட்டியலில் தெலுங்குச் சாதிகளின் பெயர்களும் உள்ளன.

இப்படிப் பல செய்திகள். இவர்களின் நாட்டு விடுதலை பற்றிய செய்திகளும் உண்டு வாய்மொழிப் பாடல்களிலும், நாட்டார் நிகழ்த்து கதைப்பாடல்களிலும் விடுதலைப் போராட்டச் செய்திகள் வருகின்றன. வெள்ளைக்காரனுக்கு எதிராகப் பேசப்பட்ட செய்திகள் கிண்டலாகக் காட்டப்பட்டுள்ளன. பஞ்சாப் படுகொலை, அந்நியத்துணி பகிஷ்கரிப்பு, பகத்சிங் தூக்கில் தொங்கிய நிகழ்வு பற்றிய தகவல்கள் களியலாட்டப்பாடல்களில் உள்ளன. இப்பாடல்களை ஒடுக்கப்பட்ட மக்கள் பாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீராதாரம், விவசாயம் பற்றிய செய்திகள் நாட்டார் வழக்காற்றுச் செய்திகளில் நிறையவே உள்ளன. ராப்பாடி என்னும் இரவு நேர யாசகன் பாடும் பாடல்களில் நெல் வகைகளின் பெயர்கள் உள்ளன. நான் தொகுத்த பாடல்களில் 66 வகையான நெல்லின் பெயர்களும், நெல் பயிருக்கு வரும் 13 வகையான நோய்கள் பற்றியும், இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் பற்றியும் மழைபெய்வதற்கான அறிகுறி பற்றியும் விரிவான செய்திகள் உள்ளன.

இப்படியான பல வட்டார ரீதியான செய்திகள் முழுதும் தொகுக்கப்பட்டால் விரிவான பண்பாட்டு வரலாற்றை எழுத முடியும்.

- அ.கா.பெருமாள்

Pin It