கவிஞர் தமிழ் ஒளியின் மாதவி காவியம் தனித்துச் சுட்டத்தக்கது. மாதவியை கதைத் தலைவியாக்கி அவளுடைய சிறப்பையும் மேன்மையையும் சிறப்பிக்கும் வகையில் அமைந்த காவியமாக 'மாதவி காவியத்தை' படைத்திருக்கிறார்.
கவிஞர் தமிழ் ஒளி - அடையாளம்
புதுவையை இருப்பிடமாகக் கொண்டவர் தமிழ் ஒளி, பாரதியின் பாடல்களால் ஈர்க்கப்பட்டு பாரதிதாசனோடு தன்னை தொடர்புபடுத்திக் கொண்டு பக்குவப்பட்டவர். பல நூறு தனிக்கவிதைகளையும் எட்டு குறுங்காவியங்களையும் தமிழுக்குத் தந்த பெருமைக்குரியவர். எழுத்துப் படைப்புகள் கவிஞரை வளமாக வாழ வைக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் நண்பர்களைச் சார்ந்து வாழ்ந்த கவிஞர். மகாகவி பாரதி போல நாற்பதாண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்தார். (21.09.1924-29.03.1965) வளமானத் தமிழுக்கு நலம் சேர்த்த பெருங்கவிஞர் தமிழ் ஒளியை மண்ணின் மைந்தராக ஏற்று புதுவை அரசு 1999இல் பவள விழா எடுத்துச் சிறப்பித்தது.
மாதவி காவியமும் படைப்பாக்கமும்
மாதவி காவியம் முதல் பதிப்பாக 1995ஆம் ஆண்டு மறுபதிப்பாக 2003ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. மாதவி காவியத்திற்குப் படைப்பாளர் பூவண்ணன் தந்துள்ள அணிந்துரையில் இருந்து இக்காவியம் அச்சாக்கம் பெற்று படைப்பாக வெளிவந்த தகவலை அறிய முடிகின்றது.
"இதழ்களில் மட்டும் வெளிவந்த ஏட்டிலேயே கையெழுத்தில் குடிகொண்ட கவிஞர் தமிழ் ஒளியின் கவிதைகள் சாகாமல் காத்து வாழ்விக்கும் சஞ்சீவியானார். பொருள் வளம் இல்லாதச் சூழலிலும் தமிழ் ஒளியின் பாடல்களைத் தமிழ் உலகிற்கு வெளிக்கொணர்ந்தவர் செ.து. சஞ்சீவி. அந்தக் காலத்து உ.வே.சா போலத் தேடித் திரிந்து தமிழ் ஒளியின் கவிதைகளையும், கட்டுரைகளையும் தேடி அவற்றை வெளியிட்டும் மகத்தான பணியை மேற்கொண்டார். அதன் பயனே இவ் மாதவி காவியம்.’’
‘‘மாதவி கதை இளங்கோவடிகள் சிலம்பில் கூறியது. அந்தப் பகுதியை அடிப்படையாகக் கொண்டு தமிழ் ஒளி இக்காவியத்தைப் படைத்திருக்கிறார்.
நெஞ்சை அள்ளும் சிலம்பைப் படித்துப் படித்து மகிழ்ந்த போது இப்பகுதியை இப்படி செய்திருக்கலாமோ என நினைத்து இளங்கோ படைத்த மாதவியைத் தம் கற்பனை அணிகளால் அழகுபடுத்தி ஒரு புது மாதவியாக இக்காவியத்தில் அறிமுகப்படுத்துகிறார்."
என்ற பூவண்ணனின் கருத்து மாதவி காவியம் அச்சேறிய வரலாற்றையும், நூலாக்கம் பெற்ற நிலையையும் புலப்படுத்துகின்றது.
கவிஞர் தமிழ் ஒளி காவியம் படைத்த காரணத்தை தெளிவுபடுத்துகிறார். காவியத்தைத் தொடங்கும் முன் தன்னுடையதாகச் சில கருத்துக்களை முன் வைக்கும் தமிழ் ஒளி,
“என் கதையில் மாதவி மனம் மாறும் நிலையை மட்டுமே காட்டி செல்வங்களை தானஞ்செய்யும் நிகழ்ச்சி, பௌத்த சங்கத்தை அடையும் நிகழ்ச்சி ஆகியவற்றை உய்த்துணருமாறு விட்டுள்ளேன்"
என்கிறார். படைப்பை தந்தமைக்கான நோக்கத்தைத் தெளிவுபடுத்தினாலும் தமிழ் ஒளி அரசியல், பத்தினி, ஊழ்வினை என்ற மூன்றினை முதன்மைப்படுத்தாது மாதவியை மட்டுமே மையப்படுத்துவது சுட்டத்தக்கது.
கவிஞர் தமிழ் ஒளி இளங்கோவடிகள் சுட்டும் மூன்று காண்டங்களில் புகார்க்காண்டம் என்ற பெயரை அப்படியே முதல் காண்டமாக அமைத்திருப்பது சுட்டத்தக்கது. அதைப் போலவே உட்பிரிவுகளுக்கு காதை என பெயரிட்டிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. சிலம்பில் புகார்க்காண்டத்தில் இடம்பெறும் கானல்வரியும், வேனிற்காதையும் மாதவி காவியத்தில் துறவுக் காண்டத்தில் இடம்பெற்றுள்ளன. சிலம்பில் புகார்க்காண்டத்தில் இடம் பெற்றுள்ள அந்தி மாலை சிறப்பு செய் காதை, இந்திரவிழா ஊர் எடுத்த காதை இரண்டும் மாதவி காவியத்தில் பட்டினக் காண்டத்தில் இடம்பெறுகின்றன. அரங்கேற்றுக் காதையை அரங்கக்காதை என்றும் கடலாடு காதையை நிலவாடுகாதை எனவும் கவிஞர் தமிழ் ஒளி மாற்றம் செய்திருப்பது சுட்டத்தக்கது.
புகார்க்காண்டத்தின் தொடக்கமான மங்கல வாழ்த்துப் பாடலில் கோவலன் கண்ணகித் திருமணத்தை விவரிக்கிறார் இளங்கோவடிகள். ஆனால், தமிழ் ஒளி புகார்க் காண்டத்தின் தொடக்கமாக ‘பூர்வ காதை' என்ற பெயரில் மாதவியின் பிறப்பையும் சிறப்பையும் சொல்லிக் கதையைத் தொடங்குகிறார். மேற்சுட்டிய நிலைப்பாடுகள் சிலப்பதிகாரத்திற்கும் மாதவி காவியத்திற்கும் இடையிலான கட்டமைப்பைப் புலப்படுத்துகின்றன.
காவியத் தொடக்கம்
தமிழில் கடவுள் வாழ்த்தாக இயற்கையைப் பாடிய புதுமைக் கவிஞர் தமிழ் ஒளியும் கடவுள் வாழ்த்தாக 'ஞாயிறு வணக்கம்' என்ற பகுதியினை காவியம் தொடங்கும் முன் அமைத்துக் காட்டுவது சுட்டத்தக்கது.
"நிலமாய்க் கனிந்து வெள்ள
நீரெனப் பொலிந்து தோன்றும்
கோலமாய் வளைந்த கடல் மேலே - ஒளி
கொண்டு வருகின்ற கதிர்வேலே!"
காவியத்தின் இம்முதல் பாடலிலேயே தமிழ் ஒளியின் கவித்திறன் முழுமையாய் வெளிப்படுவதையும் இளங்கோவின் தாக்கம் ஏற்றம் பெற்றிருப்பதையும் காணலாம்.
மாதவி அறிமுகம்
கவிஞர் தமிழ் ஒளி தன் காவிய நாயகி மாதவியை,
"விண்ணிற் பிறந்த மகள்
இந்திரனார் சாபத்தால்
மண்ணிற் பிறந்தாள்
மயலூட்டி வாழ்வதற்கே!
பேர் வசியம் செய்கின்ற
பேதை அவள் பெயரும்
ஊர்வசியே என்றால்
உவப்புறுவர் ஊர்வசியின்
கால் வழியிடைப் போற்றும்
கணிகையர் தம் குலத்தில்
மேல் வழியைப் போற்றம்
மேதகைய மாதவிப் பெண்"
என அறிமுகப்படுத்துகிறார். இளங்கோவடிகள் மாதவியை அறிமுகப்படுத்தும் நிலைப்பாட்டோடு பொருந்தி வருவதைக் காணலாம். மற்றவர்களை மயக்கும் பேரழகி என்றும் ஊர்வசியின் வழித்தோன்றலாகவும் மாதவியைச் சுட்டுவதோடு குறிப்பாகக் கவிஞர் மாதவியின் குலத்தை உணர்த்துவதும் குறிப்பிடத்தக்கது.
கவிஞர் தமிழ் ஒளி தன்னுடைய காவியத்தில் கோவலன் பிரிவுக்கு புதியதொரு காரணத்தைப் புலப்படுத்துகிறார். கோவலன் - கண்ணகி இருவர்க்கும் ஒரே குறை குழந்தை இல்லை என்பது. இக்குறையை நினைத்துக் கண்ணகி புலம்புவதை,
"புலியென்றிடப் புகழென்றிடப்
பூப்போல் ஒரு பிள்ளை!
நீளையாடவும் கிளியாடவும்
கீர்த்திக்கொரு பிள்ளை!
வயிறுற்றிடு மலட்டுப்பிணி
மாய்க்கும் ஒரு பிள்ளை!
என்றென்னுவள்! இடரென்னுவள்!
எதிற் கண்ணகி நங்கை
நீன்றென்னுவள் நெடிதென்னுவள்
நிறை மாதர்கள் தங்கை”
எனக் காட்டும் கவிஞர் தமிழ் ஒளி,
"இல்லிற் பிறந்த
இடரைக் கலைவாணர்
சொல்லிற் பிறந்த
சுவையால் தவிர்கின்றாள்"
எனக் கோவலனின் மனத்துயரத்தையும் வெளிப்படுத்துகிறார். சிலம்பில் இடம் பெறாத கதைப்பாங்கும் கண்ணகியின் நிலைப் பாடும் மாதவி காவியத்தில் இடம் பெறுவது புதுமையானது.
கோவலனைத் தடுத்தல்
கண்ணகியை விட்டுப் பிரியும் கோவலன் மாதவியின் மனையில் வாழ்ந்த செயலை தவறு என யாரும் சுட்டிக்காட்டி நெறிப்படுத்தியதாக சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கதையமைக்கவில்லை. ஆனால், மாதவி காவியத்தில் கவிஞர் தமிழ் ஒளி கோவலன் மாலையை வாங்கி மாதவி மனைக்குச் செல்ல முயலும் போதே திருமுருகர். திருக்கண்ணர் எனும் இரு தமிழ்ப் புலவர்கள் தடுத்து அறிவுரை கூறுவதாகப் படைத்துக் காட்டுகிறார்.
"தாரொடு சென்றாய்த்!
தாயொடு கன்றாய்த்!
தன்வசங் கெட்டுப்போய்த்!
தேரோடு வந்தாய்த்
தெருவொடு நின்றாய்ச்
செய்கையுங் கெட்டுப்போய்!
அரவது துயிலும்
புற்றெனும் அல்குல்
அலைகளை அறியாயோ?
கரவது புரியுங்
கணிகையர் உரியுங்
கலைகளை அறியாயோ?
என திருக்கண்ணர் அறிவுரை கூறவும் மறுபுறம்
“நாடகம் முடியத்
தம்மனை நாடும்
நடுநிலை போற்றாமல்
ஆடகங் கண்டாள்
அவள் மனை நாடி
அலைவதும் அறிவுடைமை?’’
என திருமுருகர் நெறிப்படுத்தவும் முனைகின்றனர். ஆனால், கோவலன்,
"ஒன்றெதிர் கூறும்
உரையெதும் இல்லை
உலகியல் என்கின்றான்"
எனப் பதில் தருகின்றான். புலவர்களின் அறிவுரையைக் கேளாமல் 'இது உலகியல்' எனக் கூறி மாதவி மனைநாடுகின்றான் கோவலன். இத்தகைய கதைப்போக்கும் சிலம்பில் இடம்பெறவில்லை. மன்னனிடம் நீதி கேட்கும் புரட்சிப் பெண்ணாகச் சித்திரிக்கப்படும் கண்ணகியும் கோவலனின் செயல் தவறு என இடித்துரைக்க வில்லை. மற்றவர்களும் தடுக்கவில்லை. கவிஞர் தமிழ் ஒளி படைத்துக் காட்டும் இப்பகுதி சிலம்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டு அமைந்திருப்பதைக் காணலாம். இத்தகைய வேறுபாடுகளும் புதிய சிந்தனைகளும் சிலப்பதிகாரத்தில் தெரிக்கும் பல ஐயங்களுக்கு விளக்கம் தருவதாய் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கானல்வரி
கடற்கரைப்பட்டினமான பூம்புகாரில் இந்திரவிழா எழுச்சியுடன் நடைபெறுகிறது. கோவலனும் மாதவியும் கடலாடச் செல்கின்றனர். கோவலன் காவிரியைப் பெண்ணாகப் பாவித்துப் பாட அதை வேறுவிதமாகப் புரிந்து கொண்ட மாதவி தானும் பாட கோவலன் அதைத் தவறாகப் புரிந்து கொள்வதாகப் பதிவு செய்கின்றார் இளங்கோவடிகள். மாதவி காவியத்திலும் இத்தகைய நிகழ்வு நடைபெறுகிறது. கானல்வரிப் பாடலை மாதவி வேடிக்கையாகப் பாடுகிறாள். அது வினையாகி விடுகிறது. யாழ் மீட்டித் தான் பாடிய பாடல் தனக்குத் துயரத்தைத் தந்துவிட்டதே என வருந்தும் மாதவியின் நிலையை,
''யாழே! அது தரும் அமுதநல் லிசையே!
ஊழே! உயிர்களை உருத்திடும் பாழே!
அலையே! கடலே! அவ்வயின் நிழலே!
பொழிலே! மணலே! புகார் எனுந்துறையே!
கழியே! கலனே! கடல்விளை யாட்டே!
புன்னையே! மலரே! புதுமணப் பெண்ணே!
அன்னையே! காவிரி! அனைவரும் கூறீர்!
கள்ளம் உடைய கருத்தால் கோவலன்
உள்ளம் உடைய உரைத்ததும் உண்டோ?
வெள்ளை மனத்தால் விளித்தேன்
பிள்ளை மனத்தால் பிதற்றினேன் பாவி நான்!’’
என எடுத்துக்காட்டும் தமிழ் ஒளி மேலும்,
"வேடிக்கை வினையாவ துண்டோ?- வெறும்
வேடிக்கை வினையாவ துண்டோ?
மூடிக்கை திறந்திட்டால் முகமாக துண்டோ?
வேடிக்கை வினையாவ துண்டோ?
எனப் பாடுவதாகச் சுட்டுகிறார். விளையாட்டாய்ப் பாடிய பாடல் தன் வாழ்க்கையை முடமாக்கிவிட்டது என மாதவி வருந்தும் பகுதி படித்து இன்புறத்தக்கது. சிலப்பதிகார கானல்வரி பகுதியோடு ஒப்பு நோக்கத்தக்கது.
வேனிற்காதை
கோவலனின் பிரிவைத் தாங்காது மனம் வெதும்பும் கண்ணகி, மாதவி இருவரின் நிலைப்பாட்டை காட்சிப்படுத்தும் பகுதி வேனிற்காதை. தனிமை தீயாகச் சுடுகிறது மாதவி தன் தோழியாகிய வசந்த மாலையிடம் செண்பகம், மருக்கொழுந்து, இருவாட்சி, மல்லிகை, வெட்டிவேர் இவற்றோடு பல்வேறு மனம் வீசும் மலர்கள் நிறைந்த மாலையின் இடையே வெள்ளைத் தாழை மடலின் சிறிய செண்பகப் பூவின் மொக்கினை எழுத்தாணியாக்கிக் கோவலனுக்கு மடல் எழுதி அனுப்பும் பகுதியை இளங்கோவடிகள் கானல்வரியில் சுருக்கமாகத் தர மாதவி காவியத்தில் கவிஞர் தமிழ் ஒளி மாதவியின் புலம்பலையும் ஏக்கத்தையும் மிக விரிவாகக் காட்டுகிறார்.
மாதவி காவியத்தில் மாதவி தோழி வசந்த மாலை மூலம் கோவலனுக்குத் தாழை மடல் அனுப்புகிறாள். சிலப்பதிகாரக் கோவலனைப்போல மாதவி காவியக் கோவலனும் மடல் மறுத்துப் பேசுகிறான். கோவலன் மறுப்பிற்குப் பதில் சொல்லும் வசந்த மாலை,
"தழை தருமடல் அல்ல இவை கொடி
தந்த மலர்களும் அல்ல இவை!
வழை எனப்படும் மாதவியின் - உளம்
எட்டிப் பறித்த மலர்கள் இவை!’’
என மாதவி கொடுத்தனுப்பிய மடலின் தன்மையைச் சுட்டிக் காட்டுகிறாள். இதற்கு மறுமொழி கூறும் கோவலன்,
"தாழை மலரினில் நாகமிருக்குது
தலையை நீட்டு தம்மா!
ஏழை மனிதனை இவ்விதம் கொன்றிட
எவ்விதம் கற்று வந்தீர்? - கலை
எவ்விதம் கற்று வந்தீர்?"
எனப் பதில் தருகின்றான். இவ்வாறு மாதவி காவியத்தில் கோவலனுக்கும் வசந்த மாலைக்கும் இடையே நடைபெறும் உரையாடல் பகுதியை மிக விரிவாக அமைத்துக் காட்டுகிறார் கவிஞர் தமிழ் ஒளி. சிலப்பதிகாரத்தில் கோவலன் பிரிந்தவுடன் வசந்தமாலை மூலம் மாதவி விடுத்தது ஒரு மடல். ஆனால், தமிழ் ஒளியின் மாதவி ஒரு மடல் அல்ல இருமடல் அல்ல பல மடல்கள் எழுதுவதாகப் படைக்கப்பட்டிருக்கிறாள். கோசிகமணி என்பவன் மூலமும் கோவலனுக்கு மாதவி மடல் தந்து அனுப்பும் கதையமைப்பு மாதவி காவியத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பூம்புகார்
பூம்புகாரின் சிறப்பினை இளங்கோவடிகள் இந்திர விழா ஊர் எடுத்த காதையில் வியந்து பேசுவதைப் போலவே கவிஞர் தமிழ் ஒளியும் நகர்க்காதையில் விரிவாகச் சுட்டுகிறார். மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம், நாளங்காடி, வீரர்கள் விழா எடுக்கும் நிகழ்வு, மண்டபத்தில் நடைபெறும் விழா, ஐவகை மன்றத்தில் நடைபெறும் அரும்பலி, வீதிகள் பூண்டிருக்கும் விழாக் கோலம், திருவிழாக் காட்சிகள் போன்ற நிலைப்பாடுகள் இளங்கோவடிகளால் எவ்வாறு எடுத்துக்காட்டப்படுகிறதோ அதைப் போலவே மாதவி காவியத்திலும் நகர்வர்ணனை, தேர்ப்பாகர், குதிரைப்பாகர், உறையும் இடம், யானைப் பாகர், குயவர், அரசவீதி, மாளிகைகள், வணிகர் வீதி, கணிகையர் வீதி, படைக்கும் விழாவுக்கும் கொட்டு வோர், கன்னார், கலந்தநேர், காலக்கணியர், பட்டினப்பாக்கம், மருவூர்ப்பாக்கம், நாளங்காடி, அல்லங்காடி என்ற நிலைகளில் பூம்புகார் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. சான்றாக சிலம்பில் இடம்பெறும் நாளங்காடி விழாவில், இந்திரன் ஆணையின்படி வானுலகம் விட்டு பூம்புகாரில் வந்து தங்கிய காவல் தெய்வமாகிய பூதத்திற்கு மக்கள் வழிபாடு செய்து மகிழ்ந்த செய்தியை,
"இந்திரனார் ஏவலினால்
ஈண்டுற்ற பூதத்தை
மந்திரத்தால் மகிழ்விக்க
மருகூறிய நாள் அங்காடி"
என கவிஞர் தமிழ்ஒளி எடுத்தாள்வது சுட்டத்தக்கது.
கோவலன் மறைவுக்குப் பின் மாதவி
கோவலன் கள்வன் எனப் பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு கொலையுண்ட பின் பாண்டியனிடம் நீதி கேட்டு மதுரையை எரித்த கண்ணகியை இளங்கோவடிகள் தெய்வநிலைக்கு உயர்த்துகிறார். கோவலனின் தந்தை மாசாத்துவான் மீளாத் துயரில் பொன்னையும் பொருளையும் தானமாக வழங்கிவிட்டுத் துறவியாகிறான். மாசாத்துவானின் மனைவியும் மகன் கோவலனின் நிலையறிந்து உயிர் விடுகிறாள். கண்ணகியின் தந்தை முனிவர் வேடம் கொண்டு சமண சமயத் துறவிகள் முன் தானங்கள் செய்து துறவு மேற்கொள்ள கண்ணகியின் தாயும் உயிர் விடுகிறாள். கோவலன், கண்ணகி அவர்களுடைய குடும்பம் என்ற அளவில் சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் கதையமைப்பு இது.
கோவலன் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவலங்களை கேள்வியுற்று மனம்கலங்கித் தன் தாய் சித்திராபதியிடம் அறவழிச் செல்ல நான் முடிவு செய்துவிட்டேன். எனவே, நீயும் என் மகள் மணிமேகலையை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கும் விலைமாதர் வாழ்க்கையில் ஈடுபடுத்தாது விடு என்ற வேண்டுகோளை முன் வைத்து மணிமேகலை கூந்தலில் சூடியிருந்த மலர்மாலையை அகற்றி அறவாழ்வை மேற்கொள்ளச் செய்வதாக இளங்கோவடிகள் மாதவியின் நிலைப்பாட்டை கதையாகத் தருகிறார்.
மாதவி காவியத்திலும் கவிஞர் தமிழ் ஒளி இதே நிலைப்பாட்டை சாடுகின்றார்.
"மாட மாளிகை
ஏன் இனி? இது
மாயம் என்பதும் சேர்ந்தபின்!
ஆடவர் எனும்
வீணர்கள் விளையாடும்
காய்களோ மாதர்கள்?
புத்தனார் தரும்
தத்துவம் துயர்ப்
போக்க வந்த மருத்துவம்!
காவியாம் உடை
கட்டியே அவர்
கால்களில் மனம் ஒட்டியே
பாவியேன் புது
புதுவாழ்வைப் பெறப்
பாரிடை தவம் செய்திடுவேன்!
“என்னடி மணிமேகலை
இன்று நாம் புது
வாழ்வு பெற்றுள்ளோம்
என்றெழுந்தனள் நின்றவள்!
துறவெனும் ஒரு
கடலிலே இரு
படகுகள் என மாறினோம்!'
என மாதவி காவியத்தின் இறுதியில் பேசுவதாகச் சுட்டி காவியத்தை நிறைவு செய்கிறார் கவிஞர் தமிழ் ஒளி.
கவிஞர் தமிழ் ஒளி மாதவி காவியத்தில் அரங்குக் காதையில் ஆடலரங்கின் சிறப்பினைச் சிறப்பாக அவருக்கே உரிய கவிநடையில் சுட்டுக் காட்டுகிறார்.
"சிற்ப முறைப்படி செய்து
சித்திர வர்ணமும் பெய்து
விற்பனரின் தொழில் மேவ
விந்தை நிறைந்து உலாவ
கற்பனை யாவும் உயிர்த்துக்
கண்ணெதிர் நின்றதை ஒத்துப்
பொற்புறு மன்றம் அமைத்தார்
பொன்னுலக கத்தும் வியக்க!
செக்கரில் மூழ்கிய வானம்
சித்திரம் தைத்த விதானம்!
பக்கம் வளர் இருவாயில்
பாடும் அரம்பையர் கோயில்!
சக்கர வட்ட மதிக்குத்
தக்க நிறந்தர நிற்கும்
மிக்க நலம் பெறும் முத்தும்
மின்னும் அரங்கிடை தொத்தும்!
ஒருமுக எழினி எடுத்தார்
உயர்வுறு திரையும் விடுத்தார்
பொருமுக எழினி தொகுத்தார்
பூதரை உயர வகுத்தார்
திருமுகம் எழுதி இளைத்தார்
திசைவாளர் மாலை வளைத்தார்
வருமுகம் நோக்கி இருந்தார்
வரவெதிர் பார்க்கும் விருந்தாய்!"
எனக் கவிஞர் தமிழ் ஒளி படைத்து காட்டும் ஆடல் அரங்கு அப்படியே சிலப்பதிகாரத் தாக்கத்தைப் பெற்றிருப்பதைக் காணலாம்.
இளங்கோவின் கண்ணகியும் தமிழ் ஒளியின் மாதவியும்
இளங்கோவடிகளின் நோக்கம் காப்பிய தலைவி கண்ணகியைக் கற்பின் குறியீடாகவும், பெண்மையில் உயர்ந்தவளாகவும், அழகுப் பதுமையாகவும், கல்வியறிவு நிறைந்தவளாகவும் செல்வக் குடியில் பிறந்தவளாகவும் காட்ட வேண்டும் என்பது அதன் வெளிப்பாடே மனையறம் படுத்த காதையில் கோவலன் வாயிலாகக் கண்ணகியின் அழகை வெளிப்படுத்திக் காட்டுகிறார்.
"குழவித்திங்கள் இமையவர் ஏத்த
அழகொரு முடித்த அருமைத்து ஆயினும்
உரிதின் நின்னொடு உடன்றிப்பு உண்மையின்
.........................................
(2:39-61)
எனக் கண்ணகியைப் புகழத் தொடங்கும் கோவலன்,
"மாசறு பொன்னே வலம்புரிமுத்தே!
காசறு விரையே கரும்பே தேனே!
அரும் பெறல் பாவாய் ஆர் உயிர் மருந்தே
பெருங்குடி வணிகன் பெருமட மகளே
மலை இடைப்பிறவா மணிவே என்கோ
அலையிடைப்பிறவா அமிழ்தே என்கோ
யாழிடைப் பிறவா இசையே என்கோ? (2:73-79)
எனக் கண்ணகியைப் புகழ்வது புகழின் உச்சம். இப்பகுதி இளங்கோவடிகள் கோவலன் வழி தம்முடைய காப்பியத் தலைவி கண்ணகியை உயர்த்திக் காட்டி உயர்வடையும் இடம். இதைப் போலவே கவிஞர் தமிழ் ஒளி தன்னுடைய காவியத் தலைவி மாதவியை,
"யாழிடைப் பிறந்த இசை
நீரிடைப் பிறந்த மலர்
ஊரிடைப் பிறந்த மகளே - இவள்
ஊழிடைப் பிறந்த இசை
ஊற்றிடைப் பிறந்த எழிலே!
தத்திடப் பிறந்த நடை
தாக்கிடப் பிறந்த படை
தாவிடப் பிறந்த பெடை - சுக
வித்திடப் பிறந்த மழை
விட்புடப் பிறந்த முகில்
வெட்கிப் பிறந்த குழலே!
கட்டிடப் பிறந்த இடை
வெட்புடப் பிறந்த விழி
குத்திடப் பிறந்த முலையே - சுடர்
பொட்புடப் பிறந்த நுதல்
மொட்புடப் பிறந்த இதழ்
முத்திடப் பிறந்த நகையே!
தொற்றிடப் பிறந்த கிளி
துய்த்திடப் பிறந்த சுகம்
சொல்லிடப் பிறந்த கதையே! -இவள்
சுற்றிடப் படர்ந்த கொடி
தொட்டிடப் பிறந்த சிலை
கற்றிடப் பிறந்த கலையே!
என வியந்து பாராட்டுகிறார். இளங்கோவடிகளைக் காட்டிலும் கவிஞர் தமிழ் ஒளி மாதவியை உயர்த்திப் பேசும் பாங்கும், வெளிப்படுத்தும் கவிநடையும் சிறப்பாக அமைந்து மிளிர்வதைக் காணலாம். இளங்கோவும் அவர் வழி காவியம் படைத்த கவிஞர் தமிழ் ஒளியும் கருத்தினைப் புலப்படுத்தும் நிலையிலும் கவிதையாற்றலை வெளிப்படுத்தும் பாங்கிலும் எவ்வாறு தங்களை தனித்துவத்தோடு அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதற்கு மேற்சுட்டிய பகுதிகளை சரியான சான்றாகக் கொள்ளலாம்.
தொகுப்புரை
சிலம்பு வழி மாதவி காவியம் தந்துள்ள கவிஞர் தமிழ் ஒளியின் தமிழ்ப்பணி நினைக்கத்தக்கது. கண்ணகியை தெய்வ நிலைக்கு உயர்த்திய இளங்கோ கண்ணகி இடத்தை மாதவிக்குத் தருகிறார். ஆனால், கவிஞர் தமிழ் ஒளி மாதவியை மாட்சிமைப் படுத்திக் காட்டும் பாங்கு தனித்துவமானது. மாதவி காவியத்தில் இடம்பெறும் பல நிகழ்வுகள் சிலம்பில் இல்லை. தனக்கே உரிய படைப்பாக்க நெறியினை, முறையினை மாதவி காவியத்தில் படைத்துக் காட்டியிருப்பதைப் போல சிலப்பதிகாரப் பகுதியை அப்படியே ஏற்றுக் கொண்டு அதனைத் தன் நடையில் அமைத்துக் காட்டும் கவிஞர் தமிழ் ஒளியின் தனித்தன்மையையும் உய்த்துணர முடிகின்றது. இளங்கோ தாம் படைத்த மாதவி,
"ஆடலும் பாடலும் அழகும் என்றிக்
கூறிய மூன்றின் ஒன்றுகுறை படாமல்" (3:9, 10)
நிகழ்ந்ததாகக் கூறுவார். இக்கூற்று அப்படியே கவிஞர் தமிழ் ஒளியின் மாதவி காவியத்திற்குப் பொருந்தும். மாதவி காவியம் ஆடல், பாடல், அழகு ஆகிய மூன்றும் முழுமையாய்ப் பெற்றுத் திகழ்கிறது. ஆடல் என்பது காட்சிச் சிறப்பு, பாடல் என்பது இசைச் சிறப்பு, அழகு என்பது கவியழகின் சிறப்பு. மாதவி காவியம் இம்மூன்று கூறுகளையும் முழுமையாகப் பெற்றுள்ளது. புகார்க் காண்டம், பட்டினக்காண்டம், துறவுக்காண்டம் என்ற மூன்று காண்டங்களையும் இருபத்தி ஏழு காதைகளையும் கொண்டு மாதவியின் அரங்கேற்றம் முதல் துறவறம் வரையிலான வரலாற்றைச் சொல்லும் மாதவி காவியம் சிலம்பு வழி வந்த உயர்ந்த காவியம் என உறுதியாகக் கூறலாம்.
பயன்பட்ட நூல்கள்
1. சிலப்பதிகாரம் தெளிவுரை - ஞா.மாணிக்கவாசகர் - உமா பதிப்பகம், சென்னை
2. மாதவி காவியம் - கவிஞர் தமிழ் ஒளி - புகழ்ப் புத்தகாலயம், சென்னை.
- முனைவர் கா.வாசுதேவன், இணைப்பேராசிரியர், தமிழாய்வுத் துறைத்தலைவர், தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி.