நான்கு பொருளாதார மாதிரிகள் (Tale of 4 Economic Models)

இந்தியாவின் வளர்ச்சிப் பாதைக்கு எந்த பொருளாதார மாதிரியை பின்பற்ற வேண்டும் என்று இந்திய மத்திய அரசைத் தவிர்த்து இந்தியா மற்றும் உலகில் உள்ள அனைத்து பொருளாதார வல்லுனர்களும் ஆராய்ந்து வருகிறார்கள்.

ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பாதையும் அந்த நாட்டின் சமூக, பொருளாதார அமைப்பிற்கு ஏற்றவாறு அமைய வேண்டும். சுதந்திரம் அடைந்த பின் ஒவ்வொரு மாநிலமும் தங்களது வளர்ச்சிக்காக வெவ்வேறு மாதிரிகளைக் கையாண்டு வந்துள்ளது. 70 ஆண்டு கால வளர்ச்சிக்குப் பின், மாநிலங்களின் வளர்ச்சிப் பாதையை ஆராய்ந்து இந்தியாவின் வளர்ச்சிக்கான பாதையைத் தேர்ந்தெடுப்பது அறிவின் வழியாகும். இந்த ஆராய்ச்சியின் அடிப்படையாக தங்களது கருத்துகளை வைக்காமல், தரவுகளை வைத்து ஆராய வேண்டும்.

இந்தியாவில் அவ்வாறு ஆராயும் போது பொருளாதார வல்லுனர்கள் முன் நிற்பது 4 மாநில மாதிரிகள் ஆகும்.

திராவிட மாதிரி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு மாதிரி - சமூக நீதி, அனைவருக்கும் இலவசக் கல்வி, அடிப்படை வசதிகள், மக்கள் நலம், சமூக வேறுபாடுகளைக் களைதல் போன்றவற்றின் மூலம் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளுக்குத் தகுதியாக அனைத்து மக்களையும் கொணர்தல்.

கேரளா மாதிரி - கல்வி, சுகாதாரம், மக்கள் நல மேம்பாட்டிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தல்

குஜராத் மாதிரி - பெட்ரோலிய, வேதிப்பொருள் உற்பத்தி போன்ற குறிப்பிட்ட தொழிற்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தல்

உத்தரப் பிரதேச மாதிரி - சிறுபான்மை மக்களுக்கு மட்டும் கல்வியைக் கொடுத்து, வர்ணாசிரமப் பிரமீடில் குறைந்த அளவு மக்களை மட்டும் மேலே வைத்து இருத்தல். NEET தேர்வு, ஆரம்பப் பள்ளி பொதுத்தேர்வு போன்ற தேர்வுகள் மூலம் நகர்ப்புறத்தில் இருப்பவர் மற்றும் பணம் படைத்தவர்களுக்கு மட்டும் கல்வி. பிரமீடின் கீழ் பகுதியில் இருக்கும் பெருமளவு மக்களுக்கு கல்வி வாய்ப்பு கொடுக்காமல் கூலி வேலைக்குத் தயார் செய்தல் இந்த மாதிரியின் வெளிப்பாடே!

மத்திய அரசால் இந்திய அளவில் சிறந்த கல்விக் கூடங்கள் பற்றிய அறிக்கை இந்த வாரம் வெளியானது. இந்த உலகமயமாதல் சூழ்நிலையில் அமெரிக்காவிலேயே பல்கலைக்கழக கல்வி அறிவு பெற்ற மக்களுக்கும், பிறருக்கும் வளர்ச்சி விகிதத்தில் மிகுந்த வேறுபாடு உள்ளதைப் பார்க்கிறோம். எனவே இந்த கல்விக் கூட அளவீடு தற்போதைய நிலை மட்டுமல்லாமல், பிற்கால வளர்ச்சியையும் நிர்ணயிக்கப் போகிறது. இனி அரசின் தரவுகளைப் பார்ப்போம்.

வெறும் ஆறு சத மக்கள் தொகை கொண்ட தமிழகம், இந்திய அளவில் 34 சதவித சிறந்த கல்லூரிகளையும், 20 சதவித சிறந்த மருத்துவ, பொறியியல் கல்லூரிகளையும் கொண்டுள்ளது. அதாவது இந்தியாவில் உள்ள மூன்றில் ஒரு பங்கு சிறந்த கல்லூரிகளும், ஐந்தில் ஒரு பங்கு சிறந்த மருத்துவ மற்றும் பிற கல்லூரிகளும் தமிழகத்தில் உள்ளன.

தற்போது பெரும்பான்மையாக மத்திய அமைச்சர்கள் உள்ள உத்திரப் பிரதேச மாநிலம், ஒரே ஒரு சிறந்த கல்லூரியையும், 6 பல்கலைக்கழகங்களையும், 6 சதவித சிறந்த கல்விக் கூடங்களை மட்டுமே கொண்டுள்ளது.

இந்தியப் பிரதமர் பெயரில் மாதிரியாகக் காட்டப்படும் குஜராத்தில் ஒன்றரை சத கல்லூரிகளும், 6 சதவீத கல்விக் கூடங்களும் மட்டுமே சிறந்தவையாக உள்ளன.

மனித வள மேம்பாட்டுக் குறியீட்டில் சிறந்து காணப்படும் கேரளாவிலோ 22 சிறந்த கல்லூரிகள், 4.5% சிறந்த கல்விக் கூடங்கள் மட்டுமே உள்ளன.

அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகள் முன் வரை, பள்ளி படிப்பு மட்டும் படித்த நீல காலர் உழைக்கும் மக்கள் வாழ்நிலை நன்றாக இருந்தது. ஆனால் உலகமயமாதல், கணினி மயமாக்கம், ஆட்டோமேஷன் போன்றவை அவர்களது வேலையைப் பறித்து, அமெரிக்காவிலேயே அதிகம் கல்லூரி படித்த, வேலை வாய்ப்பு உள்ள மாநிலம், கல்லூரி படிக்காத வேலை வாய்ப்புகளை இழந்து, சமூக பிரச்சினை காணும் மாநிலம் என்ற வேறுபாடு உருவாகியுள்ளது. அந்த மாற்றம் இந்தியாவிலும் தற்போது பரவ ஆரம்பித்துள்ளது.

இந்தத் தரவுகள் மிகச் சிறந்த கல்விக்கூடங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. ஒட்டு மொத்தக் கல்விக் கூடங்களையோ, அரசுக் கல்விக் கூடங்களையோ மட்டும் கணக்கு பார்த்தால் தமிழகத்தின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்த மாற்றம் கல்விக் கூடங்களில் மட்டுமல்ல, வருங்கால சமுதாய வளர்ச்சியை விவரிக்கும் குறியீடுகளில் Global Enrolement Ratio மிக முக்கியமானது. இது எத்தனை சதவீத மாணவர்கள் பள்ளிக் கல்வியை முடித்து விட்டு கல்லூரி படிக்கச் செல்கிறார்கள் என்று குறிக்கிறது. இந்தியாவிலேயே 49% பெற்று முதலிடத்தில் இருப்பது தமிழகம். உத்தரப் பிரதேசம், குஜராத் போன்றவை இவற்றில் பாதி அளவை மட்டுமே கொண்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

படிப்பதில் மட்டுமல்ல, இந்தியாவின் மொத்த உற்பத்தி பொருள் உருவாக்கத்திலும் தமிழ் நாடு , குஜராத்தை விட முன்னணியில் உள்ளது. 16% மக்கள் தொகை கொண்ட உத்தரப் பிரதேசம் 8 சத உற்பத்தியைத் தான் கொடுக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

தமிழ் நாடு கல்வி, உற்பத்தி, மக்கள் நலம் என அனைத்திலும் முன்னணியில் இருக்கிறது. கேரளா மனித வள மேம்பாடுக் குறியீட்டில் மட்டும் முன்னணியில் இருந்தாலும் வளர்ச்சி, உற்பத்தி, கல்வி போன்ற குறியீடுகளில் தமிழகத்தை விடப் பின் தங்கியே உள்ளது . (கேரளாவின் பொருளாதாரம் வளைகுடாப் பகுதி தொழிலாளர்களை மிக அதிக அளவு சார்ந்துள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்).

எந்த மாதிரியைப் பின்பற்றினால் 21ம் நூற்றாண்டுக்கும், எந்த மாதிரியைப் பின்பற்றினால் 10ம் நூற்றாண்டுக்கும் செல்லலாம் என்பது கீழே உள்ள தரவுகளைப் பார்த்தாலே தெரியும்.

Education Institute

DevelopmentIndicator

Data Source:

https://www.nirfindia.org/2020/Ranking2020.html

https://factly.in/gross-enrolment-ratio-ger-of-higher-education-improves-but-challenges-remain%EF%BB%BF/

- சதுக்கபூதம்