salom 4500‘தாழ்த்தப்பட்ட மக்கள், பெற வேண்டிய மனித உரிமைகளையும், அடைய வேண்டிய சாதி சமத்துவத்தையும் அடைந்தே தீருவோம்’ என்று, பல பண்பாட்டுப் போராளிகள் நீண்ட காலத்திற்கு முன்பே, தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகக் கேரளத்தில் தீரமுடன் போராடியிருக்கிறார்கள்.  மேற்கண்ட பண்பாட்டுப் போராளிகளில் ஒருவர் தான்.  கவிஞர் பண்டிட் கருப்பன் அவர்கள்.  இவர், கேரளத்தில், எர்ணாகுளம் மாவட்டத்தில், சேரா நல்லூர் என்ற கிராமத்தில், கண்டத்திப்பரம்பில் குடும்பத்தில் 1885-ஆம் ஆண்டு, மே மாதம் 25- ஆம் தேதி, முக்குவர் குலத்தைச் சேர்ந்த அய்யப்பன் - கொச்சுப் - பெண் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். 

ஆரம்பத்தில் ஆலப்புழையிலுள்ள குருகுல கல்வி நிலையத்தில் சேர்ந்து, பண்டிட் கருப்பன் தொடக்கக் கல்வியைப் பயின்றார்.  பின்னர் படிப் படியாகப் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டார், அவர்.  இப்படித் தொடர்ந்து கற்று, அவர் அன்று கேரளத்திலுள்ள பல பிரபல பண்டிதர்களுக்கு நிகராக, மிகச்சிறந்த ஆற்றல் மிக்க கவிஞராக வளர்ந்து விட்டார்.  அவருடைய அபாரத் திறமையைப் பற்றி கேள்விப்பட்ட கொச்சி மகாராஜா, பண்டிட் கருப்பனுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.  மகா ராஜாவின் உதவியுடன் கொச்சியிலுள்ள திருப்பூனித் துறை என்ற இடத்திற்குச் சென்று, இலக்கணம், இலக்கிய விதிமுறைகள், காவியங்களின் இலக்கணம் போன்றவைகளை பண்டிட் கருப்பன் கற்றுக் கொண்டார்.

இந்தத் தகுதியின் அடிப்படையில் கொச்சி யிலுள்ள பெண்கள் உயர்நிலைப்பள்ளி, புனித தெரசா கல்லூரி, திருச்சூரிலுள்ள விக்டோரியா பள்ளிக்கூடம், எர்ணாகுளம் மகாராஜா கல்லூரி, தேவரா புனித இருதயக் கல்லூரி ஆகிய இடங் களில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

கொச்சி சமஸ்தானம் எங்கும் சாதி வெறி தாண்டவமாடிக் கொண்டிருந்த அக்காலத்தில் ‘தாழ்த்தப்பட்டக் குலத்தைச் சேர்ந்த ஒருவன், எங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுக்க வேண்டாம்!’ - என்ற எதிர்ப்பும் மேட்டிமைச் சாதியினரிடமிருந்து கிளம்பாமல் இல்லை என்ற போதிலும் கூட, பண்டிட் கருப்பனின் நல்ல குணத்தையும், அவருடைய ஆற்றலையும் கண்ட கொச்சி மன்னர், அதில் தலையிட்டு, அந்தத் தீண்டாமைப் பிரச்சினைக்கு முடிவு கட்டினார்.

மேட்டிமைச் சாதியினரிடம் காணப்பட்ட தீண்டாமை உணர்வு, சாதி கர்வம், சாதிய ரீதியாக அடித்தட்டு மக்கள் அனுபவித்துக் கொண் டிருந்த துன்பங்கள்.  மன்னராட்சியின் போது மக்கள் காடுகளில் பட்ட கஷ்டங்கள் - போன்றவைகளை யெல்லாம் பண்டிட் கருப்பன் தன் கலை - இலக்கியப் படைப்புகள் வழியே பிரதிபலித்துக் காட்டினார்.

அவரது மிகச்சிறந்த இலக்கியப் படைப்பு களில் ஒன்று, ‘ஜாதிக்கும்மி’ கவிதை நூல்.  இது, நாட்டுப்புற மக்கள் பாடும் கும்மிப்பாட்டு வடிவத்தில் இயற்றப்பட்ட நீண்ட கவிதை நூல்.  அக்காலக் கட்டத்தில் வழக்கத்திலிருந்த தீண்டாமை உணர்வு களை சின்னஞ்சிறு படிமங்களாக்கி, நம்முன் காட்சிப்படுத்துகின்றன.  நம் நாட்டு சாதியமைப்பை, அக்காலத்தில் இந்நூலைப் போல் விமர்சிக்கும் வேறு நூல்கள் இருந்திருக்குமா என்பது சந்தேகமே!

பண்டிட் கருப்பன் தன்னுடைய ‘ஜாதிக் கும்மி’யில் மேட்டிமைச் சாதியினர், தங்களுடைய மிகச்சிறந்த ஆன்மீகத் தத்துவ ஆசானாக வரித்துக் கொண்ட ஸ்ரீசங்கராச்சாரியாரிடம் காணப்படும் தீண்டாமை உணர்வை, கேரளத்திலுள்ள பறையர் சாதியைச் சார்ந்த கணவன் - மனைவி வகைமாதிரி கதாபாத்திரங்கள் வாயிலாகக் கேலியான முறையில் விமர்சனத்திற்குள்ளாக்குகிறார்.

கவிதை கீழ்க்கண்டவாறு துவங்குகிறது.

‘ஸ்ரீசங்கர சுவாமி / முந்தி ஒரு நாள் / கங்கை நதியில் நீராடிவிட்டு / காசிநாதனைக் காணச் சென்ற போது / நடந்த உரையாடல், இது, / கேட்டுக்கோ யோகப் பெண்ணே... அது, நமக்கிடையேயுள்ள / மூடத்தனத்தை அகற்றும் ஞானப்பெண்ணே... / திங்கள் தலையன் பறையன் / சங்கரி என்ற பறைச்சியோடு / சங்கரர் வரும் பாதையில் / நின்று கொண்டிருந்தான் யோகப் பெண்ணே...’ / அப்போது நடந்ததை / கேட்டுக்கோ ஞானப்பெண்ணே... / ‘தாலிகட்டிய பெண்ணுடன் / ஜோடியாக நின்று கொண்டிருக்கும் பறையனே, / என் சரீரத்தைத் தொடாதவாறு  / பாதையிலிருந்து விலகி நில்லடா’ என, / சங்கரர், அவனிடம் எகிறினார் / யோகப் பெண்ணே... இது, / நம் நாட்டு வழக்கத்துக்கு தகுமோ,  ஞானப் பெண்ணே...’

இவ்வாறு, அக்காலத்து மேட்டிமைச்சாதி மக்களிடம் காணப்படும் தீண்டாமை உணர்வுகள் ஜாதிக்கும்மியில் காட்சிப் படுத்தப்படுகின்றன.

ஸ்ரீசங்கராச்சாரியர், கங்கை நதியில் நீராடி விட்டு, காசிநாதனைக் கும்பிடுவதற்காக வேண்டி செல்கிறார்.  அப்போது, பறையர் குலத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் எதிரே வருகிறார்கள்.

சங்கரர் அவர்களைக் கண்டதும், ‘சாதியில் உயர்ந்த, பிராமணனாகிய நான் வருவது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? என் உடம்பைத் தொட்டு விடாதீர்கள்; அப்பாலே, விலகி நில்லுங்கள்’ - என்று கோபப்படுகிறார்.

அதைக் கேட்ட ஆண், உடனே தன் மனைவி யிடம், ‘அவர் சொல்றதைக் கேட்டியா பெண்ணே? நீ, இதன் உள்ளடக்கத்தைப்பற்றி தெரிந்து கொண்டால், உன்னிடம், இருக்கும் மூடத்தனம் அகன்று போய் விடும்’ - என்கிறான்.

கவிதை மேலும் தொடர்கிறது.

‘அதைக் கேட்ட சங்கரர் உடனே, / ‘நீ, சாதியில் / இழிந்த பிறவியான பறையனல்லவா? / நானோ, / சாதியில் உயர்ந்தவனான பிராமணன்! / என்னைக் கண்டதும் / நீ, உடனே ஓட வேண்டாமா? / விலகிச் செல்ல வேண்டாமா? / இந்த சாதாரண மரியாதையைக் கூட / நீ, தெரிந்து நடந்துகொள்ள வேண்டாமா? / அப்படி நடந்தால், / அது, உனக்கு நல்லது’

என்று, அந்தத் தாழ்த்தப்பட்டவரைப் பார்த்து சங்கரர், எச்சரிக்கை விடுகிறார்.

தாழ்த்தப்பட்டவரும் சங்கரரை அதோடு விட்டுவிடவில்லை.

‘சாமீ... / நாமெல்லாம் மாடும், மரமும் இல்லை; / மனிதப் பிறவிகள்! / இப்படி மனிதர்களை அணுகுபவனே / நல்ல சாதிக்காரன்...’

அதற்கு சங்கரர் பதில் அளிக்கிறார்:

‘நான், மனித சாதியாய் இருந்தாலும் கூட /  பிராமணன் அல்லவா, சண்டாளக் குலத்தவனே! / உன்னிஷ்டப்படி, / நீ, இந்தப் பாதையில் நடக்கலாமா? / என்னை எதிர்த்து நீ, / இப்படிப் பேசலாமா? / இது, நல்ல வழக்கமா? / சமூகத்தில், / என்னதான் கட்டுப்பாடுகள் இருந்தாலும் சரி, / நான், பிறவியில் பிராமணனல்லவா? / ஒரு தெம்மாடியைப் (பொறுக்கி) போல் / வாடா, போடா என்று நீ, பேசாதே!’ / தாழ்த்தப்பட்டவர் கேட்கிறார்: / ‘நாம் இரண்டு பேரும் / சமூகத்தில் சேவை செய்பவர்கள்தானே? / பிறகு ஏன், நீங்கள் / இப்படி வேறுபடுத்திப் பேசுகிறீர்கள்?’

என இந்த உரையாடல் நீண்டு நீண்டு நம் நாடு முழுவதும் உள்ள தீண்டாமைக் கொடுமைகளுடன் ஒப்பிட்டுப் பேசப்படுகிறது.

கடைசியாக ‘மலையாள நாட்டிலுள்ள இந்துக்கள் மட்டும் ஏன், இவ்வாறு சாதி வேறு பாடு பார்த்து நடந்து கொள்கிறார்கள்?’ என்று, ஒரு தாழ்த்தப்பட்ட மனிதரின் வாயிலாக சாதி யமைப்பைக் கட்டிக்காக்கும் நம் இந்திய சமூகத்தை நோக்கி, பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே சொல்கிறார்.

அதோடு, இந்தியக் கிராமங்களில் இன்னும் இறுகிப்போய்க் கிடக்கும் சாதியமைப்பையும், நகரங்களில் ஓரளவு நெகிழ்ந்து காணப்படும் தீண்டாமை நடவடிக்கைகளையும் எடுத்துக் காட்டத் தவறவில்லை.

புலையர் சாதியைச் சேர்ந்த ஒருவரும், ஒரு பிராமணனும், தண்ணீரில், ஒரே ஓடத்தில் ஒன்றாக அமர்ந்து, அக்கரையை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.  திடீரென்று பயங்கரக் காற்றும் மழையும் வரவே, ஓடம் தடுமாறி, தண்ணீரில் முதலில் பிராமணன் விழுகிறார்.  தான், வயிறு முட்ட தண்ணீரைக் குடித்துச் சாவது, உறுதி எனத் தெரியவே, மூழ்கிக் கொண்டிருக்கும் பிராமணர், புலையர் சாதியைச் சேர்ந்தவன் தண்ணீருக்குள் விழுவதற்கு முன்னால், தன் வலது கையைத் தண்ணீருக்குள் விட்டுக் கலக்குகிறார்.  காரணம், ‘நான், குடித்துச் சாகும் நல்லத் தண்ணீரைக் குடித்து நீ, சாக வேண்டாம்! நீ, தாழ்ந்த சாதி யினன்.  நீ, கலங்கிய சேற்று நீரைக்குடித்துச் செத்தால் போதும்!’ என்றெண்ணி தண்ணீரைக் கலக்கி, சேற்று நீராக்கிவிட்டு இறந்ததாக ஒரு படிமம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

அப்பட்டமாகச் சாதியின் பெயரை தலைப்பாகக் கொண்டும் நூறாண்டுகளுக்கு முன்னரே கவிதை இயற்றியுள்ளார்.  உதாரணத்திற்கு, அவர் ‘புலையன்’ என்ற தலைப்பில் எழுதிய கவிதையை எடுத்துக் கொள்ளலாம்!

இக்கவிதை தாழ்த்தப்பட்ட மக்கள், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப் படுவதையும், இரவென்றும் பகலென்றும் பாராமல் அவர்கள், தங்கள் எஜமான்களின் காடுகளுக்குள் உழைத்துக் கஷ்டப்படுவதையும் எடுத்துக்காட்டும் கவிதை, இது; ‘அவர்களும் மனிதர்களே! சமூகத்தில் அவர்களும் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டும்’ - என்ற கருத்தை மேலோர் மத்தியில் உரக்கப் பேசிய கவிதையும் கூட!

அதாவது, அவர்களை மிருகங்களை விட சமூகத்தில் கேவலமாக நடத்துவது என்ற கருத்து மேட்டிமைச்சாதியினரிடமும், அவர்களுக்குச் சார்பாகப் பேசும் அறிவுஜீவிகளிடமும் மேலோங்கி யிருந்த காலத்தில் இவற்றுக்கு எதிராக பண்டிட் கருப்பனின் கலை இலக்கியப் படைப்புகள் ஓங்கி ஒலித்தன.

உதாரணத்திற்கு அவருடைய ‘பாலாகலேசம்’- என்ற நாடகத்தை எடுத்துக்கொள்ளலாம்!

‘பாலா’- என்றால், கொச்சி சமஸ்தானம்.  ‘கலேசம்’- என்றால், கொச்சி மன்னர்.  கொச்சியை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி, அப்பெண், மன்னரிடம் நாட்டு நிலைமைகளைப்பற்றி, கேள்விகள் கேட்பதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அதாவது, மன்னர் ஆண்டு கொண்டிருக்கும் கொச்சி சமஸ்தானம் கால வளர்ச்சிக்கு ஏற்ப மாற வேண்டும்; வழக்கத்திலிருக்கும் தீண்டாமைக் கொடுமையை ஒழிப்பதற்குரிய சட்டம் இயற்ற வேண்டும்’ என்பதாகும்.

அவரது நாடகம் கீழ்க் கண்டவாறு அமைக்கப்பட்டிருந்தது:

அதாவது, புலையர் குலத்தைச் சார்ந்த ஒருவர், ஒரு பிராமணரைத் தொட்டு விட்டார் என்ற காரணத்திற்காக, அந்த ஊரைச் சேர்ந்த மேட்டிமைச் சாதியினர் (தம்புரான்கள்), அந்த புலையர் சாதியைச் சார்ந்தவரைப் போட்டு நையப் புடைக்கிறார்கள்.  அது, நாட்டில் பெரிய சர்ச்சை யாகி நியாயாதிபன்மார்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்படுகிறது.  அப்படி அடித்த அந்த பிராமணர்களையும், தம்புரான்களையும் நாடு கடத்த வேண்டும் என்றும், சிலரைத் தூக்கிலிட வேண்டும் என்றும், நியாயாதிபன்மார் தீர்ப்பு அளிக்கிறார்கள்.

பண்டிட் கருப்பனின் இந்த நாடகம், சமூகத்தில், குறிப்பாக மேட்டிமைச்சாதியினரின் அறிவு ஜீவிகளுக்கு இடையே மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பிவிடுகிறது.  அவர்களுடைய அபிப்பிராயப் படி, கொச்சி மன்னர் ஆளும் நாட்டில், இம்மாதிரி அநியாயங்கள் நடைபெறுவதாக எடுத்துக்காட்டு வதை அனுமதிக்கக்கூடாது! தீண்டாமை என்பது நம் நாட்டில் பரம்பரை பரம்பரையாக இருந்து வரும் ஆசாரம் தான்!

இது போக, என்ன குற்றம் செய்தாலும் சரி தான், (அது, நாடகமாக இருந்தாலும் கூட) மன்னர் ஆட்சி செய்யும் ஒரு நாட்டில், ஒரு பிராமணருக்குத் தூக்குத் தண்டனை வழங்குவதாகக் காட்சி அமைக்கக் கூடாது! இது, அன்றைய நாட்டுச் சட்டம் என்றும், அரசு ஊழியராக இருந்து கொண்டே (பண்டிட் கருப்பன் அன்றைய அரசு ஊழியர்) இவ்வாறு நாடகம் எழுதி, நடிக்க வைத்தது கண்டிக்கத்தக்க செயலாகும் என்றும், பல எதிர்க்குரல்கள் எழுந்தன.

இவர் எழுதிய ஒரு நாடகம் ‘ஐவர் நாடகம்’ - என்பதாகும்.  இது ஆசாரி, மூசாரி, கொல்லர், தச்சாசாரி, குறவர் - ஆகியோரை வகை மாதிரி கதாபாத்திரங்களாகக் கொண்டு இயற்றப்பட்ட நாடகம் இது.  இவர்களைக் கேரளத்தில் ‘ஐங் கொடி கம்மாளர்’ என்று குறிப்பிடுவர்.  இவர்கள் ஐவரும் ஆடிவருவதினால்தான் இந்த நாடகம்  ‘ஐவர் நாடகம்’ என்று அழைக்கப்பட்டது.  பண்டிட் கருப்பன் இயற்றிய நாடகங்களுக்குத் தாழ்த்தப்பட்ட மக்களையே நாடக நடிகர்களாகத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் பயிற்சியும் கொடுத்து வந்தார்.

அவருடைய ஒரு கவிதை,

‘பசுக்களை அடித்தாலோ / அவைகளின் சொந்தக்காரன் தடுத்திடுவான்; / புலையனை அடித்தாலோ, / கேட்பார் எவரும் இல்லை. / அவன், சாலையில் நடந்தால் / ஓட ஓடத் துரத்தியடிப்பார்கள், - பயந்து / பக்கத்திலுள்ள சிறு நீரோடையில் இறங்கினாலோ, / அவன் மீது கல்லெறிவார்கள்.’

அக்காலத்தில் வழக்கிலிருந்த தீண்டாமை உணர்வை ஒரு நாடகத்தைப் பக்கத்தில் உட்கார்ந்து பார்ப்பது போன்று பண்டிட் கருப்பனின் கவிதை வரிகள் தீண்டாமைக் கொடுமையை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன.

கவிதைகள் இயற்றுவதோடு அவர் நின்றுவிடவில்லை; அவற்றுக்கு எதிராகத் தாழ்த்தப் பட்ட மக்களை அவர் அணிதிரட்டவும் செய்தார்.  எங்கெங்கெல்லாம் மனித குலத்திற்குள்ளே ஏற்றத் தாழ்வுகள் காணப்பட்டதோ, அங்கெல்லாம் பண்டிட் கருப்பனின் பார்வையும், பேனா முனையும் திரும்பியது.

அவர் வெறும் கவிஞர் மட்டுமல்ல! மிகச் சிறந்த மேடைப் பேச்சாளரும் ஆவார்.  மலையாள இலக்கியவாதியான திரு.டி.கே. கிருஷ்ணமேனன் அவர்களின் தந்தையின் நினைவு நாளை ஒட்டி, நடத்திய கூட்டத்தில் பண்டிட் கருப்பன் நிகழ்த்திய உரையின் நூல் வடிவமாக ‘சமுதாயக் கானக் கலைகள்’ (நாட்டுப்புறக் கலைகள்) வெளிவந்திருக் கிறது.  கேரளத்திலுள்ள நாட்டுப்புறக் கலைகளை நாலா திசைகளுக்கும் சென்று சேகரித்தவர்.  அத் துடன் நின்றுவிடவில்லை; அவற்றை அவர், தன் வருங்காலத் தலைமுறைக்கும் கற்றுக் கொடுத்தார்.  பல இடங்களிலிருந்து வேட்டுவர், புலையர், செறுமர், புள்ளுவர், பறையர், வேலன் (கேரளத்தில் தென்னை மரமேறி பிழைப்பு நடத்தும் ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவினர்) போன்ற தாழ்த்தப்பட்ட மக்களை தன் வீட்டுக்குள் அழைத்து வைத்து நாட்டுப்புறப் பாடல் களைப் பாடவும், நாடகம் நடிக்கவும் பயிற்சி யளித்தார்.  சேற்றுக்குள்ளும், வயக்காட்டிற்குள்ளும் கவனிப்பாரற்றுக் கிடந்த நாட்டுப்புறப் பாடல்கள் இவரால் பல மேடைகளில் அரங்கேற்றப்பட்டன.  தன் நாடகங்களை பாவங்களை வைத்தே நடிக்கச் செய்தவர்.

அவர் ஓர் இடத்தில் இவ்வாறு கூறுகிறார்: ‘கேரளத்திலுள்ள கிராமங்களில் நம்பூதிரி குலத்தவர் பின்பற்றி வரும் தீண்டாமை நடவடிக்கைகளை கைவிட வேண்டும்; இவ்வாறு செய்தால் நமக்குப் பிறகு வரும் தலைமுறையினர் அந்த ஆசாரத்தைத் தூக்கியெறிந்து விடுவார்கள்’- என்று, ஒரு தீர்க்க தரிசியைப் போல் தன் கருத்தை முன் வைக்கிறார்.

அவர் தான் பிறந்து வளர்ந்த முக்குவர் குலத்து மக்கள் அனுபவித்துக் கொண்டிருந்த தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக மட்டும் குரல் கொடுக்கவில்லை.  தாழ்த்தப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் குரல் கொடுத்தவர் அவர்.  அந்தக் கொடுமையை அகற்ற தெருவில் இறங்கி, அவர் களோடு தோளோடு தோள் சேர்ந்து நின்று போராடவும் செய்தார்.

உதாரணத்திற்கு, அவரது ‘ஜாதிக்கும்மி’ நூல் (நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட நூல்) வெளிவந்ததும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடையே அது ரொம்பவும் பிரபலமாயிற்று. 

அதைப்பற்றி ஒரிடத்தில்,

‘கொச்சி முழுவதும் சிந்திச் சிதறிக்கிடக்கும் புலையர்குல மக்களை அணிதிரட்டி, ஒரு சங்கம் அமைத்தால் நன்றாக இருக்குமே...’ என்று, நான் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், ஒரு நாள், நடுத்தர வயதுள்ள ஒரு மனிதரோடு நான்கு, ஐந்து இளைஞர்கள் சேர்ந்து கொண்டு என் வீட்டு வாசலில் வந்து நின்றவாறு ‘அய்யா, நாங்களெல்லாம், உங்களுடைய சீடர்களாக வந்துள்ளோம்.’ என்றார்கள்.

நான், அவர்களிடம் அவற்றுக்கான காரணத்தைப் பற்றிக் கேட்டேன்.

அதற்கு, அவர்கள், ‘நாங்கள் உங்களுடைய ‘ஜாதிக்கும்மி’ புத்தகத்தை வாசித்தோம்.  அது, எங்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது.  நாங்கள் ஒன்றுபட வேண்டியதின் அவசியத்தை அது எங்களுக்கு உணர்த்திற்று.  நாங்கள் மன்னரிடம் போய் நிலத்தில் சங்க அமைப்புக் கூட்டம் ஒன்று நடத்துவதற்கு இடம் தர அனுமதி கேட்டதற்கு, பொதுப்பாதையில் நடப்பதற்கு உரிமை இல்லாத புலையர்களாகிய உங்களுக்கு, நிலத்தில் பொதுக் கூட்டம் நடத்துவதற்கு, அனுமதி கிடையாது’ என்று சொல்லிவிட்டார்கள், என்றார்கள்.

நான் அவர்களுக்கு ஒரு ஆலோசனை கூறினேன்.

அதாவது, கொச்சியிலுள்ள வேம்ப நாட்டுக் காயலில் (ஏரியில்) பல ஓடங்களை இணைத்துக் கட்டி, அதில் நீங்கள் உட்காருவதற்கு வசதியாக இடம் அமைத்து, அமைப்புக்கூட்டம் நடத்துங்கள் என்றேன்.  அவர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய, நான்தான், அந்தக் கூட்டத்தின், தலை வராக இருந்து நடத்திக் கொடுத்தேன்’ என்று, பண்டிட் கருப்பன் குறிப்பிடுகிறார்.

கொச்சியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள், தங்களுக்கும் இந்த மண்ணில் வாழ்வதற்கு உரிமை யுண்டு என்று, உலகிற்கு எடுத்துக்காட்டிய ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்ட மாகும், இந்தக் ‘காயல் சமரம்’ (ஏரிப்போராட்டம்) இதற்கு வழிவகுத்துக் கொடுத்தது, பண்டிட் கருப்பனின் ‘ஜாதிக்கும்மி’ - நூலே!

சமூகத்தில், எவரும் பேசத் துணியாத கால கட்டத்திலேயே பண்டிட் கருப்பனின் கலை இலக்கியப் படைப்புகள், தீண்டாமைக்கு எதிராக சாதி சமத்துவக் கருத்துக்களைத் துணிச்சலோடு பேசின, என்று சொல்லலாம்!

Pin It