ஒடுக்கப்பட்ட மக்களைத் தன் உயிரென நேசிக்கும் ஒரு கவிஞனின் பொருத்தப்பாடு என்பது சில வருடங்களைக் கடந்து மட்டுமல்ல, நூறாண்டு கழித்தும் பேசப்படும் என்பதற்குத் தமிழ்ஒளி ( 21/09/1924 ) மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறார். இந்திய விடுதலைக்கு முன்பு 23 ஆண்டுகளும், விடுதலைக்குப் பின்பு 18 ( 29/03/1965 ) ஆண்டுகளும் என 41 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த கவிஞர் தமிழ்ஒளியின் பதிவுகள், கடந்த கால வரலாற்றின் ஆவணங்களாகத் திகழ்கின்றன.

மிக எளிய குடும்பத்தில் பிறந்து, முழு நேரப் படைப்பாளியாகவும், சமூகச் செயல்பாட்டாளராகவும் வாழ்வது என்பது வலி மிகுந்த சித்திரவதையாகத்தான் இருக்க முடியும். திருமணமும் செய்து கொள்ளாமல் எவ்விதப் பந்தமும் இல்லாமல் இருந்தாலும், மக்களை நேசிப்பதை மட்டும் விட்டுவிடாத வைராக்கிய நெஞ்சம் அவருடையது. தன்னைப் "போராடி வாழும் புதுயுகக் கவிஞன்" என்றே பிரகடனப் படுத்திக் கொண்டார் அவர்.

ஒன்பது காப்பியங்கள், பல நூறு தனிக்கவிதைகள், இரண்டு குறு நாவல்கள், முப்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், இருபது ஓரங்க நாடகங்கள், மூன்று மேடை நாடகங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட குட்டிக் கதைகள், மூன்று இலக்கிய ஆய்வு நூல்கள், விமர்சனக் கட்டுரைகள் என எழுதிக் குவித்த தமிழ் ஒளி, விஜயரங்கம் என்ற இயற்பெயரிலும் விஜயன், சி.வி.ர., தமிழ்ஒளி, பாணன், ஜெயங்கொண்டன் போன்ற பல புனைப்பெயர்களிலும் எழுதியுள்ளார்.

ஒன்றுபட்ட கம்யூனிஸ்டுக் கட்சியில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றினார். பிறகு இறுதி ஆண்டுகளில் தனித்தும் செயல்பட்டார்.

கரந்தைத் தமிழ்ப் புலவர் கல்லூரியில் புலவர் வகுப்பில் ஓராண்டு மட்டும் கல்வி பயின்ற தமிழ்ஒளி, பாவேந்தர் பாரதிதாசனின் கவிப்பரம்பரையைச் சார்ந்தவராக அறியப் படுகிறார். தமிழ் ஒளி குறித்துத் தமது "நினைவலைகள்" எனும் தன் வரலாற்றுக் குறிப்பில் பாவலர் ச. பாலசுந்தரம் அவர்கள் எழுதியுள்ள குறிப்புகளில் கவிஞர் இதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்." உங்களுக்கு இவ்வளவு தமிழ் உணர்வும், கவிதைத் திறனும் எப்படி வந்தன?' என நான் கேட்டேன்.

அவர் உடனே 'பாரதிதாசனால்தான். நான் அவரிடம் அவர் எழுதும் கவிதை கட்டுரைகளைப் படியெடுக்கும் உதவியாளராக இருந்தேன். அவற்றைப் படிக்கும் போது அதைப்போல கற்பனை செய்து எழுதிப் பார்ப்பேன். அதே மெட்டில், அதே பாவில் எழுதிப் பார்ப்பேன். அவர் என்பால் ஒரு மகனைப் போல அன்பு செலுத்தினார்' எனக் குறிப்பிடுகிறார். (1) பாவேந்தர் பாரதிதாசன் அவர்களது கவிதைத் தாக்கம் தமிழ்ஒளியின் மீது இறுதி வரை தொடர்ந்தது என்பதை அவரது கவிதைகளைப் படிக்கும் எவரும் எளிதில் உணர்ந்து கொள்ள முடியும்.

" உயிரில் உணர்வில் கலந்த கவிஞன் என்/ உயிரில் உயிர் கொண்டு உலவுகின்றான் -- வெறும் / துயரில் நான் மூழ்கிக் கிடக்கவில்லை, அவன்/ தொண்டு சிறந்திடத் தொண்டு செய்வேன்" எனப் பாவேந்தர் பாரதிதாசன் மறைந்த பொழுது உறுதியேற்றவர்.

தமிழ் ஒளி இசைப்பாட்டும், எண்சீர் விருத்தமும் வெகு இயல்பாக எழுதக் கூடியவராகப் போற்றப் படுகிறார். கவிதையின் மீதான அவரது ஆளுமை வியக்கத்தக்கது. கவிதைகள் மட்டுமல்ல, இலக்கிய வகையினத்தில் அவர் தொடாத கூறுகளே இல்லை எனக் கருதும் வண்ணம் தனது படைப்புலகை அவர் விரிவுபடுத்தி உள்ளார்.

ஆனால், இப்படிப்பட்ட அரிய கவிஞருக்கு உரிய அங்கீகாரம் அவர் வாழ்ந்த காலத்திலும், அதற்குப் பிறகும் வழங்கப் படாதது பெரும் சோகம். அவ்வகையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அவரைத் தனது இலக்கிய ஆசான்களில் ஒருவராகப் பிரகடனப் படுத்தியதும், அவரது நூற்றாண்டு விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடி வருவதும் அனைவரும் போற்றத்தக்கதோர் அரும் பணியாகும்.

பொதுவுடைமைக் காதல்

கவிஞர் தமிழ் ஒளி என்றாலே, பொதுவுடைமைக் கோட்பாட்டில் அவருக்கு இருந்த காதல்தான் முதலில் நம் நினைவுக்கு வரும். இது பற்றித் தமிழ்ஒளியே பாவலர் ச.பாலசுந்தரம் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்." நமது வாழ்வின் நோக்கம் நமது சமுதாயமும் மக்களும் முன்னேற்றம் அடையும் முறையில் இயன்ற தொண்டு செய்வதுதான். மக்கள் அறியாமை, மூடநம்பிக்கை, வறுமை, அடிமையில் மோகம் முதலியவற்றினின்றும் நீங்கி நல்லுணர்வும் வாழ்வும் பெற ஆவன புரிய வேண்டும் என்பதுதான். அதனைத் தன்னலமின்றிச் செய்ய வழிகாட்டும் இயக்கம் பொதுவுடமை இயக்கம்தான். நான் இப்பொழுது ஒரு கம்யூனிஸ்ட் தொண்டன் என்பதில் பெருமிதம் அடைகிறேன்" (2) எனும் அவரது கூற்று பொதுவுடைமை அறத்தின் மீதான அவரது ஆறாப் பற்றினை வெளிப்படுத்தும் சத்திய வாக்காகும்.

தொழிற்சங்கங்களோடும், தொழிலாளர்களின்போராட்டங்களோடும் இரண்டறக் கலந்து நின்றார். சென்னை துறைமுகத் தொழிலாளர் சங்கத்தோடு நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தார். பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த மாணவர் இயக்கத்தில் பங்கேற்றார். தவிரவும் தனது தொடக்க காலக் கவிதைகளிலிருந்து இறுதிக் காலக் கவிதைகள் வரை, பொதுவுடமைப் பாசம் என்பது நகமும் சதையுமாக அவரது படைப்புகளில் ஊடாடிப் பயணிக்கிறது.

மே நாள் குறித்துத் தமிழ் இலக்கியத்திலேயே முதன்முதலாகக் கவிதை எழுதியவர் தமிழ்ஒளி என்பது குறிப்பிடத் தக்கது. 144 வரிகளாக விரியும் இக் கவிதை, மே தினத்தின் வரலாறு, மேன்மை, போலிகளின் மீதான தாக்குதல், கவிஞரின் கனவு ஆகியனவற்றை உள்ளடக்கி "மேதினமே வருக" எனும் உணர்வுப் படைப்பாகப் பதிவாகி உள்ளது.

தொழிலாளி முதலாளி என இரு வர்க்கங்களுக்கிடையே நடுவில் ஊசலாட்டப் பாதை எதுவும் கிடையாது என்ற கருத்தை விளக்கி உலகக் கம்யூனிஸ்டு இயக்கத்தின் முக்கியத் தலைவராக விளங்கிய தோழர் ஓட்டோ குசினன் (Otto Kusinen) எழுதிய "நீ எந்த பக்கம்?" எனும் கேள்வி உலகம் முழுவதும் பரவியது. அதை எதிரொலிக்கும் வண்ணம் தமிழ்ஒளி ஓர் அருமையான கவிதையைப் படைத்தார்.

"ஏ, செந்தமிழா! என்னுடைச் சோதரா!

நீ, யார் பக்கம்? நிகழ்த்திட வேண்டும்!

கொள்ளையடித்திடும் கொடியவர் பக்கமா

துன்பமுற்றிடும் தொழிலாளர் பக்கமா?"

என 'நீ யார் பக்கம்?' எனும் கவிதையில் (1948) நேரடியாகக் கேட்பதை அறிகிறோம். (3) இதைப் போன்ற எண்ணற்ற கவிதைகளில் அவரது கம்யூனிசக் காதல் பொங்கி வழிவதை எளிதில் காணமுடியும். மேலும் "நவம்பர் புரட்சிக்கு நல்வாழ்த்துகள்!" எனும் கவிதையில்,

" அன்று தொட்டிருள்

 வீழ்ந்து விட்டதும்,

 அகில நங்கைதன்

துன்பம் கெட்டதும்,

தொன்றுதொட்டுறை

 நோய்கள் பட்டதும்

தோன்று செங்கொடி

எங்கும் நட்டதும்,

இன்று திங்களைச்

சென்று தொட்டதும்

இசை பெறும் இலெனின்

கண்எனச் சுடர்

நின்றெறிந் திடும்

. நீள் விளக்கமாம்

நிகர்அரும் பொது

 வுடமை ஆற்றலால்!  ( வேறு )

மாமுனிவன் மார்க்சுடனே

ஏங்கெல்ஸ் என்ற

மாண்புமிகு அறிஞனுமே

கனவு கண்டார்! " எனவும், ' வல்லமை கொண்டுதர வந்தது பொதுவுடைமை"

-- என்றும் தமிழ் ஒளி கொண்டாடுகிறார். (4)

மேலும் இப்பொதுவுடைமைச் சமுதாயத்தில் உழவர்களும் தொழிலாளர்களும் "விழியெதிரே நடமாடுந் தெய்வங்கள் ஆவார்" எனச் சுட்டிக் காட்டுகிறார். (5)

1946 முதல் 1954 வரை ஒன்றுபட்ட கம்யூனிஸ்டுக் கட்சியில் அவர் செயல்பட்டதாகப் பேராசிரியர் வீ.அரசு அவர்கள் சுட்டிக்காட்டுகிறார். அதற்குப் பிறகான பத்து ஆண்டுகளிலும் பொதுவுடைமைக் கோட்பாட்டிலிருந்து அவர் சற்றும் வழி பிறழவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

கவிஞரது பொதுவுடைமை நேயம், தமிழகப் புவிப்பரப்போடோ, இந்தியத் துணைக்கண்ட எல்லைக்குள்ளோ குறுகிவிடவில்லை. அது உலகளாவி விரிகிறது. அதுதான் தமிழ் ஒளியின் தனித்தன்மை. அதன் வெளிப்பாடுதான் "திசை அதிர நடக்கிறது சீனத்துச் செஞ் சேனை" / "சியாங்குக்குப் பிரகடனம்" / "நவம்பர் புரட்சிக்கு நல்வாழ்த்து" என்பதான கவிதைகளில் அவரது பேரன்பு விரிகிறது. மோசலிச நாடுகளுக்கு மட்டுமல்ல, "பெரு" நாட்டில் நேர்ந்த அமெரிக்க முதலாளித்துவக் கொடுமைகளைக் கண்டித்தும் "விடுதலை உறவு" எனும் கவிதையைப் படைத்தார். (6) உலகம் முழுவதும் நனைக்கும் ஈர நதியாக தமிழ் ஒளியின் பேரன்பு படர்ந்து பாய்கிறது.

"யுகங்கள் பிரிவினி இல்லை காண் - தர்மம் ஒன்று புதுயுகம் ஆகுமே நகமும் சதையும் போல் மானிடர்- எந்த 'நாட்டினர்,தீவினர் ஆயினும் சகத்தினில் ஒற்றைக் குடும்பமாய் - உயர் சாந்தம் நிலவிட வாழ்ந்திடும் புகழுரு தர்மம் வருகுது" (7) எனத் தனது சர்வதேசிய உணர்வைப் பறைசாற்றுகிறார்.

ஒடுக்கப்பட்டவர்களின் தோழன்

இந்தியத் துணைக்கண்டத்தில் இன்று சாதியம் மிகப்பெரும் சவாலாக முன்நிற்கிறது.

இன்று நேற்றல்ல, பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தச் சிக்கல் சமூக முன்னேற்றத்தின் தடைக்கல்லாக விளங்குகிறது. சாதியத்தின் கொடூர நீட்சியாகத் தீண்டாமை தலை விரித்தாடுகிறது. கவிஞர் தமிழ்ஒளி ஒரு தலித்தாக இருந்ததால், இதன் நச்சுப்பற்களால் இவரும் பாதிக்கப் பட்டார். பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பரிந்துரைக் கடிதத்தின் அடிப்படையில் கரந்தை தமிழ்க் கல்லூரியில் சேர்ந்தாலும், தாழ்த்தப்பட்ட சாதிக்காரர் என்ற காரணத்தால் சக மேட்டுக்குடி மாணவர்களால் அவர் இழிவு படுத்தப் பட்டார் என்பதை அவரது வரலாறு அறிவிக்கிறது. அதனால், சாதியத்தின் கொடுமையை இளமையிலேயே உணர்ந்ததால், அதை எதிர்த்து இறுதிவரை சமரசமில்லாமல் சமர் புரிந்தார் அவர்.

அது மட்டுமல்லாமல், அரிஜனத் தொண்டர் என்ற பெயரில் ஆதிதிராவிடர்களை ஏமாற்றிப் பிழைக்கும் உலுத்தர்களைக் கடுமையாகக கண்டிக்கின்றார். அதே வேளை, ஒடுக்கப்பட்ட தலித்துகளை யாரும் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை என வருந்துகிறார்."மண்ணில் மடிகின்ற மாசற்ற தியாகத்தை / எண்ண, எழுத எவருள்ளார் இந்நாட்டில்?" என்பது அவரது பதிவு..(8) ஒடுக்கப்பட்ட தலித்துகளை யாருமே இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை எனும் அவரது வேதனை கருதத்தக்கது.

கழைக் கூத்தாடி, நெசவாளி, தூய்மைத் தொழில் புரிவோர் விவசாயக் கூலிகள், துணி வெளுப்போர் என உழைப்போர் எங்கெல்லாம் ஒடுக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் அவர்களுக்குக் குரல் கொடுக்கிறார். சென்னைத் துறைமுகத் தொழிலாளர் சங்கத்தோடு நேரடியாகவே தொடர்பில் இருந்தார்

"இலக்கியம், கோபுரத்திலிருந்து குப்பை மேட்டுக்கு வர வேண்டும்" என்றான் அமெரிக்கக் கவிஞன் வால்ட் விட்மன். அது போல் தலித்துகளைத் தனது காப்பிய நாயகர்களாக வடித்து, ஒடுக்கப்பட்ட அம்மக்களுக்கு இலக்கியக் கவுரவத்தைக் கொடுத்தவர் தமிழ்ஒளி. " நிலை பெற்ற சிலை" / "வீராயி" / "மே தின ரோஜா" ஆகிய காவியங்கள் அதற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றன.

"இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கு இரு பெரும் எதிரிகள் சாதியம் (பார்ப்பனியம்) மற்றும் முதலாளித்துவம்" என அம்பேத்கர் அறிவித்த உண்மையைக் கவிஞர் தமிழ் ஒளியும் தனது அனுபவத்தால் கண்டறிந்திருந்தார். "கோசல குமரி" காவியத்தில் உண்மைக் காதலுக்கு எதிராக நிற்கும் கொடியவனாகப் 'பேர்வழி' எனும் பார்ப்பனனைக் கவிஞர் தமிழ் ஒளி படைத்துள்ளதை இந்த சமயத்தில் எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம்.

தமிழியச் சிந்தனைகள்

கவிஞர் தமிழ்ஒளி மாணவப் பருவத்தில் திராவிட மாணவர் கழகத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். மேலும் பாவேந்தர் பாரதிதாசனைத் தனது வழிகாட்டியாகக் கொண்டிருந்தார். எனவே சாதி ஒழிப்பு, இந்தி எதிர்ப்பு, தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை ஆகிய தளங்களில் தனது ஆதரவினை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

சமூகத்தின் அடிக்கட்டுமானமாக விளங்கும் பொருளாதாரத்தை மாற்றி அமைப்பது போலவே, மேல்கட்டுமானமாக இருக்கும் சாதி, மதம் போன்றவற்றையும் மாற்றி அமைக்க வேண்டும் எனும் போக்கு தமிழகத்தில் நீண்ட காலமாக நிலவி வந்துள்ளது. அதன் முன்னோடியாக விளங்கியவர் சிங்கார வேலர் அவர்கள். ( 1860-1946 ) இந்தியாவிலேயே மே நாளை முதன்முதலாகக் கொண்டாடிய சிங்காரவேலர், பொதுவுடைமைக் கோட்பாட்டில் ஆழ்ந்த பிடிப்பு மிக்கவராக விளங்கினார். இருப்பினும், சோசலிச சமுதாயம் அமைப்பதில் சமூகநீதியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தந்தை பெரியார் அவர்களோடு இணைந்து "ஈரோட்டுப் பாதை" எனும் திட்டத்தை உருவாக்கிச் செயல் பட்டார். வர்க்கமும் சாதியும் முயங்கிக் கிடக்கும் இச்சமுதாயத்தில் பொருளாதாரப் புரட்சியைப் போலவே, கலாச்சாரப் புரட்சியும் முக்கியம் என்பதைக் கவிஞர் தமிழ் ஒளியும் உணர்ந்திருந்தார். எனவேதான் இந்தித் திணிப்பு என்பது ஆதிக்கத்தின் ஒரு குறியீடு என்ற புரிதல் அவருக்கு இருந்தது. ஆகவே

" சிந்திய ரத்தம் உணரவில்லை-எங்கள்

 செந்தமிழ் வாழ்வு மலரவில்லை!

 இந்தியை இங்கே அழைக்கின்றீர்கள்!-கூர்

 ஈட்டியை நெஞ்சில் நுழைக்கின்றீர்கள்! .

...........................................................................

நுளைபட்ட இந்திக்குப் பூமாலையா? - நாங்கள்

நோற்ற தவத்திற்குச் சாவோலையா?"

என ஆவேசத்தோடு கேட்கிறார். (9)

"இந்தியை எதிர்த்து நில்!

எவர்வரின் எதிர்த்து நில்!

நந்திபோல் மறிக்கும் மூட

நாய்களை எதிர்த்து நில்!" எனப் போர்ப்பரணி பாடுகிறார்.(10)

இந்தி ஆதிக்க எதிர்ப்பினைத் தொடக்க காலத்தில் மட்டுமல்ல, தனது வாழ்வின் இறுதிவரை அவர் எதிர்த்து நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியின் ஆதிக்கத்தை மட்டுமல்ல, சமத்கிருதத்தின் மேலாதிக்கத்தையும் கடுமையாகச் சாடுகிறார் தமிழ்ஒளி.

"தமிழ் மரபு என்பதும், தமிழ்த் தேசிய இன உணர்ச்சி என்பதும், சமத்கிருத எதிர்ப்பைக் கொண்டவையே. இது வரலாற்றால் உருவாக்கப்பட்ட நாட்டுப் பண்பு. (National Character)" என்பது கவிஞர் தமிழ் ஒளியின் புரிதல். (11)

தேசிய இனங்களின் உரிமை குறித்த அவரது கருத்துக்கள் புரட்சிகரமானவை.

" தமிழருக்கு அரசு திட்டம்

தமிழர்செய்து கொள்ளுவோம்!

தகுதியின்றிச் செய்திருக்கும்

திட்டம்வீழச் செய்குவோம்!

எமதினத்தின் அரசுவேண்டும்

இல்லையென்று சொல்லிட

எவனுமிங்கு இல்லை; இந்த

நாடு எங்கள் நாடடா!

பிரிந்து வாழும் உரிமை எங்கள்

பிறவிதந்த உரிமையாம்!

பிறர்மறுக்க நியாய மில்லை

முரசு தன்னை கொட்டுவோம்!

இருந்திருந்து பொறுமையாக

சிறுமை வாழ்வை எய்தினோம்!

இரையைத் தேடும் சிங்கமாக

எழுந்திருந்து வருகுவீர்! "(12)

மேலும் சிலப்பதிகாரம் குறித்தும், திருக்குறள் குறித்தும், சமசுகிருதம் குறித்தும் கவிஞர் தமிழ்ஒளியின் கருத்துக்கள் தமிழ் விழுமியங்களை உயர்த்திப் பிடிப்பதை எளிதில் காணமுடியும். தமிழுணர்வு என்பதை அவர் ஓர் அரசியல் வெளிப்பாடாகத்தாக் வரையறுக்கிறார்.

தவிரவும், மொழியுணர்வின் முக்கியத்துவத்தை அவர் இறுதிவரை வலியுறுத்தி வந்தார்." நிலப்பிரபுத்துவ சமூகம், அறியாமையை விதைத்து விட்டதன் காரணமாய், தாய்மொழிப் பயிற்சி குன்றியிருத்தல் இயற்கையே. அம்மொழி உணர்ச்சியைத் தூண்டுவதும் ஜனநாயகக் கடமையாகும். .................................. ................ இம்மொழி உணர்ச்சிக்கு எதிராக நிலப் பிரபுத்துவம் தொடுத்த தாக்குதலே ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டம்.

 தாய் மொழியின் பெருமை முற்றும் மறைந்தொழிந்த இருண்ட காலமே நிலப்பரபுத்துவக் காலகட்டம்.

மீண்டும் தாய்மொழிப் பெருமை, மக்களிடையில் வீறிட்டெழுதல் இயற்கையே. இவ்வுணர்ச்சியை மேலும் மேலும் வளர்த்து உயர்ந்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும்போது, அறிவுத் துறையில் உன்னதப் பண்புகள் மலரும்.

மொழி வளர்ச்சியென்பது மரபின் அடியாகப் பிறக்கும் ஒரு செயல். எனவே மரபைப் புரிந்து கொள்வதும், அதைக் காப்பதும் நம் கடமைகளாகும். இவ்வாறு மரபைக் காக்கும் பணியைத் தற்காலப் "புதுமை" எழுத்தாளர்கள் சிலர், எள்ளி நகையாடுவதை நான் காண்கிறேன். உண்மையிலேயே இந்தப் பழமையாளர்கள், நிலப்பிரப்புத்துவப் பேய்க்கு உடுக்கை அடிப்பவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. இவர்கள் பிரதிபலிக்கும் போக்கு நாட்டிற்கு எதிரான போக்கு (Anti-national) என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்" (13)

அதே போல், மூட நம்பிக்கையை எதிர்த்தும், பெண்ணடிமையை எதிர்த்தும், விதவை மணத்தை ஆதரித்தும் அந்த நாள்களிலேயே அவர் எழுதிய கவிதைகள் சமகாலப் பொருத்தப்பாடு மிக்கவை. இப்படிப் பொதுவுடைமை,- சாதி ஒழிப்பு சமூக நீதி என இன்று பேசுபொருளாக இருக்கக் கூடிய கருப்பு / சிவப்பு / நீலம் ஆகியவற்றின் கூட்டிணைவைத் தனது படைப்புகளில் முன் நிறுத்திய மாபெரும் கவிஞர் தமிழ்ஒளி அவர்கள். இதனூடாகத் தமிழியச் சிந்தனைகளையும் அவர் இணைத்தது குறிப்பிடத்தக்க பரிமாணமாகும்.

இலக்கிய நோக்கு

தமிழ்ஒளி கட்டுரைகளில் தனது எழுத்தின் நோக்கத்தை அவர் தெளிவு படுத்துகிறார். இலக்கியத்தில் பிரச்சாரமே இல்லை என்பது பம்மாத்து என்பதைப் பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் அவர் நிறுவுகிறார்.

" நம் கண்ணெதிரே, நம் உடன் பிறந்தான் மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்து போகிறான். அவன் குடும்பம் வறுமைப் படுகுழியில் வீழ்ந்து கதறுகிறது. இதைக் கண்டு மனமிரங்காமல் மரத்துப் போன நெஞ்சுடன் உலாவும் மானிடப் பிண்டங்களின் உடலில் 'சுரீர் சுரீர்' என்று தைக்கும்படி எழுதுவதுதான் உண்மை எழுத்தாளனின் கடமையும் நோக்கமும் ஆகும்" என்று தனது திசைவழியை அவர் பதிவு செய்கிறார். (14)

அதே சமயத்தில், தான் ஏற்காத கருத்துக்களை யார் குறிப்பிட்டாலும் அதை அவர் கடுமையாக எதிர்க்கத் தயங்காதவராக இருந்தார். அப்படித்தான் சிதம்பர ரகுநாதன் மற்றும் புதுமைப்பித்தன் ஆகியோரது எழுத்து மற்றும் கவிதைகளைத் தமிழ்ஒளி விமர்சனத்திற்கு உட்படுத்தினார். "இலக்கியத்தில் எல்லோரும் ஒன்றையே விரும்ப முடியாது, நவரசங்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று ஒத்துப் போகும்" எனவும், " மெய்ப்பிக்கப்படுபவை எல்லாம் உண்மையாகி விடாது" எனவும், ".நூலாசிரியர்களைப் பார்த்து 'அதை எழுது, இதை எழுது' என்று கட்டளை இடக்கூடாது" எனவும் ரகுநாதன் கூறுவதை மறுத்துத் தமிழ்ஒளி விரிவாக விவாதிக்கிறார். (15)

அடுத்துச் சிதம்பர ரகுநாதன் அவர்கள் தொகுத்த புதுமைப் பித்தன் கவிதைகள் குறித்தும் தனது மறுப்பினை விரிவாகப் பதிவு செய்கிறார். புதுமைப்பித்தன் எழுதியுள்ள 19 'கவிதை'களைத் தமிழ்ஒளி கவிதை என ஏற்கவில்லை. அவை வெறும் "துணுக்குகள்" எனக் குறிப்பிடுகிறார்.

" வட்ட முலை மின்னார் வசமிழந்த காமத்தால் " எனும் புதுமைப் பித்தனின் கவிதை எப்படித் தமிழ் இலக்கண மரபுப்படி அமையவில்லை என்பதைத் தமிழ் ஒளி விரிவாக விளக்குகிறார். யாப்பு, தாளம், சந்தம், லயம், தளை, சீர் போன்றவற்றின் பின்னணியில் புதுமைப் பித்தனது கவிதை,. தமிழ் இலக்கணப்படி பொருந்தாது எனத் தெளிவு படுத்துகிறார். "சிறந்த உரைநடை என்பது, உணர்ச்சிகளை எட்டிப் பிடித்துத் தொடரும் தாளமற்ற பாட்டாக இருக்கிறது. அந்த உணர்ச்சிகளுக்குத் தாளலயமும், தாளத்திற்கு அளவும் வழங்குகிறது பாடல். தாளம் கெட்டால் பாவ லயமும் கெடுகிறது. பாவ லயத்திற்குச் "சந்தங்களின் மாத்திரைகளே" அதாவது சீர்களின் அளவே பிரதானம்" எனத் தனது தரப்பைக் கவிஞர் தமிழ் ஒளி பதிவு செய்கிறார். (16)

தமிழில் புதுக்கவிதை அல்லது வசனகவிதை எனும் வடிவம் புதிதாக வந்தபொழுது, முற்போக்கு முகாமிலுள்ளவர்களே தொடக்கத்தில் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, அதைக் கடுமையாக எதிர்த்தனர். இதற்குத் தமிழ் ஒளி அவர்களே சிறந்த எடுத்துக் காட்டு. தமிழ்நாட்டில் மட்டுமல்ல அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளிலும் வசன கவிதை (Prose poetry) எனும் வடிவத்திற்குத் தொடக்கத்தில் எதிர்ப்பு இருந்ததைக் காண்கிறோம். மரபார்ந்த கவிஞர்கள் மட்டுமல்ல, மிகவும் நவீனக் கவிஞர்களாக அறியப் படுகிற டி.எஸ். எலியட் போன்றவர்களே இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

19- ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் வசன கவிதை என்பது புதுமுயற்சியாக ஜெர்மனியிலும், பிரான்சிலும் முன்னெடுக்கப் பட்டது. குறிப்பாக 1950-60 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கக் கவிஞர்களது முயற்சியால், இப்புதுக்கவிதை வடிவம் ஆங்கிலத்தில் மிகப்பெரும் செல்வாக்குப் பெற்றது. தமிழ்நாட்டில் இதே காலகட்டத்தில்தான் கவிஞர் தமிழ்ஒளி இக்கவிதை வடிவத்தைப் புதுமைப்பித்தனை முன்நிறுத்தி மிகக் கடுமையாக எதிர்க்கிறார் என்பதை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

1980 - ஆம் ஆண்டுகளில் புதுக்கவிதை இங்கிலாந்தில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ்நாட்டிலும் அதே காலகட்டத்தில் தோன்றிய வானம்பாடி கவிதை இயக்கம் ( 1971--1982 ) இலக்கிய உலகில் அழுத்தமான முத்திரைகளைப் பதித்தது. இடதுசாரிக் கவிஞர்களாக அறியப்பட்ட சிற்பி, புவியரசு, தமிழன்பன் போன்றோர் வானம்பாடி இயக்கத்தின் மூலம் புதுக்கவிதை வடிவத்தைப் புதிய உச்சத்திற்கு எடுத்துச் சென்றனர் என்பது சமகால வரலாறாகும். இவர்கள் அனைவரும் தமிழ்த் துறையில் பணியாற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

வசன கவிதை ( க.நா.சு. அதைப் "புதுக்கவிதை" என அழைத்தார்) என்பது கவிதையை சனநாயகப் படுத்தியது. எளிய மக்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தத்தக்க வாயிலாக அது அமைந்தது. கடும் இலக்கண விதிகளை அது கோருவதில்லை.

"காரிகை கற்றுக் கவி பாடுவதினும்

பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று" எனப் புலவர்களே பாடத்தக்க அளவில் இலக்கண விதிகள் ஒரு காலத்தில் கடுமையாக இருந்ததை இப்பாடல் உணர்த்துகிறது. ( காரிகை என்பது "யாப்பெருங்கலக் காரிகை" எனும் நூலைக் குறிப்பிடும். கட்டளைக் கலித்துறை எனும் யாப்பில் இயற்றப்பட்ட இந்நூல்.

கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் அமிர்தசாகரர் என்பவரால் இயற்றப் பட்டதாகும்.) ஆனால் காலப் போக்கில் தமிழ்க்கவிதை வடிவில் தளர்வுகள் ஏற்பட்டதைக் காண்கிறோம். 20-ஆம் நூற்றாண்டில் புதுக்கவிதையே கவிதை என்றாகி விட்டது. எனவேதான் புதுமைப் பித்தனிலிருந்து சமகாலக் கவிஞர்கள் வரை இலக்கியத்தில் ஏற்பிசைவு பெற்றுள்ளனர். "மாறுவது மரபு. -இல்லையேல் மாற்றுவது மரபு" இதுவே வரலாற்று விதி என்பதை அறிவுத் துறை அறியும்.

புதுக்கவிதை வரவேற்புப் பெற்றுள்ள அதே சமயத்தில், மரபுக்கவிதைகளின் முக்கியத்துவமும் சிறப்பும் இன்றும் நீடிக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. அதற்கான இடத்தை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அவ்வகையில் தமிழ் ஒளியின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.

இலக்கியத்தில் என்னென்ன வகைகள் உள்ளனவோ, அத்தனை வகைகளிலும் தனது ஆளுமையை நிலை நிறுத்தியவர் தமிழ்ஒளி.

காவியங்கள், குறுநாவல்கள், சிறுகதைகள், ஓரங்க நாடகங்கள், மேடை நாடகங்கள், குட்டிக் கதைகள், இலக்கிய ஆய்வு நூல்கள், விமர்சன நூல்கள், குழந்தைப் பாடல்கள், கவியரங்கக் கவிதைகள் எனப் பல்வகைப் படைப்புகளை எழுதிக் குவித்தவர் கவிஞர் தமிழ்ஒளி.

"நம் குழந்தைகளிடம் ஒற்றுமையும் போராட்டக் குணமும் வலுப்படுவதற்குச் சிறந்த தூண்டுகோல்களாகத் தமிழ்ஒளியின் கதைகளைப் பரிந்துரைக்கலாம் .................. முல்லா கதைகளின் அறிவுக் கூர்மையையும், பைபிள் கதைகளின் நீதி போதனையையும் குழந்தைகளுக்கானத் தமிழ்ஒளியின் குட்டிக் கதைகளில் காண்கிறோம் " (17) எனக் கவியரசு ஈரோடு தமிழன்பன் குறிப்பிடுகிறார்.

தனது இலக்கியக் கண்ணோட்டம் குறித்து தமிழ்ஒளி விரிவாகப் பதிவு செய்துள்ளார்.

"எதிர்காலத்தைக் கணிக்கும் அறிவைத் துணைகொண்டு, மாற்றத்தை விரைவுபடுத்தும் செயல்களையும், அவற்றோடு தொடர்பு கொண்ட குணச்சித்திரங்களையும் உருவாக்குவதன் மூலம் நிகழ்காலத்தில் பெறும் தெளிவு / எதிர்காலத்தில் பெறும் நம்பிக்கை ஆகியன நிழலிடும் சிறந்த இலக்கியக் கோபுரங்களை எழுப்பமுடியும். இவ்வாறு காணும் நோக்கே முற்போக்கு நோக்கமாம்" எனவும்,

" இறந்தகாலத் தொடர்ச்சி என்பது நிலப்பிரபுத்துவம். எதிர்காலம் என்பது சமூகவுடைமை. எதிர்காலத் தொடக்கம் என்பது ஜனநாயகம். ஜனநாயகம் என்கின்ற பாதையூடு சென்றால், சோசலிசம் என்ற பொன்யுகத்தை நாம் அடைவோம்" எனவும்,

" நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையைக் குத்திக்

கிழித்தெறியும் நையாண்டிப் படைப்புகள், இன்றைய இலக்கியத்தில் பங்கு பெறுதல் வேண்டும்.

விந்தன் அவர்கள் எழுதிய "பசி கோவிந்தம்" அத்தகைய நையாண்டி இலக்கியமாகும். அது ராஜாஜி கிழவரின் 'பஜகோவிந்த"த்தின் மேல் வீழ்ந்த அடி.

திரு விந்தன் அவர்களைப் போன்றே எழுத்தாற்றல் படைத்தோர், நம்மிடையே இல்லாமல் இல்லை. எனினும் அவர்கள் சமூக விஞ் ஞானக் கண்ணோட்டம் அற்ற நிலையில் தவிக்கின்றனர்" எனவும் தனது இலக்கியச் செல்நெறியைச் சுட்டிக் காட்டுகிறார் தமிழ் ஒளி.

ஆனால் அதேசமயம், "இன்றைய இலக்கியம் சமூகக் கொள்கை­யினின்றும் விலகி வியாபாரம் என்கின்ற மூக்கணாங்கயிற்றை மாட்டிக்கொண்டு, அக்கயிறு சுண்டுகிற பக்கமெல்லாம் துள்ளி ஓடுவதைக் காண்கிறோம்.

இவ்வாறு சந்தையை நோக்கி ஓடும் குருட்டு இலக்கியங்களிடையே டால்ஸ்டாய்கள் தோன்றுவதோ, விக்டர் ஹ்யூயோக்கள் எழுதுவதோ, செகாவ்கள் பிறப்பதோ இல்லை" என அறுபதுகளில் அவர் கொடுத்த எச்சரிக்கை, இந்தக் கார்ப்பரேட் கால இலக்கியங்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக உள்ளது. (18)

காலம் அறிந்து கூவிய விடியல் சேவல்

பொது வாழ்வையே தன் திசைவழியாகத் தேர்ந்தெடுத்தவர் கவிஞர் தமிழ்ஒளி. திருமணம் செய்து கொள்ளாத அவருக்குத் தனிவாழ்வு எனப் பெரிதாக ஏதுமில்லை.

எனவே சமகாலப் பொது நிகழ்வுகளில் அவரது குறுக்கீடுகள் இடையின்றித் தொடர்ந்தன.தமிழ் திரை உலகில் புகழுடன் விளங்கிய கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், எம். கே. தியாகராஜ பாகவதர் இருவரும் ஒரு வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுதலை செய்யக்கோரித் தமிழ் மக்கள் இயக்கம் நடத்தினர் அதனை ஆதரித்துக் கவிஞர் தமிழ் ஒளியும் கவிதை படைத்தார். அதே போல், காமன்வெல்த் அமைப்பில் சுதந்திர இந்தியா கட்டுப்பட்டு இருந்ததால், போராளி மலேயா கணபதி தூக்கில் இடப்படுவதைத் தடுத்து நிறுத்த முடியாத பெருந் துயரை " அணைந்த தீபம் " என்னும் இலக்கியப் படைப்பாக வெளிப்படுத்தினார்.

இமயமலை உச்சியான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி டென்சிங் வெற்றிக் கொடி நாட்டியதை "மண்ணுலகில் மானிடரின் மகிமைக்கோர் சாட்சி" எனக் கவிதை எழுதி வரவேற்றார்.

வேலை நிறுத்தம் செய்யும் " புதுவைத் தொழிலாளிக்குக் கோவைத் தொழிலாளியின் கடிதம் " என்று கவிதையில் ஒரு கடிதம் எழுதி, அவர்கள் தளர்வுறாமல் முன்னேறிச் செல்ல வேண்டும் என உத்வேகம் ஊட்டினார். அதேபோல் 'மெட்ராஸ் எலக்ட்ரிக் டிராம்வே' நிறுவனத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்த பொழுது " போர்க்கொடி" எனும் பாடல் மூலம் அவர்களை ஆதரித்தார்.

இந்தியாவுக்குச் சொந்தமான கோவா, இறுதியில் போர்ச்சுகீசியர் வசம் இருந்தது.

கோவாவை மீட்கப் பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப் பட்டன. 1955 ஆம் ஆண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்த கம்யூனிஸ்டுகளும் சோசலிஸ்டுகளும் கோவாவை மீட்க அங்கு அதிகாரத்திலிருந்த போச்சுக்கீசிய அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தில் குறைந்தது 20 பேர்

போர்ச்சுக்கீசிய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டனர். அதனால் கொந்தளித்த கவிஞர் தமிழ்ஒளி "கோவாவில் கொடுமை!"எனும் கவிதை மூலம் கோவா விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்.

1959-ஆம் ஆண்டு சோவித் இரசியா ஸ்புட்னிக் என்ற விண்கலத்தை வானில் செலுத்தி, சந்திரனில் செங்கொடியைப் பதித்த சிறப்பினைக் கூறும் "நிலவைப் பிடித்தார்" எனும் பாடல் மூலம் வரவேற்றார் தமிழ்ஒளி. (19)

"சோவியத் அதிகாரம் + மின்சாரம் = கம்யூனிசம்" என்றார் மாமேதை இலெனின். அதற்கேற்ப கவிஞர் ஒளியும் மின்விசைக்கு ஆதாரமாய் விளங்கும் நிலக்கரிச் சுரங்கத்தை வரவேற்று "நெய்வேலி நாம் பெற்ற பேறு" எனக் கொண்டாடினார்.

இப்படிச் சமூகப் பரிணாமத்தில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்துத் தமிழ்ஒளி தொடாத பகுதி ஏதும் இல்லை என்றால் அது மிகையல்ல.

சமாதானப் புறா

தமிழ் ஒளி கருத்துலகில் மற்றுமோர் முக்கியக் கூறு போர்களின் மீது அவருக்கு இருந்த ஒவ்வாமை. தொடக்கத்திலிருந்தே இந்தக் கருத்தை அவர் பல படைப்புக்களிலும் வெளிப்படுத்தி உள்ளார்.

" யந்திரங்கள் சூழ்வதற்கும்

ஆகாயமேல் வாழ்வதற்கும்

சந்திரனை நாம்பிடிக்கும் போதிலே-போர்

தலையெடுக்க லாமோ மண்மீதிலே?

பிள்ளை, குட்டி வாழ்வதற்கும்

பேதம் யாவும் வீழ்வதற்கும்

கொள்ளைப் போரை நாம் தடுக்கவேண்டுமே" (20)

எனவும், போரைப் பூண்டோடு ஒழிக்க வேண்டும் எனவும், தனது நிலைபாட்டைத் தெளிவாக்குகிறார். அதே போல் "கோலம் அழித்திடும் யுத்தம் எனிற், சினம் கொண்டு (நெஞ்சு) சமாதானத் தொண்டு நினைக்குது" எனவும்,

"சாந்த உலகமதாம்-அது

தன்னுடை வாசலிலே

ஏந்திப் பறக்கவிடும்-கொடி

இன்பச் சமாதானமாம்!

அந்தக் கொடிதனையே-மக்கள்

யாவரும் ஏந்திடுவார்!

எந்தப் புயல் வரினும்-அதை

என்றைக்கும் காத்திடுவார்!" (21)

எனவும் பிரகடனப் படுத்துகிறார்.

அதே போல், போரை எதிர்த்து அஞ்சாமல் நின்ற ஒரு முக்கிய ஆளுமையை விதந்தோதுகிறார் தமிழ் ஒளி. இட்லரின் யுத்தமேகங்கள் சூழ்ந்து வரும் வேளையில், நாசிசத்தின் பயங்கர கர்ஜனையைக் கண்டு நடுங்காமல், அதைக் கண்டு ஏளனமாகச் சிரிக்கிறார் அம்மனிதர். இட்லர் கூடத் திகைக்கிறான். யார் சிரிப்பது எனத் தேடுகிறான். அந்தச் சிரிப்பு ஹாலிவுட்டிலிருந்து வருகிறது. அதற்குச் சொந்தக்காரர், சார்லி சாப்ளின். சர்வாதிகார இட்லரை முதன் முதலில் சந்தி சிரிக்கச் செய்த அதிசய ஆற்றல் படைத்த முதல் மனிதரும் அவர்தான் என்று போருக்கு எதிரான நாயகனாக அவரைத் தமிழ் ஒளி கொண்டாடுகிறார். (22)

காலத்தை வென்ற கவிஞன்

சாதியால் தாழ்ந்தவர் ; நிரந்தர வேலை இல்லாதவர்; சொத்து ஏதும் அற்றவர்; ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்; பெரும் பட்டங்கள் பெறாதவர் -இத்தகைய எதிர்மறைப் பின்னணியில் இருந்து பீனிக்ஸ் பறவைபோல் கிளர்ந்தெழுந்தவர் கவிஞர் தமிழ்ஒளி. அவரிடம் இருந்த ஆயுதம், பொதுவுடைமை. அவரைக் காக்கும் கேடயம்,தமிழ்.

இருப்பினும் அந்த மகாகவிக்கான அங்கீகாரம் உரிய அளவில் கொடுக்கப் படவில்லை. அந்தக் குற்ற உணர்வு தமிழ்ச் சாதிக்கு இருக்கிறது ; இருக்க வேண்டும்.

அவரது படைப்புகள் மூலம் அவர் நம்மோடு தோழமை உறவு கொண்டிருப்பார்.

"ஒரு சமதர்ம இந்தியாவும், ஒரு சமதர்மத் தமிழகமும் அமையும்போது கவிஞர் தமிழ் ஒளி உலகத்தில் முன்னணிக் கவிஞருள் ஒருவராகக் கட்டாயம் இடம் பெறுவார்" எனும் அறிஞர் கா.அப்பாத்துரையின் கனவுதான் நமக்கு ஒரே ஆறுதலாக உள்ளது.

பார்வை நூல்கள்

(1)  தமிழ்ஒளி கடிதம் - பக்.78, ஒருங்கிணைப்பு -வீ.அரசு -மாற்று வெளியீடு, சென்னை.

(2) மேலது - பக்கம் 80.

(3)  தமிழ்ஒளி கவிதைகள் தொகுதி 2 - பக்கம் 38, "நீ யார் பக்கம்?"கவிதை - புகழ் புத்தகாலயம், சென்னை.

(4)  மேலது - பக்கம் 112, " நவம்பர் புரட்சிக்கு நல்வாழ்த்துகள்" கவிதை.

(5)  மேலது - பக்கம் 34, "சுதந்திரம்" கவிதை.

(6)  மேலது - பக்கம் 26, விடுதலை உறவு கவிதை.

(7)  மேலது - பக்கம் 55, "நான் கிங் எல்லையில் " கவிதை.

(8) தமிழ்ஒளி கவிதைகள் - தொகுதி 1 - புகழ் புத்தகாலயம் - பக்கம் 63, "மாசற்ற தியாகம்" கவிதை.

(9)  தமிழ் ஒளி கவிதைகள் தொகுதி 2 பக்கம் 118, "இந்தி எதிர்ப்புப் போர்"கவிதை.

(10)  மேலது - பக்கம் 124, "எதிர்த்து நில்" கவிதை.

(11)  தமிழர் சமுதாயம் - கவிஞர் தமிழ்ஒளி 90 ஆம் ஆண்டு பிறந்தநாள் நினைவு வெளியீடு, புகழ் புத்தகாலயம், சென்னை -பக்கம் 32, "சமஸ்கிருதம்" கட்டுரை.

(12) தமிழ்ஒளி கவிதைகள் - தொகுதி 2 - பக்கம் 20: "முரசு கொட்டி சொல்லடா" கவிதை.

(13) தமிழ்ஒளி கட்டுரைகள் - புகழ் புத்தகாலயம், சென்னை - பக்கம் 129/130 ­" இலக்கியம் எங்கே?" கட்டுரை.

(14) மேலது - பக்கம் 82 - "வீராயி" நூலுக்கு எழுதிய முன்னுரை.

(15) மேலது - ரகுநாதனின் " இலக்கிய விமர்சனம் " குறித்த கட்டுரை - பக்கம் 92.

(16)  மேலது, பக்கம் 120 - வ.வே.சு. கண்ட வழி அக்டோபர்,1955.

(17) வனமலர்கள் -தமிழ்ஒளியின் குட்டிக் கதைகள் - புகழ் புத்தகாலயம் - ஈரோடு தமிழன்பன் முன்னுரை.

(18)  தமிழ்ஒளி கட்டுரைகள் 123 / 131 / 136 / 137.

(19)  தமிழ்ஒளி கவிதைகள் தொகுதி 2 - பக்கங்கள் 107 / 108.

(20)  மேலது - பக்கம் 110 - "சமாதானக் குரல்" கவிதை.

(21)  மேலது - பக்கம் 73, " சர்ச்சிலுக்கு " கவிதை

(22) குருவிப்பட்டி -தமிழ்ஒளி - புகழ் புத்தகாலயம், பக்கங்கள் 172 / 173.

- கண.குறிஞ்சி