நான் நீண்ட காலமாக ஒரு கேள்வியை பல அரசியல்வாதிகளிடமும் அறிவு ஜீவிகளிடமும் கேட்டு வருகிறேன். எனக்குச் சரியான பதில் அந்தக் கேள்விக்குக் கிடைக்கவில்லை. பொதுவாக லாபம் ஈட்டுதல் என்பது தொழிலில் வணிகத்தில் நடைபெறும் நிகழ்வுதான். அது ஒன்றும் தவறல்ல. மனிதத்திறமையை செயல்பட அனுமதிக்கும்போது அதற்கு ஊக்குவிப்பு தேவையாகிறது. எனவே அந்த ஊக்குவிப்பு என்பது லாபத்தின் மூலம்தான் நடைபெறும். இந்தக் கோட்பாட்டைக் கோடிட்டுக் காட்டிய ஆடம் ஸ்மித், அவர் எழுதிய “தேசங்களின் செல்வம்” என்ற புத்தகத்தில் கடைசியில் இந்த லாபம் ஈட்டும் செயல்பாடுகள் எப்படி நடைபெற வேண்டும் என்பதற்கு ஒரு “தார்மீக நியதிகள் என்பது அடிப்படையாக்கி அதன் அடிப்படையில் நடைபெற வேண்டும்” என்றார். அதற்கு ஆங்கிலத்தில் (Moral Sentiments) மாரல் சென்டிமென்ட்ஸ் என்று விளக்கியிருந்தார். மானுடம் அளப்பரிய செயல்பாடுகளைச் செய்து மிகப் பெரிய மாற்றங்களையும் மேம்பாட்டையும் உருவாக்கியுள்ளது. இந்த ‘லாபம் ஈட்டுதல்’ என்ற செயல்பாடு தொழில் புரட்சியில் ஆரம்பித்து இன்று நடைபெற்று வரும் உலகமய பொருளாதாரம் வரை நடைபெற்று வருகிறது. அந்த நிகழ்வு அன்றிலிருந்து இன்றுவரை எந்த வரையறையும் அற்று செயல்பட்டு இன்று உலகத்தில் எல்லை­யில்லா பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி விட்டது. இந்த ஏற்றத்தாழ்வுகள் என்னென்ன தீய விளைவுகளை உலகில் மானுடத்திற்குள் ஏற்படுத்தப் போகிறது என்பதற்கு இன்னும் பொது விவாதம் உருவாக்கப்படவில்லை.

அடுத்து, இந்த எல்லை இல்லா பொருளாதார ஏற்றத்தாழ்வும், சமூக ஏற்றத்தாழ்வுகளும் அதிகமுள்ள நாடுகளில் எல்லையற்ற தீய விளைவுகளை உருவாக்கும் என்று தெரிந்தும் எந்தப் பொது விவாதமும் பொதுத்தளத்தில் எழவில்லை. அதற்கு வித்திட வேண்டிய நடுத்தர வர்க்கம், புதிய பொருளாதாரத்தில் தங்களுக்குக் கிடைத்த லாபத்தை சுவைத்துக் கொண்டுள்ளது. அடுத்து மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் இதனை மக்களிடம் எடுத்துச் சென்று மக்களுக்கு இதன் தீவிர தீய விளைவுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களை இதற்கு எதிராக போராட வைக்க வேண்டிய அரசியல் கட்சிகள், சந்தைப் பணத்தில் அரசியல் நடத்திக் கொண்டிருப்பதால் அந்தப் பணியைச் செய்யவில்லை. அரசியல் கட்சிகள் அவ்வப்போது அரசியல் நிகழ்வுகளை நடத்தி மக்களிடம் தங்கள் இருப்புக்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளன. இவற்றைக் கடந்து இந்த சந்தைச் செயல்பாடுகளில் மிகப் பெரிய சீர்திருத்தத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற எந்தச் சிந்தனையும் அற்று அரசியல் கட்சிகள் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலப் பிரச்சினை என்பது லாபத்தில் இருக்கிறது என்ற எந்தப் புரிதலையும் சாதாரண மக்களாகிய நாம் பெறவில்லை. இதைத்தான் ஒரு கேள்வியாக என் கட்டுரைகளில் தொடர்ந்து வைத்து வந்தேன்.corruption 487லாபத்திற்கு வரையறை உண்டா இல்லையா என்பதுதான் அந்தக் கேள்வி. இன்று உலகம் முழுதும் ஒரு சிந்தனை ஓட்டம் இருக்கிறது, அதுதான் சந்தைச் சிந்தனை, பொருளாதாரச் சிந்தனை, அதிகாரச் சிந்தனை. பெரும்பான்மை மக்கள் பெயரில் மக்களாட்சி என்று பெரும்பான்மையான நாடுகளில் நடந்தாலும் பெரும்பான்மை மக்களின் வாழ்வுநிலை பற்றிய சிந்தனையோ, உணர்வோ அற்று நாட்டின் தலைவர்கள் நடந்துகொள்வதை நம்மால் உணரமுடிகிறது. அதுமட்டுமல்ல உலகத்தில் தலைமைக்கு பஞ்சம் வந்துவிட்டது என்று பொதுத்தளத்தில் விவாதிக்கின்றனர். அதே நேரத்தில் சந்தையில் மிதமிஞ்சிய தலைமைத்துவம் உருவாகி சந்தையை வலுவாக்கி வருகின்றனர். சந்தைதான் உலகம் என்ற அளவுக்கு சந்தையை பலம்பெறச் செய்துவிட்டனர். இதன் விளைவை குடும்பத்திலிருந்து ஆன்மீகம், அரசியல் என்று எல்லா இடத்திலும் பார்த்து வருகின்றோம்.

ஒரு பொருள் உற்பத்தி செய்ய 10 ரூபாய் செலவாகின்றது. அதை விற்று லாபம் ஈட்டுபவர் எவ்வளவுக்கு லாபம் வைக்கலாம் என்பதற்கு வரையறை செய்ய வேண்டியது அரசின் கடமையா இல்லையா? ரூபாய் 10க்கு தயாரித்த பொருளை 20 ரூபாய்க்கு விற்று 100% லாபம் பெறலாமா? அதே பொருளை ரூ 30க்கு, ரூ 40க்கு விற்கலாமா? அது நியாயமா, தர்மமா? அது எந்த அறத்தைச் சார்ந்தது. இந்த லாபம் ஈட்டுவதை வரையறை செய்யாத நிலையில் எல்லையற்ற வளத்தை ஒருசிலர் கைக்குள் கொண்டு சென்றுவிட்டனர் என்று ஆய்வு அறிக்கைகள் வந்தபின்னும் நாம் வாளா இருப்பது எதைக் காட்டுகிறது? இந்த லாபம் எல்லையற்ற சுரண்டலை இயற்கை வளத்தின் மீதும், மனித வளத்தின் மீதும் நடத்தி வந்தவை என்பது யாரையும் பாதிக்கவில்லையா? இது புரியவில்லையா? என்பதுதான் கேள்விகள்.

இந்த நேரத்தில் ஓர் அறிக்கை வந்துள்ளது. நாம் யாரை குறை கூறிக் கொண்டுள்ளோமோ அவர்களிடமிருந்து தான் அந்த அறிக்கை வெளிவந்துள்ளது. அதைக் கொண்டுவந்தவர் உலக ஊடக முதலாளியாக செல்வத்தைக் குவித்து வைத்துள்ள டிஸ்னே என்பவர்தான். இந்த அறிக்கையில் 12 நாடுகளைச் சேர்ந்த 206 பெரும் செல்வந்தர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்த அறிக்கை கூறுவது இந்த எல்லையற்ற ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க உலகத் தலைவர்களே உங்கள் அரசாங்கங்களின் மூலம் முடிவுகளை உடனே எடுத்து நடைமுறைப்படுத்துங்கள். இதை எங்கே ஆரம்பிக்க வேண்டுமென்றால் செல்வவரி (Wealth Tax) யில் ஆரம்பிக்க வேண்டும். செல்வவரி போட்டு இந்த ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க வழிவகை செய்யுங்கள். இவர்களுடைய வேண்டுகோள் என்பது கிரேட்டாதுன்பர்க் உலகத் தலைவர்களை நிமிர்ந்து பார்க்க வைக்கும் ஓர் அறைகூவல் செய்தார் அல்லவா, அதேபோல்தான்.

கடந்த பத்தாண்டில் 103.5% உலக பில்லினியர் செல்வந்தர்கள் வளர்ந்துள்ளனர். இவர்களுடைய சொத்து 5.9 ட்ரில்லியன் டாலர் வளர்ந்துள்ளது. இதில் கையெழுத்திட்டிருப்பவர்கள் உச்சகட்ட வருமானத்தை உலகத்தில் ஈட்டுபவர்கள். தங்களை நாட்டுப்பற்று மிக்க செல்வந்தர்கள் என்று தங்களை வர்ணித்து இந்த அறிக்கையைத் தந்துள்ளனர். இவர்கள் கூறும் முக்கியக் கருத்து தற்போது நடந்துவரும் பொருளாதார வளர்ச்சி உலகை உயிரோடு விழுங்கிக் கொண்டுள்ளது, இது தடுத்து நிறுத்தப்பட்டு பொருளாதார சீர்திருத்தங்கள் செய்யவில்லை என்றால் உலகப் பொருளாதாரத்தை உடைத்தெறியும், நம் சூழலை நாசமாக்கும், ஒட்டுமொத்த பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யும், அடுத்து மக்களை வீதிக்குக் கொண்டு வரும், மக்களாட்சியை மயானத்துக்கு அனுப்பும். எனவே ஒட்டுமொத்த மக்கள் இயக்கத்தை அடியோடு நிறுத்தி விடும், எதிர்காலத்தை சூனியமாக்கும். உடனே செயல்படத் தயாராகுங்கள் என்பதுதான் அந்த அறிக்கை கூறும் முக்கிய கருத்து. ஆனால் உலகம் முழுவதும் சந்தைக்கான சீர்திருத்தம் எனக் கூறி இவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டும் சீர்திருத்தத்திற்கு நேர் எதிர்மறையான சீர்திருத்தத்தைச் செய்து வைத்துள்ளனர். இது தொடர்பான இன்னொரு கேள்வி இருக்கிறது. அதையும் கேட்டுள்ளேன். ஒரு தொழில் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் தனக்கென ஆண்டுக்கு 60 கோடி ரூபாய், 50 கோடி ரூபாய் சம்பளம் தாங்களே நிர்ணயித்துக் கொள்வது என்பது நியாயமானதா?

அந்தக் கம்பெனியின் லாபத்தில்தானே இதனைப் பெறுகிறார் என்று விவாதிக்கக் கூடும். இவருக்கு மூலதனம் வங்கிதானே தருகிறது. அது பொதுமக்கள் பணம்தானே. அதில் வரும் லாபத்தில் ஏன் வங்கிக்கு பங்கு தரக்கூடாது. உழைப்பில்லாமல் லாபம் வரவில்லையே. எனவே லாபத்தில் தொழிலாளர்களுக்கு பங்கு தரவேண்டும் என்பது நியாயமில்லையா? இதைக் கேட்கக் கூடாதா? மூளை உழைப்பிற்கு அதிகப்பணம், உடல் உழைப்பிற்கு குறைவாகத் தரவேண்டும் என நிர்ணயித்தது யார்? இதை விவாதிக்கக் கூடாதா? விவசாயக் கூலித் தொழிலாளர்களை ஆற்றலற்ற தொழிலாளி (Unskilled Labourer) என்று யார் பிரித்தது. உழுவதும், வரப்பு வெட்டுவதும், கதிர் அறுப்பதும், பரம்படிப்பதும், நாற்றுப்பரிப்பதும், நடவு நடுவதும், வைக்கோல் அடிப்பதும், வைக்கோல் போர் போடுவதும், விதை நெல்லைப் பாதுகாக்க கோட்டை கட்டுவதும் திறன் இல்லையா, அதை ஏன் திறனுக்குள் கொண்டுவரவில்லை. கல்வி என்பது மானுடத்தை மேம்படுத்தவா அல்லது மானுடத்தை சுரண்டி வாழும் கலையைக் கற்றுத் தருவதற்கா? கல்வி என்பது சமூக மேம்பாட்டிற்கானதா அல்லது, தனிமனிதர்கள் பணம் சம்பாதிக்கக் கற்றுக் கொள்ளும் யுக்தியா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மக்களின் சேவகரா? மக்களின் எஜமானர்களா? ஏன் சேவகர்போல் நடந்து கொள்ளாமல் மக்களின் எஜமானர்கள்போல் நடந்துகொள்கிறார்கள். அப்படித்தானே அரசு அதிகாரிகளும், அலுவலர்களும், அவர்கள் அனைவரும் ஏன் மக்களை இவர்கள் போடும் பிச்சைக்காக எதிர்பார்த்து பயனாளிப் பட்டாளமாக வாழ்வதாக நினைத்து மரியாதை இல்லாமல் நடத்துகின்றனர்.

கல்வி வரியை அரசுக்குத் தந்துவிட்டு, தன் குழந்தைகளுக்கு நல்ல கல்வி என தேடி தனியார் வலையில் வீழ்ந்து அதற்கும் தான் உழைத்து சம்பாதித்த பணத்தை கொடுத்துவிட்டு அறியாமையில் மக்களை வாழ அனுமதித்து விட்டோமே, இதை யார் நெறிப்படுத்துவது. வன உரிமைச் சட்டம் கொண்டுவந்து உலகுக்கு அறிவித்து விட்டு பெரும் முதலாளிகளை காடுகளில் உள்ள கனிம வளங்களைச் சூறையாட ஆதிவாசிகளை அப்புறப்படுத்துவதை யார் கேட்பது? தகவல் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், உணவு உரிமைச் சட்டம், தெருவணிகர் பாதுகாப்புச் சட்டம், துப்புரவுப் பணியாளர் மேம்பாட்டுக்கான சட்டம், வேலை உரிமைச் சட்டம் என கட்டுக்கட்டாக உரிமைகளை கொடுத்ததாக அறிவிக்கும் அரசாங்கம் அவைகளை மக்கள் பயன்படுத்திட மக்களிடம் விழிப்புணர்வை ஏன் ஏற்படுத்தவில்லை. சட்டங்கள் அனைத்தும் ஐ.நாவிற்கும் உலக நாடுகளுக்கும் கூற மட்டும்தானா? மக்களுக்கு இல்லையா?

இந் நாட்டில் ஊழல் என்பது ஆறாய் பெருக்கெடுத்து ஓடுவது யாருக்கும் தெரியவில்லையா? ஊழல் இன்று கோடிகளில் நடைபெறுகின்றது என்பது யார் கண்ணுக்கும் படவில்லையா? மக்கள் இனாம் கேட்கிறார்கள், வாக்குக்குப் பணம் கேட்கிறார்கள் என்று கொச்சைப்படுத்த தெரிந்த அரசுக்கு அவர்களை மரியாதையுடைய வாழ்வை வாழ வழிவகை செய்யத் தெரியவில்லை என்பது யாருக்கும் புலப்படவில்லையா? மக்களாட்சியில் வாக்குகள் விற்பனையாகின்றன என்று பேசுகின்றோமே வாக்குகளை சந்தைப்படுத்தியது மக்களா கட்சிகளா என்று கேட்டால் கட்சிகள்தான் என்பது அனைவருக்கும் தெரிந்தும் மக்களின்மேல் குற்றத்தை சுமத்தி மக்களாட்சியைக் கொச்சைப்படுத்தியது நம் அரசியல்தான். இன்று மக்களாட்சிக்கு ஆபத்து என்று பேசுகின்றோம். நாடு சுதந்திரம் வந்தவுடன் இடதுசாரிகள் கூறினார்கள், இது சாதாரண மனிதர்களுக்கான சுதந்திரம் கிடையாது, என்றுதான் வாதிட்டனர். அது உண்மை என்பது தற்போது புரிகிறதா? இவ்வளவு மக்கள் விரோத செயல்கள் நடைபெறுவதைப் பார்த்து ஒரு நடுத்தர வர்க்கம் எந்தக் கேள்வியும் இன்றி அமைதியாக நுகர்வில் தோய்ந்து ஆளும் வர்க்கம் கூறுவதைக் கேட்டு நமக்கேன் வம்பு என்று வாழ்கிறது. உலகமயப் பொருளாதாரம் நடுத்தர வர்க்கத்தை உபரி பார்க்க வைத்து விட்டது. சமூகச் சிந்தனையற்றதாக நடுத்தர வர்க்கம் மாற்றப்பட்டு விட்டது.

நாடு சுதந்திரம் அடைந்தவுடன் மகாத்மா காந்தி மக்களின் சுயமரியாதையை நிலைநிறுத்துங்கள் எனக் கேட்டார். அடிப்படை மாற்றத்திற்கு பணி செய்யுங்கள் என்றார். சுயராஜ்யம் என்பதற்கு அரசு மக்கள் விரோதப் போக்கைக் கொண்டு செயல்படும்போது அதை எதிர்த்துப் போராடுவது தான் சுயராஜ்யம் என்று விளக்கிப் போராட வேண்டும் என்றார். கடந்த 30 ஆண்டு காலத்தில் நாம் புதிய பொருளாதாரக் கொள்கையில் தோய்ந்து, வளர்ச்சி, மேம்பாடு, பொருளாதாரம் பற்றி பேசுகின்றோம், வறுமையைப் பற்றிப் பேசுவதை நிறுத்தி விட்டோம். அது மட்டுமல்ல எந்தவித அரசியல் போராட்டங்களும் நடைபெறா வண்ணம் அரசியல் கட்சிகளை கார்ப்பரேட் அரசியல் நடத்த கற்றுக் கொடுத்து மக்கள் பிரச்சினைகளுக்கு மக்களே போராட வேண்டிய சூழலுக்குத் தள்ளி, அவர்கள் களைத்து தோற்றுப்போய் அமைதியாகி விட்டனர்.

அரசியல் கட்சிகள் தேர்தலுக்குத் தேர்தல் வாக்குகளை விலைகொடுத்து வாங்குவதும், மக்களுக்கு இனாம்களை அறிவித்து அதை ஓசி என்று அவர்களை அவமானப்படுத்துவதையும் வழக்கமாக்கி சந்தைக்காக செயல்படும் அரசாங்கமாக மாற்றி வைத்துக் கொண்டோம். சூதாட்டத்தில் அரசுக்கு வருமானம் வந்தால் அது விளையாட்டு என்று வகைப்படுத்தி அனுமதிக்கப்படும். மக்கள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகிறது. மதுவால் அரசுக்கு பெரும் வருமானம் வருகிறது, மது குடிப்பது தவறுதான், மக்களாக உணர்ந்து கொள்ள வேண்டும். புகைப்பது கொடிய பழக்கம்தான் அதனால் வருமானம் வருகிறது. எனவே அந்த பொட்டலத்தில் அச்சடித்து விட்டோம், அதைப்பார்த்து மக்கள் அதை உபயோகப்படுத்தாமல் இருந்து கொள்ள வேண்டும். சந்தை என்ன கூறுகிறதோ அதைக்கேட்டு அரசு நடந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் அரசியல் கட்சிகளுக்கு சந்தைதானே நிதி தருகிறது. பெரு முதலாளிகள் கோடிகளில் மக்கள் சேமிப்பை வங்கிகள் மூலம் எடுத்து முதலீடு செய்து தொழிலில் லாபம் ஈட்டும் பொழுது லாபத்தில் பெரும்பகுதியை தனக்கு ஒதுக்குகின்றார்கள். நஷ்டம் வந்தால் கடனை ரத்து செய்து வாங்கிக் கொள்கின்றனர். இல்லையேல் வங்கியை திவாலாக்கிவிட்டு அவர்கள் வெளிநாடு சென்று விடுகின்றனர் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கு.

கிராமத்தில் விவசாயத்திற்கு வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அவனே தற்கொலை செய்து கொள்ளுகின்றான். லட்சக் கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்யும்போது அந்த விவசாயிகளுக்கு பூச்சி மருந்தும், ரசாயன உரமும் விற்ற கம்பெனிகள் பல மடங்கு லாபத்தை பெருக்கிக் கொண்டன. எவ்வளவு பொறுப்புடன் இந்தக் கம்பெனிகள் நடந்து கொண்டுள்ளன என்பது இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ள முடியும்.

மக்களாட்சி நசுக்கப்படுகிறது என்று பேசும் நாம் யார் மக்களாட்சி நசுக்கப்படுகிறது என்று பேச வேண்டும். தேர்தல் நடத்துவதையே மக்களாட்சியாக்கி இதுவரை அரசியல் நடத்தினோம். மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகளான சமத்துவம், சகோதரத்துவம், நியதி, நேர்மை, நியாயம், நீதி, கருத்துச் சுதந்திரம், எதிர்கருத்துக்கு மதிப்பளித்தல், கடையனின் கோரிக்கைக்கு செவிசாய்த்தல், அனைத்தும் நம் மக்களாட்சியில் இருக்கின்றனவா? அப்படிப்பட்ட மக்களாட்சியை மக்களிடம் கொண்டு சென்றோமா? அரசியல் சாசனத்தின் மூலம் அரசியல் சமத்துவம் கிடைத்து, அடுத்த நிலையில் 75 ஆண்டுகள் ஆகியும் சமூக சமத்துவம் கிடைத்ததா, பொருளாதார, சமத்துவம் கிடைத்ததா? இந்த இரண்டும் இல்லாத பொருளாதாரச் சமத்துவத்தால் யார் பயனடைந்தார்கள். இவை ஏன் நம் அரசியலில் விவாதிக்கப்படவில்லை. இன்று நமக்குத் தேவை விரிவான விவாதம். இவைகள்தான் மக்கள் மேடைகளில் சாதாரண மக்களிடம் விவாதிக்க வேண்டும். இதைச் செய்யத்தான் நமக்கு இன்று அரசியல் இயக்கங்கள் தேவை. தேர்தல் ஜனநாயகம் நம்மை சிதிலமடைய வைத்துவிட்டது.

இன்று நாம் ஒரு பெரு விவாதத்திற்குத் தயாராக வேண்டும். அந்த விவாதங்கள் சுயநலம் பேணும் நடுத்தர மக்களிடம் செய்ய வேண்டியது அல்ல. சாதாரண மக்களிடம் இன்று இவைகள் அனைத்தும் எடுத்துச்சென்று விவாதிக்கப்பட வேண்டும். இதை சென்னையிலிருந்து அறிக்கைவிட்டு செய்ய இயலாது. கிராமம் கிராமமாகச் சென்று மக்களுடன் அமர்ந்து அவர்களுடன் விவாதிக்க வேண்டும். இதற்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உருவாக வேண்டும். அதுதான் இன்று தேவையாக இருக்கிறது.

- க.பழனித்துரை, காந்தி கிராமிய பல்கலைக்கழக ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் ஆராய்ச்சி இருக்கைத் தலைவர் (ஓய்வு)

Pin It