ambai 600‘விளக்கு’ விருது, கனடாவின் ‘இயல்’ விருது பெற்ற அம்பைக்கு சாகித்திய அகாதெமி 2021ஆம் ஆண்டுக்கான தமிழ்மொழிக்குரிய விருதினை வழங்குகிறது. தமிழில் இவ்விருதினைப் பெறும் நான்காவது பெண் எழுத்தாளர் இவர். ஒரு நல்ல படைப்பாளி என்ற முறையில் அம்பையைப் பார்த்தாலும் ஒரு நல்ல படைப்பு என்ற முறையில் ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’யைப் பார்த்தாலும் சாகித்திய அகாதெமி விருது வரவேற்கக் கூடியதாக இருக்கின்றது.

அம்பை(1944) கோவையில் பிறந்து, சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை முதல் ஜே.என்.யூ.வில் முனைவர்பட்டம் வரை பெற்ற ஒரு வரலாற்றுத்துறைப் பேராசிரியர். சி.எஸ். லக்ஷ்மி எனும் இயற்பெயர் கொண்ட இவர் பல ஆண்டுகளாகப் பெண் முன்னேற்றத்திற்கான பல்வேறு செயல்பாடுகளை நிகழ்த்தி வருகின்றார். ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இவரது பல நூல்கள் வெளிவந்துள்ளன. 1976இல் வெளிவந்த இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘சிறகுகள் முறியும்’ நூல் தொடங்கி, வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, காட்டில் ஒரு மான் எனத் தொடர்ந்து, விருதுபெற்றுள்ள இந்த ஏழாவது சிறுகதைத் தொகுப்பு வரையிலுள்ள பெரும்பாலான கதைகள் பெண் இருப்புக்கான அடங்காக் குரலை, அதீத வலியை அமைதியுடன் பகிர்பவை. ஆனால் முள்ளென நறுக்குத் தைத்தாற்போல் இருப்பவை.

குறிப்பான வேறுபாடென்றால், ஊசியேற்றம் வலிப்பதில்லை. மருந்து ஊடுருவி வலியைப் பரவச்செய்யும் கதைகள். போராளி இரோம் ஷர்மிளாவின் ‘Fragrance of Peace’ எனும் நூலை ‘அமைதியின் நறுமணம்’ என்றாக்கி மொழிபெயர்ப்புத் தளத்திலும் இயங்கிவரும் அம்பை, மொழி வேறுபாடுகளைக் கடந்தும் பெண் வாழ்வியலில் பல்வகைப்பட்ட அழுத்தங்கள் பொதுமையாகவிருப்பதைக் கடத்தும் புனைவாக்கத்தில் பொலிவுறுகிறார். 200 பக்க அளவுடைய இந்நூலும் இதனை ஆழமாக வழிமொழிகின்றது. அதேநேரம் பெண்மை கடந்து அக்கதைகளுக்குள் பரந்துபட்ட சமூக அசைவியக்கங்களையும் காட்சிப்படுத்தக் கூடியவர். தமிழக மனநிலைகளுக்கு அவ்வளவு எளிதில் சிக்காத கதைகள் இந்நூலில் உள்ளன.

முதல் கதையான ‘தொண்டைப் புடைத்த காகம் ஒன்று’ தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தையின் இயல்பு தவறிய வாழ்வியலைக் காட்டுகிறது. தொண்டைப் புடைத்த காகம் இரையை விழுங்குவதற்குக் கொள்ளும் கடினம் உயிர்வாழ்தலுக்கான துயர வெளிப்பாடு. காகத்தின் அக்காட்சியையும் அப்பாவின் தொண்டை நோயினையும் ஒருசேரப் பார்க்கப்பட்டுள்ள பார்வையே கதைவயம் ஈர்க்கிறது. ஓர் ஆளுமையாய் இருந்து நிழலாடியவர் அடங்கிக் கிடக்கிற தன்மையென்பது மரணத்தினும் வலிதரக்கூடியது. அவர் மறைவுக்குப் பின் அவருடைய பொருட்களை அகற்றிய போது அவர் எழுதி வைத்த குறிப்பு ஒன்று கிடைக்கிறது: ‘பாதை நீளமென்று தெரிகிறது. வழி தெரியவில்லை. இருட்டு. பாதைகளை மறைக்கும் அடர் காடு. போகுமிடம் மறந்துவிட்டது. எங்கோ தூரத்தில் அது. அதன் பெயர் தெரிந்தால் ஆசுவாசம் பிறக்கும். ஆனால் அதற்குப் பெயர் உண்டா? அப்படிப் பெயர் தெரிந்துவிட்டால் வழி புரிந்துவிடுமா?’ என்பது ஜீவிக்கத் துடிக்கும் எல்லாருக்குமானது.

‘சாம்பல் மேல் எழும் நகரம்’ கதையின் தலைப்பிலேயே அதனாழத்தை உணரமுடியும். இன்றளவும் நவீனப்படுத்துதல், உடைமையாக்கல் என்பவற்றின் பேரில் எத்தனைக் குடியிருப்புகள் கொளுத்தப்படுவது உள்ளிட்ட அகற்றப்படுதல்களால் வேர் பிடுங்கப்படுகின்றன என்பதைக் கண்ணுற முடிகிறது. அதிலும் இயங்க முடியாத முதியவர்களைக் கொண்டு வீடு அடைகாக்கப்படும் கூடு போன்று பெரும்பாடு; பெருங்கவலை. ஊர்மிளாவும் மாமியாரை வைத்துக்கொண்டு மிகச் சிரத்தை எடுக்கிறார். ஊர்மிளா மாமியாருக்கு முன்பே இறந்தாளா இல்லையா எனும் ஐயப்பாடு இக்கதையில் எழுகிறது. வீட்டு வேலை செய்யக்கூடிய பெண்களுக்கான சங்கம் இருப்பதை இக்கதை காட்டுகிறது.

‘எவ்வளவுதான் தணிக்கை செய்து அவள் வாழ்க்கைக் குறிப்பை எழுதினாலும் அதில் பூமியின் ஏகப்பட்ட அடிமட்ட பூகம்பக் கோடுகள். அவற்றைத் தவிர்ப்பது கடினம்’ என்கிறது ‘பயணம் 21’ கதை. இக்கதையில் இன்னொரு குறிப்பிடத்தகுந்த ஒன்று புத்தகங் கிடங்கு குறித்த எண்ணம். என்னென்ன புத்தகங்கள் புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கும் எனும் பட்டியல் சமூகத்தின் அறிவுப்புலத்தின் மீதான அக்கறையும் அவரது அறிவுபலத்தையும் காட்டும் பகுதி அது. கிடங்கினை, ‘வதைபடும் மிருகம் ஒன்றின் ஈனக் குரல்போல ஓசையிட்டு, துருப்பிடித்தப் பூட்டு இறுகப் பூட்டிக்கொண்டது’ என்று கதை முடிகிறது.

இரண்டு மூன்று கதைகளில் இந்திராகாந்தி ஆட்சியில் அவசரநிலைப் பிரகடனத்தின் வரிப்பதிவு இடம்பெறுகிறது. அதில் ஒன்றான ‘வீழ்தல்’ கதையில் 12ஆவது மாடியிலிருந்து தற்கொலை செய்துகொள்ள வீழ்ந்துவிட முயலுதலிலிருந்து வாழ்க்கை எங்கெல்லாம் மனிதர்களை வீழ்த்துகிறது என்பது உணர்த்தப்படுகிறது. கதையை வாசித்த பிறகு மனதுக்குள் சமூகத்தின் வீழ்ச்சி குடைகிறது. உடம்பில் எது. ஒன்றும் முறியலாம் ஆனால் முதுகெலும்பு முக்கியம். அதன் பலம் பெண்களைப் பொருத்தவரையில் காலாவதியாகாத ஒன்று என்று மாளாத உழைப்பைப் பொதுமையாய்க் குறிப்பிட்டுச் சக்கர நாற்காலி வாழ்க்கை தற்கொலையின்பால் சரியத் தொடங்குவதைக் காட்டுகின்றது.

புராணம், இசை, அறிவுப்புலம் சார் குறிப்புகளுடன் மெருகேறியுள்ள கதைகளின் பலமான பொருண்மைகளுள் நூல் தலைப்பிலான கதையானது செவித்திறன் அற்றவர்களின் வாழ்வியல் புழக்கத்தை, அதற்குரிய புழுக்கத்தை ஆழமாகக் காட்டுகின்றது. கதைக்குள் சிவப்புக் கழுத்துடன் தென்படும் பறவையின் பாத்திரத்தைத் தந்து ‘அந்தப் பறவையின் கூவல் தொண்டையில் அடைபட்டுக் கிடக்கிறது’ என்றுணர்த்தித் தேன்மொழியின் செவிக்குச் சுருதி சேர்க்கிறார். வாய்ப்பேச்சு, சைகைமொழி என்ற விடயங்களை அசைபோட்டு அலைபேசிக்கு முன்னதான தொலைபேசியைக் கண்டறிந்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் வாழ்வியல்வழி முன்வைத்த ‘வாய்ப்பேச்சு’க் கல்வியை இக்கதை அழகுற மேன்மையாக்குகிறது. அதாவது, செவிக்கருவிகளின் மீயலி, அறுவை சிகிச்சையின் வலி என்பவற்றைக் கடக்கும் உதட்டசைவைப் பார்த்துப் பேசிடும் கருத்தைக் காட்டி ‘மொழி ஒரு தொடர்பு. ஒலி இல்லாமலும் அது நேரலாம்’ என்று நெக்குருகி நெகிழ்கிறது.

பேரிளம்பெண்கள் அல்லது ஆண்கள் பற்றுதலில்லாத, தனிமைப்படுத்தப்பட்ட வாழ்வில் புதியதொரு துணையைக் கண்டடைதல் எனும் கருத்தினைக்கொண்டு ‘வில் முறியாத சுயம்வரங்கள்’ கதை நடக்கிறது. இரு உயிர்களின் ஒற்றுமையை, கல்யாண வாழ்க்கையைக் கடந்து மீண்டும் வேறொரு புரிதலான காதல்கொள்ளலைப் பேசுகிறது. அருணன் - சாந்தி - நந்து எனும் முத்தரப்பில், அருணன் மறைவுக்குப் பின் துணை தேவை என்பதைத் தாய்க்கு அறிவுறுத்தும் ஸ்கைப் வாரிசுகள், தாய் ஏற்கெனவே அதற்குத் தயாராகி இருக்கிறாள் என்பதை ஏற்பதற்குத் தயங்குகிறார்கள். அவர்களது கைப்பாவையாய் ஆகிடாமல் கைப்பிடியிலிருந்து விலகிச் சுயத்தைத் தக்கவைத்துக்கொள்கிறார் கல்லூரிப் பேராசிரியை சாந்தி.

‘அருணை அவளால் மறக்க முடியாது. நீக்க முடியாது. அவள் ஏன் ஒன்றை வைக்க இன்னொன்றை நீக்க வேண்டும் என்று எல்லாவற்றையும் ஸ்தூல வடிவிலேயே பார்க்கிறாள்? ஒரு நதி கடலில் கலக்கும்போது வேறு எந்த நதியைத் தள்ளிவிடுகிறது? கடலில் கலந்த ஒன்றை எப்படி நீக்குவது? பிரவாகத்தில் உள்ள நீரின் கலவையை எப்படி அடையாளப்படுத்த முடியும்?’ எனும் புதுஉறவுக்கான அம்பையின் வாதம் பேரலை. ஆண் பெண் உறவின் பொருளுடைய புரிதல்களை இக்கதை குமிழியிடுகிறது. அதேநேரம், ‘மீனைத் திருப்பிப் போடணும்’ என்றும் கதை புரண்டு படுக்கிறது (ஆனால் நந்து இளம்பருவத்துக் காதலுக்குப் பின் மணமாகாமலேயே இருந்து கடைசியிலும் தேடிவருகிறார்). ‘காலமாகி நின்றன கடக்கும் வழியில்லாமல்’ எனும் அம்பையின் வரியில் வாசக மனதும் இக்கதைக்குள்ளே சுழலுகிறது.

ஏறத்தாழ இதே கருத்துநிலையைக் கொண்ட கம்யூட்டர் காலக் கற்பனையோடு உறவாடும் கதைதான் ‘சிங்கத்தின் வால்’. பொம்மையை வாங்கித் தருவதிலேயே ஆண், பெண் வேறுபடுத்தல் எனக் குழந்தையிலேயே பாகுபாடு தொடங்கிவிடுகிறது. ‘ஸைபோர்க்’ (ஒட்டாகம்) எனும் மீமனிதனுடன் மதுரா என்பவள் உரையாடும், உறவாடும் வாழ்விலும், சாதாரண ஆணாக இல்லாத மீமனிதனாக இருந்தாலும் ஆண் ஆண்தான் அவனும் விதிவிலக்கில்லை என்று காட்டப்படுகிறது. மரணத்தின் விசாரணை, உண்மை, பொய், நாத்திக நிலைப்பாடு, கோட்பாடு, சமன்பாடு எனப் பல தளங்களில் விரிகிறது கதை. ‘மரணத்தை எதிர்கொள்ளத்தான் மனிதர்கள் மதத்தை உருவாக்கினார்கள்’ எனப்படுகிறது. பெண் மனவெளிப்பாட்டின் அதீதக் குரலாக ஒலிக்கிறது இக்கதை.

பெண் வாழ்க்கையை ஒருநாளாவது, அதுவும் பெண்ணாக ஆண் வாழ்ந்திருந்தால் வலிதெரியும் என்பதை மாயாஜாலக் கற்பனையுடன் பெருக்கெடுக்கிறது ‘பொய்கை’ கதை. வனநடைப் பயணத்தில் அதாவது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு நாள்கூட வாழ்ந்திரவியலாத ஆணைப் பார்த்துக் ‘குமிழியிட்டுச் சிரிக்கிறது’ அந்தப் பொய்கை. ஐயோ, அப்படியான ஒரு நாள் வாழ்க்கை எவ்வளவு பயங்கரமானது என்று புரியவைக்கிறது. 1984இல் அகால் தக்த் இடிக்கப்பட்டது, சீக்கியர் படுகொலை, பிரிவினை என எல்லாத் தரப்பினரிடையும் எப்படி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை இறுக்கமாக்குகிறது ‘1984’ கதை.

பயண இலக்கியம் எழுதுவதைப் போலப் பயண அனுபவக் காட்சிகளைப் பணயம் வைத்து எழுதும் முறைமை அம்பையிடம் வரவேற்கத்தக்க புதுமை. ஆனால் அது அவரது ‘காட்டில் ஒரு மான்’(2000) நூலிலேயே பயணம் 1ஐத் தொடங்கிவிடுகிறது. இத்தொகுப்பில் மூன்று கதைகள் பயணம் 21, பயணம் 22, பயணம் 23 என்பவை இடம்பெற்றுள்ளன. இவற்றில் பின்னிரு கதைகள் வாசகருக்கு வேறுபட்ட மனமருட்கையை ஏற்படுத்துவன. ஒன்று, புலம்பெயர் வாழ்வியல் வரலாறு இதுவரை அறிந்திராத கேரளா, மங்களூர் போன்ற இடங்களிலிருந்து நிறைய பெண்கள் கன்யாஸ்திரீகளாக ஐரோப்பா சென்று வாழும் இடர்பாட்டை மையப்படுத்துகிறது. அப்பெண்களில் பலரும் ஏழைப் பெண்களாவர். புத்தகச் சந்தையை நாடி வெளியூர் விரையும் மரியாவுக்கு இச்செய்திகள் காணவருகிறது. அவள்

‘ஒரு பெண்ணும் தையல் வேலை கற்க முன்வரவில்லையாம். கணினிகள் கேட்டார்களாம்’ எனும் ஆதங்கத்தையும் ஆணியடித்து மாட்டுகிறது.

 இரண்டாவது, டோக்கியோவின் அஸாஹி பியர் ஹால் கட்டடத்தின் மேல்நின்ற ஒரு நவீன தங்கநிறச் சிற்பம் பற்றியது. ஆணாதிக்கச் சமூகத்தில் ஆண்களால் உருவாக்கப்படும் பலவற்றில் அந்த ஆணியச் சிந்தனை(காம இறுக்கங்கள்) வெளிப்படுவதாகவே உள்ளது. கடவுள் மரபிலிருந்து கலை வடிவம் வரை பார்ப்பதெல்லாம் ஆண்குறி உள்ளிட்ட ஆண் பெண் உடலமைப்புகளாகவே அச்சுறுத்துகிறது; அயர்ச்சியை, அழற்சியைத் தருகிறது. உயிர்களின் அடிப்படை உணர்வு என்றாலும் அது உருட்டப்படும் கட்டைகளால் பாம்பு வாய்க்குள் சிக்கிய பரமபதமாகிவிடுகிறது வாழ்க்கை. பாரதியின் ‘அக்கினிக்குஞ்சு’ அடிகளையும் அப்படிப் பார்க்கத் தோன்றிடுவதாகப் பதிவாகிறது. பியர் ஹால் கட்டடம் பியர் குடிக்கும் கண்ணாடிக் குவளை வடிவமைப்பிலான அக்கட்டடத்தின்மேல் உள்ள தங்கநிறச் சிற்பம் ஆண்குறி வடிவத்தைக் காட்டுவதாகப் படுகிறது. அதுகுறித்த விவாதங்கள் நீளுகையில் அங்கிருந்த ஒருவர் ‘தங்கப் பீ’ என்றுதான் நாங்கள் அதைச் சொல்லுவோம் என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார். வாழ்க்கையை வாழ்ந்து முடித்த முதுமை அனுபவம் அதனை அப்படிப் பார்க்கிறது என்பதைக் கதை முடிவு காட்டுகின்றது.

புதிய புதிய பெண் வெளிகளைத் திறந்து வைக்கிறார் பயணத்தினூடாக. சன்னலை விடாமல் பேசும்(குறைந்தது ஏழு கதைகளில் பதிவு செய்யும்) அம்பை, பயணங்களில் (விமானம், இரயில்,பேருந்து) பலரும் விரும்பும் சன்னலை எழுதாமல்போனது ஏனோ புருவ வியப்பு வினாவாக உள்ளது. இவ்வாறான கதைகளால் அகன்ற சிறகு விரிப்புடன் பறந்து பரந்துவிரிந்த உலகத்தை வலம்வருகிறது ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’.

பதின்மூன்று கதைகளுள் முதல் தளத்தில் வைத்துப் பார்க்கவேண்டிய கதைகளாகச் சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை, வில் முறியாத சுயம்வரங்கள், சாம்பல் மேல் எழும் நகரம், பயணம் 22, சிங்கத்தின் வால் ஆகிய ஐந்தினையும் பார்க்க முடியும். அடுத்த நிலையில் இரண்டாம் தளத்தில் 1984, தொண்டைப் புடைத்த காகம் ஒன்று, பொய்கை, வீழ்தல் ஆகிய கதைகளும் அதற்கடுத்த நிலையில் பயணம் 23, குதிரைக்காரி எனப் பிற கதைகளும் கொள்ள முடிகிறது. அதாவது இக்கதைகள் கொள்ளும் தீவிரத்தின் அடுக்குநிலையாக இம்முறைமை இருக்கிறது.

அம்பையின் புனைவு உயர்திணையாயினும் அஃறிணையாயினும் அது உயிரே எனும் நேயத்தினை நிறுத்துகிறது. வாழும் வாழ்க்கையை அழுத்தத்துடன் அலுத்துக்கொள்கிறது. ஆனால் மரணம் எளிமையாக நடந்துவிடுகிறது. யாருடைய ஆயுளிலும் அவர் குறை வைப்பதில்லை. எழுபத்தைந்து, எண்பத்தைந்து என்றெல்லாம் மனிதர்கள் இயங்குகிறார்கள். அத்துடன் இயங்க முடியாதவர்களுடைய உலகத்துக்குச் சன்னலைத் திறந்து வைக்கிறார். அம்பையின் எழுத்து அடைபட்ட(அடைக்கப்பட்ட) உலகம் சுதந்திர வெளியைத் தேடுகிறது. அகவை முதிர்ந்த பெண்களின் பற்றுதலற்றுப் போன அலைவு நிலையினையும் கதைப்படுத்துகிறது.

சன்னல்தான் எல்லாமுமாய் இருக்கிறது. அது அவரது உலகம். அந்த உலகத்தின் வழியேதான் இந்த உலகத்தை, அண்டசராசரத்தை அகன்ற பார்வையால் பார்க்கிறார். இந்தச் சன்னல் அகலத்தைத்தான் அகிலத்தைக் காணப் பெண்ணுலகுக்குச் சமூகம் வரையறுத்துக் கொடுத்திருக்கிறது. இங்குதான் பெண்கள் போன்று குரலடக்கப்பட்டவர்களால் மூச்சுவிட முடிகிறது; தங்கள் முகம் பார்த்துக் கொள்ள முடிகிறது. சன்னலில்தான் தோசைக் காகம், தொட்டி மல்லிகைச் செடி, ஆரஞ்சுஇலை மரம் உள்ளிட்ட அஃறிணை வாசிகளோடு உறவாட முடிகிறது, செல்போன் கூடச் சன்னலில்தான் அமர்கிறது, வீட்டு உதவியாள் கம்லியும் சன்னல்வழி பார்க்கிறாள், சக்கர நாற்காலி காமும்மா அங்குதான் நிற்கிறாள் எனச் சன்னல் அவதாரமெடுத்து நிற்பதைக் கவனிக்க முடிகிறது. அம்பையின் படைப்புகளைப் படிப்பவர்களுக்கு அதற்குப் பின் ஜன்னல் என்று உச்சரிக்கத்தோன்றாது; சன்னல் என்றே சன்னமாக அனுக்கமாகும்.

தமிழக மனவெளிக்கு, பண்பாட்டு வெளிக்குப் பழகிடாத கதைகள் புழங்குகின்றன. கதைகள் தில்லி, மும்பை என வடக்கத்திய வாழ்க்கை முறையில் நிகழ்கின்றன. பெரும்பாலும் பெண்களே மையக் கதைமாந்தர்களாக இருக்கின்றார்கள். கல்லூரியில் பணியாற்றுகின்ற, கல்லூரியோடு தொடர்புடைய பெண் மாந்தர்கள் அதிகம் பங்குபெறுகின்றனர். பிள்ளைகள் வெளிநாட்டில் பணிபுரியும் பிள்ளைகளாகவே அதிகம் உள்ளனர். யாரும் இழிவுபடுத்தப்படுவதில்லை. ஆண் பெண் புரிதல் நிறைந்த கதைகளாக உள்ளன. அவர்கள் சண்டையிடுவதில்லை. துடைத்துப் போட்டுவிட்டுப்போகும் நிலைக்கும் உட்கார்ந்து ஒப்பாரி வைத்துக் கதறும் நிலைக்கும் இடைப்பட்டதே அம்பையின் கதைக்களன்கள். அவை உறுதுயர் உயிர்களுக்கு உரியது.

நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய தவளைக் கதைகள். இது பெரும்பாலும் குடிபெயர்ந்தோருக்கான வாழ்வியல். புலம்பெயர்வுகளும் நிறைய குடிபெயர்வுகளும் நடக்கின்றன. மொழி, இனம், பண்பாடு என எல்லாவற்றையும் ஒரு கோழி பறப்பதுபோல் பறந்து தாண்டி(அமைதியாக நடந்து டக்கெனப் பறந்து) மனித வலிகளைக் கடத்துகிறது. அஃறிணைகளைக் குறிப்பிடுகையில் அதிலும் ஒரு குறியீட்டுப் பொருள் இருக்கிறது. மென்மையான வாழ்வுகளை நகர்த்துகின்றன. அழுக்குப்படாத உலகத்தின் கதைகளாக உள்ளன. ஆனால் உழைப்பவர்கள் உள்ளனர். இசை மிகுந்து ஒலிக்கிறது. அங்கங்கே, ஆளாளுக்குப் பாட்டுகளில் நினைவுறுகின்றனர். இசை, இலக்கியம், கவிதை, புராணம் முதலியவற்றின் அறிவும் அம்பையை வாசிக்கத் துணைநிற்கும். புன்னகை நெகிழ்கிறது, ரசிப்பு இருக்கிறது, கடலில் எழும் சூரியனை ஆரஞ்சுச் சிரிப்பு எனப் பார்த்து மகிழ முடிகிறது. கொக்கு கொத்தியெடுப்பது போல துயரத்தின் நாடியைக் கொத்தி எடுத்துக் கதை வெளிக்கு வைக்கிறார்.

எழுத்து அதாவது மொழி நடை என்பது நத்தை நகர்வது போன்றும் இல்லை, முயல் ஓடுவது போன்றும் இல்லை. அது ஆமையின் ஓட்டத்தைப் போன்றது. கதைத்தன்மைக்கேற்ப மொழியும் மெதுவாக, மிருதுவாக இருக்கிறது. தத்துவம், இயற்பியல், வாழ்வியல் வரலாற்று ஆவணம் என வரும்போது அதற்கேற்ப மொழிநடையிலே பேசப்படுகிறது. சில இடங்களில் கதைத் தன்மையைக் கடந்து உரைநடையாகிறது. இன்னொரு பண்பாட்டுப் புலத்திற்குரியது என்பதை நன்கு உணர்ந்தறியும்படியான இக்கதைகள் இந்தியக் கதைகள், தமிழகக் கதைகள் என்பவற்றிற்குரிய வேறுபாட்டை நன்கு வாசகருக்குக் கற்றுத்தருகிறது. அம்பையிடம் சில சொற்பயன்பாடுகள் கவனிக்கத்தக்கவை. அவை நுழைகதவு, வாயில்மணி, உலக்கைக்குரல், பெருஞ்சூறை உள்ளிட்டவை. ஒரு கதையை எப்படி அமைக்கவேண்டும் என்பதில் தெளிவான முற்சிந்தனை, திட்டமிடல் இருக்கிறது.

மும்பையில் 1988இல் பெண்கள் ஆவணக் காப்பகமான SPARROW (Sound Picture Archives for Research on Women) எனும் அமைப்பை நிறுவி இன்றுவரை இயக்கி வருகின்ற அம்பை, ‘இருள் ஆள்கிறது; தூங்கு என் தேவதையே..’ எனும் கவிதையைப் படித்திருந்த கவிஞராக வேண்டிய அம்பை, பிழைப்பு நடத்தப் போராடும் ‘குதிரைக்காரி’ முதல் மானுட சமூகத்தின் குறிப்பிடத்தகுந்த, மனக்கண்முன் வந்திராத வலிகளைத் தாயுள்ளத்தோடு தடவிப் பார்க்கும் அம்பை எனும் அம்மையின் கதைகளைக் கொண்ட இந்நூல் காலச்சுவடு பதிப்பகத்தால் 2019இல் வெளியிடப்பட்டுள்ளது.

சாகித்திய அகாதெமி விருது என்பது படைப்புக்கா? படைப்பாளிக்கா? என்றொரு வினாவை வீசினாலும் இரு கருத்துக்கும் அம்பை தகுதியாக நிற்கிறார். அதனால்தான் இம்முறை விருது அறிவிப்பிற்குப் பிறகு எவ்வித எதிர்வினைகளும் எழவில்லை. இவ்விருது எழுத்துலக இறக்கை விரித்ததில் அம்பைக்கு ஒரு சன்னல் இளைப்பாறுதலாக இருக்கும்; நமக்கும்தான்.