வாழ்க்கை துரத்துகிறது.

வேர் வரைக்கும் பாயும் பசியின் சுவடுகள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் நாராயணன் மாதிரி மனிதர்கள் அலைந்து கொண்டே இருப்பார்கள். 60 களில் அவன் கப்பலில் வேறு வழியின்றி பஞ்சம் பிழைக்க துபாய் செல்கிறான்.

pathemari20 வருடங்களில் அவன் ஆறேழு முறை மட்டுமே வீட்டுக்கு வந்திருக்கிறான். வரும் ஒவ்வொரு முறையும் வீட்டில் உள்ளவர்களுக்கு பார்த்து பார்த்து பொருள்களை வாங்கி வருகிறான். தேவைகளை பூர்த்தி செய்கிறான். வழக்கம் போல... 'அண்ணன் ஏற்கனவே சாப்ட்ருக்கும்' என்பது போன்ற, 'அவன் அவனுக்கு வைத்துக் கொண்டிருப்பான்' என்று சொல்லி அவனுக்கு எதுவுமே இல்லாமல் எடுத்துக் கொள்ளும் குடும்பம் அவனை நுணுக்கமாய் ஒருபோதும் கவனித்ததில்லை. இறுதிக் காட்சியில் ஒரு பேட்டியில் அவன் சொல்லும் இந்த வாழ்வே குடும்பத்துக்கு தான் என்பது போன்ற வசனங்கள்.... உயிர் கரைப்பவை. உள்ளம் நடுங்குபவை. அப்போது தான் அவர்களுக்கு ஓரளவுக்கு புரிகிறது. எதையெல்லாம் செய்யாமல் விட்டோம் என்று அவர்களுள் கேள்வி எழுகிறது.

அவன் கண்கள் அலை பாய்ந்து கொண்டே இருக்கின்றன. ஊரின் ஒவ்வொரு இடத்தையும் பரிதவிக்கும் பரபரப்போடு அவன் காண்பது எல்லாம், தூரமே கிட்டத்தை உணர்த்தும் என்பதற்கான வாழ்வின் செயல்முறைகள். திரும்பி செல்லும் ஒவ்வொரு முறையும் அவன் தன்னையே விட்டு விட்டு தான் செல்கிறான்.

அவனையும் அவன் வீட்டையும் இணைப்பது அவன் கால் படும் கடல் அலைகள் மட்டும் தான். அங்கும் சரி. இங்கும் சரி.

இறுகி இறுகி குறுகி குறுகி வார்த்தைகளுற்று போன வாக்கியங்கள் தான் அவன் குரலாகி இருக்கிறது. அவன் முகம் கூட ஒரு பாறாங்கல்லைப் போல சுருங்கி விட்டிருக்கிறது. அவன் அதிகமாக பேசுவதில்லை. தன்னையே நையாண்டி செய்து கொள்ளவும் எதிர்த்து கோபப் பட ஒன்றுமில்லை என்றும் தானாகவே கற்று வைத்திருக்கிறான். வீட்டுக்கு வந்த போது எல்லாருக்கும் அது இது என்று கொடுத்து விட்டு மனைவிக்கு தன் அறையில் பரிசு கொடுக்கும் பாங்கில் தேக்கி வாய்த்த காதலும் காமமும் பீறிட்டு எழுவதை சலனமே இல்லாமல் காட்சிப் படுத்தி இருக்கும் பாங்கு, அது ஆழ்கடலின் அமைதியைக் கொண்டிருக்கிறது.

அண்ணன் பிள்ளை கல்யாணத்தில் கலந்து கொள்ள இயலாதபடி இரண்டு நாட்களுக்கு முன்னமே அவன் துபாய் போக வேண்டிய சூழலில்... மாப்பிள்ளை வீட்டாரிடம், "இதுவரை என் வீட்டில் எந்த விஷேசங்களிலும் நான் கலந்து கொண்டது இல்லை, ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடி திருமணத்தை வைத்துக் கொண்டால் நான் பார்த்து விட்டு சென்று விடுவேன்" என்று கெஞ்சுகையில் திங்களன்று பள்ளி போக அடம் பிடிக்கும் சிறு பிள்ளையின் மனமொழியை நாம் காண்போம்.

கல்யாண பிசியில் அவன் துபாயில் இருந்து அழைக்கும் தொலைபேசியைக் கூட மனைவி உட்பட அனைவரும் உதாசீனப்படுத்தும் காட்சியில் இத்தனையும் இவர்களுக்குத்தானா என்று வெறுப்பு தட்டுவது மானுட இயல்பு. ஆனாலும் சிறு புன்னகையோடு கடந்து போக நாராயணனால் முடிகிறது. ஒவ்வொரு முறையும் துபாய்க்கு கிளம்பும் முன்னிரவில் நாராயணன் குட்டி போட்ட பூனைக்குட்டியாகவே வீட்டுக்குள் அலைகிறான். அவனால் ஒரு பக்கமும் நிலைத்து நிற்க முடிவதில்லை. அம்மாவோடு அவன் படுத்துக்க கொண்டு பேசுகையில் இந்த வாழ்வு தரும் பெரும் நடுக்கத்தை நாம் உணர முடியும். அது வாழ்வாதாரத்தின் தேவைக்கு நிந்திக்கப்படும் மனித சுதந்திரத்தின் பறிப்பு நிலையின் உச்சம் என்றே நம்புகிறேன். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தூண் இப்படி மண்ணோடு மண்ணாக போய்க் கொண்டிருப்பதை நாராயணன் என்ற அந்த ஒற்றை மனிதன் மூலம் நாம் மீண்டும் மீண்டும் நம்மை நினைவூட்டிக் கொள்கிறோம்.

அம்மா இறந்த செய்தி வந்த போது மெல்ல நடந்து சென்று அந்த கடல் அலையை பார்த்துக் கொண்டே நிற்கிறான். அவ்வளவு தான் அவனால் செய்ய முடிகிறது. அவன் கால் பாடும் அலையில் ஒரு துளியாவது அவன் அம்மா வாசத்தை, தன் ஊரின் சுவாசத்தை அவன் மேல் பட்டு விட செய்யாதா என்ற ஏக்கம் நம்மை பீடித்துக் கொள்கிறது. குடும்பத்துக்காக வெளிநாடு செல்லும் மனிதர்கள் ஒவ்வொருவரின் கதைக்குள்ளும் ஒரு கடல் அலை ஓயாமல் தன்னை அலைக்கழித்துக் கொண்டேயிருக்கிறது.

"இனி நான் துபாய் போகவில்லை" என்று ஒரு கட்டத்தில் தன் மனைவியிடம் சொல்கிறான் நாராயணன். அதற்கு மனைவி, 'துபாய் வீட்டுக்காரிங்கற பேர் மட்டும் தான் மிச்சம்; அதையும் கெடுக்க போறீங்களா...?' என்று மீண்டும் அவனை துபாய்க்கு செல்லவே நிர்பந்திக்கிறாள். அவள் பழகி விட்டாள். கணவனற்று இருக்க தெரிந்து கொண்டாள். அவள் ஆடம்பரமாக வாழ்ந்து பழகி விட்டாள். அதை துறக்க அவளால் முடியவில்லை. துபாயில் இருந்து வரும் மனிதனிடம், 'என்ன வாங்கிட்டு வந்த!' என்று தான் சுற்றமும் உறவும் ஊரும் கேட்கிறது. அவனிடமிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளயும் பிடுங்கிக் கொண்டு எந்த வித சஞ்சலமும் இல்லாமல் எந்த வித அசூயையும் இல்லாமல் அவனை சிரித்துக் கொண்டே வழி அனுப்பி வைக்கும் மனிதர்களுக்கு ஒரு போதும் அவனின் தனிமை புரிவதேயிலை. அவனின் தவிப்பு தெரிவதேயில்லை. அவர்களுக்கு எப்போதும் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. அன்பை விட வாழ்வின் பரபரப்பு அவர்களுக்கு நெருக்கமாய் இருக்கிறது. காரில் ஏறும் போது கூட கையில் இருக்கும் வாட்சை கழற்றி ஒரு சிறுவனுக்கு கொடுத்துப் போகும் அவனை ஒரு கட்டத்துக்கு மேல் வழி அனுப்பக் கூட யாரும் வருவதில்லை. துபாய் செல்வது இயல்பாகி போகிறது.

"அப்பாதான் லைன்ல.. நான் தூங்கிட்டேன்னு சொல்லு" என்று அம்மாவிடம் கிசுகிக்கும் பையனுக்கு அப்பாவிடம் பேசக் கூட இந்தக் காலம், நேரமும் மனசும் தருவதில்லை என்று காண்கையில் தூக்கி வாரி போடுகிறது நமக்கு. துபாயில் காதில் ரிஸீவரையும் கண்ணில் பாசத்தையும் தேக்கி வைத்துக் கொண்டு நிற்கும் நாராயணன் நரை கூடி கிழப் பருவம் எடுத்து மாடாய் உழைத்து வீணாய் தன்னை அழித்துக் கொண்டானோ என்று அவனுக்கும் கூட தோன்றி இருக்கும். நமக்கு தோன்றுகிறது.

இந்த சமூகம் இந்த வீடு இந்த உறவு அவனிடம் இருந்து அவன் உயிரையும் ஒரு நாள் காலையில் பறித்துக் கொள்கிறது. சலனமற்று அவன் இறப்பு நிகழ்கிறது. தூங்கும் போதே தன்னை மீளா துயிலில் நிகழ்த்திக் கொள்கிறான். அந்த இரவு கூட காலையில் சீக்கிரம் வேலைக்கு செல்ல வேண்டும் என்று அலாரம் வைத்து விட்டு தான் படுக்கிறான். காலையில்... எல்லாம் ஓய்ந்து விட்டிருக்கிறது. அவன் உடலைக் கூட கட்டிக் கொண்டிருக்கும் புதிய வீட்டில் வைக்க வேண்டாம் என்று லாஜிக்காக பதில் சொல்கிறான் மகன்.

காதலும் காமமும் அன்பும் ஈரமும் எல்லாவற்றையும் தனக்குள்ளாகவே அடக்கிக் கொண்ட ஒரு நாராயணன் அமைதியாக தூங்குகிறான். எத்தனையோ நாராயணன்ங்கள் இன்னமும் இரவும் பகலும் என்று கிடைக்கிற வேலையெல்லாம் துபாயில் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு செய்யும் கைம்மாறு கால் படும் கடல் அலைக்கு தெரிந்திருக்கிறது. கடல் கடந்து சென்றவனின் உற்றாருக்கும் உறவுக்கும் ஊருக்கும் தெரிகிறதா என்ற கேள்வியோடு மிஞ்சுகிறது இந்த சினிமாவின் தாக்கம்.

இக்கதையின் நாராயணனோடு தொடர்ந்து, உடன் பயணிக்கும் நாராயணனின் நண்பன் சீனிவாசன் எல்லாவற்றுக்கும் சாட்சியாக நட்பு என்னும் சிலுவையை சுமந்து கொண்டே அலைகிறார்.

வாழ்வே சிலுவை போன்றது தான்... அதன் சுமை தாங்க இயலாதது...!

- கவிஜி

Pin It