கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் சார்பில் வெளிவந்திருக்கும் இரண்டு நூல்கள் 01. தமிழ்ச் செவ்விலக்கியங்கள் - அவை தோன்றிய சூழலும் சமஸ்கிருதத்தில் அவற்றின் சாயலும் (The Poems of Ancient Tamil their milieu and their Sanskrit counterparts) 02. தமிழ் - சமஸ்கிருதச் செவ்விலக்கிய உறவுகள் (The Relation between Tamil and Classical Sanskrit Language). இந்த இரு நூல்களும் பேராசிரியர் ஜார்ஜ். எல்.ஹார்ட் அவர்களால் எழுதப் பெற்றவையாகும். இவை தமிழர்களின் கவனத்தை உரிய முறையில் ஈர்க்க வேண்டும் என்ற அவசியத்தில் எழுதப்படுவதே இந்த மதிப்புக் கட்டுரை. தமிழ்ச் செவ்விலக்கியங்கள் நூல் குறித்த முதல் கட்டுரை முன்னரே சென்ற டிசம்பர் 2022 இதழில் வெளியாகியிருந்ததை நீங்கள் அறிவீர்கள். எனவே, இந்தக் கட்டுரை தமிழ்- சமஸ்கிருதச் செவ்விலக்கிய உறவுகள் நூல் குறித்து மட்டும் பேசுகிறது.

இந்த இரண்டாம் நூல் 70 பக்கங்கள் உடையது. கால்கோள், கருத்துரை, பொருளடைவு நீங்கலாக இரண்டு பிரதான கட்டுரைகளைக் கொண்டது. "தமிழ்- சமஸ்கிருத இலக்கியங்களுக்கான பொதுமூலம்" என்பது முதல் கட்டுரை. "பிற்காலத் தமிழும் பிற திராவிட மொழிகளும் சமஸ்கிருதமும்” என்பது இரண்டாம் கட்டுரை.

தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையே உள்ள உறவை அறிவது என்பது கலப்பு மணத் தம்பதியரின் உறவு முறையைப் பற்றி அறிந்து கொள்ளும் முயற்சியாகும். இரு வேறு மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கும் முயற்சி வேறு; இவற்றினூடே நூலிழையாய் மிளிரும் உலகப் பொதுமைக்குப் பொருந்தக்கூடிய எண்ணக் குவியல்களைக் கண்டு எடுத்தியம்பும் முயற்சி வேறு. இரண்டாவதை ஜார்ஜ் ஹார்ட் மிக அழகாக தனது கட்டுரைகள் வழியே விரித்திருக்கிறார்.

tamil samaskrita sevvilakkiya uravugalமேலும், அணங்கு என்பது உலகப் பொதுக் கருத்து எனவும் இதைத் தமிழ் இலக்கியமே சிறப்புறக் கூறியுள்ளது எனவும் இதைப் பாலினேசிய மக்களின் மானோ என்னும் ஆற்றலோடு ஒப்பிடுகிறார் ஹார்ட் என்று பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வாசு.அரங்கநாதன் தனது கருத்துரையில் தெரிவிக்கிறார்.

இனி, முதல் கட்டுரைக்குள் நுழைவோம். A common source for Tamil and Sanskrit literature என்ற ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது. இந்தக் கட்டுரையின் சில பகுதிகளை அப்படியே எடுத்தாண்டுள்ளோம்.

கி.பி முதல் மூன்று நூற்றாண்டைச் சேர்ந்த சங்க இலக்கியங்கள் சமஸ்கிருதச் செவ்விலக்கியங்களோடு தொடர்புடையன என்பதை உணர எந்த ஓர் ஆய்வாளராலும் முடியும். துவக்கத்தில் பலரும் தமிழ் இலக்கியங்கள் சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்றே உருவாயின என வெறுமனே கருதியிருந்தனர். ஆனால், கவனமான பகுப்பாய்வு அவர்களால் மேற்கொள்ளப்படவில்லை.

முதலாவதாக இவ்விரு இலக்கிய மரபுகளுக்கும் அடிப்படை ஒற்றுமைக் கூற்றாக இருப்பது ஒரே அல்லது ஒத்த தன்மையிலான மரபுகளைச் சுட்டலாம். சான்றாக, தூதுச் செய்யுட்களைக் காட்டலாம். சமஸ்கிருதத்தில் காளிதாசருக்கு (கி.பி.4-5 ஆம் நூற்றாண்டு) முன்பாக தூதுப்பாடல்கள் இடம் பெறவில்லை. இவை தமிழில் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. அகநானூற்றில், பெண்ணொருத்தி தன் காதலன் குறித்து நண்டினைப் பார்த்துப் பேசுவதாக 170 ஆம் பாடல் அமைந்துள்ளது. இதற்கான புகழ் பெற்ற சமஸ்கிருத எடுத்துக் காட்டாக காளிதாசரின் மேகதூதம் அமைகிறது.

மற்றுமொரு சான்றாக, இவ்விரு இலக்கியங்களிலும் கையாளப்பட்டுள்ள தலைவன், தலைவி, தோழி, தாய், தூதுவர் என்னும் அகப்பாடல் மாந்தர் அமைப்பினைச் சுட்டலாம். சத்யசயீ சமஸ்கிருத தொகை நூலின் 538 ஆம் பாடலில், “நான் இடியின் ஓசையைக் கேட்டேன். அது கூற்றுவரின் முரசொலியை ஒத்ததாக இருக்கிறது” என்கிறாள் பயணியின் மனைவி. இதைப் போலவே, குறுந்தொகை 216 ஆம் பாடலின் தலைவி “மிகவும் வருந்தியிருக்கும் எனது நிலையினை அறியாது, கரு மேகங்கள் முழங்கியபடி மழையைப் பொழிந்து கொண்டிருக்கின்றன. எனது உயிரைப் போக்கும்படியான மின்னல்களையும் அனுப்புகின்றன” எனத் தன் தோழியிடம் புலம்புகிறாள். இதே கருத்து பிற்காலச் சமஸ்கிருத இலக்கியமான சுபாஷித ரத்னகோஷா 708 ஆம் பாடலிலும் இருப்பதனைக் காணலாம்.

சத்யசயீ 445 ஆம் பாடலில் தலைவனை நோக்கிப் பேசும் தலைவி, “அன்பற்றவனே! மழை பெய்த இரவில் உன்னைத் தேடி நடந்து வந்த பாதச்சுவட்டினை, இன்னும் என்னால் காண முடிகிறது” என்கிறாள். காளிதாசரின் குமாரசம்பவம் 6.43 அபிசாரிகா என்னும் பெண்கள் இரவில் தமது காதலர்களைக் காணச் செல்லும் போது சில செடிகளின் ஒளியைக் கொண்டு பாதைகளைக் கண்டறிந்தனர் என்கிறது. சுபாஷித ரத்னகோஷா 829 ஆம் பாடலிலும் பெயர் தெரியாத புலவர் இதனைக் குறிப்பிடுகிறார். இப்பாடல்கள் அகம் 192 ஆம் பாடலோடு பொருந்திப் பார்க்கத்தக்கன.

மூங்கில் துளையினுள் நுழையும் காற்று குழலோசையோடு ஒப்புமைப்படுத்தப்படுவது இரு இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. அகம் 225 ஆம் பாடல், மேகதூதம் 56 ஆம் பாடல், இரகுவம்சம் 2.12 ஆம் பாடல் ஆகியன மூங்கில் காற்றின் இன்னிசையைக் குறிப்பிடுகின்றன.  

கால அடிப்படையில் இவ்வாறாகப் பகிரப்பட்டுள்ள மரபுகளைக் கணக்கெடுக்கத் தொடங்கினால் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைச் சுட்ட முடியும்.

******

தமிழ்ச் செய்யுட்களில் காணப்படும் வேறு இரு கூறுகளும் பாலி, சமஸ்கிருத மொழிகளில் காணப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அசைகளை அடிப்படையாகக் கொண்டமையும், ஆரியா மற்றும் அதனையொத்த பிற யாப்பமைப்புகளும் பழந்தமிழ்ச் செய்யுள் யாப்பமைப்போடு ஒத்திருக்கின்றன எனச் சுட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. தமிழ், சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்றிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், பல மரபுகள் முதலில் தமிழிலேயே காணப்படுகின்றன. சமஸ்கிருதத்துக்கு சொந்தமான யாப்பமைப்பு கிடையாது. ஆனால், தமிழுக்கு உண்டு. சமஸ்கிருதமும் தமிழிலிருந்து கடன் பெற்றிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், சமஸ்கிருதப் புலவர்கள் தமிழ் மரபை அறிந்திருக்கவில்லை. கிடைக்கின்ற சான்றுகள் பகிரப்பட்டுள்ள பெரும்பான்மைக் கூறுகள் இந்தோ- ஆரிய மரபான மராட்டிய பாலி மொழியில் நுழைந்துள்ளன எனச் சுட்டுகின்றன. ஆய்வுகளின் அடிப்படையில், மராட்டியத்தின் பகுதி பெருங்கற்கால நாகரிகத்தின் வடக்கு எல்லையாக அமைகிறது. இதை வேறு வகையில் சொல்வதானால், மராட்டியத்தின் பண்பாடு கி.பி முதலாம் நூற்றாண்டில் ஆரிய திராவிடக் கலப்பாகவே காணப்பட்டது.

பழந்தமிழ்ப் பண்பாடு என்பது பெருங்கற்கால நாகரிகத்திலிருந்து நேரடியாகத் தோற்றம் பெற்றதாக இருந்தது. எனவே, தமிழ்- சமஸ்கிருத மொழிகளுக்கிடையே பகிரப்பட்டுள்ள கூறுகள் ஒரே பெருங்கற்கால நாகரிகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. சமஸ்கிருதச் செவ்விலக்கியம் தென்னிந்திய மூலத்திலிருந்து பல கூறுகளைப் பெற்றுக் கொண்டது எனில் செம்மையான வட இந்திய நாகரிகத்தின் பிற கூறுகளும் இதையே பின்பற்றியிருத்தல் வேண்டும்.

முதலாவதாக, தமிழ்ச் செய்யுட்களைத் தோற்றுவித்த தமிழ்ச் சமூகத்தின் அமைப்பு குறித்து ஆராய்தல் அவசியமானதாகிறது. தமிழர் வாழ்வின் முதற்கூறாக இடம் பெறுவது ஓர் ஆற்றல் ஆகும். அதை அணங்கு என்றழைக்கின்றனர். இந்த அணங்கு சரியான இடத்தில் அமர்ந்து கட்டுப்பாட்டுக்குள் இருக்குமாயின் அது அப்பொருட்களுக்குப் புனிதத்துவ ஒழுங்குகளையும் கட்டுப்பாட்டையும் வழங்குவதாக அமைகிறது. சரியாகக் கையாளாவிட்டால், இது கட்டுப்பாட்டை இழந்து பெருந்தீங்கை உண்டாக்கும் எனவும் நம்பப்பட்டுள்ளது. கற்புடைய மகளிர், மன்னன், முரசு, சிறப்பான காலங்கள், இறந்துபட்ட வீரர்களின் ஆன்மா உறையும் நடுகற்கள், இறந்த சடலங்கள், கணவனை இழந்த மகளிர், பூப்புற்ற மகளிர், பிரசவ காலப் பெண்கள் இந்த ஆற்றல் உறையும் இடங்களாகச் சுட்டப்படுகின்றன.

பழந்தமிழ்ச் சமூகத்தில் மன்னன் என்பவன் புனித ஆற்றல் உறையும் மையங்களுள் ஒன்றாகக் கருதப்பட்டான். ஒவ்வொரு நாள் காலையிலும் அவன் துயில் எழும் போது கிணை என்னும் முரசை வாசிக்கும் கிணை மகன் அவனைப் புகழ்ந்து பாடி பரிசில் பெறுவான். மற்றொரு குடியினரான பாணர்கள் ஒரு நாளின் குறிப்பிட்ட சில வேளைகளில் பாடல்களைப் பாடுவர். இவர்கள் வாய்மொழிப் புலவர்கள். மூன்றாம் குடியினரான துடியன் போர்க்காலங்களில் முரசினை இசைப்பார்கள். இந்த மூன்று தாழ்த்தப்பட்ட குடியினரும் மன்னன் போரில் புண்பட்டிருக்கும் போது தீய ஆற்றல்கள் அவனைத் தாக்காமலிருக்கப் பாடல்களைப் பாடுவர்.

பாணரின் முதன்மைப் பணியான மன்னரைப் போற்றுதல் என்பதற்குச் சான்றாக புறநானூறு 22 ஆம் பாடல் அமைகிறது. இப்பாடலில், மன்னனைச் சிறப்பிப்பதற்காக புலவர் இரண்டு கருத்துக்களை வலியுறுத்துகிறார். அவற்றுள் முதலாவது போரில் வெளிப்பட்ட மன்னன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் வீரமும், மற்றொன்று அவன் நாட்டின் வளமையும் ஆகும். இங்கு மிகுந்த ஆற்றலும் முதன்மையும் தனித்தன்மையும் வாய்ந்த தமிழ்க் கடவுளான முருகனோடு மன்னன் ஒப்பிடப்படுகின்றான். இத்தகைய பாடல்கள் மன்னனின் புகழையும் ஆற்றலையும் அதிகரித்து அதன் வாயிலாக ஆற்றலைக் கட்டுப்படுத்தத் தகுதியானவனாக அவனை மாற்றுவதற்கும் பயன்பட்டன.

புறம் என்பது வெளியே என்றும் அகம் என்பது உள்ளே என்றும் பொருள்படும். புறப்பாடல்கள் மன்னனின் புனித ஆற்றலால் முதன்மைப்படுத்தப்பட்டன. அதே போல் அகப்பாடல்களுக்குள்ளும் புனித ஆற்றலுக்கான இடங்கள் இருக்கின்றன. இதற்குச் சான்றாக அகநானூற்றின் முதல் பாடலைச் சுட்டலாம். இப்பாடல் குறியீட்டுத் தன்மையால் ஒருவன் துவக்கத்தில் மரணம் சூழ்ந்த உலகில் பயணத்தை மேற்கொண்டு ஆற்றல் பெற்றவனாக மாறிய பிறகே இந்தச் சமூகத்திற்கான மனிதனாக திருமணம் என்னும் புனிதத்துவ நிகழ்வில் பங்கு பெறக் கூடியவன் ஆக முடியும் என விளக்குகிறது. மற்றொரு சான்றாக அகம் 106 ஆம் பாடலைக் காணலாம். தலைவன் மரணம் சூழ்ந்த உலகைக் கடந்து, தலைவி இருக்கும் புனித ஆற்றல் வாய்ந்த உலகை அடைகிறான் என்பதே இங்கு குறியீட்டுத் தன்மையாகச் சுட்டப்படுகிறது. இந்தப் பாடல்கள் பெண் என்பவள் புனித ஆற்றல்களின் உறைவிடமாகத் திகழ்பவள் என்பதைப் பிரதிபலிக்கின்றன.

******

தோராயமாக கி.மு. 2 அல்லது 3 ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் பிராமி வரிவடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை அடுத்து வந்த சில நூறு ஆண்டுகளில் தமிழ் எழுத்து முறை உருவானது. இக்குறிப்பிட்ட காலகட்டத்தில் புலவர்கள் தோன்றினர். வாய்மொழிப் பாடகர்களோடு அல்லாது இவர்கள் உயர்குடியினரோடு ஒருங்குவைத்து எண்ணப்பட்டனர். இவர்களின் பாடல்கள் பலவும் தாழ்த்தப்பட்ட குடியைச் சேர்ந்த வாய்மொழிப்பாடகர்களின் வாயிலாகவே பாடப்பட்டன. பாணன், கிணை மகன் போன்றோரை ஒத்த வாய்மொழிப் புலவர்கள் தக்காணியப் பெருங்கற்காலத்திலிருந்தே இருந்தார்கள். இன்றும் கூட ஒரிசாவில் பாணா என்ற தாழ்த்தப்பட்ட குடியைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் இருக்கிறார்கள். இவற்றின் வாயிலாக சத்யசயீயில் இடம்பெறும் மகாராஷ்டிரப் புலவர்களின் பாடல்கள் யாவும் அவர்கள் காலத்தில் வாழ்ந்த புலவர்கள் வாய்மொழியாகப் பாடியதிலிருந்து அப்படியே நகல் செய்யப்பட்டவை என அறிய முடிகிறது. எனினும், இவ்விடத்தில், ஒரு கருத்து முதன்மையாக விவாதிக்கப்பட வேண்டியதாய் இருக்கிறது. காளிதாசர் அவருக்கான அடிக்கருத்துக்களை எங்கிருந்து பெற்றார்? அவை தமிழிலும் இருப்பதற்கான காரணம் என்ன? அவர் அவற்றை மஹாராஷ்ட்ர பிராகிருதக் கவிதை மரபிலிருந்து பெற்றிருக்க வாய்ப்புண்டு. அதற்கு சத்யசயீ சான்றாக அமைகிறதா?

அபிஞான சாகுந்தலத்தின் நான்காம் பகுதியில், 15 ஆம் பாடலில், அனுசியா, சக்ரவாகப் பறவை வகையுள், பெண் பறவையைப் பார்த்து மராட்டியத்தில் ஒரு பாடலைப் பாடுகிறாள். இது சத்யசயீயின் 252, 385 ஆம் பாடல்களை ஒத்திருக்கின்றன. இந்தப் பொதுவான அடிக்கருத்துக்கான சான்றாக “பழ மழை பொழிந்தென” எனத் தொடங்கும் குறுந்தொகை 261 ஆம் பாடலைச் சுட்டலாம். இதன் மூலம், காளிதாசர் மகாராஷ்ட்ரிய செய்யுள் மரபுகளை அறிந்து தாமே செய்யுட்களை இயற்றினார் என்பதை அறிய முடிகிறது.

காளிதாசருக்கு முன்பான சமஸ்கிருத இலக்கிய முன்னோடிகளின் பாடல்கள் கிடைப்பதில்லை. அஸ்வகோஷர் உட்பட பெரும்பாலான சமஸ்கிருதப் புலவர்கள் பிராகிருதத்தையும் அதன் யாப்பமைப்பையுமே பயன்படுத்தினர். இவை முற்றிலும் திராவிட மரபைச் சார்ந்தவை. காளிதாசருக்கு முன்பே தமிழ்க்கூறுகள் சமஸ்கிருதத்தில் இடம் பெற்றிருந்தன. சான்றாக, தலைவனைத் தேனீயாகச் சித்தரிக்கும் உவமை வான்மீகி இராமாயணத்தில் 5.7.35 இலும் 5.7.60 இலும் காணப்படுகின்றன. இவற்றை ஒத்ததாக குறுந்தொகை 321 ஆம் பாடல் அமைகின்றது. தமிழ்க் கவிதைகளில் சிறிய அளவிலான விளக்கங்களைத் தந்தாலும் இவற்றின் பயன்பாடு மிக இயல்பானதாகவும் நுட்பமானதாகவும் அமைகிறது. அத்தோடு இவை சமஸ்கிருதத்திற்குச் சொந்தமானவை அல்ல. இவற்றைக் காப்பிய காலத்திற்கு முந்தைய பிரதிகளில் காண முடிவதில்லை. சமஸ்கிருதத்தின் ஆதிக் காப்பியமான மகாபாரதத்தில் சமஸ்கிருத இலக்கிய மரபிற்கு முற்றிலும் புதிதான சில கூறுகள் சுட்டப்பட்டுள்ளன. தற்போது மகாபாரதத்தின் பழைய பகுதிகளும் கூட கி.மு.200க்கும் முற்பட்டவை அல்ல என்றும் அதே வேளையில் தக்காணியப் பெருங்கற்கால நாகரிகம் கி.மு.800 வரையாவது செல்லும் எனக் கருதப்படுகிறது. மகாபாரதத்தில், பெருங்கற்காலப் பண்பாட்டிலிருந்தே பெற்றிருக்க முடியும் எனச் சுட்டத்தக்க வகையில் சில கூறுகள் இருப்பதைக் காண முடிகிறது.

சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ஆதி காவியமான வான்மீகி இராமாயணமே, தென்னிந்தியா குறித்து மிகு கவனம் செலுத்திய முதற் படைப்பு எனலாம். பெருங்கற்காலத் தக்காணிய நாகரிக மூலத்தோடு தொடர்புடைய கூறுகள் மகாபாரதத்தைக் காட்டிலும் வான்மீகியின் புதிய படைப்பில் அதிகம் காணப்பட்டன. அஸ்வகோசரின் காலமான கி.பி.முதல் நூற்றாண்டில் வட இந்தியாவில் தென்னிந்தியக் கூறுகள் அதிகளவில் காணப்பட்டன. எனவே, வான்மீகியால் உருவாக்கப்பட்ட உணர்ச்சிகரமான இராமாயணம் பிரபலமடைந்தது. ஆனால், காளிதாசருக்கு முன்பாக வட இந்தியாவில் தென்னிந்தியக் கூறுகள் தாமாகவே நுழையவில்லை.

பெருங்கற்கால பண்பாட்டில் முதன்மைப்படுத்தப்பட்ட புனிதக் கூறுகளாக விளங்கியவை இரண்டு. ஒன்று மன்னன். மற்றொன்று பெண். இந்தோ ஆரியப் பண்பாட்டில் இந்த அடிக்கருத்தும் இன்ன பிறவும் அவற்றின் புனிதத்துவத்தின் முதன்மைக்கு ஏற்பப் பலவாறாகப் பிரிந்துள்ளன. காளிதாசரின் படைப்புகளில் காணலாகும் புனிதத்துவக் கருத்தாக்கங்கள் தெளிவாகத் தெற்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. எனினும், அவை வட இந்தியத் தொன்மங்களோடு கலந்தே அமைக்கப் பெற்றன என்பது இங்குக் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைகின்றது. இந்த அடிப்படையிலேயே இரகுவம்சத்தில் சுட்டப்பட்டுள்ள இரகுவின் வழித்தோன்றல்களின் வரலாறு தமிழ் மரபோடு பொருந்திச் செல்வதாக அமைகின்றது. தமிழ் இலக்கிய மரபிலும், காளிதாசர் மரபிலும் மன்னனின் புனித ஆற்றல், வானியல் சார்ந்த படிமங்களாகச் சுட்டப்படுகின்றன.

தென்னிந்தியப் பண்பாட்டில் மன்னனே புனித ஆற்றல் மிகுந்தவனாகவும் ஒட்டுமொத்த சமூகத்தையும் மையமிட்டவனாகச் சித்தரிக்கப்படுகிறான். ஒரு வேளை மன்னனின் ஆற்றல் பொய்க்குமானால் மழை பெய்யாது, பஞ்சம் முதலிய இயற்கைப் பேரிடர்கள் நேரிடும் எனத் தென்னக மக்கள் கருதினர். இதுவே, வட பகுதியில் இயற்கை அமைப்பு கால அடிப்படையில் ஒழுங்காகச் செயல்பட பிராமணர்கள் மேற்கொள்ளும் தானங்களும் இதரச் சடங்குகளுமே காரணம் எனக் கருதினர். பிற்காலச் சமஸ்கிருதத்தில், மன்னனைச் சுட்டப் பயன்படுத்தப்படும் வானியல் சார்ந்த படிமக் கூறுகள் தமிழைப் போலவே அமைகின்றன. சான்றாக குமார சம்பவம் 5.61 ஐ குறுந்தொகை 131 ஆவது பாடலோடு ஒப்பிட முடியும்.

தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டிலும் மழையில்லாத நிலம் பயனற்றதாக மாறுவது போல் பிரிந்திருக்கும் ஆண் பெண் ஆகியோரின் வாழ்க்கையும் பயனற்றதாக அமையும் எனச் சுட்டுகின்றன. பழந்தமிழ்ச் சமூகத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்த முதன்மைக் கூறுகளுள் ஒன்று தகுதியுடைமையாகும். மன்னன் நிலத்தை ஆள்வதற்குத் தகுதியுடையவனாக இருத்தல் வேண்டும். பெண் என்பவள் திருமணத்திற்குத் தகுதியுடையவளாக இருத்தல் வேண்டும். வட பண்பாட்டில் ஏற்பட்டுள்ள தெற்கின் தாக்கத்திற்குக் காரணம் தென்னிந்தியர்களின் கருத்தாக்கமான தகுதியுடைமை ஆற்றலினை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் துவங்கியதே ஆகும்.

வேதங்கள் என்பன வாய்மொழி வாய்ப்பாடுகளாக இருந்த போதும் அது இந்த உலகின் ஒட்டுமொத்த அமைப்பை விளக்கும் ஆற்றல் உடையனவாகக் கருதப்பட்டன. ஆனால், இங்கு விவாதிக்கப்படும் சிறப்புத்தன்மையுடைய தகுதியாற்றல் என்பது அன்றாட வாழ்வியலோடும் குடும்ப உறுப்பினர்களோடும் கவிதையியலோடும் இசையோடும் தொடர்புடையதாக அமைகின்றது. இதைத் துவக்க கால ஆரியக் கூறுகளில் காண முடிவதில்லை. வேதப் பாடல்களிலும், பிரமாணங்களிலும் பழந்தமிழ்க் கவிதைகளில் காணலாகும் கச்சிதமான அமைப்பொழுங்கினைக் காண முடிவதில்லை. தமிழ்க் கவிதைகளைப் போன்று அன்றாடப் பயன்பாட்டிற்கு உரியதாய், பருவ நிலையையும் ஒருவரின் உள்ளார்ந்த ஆற்றலையும் கட்டுப்பாட்டிற்குள் வைப்பதாயும் அமையவில்லை.

******

இனி, “பிற்காலத் தமிழும் பிற திராவிட மொழிகளும் சமஸ்கிருதமும்” (Later Tamil, Other Dravidian Languages and Sanskrit) என்ற இரண்டாம் கட்டுரைக்குள் நுழைவோம்.

துவக்கத்தில் பழைய கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி இலக்கியங்கள் சமஸ்கிருத இலக்கியத்தின் கிளை இலக்கியங்களாகவும் அவற்றை விடச் சற்றுக் கூடுதலாக அவை திராவிட மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவனவாகவுமே கருதப்பட்டன. பலரும், தமிழ் பிற மொழிகளிடமிருந்து பெறாமல் தனக்கேயுரிய கூறுகளைக் கொண்டு சமஸ்கிருதத்திலிருந்து தனித்து விளங்குவதைப் போல பிற திராவிட மொழிகளால் விளங்க முடியவில்லை என்னும் கருத்தை முன் வைத்துள்ளனர். எனது கருத்துப்படி இந்தப் பார்வை தவறானதாகும். உண்மையில் சில திராவிட இலக்கியங்களும் இருக்கின்றன.

சான்றாக நன்னய்யாவின் தெலுங்கு மொழிபெயர்ப்பில் அமைந்த மகாபாரதத்தைக் குறிப்பிடலாம். இது சமஸ்கிருதத்திலிருந்து எடுக்கப் பெறாத சிலவற்றையும் கொண்டுள்ளது. அண்மையில் கன்னட வசனங்களுள் சில ஏ.கே.இராமானுஜனால் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வீரசைவப் புலவர்களால் சிவனை முன்னிலைப்படுத்தி கி.பி.10 அல்லது 12 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இப்பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இவை சமஸ்கிருதச் சொற்கள் சிலவற்றைப் பயன்படுத்தியுள்ள போதிலும் சமஸ்கிருத நடையைக் காண முடிவதில்லை. மாறாகச் சமஸ்கிருதக் கட்டமைப்பை உடைத்து எளிய நடையில், கன்னடம் பேசும் பொது மக்களுக்குக் கொண்டு செல்ல முயலும் ஆசிரியர்களின் முயற்சியை வெளிப்படுத்துவனவாக இவை அமைந்துள்ளன. இவர்களால் மாற்றியமைக்கப்பட்ட பண்பாட்டு மரபானது தென்னிந்தியாவில் வழங்கி வந்த பழைய பெருங்கற்காலப் பண்பாட்டின் தொடர்ச்சியே ஆகும். இதன் விளைவாக, அவர்களின் பாடல்கள் எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கத் தமிழ்க் கூறுகளைப் பிரதிபலிப்பதாய் அமைகின்றன. சான்றாக, இராமானுஜன் மொழிபெயர்த்துள்ள மகாதேவியக்காவின் “கேள் தங்காய் கேள்” என்னும் பாடல், குறுந்தொகை 147 ஆம் பாடலை ஒத்திருக்கிறது. இவ்விரு பாடல்களிலும் கருத்தை எடுத்துரைக்கும் திறமும், அதை வலியுறுத்தும் முறையும் இருக்கின்றன. அவை சமஸ்கிருத இலக்கியங்களுக்குப் புதியனவாகும். அத்தோடு இவ்விரண்டும் தென்னிந்தியாவிற்கே உரிய தனிச்சிறப்பு வாய்ந்த படிமங்கள் மற்றும் முரண்களின் பயன்பாட்டையும் கொண்டுள்ளன. திராவிட இலக்கியங்களுக்குள் இலக்கிய உணர்திறன்கள் (Literary Sensibility) எவ்வாறு பகிரப்பட்டுள்ளன என்னும் எண்ணத்தை உருவாக்க இத்தகைய சான்றுகளே போதும்.

தெலுங்கில் உள்ள "பல்னாதி வீரசரித்திரம்” ஆந்திரப் பிரதேசத்தின் பகுதியான பல்னாட்டைச் சேர்ந்த மன்னனின் கதையைக் கொண்டமைகிறது. இது 15 ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ நாதார் என்பவரால் எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது சமஸ்கிருதச் சொற்களை ஒரு குறிப்பிட்டளவிற்குப் பயன்படுத்தியுள்ள போதிலும், சமஸ்கிருத இலக்கிய நடையிலிருந்து உருவாக்கப்படவில்லை. மாறாக, இது ஆந்திரப்பிரதேசத்தில் வாழும் தாழ்த்தப்பட்ட குடியைச் சேர்ந்த பாணர்கள் இன்றும் பாடிவரும் வாய்மொழிக் கதைப்பாடலின் இலக்கிய மறுவுருவாக்கமாக அமைகிறது. இந்த ஒட்டுமொத்தப் படைப்பும் சமஸ்கிருத இலக்கிய மரபிற்கு முற்றிலும் புதிதான ஒன்றாகும்.

இந்தச் சான்றுகள், தென்னிந்தியப் பண்பாடுகள் (ஒரிசா, மஹாராஷ்ட்ராவிலும் குறிப்பிட்ட அளவில்) உருவாக்கப் பெற்ற தக்காணியப் பெருங்கற்காலப் பண்பாடு முற்றும் முழுதாக அழிந்து விடவோ கலப்படையவோ இல்லை என்பதை விளக்குகின்றன. இலக்கியப் படைப்புகளுக்கான கதைகள் சமஸ்கிருத மூலங்களிலிருந்து பெறப்பட்டு அவை திராவிடத் தனித்தன்மைக் கூறுகளுடன் தென்னிந்தியாவில் கையாளப்படுகின்றன. தென்னிந்தியாவில் மறுவுருவாக்கம் செய்யப்படும் பெரும்பாலான வடபகுதிக் கதைகள் தென்னிந்திய நாட்டார் வழக்காறுகளையே குறிப்பிடத்தக்க அளவுக்கு நம்பியிருக்கின்றன.

தமிழில் தொகைப்பாடல்களுக்கும் பத்துப்பாட்டிற்கும் பிறகு எழுந்த முதல் இலக்கியப் படைப்பாக முதன்மை பெறுவது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாகும். கி.பி.4 அல்லது 5 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கும் இவை அறம், அகம் ஆகியவற்றைப் பாடுபொருளாகக் கொண்ட அடியளவு குறைந்த செய்யுட்களைக் கொண்டமைகின்றன. திருக்குறள், நாலடியார் மிகவும் குறிப்பிடத்தக்க அறப் படைப்புகள். ஐயத்திற்கு இடமின்றி இப்படைப்புகள் சில சமஸ்கிருத அறவிலக்கியக் கூறுகளைக் கொண்டமைகின்றன என்பதையும் அத்தகைய சமஸ்கிருதப் படைப்புகள் இவற்றுக்குக் காலத்தால் முற்பட்டவை என்பதையும் அறிய முடிகிறது. சமஸ்கிருதத்தில் வழங்கும் பெரும்பான்மையான அறவிலக்கியங்கள் அதன் எதிரிணையாய் அமையும் தமிழில் காணப்படுவது போல் சிறப்பு மிக்கதாய் விளங்குவதில்லை.

திருக்குறளில் வட இந்தியக் கூறுகள் பெறப்பட்டிருந்தாலும் வாழ்க்கை குறித்த அணுகுமுறைகள் பொதுவாக தமிழ்த்தனமாகவே இருக்கின்றன. இப்படைப்பு சமஸ்கிருதத்தில் குறிப்பிடப்படும் மனிதர்களோடு தொடர்புடைய திரிவர்க்கம் என்னும் கருத்தின் அடிப்படையிலேயே தர்ம(அறம்), அர்த்த (பொருள்), காம (இன்பம்) வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. திருக்குறள் வலியுறுத்தும் இல்லற வாழ்க்கை, மனித உறவு ஆகியனவே எனது (ஜார்ஜ் எல்.ஹார்ட்) பார்வையில் அதை வேறுபடுத்திக் காட்டுவனவாக அமைகின்றன. துறவறத்தை வலியுறுத்த ஓர் இயலையே திருக்குறள் கொண்டிருப்பது உண்மையேயாயினும் திருவள்ளுவர் இல்லறத்தின் பக்கமே சார்ந்துள்ளார். பகவத் கீதை சுய ஒழுக்கம், ஆசையைத் துறத்தல் ஆகியவற்றை வலியுறுத்திய போதிலும் பொறையுடைமை, செய்நன்றியறிதல், அன்பு, பெருந்தன்மை, மக்கட்பேறு, கல்வி ஆகியன பற்றி எல்லாம் பேசவில்லை.

சான்றாக 77 ஆம் குறள்

”என்பிலதனை வெயில் போலக் காயுமே

அன்பி லதனை அறம்”

மற்றும் 402 ஆம் குறள்

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற் றற்று

ஆகியனவற்றைக் குறிப்பிடலாம்.

இதன் காரணமாகவே, திருக்குறளும் அது விளக்கும் ஒட்டு மொத்தத் தமிழ் மரபும், பகவத் கீதையைக் காட்டிலும் ஜூடியோ-கிறிஸ்துவ (Judeo Christian) மரபைச் சேர்ந்த போப், ஸ்விட்சர் ஆகியோர் விளக்கும் அனுதாபத்தோடு ஒத்ததாய் அமைகின்றன. மேலும், திருக்குறளின் யாப்பமைப்பு மிகவும் சுருக்கமும் அழகும் வாய்ந்ததாகவும் சமஸ்கிருதத்திலுள்ள எதனோடும் பொருந்திப் போகாததாகவும் அமைந்துள்ளது.

தமிழின் அடுத்த முதன்மையான படைப்பாக அமைவது சிலப்பதிகாரம். இப்படைப்பு நிச்சயம் தாழ்த்தப்பட்ட குடிகளின் வாய்மொழிப்பாடலிலிருந்து பெறப்பட்டிருத்தல் வேண்டும். இதன் கதை தமிழுக்கே உரியது ஆகும். மன்னன், பெண் ஆகியோர் பற்றிய தமிழின் உயர்வான கருத்தாக்கங்களை இது முன் வைத்துள்ளது. முற்பிறவியில் செய்த வினைப்பயன்களே துன்பத்திற்குக் காரணம் என்று இளங்கோவடிகள் விளக்கிச் சொல்கிறார். எந்தச் சூழ்நிலையிலும் ஊழ்வினை தமிழுக்கு உரிய கருத்தாக்கமாக இருக்கவில்லை. சங்கப் புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய புறநானூற்று 134 ஆம் பாடல் பொருந்த இணைத்துப் பயிலத்தக்கது. இளங்கோ தனது படைப்பில் கையாண்டுள்ள ஊழ்வினைக் கோட்பாடு கற்பனையாக உருவாக்கப்பட்ட ஒன்று எனக் கொள்ள வேண்டியதில்லை. சங்கப் புலவரான கணியன் பூங்குன்றன் தனது 192 ஆம் பாடலில் கர்மா குறித்து நுட்பமாக விளக்கியுள்ளார்.

சிலப்பதிகாரத்தைத் தொடர்ந்து மணிமேகலை, சீவக சிந்தாமணி, நாயன்மார்கள், ஆழ்வார்களின் தெய்வப் பாசுரங்கள், புராணக் கதைகள் என்று தமிழில் பல குறிப்பிடத்தக்க படைப்புகள் இருக்கின்றன. தமிழில் அமையும் பக்திப்பாடல்கள் யாவும் தமக்கு முந்தைய சமஸ்கிருத வடிவங்களைச் சாராது தனித்தன்மை வாய்ந்தனவாகவும் பெரும்பாலும் வடபகுதிக் கடவுளரைப் பாடும் போதும் சமஸ்கிருதத்தைப் பின்பற்றாதனவாகவும் விளங்குகின்றன. தமிழ்ப் பக்தியிலக்கியங்கள் காட்டும் வழிபாட்டின் தீவிரத்தை ஒரு போதும் சமஸ்கிருதத்தில் காண முடியவில்லை.

காவியங்களில் மிகுந்த பெருமையும் சிறப்பும் வாய்ந்தது கம்பராமாயணமாகும். கம்பர், வான்மீகி ஆகிய இருவரின் இராமாயணங்களும் வேறுபட்டு அமைகின்றன. கேகய நாட்டிலிருந்து அயோத்திக்குத் திரும்பும் பரதன், ”தான் இல்லாத போது தன் தாய் கைகேயி இராமனை வனவாசம் அனுப்பி விட்டாள்; தன்னை ஆட்சியில் அமர வைக்கவே இவ்வாறு செய்துள்ளாள். அது பொறாத தன் தந்தை தசரதன் உயிரிழந்து விட்டான்” என்பதை உணர்கிறான்.

கம்பனின் படைப்பில் பரதனது மன உணர்வுகள் மிகுந்த சிக்கலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. இங்கு அவன் தனது தாயிடம் ஆத்திரப்படும் தட்டையான பாத்திரமாக மட்டுமல்லாமல், தனது உணர்வு வெளிப்பாடுகளால், அந்தச் சூழ்நிலையில் உள்ளவருக்கே உரிய குழப்பமான மன நிலையை வெளிப்படுத்துகிறான். அதனாலேயே, தானே தனது தந்தையைக் கொன்று விட்டேன் என அழத் தொடங்கி விடுகிறான். எல்லாச் செய்யுட்களிலும் குற்றவுணர்வு மேலெழுதலை நுட்பமாகக் கம்பன் கையாண்டுள்ளார். இது வான்மீகியின் படைப்பில் ஒட்டு மொத்தமாக இல்லாமல் போகிறது.

கம்பனின் பார்வை அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை மையமிட்டதாக, சீராக அமைகிறது. அத்தோடு நாடகத் தன்மை மிக்கதாகவும் அமைகிறது. கம்பனின் செய்யுட்கள் ஒவ்வொன்றும் பொருட் பொதிந்தனவாக வான்மீகியைக் காட்டிலும் சிறந்தனவாக அமைகின்றன.

இடைக் (சிற்றிலக்கிய) காலத் தமிழ்ப் புலவர்களின் தனித்தன்மையும் அவர்கள் தங்கள் வழிபாட்டு முறை குறித்த அணுகுமுறையும் அதன் யதார்த்தத் தன்மையும் பல்வேறு பரிமாணங்களில் அமைந்துள்ளதில் வெளிப்படுகிறது. இங்குப் பாத்திரங்கள் இறைத்தன்மை வாய்ந்தனவாகவும் மனிதர்களாகவும் இருப்பது மிகுந்த சிக்கலுக்குரியதாகவும் அதன் சமஸ்கிருத எதிர் நிலையைக் காட்டிலும் மெய்மை வாய்ந்தனவாகவும் அமைந்துள்ளன. பக்தி என்னும் செயற்பாடு தூய்மைத்தன்மைக்குப் பதிலாகத் தீவிரச் செயல்பாட்டால் கட்டமைக்கப்படுவதாக மாறுகிறது. இதனாலேயே, இடைக்காலத் தமிழ்ப் புலவர் (அருணகிரிநாதர்) ஒருவரால் தெய்வ பக்தியுடைய துவக்க கால இந்துமத சமஸ்கிருத இலக்கிய அறிவு மட்டும் உள்ள ஒருவர் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத தன்மையில், ஒரு பாடல் வரியினை எழுத முடிந்தது.

சான்று: கந்தரலங்காரம் 37 ஆம் பாட்டு.

கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை

மொண்டுண் டயர்கினும் வேன்மற வேன்முது கூளித்திரள்

டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு

டிண்டிண் டெனக்கொட்டி யாடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே..

தமிழ் - சமஸ்கிருதச் செவ்விலக்கிய உறவுகள்

(The relation between Tamil and Classical Sanskrit Literature)

மூல நூல்: பேராசிரியர். ஜார்ஜ் எல் ஹார்ட்

தமிழில்: பு.கமலக்கண்ணன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

சென்னை - 50 | விலை: ரூ.90/-

- சண்முக.ஞானசம்பந்தன், இலக்கியத் திறனாய்வாளர். மதுரை அகில இந்திய வானொலி ஓய்வுபெற்ற நிகழ்ச்சித் தயாரிப்பாளர்.)

Pin It