பொருநராற்றுப்படையை முன் வைத்து...

பழந்தமிழ் இலக்கிய பனுவல்களை அக்காலச் சமூகப் பின்புலத்தில் பல்வேறு கருத்தியல்களைப் பலதரப் பொருண்மையில் விளக்குபவையாகவுள்ளன. சான்றோர் செய்யுள், பண்பாட்டு, திணை இலக்கியங்கள், சங்கச்செய்யுள்கள், வாய்மொழிக் கூறுகளைக் கொண்ட அரசவைப்பாட்டு பதினெண்மேற்கணக்கு நூல்கள் எனப்பல பெயர்களில் அறிஞர்கள் அழைப்பதுண்டு. சங்கச்செய்யுள் என்றழைப்பது பிழையான சொல்வழக்கு என கைலாசபதி போன்றோர் குறிப்பிடுவர். சங்கம் எனும் சொல் சமண பௌத்த சொல்லாடல்களில் ஓன்றாகும். மூவகைச் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தெடுக்கப்பட்டது எனும் தொன்மத்தை கி.பி.7 அல்லது கி.பி.8 ஆம் நூற்றாண்டினைச் சார்ந்த இறையனார் களவியல் உரை நிறுவ முற்படும் இது ஏற்புடையவாகவும் மறுப்புடையதாகவும் தமிழ் அறிஞர் மத்தியில் கருத்து வேறுபாடுகள் காலந்தோறும் விவாதிக்கப்படும் பொருண்மையாக உள்ளது. சில யதார்த்தங்கள் மிகுந்த கற்பனையோடு கலந்துள்ளன என்று பேரா.நீலகண்ட சாஸ்திரியார் போன்றோர் ஒரு பக்கமும் முழுக்க வரலாற்று மதிப்பற்றது அதுவொரு கட்டுக்கதை என சிவராஜபிள்ளை போன்றோர் மறுபக்கமும் பிரதிவாதம் செய்வர்.

பழந்தமிழ் இலக்கிய உருவாக்கத்திற்கும், அவைகள் நூல்களாகத் தொகுக்கப் பட்டதற்கும் ஒரு நீண்டகால இடைவெளியுண்டு. பனுவல் வாய்மொழியாக படைக்கப்பட்டதன் பின்புலக்காரணிகள் வேறு அதாவது படைக்கப்பட்டபோதுள்ள சமூகப்பொருளாதார அரசியல் பின்புலம் ஒன்றாகவும் அவைகள் தொகுக்கப்பட்டு எழுதப்பட்டபோதின் சமூகப் பொருளாதார பின்புலம் வேறொன்றாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாது இவை இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தின் பின்புலமும் வேறொன்றாக அமையும். கருத்துக்கள் மறைந்தும், தேய்ந்தும், புதுப்பொருள் கொண்டு கூட்டியும் மாறுபட்டும் போகலாம்.

எட்டுத்தொகைப் பாடல்களைக் காட்டிலும் பத்துப்பாட்டின் அடிகள் நீண்டவை. இவைகளிரண்டின் காலத்தொன்மைகள் குறித்தும் மாறுபட்ட சிந்தனைப் போக்குகள் நிலவுகின்றன. விரிவான வரலாற்றுக் குறிப்புகளும் நீண்ட புனைவியல் வருணனைகளும் பத்துப்பாட்டில் தான் மிகுந்து வருகின்றன. தொகைப்பாடல்களின் முதன்மைச் செய்திகளுக்கு வலுவூட்டக்கூடியதாக இவை அமையும். பரணர், மாமூலனார் பாடல்கள் வரலாற்றிற்குப் பெயர் போனவை. பத்துப்பாட்டில் புலவராற்றுப்படை என வழங்கப்படும் திருமுருகாற்றுப்படை, பண்டைத் தமிழகத்தின் மலர்களின் இருப்பை வரிசைப்படுத்திய குறிஞ்சிப்பாட்டு தவிர்த்த மீதமுள்ள எட்டு இலக்கியப் பனுவல்கள் பழந்தமிழகத்தின் வரைபடக் கட்டமைப்புகளான சமூகப் பொருளாதார, அரசியல் செய்திகளை விரித்துப் பேசுகின்றன. மக்களினத் தலைவர்கள், பெருங்கிழார்கள், சீறூர் மன்னர்கள், வேளீர்கள், குறுநில மன்னர்கள், பெருவெளி வேந்தர்கள் எனப் பலதரப்பட்ட சமூகப் படிநிலைக் கருத்தியல்களை பதிவு செய்துள்ளன.

பத்துப்பாட்டு பனுவல்களில் பாடுபொருள் நீண்டதாக இருக்கும் சிவராஜபிள்ளை ‘பத்துப்பாட்டு நூற்றாண்டுகளில் உண்டான இயல்பான வளர்ச்சி’ என்று கூறுவதைக் கைலாசபதி தம் நூலில் குறிப்பிடுவார். வாய்மொழித் தன்மையை உள்வாங்கிய எழுத்துமொழி ஆக்கக்கூறுகளையும் உடையதாக விளங்குகின்றன. ஆற்றுப்படை இலக்கிய வரிசையில் முதலாவதாகப் பேசப்படும் பொருநராற்றுப்படை வாய்மொழி மரபினரை தமக்குள் கரைத்துக் கொண்ட நிறுவனச் சமூகத்தின் வளர்ச்சிப்போக்கை தெள்ளிதின் உணர்த்துகின்றன. குறிப்பிட்ட எல்லை, வரையறுக்கப்பட்ட கோட்பாடு போன்றவற்றிற்கு உட்படாத கூட்டுச்சமூக அமைப்பையும்,பிணைப்பையும் கொண்ட இனக்குழு வழிமரபில் வாழும் பொருநர் கூட்டங்களை நிறுவனமயமாக்கும் முயற்சியில் இவ்வாற்றுப்படை இலக்கியங்கள் முன்னெடுப்பு செய்தன.farm land tamilnaduசாமானிய மக்கள் சமூகத்தில் உலவித்திரியும் பொருநர்க் கூட்டங்களை அதிகார வளையத்திற்குள் கொண்டு செல்லும் முயற்சியில் பாடப்பட்டன. பொருநர்கள் அன்றைய வாய்மொழி மரபில் மையமாக இருந்தனர். வாழ்க்கை பற்றிய, இவ்வுலகு பற்றிய காட்சிப்புலன் நோக்கர்களாக திகழ்ந்தனர். உலகம் கடந்த மனோபாவத்தை பெற்றிருக்கவில்லை. வறுமை வாழ்வானாலும், வளமை வாழ்வானாலும் அவற்றைக்குறித்து யதார்த்த கண்ணோட்டமே கொண்டிருந்தனர். அவர்தம் ஆடல்,பாடல்,இசை மரபுகளெல்லாம் அதனையே மையமிட்டிருந்தன.அதனால் மக்கள் சமூகத்தில் அவர்கள் கொண்டாடப்பட்டனர்.பொருநர் போன்ற வாய்மொழி மரபினரை தம்வசப்படுத்தினால் அரசு, சமயம் போன்ற நிறுவன மேலாண்மையின் ஆணைச்சக்கரத்தை மக்களிடம் கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும் என்ற உள்ளுறைப் பொருண்மையில் தான் அழைக்கப்பட்டு, உபசரிக்கப்பட்டு தம் தனியுடைமை வளப்பெருமைகளை அவர்தம் ஆழ்மனதில் பதித்து மறுபுணர்நிர்மானம் செய்து மக்களிடம் அனுப்ப ஏதுவாக இருக்கும் என்ற நோக்கிலேயே இப்பனுவல்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இக்கண்ணோட்டத்தில் தான் பாணர், கூத்தர், வயிரியர், கோடியர், கண்ணுளர், விறலியர், பாடினி போன்ற வாய்மொழிச் சமூகக் குழுக்களை அன்றைய நிறுவன உருவாக்கங்கள் பயன்படுத்திக் கொண்டன.

பொருராற்றுப்படையினைப் பாடியவர் முடத்தாமக் கண்ணியார் எனக் குறிப்பிடப் படுகிறது.இவரைப்பற்றிய முழுமையான தரவுகள் இல்லை.இவர் பெண்பாற்புலவரா ஆண்பாற்புலவரா என்பதும் அறியமுடியவில்லை. தொல்காப்பிய உரையாசிரியரான சேனாவரையர் தம் உரையில் இவரை மேற்கோளாகக் காட்டியுள்ளார்.

“இயற்பெயர் முன்னர் ஆரைக்கிளவி

பலர்க்குரிய எழுத்தின் வினையொடு முடிமே” (தொல்.இடை-21)

இந்நூற்பாவிற்கு உரையில் “ஆர் விகுதி பன்மையோடு முடிதற்குச் சான்றாகக் குறிப்பிடுவார் பெருஞ்சேந்தனார் வந்தார் முடவனார் வந்தார், முடத்தாமக்கண்ணியார் வந்தார் எனவும் நரியார் வந்தார் எனவும் வரும்” எனக்குறிப்பிடுவார். இதன்வழி உ.வே.சா குறிப்பிடுவார் இவர்தம் இயற்பெயர் முடத்தாமக் கண்ணியாகும். இப்பனுவல் அகவல் யாப்பினால் பாடப்பட்டது. 248 அடிகளையுடையது. இந்நூல் வாய்மொழி மரபினுடைய வெகுசனப் புலத்தை எழுத்து மொழி மரபான அதிகாரப்புலத்துடன் இணைப்பதை அறியலாம். இருதளங்களிலிருந்து கருத்தியல்கள் இணைக்கப்பட்டு அதிகாரப்புலம் உருவாக்கப்படுகின்றன.

இப்பனுவலை மூன்றுவிதக் கருத்தியல் வகைப் பகுதிகளாக வகைப்படுத்தலாம்

முதல்பகுதி -  சுயாதீன வாழ்கைச் செயல்பாடுகள்

இரண்டாம் பகுதி - கருத்துப்பரப்புரை செய்யும் பகுதி

மூன்றாம்பகுதி - பேரரசு உருவாக்கத்திற்கான முன்னெடுப்புகள்

முதல்பகுதியானது பொருநனை விளித்துப் பேசுவ­திலிருந்து காடுறை அணங்கை அமைதிப்படுத்துவது வரை (1-52) அடிகளாகும். இப்பகுதி பூர்வகுடிகள் வழி மரபினரான இனக்குழுச்சமூகத்தின் சுயாதீனச் செயல்பாடுகளை உணர்த்துகிறது. ‘சுயாதீனம்’ என்ற சொல்லுக்கான அர்த்தத்தை கண்டுணர்ந்து கொள்வது புரிதலுக்கு அடிப்படையாக அமையும். ‘தி வோல்ட் புக் என்சைக்ளோப்பிடியா’ சுயாதீனம் என்ற சொல்லிற்கு “மக்கள் முழுமையான சுயாதீனத்தைக் கொண்டிருப்பதற்கு அவர்கள் எவ்விதமாகச் சிந்திக்கிறார்கள் பேசுகிறார்கள் அல்லது செயல்படுகிறார்கள் என்பதன் பேரில் எந்தக்கட்டுப்பாடுகளும் இருக்கக்கூடாது. தங்களுக்கான தெரிவுகளை அவர்கள் அறிந்தவர்களாகவும், அந்தத் தெரிவுகளில் ஒன்றைத் தெரிந்து கொள்ள உரிமையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்” எனக் குறிப்பிடுகிறது. மனிதபரிமான நோக்கில தொடக்கச் சமூகம் எவ்வித நிறுவன புறவிசை அழுத்தத்திற்கும் உட்படாத தன்னாற்றல் பெற்ற கூட்டுச்சமூக அமைப்பாகும். உணவு தேடுதல் தொடங்கி முறையான வேளாண்மைச் சமூகம் பரிணமித்த காலம் தொடர்ச்சியாக மனிதனுக்கு உணவின் அவசியம் உயிர் வாழ்வதற்கான மூச்சுக்காற்றாக வருவது இயல்பானவொன்று.

அன்றைய சமூகத்தில் அலைந்து திரியும் மனிதர்களின் போராட்ட வாழ்வில் சோற்றின் முக்கியத்துவம் பெரிதும் உணரப்பட்டது.சோறுகண்ட இடம் சொர்க்கம் என்பது ஒரு கேலிக்குரிய சொற்றொடர் அல்ல அது யதார்த்தத்தின் குறியீடு ஆகும். மக்கள் குழுவாகக் கூடுமிடங்களில் சோறு முதன்மை ஆகாரமாக விளங்கும். பொருநர்கள் கூட்டுச்சமூக வழியமைப்பைக் கொண்டவர்கள். குழுவாய் இருப்பதும், பயணிப்பதும், குழுவாகக் கூடுவதும் அவர்தம் வாழ்க்கைச் செயல்பாடுகள் குழுவாகக் கூடும்போதும் மகிழ்ச்சியின் கனமாக அது விளங்கும். அது நாளடைவில் விழாக்களாக உருப்பெறும். பொருநராற்றுப்படையில் விழா எனும் பொருள்படும் ‘சாறு’ எனும் சொல் சோற்றை மிகுதியாக வழங்கப்படும் களமாகக் குறிப்பிடப்படுகிறது. சோறு பொதுவுடைமைப் பொருளாகக் காட்டப்படுகிறது. இச்சோறு வழங்கப்படும் பல புலத்தை நாடி பொருநர் சமூகம் நகர்ந்துள்ளது.

“சோறுநசை உறாஅது வேறுபுலம் முன்னிய விரகு அறி பொருந! (பொ.ஆ.45)

சோறு எனும்சொல் பழந்தமிழ் பனுவல்களில் பல்வேறு இடங்களில் பேசப்படுகிறது. தமிழ் மொழியில் உணவைக் குறிக்கும் 27 விதமான சொற்களில் ஒன்றாகச் சோறு குறிப்பிடப்படுகிறது. அடிசில், போனகம், மூரல், அமலை,அயினி, பொம்மல், மடைமிசை, உணா, புழுக்கல், வல்சி, பாளிதம், அன்னம், பதம்,மிதவை, பாத்து, தூற்று, உண்டி, சொன்றி, புன்கம், சரு, அடிசனம், ஊண், கூழ், ஓதனம், புகா, சோறு என சூடாமணி நிகண்டு பட்டியலிடுகிறது. இச்சொற்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பொருளுண்டு. அவற்றுள் சோறு எனப்படுவது ஒரு இயற்கை உணவுக்குள் இருக்கக்கூடிய உண்ணுவதற்கு உகந்த பொருள். அதாவது சமைக்கப்பட்ட உணவு எனலாம்.

“ஏற்றுக உலையே ஆக்குக சோறே” (பு.நா.172)

சோறு என்ற சொல்லினால் பெயர்பெற்ற ஒரு சேரமன்னன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் எனப்படுவன். ஆற்றுப்படை இலக்கியங்களில் இப்பொருநர்க்கூட்டங்கள் சோற்றை நாடி அலைந்து திரிந்துள்ளனர். மருதநிலத்தின் கருப்பொருளான நெல் அதன் தொடக்ககால நிலங்களான குறிஞ்சியிலும், முல்லையிலும் முதன்மைப் படுத்தப்பட்ட பொருளாக இருக்க முடியாது. குறிப்பாக இனக்குழுச் சமூகத்தில் தினை, வரகு, சாமை, முதிரை போன்றவைகள் தான் முக்கியத்துவம் பெற்றிருக்கும். அதனால் தான் வாய்மொழி மரபிலான இக்கூட்டங்கள் திணையரிசியின் பெருஞ்சோற்றையே உணவாகக் கொண்டுள்ளனர். பாலை யாழின் அமைப்பைப் பற்றி பேசும்போது பந்தலிடை தொடுக்கப்பட்டுள்ள நரம்புகளுக்கு உவமையாக தினையரிசியே ஒப்புமைப்படுத்தப்படுகிறது.

“ஆய்தினை யரிசி அவையல் அன்ன

வேய்வை போகிய விரல்உளர் நரம்பின”; (பொரு.ஆ.-16-17)

இவ்வாற்றுப்படை பனுவல்களில் பாடினி, விறலி குறிப்பாக தலை தொடங்கி பாதம் நோக்கிய விதத்தில் வருணனைகள் அமையும். பெண்ணை மையப்படுத்திய உலகம் என்பதைச் சுட்டுகிறது. ஆணைக் காட்டிலும் பெண்மை பெருமதிப்பிற்குரிய பாலினமாக முன்வைக்கப் படுகிறது. இவ்வருணனையில் வெளிப்படையாகவோ, மறைவாகவோ கருதப்படும் அனைத்து உறுப்புகளும் சமனிலைப்பாட்டுடன் புகழுரைகள் அமையும். இது விலக்கப்பட்டவொன்றாகவோ, தீட்டுக்குரியதாகவோ எவ்வகைக் குறியீடும் அமையாது. பிற்கால கருத்துமுதல்வாத போக்கில் பெண் புறந்தள்ளப்பட்டவளாகவும், அவள்தம் உறுப்புகள் தீட்டுக்குரியதாகவும் ஆக்கப்பட்டன. குறிப்பாக வைதீகத்தின் விசேட தருமங்களான வருணத்தையும், ஆசிரமத்தையும் புனிதமிழக்கும் கருத்தியலாக பெண்ணுறுப்புகளும், பெண் நோக்கிய பார்வைகளும் அமைந்தன. ஆனால் தேய்ந்து போன வாய்மொழிமரபினரான பொருநர் போன்ற சமூகக்கூட்டங்கள் பெண்மையை மையப்படுத்தியள்ளனர். கூந்தல் தொடங்கி பாதம் வரை பெண்ணின் உறுப்புகளைப் பல்வேறு உவமைகளால் போற்றியுள்ளனர்.

கூந்தல்-ஆற்றுமணல், நெற்றி-பிறை, புருவம்-வில், கண்கள்-மழை, வாய்-இலவம்பூ, பற்கள்-முத்து, காது-மகரக்குழை, கழுத்து- நாணம், தோள்-மூங்கில், விரல்- காந்தள், நகம்-கிளிவாய், முலைகள்-ஈர்க்கு இடைபுகா வளமை கொப்பூழ்-நீர்ச்சுழி, நுண்ணிடை-உணரப்படா, அல்குல் - மேகலையின் பொழிவு, தொடை-யானையின் துதிக்கை, கனைக்கால்-பொருந்திய மயிர், பாதஅடி- விரைந்து ஓடிய நாயின் சிவந்த நாக்கு மொத்தத்தில் பாடினி- பெண் மயிலென்று வருணிக்கப்பட்டுள்ளது.பாடினியின் அனைத்து உறுப்பு நலன்களும் வேறுபாடின்றி பேசப்படுகின்றன. இது தாய்வழிச்சமூகத்தின் மீதி மிச்சமுள்ள எச்சங்களைத்தான் இப்பனுவல்கள் பதிவு செய்துள்ளன.

பெண்ணின் உச்சி தொடங்கி அடிவரை போற்றும் இப்பாங்கு பின்னால் வளர்ச்சி கண்ட சமயநோக்கில் ஆண்நோக்கிய பார்வையில் மாற்றம் பெற்று பாதம் தொடங்கி உச்சி செல்லும் மாற்றுப் போக்கை பெற்றன. இது அரசஉருவாக்கத்தின் வழி போற்றப்பட்டு முழுக்க ஆண் கடவுளைப் போற்றும் தத்துவமாக மாறிப்போனது. அதன்வழி தோற்றம் பெற்றது தான் பதாதி கேசம் கேசாதிபாதம் என வகைப்படுத்தப்பட்டது. பெண்மையைப் பின்னுக்கு தள்ளி ஆணை முன்னிலைப்படுத்தியது. பேண்மை துன்பத்தின் வாயில்கள் எனவும் அது உலகியல் கடந்த பேரின்ப மறுப்பிற்கான மாயை என எதிர்நிலை மாற்றம் பெற்று ஆளுமையின் குறியீடாக ஆணை முன்னிலைப்படுத்தியது. பிற்காலத்தில் அது மேலும் வலுவடைந்து வைதீக பின்புலத்தில் இவ்வுறுப்பு நலன்கள் துதிகளின் அடிப்படையில் போற்றிப்பாடப்படும் தேவதா ரூப வர்ணணைகளாக மாறிப் போனது. ஆண்கடவுளானால் பாதம் தொடங்கி பாதாதி கேசமாகவும் பெண் கடவுளானால் கேசாதிபாத அந்தமாகவும் பிரிக்கப்பட்டது. ஆணழகைப் பாடுகையில் வெளிப்படத் தெரியும் உறுப்புகள் முதன்மைப்படுத்தப்பட்டன. மறைவான உறுப்புகள் மறைக்கப்பட்டன. பாதத்தை முதன்மையாகக் கொண்டு தலைவரை கீழிருந்து மேல்நோக்கி அமைகின்றது. பாதத்தில் தொடக்கம் என்பது அனைத்தையம் ஒருங்கே கொணர்ந்து தனக்கு கீழ்அடிபணியும் தஞ்சமாகக் கொள்வதும் பிறவற்றின் சுயத்தை இழக்கச் செய்வதுமான போக்கு எனலாம். அதன் விளைவாக அனைத்தையும் தனக்குக் கீழ் ஆளும் அதிகாரத்தை தாமாகவே பெற்று விடுகிறது. வைதீக தத்துவ நோக்கில் ‘சரணாகதி’ என்பர். எவ்வித முயற்சியையும் கைவிட்டு உடல், மன, ஆன்ம அளவில் பரம்பொருளுடன் முழுமையாக ஒப்புவிக்கும் பக்திநெறி எனலாம். பிரமம் மட்டுமே நிலையானது என்று அதனில் சரணடைந்து அதன் புகழுரைகளை மட்டும் நீங்கா நினைவாக கொண்டிருப்பவர்களுக்கு உறுதியாக நற்கதி கிட்டும் என்று கருத்தியல் கட்டுமானத்திற்கு அடிக்கல்லாய் அமைந்தது தான் மண்ணில் திருவடி புகழுரை ஆகும். ஒருமைக்குள் பன்மைத்துவத்தைப் புதைக்கின்றது.

அதிககாரம் என்ற ஒற்றை குறியீட்டின் மூலம் பன்மைத்துவ ஆற்றலை வலுவிலக்கச் செய்யும் வழிமுறையாகும். தனக்கென்று எதுவுமில்லை அனைத்தையும் அவன்பால் தாமாக முன் வந்து சரணாகதி அடைவது எனலாம். பொருநராற்றுப்படையில் காடுறை தெய்வத்திற்கு கடன் கழித்தல் பகுதி அன்றைத் தாய்வழிச் சமூகத்தின் தாய்த்தெய்வங்களின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

‘காடுறை கடவுட்கண் கழிப்பிய பின்றை’

பெண் தெய்வங்களான காளி, கூளி, கொற்றவை போன்ற பெண் தெய்வங்களை அமைதிப்படுத்துவதற்கான முறைகள் காட்டப்படுகிறது. பின்நோக்கிய காலங்களில் அவைகள் ஆண் தெய்வங்களைச் சார்ந்து நிற்கும் பெண் தேவதைகளாக ஆற்றல் இழந்தன. கொல்லிப்பாவை, அணங்கு, தவ்வை, இயக்கி போன்றன எனலாம்.

இவ்வாற்றுப்படையின் மையப்பகுதியாகக் கருத்துப் பரப்புரை அமைகின்றது. கருத்துப்பரப்புரை என்பதை ஆங்கிலத்தில் ‘Propaganda' என்பர். உண்மைத்தன்மை அறியாத ஒன்றை சிறிதும் அறியாதவர்களுக்கு விரித்தும் தொகுத்தும், புனைந்தும், பகுத்தும் மற்றவர்களை ஈர்க்கும் வண்ணம் ஆவலை உண்டுபண்ணி தம் கருத்தைப் பரப்பும் செயல்முறை எனலாம். இவை ஓர் உள்நோக்கத் தன்மையில் ஒரு சார்ப் பார்வையை நிலைநிறுத்த இயலும். இப்பரப்புரைகள் மாற்றுக் கருத்து உண்மைகளை மறைத்தோ, புறக்கணித்தோ கூறப்படுவதும் உண்டு. அதாவது பெரும்பரப்பிற்குள் எந்தவித எதிர்ப்புமின்றி தம் கருத்தை நிலைநாட்டுவது. சுயநலத்தை பொதுநல அக்கறை மனப்பான்மையில் காட்டுவது. இதுபோன்ற ஒருபக்கச் சார்புடைய பரப்புரைகள் பிழையான கருத்தியலைக்கூட முன்னிறுத்தி மெய்படக் காட்டுவதும் இயலும்.சுயஉரிமை முடிவுகளை எடுக்கவிடாமல் தம் அதிகாரக் கருத்தியல் முடிவை ஏற்கச் செய்யும் இதன் வழியாக பெருவெளியான மக்கள் சமூகத்தை வாய்ப்பூட்டச் செய்யும் முறை எனலாம்.

பொருள் பெற்ற பொருநன் பெறாதவனை விளித்துப்பேசுவது (53-60) பெறாதவனின் பசியை தமக்குச் சாதகமாக்கி அழைப்பித்துப் பாடுவது (61-70) முடிவில் தன்வயப்படுத்த முயலும் நோக்கு (75-129).

நிறுவன எல்லைக்குட்பட்ட பொருநன் தம்மையொத்த நிறுவன எல்லைக்குட்படாத கூத்து, பாட்டு இசை வாழ்வியலை யதார்த்தச் செயல்பாடாகக் கொண்டு அலைந்து திரியும் பூர்வ நாடோடிக் கூட்டங்களைத் தம்வயப்படுத்தி நிறுவன எல்லைக்குள் கொண்டு சேர்க்க வினைக் கோட்பாட்டைக் கையிலெடுக்கிறான். இயற்கை நெறிக்காலத்தில் மறுமை நோக்கிய கருத்தசைவுகள் மிகுதியாகக் காணப்படவில்லை. மெதுவாக உள்வரத்தொடங்கிய காலம். வினைக் கோட்பாட்டை மறுமைக்கான அடிப்படைக் காரணியாக ஊழ்வினையாகக் கொள்வர். இப்பிறவியிலும் முற்பிறவிகளிலும் ஒருவர் செய்த செயல்பாடுகளுக்கேற்ப அவர்தம் பிறவி பயன் அமையும் என்பர். இப்பிறவியில் அனுபவிக்கும் இன்பம், துன்பம் ஆகியவற்றிற்கும், இறப்பிற்குப் பின் அமையும் வாழ்வியலைத் தீர்மானிப்பதற்கு வினைகளே காரணம் என்பர். இதன் மறைபொருளை உணர்த்தும் விதமாகத்தான் பொருள்பெற்ற பொருநன் பொருள் பெறரதவனைக் கருதிப்பேசுகிறான். அவன் பெற்றிருந்த வறுமை அவனது தீவினையாகவும் தம்மைக்கண்டது நல்வினையாலும் பெற்றது எனக் கூறப்படுகிறது.

“அறியாமையின் நெறிதெரிந்து ஒராஅத்

ஆற்றுஎதிர்ப் படுதலும் நோற்;றதன் பயனே

போற்றிக்கேண்மதி புகழ்மேம் படுந”

பொருள் பெறாதவனின் பசியைத் தனக்கு சாதகமாக்கி அழைப்பித்துப் பாடும் பொருள் பெற்ற பொருநனின் வழிமுறை சிந்திக்கத்தக்கது.

“ஆடுபசி உழந்தநின் இரும்பேர் ஒக்கலோடு

நீடுபசி ஓரால் வேண்டின் நீடுநின்று

எழுமதி வாழி”

 ஆடுபசி, நீடுபசி போன்ற சொல்லாடல்கள் பசி கொடுமையின் ஆழத்தைக் காட்டுகிறது. ஆடுபசி எனப்படுவது கொல்லுதலையுடைய பசி, நீடுபசி என்பது பலகாலமாய் வறுமையில் வாடும் பசிப்பிணியைக் குறிப்பிடுகிறது. ‘இரும்பேர் ஒக்கலோடு’ எனும் சொல் ஒட்டுமொத்த பொருநர்க்கூட்டமும் பசியால் வாடி இருப்பதைக் காட்டி, அம்மொத்த சமூகத்தை தம்ம பேரரசு வட்டத்திற்குள் கரைக்கப்படுவதை அறியலாம்.

பொருநராற்றுப்படையின் 75 முதல் 127 அடிகள் வரை உள்ள பகுதிகள் அனைத்தும் தம்வயப்படுத்தும் நோக்கைக் காட்டுகிறது. “ஒன்றிய கேளீர் போல கேள் கொளல் வேண்டி வேளாண் வாயில் வேட்பக்;கூறி” “கதுமெனக் கரைந்துவம் எனக்கூஉய்”

தொடக்கத்தில் பொருநர்க்கூட்டத்தினரின் பெருஉணவான தினைச்சோறு இங்கு வலுவிழந்து நெற்சோறு படைக்கப்படுகிறது. பேரரசு உருவாக்கத்திற்கான மருதத்தின் கருப்பொருளான நெற்சோறு படையலுடன் உண்பிக்கப்படுகிறது.

“முகிழ்ந்தகை முரவை போகிய முரியா அரிசி

விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்”

இனக்குழுச் சமூகத்தில் வயிற்றுப் பசியைப் போக்கும் வாழ்க்கைப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளி பசியே எனலாம். கூட்டமாக இருந்து வாழ்வியல் நடத்தைகளைச் செலவிட்ட காலம் வரை மனிதனுக்கு உணவு பொதுவாயிருந்தது. அது உடைமைச் சமூகத்தில் பசியும் பிணியும் பிரித்து வைக்கப்பட்டது. பொதுவுடைமையான உணவு தனியுடைமையாக்கப்பட்டு உற்பத்தி உபரியாகச் சேகரிக்கப்பட்டு ஆளுவோரின் உடைமையாகிப் போனது. இது அதற்கடுத்த நிலையில் உயர்வு தாழ்வு எனும் தகுதிக்கான படிநிலைகளை உருவாக்கியது. அதன் விளைவாக ஈதல், கொடை போன்ற சமூக அறங்களாக மாற்றம் பெற்றன. கொடுப்பது ஈகை எனவும் பெறுவது இரத்தல் எனவும் வேறுபாடுகள் கற்பிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாகத்தான் புறநானூற்றின் 141வது பாடல் வையாவிக்கோப்பெரும்பேகனின் கைவண்மையைப் புகழ்ந்துரைக்கும் பரணர் இருவகை ஈகைத்திறத்தை வகைப்படுத்துகிறார். ஓன்று மற்றவரின் வறுமை நோக்கிய ஈகை மற்றொன்று தம்வறுமை நோக்கிய ஈகை

“எத்துணை யாயினும் ஈத்தல் நன்று என

மறுமை நோக்கிற்றோ அன்றே பிறர்

வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே”

மேலும் தமிழ்ச்சமூகத்தின் அடுத்த அறஇலக்கிய காலங்களில் அரசனுக்குரிய ஆறு அடையாளக் கருத்தியல்களில் ஒன்றாக கூழ் முன்வைக்கப்படுகிறது.

பொருநராற்றுப்படையின் இறுதிப் பகுதிகள் பேரரசு பரவலாக்கத்தின் உருவாக்கத்திற்கான முன்னெடுப்புகளைச் செய்கின்றன.கரிகாற்சோழனின் பெருமைகளை விளித்தும் விரித்தும் பேசுகிறது. இம்மன்னன் இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவன். முற்காலச்சோழ மரபில் பெயர் பெற்றவன். தம் தாய் வயிற்றில் இருந்தபோதே தந்தை இளஞ்சேட்சென்னி இறந்ததால் அரசு உரிமை பெற்றான் என மிகைப்படுத்திய செய்தியும் உண்டு. சோழர் குலத்தை ஒரு குறுநில எல்லையிலிருந்து காஞ்சி முதல் காவேரி வரை நிலவெல்லை விஸ்தரிப்பிற்கு வித்திட்டவன். இவன்தம் வெண்ணிப்போர் சேர பாண்டியரை வென்று பெருவேந்தநில எல்லை விஸ்தரிப்பிற்கு கருவியாகக் காட்டப்படும். பேரரசு எனப்படுவது ஒற்றை அதிகாரக் கையிருப்பைக் கொண்ட அரசமுறை உருவாகிய காலகட்டத்தில் சிறுநாடுகளும், பல்வேறு இனக்குழுக்களும் போர்களின் மூலம் ஒடுக்கப்பட்டு இணைக்கப்படும். இதன் எதிர்வினையாக பேரரசுகள் உருவாகும். எனவே பேரரசு என்பது பல பிரதேசங்களைக் கொண்ட பல்வேறு சமூகப் பிரி­வினரைக் கொண்ட ஒர் அரசியல் அலகு எனலாம். அதிகார மையப்புள்ளி வட்டத்தின் அனைத்து விளிம்புகளையும் கட்டுப்படுத்தும். இதற்குள் வாழும் வெவ்வேறு மக்கள் வெவ்வேறு வகைகளான உரிமைகளைப் பெறுவர். மாற்று மரபுடைய மக்கள் பொதுமரபுக்குள் கொண்டு வரப்படுவர். பேரரசின் இன்றைய மாற்று வடிவங்கள்தான் காலனித்துவம், ஏகாதிபத்தியம், உலகமயமாக்கம் என விரிந்து செல்லும்.

பழந்தமிழ்க்காலம் என்பது கி.மு.600 இல் கி.பி 200 வரை உள்ள காலம் என்பர். தமிழகத்தில் அரச உருவாக்கம் குறித்த கருத்தியல்கள் உண்டு. நகர உருவாக்கத்தின் விரிவாக்கமே அரசு உருவாக்கம் என்பர். காட்டை நாடக்கி வேளாண் சமூகத்தின் உருவாக்கத்தின் எதிர்வினையாய் சிற்றூர்களின் தொகுப்புகளும், பேரூர்களின் பட்டியல்களும் விரிவாக்கம் பெற்றன. வேளாண்மையில் பெற்ற உபரி சிறுதொழில் வகைமைகளை உருவாக்கியது. சொத்துரிமை ஆணுக்குடையதாக்கப்பட்டது. பல தொழில்களின் வளர்ச்சி பெரு நகரங்களை உருவாக்கின. பெருநகரங்களின் சேர்மங்கள் பேரரசுகளாகத் தோற்றம் பெற்றன. அதற்குள் பலதரப்பட்ட இனமரபுகள் கரைக்கப்பட்டு தேசியமரபுகளாக்கப்பட்டன.

கிரேக்கம், ரோமம், எகிப்து, சுமேரியா, இந்தியா போன்றவைகளும் அதன் வழி வந்தவைகளே, வடஇந்தியா மகதப் பேரரசு பல இனக்குழுக்களான ஜனபதங்களைத் தமக்குள் கரைத்துக்கொண்ட நகரப் பேரரசுதான். இப்பேரரசு அங்கம், அஸ்மகம், அவந்தி, சேதி, காந்தாரம், கம்போஜம், காசி, கோசலம், குரு, மகதம், மல்லம், மத்சயம், பாஞ்சாலம், சூரசேனம், வஜ்ஜி, வத்சம் என பதினாறு இனக்குழுக்களைத் தமக்குள் கரைத்துக் கொண்டது.

தமிழகத்தில் உருப்பெற்ற சோழர்களின் காலத்தை நான்கென வகுப்பர். முற்காலச்சோழர்கள், இடைநிலைச்சோழர்கள், ஏகாதிபத்திய சோழர்கள், பிற்காலச் சோழர்கள். கி.பி.11 நூற்றாண்டுக் காலப்பகுதியில் சோழர்கள் பரந்துபட்ட நிலத்தின் ஆட்சியாளர்களாக விளங்கினர். சோழப்பேரரசு தமிழகம் மட்டுமல்லாது கடல் கடந்த நிலையிலும் தம் அதிகாரத்தைப் பெற்றிருந்தது.முதலாம் ஆதித்தன், இராஜராஜன், இராஜேந்திரன் போன்ற மாமன்னர்கள் கோலோச்சிய காலம்.இடைநிலை;ச் சோழர்கள் களப்பிரர் காலத்தில் நிலையில்லாமல் சிதறி காணப்பட்டனர். உறையூர் பழையறை போன்ற இடங்களில் புகழ் மங்கி ஆட்சி செய்தனர். நந்திவருமச்சோழன், தனஞ்சயச்சோழன் போன்றோரே பொருநராற்றுப்படையில் பாடப்பெறும் கரிகால்சோழன் முற்கால சோழமரபில் வருபவன். பெரும்புகமுடையவனாக பழந்தமிழ் பனுவல்களில் பேசப்படுபவன். இளஞ்சேட்சென்னியின் மகன் திருமாவளவன், பெருவளத்தான் எனப் பெயர்பெறுபவன்.

இம்மன்னன் சோழர் மரபை குறுநில ஆட்சியுரிமையில் இருந்து காஞ்சி தொடங்கி காவேரி வரையும் விரிவுபடுத்தியவன். இவன் தலைமையேற்று நடத்திய போர்கள் இலக்கியங்களில் சிறப்பித்துப் பேசப்படுகின்றன. வெண்ணிப்போர், வெண்ணிவாயில் போர், வாகைப்போர் போன்ற போர்கள் இவர்தம் வீரத்தை சிறப்பித்துக் கூறப்பெறும். கரிகால் வளவனது சிறப்புகள் - வெண்ணிப்போர் வெற்றி, கொடையின் சிறப்பு, சோழநாடடின் வளமை, நிலமயக்கமும், நல்ஆட்சியும், காவிரியின் வெள்ளச்சிறப்பு, நாட்டுவளம் (151-248) போன்ற பகுதிகள் பேரரசு உருவாக்கத்திற்கான முன்னெடுப்புகளைக் காட்டுகின்றன.

குறிப்பாக இம்மண்ணின் குலப்பெருமை குறித்த பதிவுகள் பேரரசு உருவாக்கத்திற்கான கருத்தியல் சேர்மங்களை இணைக்கின்றன.

“உருவப்பல்தேர் இளையோன் சிறுவன்

முருகற் சீற்றத்து உருக்கெழு குரிசில்

தாய் வயிற்றிலிருந்து தாயம் எய்தி”

குடிமரபு குறித்து கைலாசபதி “ஒருவனுடைய சிறப்புமிகு குடிவழி அவனுக்கு ஒரு கவர்ச்சியைத் தருவது ஒரு இன்றிமையாத செயலாகலாம். வீரன் ஒருவன் வீரத்தாலும் துணிவாலும் மட்டுமின்றி அவனுடைய குடிவழியாலும் அவன் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறான்.அவனுடை தொடர்புகள் தெய்வீகமானவையோ மனிதத் தன்மையுடையவையோ அவனுடைய முன்னோர்கள் பெரியோராவர். அவர்களிடமிருந்து வீரன் ஓருவன் அறிவுற்றதையும் உணர்ச்சியையும் பெறுகிறான்.” எனக் குறிப்பிடுவது இங்கு சிந்திக்கத் தக்கது. கரிகாற்சோழனின் குலமரபை பேசிய முடத்தாமக்கண்ணியார் பொருநன் வழியாக அவன்தன் அரசுரிமையை மரபுவழிப்பட்டது என ஒற்றை அதிகாரத்தை வென்று தன் பிறப்போடு இணைக்கிறார்.மேலும் கரிகாலனின் வீரத்தை மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது எனக் கட்டமைக்க குறிஞ்சி தெய்வமான முருகனோடுப் பொருத்திப்பார்கிறார்.பல்வேறு தனித்தன்மையுடைய இனக்குழுக்களை ஒன்றிணைத்து தமக்குள் கரைத்துப் பேரரசின் உருவாக்கத்திற்கான சேர்மங்கள் எனலாம்.கட்டாயத்தினாலோ வலிந்தோ இணைக்கப்பட்ட இத் தொல்குடி சமூகத்தினரிடம் எதிர்ப்புணர்வு வெளிப்படாதவாறு அவர்களை மனதளவில் மட்டுப்படுத்த இதுபோன்ற கருத்திணைவுகள் கையாளப்பட்டிருக்கின்றன.

பேரரசு உருவாக்கத்தின் காரணிகளில் முக்கியமானதொன்று போர் செய்தலாகும். பல்வேறு பண்பாட்டுத் தளங்களையுடைய இனமரபுகளை தனக்குள் கொண்டு வரவும், மையஅதிகாரத்தை விளிம்பு வரை கொண்டு செல்லவும் போர்கள் வழியாக இருக்கின்றன. போர் என்பது பல்வேறு நாடுகளின் படைகளுக்கிடையில் நடைபெறும் ஒழுங்கமைந்த வன்முறைகளை வெளிப்படுத்தும் பிணக்கு எனலாம் என்று கார்ல்வொன் குளோவிட்ஸ் குறிப்பிடுவார். “போர் என்பது வேறு வழிமுறைகளில் நடக்கும் தொடர்ச்சியான அரசியல் ஊடு தொடர்பு" எனக் குறிப்பிடுவார். ஜான்கீசன் ‘Histry of war Fare’ என்னும் நூலில் குறிப்பிடுவார்.”போர் என்பது ஒர் உலகளாவிய தோற்றப்பாடு என்று அதை நடத்தும் சமூகத்தைப் பொறுத்து அதன் வடிவமும் வீச்செல்லையும் வரையறுக்கப்படுகின்றன.” போர் எனும் சொல் ‘பொரு’ அல்லது ‘பொருவுதல்’ எனும் அடிச்சொல்லிலிருந்து பிறந்ததாகும்.

பழந்தமிழில் நாடு பிடிக்கும் போர்களில் தகடூர்ப் போர், தலையாலங்கானத்துப் போர், திருக்கோவிலூர் போர், வாகைப்பறந்தலைப் போர், வெண்ணிப் போர், காந்தளூர் சாலைப் போர் போன்ற போர்கள் குறிப்பிடத்தக்கவை. பேரரசு உருவாக்கத்திற்கான கருத்தியல்களைக் கட்டமைத்தவுடன் அவற்றை நடப்பிக்கும் கருவிகளாகப் போர்கள் அமைந்தன. போரைப் புகழ்ந்து பாடிய எழுத்து மரபுடைய புலவர்கள் வெற்றி பெறும் மன்னனைப் புனைந்து பாடப்பட்ட பல புகழூரைப் பாடல்கள் பிரதேசங்களை ஒன்றிணைப்பதற்கான கருத்தியல் கூட்டச் சேர்மங்களே. கரிகால் சோழன் நிகழ்த்திய வெண்ணிப்போரும் இத்தன்மைத்தே. பெருஞ்சேரலாதனையும் பாண்டிய மன்னவியும், பதினொரு வேளிரையும் வென்றது சோழப்பேரரசு உருவாக்கத்திற்கான தோற்றுவாய்களே. வேளீர் என்போர் இனக்குழு மரபில் வந்தவர்களே புறநானூற்றில் ‘பண்கெழு வேந்தரும் வேளிரும்’ எனப்பிரித்துக்காட்டும். பேரரசு உருவாக்கத்தில் இவ்வேளீர் மரபுகள் கரைக்கப்பட்டு சேர்க்கப்பட்டன. மன்னனின் தாள்நிழல் வணக்கம் செய்ய வைப்பது சரணாகதி அடைவதற்கான வழிமுறைகளே. கரிகாலன் திருவடிகளை தொழுதால் பெறப்படும் கொடைகள் பற்றி நீண்ட பட்டியல்களே தரப்படுகிறது.

அலைகுடிகளை நிரந்தரக்குடிகளாக்க உருப்பெறச் செய்வதற்கான சன்மானங்கள் அழுக்காடை நீக்குதல்,பொற்காலத்தில் உண்ணக்கட்டாயப் படுத்தல்,கள்ளும்,ஊணும் மிகுதியாகப் பெறல்

‘தண்பணை தழீஇய தளரா இருக்கை

நன்பல் ஊர நாட்டோடு’

இவ்வரியில் இடம்பெறும் ‘தளரா இருக்கை’ நிரந்தரக் குடியிருப்புகளை உருவாக்குவதற்கான வழிமுறைகள். கி.பி. 11ஆம் நூற்றாண்டில் உச்சம் தொட்ட சோழப் பேரரசு உருவாக்கத்திற்கான முன்னெடுப்புகள் தான் இப்பொருநராற்றுப்படையின் கருத்தியல் கட்டுமான உருவாக்கங்கள், நில அளவைகள் (மாமாவின் வயின்வயின் நெல்) மருதநில உருவாக்கம் (அறைக்கரும்பின் அரிநெல்லின்) போன்ற வரிகள் பிரதிபலிக்கின்றன. இவ்வாற்றுப்படையில் பேசப்படும் திணை மயக்கங்கள் பரந்துபட்ட நில இணைப்பைக் காட்டுகிறது. கருப்பொருள்களின் இடப்பெயர்வு, பண்டமாற்றம் போன்றன இதனைச் சுட்டுகின்றன. “தன் வைப்பின் நால்நாடுகு­ழீஇ’ மண்மருங்கினான் மறுஇன்றி ஒரு குடையான் ஒன்று கூற’’

இப்பனுவலில் இறுதியாகப் பேசப்படும் காவிரியின் பெருமைகள் மக்களின் வாழ்வாதாரத்திற்கான நம்பகத்தன்மையை உருவாக்க இயற்கையே திரிந்தாலும் காவிரிநீர் குறையா. அதன் வளர்ச்சியாக மருதநில உருவாக்கமும், அதன் எதிர்வினையாக உபரி உற்பத்தியையும் சுட்டி சோழரின் ஒற்றை அதிகாரக் குறியீட்டை பதிக்க முனைந்திருப்பதை அறிய முடிகிறது.

- முனைவர் சூ.ஜா.இதயராஜா, தமிழ்த்துறைத் தலைவர், தூய சவேரியர் கல்லூரி, பாளையங்கோட்டை.

Pin It