ஜல்லிக்கட்டை ஆதரித்து உலகெங்கிலும் வாழ்ந்து வருகிற தமிழர்கள் குரல் கொடுத்தார்கள். அதற்கு Ôதை எழுச்சிÕ, Ôமெரினா புரட்சிÕ என நாமகரணங்கள் சூட்டப் பட்டன. இந்த ஜல்லிக்கட்டு பிரச்சினை நாட்டுக் கால்நடைகளின் முக்கியத்துவம் பற்றியும், A1, A2 பால் வகைகள் குறித்தும் நாம் அறிந்து கொள்ள ஓரளவுக்கு உதவியது என்று சொன்னால் மிகையில்லை.

'பால் தேவாமிர்தத்துக்கு நிகரான சத்துணவு என்றும், கால்சியம் நிறைந்தது என்றும் ஊடகங்கள் மூலம் தவறான கருத்துகள் விதைத்து வளர்த்து விடப்பட்டுள்ளன” என்கிறார். 'மெல்லக் கொல்லும் பால்’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கும் டாக்டர் த. ஜெகதீசன். குழந்தைகள் நல மருத்துவரான இவர் மருத்துவத்திலும், மரபியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர்.

இந்தப் புத்தகத்தில் பால் குடிப்பதால் விளையும் கேடுகளை மருத்துவ ஆதாரத்துடன் தெளிவாக எழுதியிருக்கிறார். `பால் குடிக்க மறுக்கும் குழந்தைகளை வற்புறுத்திக் குடிக்க வைப்பது தவறு’ என்கிற செய்தியோடு ஆரம்பிக்கும் புத்தகம் `பசும் பால் குடிப்பது கன்றுக்குட்டியின் பிறப்புரிமை; அயலார் அதில் பங்கு கேட்பது சரியில்லை” என்பதோடு முடிகிறது. உலகில் மனிதனைத் தவிர வேறு எந்தப் பாலூட்டியும் தன் தாயின் பாலைத் தவிர வேறு விலங்குகளின் பாலை உட்கொள்வதில்லை தானே?!

1900 ஆம் ஆண்டுவாக்கில் தினம் நான்கு லிட்டர் பால் சுரந்த பசுக்கள், செயற்கை மாட்டுத் தீவனங்களைச் சாப்பிட்டு 1960 ஆம் ஆண்டுகளில் பத்து லிட்டர் பால் தரத் தொடங்கின. ஆனால் தற்போது இந்த ஹார்மோன் மருந்தின் உதவியால் கலப்பின பசுக்கள் தினம் முப்பது லிட்டர் பால் சுரக்குமளவுக்குத் தரம் மாறிவிட்டன. இதைத் தான் `வெண்மைப் புரட்சி’ என்று உலக மக்கள் புகழ்ந்து கொண்டாடி வருகின்றனர். இந்த விபரீதப் புரட்சியின் பக்கவிளைவுகளை மனித குலம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

பால் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் ஆகும் அதோடு இரத்தசோகை நோய், இரத்தப் புற்றுநோய், இதய நோய்கள், கண்புரை நோய், இளவயதில் முதுமையும் ஞாபகசக்தி குறைபாடும், மூளைப்பிறழ்வு நோய் (ஆட்டிசம்), இளவயது சர்க்கரை நோய், குழந்தை களிடையே மலச்சிக்கல் போன்ற எண்ணற்ற நோய் களின் ஊற்றுக்கண் நாம் தினந்தோறும் அருந்தும் பால் தான்!

தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஆசிரியர் அதில் இருக்கும் கால்சியமும், பாஸ்பரசும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்குப் போதுமானது என்றும் அதன்பின் நமக்குத் தேவையான கால்சியத் தையும் மற்ற கனிமங்களையும் கீரை வகைகள், பச்சைநிறக் காய்கறிகளிலிருந்தே பெற்றுக் கொள்ளலாம் என்றும் சொல்கிறார். தாவரங்களில் இருக்கும் குளோரோபில் என்னும் பச்சையத்தில் மக்னீசியம் நிறைந்திருக்கிறது. காய்கறிகளிலிருந்து கிடைக்கும் கால்சியம் முதல் தரமானது என்றும் பாலிலிருந்து கிடைக்கும் கால்சியம் தரம் குறைந்தது என்றும் அது எலும்புச் சிதைவு நோய்க்கு வழிவகுக்கும் என்றும் நூலாசிரியர் எச்சரிக்கிறார்.

அதிக அளவில் பால் அருந்துபவர்கள் இரத்த சோகை நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் பெண்கள் கர்ப்ப காலத்தில் பால், டீ, காபி, பால் சார்ந்த பானங்கள் எதுவும் அருந்தாமல், சுத்தமான தண்ணீர் அல்லது பழச்சாறு மட்டுமே அருந்துவது குழந்தையின் உடல் நலத்துக்கு மிகச் சிறந்தது  என்றும் கூறுகிறார்.

A1, A2 பீட்டா கேசின், பீட்டா கேசோமார்பின் -7 (BCM 7) என்றால் என்ன, அது எப்படி நம் உடம்பில் பல விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதையும் ஆசிரியர் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார். பால் குடித்தவுடன் லேசாக கண்ணயர்வதற்கானக் காரணம் அதிலிருக்கும் கேசோமார்பின் தான்!

பன்னாட்டு பால் பொருள் தயாரிப்புகள் அனைத்தும் A1 கலப்பினப் பசும் பாலிலிருந்தே உற்பத்தி செய்யப்படுகின்றன. நமது நாட்டின் பல கிராமங்களில் குழந்தைகளுக்கு A-2 விலங்குகளான ஆடு, காராம் பசு ஆகியவற்றின் பாலைப் பயன்படுத்துவது சற்று ஆறுதலான செய்தி. பசும் பால் அல்லது பசும் பாலிலிருந்து தயாரிக்கப்படும் பவுடர்பால் குடிக்காமல், இரண்டு வயது வரை தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைகளை இன்சுலின் தேவைப்படும் சர்க்கரை நோய் - T1 DM தாக்குவதில்லையாம். உலகிலேயே அதிக அளவில் தனி மனிதர்கள் பால் அருந்தும் நாடுகளான  பின்லாந்து, ஸ்வீடன், நார்வே, டென்மார்க் ஆகிய நாட்டுக் குழந்தைகளையே இந்த நோய் அதிகம் பாதித் துள்ளதாக பல புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக ஆசிரியர் கூறுகிறார்.

எனவே தங்களுடைய அழகைப் பாதுகாக்கும் பொருட்டும், ஊடகங்களின் மூலம் பன்னாட்டு பால் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் செய்யும் பொய் பிரச்சாரத்திலும் மயங்கிவிடாமல் குழந்தைகளுக்கு முடிந்தமட்டும் தாய்ப்பால் கொடுக்க வேண்டுமென்றும், அதன்பின் காய்கறிகள் அதிகம் சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்குத் தேவையான கால்சியமும் மற்ற கனிமங்களும் கிடைக்குமென்றும் இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

புத்தகத்தின் இறுதியில் அதிக ஆபத்தை உருவாக்கும் பால் பொருட்கள் (ஐஸ்க்ரீம், மில்க்«க்ஷக், கோல்ட் காஃபி முதலியவை), குறைந்த ஆபத்தை உருவாக்கும் பால் பொருட்கள் பட்டியலும் (பனீர் மட்டர், பால்கோவா, பால் அல்வா, தூத் பேடா, மில்க் பிஸ்கெட்டுகள், ரசகுல்லா போன்றவை), இந்நூல் எழுதுவதற்கு உதவிய ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் குறித்த குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளன. தாய்ப்பாலின் அவசியம் குறித்தும், பாலினால் விளையும் தீமைகள் குறித்தும் திரிகடுகம், சிலப்பதிகாரத்திலிருந்தும் ஆசிரியர் மேற்கோள் காட்டியுள்ளார்.

இந்தப் புத்தகம் பாலில் உள்ள நன்மைகள், தீமைகள் குறித்த ஒரு விவாதத்தை துறை சார்ந்த நிபுணர்களிடம் எழுப்பும் என எதிர்பார்க்கலாம். வளர்ந்து வரும் குழந்தைகள் பால் குடிக்க வில்லையே என தாய்மார்கள் ஆதங்கப்படாமல் அதற்கு மாற்றாக சத்துள்ள உணவை சாப்பிடக் கொடுத்து அவர்களை ஆரோக்கியமானவர்களாக வளருங்கள். ஆரோக்கியத்தின் மேல் அக்கறை கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

Pin It