சிசேரியன் என்றால் என்ன?
பெண்கள் கர்ப்பமுற்று, கர்ப்பக் காலத்தில் அல்லது பிரசவிக்கும் நேரத்தில் ஏற்படும் இடர்களைக் களைந்து அடி வயிற்றில் அறுவை செய்து கர்ப்பப்பையில் இருந்து குழந்தையை எடுக்கும் சிகிச்சை முறைக்கு பெயரே சிசேரியன் ஆகும். இதை மருத்துவ வழக்கில் LSCS (Lower Segment Caesarean Section ) என்போம். இந்தச் சிகிச்சைமுறை பன்னெடுங்காலமாக வழக்கில் இருந்து வந்துள்ளது.
இந்தியாவில் கி.மு. 300 களில் மவுரிய அரசு ஆட்சியில் இருக்கும் போது, பிந்துசாரரின் தாயார் கர்ப்பமாக இருக்கையில், தவறாக விஷத்தை உண்டு விட இறந்து விடுகிறார். சந்திரகுப்தரின் ஆசிரியரும் அரசின் ஆலோசகருமான சாணக்கியர், இராணியின் வயிற்றைக் கிழித்து மகவை வெளியே எடுத்ததாக வரலாறு கூறுகிறது. இதே முறை ரோமானிய அரசுகளிலும் புழக்கத்தில் இருந்துள்ளது. இந்தச் சிகிச்சை முறையினால் நாம் அடைந்த நன்மை என்ன?
சுமார் 40 - 50 வருடங்களுக்கு முன்பெல்லாம் இந்த ‘சிசேரியன்’ நமது தமிழ்நாட்டில் அவ்வளவு பரிச்சயம் கிடையாது. கடந்த 30 வருடங்களாக இந்தச் சிகிச்சை நமது தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது. வீட்டில் பிரசவம் நடக்கையில், பிரசவத்தின் போது நிகழும் பல பிரச்சினைகளுக்கு நமக்கு வழி தெரியாமல் இருந்தது. கர்ப்பக் காலப் பரிசோதனைகள் மூலம் கண்டறியப்படும் பல பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு குழந்தை மற்றும் தாயின் உயிரைக் காக்க முன்னெச்சரிக்கையாக சிசேரியன் செய்யப்படுகின்றன.
சிசேரியனுக்கான காரணங்கள்
1. தாயின் இடுப்பெலும்பு குறுகிய தன்மை. இதை Cephalo pelvic Disproportion என்றோம். இதனால் குழந்தையின் தலை கீழே இறங்குவது தடைபடும். பிரசவம் நிகழாமல் குழந்தை உள்ளேயே இறந்து அதன் விளைவாகத் தாயும் இறப்பாள்.
பொதுவாக 140 – 145cm அளவுக்குக் கீழ் வளர்ச்சி உள்ள தாய்மார்களுக்கு, இடுப்பெலும்பு குறுகலாக இருக்கும். இன்னும் வளர்ந்த தாய்மாரில் சிலருக்கும் கர்ப்பக் காலத்திலும் இடுப்பெலும்பு அளவு குறுகலாக இருப்பது கண்டறியப்படுகிறது. சிலருக்குக் குழந்தையின் தலை பெரிதாக இருப்பதால் இந்த நிலை ஏற்படும்.
2. அசாதாரண குழந்தை இருப்பு நிலை. ( Abnormal Presentation) குழந்தையின் தலையானது, கீழ் நோக்கி இருப்பது சாதாரண நிலை. 100 க்கு 95 சதவிகிதம் சாதாரண நிலையிலும், 5 சதவிகிதக் குழந்தைகள் குதம் கீழாகவோ பக்கவாட்டில் படுத்துக்கொண்டோ இருக்கும். இத்தகைய தன்மைகள் ஸ்கேன் மூலம் கண்டறியப்பட்டு இறுதிவரை அவை தலைகீழ் நிலைக்கு வரவில்லையெனில், சிசேரியன் மூலம் எடுக்கப்படுகின்றன
3. தாய்க்கு இரத்தக் கொதிப்பு மற்றும் அதை ஒட்டிய பிரசவத்தின் போது வரும் வலிப்பு நோய் ( இதை Eclampsia) என்று கூறுவோம். இத்தகைய கர்ப்பிணிகளை தொடர் சோதனைகள் மூலமே கண்டறிகிறோம். இவர்கள் பிரதிமாதம் மருத்துவரை சந்தித்து, இரத்த அழுத்தம் சோதிக்கப்பட்டு, ஸ்கேன் மூலம் குழந்தையின் நலத்தைச் சோதித்து, இரத்த அழுத்த மாத்திரைகள் மூலம் கட்டுக்குள் வைக்கப்படுகிறது .
இந்தநோயினால் பிரசவமாகும் போது வலிப்பு வந்து பல தாய்மார்களின் இறக்க நேரிருடுகிறது. இந்த வகை இழப்புக்குக் காரணமாக இருப்பதால் இத்தகையோருக்கு அவர்களது கர்ப்பக் கால முடிவில் சிசேரியன் செய்து குழந்தை எடுக்கப்படுகிறது.
4. கர்ப்பக் காலத்தில் தாய்மார்களுக்கு நீரிழிவு வருவதைக் கண்டறிந்து, அவர்களுக்கு உணவு முறை மாற்றம் மற்றும் இன்சுலின் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்தகையோரின் குழந்தை சாதாரண நிலையை விட அதிகமாக வளரும் தன்மையுடன் இருக்கும். இதை Macrosomia என்றோம்.
இத்தகைய குழந்தைகள் பிறக்கையில் 4 முதல் 5 கிலோவுடன் தலை பெரிதாக இருக்கும். ஆகவே இத்தகைய தாய்மார்களும் சிசேரியன் செய்யபடும் வாய்ப்பு அதிகமாகிறது
5. இரட்டைக் கர்ப்பம் கொண்ட தாய்மார்களுக்கு சிசேரியன் செய்யப்பட்டு குழந்தைகள் எடுக்கப்படுகின்றன. இதனால் குழந்தைகள் இறப்பு குறைகிறது. தாய்மார்கள் இழப்பும் குறைகிறது.
6. தாய்மார்களுக்கு இதய நோய் இருப்பின் அவர்களால் பிரசவக்கால வலி மற்றும் ஆற்றல் விரயத்தைத் தாக்குப்பிடிக்க முடியாது. ஆகவே, அவர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிசேரியன் செய்யப்படுகிறது. இவையனைத்தும் தாய் - சேய் உயிர்களைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிசேரியன் செய்ய காரணங்களாக அமைகின்றன.
மரபுவழி மந்திரவாதிகள்
தற்போது சில நாட்களாக, சிலர் மரபு வழிப் பிரசவம் பார்க்கிறோம் என்ற பெயரில் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதை ஊக்குவிப்பதைக் காணமுடிகிறது. மேலும் சிலர் தாங்கள் தங்கள் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்ததை மிகவும் நல்ல விசயம் போல் பதிவிட, அதற்குப் பலரும் பாராட்டுத் தெரிவிப்பதும் நம் சமூகம் ஏன் சிந்தனையற்று, இத்தனை அறிவீனத்தை ஆதரிக்கிறது என்று தெரியவில்லை. இருப்பினும் ஒரு மருத்துவனாக என்னால் இப்படியான செய்திகளை எளிதாகக் கடந்து செல்ல முடிவதில்லை.
காரணம். அரசு மருத்துவர்களாகிய நாங்கள் ஒவ்வொரு தாய், சேய் இறப்பிற்கும் கணக்குக் கூறுபவர்களாக இருக்கிறோம். ஆம்.. ப்ரைவேட், அரசாங்கம், ஏழை - பணக்காரன், சாதி, மத, இன பேதமின்றி எந்தத் தாய் பிரசவத்தின் போது இறந்தாலும், நாங்கள் அதை பகுத்து ஆராய்ந்து அந்த இறப்பைத் தடுப்பதற்குரிய ஏற்பாட்டைச் செய்தாக வேண்டும்.
அரசு ஏன் இத்தனை சிரத்தையுடன் தாய் இறப்பைக் கவனிக்கிறது?
ஒருநாடு சுகாதாரத்தில் சிறந்து விளங்குவது என்பது, அந்த நாட்டின் மருத்துவத்துறை பிரசவத்தின் போது தாய்மார்களை எவ்வாறு கவனித்துக் கொள்கிறது? எவ்வாறு தாய் சேய் மரணத்தைத் தவிர்க்கிறது என்பதை பொறுத்தே அமைகிறது.
நமது தமிழ்நாட்டில் சுமார் முப்பது வருடத்திற்கு முன்பு வரை வீட்டில் மூதாட்டிகள் பிரசவம் பார்த்து வந்தனர். அப்போது ஸ்கேன் கிடையாது. டெடானஸ் தடுப்பூசி கிடையாது. மருத்துவமனைகள் இவ்வளவு கிடையாது. மருத்துவர்கள் இந்த அளவு இல்லை. அப்போது வேறு வழியே இல்லாமல் நம் முன்னோர் வீட்டில் பிரசவம் பார்த்து வந்தனர்.
தற்போது, மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி அல்லது சிறப்பு மகப்பேறு மருத்துவமனை. ஒரு ஊருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம். இப்படி நமது சுகாதாரத் துறை வளர்ச்சி அடைந்த பின்பும் ஒரு கூட்டம் மக்களை பின்னோக்கி இழுக்கிறது.
“நாங்கள் முப்பது வருடங்களுக்கு முன்பு வரை நன்றாக மரபு வழிப் பிரசவம் பார்த்து சுபிக்ஷமாக தானே இருந்தோம்? இப்போது மாடர்ன் மருத்துவம் வந்து தான் தேவையற்ற ஸ்கேன்கள் செய்கிறது தேவையற்ற தடுப்பூசிகள் போடுகிறது. அதிகமாக ‘சிசேரியன்’ செய்து பிரசவத்தின் மூலம் காசு பார்க்கிறது”
என்று தவறான பல பொய்யுரைகளை கூறி, வீட்டில் பிரசவம் பார்ப்பது, தடுப்பூசி போடாமல் இருப்பது போன்ற பல விசயங்களை மக்களிடம் பரப்பிவருகிறது
ஆனால் உண்மை என்ன?
1990 களில் ஒரு லட்சம் பிரசவம் நடந்தால் அதில் 437 தாய்மார்கள் இறந்து வந்தனர். பிறகு மாவட்டத்தின் முக்கிய இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டது. தாய்மார்கள் இறப்பு விகிதம் 2001 ல் 327 ஆகக் குறைகிறது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி ஏற்படுத்தப்பட்டு மருத்துவர்கள் அதிகமாக அரசுப்பணிக்கு வந்தனர். 2011 இல் மரண விகிதம் 178 ஆக இறங்கி வந்தது.
2015 கணக்குப்படி தமிழ்நாட்டில் இந்தத் தாய் இறப்பு விகிதம், 91 ஆக குறைந்து - தற்போது 70 களில் இருக்கிறது. உலகம் முழுவதும் நடக்கும் கர்ப்பிணித் தாய்மார்கள் இறப்பில் இந்தியாவில் மட்டும் 25 சதவிகிதம் நடக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு கர்ப்பிணித் தாய் மரணிக்கிறாள் என்கிறது ஆய்வு. (http://www.deccanchronicle.com/…/tamil-nadu-sees-low-matern…)
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் பிரச்சனைகள்
அவள் பிரசவிக்கும் போது ஏற்படும் பிரச்சனைகள், பிரசவித்த பின்பு ஏற்படும் பிரச்சனைகள் என பகுத்தாறாய்ந்து அதனை தடுக்க வழிகளை ஆலோசித்து, அதை நடைமுறைபடுத்தி, அதில் ஏற்படும் சிக்கல்களை களைந்து, பிரசவத்தின் போது ஏற்படும் தாய் மரணத்தை தடுக்க எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி இரவு பகல் பாராமல் சுகாதார ஊழியர்கள் பாடுபட்டு வருகிறோம்.
ஆகவே பொதுமக்களாகிய நீங்கள் சமூக விரோதிகளின் வீண் பிரச்சாரங்களுக்குச் செவிமடுக்காமல், தங்களது வீட்டுப் பெண்களின் பிரசவங்களை மருத்துவமனை களில் பார்த்துக்கொள்ள வேண்டுமாய் பணிவன்புடன் அனைத்து சுகாதார ஊழியர்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.