தேசிய இனங்களுக்கு ஓர் அச்சுறுத்தல்

மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதைக் காரணமாகக் காட்டி, இந்திய அளவில் 2.8 இலட்சம் அரசுப் பள்ளிகள் மூடப்பட உள்ளன. இந்த வகையில் தமிழ்நாட்டில் 3400 பள்ளிகள் மூடப்பட உள்ளன. பள்ளிகளை மூடுவதற்கு-அப்பள்ளிகள் அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கப்படும் என்று நாகரிக மான நயவஞ்சக முறையில் அரசு விளக்கம் அளிக்கிறது. இவ்வாறு மூடப்படவுள்ள பள்ளிகளில் பெரும்பாலானவை ஊரகப் பகுதியில் அமைந்துள்ளவையாகும்.

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஏழு அகவைக்கு மேற்பட்டவர்களில் 74 விழுக்காட்டினர் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர்கள். இவர்களில் ஆண்கள் 82 விழுக்காட்டினர்; பெண்கள் 65 விழுக்காட்டினர். அனைவருக்கும் எழுத்தறிவு அளிப்பதுடன், 14 அகவைக் குட்பட்ட அனைவருக்கும் இலவயக் கட்டாயக் கல்வி அளிப்பது என்று அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய் யப்பட்டுள்ள இலக்கை எட்டாத நிலையில் அரசுப் பள்ளிகளை ஏன் மூடவேண்டும்? இது, காலங்காலமாகக் கல்வி உரிமை மறுக்கப்பட்ட கீழ்ச்சாதி ஏழை, எளிய மக்களின் கல்வி உரிமையை மறுப்பதல்லவா? எட்டாம் வகுப்பு வரையில் படிப்பதற்கு வழிவகை செய்வதற்குக் கடமைப்பட்டுள்ள அரசு, முதல் வகுப்பில் நுழைவதற்கே வழியடைக்கும் வகையில் பள்ளிகளை மூடுவது என்று முடிவெடுத்திருப்பது மனுதர்மத்தின் நீட்சியே ஆகும்.

school 600அரசுப் பள்ளிகளை மூடுவதற்கான மூலகாரணம் 1991 முதல் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற கொள்கையை அரசுகள் செயல்படுத்தி வருவதே ஆகும். இக்கொள்கையின்படி, மக்களுக்குக் கல்வியும், மருத்துவமும் அளிக்க வேண்டிய பொறுப்பிலிருந்து அரசு விலகி, இவற்றைத் தனியாரிடம் ஒப்படைத்து வருகிறது. இதன் விளைவாக இந்திய அளவில் பள்ளி களில் கிட்டத்தட்ட பாதி மாணவர்கள் பணம் பறிக்கும் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள நிலை என்ன?

தனியார் பள்ளிகள் அனைத்திலும் ஆங்கில வழியிலேயே கற்பிக்கப்படுகிறது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் பெருமளவில் ஆங்கிலவழிக்கல்வி முறை உள்ளது. அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர் எண்ணிக்கை வேகமாகப் பெருகி வருகிறது. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் முற்றிலுமாக ஆங்கில வழிப் பள்ளிகளாக மாறிவிட்டன. இவற்றின் அடிப்படையில் தற்போது தமிழ்நாட்டில் 60 விழுக்காடு மாணவர்கள் ஆங்கில வழியில் படிக்கின்றனர். இந்தி மொழி பேசும் வடஇந்திய மாநிலங்களிலும் சற்றொப்ப இதே நிலைதான் உள்ளது.

இராசிவ் காந்தி பிரதமரானதும் 1985 முதல் தகவல் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுப்பது என்பதன் அடிப் படையில் ஆங்கிலவழிக் கல்வி முன்னெடுக்கப்பட்டது. பி.வி.நரசிம்மராவ் பிரதமரானதும் தாராளமயம், தனியார் மயம், உலகமயம் என்கிற அரசின் கொள்கை அடிப் படையில், பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உயர் தொழில்நுட்பம் கொண்ட தொழில்களைத் தொடங்கின. தங்குதடையின்றி இந்தியச் சந்தை, உலகச் சந்தையுடன் இணைக்கப்பட்டது. இந்தியாவின் இயற்கை வளங்களும் மக்களின் உழைப்பும் அரசுகளின் துணையுடன் மலிவு விலையில் சுரண்டப்பட்டு வருகின்றன.

இந்தப் பின்னணியில் ஆங்கில வழியில் படித்தால் தான் இந்தியப் பெருமுதலாளிய நிறுவனங்களிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் அதிக சம்பளம் கொண்ட வேலைகளில் சேரமுடியும்; அமெரிக்கா போன்ற நாடு களுக்குச் சென்று கொழுத்த சம்பளம் வாங்க முடியும் என்கிற கருத்து முதலாளிய ஊடகங்கள் வாயிலாக ஊதிப் பெருக்கப்பட்டது. ஆங்கிலவழிக் கல்வித் தேவையை நிறைவு செய்யும் வகையில் ஆங்கிலவழிக் கல்வியி லான மழலையர் பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை யில் புற்றீசல் போல் பெருகின. இந்நிறுவனங்கள் வரம் பற்ற வணிகக் கொள்கையில் ஈடுபட்டு, நடுத்தர- ஏழைக் குடும்பங்களைச் சுரண்டிக் கொழுத்து வருகின்றன. இந்தக் கல்விக் கொள்கையில் ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கூட்டுக்கள வாணி களாக இருக்கின்றனர்.

ஆங்கில வழியில் கல்வி கற்றால்தான் உயர்ந்த வாழ்வு கிடைக்கும் என்கிற மயக்கம்-போதை ஏகாதி பத்திய ஊடகங்களால் ஊட்டப்படுகிறது. உண்மை நிலை என்ன? இந்தியாவில் அரசு மற்றும் தனியார் துறையில் அமைப்பு சார்ந்த பிரிவுகளில் (Organised Sector) நிலையான வேலையில் உறுதிசெய்யப்பட்ட ஊதியத் துடன் பணிசெய்வோர் எட்டு விழுக்காட்டினர் மட்டுமே. அமைப்புசாராப் பிரிவில் மீதி 92 விழுக்காட்டினர் வேலை செய்கின்றனர். இந்தியாவில் உழைக்கும் அகவையில் (18-60) இருப்பவர்களில் 50 விழுக்காட்டினர் வேளாண் மையில் ஈடுபட்டுள்ளனர். வேளாண்மைக்கு அடுத்து நெசவு, கட்டுமானம் ஆகியவற்றில் வேலை செய்கின்ற னர். மற்றவர்கள் சுயதொழில்களிலும் கூலியாட்களா கவும் வேலை செய்கின்றனர்.

அமைப்புசாரா பிரிவிலும் ஒரு பகுதியினர் மட்டுமே அதிக ஊதியம் பெறும் வேலைகளில் இருக்கின்றனர். இவர்களுக்கு மட்டும்-குறிப்பாகத் தனியார் துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே ஆங்கிலக் கல்வி தேவைப் படுகிறது. இந்த ஆங்கிலக் கல்வியை, தாய்மொழி வழிக் கல்வியுடன் ஆங்கிலத்தை ஒரு பாடமாக நல்ல முறை யில் பயிற்றுவிப்பதன் மூலமே பெறமுடியும். இதற்கு மாறாக, தற்போது பள்ளிகளில் ஆங்கிலம் தெரியாத ஆசிரியர்கள் ஆங்கிலம் அறியாத மாணவர்களுக்கு ஆங்கில வழியில் கற்பிக்கும் கொடுமை நிகழ்ந்து கொண்டி ருக்கிறது. தாய்மொழிவழிக் கல்வியை அடியோடு புறக் கணித்து ஆங்கிலவழிக் கல்வியை மட்டுமே நிலை நாட்டுவது என்பது தாய்மொழியையும், அம்மொழி பேசும் இனத்தையும், அவர்களின் கலை, இலக்கியம், பண்பாடு முதலானவற்றையும் அழிப்பதாகும்.

இந்திய அளவில் முதலாம் வகுப்பில் சேரும் மாண வர்களில் அய்ம்பது விழுக்காட்டினர் பத்தாம் வகுப்பை முடிப்பதற்கு முன்பே பள்ளியிலிருந்து நின்றுவிடுகின்றனர். 18 அகவை முதல் 25 அகவையில் இருப்பவர்களில் இருபது விழுக்காட்டினர் மட்டுமே உயர்கல்வி படிக் கின்றனர். இந்தப் பின்னணியில் நோக்கும்போது முதலாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலவழிக் கல்வி தேவை என்கிற மாயை எவ்வளவு ஏமாற்று - புரட்டு என்பது புலப்படும். மேலும் ஆங்கிலவழிக் கல்வி என்பது ஏழை, எளிய குடும்பங்களின் பிள்ளைகளை மிரட்டிப் பள்ளி யிலிருந்து விரட்டும்.

census school 600தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர் களுக்குப் பாட நூல்கள், உடை, பை, பகல் உணவு முதலானவை இலவயமாக வழங்கப்படுகின்றன. உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கப் படுகிறது. ஆனால் கட்டணம் செலுத்திப் படிக்கும் தனியார் பள்ளிகளில் மாணவர்  சேர்க்கை கூடிக்கொண்டே செல் கிறது; அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. 2018 ஆகத்து மாதத்தில் அரசின் புள்ளிவிவரப்படி 20 மாணவர்களுக்கும் குறைவாக 3,400 பள்ளிகள் உள்ளன. இவற்றுள், 1,324 பள்ளி களில் பத்துக்கும் குறைவாக மாணவர்கள் உள்ளனர். இப்பள்ளிகளை மூடாவிட்டால், கல்விக்கான நிதியைத் தரமாட்டோம் என்று நடுவண் அரசு மிரட்டிக் கொண்டி ருக்கிறது.

அரசுப் பள்ளிகள் தரமற்றவை என்பதால் மாண வர்கள் சேருவதில்லை என்பது தவறான வாதம். தனியார் பள்ளிகள் தரமானவை போல விளம்பரம் செய்துகொள்கின்றன. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக் குறைவதற்குக் காரணம் ஆங்கில வழிக் கல்வி எனும் மாயைதான். தமிழ்வழியில் இயங்கும் அரசுப் பள்ளிகள் அனைத்தையும் ஆங்கிலவழிப் பள்ளி களாக மாற்றும் நடவடிக்கையாக 2019 சனவரியில் அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளைத் தமிழக அரசு தொடங்க உள்ளது. முதலாளித்துவ மேலை நாடு களில் பள்ளிக்கல்வி முற்றிலுமாக அரசுப் பள்ளியாகவும் தாய்மொழியிலும் இருக்கும் நிலையில், இந்தியாவில் கல்வியைத் தனியார் கொள்ளைக்குத் தாரைவார்த்தது மக்களுக்கு இழைத்த மாபெரும் துரோகமாகும். எனவே பள்ளிக்கல்வியை 1980க்குமுன்பு இருந்ததுபோல் அரசுப் பள்ளிகளாக்கிட வேண்டும். அவற்றில் தாய்மொழி வழி யிலேயே கல்வி கற்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.

இதன் முதல்கட்டமாக கல்வியை 1977க்குமுன்பு இருந்ததுபோல் மாநில அதிகாரப் பட்டியலில் சேர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ்வழியில் படித்தவர் களுக்கே அரசு வேலை என்று சட்டம் இயற்ற வேண்டும். அதேபோல் தமிழ்நாட்டில் இயங்கும் நடுவண் அரசின் அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழி என்ற நிலையை உண்டாக்க வேண்டும். தமிழ்நாட்டின் தனியார் நிறு வனங்களிலும் தமிழ்வழியில் படித்தவர்க்கு வேலை யில் குறிப்பிட்ட விழுக்காடு ஒதுக்க வேண்டும் என்பதை நிபந்தனையாக விதித்த வேண்டும். அந்நிலையில் ஆங்கில மோகம் ஒழிந்து, தமிழ் வழியில் ஆர்வ முடன் முன்வந்து பயிலும் நிலை ஏற்படும்.

இத்திசை நோக்கி நாம் செயல்படாவிட்டால், கடந்த கால் நூற்றாண்டில் 50 விழுக்காடாக உயர்ந்த ஆங்கில வழிக்கல்வி அடுத்த கால் நூற்றாண்டில் 90 விழுக்காடு என்ற நிலையை எட்டி விடும் பேராபத்து உள்ளது. தமிழ்த் தேசிய இனத்துக்கும் பிற தேசிய இனங்களுக் கும் முன் உள்ள மாபெரும் அச்சுறுத்தல் இது!

Pin It