college students 600

மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து முடிந்துவிட்டது. அரசுப்பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்கவைத்த இலட்சக்கணக்கான அடித்தட்டு மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு உயர் கல்வி கிடைக்காததால் ஏற்பட்ட கேள்வித் தீ அவர்கள் நெஞ்சை எரிக்கிறது. அந்தக் கேள்வித் தீப்பந்தங்களைத் திசைமாற்றி, இந்நிலைக்குக் காரணமானவர்கள் மீது வீச வேண்டியிருக்கிறது.

அதற்குமுன் சில குறிப்புகள்:

தமிழகத்தில் சென்ற கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் +2 படித்துத் தேர்ச்சி பெற்றோர் 5,25,870 பேர். தனியார் பள்ளிகளில் +2 படித்துத் தேர்ச்சி பெற்றோர் 2,34,699 பேர்.

தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரி களில், தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய எம்.பி.பி.எஸ் இடங்கள் 2,257. சமூகநீதிப்படிப் பார்த்தால் இந்த அத்தனை இடங்களும் அரசுப் பள்ளிகளிலிருந்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். வாதத்திற்காக, வர்க்க, சமூகப் பின்னணியை மறந்து மாணவ சமுதாயம் என்ற அடிப்படையில் தனியார் பள்ளி மாணவர்களையும் இணைத்துப் பார்த்தால், அவர்களின் தேர்ச்சி எண்ணிக்கைப்படி அவர்களுக்குச் சேரவேண்டிய இடங்கள் 697 மட்டுமே. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டிய எம்.பி.பி.எஸ் இடங்கள் 1560. ஆனால், இத்தனை இடங்கள் கிடைத்திருக்கும் என்று நம்மால் நம்ப முடிகிறதா?. இல்லை. ஏனென்றால், இந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டுப் புள்ளிவிவரப்படி மொத்தமுள்ள (அரசு + தனியார்) மருத்துவ இடங்களில் வெறும் 37 பேர் அரசுப் பள்ளியிலிருந்தும் 3 பேர் மாநகராட்சிப் பள்ளியிலிருந்தும் 96 பேர் அரசு உதவிப் பெறும் பள்ளியிலிருந்தும் நிரப்பப்பட்டுள்ளனர். அதாவது 4.5 விழுக்காட்டு இடங்கள் மட்டுமே அரசு/ மாநகராட்சி/அரசு உதவிபெறும் பள்ளியில் படித்தவர்கள் பெற்றுள்ளனர். மீதமுள்ள அனைத்தும் தனியார் பள்ளியில் படித்தவர்கள் பெற்றுள்ளனர். எனவேதான், பின்வரும் கேள்விகளை நாம் எழுப்ப வேண்டியுள்ளது.

தமிழக அரசே, உயர்கல்வித்துறையே, பதில் சொல்!

நடந்து முடிந்த மருத்துவக் கல்விக் கலந்தாய்வில் அரசுப்பள்ளிகள் மூலம் +2 முடித்தோருக்குக் கிடைத்த இடங்கள் எத்தனை? தனியார் பள்ளிகள் மூலம் +2 முடித்தோருக்குக் கிடைத்த இடங்கள் எத்தனை?

ஒரு மருத்துவரை உருவாக்க அவர் செலுத்தும் கட்டணத்தைவிட அரசுஅவருக்காகச் செலவழிக்கும் தொகை எவ்வளவு? இத்தனை ஆண்டுகளாய் அது யாருக்காகப் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது?

அடுத்து, பொறியியல் கல்வியை எடுத்துக் கொள்வோம், இந்த ஆண்டு அண்ணா பல்கலைக் கழகத்துறைகள் மற்றும் உறுப்புக்கல்லூரிகள் என 16-கல்லூரிகளில் 8,316 இடங்களும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளாகத் தமிழகம் முழுவதும் உள்ள 16-பொறியியல் கல்லூரிகளில் 5,947 இடங்களும் என்ன மொத்தம் 14,263 இடங்கள் இருந்தன. அரசுப் பள்ளிகளிலிருந்து +2 முடித்தோருக்கு 9,862 இடங்களும், தனியார் பள்ளிகள் மூலம் +2 முடித்தோருக்கு 4,401 இடங்களும் கிடைத்திருக்க வேண்டும்!

கேள்வி இதுதான்:

இந்த ஆண்டு அரசுப்பள்ளிகளில் தேர்ச்சி பெற்றோர், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் எத்தனை இடங்களைப் பெற்றுள்ளனர்? தனியார்பள்ளி மாணவர்கள் எத்தனை இடங்களைப் பெற்றுள்ளனர்?

ஒரு பொறியாளரை உருவாக்க, அவர் செலுத்தும் கட்டணம் தவிர அரசு அவனுக்காகச் செலவழிக்கும் தொகை எவ்வளவு? இத்தனை ஆண்டுகளாய் அது யாருக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது?

இந்தக் கேள்விக்கான விடைகள் எதிர்மறைதான்! பொறியியல் படித்தோரின் எதிர்காலம் என்ன வாகிறது? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, 'தன் பிள்ளையும் பொறியியல் படிக்கமாட்டானா?' என அரசுப்பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்த்த பெற்றோர்களின் ஏக்கம்-கனவு எல்லாம் தகர்க்கப்படுகிறது. அல்லது வங்கியிலோ, தனியாரிடம் வட்டிக்கோ கடனை வாங்கி இலட்ச இலட்சமாய்ப் பணம் செலுத்தி தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர்த்துப் படிக்க வைக்கிற நிலை!

சிந்தியுங்கள்! +2-வரை அரசுப்பள்ளிகளில் படித்தவர்கள் பொறியியல் கல்விக்குத் தனியார் கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை! +2 வரை தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் அரசுப் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து அரசு மானியத்தில் படிக்கிறநிலை! இந்த முரண் இன்னும் எத்தனை காலம் நீடிக்கும்? இது மக்கள் நல அரசு என்றால் எந்த மக்களின் நலனுக்கான அரசு? +2 வரை தனியாரிடம் படித்தவர்கள் மருத்துவம் ¬பொறியியலையும் தனியாரிடமே படிக்கலாமே!

"தனியார் பள்ளி மாணவர்களின் வெட்டு மதிப்பு(cut off) மதிப்பெண் அதிகம்! இயல்பாக அவர்கள் மருத்துவம், பொறியியல் கல்விக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அரசுப்பள்ளி மாணவர்களின் வெட்டு மதிப்பு குறைவு. அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அதற்கு அரசு என்ன செய்ய முடியும்? "என்று அரசு கூறுமேயானால் இதைச் சொல்ல ஓர் அரசு தேவை இல்லை! அதுமட்டுமல்ல பெரும்பாலான தனியார் பள்ளிகளில் 11 ஆம் வகுப்புப் பாடத்தை எடுப்பதே இல்லை. மாறாக 12 ஆம் வகுப்புப் பாடத்தையே இரண்டு ஆண்டுகளும் எடுத்து மாணவர்களைத் தயார் செய்கின்றனர். உண்மையில் 11 ஆம் வகுப்புப் பாடத்தைப் படிக்காமல் தேர்வில் மதிப்பெண் பெறுவதை மட்டும் குறியாகக் கொண்டு 12 ஆம் வகுப்புப் பாடத்தை மனப்பாடம் செய்து மதிப்பெண் பெறுகிறார்கள்.

இப்படித்தான் பெரும்பாலான தனியார் பள்ளிகள் மாநிலத்தில் முதல் இடம், இரண்டாம் இடம் என்று மதிப்பெண் பெறும் மாணவர்களை உற்பத்தி செய்து மோசடியான வகையில் அரசுப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புப் பாடங்களைப் படித்துவரும் அரசுப் பள்ளி மாணவர்களை தோற்கடிக்கின்றனர். இது பச்சை மோசடி இல்லை. தமிழ்நாட்டு மாணவர்கள் ஐ.ஐ.டி போன்ற உயர் தொழில்நுட்ப கல்வி நிலையங்களுக்கான தேர்வில் படுதோல்வி அடைகின்றனர் என்ற உண்மை இந்த மோசடியை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இப்படி தனியார் பள்ளிகள் மோசடி செய்து கொண்டிருக்கும்போது, தனியார்பள்ளியில் படித்து வந்தோர்க்கு தனிவெட்டு மதிப்பெண்ணும், அரசுப் பள்ளியில் படித்து வந்தோர்க்குத் தனி வெட்டு மதிப்பெண்ணும் நிர்ணயித்தால் ஏற்பார்களா?

“11 மற்றும் 12ஆம் வகுப்புகள் இரண்டும் சேர்ந்துதான் மேல்நிலைக் கல்வி. எனவே 11ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வை நடத்தி, அதில் பெறும் தேர்ச்சி மதிப்பெண்களையும் 12ஆம் வகுப்பில் பெற்ற தேர்ச்சி மதிப்பெண்களையும் மொத்தமாகச் சேர்த்து தொழிற்படிப்புக்கான மாணவர்களின் தகுதிநிலை நிர்ணயிக்கப்படவேண்டும். அண்டை மாநிலமான ஆந்திராவில் இப்படிப்பட்ட முறையே இருக்கிறது” என்று கல்வியாளர்கள் எழுப்பும் கோரிக்கையை இந்த அரசு புறக்கணிப்பதேன்? தனியார் பள்ளி முதலாளிகள் கொழுத்துத் திரிவதற்குத் தடையாகிவிடும் என்பதாலா?

ஒருவேளை அரசுப்பள்ளிகளின் தரம் குறைந்து விட்டதாகச் சொல்வீர்களானால், அதற்கு அரசின் தவறான கொள்கைகளும் அமலாக்கமுமே காரணம். உயர்கல்வி பெறுவதில் அரசுக்கும் தனியாருக்கும் உள்ள இத்தகைய பாரதூரமான வேறுபாடு குறித்து அரசு என்றைக்காவது சிந்தித்த துண்டா? அதை மாற்றியமைக்க ஆய்வு நடத்திய துண்டா? மாற்று நடவடிக்கை உண்டா?

டாஸ்மாக்கில் வருமானம் சற்றுக் குறைந்தாலே அதைச் சரிசெய்ய வாடிக்கையாளர்கள் கடை யிலேயே உட்கார்ந்து தண்ணியடிக்க 'பார் வசதி' ஏற்படுத்தித்தருதல்,இரவில்கடையை நீண்டநேரம் திறந்துவைத்தல் முதலிய உத்திகளைப் பயன்படுத்தத் தெரிந்த அரசுக்கு, அரசுப் பள்ளிகளில் பயிலும் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் உயர்கல்வியில் உரிய இடம் பெறாமை குறித்த கவலையும்,அதை மாற்ற வேண்டும் என்ற அக்கறையும் ஏன் இல்லாமல் போனது?

 "எல்லோரும் மருத்துவர், பொறியியலாளர் ஆகமுடியுமா? வேறு வேலைகளை யார் பார்ப்பது? அதிக மதிப்பெண் பெறுவது மட்டும் தான் கல்வியா? சுயதொழில் தொடங்கவும் சொந்தக் காலில் நிற்கவும் உதவுவதுதானே கல்வி! அறிவோடு நேர்மையையும் ஒழுக்கத்தையும் புகட்டுவது தானே கல்வி!" என்றெல்லாம் பசப்புகிற சில மேதாவிகள், அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பெறுகிற உரிமைபற்றிச் சிந்திக்கவிடாமல் திசைதிருப்புகிறார்கள் என்று பொருள்.

இந்த நாட்டில் வர்க்கப் படிநிலைக் கோபுரம், சாதிப் படிநிலைக் கோபுரம் இருப்பதுபோலவே, அரசுப்பணி என்னும் படிநிலைக் கோபுரமும் உள்ளது.

அதன் கீழ்மட்டத்தில் உள்ள ஆயா வேலையும், ஓ.ஏ.வேலையும், கணக்கர் வேலையும், எழுத்தர் வேலையும் அரசுப்பள்ளிகளிலிருந்து வரும் இளைஞர்களுக்கு என ஒதுக்கிவிட்டு, அதன் கோபுர உச்சிக்கலசமாய் மருத்துவம், பொறியியல். தொழில்நுட்பம், நிர்வாகம் முதலிய முதல் நிலைப் பதவிகள் யாவும் மேட்டுக்குடி செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகளுக்கு என ஒதுக்குவது சரியா?

கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு அனைத்துத் தொழிற் கல்விப் பிரிவுகளிலும் 15 விழுக்காடு இடஒதுக்கீடு திட்டம் 1997-98ஆம் ஆண்டு முதல் தி.மு.க. ஆட்சியில் நடைமுறைப் படுத்தப்படுகிறது. இதன் மூலம் 97-98இல் 864 மாணவர்களும், 98-99இல் 1190 மாணவர்களும், 99-2000இல் 1544 மாணவர்களும் பயன் பெற்றனர். 2001 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தப் பின் 15 விழுக்காட்டை 25 விழுக்காடாக உயர்த்தியது. ஆனால் இவை அனைத்தும் அரசாணை மூலமாகவே செய்யப்பட்டது. விளைவு தனியார் பள்ளிகள் நீதிமன்றம் சென்று கிராமப்புற மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிரான தீர்ப்பைப் பெற்றனர். அதன் பிறகு தமிழக அரசு மேல் முறையீடும் செய்யவில்லை. சட்டம் இயற்றுவதன் மூலம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் வாய்ப்பையும் பயன்படுத்தவில்லை. இப்படி கிராமப்புற மாணவர்களின் மருத்துவம், பொறியியல் கல்விக்கான கனவு தவிடு பொடியானது.

அரசுப் பள்ளிகளின் தோல்வி மேற்கூறிய கேள்விகளில் அடங்கியிருக்கின்றது. உயர்கல்வியில் தங்கள் குழந்தைகள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெற்றோர்கள் மட்டுமல்ல, அனைத்து அடித்தட்டுப் பொதுமக்களும் மனதிற்குள் கொதித்துப்போய் உள்ளனர். இந்த ஆண்டே இதற்குத் தீர்வு கண்டாக வேண்டும், இல்லையெனில் அடுத்த ஆண்டு மருத்துவம், பொறியியல் கலந்தாய்வு நடத்த விடுவதில் அர்த்தம் இல்லை என மாணவர்களும் இளைஞர்களும் பொதுமக்களோடு இணைந்து போர்க்களத்தின் முன்னணியில் நிற்பர். இது உறுதி. 

Pin It