school library‘ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்’ என்றார் ஔவைப்பிராட்டி. ஆனால் பள்ளிக் கல்வியே பெருந்தொற்றின் காரணமாக முடங்கிக் கிடக்கிறது. அதனைச் சரி செய்யும் நோக்கத்தோடு தமிழக அரசும், கல்வித் துறையும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளித் திறப்பும், நேரடிக் கல்வியும் மாணவரிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியள்ளது.

ஆசிரியரும், மாணவரும் இணையாமல் கல்வி என்பது ஏது? இணைய தளத்தில் நடத்தப்பட்ட கல்வியினால் மாணவர்கள் சலித்துப் போயினர். எப்போது பள்ளி திறக்கும் என்று காத்துக் கிடந்தனர். அந்த நாளும் வந்தது.

இப்போது பள்ளிக் கல்வித் துறை புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் நூலகப் பாடவேளையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதுதான் அது. இது பற்றிப் பள்ளிக் கல்வி ஆணையரக அலுவலகம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அனைத்துப் பள்ளிகளிலும் வாரம் ஒரு முறை நூலகப் பாடவேளைகளைக் கட்டாயம் நடத்த வேண்டும் என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் பல பள்ளிகளில் நூலகங்களின் பயன் மாணவர்களுக்குக் கிடைக்காமல் உள்ளது. நூலகப் பாட வேளைகள் முறையாக நடத்தப்படுவதில்லை. எனவே ஒவ்வொரு பள்ளியும் வாரம் ஒரு முறை நூலகப் பாட வேளைகள் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளிகளில் நூலகத்துக்குத் தனி அறை ஒதுக்க வேண்டும். நூலகம் பாட வேளைகளில் மாணவர்கள் புத்தகங்களைப் படிப்பதுடன், வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கவும் அனுமதிக்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகத்தை படித்ததும் அவர்களுக்கு கட்டுரை, கதை, நூல் அறிமுகம் செய்தல் போன்ற போட்டிகள் நடத்த வேண்டும்.

விருப்பம் உள்ள மாணவர்களைத் தேர்வு செய்து வாசகர் வட்டம் உருவாக்க வேண்டும். அருகில் உள்ள நூலகங்களுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்த வேண்டும். புத்தக நன்கொடையாளர்களை அதிகரிக்க வேண்டும்.

தேவையான புத்தகங்கள் இல்லாவிட்டால் அருகில் உள்ள மாவட்ட மைய நூலகம் மற்றும் பிற நூலகங்களை அணுகி மாணவர் வாசிப்புக்கு ஏற்ற புத்தகங்களைப் பெற்று பயன்படுத்தலாம். நூலகங்களில் நாளிதழ்களைப் படிக்கவும் மாணவர்களைப் பழக்கப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் வேண்டும்.

இவ்வாறு கல்வித் துறையின் வழிகாட்டுதல் பெற்றோர், ஆசிரியர், மாணவர் மற்றும் கல்வியாளர்களால் வரவேற்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்குப் புத்தகப் படிப்போடு உலக அறிவும் வேண்டும் என்பது கல்வியாளர்களின் கருத்தாகும். அதனைச் செயல்படுத்துவது எதிர்காலத் தலைமுறைக்கு ஏற்றம் சேர்ப்பதாகும்.

’பள்ளிக் கணக்குப் புள்ளிக்கும் உதவாது’ என்பது தொன்று தொட்டு வரும் பழமொழியாகும். இதற்குக் காரணம் என்ன? வெறும் மனப்பாடக் கல்வியில் வந்த வெற்றிடம் மாணவர்களின் அறிவை மழுங்கடித்து விட்டது. நமது பாடத் திட்டங்கள் மதிப்பெண்ணை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு உருவாக்கப்பட்டதால் சிந்திக்கும் ஆற்றல் செயல்படாமல் போய் விட்டது.

பல உதவிபெறும் தனியார் பள்ளிகளில் நூலகங்கள் பெரிய அளவில் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. அப்போது அதற்கான நூலகர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு புதிய நூலகர்கள் நியமிக்கப்படவேயில்லை. அந்தப் பதவியை கல்வித்துறை காலியாகவே வைத்துள்ளது.

இதனால் பல பள்ளிகளில் நூலகங்கள் இருந்தும் செயல்படவில்லை. கிடைத்தற்கரிய பல அருமையான நூல்கள் தூசு படிந்து கிடக்கின்றன. ஆட்சிகள் மாறும் போதெல்லாம் கல்வித்துறையும் மாறிக் கொண்டிருக்கிறது. அதிகாரிகளும் மாறிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தான் இப்போது பள்ளிக் கல்வித் துறை பள்ளிகளில் நூலகக் கல்வியை முடுக்கிவிட முனைந்துள்ளது.

பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் சிறப்புக் கட்டணங்களில் ஒரு சிறு பகுதியே நூல்கள் வாங்கவும், பள்ளி நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதிக்கப்படுகிறது. அந்தக் காலத்தின் விலைவாசிக்கும், இந்தக் காலத்தின் விலைவாசிக்கும், மலைக்கும், மடுவுக்குமான ஏற்றத் தாழ்வை கணக்கில் எடுத்துக் கொண்டு இதனை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கல்வித் துறை கவனிக்கவே யில்லை.

பள்ளி ஆய்வுக்குச் செல்லும் கல்வித் துறை அதிகாரிகள் பள்ளி நூலகங்களைப் பார்வையிட வேண்டும். அதனைச் செயல்படுத்திட புதிய நூலகர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர்கள் இதனைப் பகுதிநேரப் பணியாக மேற்கொண்டு வருவதால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை.

‘ஒரு தேசத்தின் எதிர்காலம் வகுப்பறைகளில் தான் தீர்மானிக்கப்படுகிறது’ என்று கோத்தாரி கல்விக்குழு கூறியது. இதனை அரசும், கல்வித் துறையும் எப்போதும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றும், இன்றும், என்றும் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் பள்ளிகளில் ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டவர்களே!

‘ஆசிரியப் பணியே அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி’ என்று சமுதாயம் அதற்கொரு தனி மரியாதை அளித்துள்ளது. ஆயினும் ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரிப்பதால் எதிலும் முழுமையான கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. நூலகக் கல்வியைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டுமானால், அதற்கென நூலகர்களை நியமிக்கத் தயங்குவது ஏன்? நூலகத் துறைக்கென படித்த இளைஞர்கள் அரசுப் பணிக்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருப்பது கல்வித் துறைக்குத் தெரியாதா?

பொது நூலகத் துறையும் பல ஆண்டுகளாக முறையாக நூல்கள் வாங்காமையால் பல பதிப்பகங்கள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. வாங்கிய நூல்களுக்கான தொகையும் ஒழுங்காக அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதற்கெல்லாம் புதிய அரசினை எதிர்நோக்கி நூலகத் துறை காத்திருக்கிறது.

சென்னை கோட்டூர்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆட்சி மாற்றத்தினால் புதிய பொலிவு பெற்றுள்ளது. யார் ஆட்சிக்கு வந்தாலும் அறிவுக் கோயிலாம் நூலகங்கள் புறக்கணிக்கப்படக் கூடாது என்பதற்கு தனிச் சட்டமே இயற்றப்பட வேண்டும்.

தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களுக்கும் இத்தகைய வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக 2 லட்சம் சதுர அடி பரப்பில் நவீன வசதிகளுடன் ரூ.70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படுகிறது என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு செயல்படுத்தப்பட வேண்டும்.

“வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு

வாழும் உயிர்களுக் கெல்லாம்

பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்

பாரை உயர்த்திட வேண்டும்”

என்று பாரதி பாடினார்.

இங்கு பாரதி, ‘பல கல்வி’ என்று கூறுவது, பலவகைக் கலைகளையும் கற்றுக் கொடுக்கும் இடமாகப் பள்ளி இருக்க வேண்டும் என்பதையேயாகும். இயல், இசை, நாடகம், இந்தப் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். மனித வள மேம்பாடு என்று கல்வியைக் கூறுவதன் நோக்கமே அதுதான்.

‘ஒருவரிடமுள்ள சிறந்த திறமையை வெளிப்படுத்துவதே உண்மையான கல்வியாகும். மனித வர்க்கமாகிய புத்தகத்தைவிடச் சிறந்த புத்தகம் வேறு என்ன இருக்க முடியும்?’ என்று காந்தியடிகள் வினவுகிறார். அவரது திட்டத்தின்கீழ் நூல் நிலையங்கள் அதிகமாக இருக்கும். சிறந்த ஆராய்ச்சி நிலையங்களும் இருக்கும். அதன்கீழ் இருப்பவர்கள் நாட்டின் உண்மையான தொண்டர்களாக இருப்பார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

உலகத்தின் இந்த முன்னேற்றத்துக்குக் காரணம் சிந்தனையாளர்களின் இடைவிடாத உழைப்பும், தியாகமுமேயாகும் என்பதை அடுத்தத் தலைமுறைக்கு உணர்த்த வேண்டும். அத்துடன் இந்த பூமி அழியாமல் நிலைபெற்றிருப்பதற்குக் காரணமும் அவர்கள்தாம். அவர்களுக்கு இந்தச் சமுதாயம் கடமைப்பட்டிருக்கிறது.

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் நமது மூளை இப்போதுள்ள நிலையை அடைய 100 கோடி ஆண்டுகள் ஆயின என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உயிரணுக்கள் பல்கிப் பெருகி வளர்ந்தன. இப்போது 1200 கோடி உயிரணுக்கள் கொண்டதாக மனித மூளை விளங்குகிறது.

இந்த உயிரணுக்கள் மூலமாக நமது மூளையைச் செயல்படுத்தி சிந்தனைத் துளிகளை இணைத்து எண்ணங்களை உருவாக்க வழிவகுத்தது மனித வளச்சியாகும். இந்த மனித வளர்ச்சியை மாணவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். அவர்களது கடமையை நினைவு படுத்துவதற்கு நூலகக் கல்வி இன்றியமையாதது.

கல்வித் துறையின் இந்த அறிக்கையை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) வரவேற்றுள்ளது. நூலகப் பாட வேளையை கட்டாயமாக்குவது குறித்து கல்வித்துறை மீண்டும் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை மகிழ்ச்சியளிக்கிறது என்று வரவேற்றுள்ளனர்.

இன்றைய சூழலைக் கருத்தில் கொண்டு மாணவர் நலன் கருதி நூலக வகுப்புக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதை அனைத்து பதிப்பாளர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது என்றும், அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நூலகங்களை உருவாக்கி மாணவர்களுக்குப் பயன்படும் புத்தகங்களைத் தேர்வு செய்வதுடன், பதிப்பாளர்களிடம் அந்த புத்தகங்களை வாங்க அரசு உதவ வேண்டும் என்றும், அதற்கான நிதி ஆதாரத்தை பள்ளிகளுக்கு அரசு தர வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பியுள்ளது.

“மனிதன் பிறந்த நிலையிலேயே விடப்பட்டால் அவன் மனிதனாக இருக்க மாட்டான். அவன் வாழும் சூழ்நிலை அவன் இயற்கைத் தன்மையைச் சூறையாடி விடும். பல பேர் நடந்து செல்லக்கூடிய பாதையில் செடியை வளரவிட்டால் அது அழிந்து விடும். முறையான கல்வியற்ற மனிதனும் அப்படித்தான் போவான்” என்றார் கல்வியாளரும், சிந்தனையாளருமான ரூசோ.

உலகம் இடைவிடாமல் மாற்றத்தை நோக்கியே போய்க் கொண்டிருக்கிறது. கல்வித் துறையும் அதற்குத் தக்க புதிய பாடத்திட்டத்தை உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். புதிய கல்வித் திட்டம் என்பதும் இதனை வளர்த்தெடுக்க உதவும். நூலகக் கல்வி என்பதும் இதன் அடுத்த படிதான்.

- உதயை மு.வீரையன்

Pin It