மஞ்சம் போத்தியும் காளியும் சுசீந்திரம் கோவிலுக்குத் திருவிழா பார்க்கப் போனதை நாகேந்திர பிள்ளை விஸ்தாரமாகச் சொல்ல ஆரம்பித்தார். எதைப் பேசினாலும் முருகலிங்கத் தம்புரானைப் பார்த்துப் பேச வேண்டும் என்பது நாகேந்திர பிள்ளைக்கும் மற்றவர்களுக்கும் தெரியும்.

இங்கு மற்றவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் பரதேசியா பிள்ளை, கோவிந்தன் ஆசாரி, பொன்னையா என ஏழெட்டு முதியவர்களை. அவர்கள் எல்லோருமே 85 - 90ஆண்டுகளைத் தாண்டியவர்கள். ஒன்று ரெண்டு பேர்களுக்கு நூற்றாண்டு விழா காண இன்னும் நாலைந்து வருடங்கள்தாம் பாக்கி,

நாகேந்திர பிள்ளை - காளியின் மார்பையும் பின்புறத்தையும் வருணிப்பதிலேயே நேரத்தை நீட்டுவது கோவிந்தன் ஆசாரிக்குப் பிடிக்கவில்லை. - இடையிலேயே கேள்வி கேட்க ஆரம்பித்தார்.

devadasiகாளி பறக்கைக் கோவில் 5ஆம் நாள் திருவிழாவில் வாகனத்துக்கு முன்னே சதுராடி வந்ததை அந்தக் கூட்டத்தில் பலரும் பார்த்திருக்கிறார்கள். காளியின் மேல் அவர்களுக்கு அபரிமிதமான ஆசை இருந்தாலும் கட்டுப்பாடாக இருந்ததற்கு யோக்கியதை மட்டும் காரணமல்ல.

பறக்கை மதுசூதனர் கோவிலில் காளி சதுராடிய காட்சியைப் பார்த்த நாகேந்திரபிள்ளை 11 கவர்கள் உள்ள தீவட்டியைப் பிடித்துக் கொண்டிருந்த தடியன்களிலிருந்து மூத்த பிள்ளைகள் வரை எல்லோரும் காளியைப் பார்த்துக் கொண்டிருந்த காட்சியை வருணித்தார். அவரது வயதைக் கணக்கிட்டுப் பார்த்தால் இது 1910-15ஆம் ஆண்டுகளில் நடந்திருக்கலாம் என்று ஊகித்தேன்.

பறக்கை கீழத்தெரு திருவாவடுதுறை மடத்தின் முன் மண்டபத்தில் நடந்த அரட்டையரங்கக் கூட்டத்தில் நான் ஒருவனே 18 வயது இளைஞன். நான் அந்தக் காலத்தில் மடமே தஞ்சமென்று கிடந்த காலம். அந்த முதியவர்கள் எல்லோருமே பேசிப் பேசி அலுத்து சமகாலத்தை வெறுத்துக் கொள்ளுவதுடன் பேச்சு முடியும். இது அறுபதுகளின் பாதியில் நடந்தது.

அபிதானமேரு சதுர்வேதி மங்கலம் என்னும் பெயரைத் தாங்கிய அந்த ஊரில் உள்ள கோவில் 1100 ஆண்டுகள் பழமையுடையது. அங்கு 9 ஆம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டு உண்டு. இக்கோவிலில் ஏழு தேவதாசிக் குடிகள் 1930 வரை பணிபுரிந்திருக்கின்றனர். 15ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு இவர்கள் கோவில் முதல் பிரகாரத்தில் நடத்திய கூத்து பற்றிக் கூறும்.

1925இல் கூட சுசீந்திரம் சிவன் கோவிலில் நடந்த சாரங்கதரன் நாடகத்தில் நடிக்க பறக்கை ஊர் தேவதாசியான காளி போயிருக்கிறார். சம்பந்தர் சமணர்களைக் கழுவேற்றிய கதை 30களின் இறுதியில் கூட நடந்திருக்கிறது. இதில் நடிக்க கோவில் பணியிலிருந்து நிறைவு பெற்ற தேவதாசிகள் சென்றிருக்கின்றனர். காளிக்கு அந்தக் கதைகளின் பல பாடல்கள் மனப்பாடமாம்.

பறக்கைக் கோவிலில் கடைசியாகப் பணியாற்றிய சின்னக்குட்டி அவளது தோழியான காளியைப் பற்றி 80களில் சொன்ன தகவல்களுடன் நாகேந்திர பிள்ளை சொன்ன விஷயங்களை ஒப்பிட்டுப் பார்த்தேன். தேவதாசி முறை பற்றிய சரியான தகவல்கள் வரவில்லையோ என்று தோன்றுகிறது.

தாழக்குடி பெரியகுளம் அருகே உள்ள ஒரு சதிக் கல்லை படம் எடுக்கச் சென்றபோது சதி குறித்து சில செய்திகள் கிடைத்தன. பழைய தென்திருவிதாங்கூர் குறித்த வரலாற்றில் கிடைக்காத செய்திகள் அவை. நான் சேகரித்த செய்திகளில் ‘சதி’ பற்றிய நியாயங்களும் இருந்தன. சதி நடந்த முறைகள் செயல்பாடுகள் எல்லாம் ஏற்கெனவே சொல்லப்பட்டவையும் அல்ல.

தாழக்குடி நம்பிகுளத்தின் அருகே ஓங்கி வளர்ந்திருந்த பழமையான புளியமரத்தின் அடியில் சதிக் கல் இருந்தது; சதிக் கல்லுக்குரிய எல்லா அடையாளங்களும் அதில் இருந்தன. நான் அந்தக் கல்லை கன்னியாகுமரி அருங்காட்சியகத்திற்கு எடுத்துக் கொண்டு செல்ல முயற்சித்தபோது ஊரில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இப்போது அந்தக் கல்லைக் காணவில்லை.

இந்த சதிக் கல் தொடர்பாக பத்மநாப பிள்ளை என்பவர் 1944இல் தான் எழுதிய நூலில் சில செய்திகளைக் குறிப்பிடுகிறார். அதற்குச் சற்று அதிகமான செய்திகளை நான் சேகரித்தேன். தாழக்குடி ஊரில் தெற்கு பள்ளத் தெருவில் படிக்கல் வீட்டில் சைவ வேளாள சாதியில் குலசேகரப் பெருமாள் என்பவர் இருந்தார். அவரது மனைவி மாணிக்கரசி.

ஒருமுறை குலசேகரப் பெருமாள் ஏதோ காரணத்தால் இறந்து விட்டார். அவரது மனைவியால் அதைத் தாங்க முடியவில்லை. நான் கணவருடன் உடன்கட்டை ஏறப் போகிறேன் என்றாளாம். உறவினர்கள் அதற்கு அனுமதி வாங்க அழகிய பாண்டியபுரம் பெரிய வீட்டு முதலியாரிடம் கேட்டார்கள். அவர் அதற்கு இசைந்தார். அப்போது அவர் நாஞ்சில் நாட்டின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தார்.

மாணிக்கரசி மேலாடையில் நெருப்பை ஏந்திக்கொண்டு சுடுகாட்டுக்குப் போனாளாம். கணவனின் சிதையின் மேல் தானாய் குதித்தாளாம். இந்தச் செய்திகளை மிகைப்படுத்தலுடன் சிலர் சொன்னார்கள்.

அழகிய பாண்டிய முதலியாரின் நாஞ்சில் நாட்டு நிர்வாகப் பொறுப்பு பறிக்கப்பட்டது 1810இல். எனவே சதி நிகழ்ச்சி அதற்கு முன் நடந்திருக்கலாம். இந்த சதிக் கல் மட்டுமல்ல 8க்கு மேல் சதிக்கற்கள் தென் திருவிதாங்கூரில் இருப்பதை என் நண்பர் செல்வதரன் அடையாளம் கண்டார். ஆனால் அவை பற்றிய செய்திகள் பெரிய அளவில் கிடைக்கவில்லை.

பறக்கைக் கோவிலில் தேவதாசியாக இருந்து ஓய்வு பெற்றபின் திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளத்தில் மகளுடன் வாழ்ந்த கின்னக்குட்டியை 80களின் ஆரம்பத்தில் நான் சந்தித்தபோது காளியைப் பற்றிச் சொன்னார்கள். காளி இறக்கும்போது 97 வயது. சின்னக்குட்டியை விட 10 வயது மூத்தவள் காளி.

எப்போதும் தன்னைத் தாழக்குடி தேவதாசியாகவே அடையாளப் படுத்திக் கொள்ளுவாளாம் காளி. தாழக்குடி ஜெயந்தீஸ்வரர் கோவில் திருக்கல்யாணத்திற்கு விரும்பியே ஆடப் போவாளாம். பறக்கை ஊர் காளி ஆட வருகிறாள் என்றால் அதற்குத் தனி மரியாதைதான்.

காளியின் பூட்டி ஒருத்தி தாழக்குடியில் இருந்தாள். அவள் 18ஆம் நூற்றாண்டு இறுதியில் தேவதாசியாக இருந்தவள். பேரழகியாம். முறைப்படி சங்கீதம் படித்தவள்; நாட்டியம் முறையாகக் கற்றவள். திருவிதாங்கூரின் தலைநகரான பத்மநாபபுரத்தில் நவராத்திரி விழாவிற்கு ஆடப் போனால் சுமக்க முடியாத பணத்துடன் வருவாளாம்.

இப்போதும் தாழக்குடி கோவில் திருக்கல் யாணத்தில் நடக்கும் அன்னதானம் அந்தக் காளியின் நிபந்தம்தான். அப்போதைய அரசர் ஒருவரின் தம்பிக்கு வைப்பாட்டியாக இருந்தவள்; அந்தத் தம்பி விருப்பப்பட்டபோது இரணியல் அரண்மனைக்குக் சாரட் வண்டியில் போய் வருவாளாம்.

தாழக்குடியில் ஜயந்தீஸ்வரர் கோவிலில் 9 குடித் தேவதாசிகள் பணி செய்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் வேளாள நிலச் சுவாந்தார்களின் வைப்பாட்டிகளாக இருந்தார்கள். பறக்கைக் காளியின் அம்மாவும் தாழக்குடியில் மிராசுதாருக்கு வைப்பாட்டியாக இருந்திருக்கிறாள். அவர் சைவ வேளாளர்; அவரது மனைவிதான் சதியானாள் என்று சின்னக்குட்டி 80களில் சொன்ன கதையை ஜீரணிக்க முடியவில்லை.

பழைய தென்திருவிதாங்கூரில் வாழ்ந்த தேவதாசிகள் பெரும்பாலும் நாஞ்சில் நாட்டு நிலச்சுவாந்தார்கள், வருவாய்த் துறை அதிகாரிகள் (அப்போது வருவாய்த் துறையும் அறநிலையத் துறையும் ஒன்று) ஆகியோருக்கு வைப்பாட்டிகளாக இருந்தனர். வைப்பாட்டி என்பது நிரந்தரம் அல்ல; சில காரணங்களால் மாறுவதுண்டு.

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் மருமக்கள்வழி மான்மியம் நூலில் கருடாத்திரை படலத்தில் ஒரு உரையாடல். காரணவன் மருமகனிடம்

அடே

செப்பில் கிடந்த திருக்குப்பூ அன்று

எப்படி இறங்கி இரண்டாம் - குடியாள்

கொண்டையில் சென்று குடியேறியது.

என்று கேட்டார். திருக்குப்பூ என்பது பெண்களின் தலையணி. இரண்டாம் குடி என்பது தேவதாசி குடும்பத்தைக் குறிக்கும் குறியீடு. இந்தக் காரணவரின் நாலாம் மனைவியைக் கவிமணி

மஞ்சள் பூச்சும் மயக்குப் பேச்சும்

சாந்துப் பொட்டும் தாசிகள் மெட்டும்

கோல உடையும் குலுக்கு நடையும்

என்றெல்லாம் வருணித்துக் கொண்டே போகிறார். காரணவர் இறந்ததும்

நாலாம் மனைவி நாடகக்காரி

விடுமுறி போட்டு விலகி விட்டாள்

என்கிறது நூல்.

விடுமுறி என்பது விவாகரத்து, இந்த நாலாம் மனைவி தேவதாசி மரபினள். 1930க்கு முன் இவர்கள் விதவையாவது என்று வழக்கமில்லை. மருமக்கள் வழி மான்மியம் 1916இல் எழுதப்பட்டது. அதற்கு முன்பே நடந்ததாகக் கற்பனை செய்யப்பட்டது. ஒரு வகையில் அன்றைய தேவதாசிகளின் நிலை இது.

சின்னக்குட்டி என்பதுகளில் காளி சொன்னதாக என்னிடம் சொன்ன முக்கியமான சில செய்திகளை பேராசிரியர் கே.கே.பிள்ளை கூட பதிவு செய்யவில்லை. கோவில் நிபந்தங்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் தேவதாசிகள் இருந்தனர்; கோவில் பணிகளுக்கு தேவதாசிகள் வீடு, நிலங்களை மான்யமாகப் பெற்றிருக்கின்றனர்.

தேவதாசிகள் மான்ய வீடுகளில் குடியிருந்தனர். மான்ய விளைச்சல் - நிலங்களை அவர்கள் பயிரிடவில்லை. தேவதாசிகளின் வீட்டு ஆண்கள் விவசாயிகள் அல்லர். அவர்களுக்கு வேளாண் தொழில்நுட்பமும் தெரியாது. அவர்கள் கோவிலில் பணியாளர்களாகவும், முறையான் பிள்ளை என்ற குற்றேவல் பணிகளிலும் இருந்தனர்.

தேவதாசிகளுக்குக் கொடுக்கப்பட்ட மான்ய நிலங்களை சிறு நில உரிமையாளர்களும், பெரும் பணக்காரர்களும் பயிரிட்டனர். இவர்களில் சிலர் தேவதாசிகளை வைப்பாட்டிகளாகவும் வைத்திருந்தனர். மிராசுதாரர்கள் வைப்பாட்டிகளை மாற்றியபோது மான்ய நிலத்துக்குப் பிரச்சினை வந்தது.

திருவிதாங்கூரில் மன்றோ கிழக்கிந்தியக் கம்பெனி பிரதிநிதியாக இருந்தபோது - கோவில்கள் அரசுடைமையாயின. அப்போது - மான்ய நிலங்களைப் பயிரிட்டவர்களுக்குப் பெரிய சிக்கல்கள் வரவில்லை. ஆனால் பாதித்தவர்கள் தேவதாசிகளே. திருப்பணிக் களவுமாலை என்ற கதைப்பாடலில் 19ஆம் நூற்றாண்டு தேவதாசிகளின் நிலை வெளிப்படையாகவே பேசப்படுகிறது.

பறக்கை ஏழாங்குடி முடுக்கில் குடியிருந்த காளியின் வீட்டின் மேற்குப் பகுதியில் தெற்கு பார்த்த சுவரில் யட்சியின் தாவரச் சாய ஓவியம் இருந்ததை அறுபதுகளின் ஆரம்பத்தில் பார்த்திருக்கிறேன். ஓடு வேயப்பட்ட அந்தச் சிறு அறையில் சுவரில் குடியிருந்த சுவரோவிய யட்சி கொடூரமாயிருந்தாள்.

நின்ற கோலம். வட்டக் கண்கள். நீண்ட நாக்கு. ஒரு கையில் குடுமியுடன் கூடிய தலை; அதிலிருந்து ரத்தம் சொட்டுகிறது. மறு கையில் கொடுவாள். விரிந்த தலை. காதுகளில் வேதாளக் குண்டலம். திறமையில்லாத ஓவியன் வரைந்தது, என்றாலும் பயம் வரும் தோற்றம்.

இந்த யட்சியின் கதையை அறுபதுகளில் நான் மோலாட்டமாகக் கேட்டாலும் முழுவதுமாக அறிந்தது தேவர் குளத்தில் சின்னக்குட்டியைச் சந்தித்துப் பேசிய போதுதான். நான் கேட்ட பல கேள்விகளில் இந்த யட்சியும் அடங்கும்.

இந்த யட்சி காளியின் அம்மா வழிப் பாட்டியுடன் தொடர்புடையவள். பெரும்பாலும் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த யட்சி வழிபாடு வந்திருக்கலாம். இக்காலத்தில் திருநெல்வேலி மதுரை போன்ற இடங்களிலிருந்து தென்திருவிதாங்கூரில் குடியேற்றம் நடந்திருக்கிறது. அந்தக் குடியேற்றம் தொடர்பான கதை.

“...... லேசான மழை தூறிக் கொண்டிருந்தது. அமாவாசைக்கு இரண்டு நாள்தான். ஊர் மூத்தபிள்ளை வலிகொலி அம்மன் கோவில் வழி வந்து கொண்டிருந்தார். ஐப்பசி மழையால் பெரியகுளம் நிரம்பி வழிந்தது. ஊருக்குச் செல்ல கல்பாலம் உண்டு; இரண்டு மூன்றுபேர்தான் நடக்கலாம். அவர் கோமணத்தை குறுக்கிக் கட்டியபோதுதான் குளத்தின் கரையில் இரண்டு கழுதைகளைப் பார்த்தார். கூடவே ஆணும் பெண்ணுமாக மூன்று நான்குபேர்.

மூத்த பிள்ளை நின்று பார்த்தார். வெளியூர்க்காரர்கள். தங்குவதற்கு வலிகொலியம்மன் கோவிலைப் பார்க்கிறார்கள் என்று புரிந்தது. அவர்களின் அருகே சென்றார். கறுத்த அழுக்கடைந்த சிறுமி கழுதையின் அருகே நின்றாள். மூத்த பிள்ளையே அவர்களிடம் “இரவு தாமசத்துக்குத் தானே என்னுடன் வாருங்கள்” என்றார்.

அவர்களில் ஒருவர் “ஐயா நாங்கள் சூரமங்கலத்துக்காரர்கள். ஊரில் பாளையக்காரரைப் பகைத்து விட்டோம். இன்று இரவு தங்கிவிட்டு நாளை பத்மநாபபுரம் போய் விடுவோம்” என்றார்.

மூத்த பிள்ளை “ம் வாருங்கள் பின்னே” என்றார்; கழுதைகள் முன்செல்ல மற்றவர்கள் பின்னே வந்தனர். மூத்த பிள்ளை முதலில் அவர்களைத் தன் வீட்டிற்குப் பின்னே பத்தயப்புரையில் தங்க வைக்க திட்டம்; ஆனால் நடக்கும் போதே மனம் மாறியது; தன் வைப்பாட்டியின் வீட்டிற்கே அழைத்துச் சென்றார்.

அடுத்த நாள் கழுதையின் மேல் இருந்த பொதியின் மீது சந்தேகம் வந்தது; வைப்பாட்டி அதைக் கண்டுபிடித்து விட்டாள். அவர்களிடம் தங்கக் கட்டிகள் இருப்பது தெரிந்தது. அந்தக் கறுத்த சிறுமி உண்மை வடிவத்தையும் பார்த்து விட்டாள். அவள் பேரழகியாய் இருந்தாள்.

அந்தக் காலத்தில் வெளியூர் பயணத்தின் போது அழகான சிறுமிகளை அழைத்துச் செல்லும்போது அவளது உருவத்தை மாற்றும்படி சில காரியங்கள் செய்வார்கள். அவளது தலைமுடியில் சாம்பலையும் சில பச்சிலை மூலிகையும் தேய்த்து செம்பட்டை நிறத்தில் ஆக்குவர். உடம்பில் கரியைத் தேய்த்து அழுக்கு ஆமை அணிவித்து அடிமை வேலைக்காரியைப் போல் ஆக்குவார்கள். இது ஒரு பாதுகாப்பு.

சூரமங்கலச் சிறுமியும் அப்படித்தான் வந்திருந்தாள். இதை மூத்த பிள்ளையின் வைப்பாட்டி கண்டுபிடித்து விட்டாள். அதோடு கழுதையின் பொதியில் கொஞ்சம் தங்கக்கட்டிகள் இருப்பதும் தெரிந்தது. மூத்த பிள்ளைக்கு சூசகமாகத் தெரிவித்தாள். அவர் இந்தப் பயணிகளை நல்ல நோக்கத்தில்தான் கொண்டு வந்தார். தங்கக் கட்டிகளின் ஆசை கண்ணை மறித்தது.

இரண்டு நாட்கள் அவர்கள் வைப்பாட்டியின் வீட்டில் இருக்கும்படியான சூழ்நிலையை உண்டாக்கினார். சிறுமியின் குடும்பத்து ஆண்களையும், ஒரு பெண்ணையும் ஏதோ காரணம் சொல்லி அப்புறப்படுத்தி வலிகொலி அம்மன் கோவில் குளத்தில் மூழ்கடித்தார். வைப்பாட்டி, சிறுமியை தன்வசம் வைத்துக் கொள்ளலாம் என்றும் நினைத்தாள். அவள் பங்குக்கு தங்கக் கட்டியை எடுத்துக் கொண்டாள்.

சிறுமிக்கு கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் புரிந்தது. மூத்த பிள்ளையின் சதி தெரிந்தது. வைப்பாட்டியின் வீட்டு வைக்கோல் படைப்பில் நெருப்பை வைத்து அதில் சாடிவிட்டாள். அதன் பிறகு யட்சியாகி ஆதாளி செய்ய ஆரம்பித்தாள். வைப்பாட்டி தாழக்குடிக்குக் குடிபெயர்ந்து விட்டாள். அவள் மகள் கோவிலுக்கு நிபந்தம் கொடுத்தாள். கல்வெட்டு சான்று உண்டு. இப்போதும் திருக்கல்யாண விழாவில் அன்னதானம் நடக்கிறது.

சிறுமி யட்சிக்கு வழிபாடு நடத்தினர். உயிர்பலி கொடுத்தனர். யட்சி அடங்சி விட்டாள்;

இந்தக் கதையைச் சொல்லிவிட்டு சின்னக்குட்டி "அந்தக் குடும்பத்தில் வந்தவள்தான் நீ பார்த்த காளி" என்றாள்.

Pin It