தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு காரணமாகக் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து 1967இல் அண்ணா ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டவுடன் ‘தமிழ்ப் பயிற்சி மொழிக்' கொள்கையை ஆதரித்துப் பேசினார்.

“தமிழ் பாடமொழியாக இருக்க வேண்டும் என்பது” என்று சொல்வது இந்த நாட்டில்தான் தேவைப்படுகிறது. ஆங்கில நாட்டில் ஆங்கிலந்தான் பாடமொழி என்ற சொல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லை. எந்த நாட்டிலும் இல்லாத விந்தை இங்கேதான் இருக்கிறது. தமிழில் கற்பிக்கலாமா? என்ற கேள்வியும், முடியுமா? என்னும் எதிர்ப்பும் பார்க்கலாம் என்னும் சந்தேகமும் தமிழ்ப் பயிற்சி பெறுபவர்கள் என்ன ஆவார்? இதுவரை தமிழ்வழிக் கல்வி பெற்றவர்கள் என்ன ஆனார்கள்? என்று இந்நாட்டிலேதான் பேசப்படுகிறது. இதற்குக் காரணம் அந்நிய ஆட்சியில் இந்த நாடு இருந்தது. அப்போது தமிழ் நாட்டங் கொண்டவர்களைப் பார்க்க முடியாது. நாட்டங் கொண்டிருந்தவர்களும் புலவர் என்ற பட்டத்தோடு, “சரி” என்று கூறினர். இதைவிட கடுமையாக அண்ணா கூறியது இங்கு நினைவு கூரத்தக்கது. “ஆட்சி மொழியாக அன்னைத் தமிழிருக்க வேரில் வெந்நீரை ஊற்றுவதற்குச் சமமாகும்” என்பது ஆகும்.

karunanidhi and educationதமிழகத்தில் ஆட்சிமொழி தமிழ் என்ற முடிவெடுக்கப்பட்ட நிலையில் 1967 இறுதியில் இந்தியப் பாராளுமன்றத்தில் இந்திமொழி பேசுவோர்க்கு, சார்பாக மாற்றப்பட்ட நேரு உறுதிமொழியும் அதனுடன் இணைக்கப்பட்ட மொழிக் கொள்கைத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதின் விளைவாக மூன்றாம் இந்தியெதிர்ப்புப் போராட்டம் தமிழக மாணவரிடையே கிளர்ந்து நாடு முழுவதும் பரவி நடைபெற்றது. ஆனால் இந்நிலையில் முதலமைச்சர் அண்ணா சென்னை, சட்டப்பேரவையில் இந்தி நீங்கிய இருமொழித் திட்டத் தீர்மானத்தை நிறைவேற்றி­விட்டதனால் மாணவர் இந்தியெதிர்ப்பு அடங்கியது.

அண்ணா காலத்திலேதான் (1968இல்) ஆட்சி மொழிச் சட்டத்தை தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆற்றிய தன் உரையில் “இந்தத் தமிழ்ப் பாடமொழி - பயிற்சிமொழி என்ற பிரச்சினையைப் பொறுத்தவரையில் பல்வேறு கருத்துகள் எல்லாம் சொல்லப்பட்டன. நான் ஆங்கிலத்தைப் புறக்கணிக்கிறவன் அல்ல. ஆனால் ஆங்கிலம்தான் இருக்க வேண்டும்; தமிழ் அதற்குரிய இடத்தைப் பெறவேண்டாம் என்ற எண்ணம் கொண்டவனும் அல்ல. ஆங்கிலம் எந்தெந்தக் காரியங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறதோ அந்தக் காரியங்களுக்கு இந்தியாவில் உள்ள மொழிகளில் எது தகுதியுள்ள மொழி என்றால், அது ‘தமிழ்’, ‘தமிழ்’ என்று சொல்லத் தயக்கப்பட மாட்டேன். அவ்வளவு வளமுள்ள மொழி அது. சென்ற முறை பேசியபடி எல்லாக் கல்லூரிகளிலும் பாடப்புத்தகங்கள் தயாரிப்பது ஆசிரியர்களைத் தயாராக்குவது ஆகிய இந்தக் காரியங்களில் கொஞ்சம் தயக்கம் காட்டப்பட்டு வருகிறது. என்னுடைய திருத்தத்தில் அவர்கள் குறிப்பிட்ட அதையும் இணைத்திருக்கிறேன். ஐந்தாண்டுகளுக்குள் தமிழகத்தின் எல்லாக் கல்லூரிகளிலும் தமிழைப் பாடமொழியாகவும் பயிற்சி மொழியாகவும் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துக்கொள்வது மட்டுமல்ல. அடுத்த ஆண்டிலேயே சர்க்கார் கல்லூரிகளில் அத்தனையிலும் தமிழ் பாடமொழி ஆகும் என்பதை இன்றைய தினம் அறிவிக்க விரும்புகிறேன்” என்று 23-01-1963இல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மொழிப் பிரச்சினையின் மீது நடைபெற்ற விவாதத்தின்போது அன்றைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா குறிப்பிட்டார்.

1968ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 23ஆம் நாளன்று, தமிழ்நாடு சட்டப்பேரவையில் மொழிச் சிக்கல் பற்றி நிறைவேற்றிய அரசினர் தீர்மானம் தமிழர்களின் மொழியுணர்வையும் மொழிக் கொள்கையையும் தெளிவாக எடுத்துரைக்கிறது.

அண்ணா தந்த உறுதிமொழி 1968 -1969 ஆண்டில் நடைமுறைக்கு வரவில்லை. சட்டமன்றத் தீர்மானத்தை அமல்படுத்த ஓராண்டு கால அவகாசம் தேவை என்று கல்வித்துறையின் சார்பில் சொல்லப்பட்டது.

அண்ணாவின் மறைவுக்குப்பின் கலைஞர் முதல்வர் பொறுப்பை ஏற்ற பின்னர் தமிழைப் பயிற்சி மொழியாக்கும் பணி வளர்பிறையாகி வந்தது. தமிழைப் பயிற்சி மொழியாக எடுத்துப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. இந்த வளர்ச்சி அரசு கல்லூரிகளின் அளவில்தான் இருந்தது. தனியார் கல்லூரிகளில் தமிழைப் பயிற்சி மொழியாக்கும் திட்டத்திற்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் தனியார் கல்லூரிகளை நிர்பந்திக்க அரசு முயன்றது. தமிழைப் பயிற்று மொழியாக ஏற்றுப் படிப்போருக்குச் சில சலுகைகள் வழங்கப்பட்டன. பதவி வழங்குவதிலும் சலுகை காட்டப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வரும், கல்வி அமைச்சரும் அறிவித்தனர்.

சட்டப்பேரவையில் ஒரு சந்தர்ப்பத்திலே “தமிழை ஏற்றுப் படிக்காதவர்கள் தமிழகத்தில் வாழ முடியாத நிலை ஏற்படலாம்” என்று உணர்ச்சி வயப்பட்டுப் பேசும்போது முதலமைச்சர் கலைஞர் கூறிவிட்டார். இதனை ஆங்கில மொழியின் ஆதிக்கத்தை ஆதரிக்கும் நாளேடுகள் பெரிதுபடுத்திப் பிரசுரித்தன - (விடுதலைக்குப்பின் தமிழ் வளர்த்த வரலாறு. ம.பொ.சி. ப. 217).

பயிற்று மொழி எதுவாக இருக்கும் என்பதை மாணவர்களின் விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டுமென்று ஒரு கிளர்ச்சி பிறந்தது. இராஜாஜி இதற்குத் தூண்டுகோலாக இருந்தார். சிண்டிகேட் காங்கிரசின் தேசிய மாணவர் மன்றம் இந்த கிளர்ச்சிக்குப் பொறுப்பேற்றது. 1970 நவம்பர் 21, 22 தேதிகளில் மதுரை மாநகரில் சிண்டிகேட் காங்கிரஸ் கட்சி மாணவர்கள் மாநாடு மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்டது. திமுக அரசுக்கு எதிரான உணர்ச்சி உடையவர்கள். எல்லாம் “மாணவர் மாநாடு” என்ற போர்வையில் இம்மாநாட்டில் பங்கு பெற்றனர்.

டிசம்பர் 7, 8 தேதிகளில் அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவர்களில் ஊர்வலம் என்ற பெயரில் ஆங்கிலமும் பயிற்சி மொழியாக நீடிக்க மாணவர்கள் சென்னையில் ஊர்வலம் நடத்தினார்கள்.

1970இல் நடைபெற்ற இப்போராட்டங்களுக்கு, டாக்டர் ர.லட்சுமணசாமி முதலியார், டாக்டர் ர.ராமசாமி முதலியார் போன்றோர்களும் தங்கள், ஆதரவைத் தெரிவித்தனர். மாணவர்கள் முதல்வர் கருணாநிதி உருவத்தைக் கொடும்பாவி கொளுத்தினர். வேலை வாய்ப்பு இவ்வாணையால் பறி போகும் எனக் கூறினர். இதே மாதிரி அண்ணா முதலமைச்சராக இருந்த காலத்தில் டாக்டர் ர.லெட்சுமணசாமி முதலியாரும், டாக்டர் ர.ராமசாமி முதலியாரும் சென்னைப்பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் 1967 நவம்பர் 4, 5 தேதிகளில் ஆங்கில பாதுகாப்பு மாநாடு நடத்தினர் என்பதையும் இச்சமயத்தில் நினைவு கூறுதல் வேண்டும். ஏனெனில் சென்னைப்பல்கலைக் கழகத் துணை வேந்தர் தொடர்ச்சியாகத் தமிழ் வளர்ச்சிக்கு இடையூறாகவே செயல்பட்டிருக்கின்றனர் என்பதை இச்செயல்பாடுகளின் மூலம் அறிய முடியும்.

போராட்டத்தைக் கைவிடுங்கள் - கலைஞர் வேண்டுகோள்

இந்தப் போராட்டங்களைக் கைவிடச் சொல்லி கலைஞர் விடுத்த வேண்டுகோள் வருமாறு:

“நான் எந்த மாணவர்களுக்காக இந்தியை எதிர்த்துப் பலமுறை சிறை சென்றேனோ எந்த மாணவர்களுக்காக முப்பது ஆண்டுகளுக்கு முன்பே ‘தமிழ் மாணவர் மன்றம்’ தொடங்கினேனோ, எந்த மாணவர்களின் பெயரால் பாளையங்கோட்டைச் சிறை வாசம் செய்தேனோ அந்த மாணவர்களின் அடுத்த வரிசையினர் என் கொடும்பாவிக்குக் கொள்ளி வைப்பதென்றால், அது மகிழ்ச்சியோடு தாங்கக் கூடிய ஒன்றுதானே. பொதுவாகவே இருக்கிற வேலையில்லாத் திண்டாட்டத்தையும், பயிற்றுமொழிப் பிரச்சினையையும் ஒன்றாக்கி முடிபோடுகிற பேச்சுக்கள் வெறும் அரசியல் லாபத்திற்காகப் பேசப்படுபவை என்பதை மாணவ நண்பர்களே புரிந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்

இந்த நிலையில் அன்றைய கல்விக் கொள்கை நிலைப்பாட்டைக் கலைஞர் அமைச்சரவையில் கல்வி அமைச்சர் மேலவையில் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு தமிழ்ப் பயிற்றுமொழி ஆதரவுக்கான உரை கவனத்திற்குரியது.

இக்காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் போராட்டம் தொடர்வதைக் கண்டு குன்றக்குடி அடிகளார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் போன்றவர்கள் கலைஞரிடம் தமிழ் பயிற்று மொழி ஆணையை சிறிது நிறுத்தி வைக்கக் கோரினர் என்பது வரலாறு.

இச்சமயத்தில் இந்திய அரசு மாநில அரசிடமிருந்த கல்வியைப் பொதுப்பட்டியலுக்கு மாற்றியது இந்த மாற்றம் தமிழ் மொழிக் கல்வி வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் ஊறு விளைவிப்பதாக அமைந்தது. 1972இல் முதல் வகுப்பிலிருந்து 5ஆம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்குப் பயிற்று மொழியாக ஏழு மொழிகள் அறிவிக்கப்பட்டன.

கலைஞர் மீண்டும் முதலமைச்சரான பின் 1996இல் தமிழுக்கென்று தனி அமைச்சகம் அமைத்தார்.

1997- 98இல் தமிழில் பொறியியலைப் பயிற்றுவிக்கும் முயற்சியை மேற்கொண்டு மாணவர் சேர்க்கை பற்றி அரசு அறிவித்தது. ஆனால் அதன்பிறகு அனைத்திந்திய தொழில் நுட்பக் குழு ஒப்புதல் தரவில்லை என்று கூறி தமிழ் வழிப் பொறியியல் படிக்க முன்வந்து சேர்க்கைக்கு உள்ளாக வேண்டியவர்கள் எப்பொழுதும் போலவே ஆங்கிலத்தில் படிக்க அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனாலும் 2006இல் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கட்டிலில் ஏறிய பிறகு தமிழ்வழி பொறியியல் படிப்பை 2010இல் அண்ணா பல்லைக்கழகத்தின் பதினொறு கல்லூரிகளில் தொடங்கப்பட்டது.

நீதிபதி மோகன் குழு

1996இல் கலைஞர் பதவி ஏற்ற பிறகு தமிழ் அறிஞர்களின் கோரிக்கையின் படி நீதிபதி மோகன் அவர்கள் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. அக்குழு ஆரம்பக் கல்வி மற்றும் மேற்படிப்பு வரை, தமிழை எவ்வாறு பயிற்சி மொழியாக அறிமுகப்படுத்துவது? என்பது குறித்து ஆராய்ந்து கூறுவதற்காக அமைக்கப்பட்டது. இக்குழு தமிழ் அறிஞர்களோடும் பொதுமக்களோடும் விவாதித்தது. அதன் அடிப்படையில் தனது பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு அளித்தது. அரசாங்கம் அந்தப் பரிந்துரைகளைக் கவனமாகப் பரிசீலனை செய்தது. இதில் மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளின் கருத்துரைகளும் பெறப்பட்டன. இவை அனைத்தையும் மேற்கொண்டுதான் நீதிபதி மோகன் குழுவினர் மிகுந்த கவனத்தோடும் நடுநிலையோடும் தமது பரிந்துரையை அளித்தனர்.

நீதிபதி மோகன் குழுவினர் அறிக்கை

மழலையர் முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் அல்லது தாய்மொழி பயிற்று மொழியாதல் வேண்டுமென்றும் மூன்றாம் வகுப்பு முதல் ஆங்கிலம் ஒரு மொழிப் பாடமாகக் கற்பிக்கப்படலாம் என்றும், ஆறாம் வகுப்பு முதல் அவரவர் விருப்பப்படி தமிழ் வழியிலோ, ஆங்கில வழியிலோ படிக்கலாம் என்றும் முதல்மொழியாக அனைவரும் மாநில மொழியாகத் தமிழைக் கட்டாயமாகப் படிக்க வேண்டுமென்றும் உயர்கல்வியை ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோர் படிக்கவும் இடம் தந்தும் பரிந்துரைக்கப் பெற்றது. கைவினைஞர், வேளாண் துறையினர், மருத்துவச் செவிலியர் போல் தமிழில் படிக்க வேண்டிய சூழலில் உள்ளவர்களையும் பிற்பல பயனுள்ள தொழிற் கல்விகளைத் தமிழில் படிக்க விரும்புவோர்களுக்கு வாய்ப்பு தந்தும் அவர்களுக்கு அவ்வாறு தாய்மொழி வழி உயர்கல்வி படிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழ் ஆட்சிமொழியாக ஐம்பதாண்டுகளாக அறிவிக்கப்பட்டு ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட இம்மாநிலத்தில் தமிழ்வழி கற்றவர்க்கே வேலை வாய்ப்பில் முன் வாய்ப்பு நல்கவேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஆணை

மோகன் குழுவின் அறிக்கையை முழுமையாக ஏற்றுக்கொண்ட தமிழக அரசு மழலையர் பள்ளிகளில் தமிழைப் பயிற்றுமொழியாக்கும் திட்டத்தை அறிவித்தது. அரசு வெளியிட்ட ஆணை வருமாறு:

 1. பயிற்சி மொழிக் கொள்கை பற்றி வெளி­யிடப்படும் அரசாணைகள் செல்லும் என நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்காகச் சட்டம் எதுவும் இயற்றப்பட வேண்டியதில்லை என அரசாங்கம் கருதுகிறது. எனவே அரசாங்கத்தில் மொழிக் கொள்கை பற்றிய உத்தரவுகள் அரசாணை மூலம் வெளியிடப்படுவது தொடரும்.
 2. மெட்ரிகுலேசன் பள்ளிகள், அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், பெறாத பள்ளிகள் உட்பட எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் அல்லது தாய் மொழியே முதல் மொழியாக இருக்கும்.
 3. மெட்ரிகுலேசன் மற்றும் அரசுப் பாடத்திட்டம் வழக்கில் உள்ள பள்ளிகளிலும் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் அல்லது தாய்மொழியே பயிற்சி மொழியாக இருக்கும்.
 4. தமிழ் அல்லது தாய்மொழிப் பயிற்சிக்கு மாறும் பணி மூன்றாண்டுகளில் நிறைவுபெறும். 2000 - 2001ஆம் ஆண்டு முதல் வகுப்பில் பயிற்சிமொழி ஆகும். பின்னர் அது படிப்படியாக உயர் வகுப்புகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
 5. அனுமதி பெறாத அல்லது அங்கீகாரம் பெறாத பள்ளிகளிலோ தனிப்பட்ட முறையில் பயின்ற மாணவர்கள் 6ஆவது வகுப்பு வரை பள்ளியினால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
 6. தமிழ் அல்லது தாய்மொழியே பயிற்சிமொழி என மெட்ரிகுலேசன் பள்ளி போர்டு விதிகளில் தெளிவாக்கப்படும். இத்தகைய திருத்தத்தை மெட்ரிகுலேசன் பள்ளிகளில் ஆறாவது வகுப்பிலிருந்து செயல்படுத்தத் தனியாக ஆணை பிறப்பிக்கப்படும்.

அரசாங்க உதவி பெற்ற, பெறாத, அனுமதி பெற்ற மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆகிய எல்லாப் பள்ளிகளிலும் முதன்மை மொழி தமிழ் அல்லது தாய்மொழி எனத் தெளிவுபடுத்தப்படும்.

தனியார் பள்ளிகள் எதிர்ப்பு (மெட்ரிகுலேசன் கூட்டமைப்பு)

அரசு வெளியிட்ட ஆணையை தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளும் பெற்றோர்களும் எதிர்த்தனர். இந்த அரசாணை மாணவர்கள், பெற்றோர்களின் உரிமையைப் பறிப்பதாக ஆங்கிலவழிப் பள்ளி நிர்வாகிகளின் கூட்டமைப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. ஆங்கிலப் பள்ளிகளின் சங்கத்தின் சார்பில் அதன் செயலர் பி.டி.குமார் இந்த வழக்கில் முதல் வாதியாகச் சேர்க்கப்பட்டார். மேலும் 31 தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் வழக்கில் வாதிகளாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலப் பள்ளி நிர்வாகத்தினர் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் முறையீடு

உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் பயிற்றுமொழிக் கொள்கைக்கு ஆதரவாக அரசின் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டனர். தமிழ்ச்சான்றோர் பேரவையின் நிறுவனர் அருணாச்சலம், வலம்புரிஜான், வழக்கறிஞர் காந்தி, வழக்கறிஞர் அரிபரந்தாமன் ஆகியோர் தங்களையும் வழக்கின் பிரதிவாதியாகச் சேர்த்துக் கொள்ளக்கோரி மனு செய்தனர். தனியார் பள்ளிகள் சார்பில் பலரை வாதிகளாக ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் தமிழ்வழிக் கல்விக்கு ஆதரவாக மனு செய்தவர்களின் மனுக்களை நிராகரித்து விட்டது.

தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷண் வாதாடினார்

“அரசு வெளியிட்ட உத்தரவு முக்கியமான கொள்கை முடிவாகும். குழந்தைகள் தாய்மொழி மூலமாகத்தான் பாடங்களைத் தானாகப் புரிந்துகொள்ள முடியும். குழந்தைகளுக்கு எவ்விதம் கல்வி அமைய வேண்டும் என்பதை பெற்றோர் அறிந்திருந்தாலும், அவர்களைவிட கல்வியாளர்களுக்குத்தான், குழந்தைகளின் கல்வி குறித்தும் அதிகம் தெரியும். தாய் மொழியில் படிப்பதுதான் குழந்தைகளுக்கு நல்லது என்று கல்வியாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்." என்றார் சாந்திபூஷண்.

உயர்நீதிமன்றத் தீர்ப்பு என்ன?

விரிவான விவாதங்களுக்குப் பின் தமிழ்வழிக் கல்வியைச் செயல்படுத்துவது குறித்து பரிந்துரைகள் வழங்க நீதிபதி மோகன் தலைமையில் தமிழக அரசு அமைத்த குழு முறையானது அல்ல என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கு முதலில் நீதிபதி சண்முகம் முன்னிலையிலேயே விசாரணைக்கு வந்தது. நீதிபதி சண்முகம் ஏற்கனவே பயிற்றுமொழிக்கு ஆதரவான தீர்ப்பளித்தவர் என்பதால் அவர் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாதென மெட்ரிகுலேசன் பள்ளி வழக்கறிஞர் யு.என்.ஆர். ராவ் வாதிட்டதைத் தொடர்ந்து நீதிபதிகள் ஏ.எஸ்.வெங்கடாசலமூர்த்தி, எஸ்.ஜெகதீசன், என்.தினகர் ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றமே இவ்வழக்கை விசாரித்தது. இதன்பிறகு வழக்கு தமிழக அரசின் ஆணையை இரத்துச் செய்வதில் முடிந்தது. ‘தமிழக அரசின் ஆணை செல்லாது’ என்பது தீர்ப்பு.

இவ்வழக்கின் தீர்ப்பின் முக்கியக் கருத்துக்கள் வருமாறு:

 1. பயிற்றுமொழியாகத் தமிழைக் கட்டாயமாக்கி அரசு வெளியிட்ட உத்தரவு தெளிவாக இல்லை. முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. இது அரசியல் சட்டத்தின் 14வது பிரிவுக்கு எதிராக உள்ளது.
 2. ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டிராத குழந்தைகள் ஆங்கிலோ இந்தியன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 5ஆம் வகுப்புவரை ஆங்கில வழியில் படிக்க மாணவர்கள் மட்டும் தாய்மொழியில் படிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
 3. இந்த உத்தரவை வெளியிடுவதற்கு முன்பாக மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகங்களின் கருத்துக்களை அரசு கேட்கவில்லை.
 4. தங்கள் குழந்தைகளுக்கு எத்தகைய கல்வியைத் தரவேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றோருக்கு உள்ளது என்று மனித உரிமை குறித்த சர்வதேச மாநாடு தீர்மானம் செய்துள்ளது. இத் தீர்மானத்தில் இந்திய அரசு 1992 டிசம்பர் 11ஆம்தேதி கையெழுத்திட்டுள்ளது.
 5. கல்வி பெறுவது மக்களின் அடிப்படை உரிமை. எந்த மொழியில் படிக்கவேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமையும் அவர்களுக்கு உள்ளது. பயிற்றுமொழி எது? என்பதைக் குழந்தைகளின் பெற்றோர்தான் முடிவு செய்யவேண்டும். அரசு உத்தரவு இந்த அடிப்படை உரிமையைப் பறிப்பதாக உள்ளது.
 6. பயிற்று மொழியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பறிக்கப்படுவதால் சிறுபான்மையினர்கள் உரிமையும் இந்த உத்தரவால் பாதிக்கப்படும்.

(தினமணி 21.04.2000)

நீதிபதிகள் கூறுவது இதுதான்

அரசாணையில் தமிழ் அல்லது தாய்மொழி என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் தமிழைத் தவிர வேறு மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்ட குழந்தைகளுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்கப்படும்? அதற்கு அரசாங்கம் தனது அரசாணையில் ஏதும் வழிவகை செய்யவில்லை. தாய்மொழிக் கல்வி பற்றிய கமிஷனும் இது குறித்து ஏதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே மொழிவழி சிறுபான்மையினர்களுக்கு, அவர்களது நலன்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்கிறது உயர்நீதிமன்றம்.

அரசியல் சாசனத்தின் 51 ஆவது ஷரத்து, 350ஆவது ஷரத்து மற்றும் சர்வதேச மனித உரிமை மாநாட்டு முடிவுகளின் 26(3)ஆவது பிரிவு ஆகியவற்றை உயர்நீதிமன்றம், விவாதித்து, அவற்றின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய அரசாணை செல்லாது என அறிவித்துள்ளது.

தமிழக அரசின் மேல்முறையீடு

தமிழ்வழிக் கல்விக்கு எதிரான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து தீர்ப்புக்கு எதிரான ஊர்வலங்கள், கூட்டங்களைத் தமிழ் அமைப்புகள் தமிழகமெங்கும் நடத்தின. தமிழ்வழிக் கல்விக்கு ஆதரவாக இருந்தபோதிலும் பல தமிழக அரசியல் கட்சிகள் இத்தீர்ப்பு குறித்து கருத்துச் சொல்லவில்லை என்பது ஆழ்ந்து நோக்கத்தக்கது.

உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு

தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அவர்களது மனுவில் கூறப்பட்டிருந்தவை இவை: (இதழ்களின் கருத்துக்கள்)

“ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர் சங்கம் - கர்நாடக அரசு ஆகியவைகளுக்கு இடையேயான வழக்கில் தொடக்கக் கல்வி வரை தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. இந்த நிலையில் தமிழ் வழிக்கல்வி தொடர்பாகத் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய ஐகோர்ட்டுக்கு உரிமை உள்ளதா?

மேல் முறையீட்டு வழக்கு 31.09.2000இல் விசாரணைக்கு வந்தது.

2001 வரை இருந்த தி.மு.க. அரசு மேல்முறையீடு செய்தது. இப்போது இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தப்போவது அ.தி.மு.க. அரசு. 22.07.2001இல் நிலை என்ன? (தினமலர்)

அது பற்றிய ‘தினமலர்’ செய்தியாவது:

“தமிழ்ப் பயிற்றுமொழி தொடர்பாக வழக்கு நடத்திய தி.மு.க. அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கம் செய்த அப்பீல் மனு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அப்போது வலியுறுத்திய ஜெயலலிதா இப்போது தமிழக முதல்வராக இருப்பதால், இந்த அப்பீல் வழக்கில் தமிழக அரசு என்ன நிலையை எடுக்கப்போகிறது? என்ற பரபரப்பான கேள்வி எழுந்துள்ளது.

அரசு மேல்முறையீடு

சென்னை உயர்நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூலை 10ஆம் தேதி தமிழக அரசு அப்பீல் மனுவைத் தாக்கல் செய்தது. சில தமிழ் வளர்ச்சி இயக்கங்களும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. அப்பீல் மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இதற்குப் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, வழக்கில் சேர்க்கப்பட்டவர்கள் தங்கள் தரப்பு பதில் மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜேந்திரபிரசாத், தாஜு ஆகியோர் அடங்கிய ‘டிவிஷன் பெஞ்ச்’ முன்பு, இந்த அப்பீல் மனுக்கள் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாறியுள்ள நிலையில், இந்த அப்பீல் வழக்கை தமிழக அரசு எப்படி அணுகப்போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனென்றால், கடந்த தி.மு.க. அரசு பிறப்பித்த தமிழ் பயிற்று மொழி தொடர்பான உத்தரவை ரத்து செய்யக்கோரி ஆங்கிலப் பள்ளிகள் சார்பில் வாதாடியவர் சீனியர் வக்கீல் என்.ஆர்.சந்திரன். இவர் இப்போது தமிழக அரசின் அட்வகேட் - ஜெனரலாக உள்ளார்.

இதேபோல், ஆங்கிலப் பள்ளிகள் சார்பில் ஆஜரான சீனியர் வக்கீல் முத்துக்குமாரசாமி, இப்போது தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் - ஜெனரலாக உள்ளார்.

கடந்த தி.மு.க. அரசு பிறப்பித்த தமிழ் வழிக்கல்வி உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்திய ஜெயலலிதா, இப்போது தமிழக முதல்வராக உள்ளார்.

ஏப்ரல், 2002இல் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இப்போது தமிழக அரசு தன் கொள்கை முடிவைத் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

விசாரணையின்போது நடந்தவற்றை ‘தினமணி’ (4.04.2002) இதழ், அப்போது தமிழக அரசு வழக்கறிஞர், ‘இப்பிரச்சினையை நீதிமன்றத்தின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம்’ என்று தெரிவித்தார்.

‘அவ்வாறு சொல்ல முடியாது. மேல் முறையீட்டு மனுவை அரசு திரும்பப் பெற்றுக் கொள்கிறதா, இல்லையா?’ என்று நீதிபதிகள் கேட்டனர்.

‘திரும்பப் பெறவில்லை’ என்று அரசு வழக்கறிஞர் கூறினார்.

‘சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் தொடர்பாக 11 நீதிபதிகள் கொண்ட முழு பெஞ்ச் விசாரணை நடத்துகிறது. அந்த விசாரணை முடியும் வரை இந்த வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது’ என்று நீதிபதிகள் அறிவித்தனர்.”

அரசு சரியாக வாதாடவில்லை - தமிழண்ணல்

இதன் தொடர்பான கருத்தினைத் தமிழறிஞர் முனைவர் தமிழண்ணல் வாயிலாகப் பார்ப்போம்.

உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப்பிறகு, கண் துடைப்புப் போல உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, திறம்பட வழக்காடாமல் விட்டுவிட்டது. இதுபோன்ற ஒரு வழக்கில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்காடி வென்றது.

இன்றைய அரசு நீங்களே தீர்ப்பு கூறுங்கள் நாங்கள் வழக்காடவில்லை என்று தாய்மொழியை அந்தரத்தில் தொங்கவிட்டுவிட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ‘உங்கள் வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என அறிவுரை கூறியுள்ளனராம்.

பாரதம் வேற்றுமையில் ஒற்றுமை பேணும் நாடு. பல தேசியமொழி, சமய இனங்களின் கூட்டமைப்புள்ள துணைக் கண்டம் இது. ஒரு தேசிய இனத்தையோ, மொழியையோ சமயத்தையோ, சமமாகப் பாவித்து சமநிலை தந்து, அரவணைத்து, இணைந்து போவதே இந்திய ஒருமைப்பாட்டைக் காக்கும். இவற்றுக்கு வெறி என்று பெயர் கூட்டி அழிக்க நினைப்பது தவறு. ஒரு தேசிய இனத்தையோ, மொழியையோ, சமயத்தையோ அழுத்தவும், அழிக்கவும் நினைப்பவர்களே பிரிவினை வாதிகள் அதாவது பிரிவினைவாதத்திற்கு வித்திடுபவர்கள்.

இத்தீய சக்திகள் பிறரை அடிமைப்படுத்த முயன்று கொண்டே அழுத்தப்படுபவர்கள் வலி தாங்காமல், எகிறி எழும் பொழுதெல்லாம் மேலும் மேலும் அழிக்கவே முயல்வது. அரவணைக்காமல் அழுத்திவிடலாம் என ஒரு குடியாட்சி நாட்டில் கடுமை காட்டுவது இந்திய இறையாண்மையைச் சிதைக்கும், ஒருமைப்பாட்டை அழிக்கும். இவர்களே பாரதத்தின் பகைவர். முடியாட்சிக் காலத்தில் எல்லாம் எதிர்ப்பை முறியடித்து தமிழும் குடியாட்சி காலத்தில் குடிமுழுகிப் போகும் என எதிர்பார்ப்பது அப்பட்டமான தவறு என்பதே ஆகும்.

உச்சநீதிமன்ற வழக்கில் வ.அய்.சுப்பிரமணியம் தன்னையும் வழக்கில் இணைத்துக் கொண்டார்.

இந்த நிலையில் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் திருவனந்தபுரத்தில் உள்ள ‘அனைத்துலக திராவிட மொழியியற் பள்ளி’யின் (International School of Dravidian Linguistics) மதிப்புறு இயக்குநருமாகிய முனைவர் வ.அய்.சுப்ரமணியன் அவர்கள் இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்ளுமாறு ஏற்பாடு செய்தார். திரு.கே.பி.எஸ்.இராசன் என்பவர் இவரது வழக்கறிஞர் ஆவார்.

இவ்வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இக்காலகட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தமிழில் நூறு பாடநூல்களை எழுத ரூபாய் இரண்டுகோடி ஒதுக்கியுள்ளது. வேளாண்மைக் கல்லூரியில் தமிழில் ஒரு வகுப்பில் வேளாண்மைக் கல்வி, அரசுத் துறைகள் பொதுத்துறை நிறுவனங்களில் பணியிடங்களுக்கான தேர்வுகளில் தமிழ்ப் பாடம் கட்டாயம் என பல தமிழ் வளர்ச்சி, தமிழ் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை அறிவித்துள்ளது. இவைகள் அனைத்தும் தமிழ் மக்களுக்குப் பெரு மகிழ்ச்சியை அளித்துவரும் நிலையில் கலைஞரால் உச்சநீதிமன்றத்தில் தமிழ்ப்பயிற்சி மொழிக்கான நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்கையும் வென்று தரவேண்டும் என்பது தமிழ் மக்களின் விழைவு ஆகும்.

டாக்டர் சு.நரேந்திரன்

Pin It