இருபதாம் நூற்றாண்டில் தமிழ் நடை விரிவான பல துறைகளில் பயன்படுத்துவதற்குப் பாரதி வழி காட்டினார். அரசியல், பொருளாதாரம், கல்வி, விஞ்ஞானம், சீர்திருத்தம், சமூகவியல் முதலிய பல வாழ்க்கைத் துறைகளிலும் தமிழ் உரைநடையின் செல்வாக்கை அவர் பரவச் செய்தார். இக்காலத்தைத் தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி உதயம் என்று கூறலாம். பாரதி தமக்கு முன் மக்களுக்கு விளங்கும் படி எழுதிய ஆசிரியர்களுடைய நடையில், எளிமையும் உயிர்த் துடிப்பும் தெளிவும் உள்ளனவற்றைத் தமது நடைக்கு முன்மாதிரியாகக் கொண்டார். புதிய பொருள்களைத் தமது முன்னோர்களைவிட எளிய நடையில், உள்ளத்தைத் தாக்கும் முறையில் எழுதினார்.
சீர்திருத்த உணர்வையும் நாட்டுப் பற்றையும் வளர்க்க உணர்ச்சியூட்டும் நடையைக் கையாண்டார். அறிவை அகற்சி செய்யவும் தெளிவு காணவும் தருக்க ரீதியான நடையைக் கையாண்டார். இரண்டிலும் எளிமையும் தெளிவும் மிளிர்ந்தன. கட்டுரை களுக்கு அவர் இலக்கிய அந்தஸ்தை அளித்தார். குறிக்கோளுடன் கதைகள் எழுதினார். கற்பனைக் கதைகளில் தத்துவக் கருத்துக்களை உட்பொருளாக அமைத்தார். எளிமையான நடையையே, கூறும் பொருளின் தன்மைக்கேற்ப, விதவிதமாகக் கை யாண்டார். பல்வேறு கடினமான கருத்துக்களைக் கூட எளிமையான நடையில் விளக்க முடியும் என்பதை அவர் நிரூபித்தார்.
அவர் பல துறைகளிலும் கையாண்டிருக்கும் உரைநடையின் தன்மையைக் காணச் சில எடுத்துக் காட்டுக்களைக் காண்போம்.
கதை சொல்லும் உரைநடை (narrative)
மறுநாட் காலை முதல் முத்தம்மா பாடு கொண்டாட்டமாகி விட்டது. வீட்டில் அவளிட்டது சட்டம். அவள் சொன்னது வேதம். ஸோமநாதய்யர் ஏதேனுமொரு காரியம் நடத்த வேணுமென்று சொல்லி அவள் கூடாதென்றால் அந்தக் காரியம் நிறுத்தி விடப்படும், அவர் ஏதேனும் செய்யக் கூடாதென்று சொல்லி அவள் அதைச் செய்து தீர வேண்டுமென்பாளாயின் அது நடந்தே தீரும். இங்ஙனம் முத்தம்மா தன் மீது கொடுங்கோன்மை செலுத்துவது பற்றி மனவருத்தமேற்படுவதுண்டு. ஆனால் அம்மனவருத்தத்தை அப்போதப்போதே அடக்கி விடுவார்.
தமிழ்ப் பற்று
உலகத்திலுள்ள ஜாதியார்களிலே ஹிந்து ஜாதி அறிவுத் திறமையில் மேம்பட்டது. இந்த ஹிந்து ஜாதிக்குத் தமிழராகிய நாம் சிகரம் போல் விளங்குகிறோம். எனக்கு நாலைந்து பாஷைகளிலே பழக்கமுண்டு. இவற்றிலே தமிழைப் போல வலிமையும், திறமையும், உள்ள தொடர்பும் உடைய பாஷை வேறொன்றுமேயில்லை.
இந்த நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவு, கீர்த்தி வெளியுலகத்திலே பரவாமல் இருப்பதை நான் அறிவேன். ஆனால் போன நிமிஷம் போய்த் தொலைந்தது. இந்த நிமிஷம் ஸத்யமில்லை. நாளை வரப்போவது ஸத்யம். மிகவும் விரைவிலே தமிழின் ஒளி உலக முழுவதும் பரவாவிட்டால் என் பெயரை மாற்றி அழையுங்கள், அதுவரையில் இங்கு பண்டிதர்களாக இருப்போர் தமக்குத் தமிழ்ச் சொல் நேரே வராவிட்டால் வாயை மூடிக் கொண்டு வெறுமே இருக்க வேண்டும். தமிழைப் பிறர் இழிவாகக் கருதும்படியான வார்த்தைகள் சொல்லாதிருக்க வேண்டும். இவ்வளவுதான் என்னுடைய வேண்டுகோள்.
சீர்திருத்தக் கருத்துக்கள்
செய்யூரிலிருந்து ஸ்ரீமாதவய்யா ஒரு கிழவருடைய விவாகத்தின் சம்பந்தமாக எழுதியிருந்த கடிதம் சில தினங்கள் முன்னே சுதேசமித்திரனில் பிரசுரம் செய்யப்பட்டிருந்தது.
கிழவருக்கு வயது 70. அவருடைய தாயார் இன்னும் உயிரோடிருக்கிறாள். அந்தப் பாட்டிக்கு வயது 98. இந்தத் தாயாருக்கும் தமக்கும் உபசாரம் செய்யும் பொருட்டுக் கிழவர் ஒரு பதினாறு வயதுக் குமரியைக் கலியாணஞ் செய்து கொள்ளப் போகிறாராம். இதே கிழவரிடம் இதைத் தவிர இன்னும் 21 குமரிகளின் ஜாதகம் வந்திருப்பதாகத் தெரிகிறது. கடைசியாக ஒருவாறு தீர்மானஞ் செய்திருக்கிற பெண்ணின் தகப்பனார் பணத்தையும், விதியையும், ஜோதிடத்தையும் நம்பி வேலை செய்கிறார். தெய்வத்தை நம்புவதாகத் தெரியவில்லை. ஒட்டகத்துக்கு ஓரிடத்திலா கோணல், தமிழ் நாட்டிற்கு ஒருவழியிலா துன்பம்?
(தராசு - வசனங்கள் 744)
ஆண் பெண் சமத்துவம் - பிரச்சாரம்
ருஷியாவில் கொடுங்கோல் சிதறிப்போய் விட்டதாம்.
ஐரோப்பாவிலே ஏழைகளுக்கும் பெண்களுக்கும் நியாயம் வேண்டுமென்று கத்துகிறார்களாம்.
உலக முழுமைக்கும் நான் சொல்லுகிறேன். ஆண் பெண்ணுக்கு நடத்தும் அநியாயம் சொல்லுக் கடங்காது. அதை ஏட்டில் எழுதியவர் இல்லை. அதை மன்றிலே பேசியவர் யாருமில்லை.
பறையனுக்குப் பார்ப்பானும் கறுப்பு மனுஷனுக்கு வெள்ளை மனுஷனும் நியாயம் செய்ய வேண்டுமென்று சொல்லுகிறீர்கள்.
பெண்ணுக்கு ஆண் நியாயம் செய்வது அதை யெல்லாம் விட முக்கியமென்று நான் சொல்லு கிறேன்.
எவனும் தனது சொந்த ஸ்திரீயை அலக்ஷியம் பண்ணுகிறான். தெருவில் வண்டி தள்ளி நாலணா கொண்டு வருவது மேல் தொழில் என்றும், அந்த நாலணாவைக் கொண்டு நாலு வயிற்றை நிரப்பி வீடு காப்பது தாழ்ந்த தொழிலென்றும் நினைக் கிறான். பெண்கள் உண்மையாக உழைத்து ஜீவிக் கிறார்கள். ஆண்மக்கள் பிழைப்புக்காகச் செய்யும் தொழில்களில் பெரும்பாலும் பொய், சூது, களவு, ஏமாற்று, வெளிமயக்கு, வீண் சத்தம், படா டோபம், துரோகம், கொலை, யுத்தம்!
இந்தத் தொழில்கள் உயர்வென்றும் சோற்றுக்கும், துணி தோய்த்துக் கோயில் செய்து கும்பிட்டு வீடு பெருக்கிக் குழந்தைகளைக் காப்பாற்றும் தொழில் இழிவென்றும் ஆண் மக்கள் நினைக்கிறார்கள்,
வியபிசாரிக்குத் தண்டனை இகலோக நரகம்.
ஆண்மகன் வியபிசாரம் பண்ணுவதற்குச் சரியான தண்டனையைக் காணோம்.
............
பூமண்டலத்தில் துக்கம் ஆரம்பமாகிறது.
ஆணும் பெண்ணும் ஸமானம். பெண் சக்தி ஆண்...? பெண்ணுக்கு ஆண் தலைகுனிய வேண்டும். பெண்ணை ஆண் நசுக்கக் கூடாது. இந்த நியாயத்தை உலகத்தில் நிறுத்துவதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும். உங்களுக்குப் பராசக்தி நீண்ட ஆயுளும் இஷ்டகாம்ய சித்திகளும் தருவாள் என்று அந்த மிளகாய்ப் பழச்சாமியார் சொன்னார்.
(மிளகாய்ப் பழச் சாமியார் - வசனம் 714)
தேசிய இயக்கத்தால் கிளர்ச்சி பெற்ற பண் பாட்டு மறுமலர்ச்சி இயக்கத்தின் சகல துறை களிலும் பாரதியின் உரைநடை ஊடுருவி நிற்கிறது. உறங்குவோரைச் சாட்டையடி கொடுத்து எழுப்பு கிறது. ஐயமுற்றோரை ஒளிகாட்டித் தெளிவிக் கிறது. பகைவர்களைத் தருக்கத்தால் மடக்குகிறது.
புதிய கருத்துக்களை மக்களின் எளிய பேச்சுத் தமிழில் கூறுகிறது. சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக் களையும் சமூகப் புரட்சிக் கருத்துக்களையும் தமிழ் வளர்ச்சி பெறத் தமது திட்டங்களையும் பொருளுக் கேற்ற நடை வேறுபாடுகளோடு பாரதி வெளியிடு கிறார்.
மறுமலர்ச்சிக் காலத்தின் கவிதைக்கு அவர் தந்தையாயிருப்பது போலவே, உரைநடைக்கும் அவர் தந்தையாகவே விளங்குகிறார்.
மக்கள் வெளியீடாக வெளிவந்த நா.வா.வின் ‘உரைநடை வளர்ச்சி’ நூலில் இடம்பெற்ற கட்டுரை