பூமிப்பந்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தண்ணீரை் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஏனெனில் தண்ணீர் எதிர்கால நோக்கில் ஓர் அருகிவரும் திரவம். இந்த நூற்றாண்டின் மத்தியில் தண்ணீர்த் தேவைக்கென நாம் எண்ணிப் பார்க்க முடியாத அளவிலான நெருக்கடிகளைச் சந்திக்கவிருக்கிறது மானுட சமூகம். அடுத்த உலகப்போர் தண்ணீருக்கானதாகத்தான் இருக்கும் என்பதான ஆருடங்கள் நம்மை அதிர்ச்சி கொள்ளச் செய்கின்றன.    

tamilnadu water crisisஇந்தியா முழுமைக்கும் நடத்தப்பட்ட ஆய்வில் 17% நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பது தெரிய வந்துள்ளது. அதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. ஏனைய மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை பாரிய அளவில் உள்ளதை ஆய்வு முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களிலும், 184 நகரங்களிலும் தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகின்றது. (மாலை மலர்.) மேலும் மத்திய நிலத்தடி நீர்வாரியம் மேற்கொண்ட ஆய்வில், தமிழகத்தில் மிகக் கடுமையான அளவில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதாக எச்சரிக்கை ஊட்டுகிறது.

     உலகோர் போற்றத்தக்க நீர் மேலாண்மையைத் தன்னகத்தே கொண்டு தண்ணீர் தேவையில் தன்னிறைவோடு வாழ்ந்த தமிழர்கள் இன்று தண்ணீர் சிக்கலில் சிக்குண்டு, நாவறட்சியில் தவிக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டதேன்?

     தமிழர்கள் கையாண்ட நீர் மேலாண்மை முறை காலாவதியாகிப் போய்விட்டதா? பழமைகளும் பெருமைகளும் வெறும் வாய்ச்சவடாலுக்குத்தானா? நவீன தொழில்நுட்ப முறைகள் மனித குலத்திற்கு பாதை காட்டவா? பாழ்படுத்தவா? என்பன போன்ற வினாக்கள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

     பு+லோகச் சூழலின்படி தமிழ்நாடு ஒரு வெப்பமண்டலப் பகுதி. எனவே ஆண்டின் ஒரு பருவத்தில் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதும், பின்னொரு பருவத்தில் வறட்சி இப்படியாக ஏற்பட்ட பருவநிலை மாற்றங்களே, தமிழர்கள் நீர் மேலாண்மை முறையை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கியது.

     வானிலிருந்து பொழிந்து வழிந்தோடும் மழைநீரைத் தேக்கி வைத்து அதனையே பரந்துபட்ட வேளாண்மைக்கும், தாகம் தீர்க்கும் குடிநீருக்கும் பயன்படுத்தியே ஆதித்தமிழ்ச் சமூகம் உயிர் வளர்த்தது. எனவேதான் நம் முப்பாட்டன் வள்ளுவப் பெருந்தகையார், ”வான்பொழியும் நீரே உயிர்ப்பு” (குறள் -16) என்கிறார்.

     தமிழ் நிலத்தை ஆண்ட மன்னர்கள் வான்நீரைச் சேமித்து வைக்கும் பாங்கை,

               ”இடியுடைப் பெருமழை எய்த ஏகம்

               பிழையாவிளையுள் பெருவெள்ளம் சுரப்ப

               மழை பிணித்(து) ஆண்ட மன்னவன் (வரி.26-28)

என்று புகழ்ந்துரைக்கிறது புறநானூற்றுப் பாடலொன்று.

     தன்போக்கில் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றுநீரைத் தடுத்து நிறுத்தி, அதை தாம் விரும்பும் பகுதிக்கும் தேவைக்குமேற்ப பயன்படுத்த அணைகளை எழுப்பினார்கள் நம் முன்னோர்கள். குளங்களை வெட்டி குடிமக்களின் தாகத்தைத் தணித்தார்கள். இதனையே பட்டினப்பாலை எனும் நூல், ”குளம்தொட்டு வளம் பெருக்கி” என்று சான்று பகர்கிறது. இப்படியாக பிற்கால சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் மட்டும் 20 பெரும் நீர்க்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. பழந்தமிழர்கள் மேற்கொண்ட பாசனமுறைகளில் ஒப்பற்ற தொழில்நுட்பத்துடன் விளங்குவது ஏரி. இதன் காலத்தை கடைச்சங்க காலத்திற்கும் முந்தையது என்கிறார்கள் தொல்லியல் வல்லுநர்கள்.

     சங்கிலித் தொடர் போன்று ஓர் ஏரி நிரம்பியவுடன் தானாகவே அடுத்தடுத்த ஏரிகள் நிரம்பும் வகையில் ஏரிகள் கட்டமைக்கப்பட்டிருந்தன. இவ்வாறாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் குடிமக்களின் பேராதரவோடு தொழில்நுட்பம் செரிந்த ஏரிகளை வெட்டி, நீர் வளம் காத்து நீடித்த மானுடத்திற்கு வழி செய்தார்கள். இது போன்றே கண்மாய்களும் பழந்தமிழர்களின் வேளாண் பாசனத்திற்கு பெரும்பங்காற்றியுள்ளன. தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்புகளுக்கு மடியாமல் எஞ்சி நிற்கும் பல கண்மாய்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். பல கண்மாய்களின் அமைவிடத்திற்கு அருகாமையில் கண்டெடுக்கப்பட்ட ”முதுமக்கள் தாழி” அதன் காலத்தைச் சொல்லும் சான்றாவனம். சங்கப்பாடல்களும் ”மழைநீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்றார் போன்ற நீர்நிலைகளை உருவாக்க வேண்டியது ஆய்வோரின் கடமை என்று அறைந்து உரைக்கிறது.

     இந்த நீர்நிலைகளெல்லாம் வேளாண் பாசனத்திற்குப் பயன்பட்டதோடு மட்டுமல்லாமல், நிலத்தடி நீர்மட்டம் குறையாமலும் பார்த்துக் கொண்டது. இதனால் நீர் வளம் சீராக இருந்தது. சமீபத்தில் மதுரை கீழடியில் நடத்தப்பட்ட ஐந்தாம் கட்ட அகழாய்வில், 5 அடி உயரம் கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் 5 அடி ஆழத்திலேயே புமிக்குள் நிலத்தடி நீர் கிடைத்துள்ளதை தொல்லியல் அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள. மேலும் தமிழர்கள் தண்ணீரைச் சேமித்து வைத்துப் பயன்படுத்தியமைக்கான ஆதாரங்களும் கீழடி மண்ணுக்கடியில் கிடைத்துள்ளன.

     தமிழர்கள் தன்னிறைவான வேளாண் உற்பத்தியோடும், தனக்கென வேண்டா கொடையுள்ளத்தோடும் கூடிய வாழ்க்கை முறையைப் பின்பற்றினார்கள். இந்நிலையில் தமிழர்கள் அறம் சார்ந்த வாழ்க்கை நெறியை அறுத்தெறியப் புகுந்தது தண்ணீர் வாணிகம். அப்போதே தமிழர்களுக்குத் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படத் தொடங்கிவிட்டது. இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறைக்கு மாறாக அதீத நுகர்வெறியாலும், அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தாலும் நீர்நிலைகள், வணிக நிறுவனங்களாக உருப்பெற்று நிற்கிறது. ஆயிரமாண்டு பழமையான நீர்நிலைகள் அழிவின் விளிம்பில், வரலாற்றுத் தடயங்களாக காட்சிப் பொருளாக மட்டும் ஆகிவிடுமோ என்கிற அவலம் நிலவுகிறது.

     தண்ணீர் வணிகப் பொருளானதன் விளைவு கிராமப்புறங்களில் வாழ்கின்ற பெண்கள்கூட, ஒலிப்பெருக்கியில் கூவிக்கூவி விற்கப்படும் தண்ணீர் வாசனங்களை நோக்கி காலிக்குடங்களுடன்படையெடுத்து வருகின்றார்கள். மாநகராட்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மாதங்களில் சில நாட்கள் மட்டுமே வரும் தண்ணீருக்காக காலிக்குடங்களும் பெண்கள் மணிக்கணக்கில் கால் கடுக்கக் காத்துக் கிடக்கின்றார்கள். வீதிகளை அடைந்து நிற்கும் வண்ண வண்ண காலிக்குடங்கள் நம்மை ஆளும் ஆட்சியாளர்களின் கையாளாத்தனத்தைக் காட்டும் குறியீடுகளாகத் தருகின்றன.

            மழைக்காலங்களில் பெருமழை பெய்தால் தமிழ்நாட்டின் தலைநகர் தண்ணீரில் தத்தளிப்பதும், ஏனைய காலங்களில் மக்கள் குடிக்கத் தண்ணீர் கேட்டுக் கொந்தளிப்பதும், ஏதோ சாராரண நிகழ்வாகக் கருதிவிட முடியாது. இதற்குப் பின்னால் பன்னாட்டு – உள்நாட்டு தண்ணீர் நிறுவனங்களின் சாதனை செய்து விட்டதாய் காலாட்டிக் கொண்டிருக்கும் நம் ஆட்சியாளர்களின் கயமைத்தனமும் அடங்கியிருக்கிறது.

            நீண்ட பயணம் மேற்கொள்ளம் – முன்பின் தொரியாத வழிப்போக்கர்கள் கூட தாகத்தால் தவிப்பது தமக்குத் தாழ்நிலை என்று கருதிய தமிழர்கள் சாலையெங்கும் ”தண்ணீர் பந்தல்கள்” அமைத்து தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுத்து அறம் காத்தார்கள். இன்றைய நிலையென்ன? பயணத்தின் போது எடுத்துச் செல்லும் ஒரு பொருளாகத் தண்ணீர் பாட்டில்கள் மாறிவிட்டன. தண்ணீர் வணிகம் பொருளானதன் வெளிப்பாடு, காசு கொடுத்து வாங்கும் தண்ணீரைத் தாரை வார்க்க முடியுமா? எனவேதான் தண்ணீரை அருகிலிருப்பவர்கள் கண்ணில் படாமல் அருந்திவிட்டு பையினுள் பத்திரப்படுத்திவிடுகின்றனர். தண்ணீர் வணிகமையத்தின் சூழ்ச்சியே தமிழர் அறத்தைச் சிதைக்கிறது.

            20ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அன்னை நிலத்திலிருந்து தண்ணீரை ஒட்டச் சுரண்டி நம் நீர் உரிமையைப் பறிக்கத் தொடங்கி பன்னாட்டு தண்ணீர் நிறுவனங்கள் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் தண்ணீரையே தூய்மையான நீர் எனச் சொன்ன பன்னாட்டு நிறுவனங்களின் பொய்யான பரப்புரையில் வீழ்ந்து, நாம் வசிப்பிடங்களுக்கு அருகில் இருந்த குளங்களில், கிணறுகளில் அதுவரை எடுத்து வந்த தண்ணீரை இழிவெனக் கருதி புறந்தள்ளினோம். அதனால் கிணறு பன்னாட்டு பகாசுர தண்ணீர் நிறுவனங்களிடம் தளைப்பட்டுத் தவிக்கின்றோம். தனியார் தண்ணீர் நிறுவனங்கள் வினியோகிக்கும் ”மினரல்” தண்ணீரைக் குடிப்பதால் மனித உடலிலிருந்து கால்சியம், ஜிங்க் உள்ளிட்ட முக்கியத் தாதுக்களை நீக்கிவிடுவதால் உடலுக்கே ஆபத்து ஏற்படுகிறது என்று சில ஆண்டுக்கு முன்பே அறிவுறுத்தியது. அமெரிக்க நாளிதழான நியுயார்க் டைம்ஸ். நாம்தான் பாட்டில் தண்ணீரின் வேதித்தன்மையை உணராது, நாகரீகப் போர்வையில் குடித்துத் தொலைக்கிறோம்.

            நமது மரபுவழி நீர் சேமிப்பு முறையைக் கைவிட்டு அடிமையாது பாட்டில் தண்ணீருக்கு மட்டுமல்ல. பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தான். ”தண்ணீரை எங்களிடமிருந்துதான் வாங்கிப் பருக வேண்டும். மழைநீர் போன்ற இயற்கையான முறையில் கிடைக்கும் தண்ணீரைச் சேமித்து வைக்கக்கூடாது. அது கொடுங்குற்றம்” என பன்னாட்டு நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடிய காலம் நம்மை காவு வாங்கக் காத்துக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் பன்னாட்டு தண்ணீர் நிறுவனங்கள் இதுபோன்ற நெருக்கடிகளைக் கொடுத்ததை வரலாறுகளின் வழியே அறியமுடிகிறது.

            தண்ணீர் தனியார் மயத்திற்கு எதிராக கடுமையான போர்க்குரல் எழுந்த தென்னாப்பிரிக்காவுடன் கேப்டவுன் நகரம் எழுந்த தென்னாப்பிரிகாவுன் கேப்டவுன் நகரம் இன்று ”ஜீரோ வாட்டர் சிட்டியாக” ஆனதால், மனிதர்கள் நகரை விட்டு வெளியேறும் துயரநிலைக்கு ஆளாகியுள்ளார்கள். அங்கு தண்ணீருக்காகப் போராடியாக ”ஜீபில் சவுத் ஆப்பிரிக்கா” உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் உணர்வுகளை மதிக்காது தனியார் தண்ணீர் நிறுவனங்களுக்கும் தாராளம் காட்டியதே இந்த கொடுநிலைக்கக் காரணமென தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அறிஞர்கள் வாதிடுகிறார்கள்.

            முதல் உலகநாடுகளின் வணிய நலனுக்காக அதிக ஆழத்தில் போடப்படும் ஆழ்துளைக் கிணறுகளிலும், உள்நாட்டு தனியார் தண்ணீர் நிறுவனங்களின் கணக்கற்ற தண்ணீர் சுரண்டலாலும் திக்குமுக்காடி நிற்பது நகரங்கள் மட்டுமல்ல, கிராமங்களும் தான். சென்னை நகரைச் சுற்றி மட்டும் சுமார் 600க்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் நிறுவனங்கள் 24 7 என்கிற கால அளவில் தண்ணீரை உறிஞ்சி விற்பனை செய்து கொள்ளை இலாபம் குவிக்கின்றன. மத்திய ஜலசக்தி அமைச்சகம் வெளியிட்ட புள்ளி வபரங்களின்படி இந்தியாவிலேயே அதிகமான தனியார் தண்ணீர் நிறுவனங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளது. நிறுவனத்திடம் முறையாக அனுமதி பெற்று 3299 ஆலைகள் இயங்குகின்றன. அதிக அளவு தண்ணீர் எடுக்கப்பட்டதால் ஆபத்தான நிலையில் உள்ள 1186 நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கும் மையங்களில் 462 இடங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. இதனால் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்குச் சென்று விட்டது. சென்னை, மதுரை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மனிதர்கள் வாழத்தகுதியற்ற பகுதிகளாக மாறி வருகின்றன. நகரமயமாதலின் பொருட்டு அதிகளவில் அழிக்கப்பட்ட அல்லது பாதுகாக்கத் தவறிய இயற்கைச் சூழல்கள் தமிழர்களை பலிவாங்கிக் கொண்டிருக்கின்றன.

            இதே நிலை தொடர்ந்தால், ”ஒரு சொட்டு பெட்ரோலுக்குச் செலவிடும் பணத்தைவிட, ஒரு சொட்டுத் தண்ணீருக்கு அதிகமாகச் செலவிடும் நாள் தொலைவில் இல்லை” என்கிற ஐ.நா.மன்றத்தின் கூற்று விரைந்து தமிழ்நாட்டு மண்ணில் நடைமுறையாகக் கூடிய அபாயம் சூழ்ந்துள்ளது.

            உலகமயத்தின் சவலைக் குழந்தைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள், தனியார் தண்ணீர் நிறுவனங்களிடமிருந்து நம் மரபுவழி தண்ணீர் உரிமையை மீட்டெடுக்கவும், தனியார் மயத்தை ஆதரித்து ”தண்ணீரைப் பழித்த” முதுகெலும்பற்ற நம் ஆட்சியாளர்களுக்கு தக்க பாடத்தைப் புகட்டவும் புறநானூற்று வீரத்தோடு போராட வேண்டியது காலத்தின் கட்டாயம். அப்போதுதான் தமிழர்களின் எதிர்காலம் இருள்மயமாவதிலிருந்து தவிர்க்க முடியும்.

- தங்க.செங்கதிர்

Pin It