anaikkarai muthuதென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து (70) வனத்துறையினரால் 22.07.2020 அன்று இரவு சுமார் 11.00 மணியளவில் இழுத்துச் செல்லப்பட்டு, அன்று இரவு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளார். அவரது விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்ததாக குற்றம் சுமத்தி அவரை சாகும் வரையில் கடுமையாக தாக்கியதை காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

          வனத்துறையினரின் தாக்குதலுக்கு பலியாகி இறந்ததால் அணைக்கரை முத்துவின் உறவினர்கள் அவரது உடலை வாங்க கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கும் தொடுத்துள்ளனர். கடையம் வனச்சரகர் நெல்லை நாயகம், வனக் காவலர் முருகசாமி, வேட்டை தடுப்புக் காவலர்கள் சக்திமுருகன், பசுங்கிளி, மனோஜ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் விவசாயி அணைக்கரை முத்துவை 22.07.2020 அன்று இரவு 11.00 மணி முதல் சுமார் 1.00 மணி வரை, கடுமையாக அடித்துத் தாக்கியுள்ளனர்.

அணைக்கரை முத்துவின் மகன் நடராஜனிடம் அன்று இரவு 1.30 மணிக்கு வேறு மாற்று சட்டை கொண்டு வருமாறு கூறியுள்ளனர். இது சந்தேகத்தை எழுப்புகிறது. அதோடு கூட மருத்துவ உதவி பேராசிரியர் சீதாலெட்சுமி, மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவர் ஸ்ரீதர் ஆகிய இருவரும் 23.07.2020 அன்று இரவு அவசர அவசரமாக பிணக்கூறாய்வு செய்துள்ளனர். தடயவியல் தலைமை மருத்துவர் யாரும் இல்லாத நிலையில் இந்த பிணக்கூறாய்வு நடந்திருப்பது சந்தேகத்தை மேலும் வலுக்கிறது. அணைக்கரை முத்துவின் உடலைப் பார்த்த அவரது உறவினர்கள், அவரது உடலில் 18 காயங்கள் இருப்பதாக கூறுகின்றனர். இந்நிலையில் அணைக்கரை முத்துவின் குடும்பத்திற்கு ரூ. 10,00,000/- நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

          சாத்தான்குளத்தில் நடந்த காவல் படுகொலையின் அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே, தென்காசி மாவட்டத்தில் கடையம் அருகே வனத்துறையினரால் இது போன்று கொடுமையான சித்திரவதை சம்பவம் நடந்திருப்பது மேலும் அதிர்ச்சியை அளிக்கிறது. கடையம் வனச்சரகர் நெல்லை நாயகம், வனக் காவலர் முருகசாமி, வேட்டை தடுப்புக் காவலர்கள் சக்திமுருகன், பசுங்கிளி, மனோஜ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302 இன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யவேண்டும். அதோடுகூட கொலை செய்யப்பட்ட அணைக்கரை முத்து சாதியால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராதலால், மேற்படி 6 குற்றவாளிகள் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கேட்டுக் கொள்கிறது. இவர்களை வெறும் இடமாறுதல் செய்வது மட்டுமே தீர்வாகாது. கொலை குற்ற வழக்கு இவர்கள் மீது பதியப்பட்டு, முறையாக இவர்கள் விசாரிக்கப்படவேண்டும்.

          இது போன்ற காவல் மரணங்களில் அவசர அவசரமாக இரவு நேரங்களில் பிணக்கூறாய்வு செய்தது சட்டத்திற்குப் புறம்பான ஒன்று. பி.யூ.சி.எல் எதிர் மகாராஷ்டிரா மாநில அரசு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில், பிணக்கூறாய்வின் போது இறந்தவரின் உறவினரோ அல்லது அவரது பிரதிநிதி ஒருவரோ இருக்கவேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. எனவே அணைக்கரை முத்துவின் பிணக்கூராய்வு உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறிய ஒன்றாகும். தடயவியல் மருத்துவர்/பேராசிரியர் தலைமையிலான ஒரு மருத்துவர் குழு மீண்டும் பிணக்கூறாய்வு செய்யவேண்டும் என்று காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கேட்டுக் கொள்கிறது.

          காவல்துறை நண்பர்கள் போன்று, வனத்துறையினரின் எடுபிடிகளாக செயல்பட்டு வரும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மீது முழுமையான விசாரணை நடத்தி இது போன்று சட்டப் புறம்பாக செயல்படும் குழுக்களை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறோம். தொடர்ந்து நிகழும் காவல் சித்திரவதைகள், காவல் படுகொலைகளை தடுக்கும் நோக்கில் பொதுமக்களும் சிவில் சமூக குழுக்களும் விழிப்போடு இருந்து இதற்கு எதிராக தொடர்ச்சியாக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கேட்டுக் கொள்கிறது.

- காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்

Pin It