பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் வேறுவேறு அன்று, இரண்டும் அடிப்படையில் ஒன்றுதான். மனித நேயமற்ற கட்சிகள் இவை. பா.ஜ.க. அகண்ட பாரதம், மதவாதம் பேசும் ஆர்.எஸ்.எஸ்‡இன் அரசியல் வடிவம். ஒரு தடவை மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் காவித் தீவிரவாதம் என்று சொன்னைதைப் பொறுக்க முடியாமல் குதியாட்டம் போட்ட வர்கள் இவர்கள். அயோத்தி பிரச்சினையில் அத்வானியின் ரதயாத்திரை பாபர் மசூதி இடிப்பில் போய் முடிந்தது. இதில் குஜராத் பா.ஜ.க முதல்வர மோடியும் குற்றம் சாட்டப் பட்டார். இதே மோடிதான் கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்விலும் குற்றம் சாட்டப்பட்டார். இது போன்ற நிகழ்வுகளில் மனித உயிர்களின் இழப்பைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்ப டாதவர்கள் இவர்கள். இந்த நாட்டில் மிகவும் புனிதமான கட்சியாகவும், மிகவும் தூய்மை யான, நேர்மையான கட்சியாகவும் பா.ஜ.க. தன்னைக் காட்டிக் கொள்கிறது. ஊழல் தடுக்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் இது குறித்து முறையாக நாடாளு மன்றத்தில் தன் நடவடிக்கைகளை முன்னெ டுக்காமல், நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவது, அமளியில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளால், நாடாளுமன்ற நடைமுறைச் செலவுகள் கோடிக்கணக்கில் வீணாகிறதே. இதுவும் ஒரு மறைமுக ஊழல் அல்லவா?
அவ்வளவு ஏன், நேர்மையாளர், நேர்மையான ஆட்சியாளர் என்றெல்லாம் பார்ப்பன ஏடுகள் தூக்கிப் பிடிக்கும் குஜராத் பா.ஜ.க. முதல்வர் மோடி மீது ஊழல் புகார் எழவில்லையா? தென் மாநிலங் களில் இருக்கும் ஒரே பா.ஜ.க. அரசு கர்நாடக அரசு. அதன் முதல்வர், முன்னாள் ஆர்.எஸ்.எஸ்., இன்னாள் பா.ஜ.க.காரர் எடியூரப்பா.
இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச் சாட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாத பா.ஜ.க. எடியூரப்பா தூய்மையானவர் என்பது போல நடந்து கொண்டது என்றாலும், பா.ஜ.க.வின், குறிப்பாக எடியூரப்பாவின் முகமூடியைக் கிழித்து எறிந்தது கர்நாடக நீதிபதி சந்தோஷ் யஹக்டே தலைமையிலான லோக் ஆயுக்த விசாரணை அறிக்கை.
இவ்வாணைய விசாரணைக்குழு தலைவர் நீதிபதி சந்தோஷ் யஹக்டே பெங்களூருவில், ஜுலை 22ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசும்போது, கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் சட்ட விரோத சுரங்கத் தொழிலில் முதல்வர் எடியூரப்பா உள்பட பலருக்கும் பங்கிருப்பதற்கு ஏராளமான, உறுதியான ஆதாரங்கள் இருக்கின்றன.
சுரங்க ஊழலால் 2009 மார்ச் முதல் 2010 மே வரையிலான 14 மாதங்களில் மாநில் அரசுக்கு ரூபாய் 1,827 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. மாவட்டப் பொறுப்பு அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி ஒபுலாபுரம் சுரங்க நிறுவனத்தின் உரிமை யாளராக இருப்பதால், பெல்லாரி மாவட்டத்தில் மாஃபியா போன்ற நிலைமை காணப்படுகிறது.
அரசு அதிகாரிகளுக்கும் சட்ட விரோதச் சுரங்கத் தொழிலில் பங்கிருக்கிறது. இதற்கு முதல்வர் எடியூரப்பாதான் பொறுப்பாளர் என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து அவர் பேசும் போது, பா.ஜ.க அமைச்சரின் சுரங்க நிறுவனம் நினைத்தால் மற்ற சுரங்கங்களைச் சிதைக்க முடியும் என்றும், சட்டவிரோத இச்சுரங்கத் தொழிலில் ஈட்டிய பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி உள்ளது தெரிய வந்துள்ளதாகவும், இவை குறித்து அமுலாக்கத் துறை இயக்குநரகம் விசாரிக்க வேண்டும் என்றும் சரமாரியாக பா.ஜ.க அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை உறுதிபடத் தெரிவித்திருக்கிறார் நீதிபதி யஹக்டே.
இதன் விளைவாகப் பா.ஜ.க. தலைமை டில்லியில் கூடி, ஊழல் பேர்வழி எடியூரப்பாவன் தாடையைத் தடவிப் பதிவி விலகக் கேட்டி ருக்கிறது. பா.ஜ.க. கெஞ்சலுக்கு செவிமடுக்காத எடியூரப்பா பதவி விலக மறுத்தார். பின்னர் தன் தீவிர ஆதரவாளரான சதானந்த கவுடாவை முதலவராக்கிவிட்டுப் பதவி விலகினார்.
பத்திரிகைச் செய்திப்படி, முதல்வராக சதானந்த கவுடா தேர்வு செய்யப்பட்டதும் எடியூரப்பா அணியின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியதாம். வாக்கெடுப்பு முடிந்து வெளியே வந்த எடியூரப்பா இரண்டு விரல்களைக் காட்டி வெற்றி என்று தெரிவித்தாராம். எடியூரப்பா ஊழல் பேர்வழி என்பதால் அவரைப் பதவி விலகச் சொன்ன பா.ஜ.க., அந்த ஊழல் பேர்வழியின் கைத்தடி சதானந்த கவுடாவை அல்லவா மீண்டும் முதலமைச்சர் ஆக்கியிருக்கிறது. இதுதான் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையா? சதானந்த கவுடாவை முதல்வர் ஆக்குவதை விட எடியூரப்பாவே முதல்வராக நீடித்துவிட்டுப் போகலாமே.
ஊழல் செய்த குரு எடியூரப்பாவை பதவி விலக வைத்து, சிஷ்யன் சதானந்த கவுடாவை அவர் இடத்தில் வைத்துவிட்டு, ஏதோ ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவிட்டது போல பா.ஜ.க. தன்னைக் காட்டிக் கொள்கிறது.
அதே சமயம் கர்நாடக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி, சட்ட விரோதத் தொழில் தொடர்பான லோக் ஆயுக்த விசாரணைப் பரிந்துரைகளை ஆளுநர் பரத்வாஜ் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், அத்தியாயம் 22இல் குறிப்பிட்டுள்ள பரிந்துரையின்படி எடியூரப்பா மீது குற்றவியல் வழக்கு தொடர ஆளுநர்அனுமதி அளித்துள்ளதாகவும் கூறுகிறது. பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் கிரிமினல் குற்றங்கள், ஊழல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதற்கு பா.ஜ.க.வின் எடியூரப்பா ஒரு சான்று. ஊழலுக்கு எதிராக என்று கிளம்பியிருக்கும் முன்னாள் ஆர்.எஸ்.எஸ் அன்னா அசாரேவைத் தூக்கி தலைமேல் வைத்து ஆடும் பாரதிய ஜனதா கட்சி, ஊழல் பேர்வழி எடியூரப்பா சிஷ்யன் சதானந்த கவுடாவை முதல்வர் ஆக்கி இரட்டை வேடம் போடுகின்ற நாடகம் அம்பலமாகி விட்டது ‡ முகமூடி கிழிந்து விட்டது.
ஊழல் பற்றியும், நேர்மை பற்றியும், தூய்மை பற்றியும் பேசுகின்ற அருகதை, இனி காங்கிரசுக்கு மட்டுமல்ல, பாரதிய ஜனதா கட்சிக்கும் இல்லை.