“வாருங்கள், வந்து அமருங்கள். எதையுமே கலந்துரையாடி, ஒரு முடிவு எடுத்து விடலாம்” என்று இயங்கியல் அடிப்படையில் செயலாற்றுவதில் புரட்சியாளர் லெனின் மிகவும் உறுதியுள்ளவர்.
ரஷ்ய சமூக – ஜனநாயகத் தொழிலாளர் கட்சி (Russian Social Democratic Labour Party) யின் இரண்டாவது காங்கிரஸ் 1903, ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற்றது.
ர.ச.ஜ.தொ.கட்சியின் வேலைத் திட்டத்தையும் விதிகளையும் அங்கீகரித்தல், கட்சியின் மத்திய உறுப்புகளுக்கான தேர்தல் ஆகியவை காங்கிரசின் நிகழ்ச்சி நிரலில் இருந்த முதன்மையான வகையினங்கள்.
இந்த இரண்டாவது காங்கிரசில் லெனினும் அவரது ஆதரவாளர்களும் ஒரு புறம்; பிளகனவ், மார்த்தவ், டிராட்ஸ்கி, உள்ளிட்டோர் எதிர்புறம். காங்கிரசின் போது, லெனின் ஆதரவாளர்கள் பெரும்பான்மையோர். (ரஷ்ய மொழியில் போல்ஷ்விக் என்றால் பெரும்பான்மை) ஆனார்கள்; பிளகனவ், மார்த்தவ் சிறுபான்மையினர் (மென்ஷ்விக் என்றால் சிறுபான்மை) ஆக ஆனார்கள்.
கட்சியின் உறுப்பினருக்கான தகுதி என்னவாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிற வேளையில் லெனினுக்கும் அவரை எதிர்த்தவருக்கும் – அதாவது, போல்ஷ்விக்குகளுக்கும் மென்ஷ்விக்குகளுக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. அந்தப் பிளவை லெனின் இயங்கியல் முறையில் அணுகுகிறார்.
அதையொட்டி, 1904 ஜனவரியில் வெளியிடப்பட்ட ர.ச.ஜ.தொ. கட்சியின் இரண்டாவது காங்கிரசின் கூட்ட நடவடிக்கைக் குறிப்பேடுகள், தீர்மானங்கள், பிரதிநிதிகளின் உரைகள் ஆகியவற்றுடன், காங்கிரசில் உருவெடுத்த குழுப்பிரிவுகள், மத்தியக் குழு, கட்சிக் கவுன்சில் ஆகியவற்றின் ஆவணங்கள் என அனைத்தையும் கவனமாக ஆய்வு செய்தார். இவற்றைப் பல மாதங்கள் ஆய்வு செய்த லெனின் “ஓரடி முன்னால் ஈரடி பின்னால்” ( நமது கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி) என்னும் நூலை எழுதினார். இந்த நூலின் முதல் பதிப்பு 1904,இல் ஜெனீவா நகரில் வெளியிடப்பட்டது. பின்னர் 1941இல் இலண்டன் நகரில் உள்ள லாரன்ஸ் அண்ட் விஷார்ட் நிறுவனம் வெளியிட்டது. 1964, 1965 ஆண்டுகளில் மாஸ்கோவில் உள்ள முன்னேற்றப் பதிப்பகத்தால் நிறுவனத்தில் வெளியிடப்பட்டது. 1976ஆம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரில் ஃபாரின் லாங்வேஜ் பிரஸ் என்னும் பதிப்பகம் வெளியிட்டது. காங்கிரஸ் மூலம் கட்சி ‘ஓரடி முன்னால் (முன்னேற்றம்) சென்றது என்றும்; அடுத்து மென்ஷ்விக்குகளின் “ஒழுங்கமைப்பில் தாராளவாத” மற்றும் “வாய்ப்பியல்வாத” போக்கின் காரணமாக “ஈரடி பின்னால்” (பின்னடைவு) சென்றது என்றும் லெனின் வாதிடுகிறார். லெனின் இந்த நூலின் முகவுரையில் கட்சியை எதிர்நோக்கியுள்ள மிக அவசரமான அரசியல் சிக்கல்கள் இவையே என்று தொடங்கி பின்வருமாறு எழுதுகிறார்.
“முதலாவது சிக்கல்” இரண்டாவது கட்சிக் காங்கிரசில் உருவெடுத்த “பெரும்பான்மை”, “சிறுபான்மை” என்று நமது கட்சியில் ஏற்பட்ட பிளவின் அரசியல் முக்கியத்துவத்தைப் பற்றியதாகும். ரசிய சமூக – ஜனநாயகவாதிகளுக்கிடையிலான முந்தைய பிளவுகள் அனைத்தையும் இது மிகவும் பின்னுக்குத் தள்ளியது.”
இரண்டாவது சிக்கல், கட்சி ஒழுங்கமைப்புச் சிக்கல்களில், புதிய இஸ்க்ராவின் நிலை உண்மையிலேயே கொள்கை அடிப்படையிலானதா என்ற அளவில் கொள்கைரீதியில் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியது…
முதலாவது சிக்கலுக்கு விடை, கட்சிக் காங்கிரசில் நடைபெற்ற போராட்டத்தைப் பகுத்தாய்வதன் மூலம் பெறப்படுகிறது; இரண்டாவது சிக்கலுக்கு விடை, புதிய இஸ்ராவின் கொள்கைகளில் புதியன எவையோ அவற்றைப் பகுத்தாய்வதன் மூலம் பெறப்படுகிறது. இதற்கு லெனின், காங்கிரசுக்குப் பின்னர் புதிய இஸ்க்ரா பிரிவினர் நடத்திய போராட்ட வழிமுறைகளை ஆராய்கிறார். "இவ்விரண்டு ஆய்வுகளும் இந்த வெளியீட்டில் பத்தில் ஒன்பது பங்கு இடம் பெறுகின்றன. நமது கட்சியில் 'பெரும்பான்மை' தான் புரட்சிகரமானது, 'சிறுபான்மை' சந்தர்ப்பவாதப் பிரிவு என்ற முடிவுக்கு இவை இட்டுச் செல்கின்றன.” லெனின் இந்தச் சிக்கல்களைத் தீர்மானமாக எடுத்து வைக்கிறார். இவற்றில் முதலாவது கேள்வியை சுருக்கமாகப் பார்க்கலாம்.
“காங்கிரசில் மார்த்தவினால் வரையறுக்கப்பட்டு, காங்கிரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பத்தி 1: ரசிய சமூக – ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் உறுப்பினர் அதன் வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொண்டவரும், கட்சிக்கு நிதி கொடுத்து ஆதரிப்பவரும், கட்சி ஒன்றின் நெறியாண்மையின் கீழ் தம்முடைய முறையான நேரடிச் சேவையினை வழங்குபவரும் ஆவார்.” (பக்:56)
லெனில் சொல்வது : “வேலைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டு, கட்சிக்கு நிதி உதவி அளிப்பவன் கட்சி அமைப்புகள் ஒன்றில் நேரடியாகப் பங்கேற்பார். அதாவது அவ்வப்போது, வந்து உடலை வாடகைக்குக் கொடுக்க மாட்டார்; கட்சியில் இணைந்து பாட்டாளி வர்க்க உணர்வோடு எப்போதும் பணியாற்றுவார்கள்.”
லெனின் குறிப்பிடும் இந்த “நேரடிப் பணியை” காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது. மேலும், “ஒவ்வொரு வேலைநிறுத்தக்காரரும், ஒவ்வோர் ஆர்ப்பாட்டக்காரரும் தமது நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு, தம்மைத் தாமே ஒரு கட்சி உறுப்பினர் என்று அறிவிக்க முடியுமானால், நாம் நிச்சயமாக மகிழ்ச்சியடைய முடியும்” என்னும் மார்த்தவின் விருப்பத்தைச் சுட்டிக்காட்டி, சமூக – ஜனநாயக இயக்கத்தை வெறும் வேலைநிறுத்தம் செய்யும் மட்டத்திற்கு இறக்கி விடுகிறார் (ப.80)” என்று லெனின் மார்த்தவின் விதியைக் கடுமையாக விமர்சனம் செய்கிறார்.
‘விதிகளின் பத்தி ஒன்று’ என்னும் தலைப்பிலான 9ஆம் இயலில் சிறிய வேறுபாடு என்பதும் கூட கவனிக்கப்பட வேண்டும்; தவறினால் அது பெரிய விபரீதத்தில்தான் முடியும் என்கிறார் லெனின்.
“ஒவ்வொரு சிறிய வேறுபாடும், அது வலியுறுத்தப்பட்டால், அது எப்போதும் முன்னணியில் நிறுத்தப் பெற்றால், அந்த வேறுபாட்டின் வேர்களையும் கிளைகளையும் மக்கள் தேடத் தொடங்குவார்களானால், பெரியதாக மாறிவிடும். திட்டமான தவறான கண்ணோட்டங்களை நோக்கி ஊசலாடுவதற்குத் தொடக்க நிலையாகப் பயன்படுமானால், இந்தத் தவறான கருத்துகள் மேற்கொண்டு எழும் புதிய பேதங்கள் காரணமாக, கட்சியை ஒரு பிளவிற்குக் கொண்டுவந்து நிறுத்தும்; அதிகார மறுப்புவாத நடவடிக்கைகளோடு இணைக்கப்படுமானால், ஒவ்வொரு சிறிய வேறுபாடும் மாபெரும் முதன்மை பெற முடியும் (பக்.72.73)” என்று கூர்ந்தாய்ந்து எச்சரிக்கிறார்.
ஒரு தொழிலாளர் கட்சியின் ஒற்றுமை எந்த அடிப்படைகளைக் கொண்டிருக்க வேண்டும். எந்தச் சிக்கல்களில் விட்டுக்கொடுக்கவே கூடாது என்று எடுத்துரைக்கிறார் லெனின்.
இன்றைய சூழலிலும் எந்த ஒரு கட்சியோ இயக்கமோ நிலைத்து நின்று செயல்பட வேண்டுமானாலும், அந்தக் கட்சி அல்லது இயக்கம் லெனின் வகுத்துக் கொடுத்துள்ள இந்த இயங்கியல் கோட்பாட்டை லெனின் தேர்வு நூல்களில் ஒன்றான “ஓரடி முன்னால், ஈரடி பின்னால்” என்னும் நூலிலிருந்து கற்று, கறாராகப் பின்பற்றுவது அவசியம்!
(லெனின் தேர்வு நூல்கள் 12 தொகுதிகளில் - தொகுதி 2
கட்சி – அமைப்புக் கோட்பாடு
விலை ரூ.340, வெளியீடு: என்.சி.பி.எச்., சென்னை)
- இந்திரா