ரஷ்யாவில்1883ம் ஆண்டில், முதல் மார்க்சிய குழு தோற்றுவிக்கப்பட்டது. 1895ல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 20 மார்க்சிய குழுக்கள் செயல்பட்டன. அரசியல் ரீதியாக வளர்ச்சியடைந்திருந்த தொழிலாளர்களுக்கு லெனின் இங்கு மார்க்சியத்தை போதித்தார். 1895ல் 20 மார்க்சிய குழுக்களையும் ஒன்றுபடுத்தி "தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்ட சங்கம்"என்பதனைத் தோற்றுவித்தார் லெனின்.    

இச்சங்கம் லெனின் காட்டிய வழியில் பொருளாதார கோரிக்கைகளுக்காக தொழிலாளர்கள் நடத்துகிற போராட்டத்தை, ஜார் ஆட்சியை எதிர்த்து நடைபெறும் அரசியல் போராட்டமாக வளர்த்தது.  

ஒவ்வொரு நிகழ்ச்சியையும், சம்பவத்தையும், விஷயத்தையும் விளக்கிக் கூறி தொழிலாளர்களுக்கு அரசியல் பாடங்களைப் போதித்தது. தொழிலாளி வர்க்க இயக்கத்துடன் சோசலிசத்தை ஒருங்கிணைத்த முதல் அமைப்பு இந்தச் சங்கமே. புரட்சிகரமான தொழிலாளர் கட்சியை ஸ்தாபிப்பதற்குரிய அடிப்படைப் பணிகளைச் செய்தது "தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்ட சங்கம். தொழிலாளி வர்க்கத்தால் பூரணமாக ஆதரிக்கப்பட்டு இயங்கும் ஒரு புரட்சிகரமான கட்சிக்கு உண்மையான முதல் மூலாதாரமாக மார்க்சிய குழுக்களும், தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கானப் போராட்ட சங்கமும் விளங்கின என்றார் லெனின்.   

தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்ட சங்கத்தின் முதல் கூட்டத்தில் லெனினும் இதர தோழர்களும்.   

லெனினிசத்தைப் பற்றி ஸ்டாலின் நிகழ்த்திய சொற்பொழிவுகளும், எழுத்தோவியங்களுமே லெனினிசத்தின் அடிப்படை அம்சங்கள் என்ற நூலாகும். லெனினிசத்தை பாதுகாப்பதில் தோழர் ஸ்டாலின் எழுதிய லெனினிசத்தின் அடிப்படை அம்சங்கள் என்ற நூல் பெரும் பணியாற்றியது. அபாரமான திறமையுடன் லெனினிசத்தை விளக்கியும், தத்துவரீதியில் பலமாக உறுதிப்படுத்துவதாக இந்நூல் விளங்குகிறது.     

lenin russiaலெனினிசம் என்றால் என்ன?

சிலர் சொல்கிறார்கள்; ரஷ்யாவில் நிலவிய அலாதியான விசேஷ நிலைமைகளையொட்டி நடைமுறைப்படுத்தப்பட்ட மார்க்ஸிசமே லெனினிசம் என்று. இந்த நிர்ணயிப்பில் அணுவளவு உண்மையிருக்கிறது என்பது உண்மை. ஆனால் இது முழு உண்மையையும் சொல்லிவிடவில்லை ரஷ்ய நிலைமைகளுக்குத் தகுந்தவாறு மார்க்ஸிசத்தை லெனின் பயன்படுத்தினார் என்பது உண்மையே, அதுவும் மிக மிக சிறப்பாகப் பயன்படுத்தினார்.   

ஆனால் ரஷ்ய நிலைமைகளில் கடைபிடிக்கப்பட்ட மார்க்ஸிஸமாக மட்டும் லெனினிசம் இருந்திருந்தால், அது வெறும் தேசிய அம்சம் பொருந்தியதாக மடடுமல்லவோ இருக்க வேண்டும்? அது ரஷ்ய தத்துவமாக மட்டுமல்லவோ இருக்க வேண்டும்? ஆனால் அது அப்படி இல்லை என்பது நமக்குத் தெரியும். அது வெறும் ரஷ்யத் தத்துவம் மட்டுமல்ல; அது சர்வதேசங்களிலும் நிலவக்கூடிய நிலைமைகளுக்கு பொருந்துவதாக இருக்கிறது.   

ஏகாதிபத்தியமும், தொழிலாளி வர்க்கப் புரட்சியும் நிலவும் காலகட்டத்தின் மார்க்ஸிஸமே, லெனினிசம். இதைவிட இன்னும் திட்டமாகச் சொல்வதென்றால், பொதுவாக தொழிலாளி வர்க்கப் புரட்சியின் தத்தவமும், போர்த்தந்திரங்களும் லெனினிசம், குறிப்பாக, தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தின் தத்துவமும், போர்த்தந்திரங்களும் லெனினிசம்.   

புரட்சி நடப்பதற்கு அடிப்படையாயுள்ள விதி

ரஷ்யாவில் ஒரு பிரம்மாண்டமான வெகுஜனப் புரட்சி சீறியெழுந்து கொண்டிருந்தது. உலகிலேயே மிகவும் புரட்சிகரமான தொழிலாளி வர்க்கம் அதற்குத் தலைமை வகித்தது. ரஷ்யாவின் புரட்சிகரமான விவசாயி மக்கள் என்கிற மிக மிக முக்கியமான ஒரு கூட்டாளியை அந்த தொழிலாளி வர்க்கம் பெற்றிருந்தது.     

அப்படிப்பட்ட கூட்டாளியைப் பெற்ற ஒரு மிகவும் புரட்சிகரமான வர்க்கத்தின் தலைமையில் குமிறி எழும் புரட்சி, பாதி வழியில் நின்று விடாது. காரியத்தை அரைகுறையாகச் சாதிப்பதோடு நிற்காது என்பதையும், அது வெற்றியடையும் பட்சத்தில் மேன்மேலும் முன்னேறித்தீரும் என்பதையும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் கலகக் கொடியை உயர்த்தும் என்பதையும் சொல்லவும் வேண்டுமோ.   

"இடதுசாரி கம்யூனிசம், ஒரு குழந்தைப் பருவக் கோளாறு" என்ற புத்தகத்தில் அவற்றைப் பற்றி லெனின் கூறுவதாவது; எல்லா புரட்சிகளும் இதுவரை ஒரு விஷயத்தை ஊர்ஜிதம் செய்திருகின்றன. குறிப்பாக ரஷ்யாவில் நடைபெற்ற மூன்று புரட்சிகளும் இதை ஊர்ஜிதப்படுத்தியிருக்கின்றன. இது தான் புரட்சி நடப்பதற்கு அடிப்படையாயுள்ள விதி. அதைக் கீழே காணவும்.   

ஒடுக்கவும் சுரண்டவும் படுகிற மக்கள், பழைய வழியில் இனி வாழ்வதென்பது முடியாது என்று உணர்ந்து, மாறுதல்களை விரும்பினால் மட்டும் புரட்சிக்குப் போதாது; சுரண்டுகிறவர்கள் பழைய வழியிலேயே வாழ்வதற்கோ, பழைய வழியிலேயே ஆள்வதற்கோ முடியாமற்ப் போக வேண்டியதும் புரட்சிக்கு மிகமிக அவசியமாகும்.   

கீழ்த்தர வர்க்கங்கள் பழைய வழியை விரும்பாத போதுதான் மேல் தர வர்க்கங்கள், பழைய வழியில் தம் காரியங்களை நடத்திச் செல்ல முடியாது போகிற போதுதான் அப்படிப்பட்ட நிலைமையில் தான் புரட்சி வெற்றி அடைவது சாத்தியம். இந்த உண்மையை வேறு விதமாகவும் கூறலாம்;

"சுரண்டுகிறவர்கள், சுரண்டப்படுகிறவர்கள்" ஆகிய இரு சாராரையும் பாதிக்கக்கூடிய, அதாவது தேசமெங்கும் வியாபித்ததான ஒரு நெருக்கடி இல்லாவிட்டால், புரட்சி வெற்றியடைய முடியாது. இந்தக் கருத்தை லெனின் ரத்தினச் சுருக்கமாகக் கீழ்க்கண்டவாறு கூறினார்;

ஒரு நாட்டில் வெற்றியடைகிற புரட்சி, மற்ற எல்லா நாடுகளிலும் புரட்சி வளரவும்,ஆதரவு பெருகவும், விழிப்பு ஏற்படவும் முடிந்த அளவுக்கு தன் நாட்டில் அது சாத்தியமானவற்றையெல்லாம் செய்ய வேண்டும். இவைதான், பொதுவாக, லெனினுடைய தொழிலாளி வர்க்கப் புரட்சியைப் பற்றிய தத்துவத்தின் விசேஷமான அம்சங்கள்.   

எந்த இடத்தில் புரட்சி ஆரம்பமாகும்?

இதற்கு முன்பு, எந்த இடத்தில் புரட்சி ஆரம்பமாகும்? எந்த இடத்தில், எந்த தேசத்தில், மூலதனத்தின் முனை ஊடுறுவி துளைக்கப்படும்? என்ற கேள்விக்கு எப்படி பதில் கூறப்பட்டு வந்தது? எங்கு இயந்திரத் தொழில்கள் அதிகமான வளர்ச்சியடைந்துள்ளனவோ, எங்கு மக்கள் தொகையில் மெஜாரிட்டியாக தொழிலாளி வர்க்கம் இருக்கிறதோ, எங்கு அதிகமாக நாகரீகப் பண்பாடு முதிர்ந்திருக்கிறதோ, எங்கு அதிகமாக ஜனநாயகம் இருக்கிறதோ அங்கு தான் புரட்சி ஆரம்பமாகும் என்று முன்பு அந்த கேள்விக்கு விடை தரப்பட்டது.   

இந்தப் பதிலை இப்போது புரட்சியைப் பற்றிய லெனினிஸ்ட் தத்துவம் ஆட்சேபிக்கிறது. இயந்திரத் தொழில் வளர்ச்சியடைந்துள்ள நாட்டில் தான், புரட்சி ஆரம்பமாகித் தீரவேண்டும் என்று சொல்லுவதற்கு இல்லை. அது வேறு நாட்டிலும் ஆரம்பிக்கக் கூடும். எங்கு ஏகாதிபத்திய சங்கிலி இத்துப்போய் மிகவும் பலகீனமாக இருக்கிறதோ அங்கு அந்தக் கரணை துண்டிக்கப்பட்டு, மூலதனத்தின் முனை ஊடுறுவப்படும்.     

ஏனெனில், உலக ஏகாதிபத்திய முனை எனும் சங்கிலியில், மிக மிக பலகீனமாக இருக்கும் இணைப்புக் கரணையைத் துண்டிப்பதின் விளைவு தான் தொழிலாளி வர்க்கப் புரட்சி, அப்படித் துண்டிக்கிற அந்த நாடு புரட்சியை ஆரம்பிக்கிற அந்த நாடு முதலாளித்துவம் என்ற பொதுவான அமைப்புக்குள் அடங்கிய நாடாக இருந்தபோதிம், மற்ற முதலாளித்துவ நாடுகளைவிட இயந்திரத் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய நாடாகவும் இருக்கக்கூடும் அதாவது, மற்ற முதலாளித்துவ நாடுகளைவிட வளர்ச்சியில் பின்தங்கிய ஒரு நாட்டிலேயே, தொழிலாளி வர்க்கப்புரட்சி ஏற்படக்கூடும்.   

1917-ம் வருடத்தில், உலக ஏகாதிபத்திய முனை எனும் சங்கிலி, மற்ற முதலாளித்துவ நாடுகளில் பவகீனப்பட்டதை விட பன்மடங்கு அதிகமாக ரஷ்ய நாட்டில் பலகீனப்பட்டிருந்தது, அந்த நாட்டில்தான் அதன் இணைப்புக் கரணை படாரென்று துண்டித்தது. தொழிலாளி வர்க்கப் புரட்சி வெள்ளம் பாய்வதற்கு மடை திறந்துவிட்டது.   

சமீப வருங்காலத்தில் அந்த சங்கிலி வேறு எங்கு அறுபடும்? எங்கு அது மீண்டும் மிகமிக பலகீனமானதாக இத்துப் போகிறதோ, அங்குதான். உதாரணமாக “இந்தியாவில் அது அறுபடும்” என்று சொன்னால், யாரும் ஆட்சேபிக்க முடியாது ஏன்? ஏனெனில், இந்திய நாட்டில் தற்போது ஒரு புரட்சிகரமான தொழிலாளி வர்க்கம் உண்டு. அது வாலிபப் பருவத்தில் உள்ளது. போர்க் குணமுடையதாகவும் இருக்கிறது.     

அதோடு மட்டுல்லாமல், தேச விடுதலை இயக்கம் போன்ற ஒரு வலுமிகுந்த கூட்டாளியையும் அது பெற்றிருக்கிறது. தேச விடுதலை இயக்கம் என்பது மி்க மிக முக்கியமானதும், மிகமிக சக்தி வாய்ந்ததுமாகும். மேலும் அங்கு புரட்சியை எதிர்ப்பது அந்நிய ஏகாதிபத்தியமாகும். இது விசேஷமாகும்.   

அநேக நாடுகளில் ஒரேசமயத்தில் புரட்சி நடப்பது என்பது, அபூர்வமாக நடக்கக் கூடியது. ஒரு நாட்டில் மட்டும் நடப்பதுதான் சாதாரணமாக நிகழக் கூடியது. ஆகவே ஒரு நாட்டில் மட்டும் சுரண்டல்காரர்கள் முறியடிக்கப்பட்டால், அவர்கள் முறியடிக்கப்பட்ட பிறகும் கூட சுரண்டப் படுபவர்களைவிட அதிக பலமுடையவர்களாகவே இருக்கிறார்கள்.   

தொழிலாளிகளுக்கு மார்க்ஸ் கூறியதாவது

உள்நாட்டு யுத்தங்களும் சர்வதேச சச்சரவுகளும் உண்டாகும். அவை பதினைந்து, இருபது, ஐம்பது வருடங்கள் என்று அநேக வருடங்களுக்கு நீடிக்கும். அவற்றில் நீங்கள் ஈடுபட்டு அனுபவிக்க வேண்டியிருக்கும் யதார்த்த நிலைமைகளை மாற்றுவதற்கு மட்டுமல்ல; உங்களையே நீங்கள் மாற்றிக் கொள்வதற்கும்கூட; அரசியல் அதிகாரத்தை ஏந்தி அரசாள்வதற்கு உங்களை நீங்கள் லாயக்குள்ளவர்களாக ஆக்கிக் கொள்வதற்கும்கூட, அவ்விதம் நீங்கள் போராட வேண்டியிருக்கும்.   

“தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம்” என்பது, உழைப்பாளி மக்களுடைய - சுரண்டப்படும் மக்களுடைய - பூரண ஆதரவையும், உதவியையும் கொண்டு, பூர்ஷுவா வர்க்கத்தின் மேல் சட்டத்தினால் எந்த விதத்திலும் தடைபடுத்தப்படாமல், பலாத்காரத்தை ஆதாரமாகக் கொண்டு, தொழிலாளி வர்க்கம் ஆட்சிபுரிவதாகும்.   

தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் "பூரண" ஜனநாயகமாக இருக்க முடியாது. அதாவது ஏழை என்றும் பணக்காரனென்றும் வேற்றுமை பாராட்டாத எல்லோருக்கும் பொதுவான ஜனநாயகமாக இருக்கமுடியாது.   

“தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம்”என்பது ஒரு புதிய விதத்தில் அதாவது, தொழிலாளிகளையும், பொதுவாக சொத்தில்லாத எல்லா மக்களையும் அனைக்கிற ஜனநாயக அம்சம் கொண்ட அரசாக இருக்க வேண்டும். அது ஒரு புதிய விதத்தில் அதாவது பூர்ஷுவா வர்க்கத்துக்கு எதிராக சர்வாதிகார அம்சம் கொண்ட அரசாக இருக்க வேண்டும். பூர்ஷுவா வர்க்க அரசு இயந்திரத்தை பலாத்காரமாக உடைத்துத் தவிடு பொடியாக்கி, ஒரு புதிய அரசை உண்டாக்காவிட்டால், தொழிலாளி வர்க்கப் புரட்சி சாத்தியமேயில்லை.   

ஒடுக்கப்படும் வர்க்கங்களுடைய புரட்சிகள் எல்லாம், இயக்கங்கள் எல்லாம் உலக சோஷலிஸ்ட் இயக்கத்தின் அனுபவம் பூராவுமக நமக்கு கற்றுக் கொடுக்கும் ஒரு படிப்பினை என்னவென்றால் சுரண்டப்படுகிறவர்களும், உழைப்பாளிகளுமான மக்களில் மிகவும் பிற்போக்கான நிலையில் உள்ளவர்களையும், சிதறிச் சின்னா பின்னப்பட்டுக் கிடப்பவர்களையும் ஒன்றுபடுத்தி, வழிகாட்டி, முன்னோக்கி நடத்திச் செல்ல தலைமை வகிக்கும் ஆற்றல், தொழிலாளி வர்க்கம் ஒன்றிற்கு மட்டுமே உண்டு.   

தேசிய இனப் பிரச்சனை

ஒரு நாட்டின் குறிப்பான , உள்நாட்டு அரசின் பிரச்சனையாக இருந்து வந்த தேசிய இனப் பிரச்சனையை, ஒரு பொதுப் பிரச்சனையாக, சர்வதேசப் பிரச்சனையாக ஏகாதிபத்தியத்தின் நுகத்தடிலிருந்து காலனி நாடுகளிலும் ஒடுக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்கும் உலகப் பிரச்சனையாக மாற்றிற்று லெனினிசம்.   

சுய நிர்ணய உரிமை என்றால் அடிமை நாடுகளும் சார்பு நாடுகளும் பரிபூரணமாக எஜமானர் நாடுகளை விட்டுப் பிரிந்து போவதற்கு உரிமை என்றும், சுயேச்சையான அரசுகளை அமைத்துக் கொண்டு சுதந்திரமாக வாழ உரிமை என்றும் பொருள்படும் என வியாக்கியானம் செய்தது லெனினிஸம்.   

ஒடுக்கப்பட்ட மக்கள் தம் விடுதலைக்காகப் போராடுகிறபோது, எஜமானர் நாடுகளிலுள்ள தொழிலாளி வர்க்கக் கட்சிகள் அந்தப் போராட்டத்தை நேரடியாக ஆதரித்துத் துணை நிற்காவிட்டால் அக்கட்சிகள் "தேசிய இனங்களின் சமத்துவம்" பற்றி வெளியிடும் அறிக்கைகள் யாவும் அர்த்தமற்றும், பொய்யாகவும் இருக்கும் என்று லெனினிசம் பிரகடனம் செய்தது.   

ஏகாதிபத்திய யுத்தமும், ரஷ்யப் புரட்சியும் அதை ஊர்ஜிதம் செய்தன. தேசிய இனப் பிரச்சனை, தொழிலாளி வர்க்கப் புரட்சி என்கிற பொதுப் பிரச்சனையின் ஒரு பகுதி; தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் என்கிற பொதுப் பிரச்சனையின் ஒரு பகுதியாகும்.   

ஏகாதிபத்தியத்தை எந்தெந்த தேசிய விடுதலை இயக்கம் பலகீனப் படுத்துகின்ற வழியில், அதை வீழ்த்தக் கூடிய வழியில் செல்கின்றதோ அந்தந்த தேசிய விடுதலை இயக்கத்திற்கே ஆதரவு கொடுக்கவேண்டும். ஏதெது ஏகாதிபத்தியத்தைப் பாதுகாக்கும் வழியிலும் நடக்கின்றனவோ, அவற்றிற்கு ஆதரவு கொடுக்கக்கூடாது.

தேசிய இனப் பிரச்சனையை தொழிலாளி வர்க்கப் புரட்சியுடன் சம்பந்தப்படுத்துவதன் மூலமும், அப்புரட்சியை அடிப்படையாகக் கொள்வதன் மூலமுமே தீர்க்க முடியும் என்றும், மேற்கத்திய நாடுகளில் புரட்சி வெற்றியடைவதற்கு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடக்கும் கிழக்கத்திய அடிமை நாடுகளின் விடுதலை இயக்கங்களுடன் நேரடியாகப் புரட்சிகரமான கூட்டணி அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் லெனினிசம் நிரூபித்துக் காட்டிற்று;

மார்க்சிய-லெனினிய தத்துவம் இந்திய சமூக மாற்றத்திற்கான வழிகாட்டி

உலகமய கோட்பாடுகளை கடைபிடித்து வரும் இந்திய அரசு, இந்திய கனிம வளங்கள் முழுவதையும், இயற்கை ஆதாரங்கள் முழுவதையும் கொள்ளையடித்துச் செல்லவும், கபளீகரம் செய்து கொள்ளவும் ஏகாதிபத்தியங்களுக்கும், இந்திய பெருமுதலாளிகளுக்கும் அனுமதி வழங்கி விட்டது.     

இவர்களின் நலன் சார்ந்து இவர்களின் அனுமதியுடன் வாய்ப்பிருக்கும் எவரும் இயற்கை வளங்களை கொள்ளையிட்டுக் கொள்ளலாம் என்கிற நிலையை தோற்றுவித்துள்ளது. ஆற்றுமணலில் துவங்கி யுரேனியம் வரை சகல கனிம வளங்களும் தங்கு கடையின்றி, விதிமுறைகளின்றி சூரையாடப்படுகின்றன.     தொழில் வளர்ச்சி என்கிற பெயரில் இந்தியாவின் சமூக, பூகோளவியல் அமைப்பை சுடுகாடாய் மாற்றி வருகிறது.

இந்திய இயற்கை வளங்கள் இந்திய மக்கள் அனைவருக்கும் சொந்தமானது. கனிம வளங்கள், இயற்கை ஆதாரங்கள் விசயத்தில் இந்திய ஆளும் வர்க்கத்தின் நாசகரமான நோக்கத்தை மக்களிடம் விளக்கிக் கூறி அவர்களை அரசியல் மயப்படுத்தி உலகமயம், தாராளமயம் மற்றும் தனியார் மயம் ஆகியவற்றிற்க்கெதிராக போராட்டங்கள் நடத்துவதும் மக்கள் நலன் சார்ந்து உரிய வரையறைகளை நிர்ணயித்து அதன்படி செயல்படுவதற்குரிய நிர்பந்தங்களை இந்திய ஆளும் வர்க்கங்கள் மீது ஏற்படுத்துவதற்குரிய போராட்டங்களை வளர்த்தெடுப்பது நமக்கும், எதிர்கால மக்களுக்கும் அவசியமாகும்.   

நிதி மூலதனத்தின் லாப வேட்டைக்கான ஓர் ஏற்பாடே இந்த "ஊக வணிகம்". "பங்குச் சந்தை" என்பது எங்ஙனம் தொழில் நிறுவனங்களின் மீதான ஆதிக்கத்திற்கு பயன்படுவதோடு, குறுகிய காலத்தில் கொள்ளை லாபம் ஈட்டவும் நிதி மூலதனத்திற்கு பயன்படுகிறதோ அதுபோல் ஊக வணிகம் என்பது வணிக நிறுவனங்களின் மீதான ஆதிக்கத்திற்கு பயன்படுவதுடன், சந்தை நடவடிக்கைகளை தன் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்து கொள்ளை லாபம் ஈட்ட நிதி மூலதனத்திற்கு ஊக வணிகம் பயன்படுகிறது.     

உற்பத்தியோடு எவ்வித தொடர்பின்றி பங்கு சந்தையில் லாபம் ஈட்டும் நிதி மூலதனம், சந்தையிலும் சரக்கு பரிவர்த்தனை செய்யாமலேயே ஊக வணிகத்தின் மூலம் வாபம் ஈட்டுகிறது.     

பன்னாட்டு நிதி மூலதனங்கள் ஊக வணிகத்தின் மூலம் இந்தியாவின் தங்கம் மற்றும் உணவுச் சந்தைகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன. சரக்கு பரிவர்த்தனைகளை செய்யாமலேயே விலையை தீர்மானிக்க முடியும் என்கிற எளிமையை பன்னாட்டு நிதி மூலதன நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது இந்த ஊக வணிகம்.     

இனி ஒரு பொருளின் விலையை அதை வாங்குபவரோ, விற்பவரோ தீர்மானிக்க முடியாது மாறாக ஊக வணிகமும், நிதி மூலதனமும் தீர்மானிக்கும். கடந்த 3 ஆண்டுகளில் 100% மேல் உணவு பொருட்களில் ஏற்பட்டுள்ள விலையேற்றத்திற்கு இந்த ஊக வணிகமே காரணம்.   

நிதி மூலதனங்களின் நவீன செயல்பாடுகளையும், ஊக வணிகம், பங்குச் சந்தை போன்ற அதன் செயல்வடிவங்களையும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். புரிந்து கொள்வதுடன் அதற்கு எதிரான அரசியல் போராட்டங்களை வடிவமைத்து அதை வீழ்த்துவதும் அவசியம்.     

நமது சகல வெகுஜன அமைப்புகளும் இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுடன் நிதி மூலதனத்திற்கெதிராக, ஊக வணிகத்திற் கெதிராக"மக்களை"அணித் திரட்டி போராட்டத்தை வளர்த்தெடுப்பது அவசியம்.   

தனியார் மயம், உயர்கல்வியை ஏழைகளுக்கு எட்டாக் கனியாக்கியுள்ளது.     

வசதி படைத்தவர்களுக்கே உயிர்காக்கும் மருத்துவம் என்கிற நிலையை தோற்றுவித்துள்ளது. இந்தியாவில் 80% மக்கள் இன்னமும் வறுமை நிலையிலேயே வாழ்கிற சூழலில், உலகமய கொள்கை இவர்களுக்கு சிந்திப்பதற்குரிய கல்வியையும் மறுக்கிறது.   

வாழ்வதற்குரிய மருத்துவத்தையும் மறுக்கிறது. கல்வியும், மருத்துவமும் இந்தியாவில் பிரமாண்டமாய் வளர்க்கப்பட்டுள்ளதாக பெருமையாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்திய ஆளும் வர்க்கம் இந்தியர்களுக்கு இலவசமாய் கல்வியும், சுகாதாரமும் வழங்கப்படுவது மறுக்கப்பட்டுவிட்டது என்கிற உண்மையை திட்டமிட்டே மறுக்கிறது, மறைக்கிறது.   

வெகுஜனங்கள் இந்நிலைமைகள் சார்ந்து பரவலாக போராடுகிறார்கள். போராடுகிறவர்களையும், இதர மக்களையும் இக்கொள்கைகளுக்கெதிராக அணிதிரட்டி, போராட்டத்தை வளர்க்க வேண்டும். உலகமயம் ஏற்படுத்தி வரும் சகல விளைவுகளின் மீதும் மக்களை அணிதிரட்டி இந்திய ஆளும் வர்க்கத்திற்கெதிராக மிகப்பெரிய நிர்பந்தங்களை ஏற்படுத்தும் விதமாக போராட்டங்களை வளர்க்க வேண்டும்.   

சகல துறைகளின் வளர்ச்சிகளையும், ஏற்பட்டுள்ள சகல புதிய நிலைமைகளையும் ஸ்தூலமாகவும், ஆழமாகவும் உள்வாங்கிக் கொண்டு மார்க்சிய தத்துவத்தை செழுமைபடுத்துவதும், வளர்த்தெடுப்பதும் சமூக மாற்றத்திற்கு அவசியமான பணியாகும்.     

லெனின் அவரது காலத்தின் ஏகாதிபத்திய வளர்ச்சியின் நிலைமைகளையும், விஞ்ஞானத்தில் கண்டறியப்பட்ட "அணுசக்தி" யையும் முதல் உலகப்போரின் புதிய அரசியல் நிலைமைகளையும் ஸ்தூலமாக ஆய்வு செய்து மார்க்சிய தத்துவத்தை வளர்த்தெடுத்து சோவியத் யூனியனில் சோசலிச புரட்சியை நிறைவேற்றினார். லெனின் செழுமைப்படுத்திய வளர்த்தெடுத்த மார்க்சிய தத்துவத்தை ஸ்டாலின், லெனினிசத்தின் அடிப்படை அம்சங்களாக தொகுத்து உலக கம்யூனிஸ இயக்கங்களுக்கு வழங்கியுள்ளார்.   

இந்திய வரலாறு முழுவதையும் சோஷலிச புரட்சிகர நிலைபாட்டிலிருந்து மறு ஆயவுக்குட்படுத்தவேண்டியது இன்று" அவசியமாகும். சோவியத் யூனியனில் ஸ்டாலினுக்கு பிறகு மார்க்சிய தத்துவார்த்த நிலைபாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சீர்திருத்த நிலைபாடுகளையும், சந்தர்ப்பவாத நிலைபாடுகளையுமே புரட்சிகர மார்க்சிய நிலைபாடுகளாய் சகல நிலைமைகளிலும் நிலைநிறுத்தியுள்ளன. இந்தியா உள்ளிட்டு உலகம் முழுவதும் சந்தர்ப்பவாதத்திற்கெதிரான தத்துவார்த்த போராட்டம் இன்று அவசியமாகும்.   

மார்க்சிய தத்துவம் சமூக மாற்றத்திற்கான தத்துவம். சமூகத்தை சகலவிதமான ஒடுக்கு முறைகளிலிருந்தும், சுரண்டலிலிருந்தும் விடுவிப்பதற்கான தத்துவம். மார்க்சியம்,செயலுக்கான வழிகாட்டியாகும். அதுவரையிலான அனைத்து விஞ்ஞான வளர்ச்சிகளையும் அதன்வழி ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி, அரசியல் வளர்ச்சி, அனைத்தையும் உள்வாங்கி, சமகாலத்தில் சமூக வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தடைகளை உடைத்தெறிந்து சமூகத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் மார்க்சிய தத்துவமே வரலாற்று இயக்கவியல் பொருள் முதல்வாதமாகும்.   

ஏகாதிபத்தியங்களின் புதிய வளர்ச்சி நிலை மற்றும் ஏகாதிபத்தியங்களுக் கிடையிலான முரண்பாடுகளும் முதலாளித்துவத்தின் நெருக்கடிகளும் "உலகமயம்" என்கிற ஒரே பொருளாதார அமைப்பின் கீழ் வெளிப்படுகின்ற புதிய நிலைமையை உருவாக்கியுள்ளது

இந்தியாவின் ஏகாதிபத்திய சூழ் நிலைமைகளில்; முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் மிகவும் தீவிரம் அடைந்திருக்கும் இந்நேரத்தில் மார்க்ஸிய, லெனினிய தத்துவங்களை, கோட்பாடுகளை சமூகம் உள்வாங்கிக் கொள்ளாதிருக்க முதலாளித்துவம் தன்னகத்தே வைத்திருக்கும் ஊடகங்கள் வாயிலாகவும், அடையாள அரசியல் உள்ளிட்டப் போராட்டங்களின் வாயிலாகவும் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   

நடைபெறுகின்ற போராட்டங்களில் ஆளும் வர்க்க நலன்களையும், ஏகாதிபத்திய நலன்களையும் தோலுரித்துக்காட்டி மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை உள்நாட்டு ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான புரட்சிகரமான போராட்டமாக மாற்ற வேண்டும்.   

பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் விடுதலைக்காகப் போராடி வரும் தமிழக மார்க்ஸிஸ்டுகளும், தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையினராய்த் தொண்டாற்றும் வர்க்கப் பிரதிநிதிகளும் மார்க்ஸிய லெனினிய கோட்பாடுகளை கற்பது என்பது இன்று மிக அவசியமாகும்.

- ப. மீனாட்சி சுந்தரம்

Pin It