‘காஸ்ட்ரோ’ என்ற பெயரைக் கேட்கிறபோது ‘கம்பீரம்’ கண்முன் நிற்கிறது. தனித்துவம் மிக்க தலைவர். உலகப் புரட்சியாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய தோழர். ‘ஆளும் வளரணும் அறிவும் வளரணும்’ என்ற பட்டுக்கோட்டையின் கவிதை வரிக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்.
அவரது சொற்பொழிவுத்திறன் உலகறிந்தது. அவரது அசாத்தியத் துணிச்சல் அமெரிக்காவையே அலற வைத்தது.
இலட்சியத்தில் உறுதியும் நிர்வாகத்திறனும் அவரின் அணிகலன்கள்.
இவரது அசாத்திய வளர்ச்சிக்கும் மேம்பட்ட ஆளுமைக்கும் எத்தனையோ காரணங்கள் இருந்திருக்கின்றன. அன்றைய உலக அரசியல், சமூகச்சூழல், கியூப நாட்டில் மாற்றத்திற்கான தேவை என்பன போன்ற பல புறக்காரணங்கள் இருந்த போதிலும் அவருடைய அறிவு வேட்கையும் புத்தக வாசிப்பும், சுய சிந்தனையும், அயராத உழைப்பும் மாறுபட்ட அணுகுமுறையும் முக்கியக் காரணங்களாக இருந்துள்ளன.
இவற்றுள் ‘புத்தக வாசிப்பு’ பிரதான இடத்தைப் பெறுகிறது. வாசிப்பை ஒரு வேலைபோல் அல்லாமல் வேள்வியாக மேற்கொண்டிருந்தவர் காஸ்ட்ரோ.
நிகரகுவாவின் புரட்சியாளரும், புரட்சிகர விடுதலை முன்னணி என்ற அமைப்பின் நிறுவனர்களில் ஒருவருமான தொமாஸ் போர்ஹே 1992இல் காஸ்ட்ரோவிடம் மேற்கொண்ட ஒரு நீண்ட நேர்காணல் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. அந்நேர்காணல் மூலம் கியூபப் புரட்சி பற்றியான அரிய செய்திகள் பல வெளிப்பட்டதோடு காஸ்ட்ரோவின் வித்தியாசமான சில பழக்கவழக்கங்கள் மற்றும் பண்புகளும் வெளியாயின.
இந்நேர்காணல் 1992இல் ஸ்பானிஷ் மொழியில் நூல் வடிவம் பெற்றது. பின்னர் மேரிடாட் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அந்த ஆங்கில நூலை புதுடெல்லியிலுள்ள பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ் நிறுவனம் வெளியிட்டது. அந்நூல் ‘காஸ்ட்ரோ நேர்காணல்கள்’ எனும் தலைப்பில் தமிழில் அமரந்தா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு புதுமலர் பதிப்பகத்தால் 2002இல் வெளியாயிற்று.
இந்நூலில் ‘புத்தகங்களும் வாசிப்பும்’ என்ற தலைப்பில் தனி அத்தியாயமே உள்ளது. அதில் காஸ்ட்ரோ தனது வாசிப்புப் பழக்கம் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் பதிவு செய்துள்ளார்.
‘கியூப எழுத்தாளர்கள் எழுதிய எண்ணற்ற புத்தகங்களை வாங்கினோம். கியூபப் புதுக்கவிதை எனும் கடலிலும், இலத்தீன் அமெரிக்காவில் பரவலாக அறியப்படாதிருக்கும் உருவகக் கதை எனும் நதியிலும் நீந்தினோம்.’
‘வாழ்நாள் முழுவதும் எத்தனை முடியுமோ அத்தனை புத்தகங்களைப் படித்து வந்திருந்த போதிலும், படிப்பதற்கு நேரம் போதவில்லை என்ற குறை எனக்கு எப்போதும் உண்டு. நூலகங்களையும், புத்தகங்களின் பட்டியலையும் பார்க்கும் போதெல்லாம் என் வாழ்நாள் முழுவதையும் படிப்பதிலும் கற்பதிலும் செலவிட முடியவில்லையே என்று வருந்துவேன்.’
‘அனைத்துவகை இலக்கியங்களையும் நான் படித்திருக்கிறேன். படித்தவற்றுள் எனக்கு அதிகமாகப் பிடித்தது வரலாற்று நூல்கள். கியூப வரலாறு, உலக வரலாறு, பலரது வாழ்க்கை வரலாற்று நூல்கள் அனைத்தையும் நான் படித்துவிட்டேன்.’
‘உயர்நிலைப் பள்ளியில் இருக்கும் போதே நான் இலக்கியத்தில்-அதாவது செவ்வியல் ஸ்பானிய இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தேன்’
‘நான் சிறையிலிருந்த 1953 முதல் 1955 வரை இரண்டாண்டு காலம் தான் எனக்குப் படிக்க அதிக நேரம் கிடைத்த காலம்.’
‘பல்கலைக்கழக மாணவனாக இருந்தபோதுதான் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் இன்னபிற சிந்தனை மரபுகளைப் பற்றி ஆழமாகப் படிக்க ஆரம்பித்தேன். அவற்றை ஏராளமாகப் படித்தேன்.’
‘புரட்சிகள் பற்றி ஏகப்பட்ட புத்தகங்களை நான் படித்திருக்கிறேன் என்று நான் உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது.’
‘பிரெஞ்சுப் புரட்சி பற்றி எழுதப்பட்ட அனைத்து நூல்களையும், போல்ஷ்விக் புரட்சி பற்றிய பல நூல்களையும், சீனப்புரட்சி பற்றிய பல நூல்களையும் படித்திருக்கிறேன்.’
‘சிறையிலிருக்கும் போது என் வாசிப்பை நான் முறையாக மேற்கொண்டேன். அங்கு நாங்கள் தத்துவம் படிப்பதற்கென்றே ஒரு பள்ளியை நிறுவினோம். பல உலக இலக்கியங்களைப் படித்தோம். அங்கு ஒரு நாளைக்கு 14-15 மணி நேரம் வீதம் இரண்டாண்டு காலம் நான் படித்துக்கொண்டே இருந்தேன்.’
‘அந்தக் காலகட்டத்தில் தஸ்தயேவ்ஸ்கி எழுதிய எல்லா நூல்களையும் நான் படித்து முடித்துவிட்டேன்.’
‘ரொமெய்ன் ரோலந்தின் எழுத்தில் கவரப்பட்ட நான் இரவு 11 அல்லது 12 மணி வரை நானே தயாரித்த சமையல் எண்ணெய்யில் எரியும் விளக்கில் படித்தேன்.’
‘இரண்டாம் உலகப்போர் பற்றி இருதரப்பிலிருந்தும் எழுதப்பட்ட அனைத்து நூல்களையும் நான் படித்துவிட்டேன். புரட்சியின் வெற்றிக்குப் பின்பும் நான் படித்துக் கொண்டேதான் இருக்கிறேன்.’
‘ஒரு சமயம் விவசாயம் குறித்து குவியல் குவியலாகப் புத்தகங்கள் படித்தேன். விவசாயம், விவசாய நுணுக்கங்கள், வெப்ப மண்டல விவசாயம் போன்றவற்றைப் பற்றி 70, 80, 100 புத்தகங்கள் படித்தேன்.’
‘கார்சியா மார்க்கோசின் அனைத்துப் புத்தகங்களையும் படித்துவிட்டேன் என்று நினைக்கிறேன். மற்ற இலத்தீன் அமெரிக்க இலக்கியங்களையும் அதிகமாகப் படிக்கிறேன்.’
‘செவ்வியல் இலக்கியத்திலிருந்து கிட்டத் தட்ட ஸ்பானிய மொழியில் தேர்வு செய்யப்பட்ட நூறு தலைசிறந்த கவிதைகள் இருந்தன. அனைத்தையும் படித்து மனப்பாடம் செய்தேன்.’
இப்படியாக தன்னிடம் கேட்கப்பட்ட வெவ்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் காஸ்ட்ரோ தனது வாசிப்புப் பழக்கம் பற்றி விவரித்துள்ள பகுதிகள் நமக்கு வியப்பளிக்கிறது.
ஆம்… காஸ்ட்ரோவிடம் கற்க வேண்டியவை பல. அவற்றுள் முதன்மையானது முக்கியமானது… ‘வாசிப்புப் பழக்கம்.’
- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு
***
லெனின் எழுத்துகளை இளைய தலைமுறையினர் வாசிக்க வேண்டும்
வெ.இறையன்பு ஐஏஎஸ்
15-12-2024 அன்று மதுரையில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவன முன்வெளியீட்டுத் திட்ட வெளியீடான லெனின் தேர்வு நூல்கள் 12 தொகுதிகள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அவர்கள் நூலை வெளியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் டி.ராமசாமி. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், மேலாண்மை இயக்குநர் க.சந்தானம், முதுநிலை விற்பனை சீரமைப்பாளர் அ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் கவிஞர் சந்திரன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
நூல்களை வெளியிட்டு இறையன்பு அவர்கள் பேசியதாவது.
மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகியோரை சிறுவயதிலிருந்து வாசித்து வந்தவர் லெனின். பின்னாளில் பொதுவுடைமை தொடர்பான நிறைய நூல்களை எழுதினார். படைப்புக்கும் படைப்பாளிக்கும் வேறுபாடு இருக்கக்கூடாது. படைப்பைவிட படைப்பாளி மேன்மை படைத்தவராக இருக்க வேண்டும். அப்படி வேறுபாடு இருந்தால் அந்தப் படைப்பை புறக்கணிக்க வேண்டும் என்றார் லெனின்.
ரஷ்யாவில் ஆட்சிப் பொறுப்பேற்ற லெனின் உலகின் முதல் அறிவொளி இயக்கத்தை ஏற்படுத்தினார். கல்விக்கூடங்களுக்குச் சென்று பயில இயலாதவர்களின் வீடுகளுக்கே சென்று கல்வி பயிற்றுவிக்கும் முறையை உருவாக்கினார். உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தவர் லெனின். லெனின் சிந்தனை, பொதுவுடைமை இயக்கங்களுக்கான வழிகாட்டல், படைப்புகள் அனைத்தும் 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. அனைவரும் அதனை வாசிக்க வேண்டும். அவரது வாழ்க்கை வரலாற்றை இளைய தலைமுறையினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இவ்வாறு சிறப்பாக நடந்தேறியது லெனின் தேர்வு நூல்கள் வெளியீட்டு விழா.