மார்க்சியம் ஒரு சமூக அறிவியல். அது மார்க்சும் எங்கல்சும் அருளிச் சென்றதல்ல. மார்க்சும் எங்கல்சும் தொடங்கி வைத்ததே. மார்க்சையும், மார்க்சியத்தையும் ரசியப் பாட்டாளி மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் நோக்கில் மாமேதை லெனின் மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்கள் - மூன்று உள்ளடக்கக் கூறுகள் என்ற ஒரு சிறு வெளியீடாக எழுதினார். (லெனின் தேர்வு நூல்கள் தொகுப்பின் முதல் தொகுதியில் உள்ளது) அளவில் சிறியது மட்டுமல்ல; அதன் நோக்கமும் எளியது. ஆனால் இந்தச் சிறு கட்டுரையிலும் கூட “மார்க்சியம் இறுகிப்போன ஒரு வறட்டுக் கருத்தியல் அல்ல. உலக நாகரிக வளர்ச்சியின் ராஜபாட்டையின் வழியே வராமல், அதனின்றும் விலகி வேறொரு வழியே முளைத்த கருத்தியல் அல்ல. மாறாக, மனித குலத்தின் முன்னணிச் சிந்தனையாளர்கள் ஏற்கெனவே எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மார்க்ஸ் விடையளித்தார் என்பதில்தான் அவரது மேதாவிலாசம் குறிப்பாக அடங்கியுள்ளது” என்று கூறுவார் லெனின்.lenin selected booksமார்க்சியத்தை அறிமுகம் செய்து வைக்கும் போதே, அது செழுமையான ஐரோப்பியச் சிந்தனை மரபின் ஆகச் சிறந்த உருவாக்கங்களை உள்வாங்கி உருவானது; அவற்றை உண்டு செழித்து வளர்ந்தது. அவற்றின் தொடர்ச்சியாகவும், அதிலிருந்து எழும்பிய பாய்ச்சலாகவும் இயங்கியல் ரீதியாக உருவானது என்பதை லெனின் விளக்குவார். எளிமைப்படுத்துகிறேன் என்ற பெயரில் மலினப்படுத்துவது; அல்லது சிக்கல்களைச் சொல்லாமல் விடுவது என்ற அணுகுமுறையை லெனினிடம் பார்க்கவியலாது.

அத்தோடு மார்க்சியத்தை ஒரு வறட்டுச் சூத்திரமாகக் குறுக்கும் இடது திரிபுவாதத்தையும் அதனை நீர்த்துப் போகச் செய்யும் வலது திரிபுவாதத்தையும் எதிர்த்து மார்க்சியத்தை அறிவியல்பூர்வமாக வளர்த்தெடுக்க அவர் வாழ்நாள் முழுவதும் போராடினார். மார்க்சியம் ஒரு மூடுண்ட தத்துவமல்ல என்பதில் அவருக்கு ஒருபோதும் ஐயம் இருந்ததில்லை. பேராசான்களான மார்க்சும் எங்கல்சும் எழுத நினைத்து, திட்டமிட்டு, எழுதாமல் போனது உண்டு; எழுத ஆரம்பித்து முடிக்காமல் போனது உண்டு; எழுதி முடித்த பிறகும் பதிப்பிக்கப்படாமல் போனதும் ஏராளம் உண்டு. மார்க்ஸ் அவர்களே தத்துவம் குறித்து எழுத விரும்பி அதற்கான ஒரு கோட்டுச் சித்திரமாக எழுதியதே ஃபாயர்பாக் குறித்த தேற்றங்கள் என்ற பதினோரு சிறிய பத்திகள் மட்டுமே கொண்ட அவரது சிறு நூல். 'எனக்குத் தேவையான நேரம் கிட்டினால் நான் ஹேகல் கண்டறிந்து மாயாவாத தோல்போர்த்திக் கூறிச் சென்றுள்ள முறைபாடு குறித்து எழுத வேண்டும் என்று உள்ளேன். அது சில பக்கங்களில் சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் ஹேகலின் முறைபாட்டில் உள்ளார்ந்து இருக்கின்ற கரணியம் பற்றி விளக்குவதாக இருக்க வேண்டும்.' (மார்க்ஸ் எங்கல்ஸுக்கு எழுதிய கடிதத்தில்... ஜனவரி 1858) என்று கூறியுள்ளார். ஆனால் அந்தச் சில பக்கங்கள் மார்க்சால் என்றும் எழுதப்படவில்லை.

அதுவரையில் இருந்த மிகவும் வளர்ச்சியடைந்த ஜெர்மானிய கருத்து முதல்வாத தத்துவத்தை விளக்கும், விமர்சிக்கும் ஜெர்மானியக் கருத்தியல் மார்க்ஸ் எங்கல்ஸ் அவர்களால் 1847ஆம் ஆண்டே எழுதி முடிக்கப்பட்டது. அது ஃபாயர்பாக் குறித்த தேற்றங்களில் ஒரு பகுதியின் விவரிப்பு என்றாலும், அது மார்க்ஸ், எங்கல்ஸ் காலத்தில் பதிப்பிக்கப்படவில்லை. அந்த நூலின் முதன்மையான நோக்கமான ‘சுய தெளிவு என்பதை சாதித்து விட்டபடியால், நூலின் கையெழுத்துப் படியை இடைவிடாத திறனாய்வுக்கு எலிகளிடம் உளப்பூர்வமாக ஒப்படைத்து விட்டோம்’ என மார்க்சே பின்னர் தனது அரசியல் பொருளாதாரத்தின் விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு நூலின் முகவுரையில் 1859 ஆம் ஆண்டு எழுதினார். ஆனால் அவர் கூறியபடி பிரதி எலிகளால் தின்னப்பட்டுவிடவில்லை. மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகம் மற்றும் லண்டனின் லாரென்ஸ்- விஷார்ட் பதிப்பகம் ஆகியோரால் மார்க்ஸ் எங்கல்ஸ் மறைவிற்குப் பல ஆண்டுகள் கழித்து பதிப்பிக்கப்பட்டது.

மார்க்சிய தத்துவத்தை முழுமையாக விளக்கும் முயற்சியில் எங்கல்ஸ் இயற்கையின் இயங்கியல் நூலை இரண்டு ஆண்டு காலமாக எழுதிக் கொண்டிருந்தபோது, மார்க்ஸ் கேட்டுக் கொண்டதன் பேரில் அதை கொஞ்சம் மனத்தாங்கலுடன் நிறுத்தி வைத்து விட்டு டூரிங்கிற்கு மறுப்பு நூலை எழுதினார். அது 1878ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு தனது இயற்கையின் இயங்கியல் நூலை சில ஆண்டுகள் விட்டுவிட்டு எழுதியுள்ளார். ஆனால் மார்க்ஸின் மறைவிற்குப் பின் எங்கல்ஸ் மூலதனம் நூலின் தொகுதி 2, 3 பதிப்புப் பணிகள், ஏனைய அமைப்புத் துறைப் பணிகள் ஆகியவற்றில் மூழ்கிப் போனார். எனவே அவரது இயற்கையின் இயங்கியல் நூலும் முடிக்கப்படவில்லை. முழுமையற்ற நிலையில் இயற்கையின் இயங்கியல் நூல் அவர் மறைந்து பல ஆண்டுகள் கழித்து, ஐன்ஸ்டீனின் பரிந்துரையின் அடிப்படையில் எட்வர்ட் பெர்ன்ஸ்டைன் முயற்சியில் பதிப்பிக்கப்பட்டது.

அதைப் போல மார்க்ஸ் அவர்களால் எழுதப்பட்டு 1859ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட அரசியல் பொருளாதாரத்தின் விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு நூல். அதன் முதல் வரியிலேயே, ‘நான் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பினை பின்வரும் வரிசையில் பகுப்பாய்வு செய்ய உள்ளேன்' என்று கூறி, அந்த வரிசையையும் 'மூலதனம், நிலஉடைமை, கூலிஉழைப்பு, அரசு, வெளிநாட்டு வர்த்தகம், உலகச் சந்தை' என்று காட்டியிருப்பார். அத்தோடு, அதில் முதலாவதாக உள்ள மூலதனம் குறித்து, அது “...பின்வரும் மூன்று அத்தியாயங்களை உள்ளடக்கி இருக்கும்” என்று கூறி, “1. சரக்கு, 2. பணம் அல்லது எளிய சுற்றோட்டம், 3. பொதுவாக மூலதனம்” என்று வரிசைப்படுத்தியிருப்பார். பிறகு அவரது இணையற்ற பெருநூலான மூலதனம் நூலின் முன்னுரையில், ”1859இல் பதிப்பிக்கப்பட்ட அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு என்ற நூலின் தொடர்ச்சியாக இந்நூல் அமைகிறது” என்பார். ஆனால் மூலதனம் நூல், நிலஉடைமை, அரசு, வெளிநாட்டு வர்த்தகம், உலகச் சந்தை ஆகியவற்றை முழுமையாகப் பகுப்பாய்வு செய்துள்ளதாகக் கூறவியலாது.

அப்படி மார்க்சும் எங்கல்சும் தங்கள் காலத்தில் தனியாக எழுதாது விட்ட பகுதிகளை எழுதி, மார்க்சிய சமூக அறிவியலை முழுமையும் ஆழமும் அடையச் செய்யும் பணியை அவருக்குப் பின் வந்த அவரது மாணக்கர்கள் செய்தனர். அத்தோடு மார்க்ஸ், எங்கல்ஸ் காலத்தோடு உலக வரலாறும் முதலாளித்துவ இயக்கமும் அதன் செயல்பாடுகளில், நடைமுறைகளில் ஏற்படும் மாற்றங்களும் நின்றுவிடவில்லை. அது குறித்தும் அசலான மார்க்சியப் பகுப்பாய்வுகளை அவர்கள் எழுதியுள்ளனர். மார்க்சும், எங்கல்சும் எழுதாததை எழுதுவதோடு அவர்கள் நிற்கவில்லை. மார்க்ஸ், எங்கல்ஸ் எழுத்துகள் பெருமளவிற்கு மேற்கு ஐரோப்பிய நிலைமைகள் குறித்த திட்டவட்டமான ஆய்வுகளையே அடித்தளமாகக் கொண்டிருந்தன. பிளகனோவின் குழுவைச் சேர்ந்த புரட்சியாளரான வேரா சசூலிச் மார்க்சுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ரசியாவின் கிராமப்புறங்களில் நிலவிய நிலத்தின் மீதான சமூக உடைமையை எடுத்துக்கூறி, சோசலிசக் கட்டுமானத்தின்போது இது எவ்வாறு கையாளப்படும் என்று கேட்டிருந்தார். ரசியாவின் சோசலிசம் நோக்கிய பயணம் ஏனைய மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பயணத்திலிருந்து மாறுபட்டிருக்கும் என்பதற்கு மேலாக மார்க்ஸ் எதையும் கூறிவிடவில்லை.

அடிப்படையற்ற மேலோட்டமான அனுமானங்கள், ஊகங்களுக்கு மார்க்சிடமோ, எங்கல்சிடமோ இடமில்லை. தமது சமூகத்திற்கு உரிய வழிமுறையை அந்த எதார்த்தத்தில் காலூன்றி நிற்பவர்கள் உருவாக்க வேண்டும் என்பதில் அவர்களுக்கு சந்தேகமிருந்ததில்லை என்று நாம் கூறலாம். மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பது புதிய கருத்துருவாக்கம் அல்ல. அது மார்க்சிய பகுப்பாய்வு, மார்க்சிய கோட்பாட்டாக்கம், மார்க்சிய நடைமுறை ஆகியவற்றின் உள்ளார்ந்த பண்புதான். அந்தப் பணியின் பகுதியாகவும் ரசியா, சீனா, இந்தியா, வியட்நாம், கியூபா ஆகிய சமூகங்களுக்கு பொருத்தமாக மார்க்சியத்தை வளர்க்கும் முகமாகவும் பலரும் எழுதியுள்ளனர்.

இப்படி பல வகைகளிலும் தேவைப்படும் வரலாற்றுப் பூர்வமான பணிகளை பலரும் செய்ய முனைந்துள்ளனர். முதலாளித்துவ உற்பத்தி முறையின் மிக முக்கியமான அம்சமான மூலதனத் திரட்டல் (Accumulation) என்பதை மையமாகக் கொண்டு அதனை விளக்கிய ரோசா லக்சம்பர்க் நிதிமூலதனம், ஏகாதிபத்தியம் ஆகிய கருத்தாக்கங்களின் உருவாக்கங்களில் பெரும் பங்காற்றிய ருடால்ஃப் ஹில்ஃபர்டிங், புகாரின்; தேசிய இனப் பிரச்சினையில் மார்க்சிய நிலைபாட்டை உருவாக்கப் பங்களித்த புகாரின், ஸ்டாலின்; சீனா போன்ற நாட்டின் புரட்சிக்கான கட்சி, வழிமுறைகளை வகுத்த மாவோ; சீனா போன்ற பின்தங்கிய நாட்டில் சோசலிசக் கட்டுமானம் குறித்த புரிதலை ஆழமாக்கிய தெங் ஷியாவ் பிங்; மேலாதிக்கம், மேல் கட்டுமான, அடிக்கட்டுமான இயங்கியல் குறித்த அசலான புரிதலை ஏற்படுத்திய அண்டோனியோ கிராம்ஷி; பெண்ணியம் குறித்து காத்திரமான புரிதலுக்கு அடித்தளமிட்ட அலெக்சாண்ட்ரா கொலந்தாய்; கலை, இலக்கியக் கோட்பாடுகளில் லூனா சார்ஸ்கி, எர்னஸ்ட் ஃபிஷர், ஜார்ஜ் லூகாஸ், ரேமண்ட் வில்லியம்ஸ், டெரி ஈகிள்டன், பிரக்டோல்ட் பிரக்ட், வால்டர் பெஞ்சமின்; பின் நவீனத்துவம் குறித்து ஃபிரடெரிக் ஜேம்ஸன்; இன்னும் ஹோசிமின், லியோ-ஷாவ்-சி, காஸ்ட்ரோ,

பி.சி.ஜோஷி, ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் என இந்தப் பட்டியல் தொடர்ந்து கொண்டே போகும். இந்த வகைப்பாட்டில் தன்னிகரில்லாத பெயர் லெனின்.

கட்சி அமைப்பு, ரசியப் புரட்சிக்கான திட்டம், ரசிய முதலாளித்துவம், அரசு, ஏகாதிபத்தியம், தேசிய இனம், பின்தங்கிய விவசாய நாட்டின் சோசலிசக் கட்டுமானம் (முழுமையாக இல்லையென்றாலும்), அறிவியலின் தத்துவம் எனப் பல முனைகளிலும் மார்க்சியத்தையும் அறிவியல் பூர்வமான சோசலிசத்திற்கான கோட்பாட்டாக்கத்தையும் இற்றைப்படுத்தி, ஆழப்படுத்தி, விரிவாக்கியவர். அத்தோடு மார்க்சியம் எனும் சமூக அறிவியலின் வளர்ச்சி எந்த அடிப்படையில் நடக்க வேண்டும் என்பதை விளக்கமாகவும் செயல் மூலமும் நடத்திக் காட்டியவர். அவரது ரசியாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. திட்டவட்டமான சூழல் குறித்த திட்டவட்டமான பகுப்பாய்வு என்பதற்கு அவரது இந்த நூலும் ஏப்ரல் தேற்றங்களும் நல்ல எடுத்துக்காட்டுகள் ஆகும்.

எந்தவிதமான திரிபுவாதத்திற்கும் இடம் தராமல் ஒரு மார்க்சிஸ்ட்டுக்கு இருக்க வேண்டிய படைப்பூக்க இளகு தன்மையோடு அவர் கடைசி வரையில் இருந்தார். இந்த பண்பும் திட்டவட்டமான சூழல் குறித்த திட்டவட்டமான பகுப்பாய்வும் அவரை புதிய நடைமுறைகளை வகுக்க வைத்தது. அதனை, தான் உருவாக்கிய கோட்பாடுகள், நடைமுறைகள் ஆகியவற்றின் உள்ளார்ந்த தர்க்கரீதியான கோர்வை, அவற்றின் அறிவியல்பூர்வமான எதார்த்தம் ஆகியவற்றின் மீதிருந்த நம்பிக்கையில், தனது நம்பகத்தன்மை, தனது நாவன்மை, சிக்கலான கோட்பாடுகளையும் எளிமையாக முன்வைக்கும் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் சக தோழர்களை, தலைவர்களை, கட்சி அணிகளை, பொதுமக்களை வென்றெடுப்பது அவருக்கு சாத்தியமாக இருந்தது.

ஒரு தனிநாட்டில், அதுவும் ஒரு பின்தங்கிய விவசாய நாட்டில் சோசலிசக் கட்டுமானம் குறித்து, மார்க்சும் எங்கல்சும் ஏதும் எழுதாத நிலையில் திட்டவட்டமான சூழல் குறித்த பகுப்பாய்வின் அடிப்படையில் திட்டவட்டமான கொள்கைகளை அவர் உருவாக்கினர். ஆனால் சூழல் மாறியபோது அந்த கொள்கைகளையும் மாற்றினார். 1917 இல் செயல்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளை, தொடரும் உள்நாட்டுப் போருக்கு முகங்கொடுக்கும் விதமாக போர்க்கால கம்யூனிசக் (War Communism) கொள்கைகளாக 1918இல் மாற்றம் செய்தார். பின்னர் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வரும்வேளையில் போர்க்கால கம்யூனிச கொள்கைகளை மக்கள் இனிமேலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை உணர்ந்து புதிய பொருளாதாரக் கொள்கை

1921-இல் அவரால் கொண்டுவரப்பட்டது. அதைப் போல, ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சிக் கட்டத்தில் அதற்கு ஈடு கொடுக்கும் வகையிலான கட்சி அமைப்பை பெருமளவு முழுநேர புரட்சிக்காரர்களின் இறுக்கமான அமைப்பாக 1903-இல் முன்மொழிந்து முன்மாதிரி இல்லாத ஓர் அமைப்பைக் கட்டினார். ஆனால் பின்னாளில் கட்சியில் அதிகாரப் போக்கு தலை தூக்கியபோது, கட்சியை மேலும் ஜனநாயக பூர்வமாக மாற்ற 1923, 24இல் முயற்சி செய்தார்.

இப்படி பல்வேறு வகையிலும் மார்க்சியக் கருத்தியலை எளிய முறையில் பாமரருக்கும் புரியும் வகையில் அறிமுகம் செய்து எழுதப்பட்ட கட்டுரைகள், சிறு நூல்கள் ஒரு புறம்; கட்சி அமைப்பு, அது செயல்படும் விதம் குறித்த கட்டுரைகள், ரசியப் புரட்சியை நோக்கிய செயல்பாடுகள், இயக்கங்கள், திட்டங்கள் குறித்த கட்டுரைகள், தேசிய இனச் சிக்கல் குறித்த அசலான கருத்தாக்கங்கள், ஏகாதிபத்தியம் குறித்த கோட்பாட்டு ஆக்கம், அரசு குறித்த மார்க்சியப் புரிதலுக்கான விரிவான எழுத்துகள், புரட்சி முடிந்த ரசியாவில் உள்நாட்டுப் போரின் போதும், சோசலிசக் கட்டுமானத்தின்போதும் எடுத்த முடிவுகளைக் குறித்த விளக்கவுரைகள், வலது, இடது திரிபுவாதங்களுக்கு எதிரான கருத்துப் போராட்டங்கள், அவர் அமைத்த மூன்றாவது அகிலத்தின் உரைகளிலும் செயல்பாடுகளிலும் அவர் காட்டிய பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என லெனினையும் லெனினிய அணுகுமுறைகளையும், ஏகாதிபத்திய கால கட்டத்திற்கான மார்க்சியக் கோட்பாடுகளையும் அறிந்து கொள்ள இன்றியமையாத லெனினது எழுத்துக்களையும் உரைகளையும் கடிதங்களையும் உள்ளடக்கியவை 12 தொகுதிகளில் பதிப்பிக்கப்பட்ட லெனின் தேர்வு நூல்கள்.

லெனின், 20-ஆம் நூற்றாண்டின் இணையற்ற மார்க்சிய சிந்தனையாளர்; கோட்பாட்டாளர்; அதுவரை கருத்தாகவும் கனவாகவும் இருந்து வந்த பாட்டாளி வர்க்கப் புரட்சியை தலைமை தாங்கி நடத்திய புரட்சித் தலைவர்; ஒரு பின்தங்கிய விவசாய நாட்டில் சோசலிசத்தை கட்டமைக்கத் தேவையான கோட்பாடுகளுக்கு வித்திட்டவர். அந்த மாமேதையின் சிந்தனைகளையும் உள்ளத்தையும் புரிந்து கொள்ள உதவும் தொகுப்பு லெனின் தேர்வு நூல்கள். 21ஆம் நூற்றாண்டில் சோசலிசத்திற்காக பணியாற்றும் அனைவரும் கட்டாயம் வாசித்து உள்வாங்க வேண்டிய அடிஉரமான எழுத்துகள் அடங்கியது லெனின் தேர்வு நூல்கள் தொகுதி.

- ப.கு.ராஜன்