சமதர்மப் போரில் வினைஞர் வென்றதும்
தமததி கார நழுவலை நிறுத்த
உள்ளும் வெளியும் சுரண்டல் வாதிகள்
துள்ளி எழுந்து போரைத் தொடுத்தனர்
போரில் வெல்ல அனைத்துத் திறனையும்
கூரிய முறையில் செயல்படச் சொன்ன
ஆசான் லெனினின் அறிவுரை கேட்டு
நாசம் தவிர்த்தனர் சோவியத்து மக்கள்
வீரம் ஒன்றே போதாது என்றும்
பாரை ஆளக் கல்வியும் அறிவும்
முயன்று அடைவது மக்கள் கடனென
நயந்து சொன்ன ஆசான் லெனினின்
சொல்லை ஏற்று வளர்ச்சியும் பெற்றனர்
நல்ல சொற்கள் நமக்கும் தானே.
((1917 ஆம் ஆண்டில் வர்க்கப் போரில்) சோஷலிச அரசு அமைக்கும்படியான வெற்றியைப் பெற்றதும், தங்களுடைய அதிகாரப் பிடிப்பு நழுவுவதைக் கண்ட சுரண்டல்வாதிகள் (அவ்வரசின் மீது) நாட்டிற்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் அவசர அவசரமாகப் போரைத் தொடுத்தனர். (மற்ற விஷயங்களை விட சுரண்டல்வாதிகளுக்கு எதிரான) இப்போருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பாட்டாளி வர்க்கத்தின் பேராசான் லெனின் கூறிய அறிவுரையைக் கேட்ட சோவியத் மக்கள் சோஷலிச அரசு நாசமடையாமல் காத்தனர். (உள் நாட்டு, வெளிநாட்டுத் தாக்குதலில் இருந்து) வெற்றி பெற்ற உடனேயே (உழைக்கும் வர்க்கத்திற்கு) வீரம் மட்டும் போதாது என்றும் சோஷலிச அரசைத் திறம்பட நடத்திச் செல்ல கல்வியறிவை முயன்று பெறுவது அவர்களுடைய தலையாய கடமை என்றும் லெனின் நயமாகச் சொன்னதை ஏற்றுச் செயல்பட்ட அம்மக்கள் (அரசியல், சமூக, பொருளாதார) வளர்ச்சியையும் பெற்றனர். பேராசான் லெனின் கூறிய அறிவுரைகள் (சோவியத் மக்களுக்கு மட்டுமல்ல) நமக்கும் தான்.
- இராமியா
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
புது நானூறு 29. நல்ல சொற்கள் நமக்கும் தான்
- விவரங்கள்
- இராமியா
- பிரிவு: கவிதைகள்