“விளை பொருள்களுக்கு விலை குறைந்து போனதால் வரிகளைக் குறைக்க வேண்டு” மென்று மிராசுதாரர்கள் கூக்குரல் இடுகின்றார்கள். விலை குறைந்த காரணத்தைக் கொண்டு வரியைக் குறைக்கும் படியான நிலைமை ஏற்பட்டு விட்டதா என்பதை வாசகர்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். வரிவசூல் செய்வதானது விளை பொருள்களின் விலையை உத்தேசித்தா அல்லது “அரசாங்கம் நடைபெற வேண்டும்” என்கின்ற காரணத்துக்காகவா என்பதை முதலில் யோசித்துப் பார்க்க வேண்டும்.

அந்தப்படி யோசித்துப் பார்த்தால் அரசாங்கம் நடைபெறுவதற்காகத் தான் வரி வசூலிக்கப்படுகின்றது என்பது யாவருக்கும் விளங்கும். ஆகவே இது வரையில் பூமி மீதோ, வியாபாரத்தின் மீதோ மற்றும் பலவற்றின் மீதோ போடப்பட்ட வரி யெல்லாம் அரசாங்கம் நடைபெறுவதற்காகவே அரசாங்க செலவை உத்தேசித்து அதற்கு ஏற்றபடி வரி வசூல் செய்யப் பட்டு வருகின்றது.

periyar 450ஆதலால் இப்போது வரியைக் குறைக்க வேண்டுமானால் அரசாங்கம் நடைபெறுவதற்கு என்று ஏற்பாடு செய்திருக்கும் செலவைக் குறைத்தால் ஒழிய வரியைக் குறைக்கமுடியாது. அப்படி இருந்தும் பல துரைகளில் அரசாங்க வருமானம் குறைந்து போய் விட்ட தென்று கருதி அரசாங்கம் நடைபெற வேண்டிய செலவை குறைப்பது என்கின்ற முறையில் சில துறை களில் செலவைக் குறைத்திருக்கிறது என்றாலும், அக்குறைவுகள் பெரிதும் கல்வி (மக்களுக்கு அவசியம் செய்து தீர வேண்டிய) இலாகாவிலேயே அதிகமாய் குறைக்கப்பட்டு விட்டது. மேலும் இரண்டொரு இலாக்காவில் வரியும் அதிகப்படுத்தியுமாய் விட்டது. அதாவது வருமானவரி ஸ்டாம்பு வரி, கோர்ட் செலவு விகிதவரி, தபால் கார்டு, கவர் முதலிய வரி மற்றும் பல வழிகளில் ஏழைகளையே பாதிக்கும் படியான துறைகளில் வரியை உயர்த்தி கொடுமை செய்தாய் விட்டது. ஆனால் வரிப் பணங்களில் 100க்கு 75 பாகத்திற்கு மேல் மாதம் 1க்கு 100, 200, 500, 1000, 2000, 4000, 5000, 10000, 20000 ரூபாய்கள் வீதம் சம்பளமாக கொள்ளை அடிக்கும் உத்தியோகஸ்தர்கள் சம்பளத்தில் கைவைக்க அதைக் குறைக்க அரசாங்கமும் நடுங்குகின்றது. தலைவர்களும், ஜனப்பிரதிநிதிகளும் நடுங்குகின்றார்கள். அதிக வரி! அதிக வரி!! பொருக்க முடியாத - தாங்க முடியாத வரி!!! என்று கூப்பாடு போடுகின்ற மிராசுதாரர்களும்கூட சம்பளத்தைப் பற்றி பேச நடுங்குகின்றார்கள். அது ஒன்றும் குறைந்தாகவும் தெரியவில்லை. இப்படி இருக்கையில் எதற்காக வரியை குறைப்பது என்பது தான் நமக்கு விளங்கவில்லை.

இன்று நடக்கின்ற அரசாங்கம் உண்மையிலேயே பணக்காரர்களுக்கு - மிராசுதாரர்களுக்காகவே தான் நடைபெறுகின்றது. ஆனால் அரசாங்கம் நடைபெற வசூலிக்கப்படும் வரியில் பெரும்பகுதி ஏழை களிடமேதான் வரி வசூலிக்கப்படுகின்றது. ஸ்டாம்பு, கள்ளு, சாராயம், கஞ்சா, அபினி, உப்பு, வெளிநாடுகளில் இருந்துவரும் சாமான்கள் மீதும், சில்லரை தொழிலாளிகள் மீதும் வியாபாரத்தின் மீதும் மற்றும் பலவழிகளிலும் வசூலிக்கப்படும் வரியெல்லாம் 100-க்கு 99 பேர்களாய் இருக்கும் ஏழை மக்களையே பாதிக்கும்படியாய் இருக்கின்றது. மிராசுதார்கள் அதிகமான சொத்துக்களை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் வரியைக் குறைக்க ஏன் இவ்வளவு அவசரமும், ஆத்திரமும் படுகின்றார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. இவர்களுக்கு எவ்வளவு வரி போட்டாலும் வரி கொடுத்தது போக இவர்களுக்கு சாப்பாட்டிற்கு இடம் இருந்தே தீரும். ஆனால் இவர்களது குடிக்கும், கூத்திக்கும், தர்பாருக்கும், மோட்டாருக்கும், கல்யாண கருமாதிகளில் பார்ப்பன பாகவதர்களுக்கு அழுவதற்கும் வேண்டு மானால் பணம் காசு குறையலாம். இதைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும். இந்திய தொழிலை காப்பாற்ற என்ற சாக்கின்பேரில் அன்னிய நாட்டு சாமான்கள் மீது போடப்படும் வரி கொடுமை! கொடுமை!! முக்காலும் கொடுமை!!! இந்திய கைத்தொழிலை காப்பாற்றுவதாக வைத்துக் கொண்டாலும் அதன் கொள்ளையெல்லாம் முதலாளிமார்கள்தான் 100-க்கு 10, 20, 30, 50 வீதம் லாபம் அடைகின்றார்களே தவிர ஏழைக் கூலிக்கும், தொழிலாளிக்கும் என்ன லாபம்?

இன்னும் இதுபோன்ற பித்தலாட்ட வரி எவ்வளவு வசூலிக்கப் படுகின்றது? ஆகவே வரி குறைப்பதைப் பற்றி யோசிப்பதானால் முதலில் பெரிய சம்பளங்களைக் குறைக்க வேண்டும். பிறகு ஏழைகளை கொடுமைப் படுத்தும் வரியைக் குறைக்க வேண்டும். கடைசியாக மிராசுதாரர்களின் விஷயத்தை கவனிக்க வேண்டும். இது தான் யோக்கியமான - – செங்கோல் அரசாங்கத்தின் முறை அப்படிக்கில்லையானால் கொடுங்கோல் அரசாங்கத்தின் முறை என்று தான் சொல்லுவோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 22.01.1933)

Pin It