உயர்ந்த மலைப்பகுதியில் அதிகாலைப் பொழுதில் பனிமூட்டத்திற்கிடையில் அரைகுறையாக வருகிற சூரிய வெளிச்சத்தில் நடைபயிலும்போது ஏற்படுகிற இதமான அனுபவத்தைப் போன்றது எனக்கு எந்தப் புத்தகத் திருவிழாவிற்குள் நுழையும்போதும் ஏற்படுகின்ற பரவசம். ஓடிக்கொண்டிருக்கின்ற ஓடையில் கால் நுனியை மட்டும் நனைத்து அதன் குளிர்ச்சியை உணர்வதுபோல ஏற்படுகிற கிளர்ச்சியை எப்போதும் ஏற்படுத்துவது அத்திருவிழாவின் நிகழ்ச்சிகள்.
எந்த இயக்கமும் ஏற்படுத்துகிற தாக்கம் நெடுநாட்களுக்கு மனத்தில் தங்கி இருக்கும். அது படிகிற ஒற்றடை அல்ல, கூரையின் மேலே பதிக்கின்ற ஓடு. அறியாமையால் தண்ணீர் உள்ளே ஒழுகாமல் இருக்க நம்மை அறிவைக்கொண்டு பாதுகாக்கும் அமைப்பே தொடர்ந்து மக்களிடம் பேராதரவு பெற்று ஆலமரம்போல கிளைகளை விட்டு பரவி அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும். அப்படிப்பட்ட இயக்கமாக இருப்பதே மக்கள் சிந்தனைப் பேரவை.
தமிழ்நாட்டின் பேச்சாளர்களை அல்ல - தலைசிறந்த சிந்தனையாளர்களை - ஒருங்கிணைத்து நடத்துகின்ற இயக்கம் அது. வாசிப்பை அங்குலம் அங்குலமாக அடர்த்தியாக்கும் முயற்சியே அங்கு அரங்கேறுகிறது.ஈரோடு புத்தகக் கண்காட்சியில் உரையாற்றுவது என்பது பேரனுபவம். எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் அமர்ந்திருக்க மொத்த அரங்கமும் ஊசி விழுந்தாலும் ஓசை கேட்கும் அளவிற்குப் பேச்சை அவதானிக்கும் நுட்பம் வேறெங்கும் இல்லாத விசித்திரம். நாற்காலிகள் நிரம்பி வழிய ஓரங்களில் நின்று ஒவ்வொரு சொல்லையும் அவர்கள் உள்வாங்கும் விதம் அத்தனை அழகு. வீணான இரைச்சலோ, நடுவில் எழுந்து போகும் நாகரிகமற்ற தன்மையோ, கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருக்கும் கவனக்குறைவோ இல்லாத ராணுவக் கட்டுப்பாட்டைப் போன்ற தன்னிச்சையான எழுச்சி அது.
பார்வையாளர்களை அப்படிச் சுவையான சொற்பொழிவுகளுக்குப் பழக்கி வைத்திருக்கின்ற பெரும் பயிற்சியை நிகழ்த்தியிருப்பவர் தோழர் ஸ்டாலின் குணசேகரன். பார்த்துப் பார்த்து தலைப்புகள் தந்து வந்திருக்கும் அனைவருக்கும் இன்னும் வாசிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்படும் வகையில் தரம் மிகுந்த படிப்பாளிகளை வரவழைத்து நடத்தும் புத்தக விழாவைத் தவமாக மாற்றும் கர்ம யோகி அவர். ஈரோடு புத்தக விழாவை அத்தனை பதிப்பாளர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். அப்போதுதான் நிறைய நூல்களை வெளியிடுவார்கள். நூற்றுக் கணக்கான நூல்கள் அங்கே தவழ ஆரம்பிக்கும்.
பதிப்பாளர்களே முன்னின்று நடத்தும் சென்னைப் புத்தகத் திருவிழாவிற்குப் பிறகு தனி மனிதர் ஒருவரால் நடத்தப்படுகிற புத்தகத் திருவிழா ஈரோட்டில்தான் என்பது அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. இன்று மாவட்டங்கள்தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடப்பதையும், அனைவரும் புத்தகங்களை வாங்கிப் பயனடைய வாய்ப்புகள் அளிக்கப்பட்டிருப்பதையும் காணும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. தோழர் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் நல்ல படிப்பாளி. அவர் எந்தச் செயலைச் செய்தாலும் விரிவும் ஆழமும் தேடி கடுமையாக உழைப்பவர் என்பதற்கு அவர் கொண்டு வந்த ‘விடுதலை வேள்வியில் தமிழகம்' என்கின்ற நூலே சாட்சி. அந்த நூலை உருவாக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளும் பயணங்களும் அபரிமிதமானவை.
விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களையும், அவர்களோடு தொடர்புடையவர்களையும் சந்திக்க நெடும் பயணங்கள் மேற்கொண்டு சிறிதும் அயர்ச்சியடையாமல் தகவல்களைத் திரட்டி மிகப் பெரிய பெட்டகமாக இரண்டு தொகுப்புகளை அவர் கொண்டு வந்தார். தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்து இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட மாமனிதர்களைப் பற்றி அவர் சொற்பொழிவாற்றினால் நம் விழிகளிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.
தோழர் ஸ்டாலின் குணசேகரன் நல்ல சொற்பொழிவாளர். உரத்த குரலில் ஏற்ற இறக்கங்களுடன் பல மணி நேரம் பேசுகின்ற வல்லமை கொண்டவர். வலது காலைச் சற்று சொடக்கிக்கொண்டு எடுத்த தலைப்பில் அனைத்து ஆதாரங்களையும் முன்வைத்துப் பேசுபவர். அவருடைய உரையில் பாரதியும் ஜீவாவும் தவறாமல் இடம்பெற்றிருப்பார்கள். தனிப்பட்ட முறையில் புத்தகத் திருவிழாக்களைத் தாண்டி அவரோடு உரையாடுகிற பல சந்திப்புகள் எனக்கு ஏற்பட்டிருக்கின்றன. அப்போதெல்லாம் வாசிப்பு குறித்தும், அதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் குறித்தும் அவர் விவரிக்கும்போது அவரையும் அறியாமல் அவருடைய கருவிழிகள் விரிவதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு சின்னக் குழந்தை பட்டாம்பூச்சியைப் பார்த்ததும் பரவசப்படுவதைப்போல இன்னமும் அந்த ஆர்வம் சிறிதும் குன்றாமல் அவர் அடைகாத்து வருகிறார்.
சமூக அக்கறை நிரம்பிய மனிதர் அவர். நாட்டு நலன்களைப் பற்றியும், தமிழின் முக்கியத்துவம் பற்றியும் சிந்தித்துச் செயலாற்றுபவர். அவர் பேசும்போது ஒரு சொல்கூட தனிப்பட்ட உரையாடல்களிலும் தக்கையாக வந்து விழுந்ததில்லை. எப்போதுமே கொள்கை, கோட்பாடு, எதிர்காலத் திட்டம் என்று மட்டுமே அவர் யோசிப்பார். எப்படியாவது ஈரோடு மாவட்டம் முழுவதும் இருக்கின்ற அத்தனை இல்லங்களிலும் ஒரு நூலகத்தை ஏற்படுத்திவிட முடியாதா என்ற ஏக்கம் அவர் கண்களில் உண்டு. வெற்றிடத்திலிருந்து ஒன்றை உருவாக்குவது மிகவும் கடினம். தனி மனிதராக அவர் நிகழ்த்தி வரும் சாதனைதான் புத்தகத் திருவிழாவும், வாசிப்பை ஊக்குவிக்க அவர் எடுக்கும் இமாலய முயற்சிகளும். வெறுமனே புத்தகக் கண்காட்சியை நடத்தி அவர் ஓய்ந்து விடுவதில்லை. மாணவர்களுக்கு உண்டியல் அளிப்பது, அவர்கள் நூல்கள் வாங்க ஒருங்கிணைப்பது, ஈரோடு மாநகரின் தொண்டுள்ளம் படைத்தவர்களின் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது என்று எந்த இடத்திலும் பிசகில்லாமல் அவர் செய்கின்ற அரும்பணி மகத்தானது. அவ்வாறு அவர் சிறப்பாகச் செயல்படுவதற்கு முதுகெலும்பாய் இருப்பது அவர் கட்டமைத்த இளைஞர்களையும் மாணவர்களையும் கொண்ட மக்கள் சிந்தனைப் பேரவை என்கின்ற துடிப்பான அமைப்பு. அதிலிருப்பவர்கள் அத்தனை பணிகளையும் புன்முறுவலோடு செய்வதைப் பார்க்கிறபோது நமக்கு இளைஞர் சமுதாயத்தின் மீது மதிப்பும் நம்பிக்கையும் ஏற்படுகிறது. ஈரோடு புத்தகத் திருவிழாவில் நான் பலமுறை கலந்துகொண்டிருக்கிறேன். முதன்முதலில் ‘ரெளத்திரம் பழகு’ என்கிற தலைப்பைத் தந்து பேசச் சொன்னார். அப்போதுதான் அங்கே அரங்கம் நிறைந்த சுவைஞர்களையும், அவர்கள் மிகவும் நேர்த்தியாக உரையைக் கவனிப்பதையும் கண்டேன். நல்ல கருத்துகளைக் கூறும்போது அவர்கள் கைதட்டி மகிழ்வதையும், புருவங்களை உயர்த்துவதையும், முகபாவனைகளால் அங்கீகரிப்பதையும் கண்டு மகிழ்ந்தேன்.
ஈரோடு புத்தகத் திருவிழாவில் பேசுவதைப் பெரும் பேறாக எண்ணுகிற பலர் உண்டு. வராமலிருப்பதற்கு எக்காரணமிருந்தாலும் அதை ஒருக்களித்து வைத்துவிட்டு அவர்கள் உரை நிகழ்த்துவார்கள். வணிக முறையில் பேசுகிறவர்களையும், துணுக்குத் தோரணங்களைக் கட்டித் தொங்க விடுகிறவர்களையும் தோழர் ஒருபோதும் அங்கீகரித்ததில்லை. மக்களின் மனாதிபதியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் உரையாற்றிய பிரம்மாண்டமான நிகழ்வை ஏற்பாடு செய்தவர் அவர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அரசியலற்ற ஒரு நிகழ்வுக்குக் கூடுவார்கள் என்பதை நிரூபித்த சரித்திரச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி அது. அதை ஏற்பாடு செய்வதற்குத் தலையாய தலைமைப் பண்புகளும் பேராற்றலும் தேவைப்படுகின்றன.
தேர்ந்தெடுத்த தலைப்புகளைத் தந்து பேச்சாளர்களுக்கே தெரியாமல் அவர்களிடம் மறைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் அவருக்கு உண்டு. ஒவ்வொரு முறையும் வித்தியாசமான தலைப்புகளில் நான் அங்கு பேசியிருக்கிறேன். செயற்கை நுண்ணறிவைப் பற்றிப் பேசினால்கூட கேட்பதற்கு ஆயத்தமாக இருக்கிற மக்கள் வெள்ளம் அது. கும்பல் அல்ல, குறிக்கோளோடு கூடுகிற கூட்டம் அது. ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஆற்றப்பட்ட பல உரைகள் நூல்களாக வெளிவந்திருக்கின்றன. பெரியவர் திரு தா. பாண்டியன் இந்தியச் சிற்பக் கலையைப் பற்றி ஆற்றிய உரை ‘கல்லும் கதை சொல்லும்' என்ற நூலாக வெளிவந்துள்ளது. மிகச் சிறந்த உரை அது. அதைப்போலவே நான் ஆற்றிய ஐந்து உரைகளும் தொகுக்கப்பட்டு ‘நாம் ஏன் அடிமையானோம்' என்கிற தலைப்பில் வெளிவந்துள்ளது. உரைகளைப் பதிவு செய்வதும், அவை காற்றோடு பேரோசையாகக் கலந்து விடாமல் மக்களின் மனத்தில் பசை தடவிய மாதிரி பதிய வைப்பதும் பேரவையின் திருவிழாவிற்குப் பின்னான பணிகள். அனைவருக்கும் கலந்து கொண்டதற்கு நன்றியையும், ஒலிப்பேழைகளையும் அனுப்பி பண்பாடோடு நடந்துகொள்ளும் பக்குவம் நிறைந்தவர் அவர்.
மக்கள் சிந்தனைப் பேரவை பார்வையாளர்களைப் பழக்கி வைத்திருப்பதற்கு ஓர் உதாரணம்தான் அவர்கள் அமைதியாக நான் ஆற்றிய ‘வன நாயகம்' என்கின்ற உரை. நிறைய அறிவியல் சார்ந்த செய்திகளையும் உள்வாங்கி ஏற்றுக்கொள்கின்ற அறிவுக் கடலாய் அவர்கள் ஆகிப்போயிருப்பதை நான் உணர முடிந்தது.
இந்தப் புத்தகத் திருவிழா ஈரோடிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவலான வாசிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைத்து அவர்களிடம் தலைமைப் பண்புகள், வாசிப்பின் முக்கியத்துவம் போன்ற எண்ணற்ற நடவடிக்கைகளை அது எடுத்து வருகிறது. பேரவையிலிருக்கிற அனைவரும் சீருடையோடு களத்தில் ஆற்றுகிற பணிகள் அர்ப்பணிப்பின் அடையாளங்கள். இந்த வாசிப்பு சிறிது சிறிதாகக் கசிந்து மனநிலையிலும், அறிவு நிலையிலும் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை நம்மால் உணர முடிகிறது. ஏற்கெனவே பண்பும் பரிவும் நிறைந்த மாவட்டம் ஈரோடு. அங்கிருப்பவர்கள் மரியாதையுடன் சிறுவர்களையும் அணுகும் பக்குவம் உள்ளவர்கள். அவர்களை உலகம் குறித்த பார்வைக்கு அழைத்துச் செல்லும் பெருமுயற்சியே இந்த நடவடிக்கைகள் அனைத்தும்.
பாரதியின் மீது அசாத்திய மரியாதையும் அன்பும் கொண்ட காரணத்தால் 25 ஆண்டுகளாக பெருந்தொற்றுக் காலத்தில்கூட தொய்வு ஏற்படாமல் பாரதி விழாவை பேரவை நடத்தியிருக்கிறது. மாணவர்கள் தேர்வில் பெறுகிற வெற்றியையும் பரிசீலித்துக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது. உடல்நலம் சற்றுக் குன்றியிருந்தபோதும் அதைப் பற்றி பொருட்படுத்தாமல் 2023-ஆம் ஆண்டில் திருவிழா சிறப்பாக நடக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார் திரு குணசேகரன். அதற்காகப் பல முறை தொலைபேசியிலே தொடர்புகொண்டு பேசினார். புத்தகத் திருவிழா சிறப்பான வரவேற்பைப் பெற்றதிலேயே அவர் பாதி குணமாகி விட்டார். அவர் உயிர்த்துடிப்பு புத்தகத் திருவிழாவிலும், அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளிலுமே மையமிட்டிருப்பதைக் காண முடிந்தது. புத்தகத் திருவிழாவில் ஒவ்வோர் உரை முடிந்தபோதும் ஏற்பட்ட மனமகிழ்ச்சியைச் சொற்களால் சொல்லிவிட முடியாது. அங்கே வருகிறவர்கள் வேடிக்கை பார்ப்பவர்கள் அல்லர். அத்தனை பேருமே புத்தகங்களைப் பயின்றவர்கள். கை நிறைய நூல்களை வாங்கிச் செல்பவர்கள். ஆரவாரமின்றி அவர்கள் அந்தத் திருவிழாவை ஆண்டுதோறும் வெற்றியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். மக்களே முன்னின்று நடத்தும்போதுதான் எந்த நிகழ்வும் முழுமை பெறும் என்பதற்கு ஈரோடு ஓர் அத்தாட்சி. சில மாவட்டங்களில் அத்தகைய அமைப்புகள் தோன்றுவதும், அவர்கள் புத்தகத் திருவிழாக்களில் பங்குதாரர்களாக இருப்பதும், ஆண்டுதோறும் மாணவர்களோடும் இளைஞர்களோடும் தொடர்ந்த உரையாடலில் இருப்பதும் அவசியம். அப்போதுதான் வாசிப்பில் இருக்கிற இடைவெளிகளைக் கண்டு உணர்ந்து நிரப்ப முடியும்.
ஈரோடு புத்தகத் திருவிழாவைப் பொருத்தவரை பெருங்கூட்டம் வருவதற்கு இந்த இடைவெளிகளெல்லாம் நிரப்பப்பட்டிருப்பதே காரணம். எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஏன் வாசிக்க வேண்டும் என்பதற்கான விரிவான விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. அங்குப் பயிற்றுவிக்கின்ற ஆசிரியர்கள் நூல்களை நேசிக்கிறார்கள். அவர்களே முன்னின்று மாணவப் பட்டாளத்தை வாசிக்க வழிநடத்துகிறார்கள். ஒவ்வொரு முறை நான் பேசி முடிந்ததும் ஓடிவந்து என்னுடைய நூல்களின் கையொப்பம் பெறுகிறவர்கள் பெரும்பாலும் ஆசிரியர்களாகவே இருக்கிறார்கள். ஓர் ஆசிரியர் வாசிப்பது ஆயிரம் மாணவர்களைச் சென்றடையும். அவர்கள் பாடத்தை நடத்தும்போது அவர்களையும் அறியாமல் அதில் சுவாரசியம் சேரும். குட்டித் தகவல்கள் குதித்து ஓடும். இவையே பள்ளியை அனைவரும் நேசிக்கும் இடமாக மாற்றும். எல்லா மாவட்டங்களிலும் இடைவெளிகளை நிரப்புவதும், வாசிப்பை இயக்கமாக்குவதும், மக்கள் சிந்தனைப் பேரவை போன்ற அமைப்பை உருவாக்குவதும் இன்றையத் தேவைகள்.
- வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.