இலங்கை அழகிய மாங்கனி வடிவிலான தீவு. இது துயரங்களின் இருப்பிடமாய் மாறிப் போனது. இலங்கைக்கு இன்னொரு பெயர்தான் ஈழம். அந்த ஈழத்தில் வாழ்கின்ற மக்களினங்கள் சிங்களவர், தமிழர் என்ற இரு இனங்களாக இருப்பினும் தமிழ்ப் பேசும் மக்கள் மூன்று பிரிவினராய் இருப்பதைக் காணலாம்.

  1. சிங்களவர் - 74.2%
  2. இலங்கைப் பூர்வ குடித் தமிழர் - 12.6%
  3. இஸ்லாமியர் - 7.7%
  4. மலையகத் தமிழர் - 5.5%

                    - இலங்கை குடிசனக் கணக்கெடுப்பு

மலையகத் தமிழர்

       ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட கோப்பி, தேயிலை, இரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக, தமிழ்நாட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட இலட்சக்கணக்கான கூலித் தொழிலாளர்களும், அவர்களுடன் சென்ற வியாபாரிகள் முதலியோருமே ‘மலையகத் தமிழர்’ என்று அழைக்கப் படுகின்றனர்.

ceylon tea plantationவரலாறு

       இலங்கையின் பொருளாதாரத்தை வணிகமய - ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்றியது கோல்புறூக் - சார்லஸ் கமரன் பரிந்துரைகளால்தான். அசோகா பண்டாரகே என்ற சிங்கள அரசியல் வரலாற்று ஆய்வாளர் கோல்புறூக் - சார்லஸ் கமரன் பரிந்துரைகளே இலங்கையின் பொருளாதாரத்தை நவீன மயமாக்கியது என்கிறார். இலங்கையின் அரசியல், நிர்வாகம், நீதி, வருவாய், அரசு நிறுவனங்கள் முதலியவற்றில் சீர்திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகளைத் தருவதற்காக ஆங்கிலேயர்களான கோல்புறூக், சார்லஸ் கமரன் ஆகியோரை 1829 இல் பிரித்தானிய அரசு இலங்கைக்கு அனுப்பியது. இவர்கள் 1830 இல் தங்கள் பரிந்துரைகளை பிரித்தானிய அரசுக்கு அளித்தனர்.

       இலங்கையின் நிலங்களை தனியாருக்குக் கொடுத்து தோட்டப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள வேண்டும் என்பது கோல்புறூக்கின் பரிந்துரையாகும். இதன் அடிப்படையிலேயே இலங்கையில் கோப்பிப் பயிர்செய்கை ஆரம்பிக்கப்பட்டது.

       இதற்காக 12ம் இலக்க அரசு காணிச் சுவீகரிப்புச் சட்டம் 1840 இல் கொண்டு வரப்பட்டது. 1840 இல் ஒரே ஆண்டில் 13,275 ஏக்கர் காணிகள் பிரித்தானிய அரசின் உயர் அதிகாரிகளுக்கு, ஒரு ஏக்கர் ஐந்து சில்லிங்குகள் என்ற விலையில் கொடுக்கப்பட்டது. பின்னர் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் இவ்வாறு பிரிட்டனைச் சேர்ந்த தனியாருக்குக் கொடுக்கப்பட்டன.

தோட்டப் பயிர்ச் செய்கை

       இலங்கைத் தீவின் முற்று முழுதான ஆட்சியதிகாரம் 1815ல் கண்டி இராச்சியத்தின் மன்னன் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனைத் தோற்கடித்தது முதல் ஆங்கிலேயரின் கைகளுக்குச் சென்றது. இதன் பின்னர் இலங்கையின் மலைப் பகுதிகளின் அடர்ந்த காடுகளை அழித்து, கரும்பு, பருத்தி, அவுரி போன்ற பணப்பயிர்களை விளைவிக்கத் தொடங்கிய போதும், இதனால் ஆங்கிலேயருக்கு பெருமளவில் வருமானம் கிடைக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக 1823 ஆம் ஆண்டில் கண்டி மாவட்டத்தின் கம்பளை அருகில் உள்ள சின்னப்பிட்டி என்ற இடத்தில் 150 ஏக்கர் அளவிலான கோப்பித் (Coffee) தோட்டமொன்றை ஹென்றி பேர்ட் (Henrdy Bird) மற்றும் அவரது சகோதரர் ஜோர்ஜ்பேட் (Jeorge Bird) ஆகியோர் உருவாக்கினர். அப்போது இலங்கையின் ஆங்கில ஆளுநராக இருந்த எட்வர்ட் பாண்ஸ் (Edward Barnes) இவர்களுக்கு உதவியாக இருந்தார்.

       சுமார் பத்து வருடங்களில் இலட்சக்கணக்கான ஏக்கர்களாக கோப்பித் தோட்டங்கள் பெருகின. இந்தத் தோட்டங்களுக்கு கூலி வேலைகளுக்கு உள்நாட்டு சிங்களவர் வர மறுத்ததால், தமிழ்நாட்டிலிருந்து (இந்தியாவிலிருந்து) கூலித் தொழிலாளர்களைக் கொண்டு வந்தனர்.

எதிர்ப்பு

       இலங்கையில் கோப்பி பயிர்ச் செய்கை செய்வதையும் இந்தியத் தொழிலாளர்களை அழைத்து வருவதையும் எதிர்த்து 1848 இல் வீரபுரன்அப்பு என்ற சிங்களவர் தலைமையில் ஒரு புரட்சி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 06.07.1848 இல் வீரபுரன்அப்பு ஆங்கிலேய அரசின் முகவர் சி.ஆர்.புல்லர் (C.R.BULLER) என்பவரிடம் கோரிக்கை விண்ணப்பம் ஒன்றை அளித்தார். இது மலையக பெருந்தோட்ட வரலாற்றில் ஒரு முக்கிய சம்பவம் ஆகும்.

வறுமையும், சாதிக் கொடுமையும்

       வறுமையும், சாதிக் கொடுமையும் உச்சத்தில் இருந்த காரணத்தால் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் இருந்து லட்சக்கணக்கான தமிழ் மக்கள் வாழ்வு தேடி இலங்கை, பர்மா, வியட்நாம், பிஜு தீவுகள், மலேசியா, முதலிய நாடுகளுக்குச் சென்றனர்.

       தென்னிந்தியாவில் (தமிழ்நாடு) முகவர் அலுவலகங்கள் திருச்சிராப்பள்ளி, துறையூர், முசிறி, நாமக்கல், ஆத்தூர், சேலம், மதுரை, திருநெல்வேலி, வேலூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, தஞ்சாவூர், விழுப்புரம், அரக்கோணம் முதலிய இடங்களில் ஆரம்பித்தனர். இவை “ஏஜென்சி ஆபிஸ்” என்று அழைக்கப்பட்டன. இந்த ஏஜென்சி ஆபிஸ்கள் மூலம் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு ஏழை, எளிய மக்களை ஆசைகாட்டி, கவர்ந்து, அவர்களைக் கூலிகளாக இலங்கைக்கு அழைத்துச் சென்றனர்.

       இந்தியாவில் இருந்த சாதிக் கொடுமைகளும், ஏழ்மையும் மக்கள் கூலிகளாகப் போகக் காரனங்களாய் இருந்தன. சென்னை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏழைத் தமிழ்த் தொழிலாளர்கள் கங்காணிகள் மூலம் சேகரிக்கப்பட்டனர். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அமைக்கப்பட்டிருந்த நிலையத்துக்கு பல நூறு கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்தனர். இங்கிருந்து படகுகள் மூலம் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு நூறு பேர் செல்லக் கூடிய படகுகளில் 200 பேர் ஏற்றப்பட்டனர்.

       கர்னல் ஹென்றி ஸ்டீல் ஓல்கொட் (Henrdy Steel Olcot) கூலிகள் டின்னில் அடைக்கப்பட்ட புழுக்களைப் போல் கொண்டு வரப்பட்டனர் என்று கூறியது குறிப்பிடத் தக்கது.

       தலைமன்னார் கரையில் இறங்கிய பின்னர் அங்குள்ள முகாம் ஒன்றில் பல நாட்கள் தங்க வைக்கப்பட்டனர். அங்கிருந்து 131 மைல்கள் கால்நடையாகவே மாத்தளை வரை அழைத்து வரப்பட்டனர். இவ்வாறு அடர்ந்த காட்டில் பாதைகளற்று மரங்களையும் முட்புதர்களையும் தாண்டி நடந்தனர். போதிய உணவோ, தண்ணீரோ, மருந்துகளோ கிடைக்கவில்லை. நோய்வாய்ப்பட்டவர்களை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றனர். அவர்கள் தனியே கிடந்து வாடி, உணவின்றி, நீரின்றி மடிந்தனர்.

       அட்டைக்கடி, கொசுக்கடி, தேள்கடி, பாம்புக்கடியுடன், கொடிய காட்டு விலங்குகளுக்கு இரையாகினர். காலரா, மலேரியா, அம்மை போன்ற கொடிய நோய்களால் மடிந்தனர். கொண்டு வரப்பட்ட தமிழ்க் கூலித் தொழிலாளர்களில் பாதிப் பேர் மடிந்தனர். இதனால் தேவையை விட இருமடங்கு எண்ணிக்கையில் தொழிலாளர்கள் கொண்டு செல்லப்பட்டனர். மழையிலும், வெயிலிலும் கடுங்குளிரிலும் எவ்விதப் பாதுகாப்புமின்றி மடிந்தனர்.

       தோட்டத் தொழிலாளர்களாய் இருந்த ஆண்கள் அனைவரையும் கருப்பன் அல்லது ராமசாமி என்றும், பெண்கள் அனைவரையும் மீனாட்சி என்றுமே ஆங்கிலேயர்கள் அழைத்தனர். அவர்களுக்கு வேறு பெயர்கள் தெரிந்திருக்கவில்லை.

கங்காணிகள்

              தோட்டத் துரைமார்களின் கடுமையான அடக்குமுறையும், கங்காணிகளின் துண்டு முறையும் தோட்டங்களை விட்டு ஓடி விடாதிருக்க பற்றுச் சீட்டு முறையும் நடைமுறைப் படுத்தப்பட்டன.

       கங்காணிகளின் கொடுமைகளோ சொல்லில் வடிக்க முடியாதவை. பயணத்தின் போதும் தோட்டங்களில் வேலை செய்யும் போதும் அடி, உதை, பட்டினி, கொடிய நோய்கள் எனப்பட்ட துன்பங்கள் ஏராளம். ‘லயம்’ எனும் வரிசையாகக் கட்டப்பட்ட ஒற்றை அறைகளில் தான் குடும்பங்கள் வாழ்ந்தன. மாடாய் உழைத்த பணத்தை கடன் என்ற பெயரில் பொய்க் கணக்கு எழுதி கங்காணிகள் கொள்ளையடித்து விடுவர். எஞ்சிய சொற்பத் தொகைதான் அவர்களுக்குக் கிடைத்தது.

       இந்தக் கொடுமைகள் தங்காது ஊருக்குத் திரும்பிச் செல்லவும் அனுமதியில்லை. ஏழை உழைப்பாளிப் பெண்களை கங்காணிகளும் துரைமார்களும் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்குவது வழக்கமாக இருந்தது. அடி, பூட்ஸ்கால் உதை, பிரம்படி, சாட்டையடி, மலம் திண்ண வைத்தல், பாலியல் கொடுமை, பட்டினி, கொடிய நோய்கள் என்று மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் பட்டத் துயரங்கள் வார்த்தைகளால் வடிக்க இயலாதவை.

ஆங்கிலேயரின் ஆதாரங்கள்

       இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் அவலங்களை, அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பல ஆங்கிலேய ஆய்வாளர்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

-      வில்லியம் நைட்டன் (Willam Knight on)

-      சி.ஆர். ரிக் (C.R.Rigg)

-      பிடி. மில்லி (P.D. Millie)

-      எட்வர்ட் சுலிவன் (Edward Sulivan)

-      ஜான் காப்பர் (Jhon Capper)

       பயணத்திலும், தோட்டங்களிலும் 1823 முதல் 1893 வரை 7 ஆண்டுகளில் சுமார் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் பேர் மடிந்து தங்கள் உயிரையும், உடலையும் இலங்கையின் தோட்ட மண்ணுக்கு இரையாக்கினர். டொனோவன் மொல்ட்ரிச் (Donovan Moldrich) என்பவர் எழுதியுள்ள பிட்டர் பெர்ரி பொண்டேஜ் என்ற நூலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

       ஏ.எம். பெர்கியூசன் (A.M. Ferquson) என்பவரின் பர்கியூசன் கைநூல் (Ferquson Directory) என்ற தகவல் களஞ்சிய நூலில், 1857 ஆம் ஆண்டு சுமார் 10 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் வந்தனர் என்றும், இவர்களில் இரண்டரை லட்சம் பேர் மரணமடைந்து விட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முதல் ரயில் பயணம்

       கே. ஹெர்கியூலிஸ் ரொபின்சன் (Sir Hercules Robinson) 1865 வரை இலங்கையின் ஆளுநராக இருந்த போது, மன்னாரில் இருந்து கால் நடையாக வந்த கூலித் தொழிலாளர்களை கொழும்பு வரை அழைத்து வர நீராவி இயந்திரப் படகுகளை ஏற்பாடு செய்த போதும், இதனை தொழிலாளர்கள் பெருமளவில் பயன்படுத்தாமல் கால் நடையாகவே வந்தனர்.

       இதனைத் தொடர்ந்து கொழும்பில் இருந்து கண்டி வரை 01-08-1867 இல் முதன் முதலாக ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது. இதனையும் அதிக அளவில் தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஏனெனில் இதற்கு சிறிய அளவு கட்டணமாக பணம் செலவிட அவர்கள் விரும்பவில்லை.

ஆதிலட்சுமி கப்பல்

       மன்னாரில் இருந்து கொழும்பு வரை படகு சேவை நடத்தப்பட்ட காலகட்டத்தில் பல படகுகள் கடலில் மூழ்கி ஏராளமான தொழிலாளர்கள் உயிரிழந்தனர். குறிப்பாக ஆதிலட்சுமி (Audy Letchumey) என்ற சிறுகப்பல் 05.02.1864 அன்று மன்னார் வங்காலையில் இருந்து 150 டன் பொருட்களுடன் தொழிலாளர்களையும் ஏற்றிக் கொண்டு கொழும்பு வரும் வழியில் கடலில் மூழ்கியது. இதில் பயணித்த 120 தொழிலாளர்களில் 14 பேர் மட்டுமே உயிர் பிழைத்ததாக டைம்ஸ் ஆப் சிலோன் பத்திரிகைச் செய்தி வெளியிட்டது. இதுபோல அதே ஆண்டு சாரா ஆர்மி டேஜ் என்ற கப்பல் சிலாபத்துக்கு அருகில் பேரலையில் மோதி விபத்துக்கு உள்ளானதில் 60 கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இத்தகைய கப்பல்கள் மூழ்கிய செய்திகள் யார் கண்ணிலும் படாமல் போயின என்று ஆள்பதி ஹென்றி வார்டின் தன் சுய சரிதையில் எழுதி உள்ளார்.

தோட்டப் பாடசாலைகள்

       பொது அறிவு (Public Instruction Commission) என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இதன் பின்னர் 1833 இல் பாடசாலை ஆணையம் (School Commission) ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இது ஆங்கிலிக்கன் திருச்சபையின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. ஜே.எஸ். லோரி (J.S. Laurie) பொது அறிவு திணைக்களத்தின் ஆணையராக இருந்து தோட்டப் பாடசாலைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்ற அறிக்கையை ஆங்கில அரசின் செயலாளருக்கு அளித்தார். இதன் பின்னர் சிறு சிறு தோட்டப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. 1904 இல் 179 பாடசாலைகள் தோட்ட லயன் காம்பராக்களிலும் 120 பாடசாலைகள் சிறு கட்டிடங்களிலும் செயல்பட்டன. குழந்தைகள் தேயிலைச் செடிகளை அழித்து விடக்கூடாது என்பதற்காகவும், தாய்மார்கள் வேலைக்குச் செல்வது தடைபடக் கூடாது என்பதற்காகவுமே இப்பாடசாலைகள் ஆரம்பிக்கப் பட்டன. இத்தோட்டப் பாடசாலைகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளோ, பயிற்சி பெற்ற ஆசிரியர்களோ இருக்கவில்லை. முறையான கல்வியும் அளிக்கப்படவில்லை.

மருத்துவம்

       தோட்டங்களில் சிறிய மருத்துவ மையங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றில் பயிற்சி பெற்ற மருத்துவர்களோ செவிலியர்களோ பணிக்கு அமர்த்தப்படவில்லை. பயிற்சி பெறாதவர்களே மருந்துகளைக் கொடுத்தனர். ஆரம்பக் காலங்களில் தோட்டத் துரைமார்களே மருந்து கொடுத்து வந்தனர். இந்த மையங்கள் தோட்ட சிறு மருத்துவமனைகள் என்ற நிலையில் இருந்தன. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு மயில்வாகனம் திலகராஜா அவர்களின் முயற்சியால் 2019 இல் தான் இலங்கை அரசின் தேசிய சுகாதாரத் துறையுடன் தோட்டப்புற சிறு மருத்துவமனைகள் இணைக்கப்பட்டன.

கிறிஸ்தவக் கூலி மிஷன்

       அருட்திரு செப்டிமஸ் ஹோப்ஸ் (Rev. Septimus Hobbs) என்பவர் தலைமையில் கிறிஸ்தவ கூலி மிஷன் என்ற அமைப்பு செயல்பட்டது. இதன் மூலம் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் கிறித்தவப் பாதிரியார்களும் நிறுவனங்களுமே இம்மக்களுக்கு எழுத்தறிவைப் போதித்து வந்தனர். சில கல்வி நிறுவனங்களையும் ஆரம்பித்து மலையகத் தோட்டத் தொழிலாளர் மத்தியில் இருந்து சில படித்தவர்களையும் உருவாக்கினர்.

தடுப்பு முகாம்

       தலைமன்னார் கரையில் இறக்கப்படும் தமிழ்த் தொழிலாளர்கள் குரு நாகல் வழியாக கண்டி வரை கால்நடையாகவே கொண்டு வரப்பட்டனர். இவ்வாறு வரும்போது மாத்தளையில் தடுப்பு முகாம் (Quarantine Camp) ஒன்றில் ஒரு வார காலம் தங்க வைக்கப்பட்டு தொற்று நோய் பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

       இந்த இடத்தில் அந்த தொழிலாளர்கள் மரத்தடியில் 1824 இல் அமைத்த சிறிய கோவில் இன்று மாத்தளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானமாக உள்ளது. பழைய வில்வ மரத்தின் பட்டுப் போன அடிமரம் இன்று வரை மலையகத் தமிழர்களின் துயரம் தோய்ந்த வரலாற்றுச் சின்னமாக பாதுகாக்கப்படுகிறது.

       கோப்பிப் பயிர் ஹெமிலியா வெஸ்டாரிக்ஸ் (Hemilia Vestarix) என்ற நோயால் அழிந்து போனதன் விளைவாக 1893 இல் தேயிலை அறிமுகப்படுத்தப்பட்டது.

தோட்டப்புற மலையக மக்கள் தொகை

       இலங்கையில் 1911 ஆம் ஆண்டு முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கென இலங்கை குடிசன மதிப்பீ்ட்டுக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக சேர். பொன். இராமநாதன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் இலங்கைத் தமிழர் - இந்தியத் தமிழர் என்ற பிரிவுகளை இலங்கை குடிசன மதிப்பீட்டு ஆவணங்களில் ஏற்படுத்தினார். இன்று வரை இந்தியத் தமிழர் - இலங்கைத் தமிழர் என்ற வேறுபாடு இலங்கையில் நிலவுவதற்கு இதுவே தொடக்கப் புள்ளியாக அமைந்து விட்டது.

1871   -      1,23,654

1881   -      2,06,495

1891   -      2,62,262

1901   -      4,41,601

1911   -      5,13,167

1921   -      5,68,850

1931   -      7,90,376

1946   -      8,51,359

1953   -      10,08,653

1963   -      11,48,470

1968   -      12,34,284

ஆதாரம் - மலையகமும் மறுவாழ்வும், அங்குசம் பதிப்பகம், திருச்சி பக்கம் 82.

வாக்குரிமை

       உலகை உலுக்கிய மாபெரும் சோவியத் சோசலிசப் புரட்சி 1917 இல் ஏற்பட்டதன் விளைவாக இலங்கையிலும் தொழிலாளர் வர்க்கம் விழிப்படைந்தது. அடக்கு முறைகளைத் தளர்த்த வேண்டிய கட்டாயம் முதலாளிகளுக்கு ஏற்பட்டது குறிப்பிடத் தக்கது.

       உலக அளவிலும் நாடளவிலும் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் விளைவாகவும் தொழிலாளர்களின் எழுச்சியின் விளைவாகவும் 1924 ஆம் ஆண்டு மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் வாக்குரிமையைப் பெற முடிந்தது. இக்காலகட்டத்தில் மலையக மக்கள் தொகை பின்வருமாறு இருந்தது.

மொத்த இந்தியத் தமிழர்கள்        - 78, 6000

மலையகத்தில் வாழ்ந்தது          - 61,0000

வாக்குரிமை பெற்றோர்            - 12901

       இதன் அடிப்படையில் 27/01/1925 இல் நடைபெற்ற தேர்தலில் மலையகத்தில் இருந்து ஐ.எக்ஸ். பெரேரா, மொசட்சுல்தான் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றனர். இதற்கடுத்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஐ.எஸ். பெரோவும் கோ. நடேசய்யரும் சட்ட சபைக்குத் தெரிவு செய்யப்பட்டனர்.

       தேயிலைப் பயிர்ச் செய்கையின் பின்னர் இரப்பர் பயிரிடப்பட்டது. இதன் மூலம் ஆங்கிலேய தோட்ட முதலாளிகளுக்குக் கொள்ளை லாபம் கிடைத்தது. ஆனால், தொழிலாளர்களின் நிலையோ எருமை மாடுகளை விடவும் மோசமாகவே இருந்தது. எவ்வித அடிப்படை வசதிகளும் இருக்கவில்லை. மோசமான சுகாதார நிலை, நோய்களுக்கு மருத்துவ வசதி இல்லாத நிலையே இருந்தது. குறிப்பாக கல்வி வாய்ப்புகள் முற்றிலும் மறுக்கப் பட்டிருந்தன.

இலங்கையின் தொழிற் சங்க இயக்கம்

       இந்த மனித அவலம், அடிமை நிலை ஒரு நூற்றாண்டு காலம் நீடித்தது. 1920 இல் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. துறைமுகம், ரயில்வே, தபால் துறைகளில் ஏ.ஈ.குணசிங்க தலைமையில் தொழிற்சங்கம் இருந்தது. இந்த தொழிற்சங்க இயக்கத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த கோதண்டராமன் நடேசய்யர் என்ற கோ. நடேசய்யரும் முக்கியப் பொறுப்பு வகித்தார். ஏ.ஈ.குணசீங்காவின் இன வாதப்போக்கு காரணமாக அவரிடமிருந்து விலகிய சே. நடேசய்யர் மலையகத்தின் மையப் பகுதியான அட்டன் என்ற இடத்தில் இருந்து மலையகத் தொழிற்சங்க இயக்கத்தைத் தொடங்கினார். இவரது துணைவியார் திருமதி மீனாட்சியம்மையாரும் இணைந்து பாடுபட்டார்.

மலையகத்தில் தொழிற்சங்கம்

       கோ. நடேசய்யர் அவர்களே மலையகத் தொழிற் சங்க இயக்கத்தின் முன்னோடியாவார். இலங்கை - இந்தியத் தொழிலாளர் சம்மேளனம் 1939 இல் கோ. நடேசய்யரால் உருவாக்கப்பட்டது. தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் குறைப்பது உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்டத் துரைமார் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

முதலாவது வேலை நிறுத்தம்

       தேயிலைத் தோட்டங்கள் வளர்ச்சியடைந்து கோ. நடேசய்யரால் தோட்டத் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 17.04.1939 இல் அட்டன் அருகில் உள்ள கொட்டியகல என்ற தோட்டத்தில் முதல் தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நடைபெற்றதாக தோட்டத் துரைமார் சங்க கையேட்டில் (Planters Association Centinary Hand Book - 1954) குறிப்பிடப் பட்டுள்ளது.

       இந்தியாவிலிருந்து ஜவஹர்லால் நேரு 1940 இல் இலங்கைக்கு வருகை புரிந்தார். அவரது முயற்சியால் இலங்கையின் தலை நகரமான கொழும்பில் இயங்கி வந்த இந்திய வம்சாவளியினரின் சிறு சிறு அமைப்புகளை இணைத்து இலங்கை - இந்திய காங்கிரஸ் என்ற அரசியல் கட்சியும் தொழிற்சங்கமும் ஆரம்பிக்கப்பட்டது.

       இதற்கு முன்பே 1931இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஒரு லட்சம் மலையகத் தமிழர்கள் வாக்குரிமையைப் பெற்றிருந்தனர். இதன் விளைவாக அட்டன் தொகுதியில் திரு பெரி. சுந்தரம் போட்டியின்றி தெரிவானார் தலாவாக்கலையில் எஸ்.பி. வைத்தியலிங்கம் மாத்தளையில் எஸ்.எம். சுப்பையாவும் நுவரெலியாவில் கே.பி. இரத்தினமும் வெற்றி பெற்றனர். இதனைத் தொடர்ந்து 1947 ஆம் ஆண்டு தேர்தலில் கோ. நடேசய்யர் தோல்வி அடைந்தார். எஸ். தொண்டமான், ஆர். ராஜலிங்கம், எஸ்.பி. வைத்தியலிங்கம், பி.ராமானுஜம், சி.வி. வேலுப்பிள்ளை, எஸ்.எம்.சுப்பையா, வி.கே. வெள்ளையன் ஆகிய ஏழு பேர் வெற்றி பெற்று இலங்கைப் பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

குடியுரிமை பறிப்பு

       இலங்கை 1948 இல் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திடமிருந்து விடுதலை பெற்றது. இதே ஆண்டில் இரண்டு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இலங்கை (பிரஜா உரிமைச்) சட்டம் 1948, பாகிஸ்தானியர் வதிவிட (பிரஜா உரிமை) சட்டம் 1948 ஆகிய சட்டங்கள் மூலம் சுமார் பத்து லட்சம் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமை ஒரே நாளில் பறிக்கப்பட்டது. ஜி.ஜி. பொன்னம்பலம் என்ற வடமாகாணத் தமிழரின் ஒரே ஒரு வாக்கைப் பெரும்பான்மையாகப் பெற்றே இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்திய வம்சாவளி மலையகத் தமிழரின் குடியுரிமை பறிப்புக்கு வடமாகாணத் தமிழ்த் தலைவர் ஒருவர் காரணமாக இருந்த துரோகச் செயல் இன்னும் மலையக மக்கள் மனதில் மாறாத வடுவாக உள்ளது.

       இதன் பின்னர் இலங்கைப் பாராளுமன்றத்தில் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த எவரும் இருக்கவில்லை. இலட்சக்கணக்கான இந்திய வம்சாவளி மலையக மக்கள் இந்தியக் குடியுரிமையோ, இலங்கைக் குடியுரிமையோ இன்றி நாடற்றவர்களாய் இருந்தனர்.

சிறிமாவோ - சாஸ்திரி உடன்பாடு

       அப்போது இந்தியப் பிரதமராக இலால்பகதூர் சாஸ்திரியும் இலங்கைப் பிரதமராக இருந்த சிறுமாவோ பண்டாரநாயகவும் நடத்திய பேச்சுவார்த்தைகளின் விளைவாக 1964 அண்டு சிறிமாவோ - சாஸ்திரி உடன்பாடு ஏற்பட்டது. 1974 ஆண்டு சிறிமாவோ இந்திரா உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாடுகளின் அடிப்படையில் மலையக மக்களை குரங்குகள் பூமாலைகளைப் பிய்த்தெறிந்தது போல, உயிரற்ற பண்டங்கள் போல இரு நாடுகளும் பகிர்ந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

       இக்காலகட்டத்தில் இலங்கையில் 13,4000 பேர் ஏற்கனவே விண்ணப்பித்து இலங்கைக் குடியுரிமை பெற்றிருந்தனர். மீதமுள்ள 9,75,000 பேரில் 5,25,000 பேரை இந்தியா ஏற்றுக் கொள்வதென்று முடிவு செய்யப்பட்டது.

       இரண்டு நூற்றாண்டு காலம் இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்து அடிமைகளாய், மாடுகளைப் போல உழைத்து இலங்கையை செல்வங் கொழிக்கும் தேசமாக்கிய மக்களின் குடியுரிமையை 1948இல் இலங்கை அரசு பறித்தது. 1964 ஆண்டு உடன்பாட்டின் மூலம் உழைத்து வளப்படுத்திய தேசத்தில் இம்மக்களுக்கு உரிமையுண்டு என வலியுறுத்தி, குடியுரிமையைப் பெற்றுத் தராமல், அவர்களில் சரிபாதி பேரை இந்தியா ஏற்றுக் கொள்வது என்று முடிவு செய்ததன் மூலம் இலங்கையின் இனவாத ஆட்சியாளர்களுக்கு சாதகமாக இந்தியா நடந்து கொண்டது. இதன் மூலம் தன் மண்ணின் மைந்தர்களுக்கே இந்தியா கொடிய துரோகத்தை இழைத்தது.

விளைவுகள் என்ன?

       இலங்கையில் சிங்களவர்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மக்கள் தொகையாக இருந்தது இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களே. சிறிமா - சாஸ்திரி உடன்படிக்கையின் மூலம் 5,25,000 பேர் இந்தியாவுக்கு சட்ட ரீதியாக நாடு கடத்தப்பட்ட பின்னர் மலையகத் தமிழ் மக்களின் எண்ணிக்கை பலம் வெகுவாகக் குறைந்து, இலங்கை மலையக மக்கள் நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்டதை இந்த அட்டவணை தெளிவாக உணர்த்துகிறது.

                           1931          1981  

சிங்களவர்                 65%          74%

இலங்கைத் தமிழர்          12%          12.6%

முஸ்லிம்கள்               10%          7.7%

மலையகமக்கள்            13%          5.5%

             - மலையகமும் மறுவாழ்வும், அங்குசம் பதிப்பகம், திருச்சி.

இலங்கையில் இருந்து மலையகத் தோட்டத் தொழிலாளர்களை இந்தியாவுக்கு விரட்டியடிக்க பல நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட கொடிய இனவெறியாட்டங்களுக்கு அஞ்சி லட்சக்கணக்காணோர் இந்தியாவுக்குத் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாயகம் திரும்பியோர்

       இவ்வாறு சிறிமாவோ - சாஸ்திரி உடன்படிக்கையின் மூலம் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டு இந்தியக் கடவுச் சீட்டு, குடும்ப அட்டை ஆகியவற்றுடன் இந்தியாவுக்கு வந்த மக்களையே தாயகம் திரும்பியோர் (Repartiales) என்கிறோம்.

       தாயகம் திரும்பிய மக்களுக்கு இந்திய மத்திய அரசும் தமிழ்நாடு மாநில அரசும் முறையான மறுவாழ்வு உதவிகளை வழங்கவில்லை. தாயகம் திரும்பிய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் கொடுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடும் மறுவாழ்வு உதவித் திட்டங்களும் 1984 ஆண்டுடன் நிறுத்தப்பட்டு விட்டன. சுமார் 5,25,000 பேருக்கு மறுவாழ்வு அளிக்க இந்திய அரசு செலவு செய்த தொகை வெறும் 50 கோடி ரூபாய் மட்டுமே.

       இன்று வரை தாயகம் திரும்பிய மக்களின் அவலம் தீரவில்லை. கலவரங்களால் பாதிக்கப்பட்டு வந்த இலங்கை அகதிகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் இந்தியக் குடியுரிமை பெற்றுத் தாயகம் திரும்பிய மக்களுக்கும் உள்ள அடிப்படையான வேறுபாட்டை இதுவரை இங்குள்ள அதிகாரிகளோ, காவல் துறையினரோ, அறிவுத் துறையினரோ கூட புரிந்து கொள்ளவில்லை. இதனால் தாயகம் திரும்பிய மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

இலங்கை மலையகத்தின் இன்றைய நிலை

       இலங்கையைப் பொறுத்தவரை மலையக மக்கள் மொத்த மக்கள் தொகையில் நான்காவது இடத்திலேயே அதாவது கடைசி இடத்திலேயே உள்ளனர்.

சிங்களவர் 74.2%

இலங்கை தமிழர் 12.6%

முஸ்லிம்கள் 7.7%

மலையகத் தமிழர் 5.5%

       எனினும் 1990களில் இலங்கையில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் இலங்கைக் குடியுரிமை அளிக்கப்பட்டது. இதன் மூலம் 1948 ஆம் ஆண்டு இம்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பரிகாரம் கிடைத்தது. அனைவருக்கும் வாக்குரிமை கிடைத்ததன் விளைவாக அரசியலரங்கில் மலையகத் தமிழர்களுக்கு ஒரு முக்கியப் பங்கு கிடைத்துள்ளது என்றால் அது மிகையாகாது.

       பாராளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் பிரதேச சபைகளிலும் (உள்ளாட்சி) பல இடங்களை மலையகத் தமிழர்கள் அலங்கரித்து வருகின்றனர். இலங்கை நடுவணரசின் அமைச்சரவையிலும் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றனர்.

மலையக மக்களின் இன்றைய பிரச்சினைகள்

மலையக மக்கள் இன்றைய சூழலில் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளைப் பின்வருமாறு தொகுக்கலாம்

  1. தோட்டங்களின் அழிவு
  2. உயராத வாழ்க்கைத் தரம்
  3. வீடு வசதி
  4. உள்ளாட்சி அமைப்புகளில் இணைக்கப்படாமை
  5. தனிப் பல்கலைக்கழகம்
  6. மலையகம் - தேசிய இனம்
  1. தோட்டங்களின் அழிவு

       பெருந்தோட்டங்களை ஆங்கிலேயரிடமிருந்து கைப்பற்றி அரசுடமையாக்கியது திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையான இலங்கை அரசு. கடந்த காலங்களில் இந்தப் பெருந்தோட்டங்கள் தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் கொடுக்கப்பட்டன. சிங்களவர்களுக்கு அவை பகிர்ந்தளிக்கப்பட்டன. ஏராளமான சிறு தோட்டங்களின் உரிமையாளர்களாக சிங்களர்கள் உருவாகினர். ஆனால் இருநூறு ஆண்டுகால உழைப்பில் உருவாக்கிய தோட்டங்களில் தமிழ் மக்கள் கூலிகளாகவே இருக்கின்றனர். பெருந்தோட்டங்கள் எண்ணிக்கையில் குறைந்து வருவதால் தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் மாற்று வேலைவாய்ப்புகளைத் தேடிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

  1. உயராத வாழ்க்கைத் தரம்

       கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் தோட்டப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் பெரிதாக உயரவில்லை. மிகக் குறைந்த கூலியில் வாழ வேண்டிய அவலமே நிலவுகிறது. கல்வி, மருத்துவம், குடியிருப்பு, ஊட்டச்சத்து, சாலை முதலிய கட்டமைப்பு வசதிகள் தோட்டப்புற மக்களை சொற்ப அளவே சென்றடைந்துள்ளது.

  1. வீட்டு வசதி

       மலையக மக்களின், குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளை 'லயனம்' என்றே அழைக்கிறார்கள். ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட வரிசையான அறைகளைக் கொண்ட இவை இன்னும் இம் மக்களின் குடியிருப்புகளாக உள்ளன. லயத்தில் ரசிப்பவர்கள் என்ற பதமே ஒரு இழிவுச் சொல்லாக இலங்கையில் கருதப்படும் நிலை இருப்பதைக் காணலாம். இந்த லயன் அறைகள் கூட அவர்களுக்கு உரிமையானதல்ல. எனவே தோட்டப்புற மக்களுக்கு சொந்தமாக வீடு கட்டித் தரும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.

       தோட்டப்புற உட்கட்டமைப்புத்துறை அமைச்சராக இருந்த பழனி திகாம்பரம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா உள்ளிடட மலையகத் தலைவர்கள் மலையக மக்களின் “லயன் சாம்பரா” (சாம்பரா என்ற அறை)க்களில் இருந்து விடுதலை செய்து சொந்த வீடுகளை வாழ வேண்டும் என்ற முனைப்போடு தொடங்கப்பட்ட வீடமைப்புத் திட்டம் இந்திய அரசின் உதவியுடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது. சிறிய அளவில் என்றாலும் இது மலையக மக்கள் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயமாக உள்ளது.

  1. உள்ளாட்சி அமைப்புகள்

       இலங்கையில் உள்ளாட்சி அமைப்புகள் கிராம சபை, பிரதேச சபை (ஊராட்சி ஒன்றியம்) என்ற இரண்டு அடுக்கு அமைப்பாக உள்ளது. தோட்டங்கள் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகார வரம்புக்குள் இதுவரை வராததால் தோட்டப்புறங்களின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை பிரதேச சபைகளால் செய்து கொடுக்க இயலவில்லை. இந்நிலையை மாற்றி தோட்டப் பகுதிகளை பிரதேச சபைகளின் அதிகார வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றுள்ளது.

  1. தனிப் பல்கலைக்கழகம்

       கல்வியைப் பொறுத்த வரை இன்னும் மலையகம் வளர்ச்சி அடையாத நிலையிலேயே உள்ளது. ஆண்டு ஒன்றுக்கு சுமார் 500 பேர் மட்டுமே பட்டப்படிப்புக்கு செல்கின்றனர். எனவே மலையகத்துக்கென தனிப் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.

       மேலும், ஆசிரியர் பணி தவிர பிற அரசுப் பணிகள் பெரும்பாலும் மலையகத்தவர்களுக்கு அளிக்கப்படுவது இல்லை. எனவே தனிப் பல்கலைக்கழகமும் அரசு வேலைவாய்ப்பும் மலையகத்தின் முன்னேற்றத்திற்கு மிக மிக அவசியமானவையாகும்.

சிறுதோட்ட உடைமை

       பெருந்தோட்டங்களில் ஒரு பகுதி பிரிக்கப்பட்டு அந்த நிலங்கள் சிங்களவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏராளமான சிங்களவர்கள் சிறு தோட்ட உரிமையாளர்களாக உள்ளனர். தமிழ்த் தொழிலாளர்கள் இவர்களிடம் கூலிகளாக வேலை செய்கின்றனர். இருநூறு ஆண்டுகால வரலாற்றில் இதுவரை கூலிகளாகவே உள்ள மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு பெருந்தோட்டங்களைப் பிரித்து பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மலையகத்தில் வலுப்பெற்று வருகிறது. இதன் மூலமே மலையக மக்கள் சுயசார்புடனும் சுயமரியாதையுடனும் வாழ முடியும்.

மலையக தேசிய இனம்

       இந்தியத் தமிழர் என்று 1911 இல் குடிசன மதிப்பீட்டு ஆவணத்தில் செர். பொன். இராமநாதன் குறிப்பிட்டது முதல் மலையக மக்கள் தனித்துவமான தேசிய இனம் என்ற வரலாறு தொடங்குகிறது. இந்திய வம்சாவளி தமிழர்கள் என்ற அடையாளத்தை மறுத்து தங்களை தனி மலையக தேசிய இனமாக மலையக மக்கள் கருதுகின்றனர். இதுவே மலையகத்தின் தனித்துவமும் வளர்ச்சியும் அரசியல் பங்கேற்பும் பெறுவதற்கான அடிப்படையாகும்.

- வழக்குரைஞர் தமிழகன் MA.,B.L.,PGDJ, ஆசிரியர், தமிழ்க்காவிரி திங்களிதழ், திருச்சிராப்பள்ளி

Pin It