கனடா நாட்டுக்கு நான் சென்ற ஆறு முறைகளில், ஒரு முறை எட்மாண்டனில் உள்ள அல்பர்ட்டா பல்கலைக்கழகத்தில் நான் ஆய்வுக்காகத் தங்கியிருந்தேன். அப்பொழுது என் நண்பர் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு, அமெரிக்காவிலிருந்து ஒரு பேராசிரியர் சிறப்புக் கருத்தரங்கம் ஒன்றை நடத்துகிறார். அது ஆராய்ச்சிக்கான முறைமையியல் சார்ந்தது. முடிந்தால் தாங்களும் கலந்து கொள்ளலாம் என்றார். அந்த நிகழ்வு நடைபெறும் இடத்தைத் தெரிந்து கொண்டு அங்கே சென்று கருத்தரங்க அறையில் அமர்ந்தபோது, ஒருவர் என்னிடம் வந்து நீங்கள் பதிவு செய்து விட்டீர்களா என்று கேட்டார். இல்லை என்றேன்.

அதன் பின் என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்டுவிட்டு, நீங்கள் பங்கு பெறலாம், அதற்கான தொகையைக் கட்டத் தேவையில்லை. நீங்கள் ஒரு சிறப்புப் பிரதிநிதி, ஆனால் மாலைவரை இதில் நீங்கள் பங்கேற்க வேண்டும் என்பதைத் தெரிவித்துவிட்டு நகர்ந்தார். அடுத்த 15 நிமிடங்கள் அறையைத் தயார் செய்வதிலும், ஒலிவாங்கி, மற்றும் அந்தக் கூட்டத்திற்குத் தேவையான மின்னணுச் சாதனங்களைச் சரி செய்வதிலும் அந்த நபர் ஈடுபட்டிருந்தார். அத்துடன் பழங்கள், பால், காபி, டீ, ரொட்டி என அனைத்தும் அறைக்குள் கொண்டு வந்து வைக்கப்பட்டன. சரியாக 9.00 மணிக்கு கதவைப் பூட்டினார் அந்த நபர். பூட்டியவர் அங்குப் போடப்பட்டிருந்த போடியத்தின் முன் வந்து தன் உரையை ஆரம்பித்தார். அப்பொழுதுதான் தெரிந்தது, அவர்தான் அந்தக் கருத்தரங்கை நடத்தும் பேராசிரியர் என்பது. ஆரம்பித்தவுடன் ஒவ்வொருவரும் தங்களைப் பற்றிக் கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுவிட்டு, இந்தப் பகிர்தலில் தங்கள் பதவியைப் பற்றியும், தங்கள் சாதனைகளைப் பற்றியும் கூறக்கூடாது. மாறாக தங்கள் வாழ்வு என்பது எங்குப் புரிதலுடன் ஆரம்பித்தது, அது இன்றுவரை எப்படி மாறி வருகிறது, அந்த மாற்றத்தை சமூக மாற்றத்துடன் பொருத்திப்பார்த்து விளக்க வேண்டும். வாழ்வு முறை மாற்றம் அடைந்து உயர்கிறதா அல்லது அதே நிலையில் நிற்கிறதா அல்லது வீழ்ச்சியை நோக்கி நகர்கிறதா என்பதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார். அதற்கு ஒவ்வொருவருக்கும் 10 நிமிடங்களை ஒதுக்கித் தந்தார். உடனே ஒருவர் ஆரம்பித்தார். அப்பொழுது கருத்தரங்கில் பங்கேற்கும் அனைவரும் ஒவ்வொருவர் தன் அனுபவங்களை விவரிக்கும்போதும் அதை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

people 470கனடா நாட்டின் ஆதிகுடிகளைப் பற்றி ஆய்வு செய்தவர் முதலில் ஆரம்பித்தார். அவர் அந்தக் குடிமக்களுடன் தன் வாழ்க்கையைக் கழிப்பவர். தன் 20 ஆண்டு கால அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அப்படி தன் அனுபவப் பகிர்வை செய்து கொண்டிருக்கும்போது, அந்த ஆதிக் குடிகளுக்கு கனடாவில் மேம்பாடு என்ற பெயரில் எவ்வளவு துன்பங்களை அந்த அரசு விளைவித்துள்ளது என்பதை புள்ளி விவரங்களுடன் பகிர்ந்தார். அது மட்டுமல்ல, ஒரு இனம் தான் எப்படி வாழ வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை இல்லாதவர்களாக எப்படி ஒரு அரசு அவர்களை நிர்மூலமாக்குகிறது என்பதை மிக அருமையாக ஒரு சினிமா பார்ப்பதுபோல் விளக்கினார். மிக ஆழமாக இயற்கையை நேசித்து, புரிந்து வாழ்ந்த மக்களை மேம்படுத்துவதாகக் கூறி அந்த ஆதிக் குடிகளின் சமூக வாழ்வை சிதைத்ததைச் சித்தரிக்கும்போது அழ ஆரம்பித்தார். அப்பொழுது இடைமறித்து அந்தக் கருத்தரங்கை நடத்திய பேராசிரியர் உங்களை எப்படிப் பாதித்தது என வினவினார். நான் அவர்களை ஆய்வு செய்யச் சென்றவன், அவர்கள் வாழ்க்கை வாழ்ந்து ரசித்தவன், கடைசியில் அவர்களில் ஒருவராக மாறியவன். எனவே அவர்களுடன் என் வாழ்வும் சிதைந்தது. என்னுடன் சேர்ந்து அந்த மக்களுக்காகக் குரல் கொடுக்க பலரை அழைத்தேன், வந்தனர். ஆனால் அந்த ஆதிக் குடிகளின் வாழ்வின் உன்னதங்களை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை, இருந்தபோதிலும் அவர்கள் மீது பரிதாபப்பட்டு உதவ வேண்டும் என்று நினைத்தனர்.

அவரைத் தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து வந்திருந்த கருப்பின பங்கேற்பாளர் பேச ஆரம்பித்தார். நான் யார் என்பதே எனக்குத் தெரியாது. எதோ கருப்பின மக்கள் படிக்கும் பள்ளியில் சேர்ந்து படித்தேன். பிறகு அதேபோல் கல்லூரியில் சேர்ந்து படித்தேன். அதே கல்லூரியில் இன்று பணியாற்றுகிறேன். அரசாங்கம் எனக்கு வாழத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தது. எதோ படித்ததால் வேலை கிடைத்தது. ஆனால் நான் மதிக்கப்படும் வாழ்க்கை வாழ்கிறேனா என்பதுதான் என் கேள்வி. அது மட்டுமல்ல, சில புள்ளி விவரங்கள் கருப்பின மக்கள் எவ்வளவு பேர் படித்திருக்கிறார்கள், எவ்வளவு பேர் பணியில் இருக்கிறார்கள், எவ்வளவு பேர் உயர் பதவிகளில் இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விவரத்தைக் காட்டி கருப்பின மக்கள் எவ்வளவு முன்னேறி விட்டார்கள் என்று விவாதம் நடைபெற்று அமெரிக்க மக்களாட்சியில் இவைகளெல்லாம் சாத்தியப்பட்டுவிட்டன என்று அமெரிக்க அறிவு ஜீவிகள் பேசுவதையும் எழுதுவதையும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் வரலாற்றின் பக்கங்களை மீண்டும் மீண்டும் புரட்டும்போதும் ஆப்ரகாம் லிங்கன் கருப்பின மக்களை தெற்கிலிருந்து வடக்கே செல்ல அனுமதித்ததற்கே தான் அந்த சிவில் யுத்தம் நடந்தது. அவர் அடிமை வாழ்வை ஒழிக்கவில்லை. அதன் பிறகு மார்டின் லூதர் கிங் அவர்களின் கனவு, அவரின் போராட்டங்கள் பெற்றுத் தந்தது குறைந்த பட்ச உரிமைகளை அமெரிக்க கருப்பின மக்களுக்கு. ஆனால் அதையே அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்டார் என்பது உலகறிந்த உண்மை. கருப்பின மக்களுக்கு அமெரிக்காவில் விடுதலை கிடைத்து விட்டதாக என்னால் உணர முடியவில்லை. அத்துடன் முன்னேற்றம் என்ற பெயரில் மேற்கத்திய விரிவாக்கம் என்ற செயல்பாட்டுக்கு தங்கள் உயிரையே தந்திட்ட பல்லாயிரக்கணக்கான செவ்விந்தியர்களை எண்ணும்போது இதயம் கனக்கின்றது. என் வாழ்க்கை மிகப் பெரிய மாற்றத்தை வெளிப்புறத்தில் பெறுகிறது. காரணம் விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் வளர்கின்ற காரணத்தால்.

அமெரிக்க வெள்ளை இனம் மாறியதாக எனக்குப் புரியவில்லை. தான் உயர்ந்த இனம் என்ற எண்ணம் தங்கள் இதயத்தின் ஓர் ஓரத்தில் இருந்து கொண்டிருப்பதை எப்போதும் என்னால் பார்க்க முடிகிறது. உலகத்திற்கு மக்களாட்சிக்கு வழிகாட்டும் நாடாக இருக்கின்ற அமெரிக்கா தன்னை மக்களாட்சிக்கு உட்படுத்தி உள்ளுக்குள் தங்களை வளர்த்து சமப்பார்வை கொண்டவர்களாக மாற்றிக் கொள்ளவில்லையே என்பதுதான் என் ஆதங்கம். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பல பிரகடனங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. மற்ற நாடுகளுக்கு வழிகாட்டக் கூடியவைகள்தான். என் மனித குலத்துக்கே வழிகாட்டக் கூடியது தான். ஆனால் அமெரிக்க வெள்ளை இன மக்களை உள்ளுக்குள் மாற்ற முடியவில்லையே. மார்ட்டின் லூதர் கிங் சொன்ன அந்த வாக்கியம் தான் என் மனதுக்குள் இன்னும் ஏக்கமாக உள்ளது. ஒரு கருப்பினத்து மனிதனை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதுதான் மிகவும் முக்கியமானது என்று கூறி முடித்தார்.

அடுத்து ஒரு துருக்கிக்காரர் ஜெர்மனியில் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும், தான் ஆய்வு நிமித்தமாக அங்கு வந்திருப்பதாகவும் கூறிய அவர், இரண்டாம் உலகப்போரில் ஒட்டு மொத்தமாக அழிந்துபோன ஜெர்மனி மறு உருவெடுத்தது துருக்கியர்களின் கடின உழைப்பால். அவர்கள்தான் அனைத்துக் கட்டுமானப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களின் கடினமான உடல் உழைப்பில் தான் உருவானது இன்றைய நவ ஜெர்மனி. அதன் காரணமாகத்தான் துருக்கியர்களுக்குக் குடியுரிமையும் கொடுத்து அவர்கள் பெற்றோர்கள் வந்து செல்லவும் வழிவகை செய்து கொடுத்தது ஜெர்மனி அரசாங்கம். ஜெர்மனி எவ்வளவோ முன்னேற்றம் அடைந்து செல்வ வளம் மிக்க நாடாக உள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது. ஆனால் துருக்கியர்கள் இன்றுவரை அங்கு என்னென்ன பணிகளைச் செய்து வருகிறார்கள் என்று பார்த்தால், அவர்கள் அனைவரும் கடைநிலை ஊழியர்களாகவே தான் இருக்கின்றார்கள். அவர்கள் படிப்பதும் கூட கடைநிலை வேலைகளுக்கான பட்டையப்படிப்புக்களைத்தான் படித்து வருகின்றார்கள். அசல் ஜெர்மானிய இனத்தவர்கள் தான் மருத்துவர்கள், பொறியியல் வல்லுனர்கள் மற்றும் உயர் பதவிகள் அனைத்திலும் இருப்பார்கள். இதனை ஏன் என்று கேட்டால் துருக்கியர்களுக்கு மூளை வளர்ச்சி குறைவு, ஆகையால் அவர்கள் ஜெர்மானிய இனத்துக் குழந்தைகளுடன் போட்டி போட முடியவில்லை என்று விளக்கம் கொடுத்து, அங்கொன்றும், இங்கொன்றுமாக உயர் பதவிகளில் இருக்கும் துருக்கியர்களைக் காட்டி புறக்கணிப்பு ஒன்றும் நடக்கவில்லை என்று அரசு கூறுகின்றது. துருக்கியர்கள் இரண்டாம் தர வாழ்க்கைதான் ஜெர்மனியில் வாழ்ந்து வருகின்றார்கள். ஜெர்மனியின் மறு சீரமைப்புக்குப் பங்களித்த துருக்கியர்களின் வாழ்வு இன்றும் அடிமட்டத்தில்தான் இருக்கிறது என்பதை ஒவ்வொரு கணமும் உணருவேன். அது மட்டுமல்ல, துருக்கியர்கள் தொழுவதற்கு ஒரு மசூதியைக் கட்டுவதற்கு எத்தனை ஆண்டுகாலம் போராட வேண்டி இருந்தது என்பதைப் பார்க்கும்போது நாம் வாழும் தேசம் மக்களாட்சியில் இருப்பதாக நாம் கூறிக் கொள்கின்றோம். மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகளில் ஒன்று சமத்துவம். ஆனால் அந்த சமத்துவம் என்பது ஏன் பலருக்குக் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. அப்போதுதான் நமக்கு இன்னொரு கேள்வி பிறக்கிறது. அதாவது மக்களாட்சி யாருக்கானது என்ற கேள்வி.

அவரைத் தொடர்ந்து இன்னொருவர் எழுந்து தான் பிறப்பால் இங்கிலாந்துக்காரர், வளர்ப்பால் அமெரிக்கர், செயல்பாட்டால் இந்தியர். நான் இந்தியாவைப்பற்றித்தான் படித்துக் கொண்டிருக்கிறேன். 30 ஆண்டுகாலமாக இந்தியா சென்று வருவது, அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றுவது என்று என் வாழ்க்கை நகர்கிறது. நான் அதிகமாக ஆய்வு செய்வது இந்தியக் கிராமங்களில் வாழும் தலித்துக்களைப் பற்றியது. அவர்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன்னும் தனியாக ஊருக்கு வெளியில் ஒரு ஒதுக்குப் புறத்தில் வாழ்ந்தார்கள். அவர்கள் யாருக்கும் நிலம் கிடையாது. ஊர் நடுவே இருக்கும் உயர் ஜாதிக் குடும்பங்களின் நிலங்களில் ஆண்களும் பெண்களும் விவசாய கூலி வேலை பார்ப்பார்கள். நிலச்சுவான்தார்கள் கொடுக்கின்ற சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் வசிக்கும் பகுதி மிகவும் தாழ்வான பகுதி. அங்குதான் ஊர்க் கழிவுகளைக் கொட்டுவார்கள். உயர் சாதி இந்துக்கள் வசிக்கும் பகுதியில்தான் பள்ளிக்கூடம் இருக்கும், கூட்டுறவு வங்கி இருக்கும், அஞ்சல் அலுவலகம் இருக்கும், பஞ்சாயத்து அலுவலகம் இருக்கும், துணை சுகாதார நிலையம் இருக்கும், பாலர் பள்ளி இருக்கும், பொது வினியோகக் கடை இருக்கும், குடிதண்ணீர் மேல்நிலைத் தொட்டி இருக்கும், தண்ணீர் வரும் ஆழ்துளைக் குழாய் இருக்கும், சாலை வசதிகள் இருக்கும், குளங்கள் இருக்கும், குடிதண்ணீருக்கான ஊரணிகள் இருக்கும், கோவில்கள் இருக்கும், மளிகைக்கடைகள் இருக்கும், டீக்கடைகள் இருக்கும், காய்கறிக் கடைகள் இருக்கும், மீன் மார்க்கெட் இருக்கும், தெருவிளக்குகள் இருக்கும், பொதுக் கழிப்பிடங்கள் இருக்கும், விளையாட்டு மைதானம் இருக்கும். இந்த வசதிகளில் எதையும் இந்த தலித்துக்களால் உரிமையுடன் பயன்படுத்த முடியாது. எல்லா வசதிகளும் முக்கிய கிராமத்திற்கு வந்ததுபோக மீதத்தைத்தான் தலித்துக்கள் வசிக்கின்ற இடத்திற்கு செல்ல அனுமதிப்பார்கள். தலித் குடும்பத்திலுள்ள குழந்தைகள் பள்ளிக் கூடத்திற்கு பெரும்பாலும் செல்லாமல் தங்கள் தாய் தந்தையர்கள் வேலை செய்யும் வீட்டிலேயே தங்களும் ஆடு மேய்ப்பது, மாடு மேய்ப்பது போன்ற பணிகளைச் செய்து வந்தார்கள். ஒரு சிலர் மட்டும் மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பிறகு பள்ளி சென்று படிப்பார்கள். படித்து விட்டு பக்கத்து நகரங்களில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பைத் தொடர்வார்கள். அதை முடித்து ஏதோ சிலருக்கு அரசு வேலைகள் கிடைக்கும். அவர்கள் நகரங்களுக்கு புலம் பெயர்ந்து விடுவார்கள். பெரும்பாலும் நகரங்களுக்குப் புலம் பெயர்ந்தவர்களுக்கு வாழ்க்கை மிகப்பெரிய போராட்டமாக இருக்காது. கிராமத்தில் சிக்குண்டவர்களுக்கு ஒரு சில வசதிகள் காலப்போக்கில் கிடைத்தன. இருந்தும் அந்த அடிமை வாழ்விலிருந்து மீள இயலவில்லை. நாடு சுதந்திரம் அடைந்து மக்களாட்சியை நிறுவ தங்களுக்கென ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்கி இந்தியர்கள் அனைவரும் சமம் என்று பிரகடனப்படுத்திக் கொண்டனர் அரசியல் ரீதியாக. ஆனால் இந்தியச் சமூகம் சாதியத்தில் கட்டுண்டு அரசியல் சாசனம் கொடுத்த உரிமைகளை தலித்துக்களுக்குக் கொடுக்க மறுத்தது. நகரங்களுக்குக் குடிபெயர்ந்து, படித்து அரசு வேலைகளுக்குச் சென்ற குடும்பங்கள் ஓரளவுக்கு உரிமைகளைப் பெற்று மற்றவர்களுடன் சமமான வாழ்க்கையை வாழ்கின்றனர். அதே நேரத்தில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் தொடங்கி இன்று வரை இவர்களை அடிமை வாழ்விலிருந்து விடுவிக்க போராடி வருகின்றனர். ஒரு சில மாநிலங்களில் அந்தப் போராட்டங்கள் வெற்றி பெற்று மற்ற ஜாதிகளுடன் சமமாக வாழ்வதையும் பார்க்க முடியும் கேரளா போல. வட மாநிலங்களில் இந்த ஜாதிய அடக்கு முறை மிக அதிகமாகக் காணப்படும். இந்திய அரசியல் தேர்தலுக்காக ஜாதியம் பயன்படுத்தப்படுவதால், அதேபோல் மதமும் பயன்படுத்தப்படுவதால் அரசியல் சாசனம் கூறுவதை விட்டு சமூகம் தன் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றது. இந்த நிலை மாற இன்னும் நூறு ஆண்டுகள் கூட பிடிக்கும். தலித் மேம்பாடு என்று கூறிடும் கட்சிகள் கூட இந்தப் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் பல சமரசங்களை ஆதிக்க சக்திகள் நிறைந்த அரசியல் கட்சிகளுடன் செய்து கொண்டு பாராளுமன்ற சட்டமன்றங்களுக்கு ஒரு சிறிய எண்ணிக்கையில் பிரதிநிதிகளை அனுப்பிய போதும் தலித்துக்கள் பிரச்சினையை அடிமட்டத்தில் தீர்க்க முடியவில்லை என்பதைத்தான் பார்த்து வருகிறோம் என்று முடித்தார்.

அதனைத் தொடர்ந்து என்னை அழைத்து அனுபவத்தையும், பார்வையையும் உணர்வையும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றார். நான் கடைசி ஆளாக அந்தப் பணிமனையில் சேர்ந்ததால் மீண்டும் அவரிடம் ஒரு விளக்கம் கேட்டேன். நான் எதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டேன். அவர் பொறுமையாகவும் நிதானமாகவும் என்னிடம் கீழ்க்கண்டவற்றைக் கூறினார். “உங்கள் வாழ்க்கை சிறுவயதிலிருந்து இன்று வரை எப்படிப்பட்ட மாற்றங்களை அடைந்தது என்பதை சமூக மாற்றத்துடன் இணைத்துக் கூற முடியுமா என்று முயலுங்கள்” என்றார். என் நினைவு தெரிந்ததிலிருந்து அதாவது விவரம் தெரிந்ததிலிருந்து இன்று வரை என் வாழ்வில் நடைபெற்ற மாற்றங்களை சமூக மாற்றத்துடன் ஒப்பிட்டு விளக்குகின்றேன் என்று கூறிவிட்டு நான் என் சிறு வயது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன். கிராமப் பள்ளிக்கூடத்தில் முதல் வகுப்பில் என் தாய் தந்தையர் எனக்கு 4 வயதாக இருக்கும்போதே ஐந்து வயது நிரம்பி விட்டான் எனக் கூறி பள்ளியில் சேர்த்தார்கள். என் உண்மையான பிறந்த தேதி 21.3.1955. ஆனால் என்னைப் பள்ளியில் சேர்ப்பதற்காக 09.08.1953 என்று தவறாகத் தந்து சேர்த்து விட்டார்கள். காரணம் நான் எப்படியாவது படிக்க வேண்டும் என்ற ஆசை என் பெற்றோர்களுக்கு. காலை நான் எழுந்தவுடன் பால் கரக்கும் மாடுகளுக்கு தீவனம் வைத்து என் தாய் பால் கரந்தவுடன் கடைகளுக்கு கரந்தபாலைக் கொண்டு சென்று கொடுக்க வேண்டும். கடைக்குச் செல்லுமுன் எனக்கு தேநீர் தயாரித்து தந்து விடுவார் என் அம்மா. தேநீர் குடித்து விட்டு, பாலை எடுத்துக் கொண்டு தேநீர் கடைகளுக்குக் கொடுத்துவிட்டு வந்து மாடுகள் கட்டி­யிருந்த இடத்தைச் சுத்தம் செய்ய வேண்டும். அதன் பின் வயலுக்குச் சென்று ஒரு சிறிய சாக்கு அளவிற்கு புல் அறுத்துவர வேண்டும். அதைக் கொண்டு வந்து மாட்டுக் கொட்டகையில் வைத்துவிட்டு, குளித்து விட்டு சாப்பிடுவேன். பழைய சோறு, பழைய கறி அத்துடன் ஊறுகாயையும் சேர்த்து சாப்பிட்டு விட்டு பள்ளிக்குச் செல்வேன். என்னைப் போன்ற அனைவரும் படிக்க வருவதில்லை. தலித்துக்கள் பள்ளிக்கே வரமாட்டார்கள். அவர்களுக்கு படிக்க வேண்டும் என்பதே தெரியாது.

வீடு என்பது தென்னங்கீற்று வேயப்பட்ட கொட்டகை அவ்வளவு தான். இரண்டு கொட்டகைகள். ஒன்று நாங்கள் குடியிருப்பதற்கு, மற்ற கொட்டகை மாடுகளுக்கு. கோழிகளுக்கு மரப்பெட்டி பெரியதாக அமைக்கப்பட்டிருக்கும். வீட்டில் ஆண்டு முழுவதுக்கும் தேவையான உணவு தானியமான நெல்லை சேமித்து வைப்பதற்கு மரத்தாலான பத்தாயம் என்ற சேமிப்புக் கிடங்கு ஒன்று இருக்கும். அடுத்து அவித்து அரைத்த அரிசியைக் கொட்டி வைத்துக்கொள்ள மண் ஜாடி என்பது பெரிய அளவில் இருக்கும். பள்ளிக்கூடத்தில் வகுப்பு என்பது இன்று போல் அறைகளாக தடுக்கப்பட்டு இருக்காது. வகுப்பில் படிப்பது தான். வீட்டுக்கு வந்து விட்டால் வீட்டில் உள்ள அனைத்து விவசாயம் தொடர்பான வேலைகளும், மாடுகளுக்குத் தீவனம் வைப்பது, வைக்கோல் போடுவது, பசும்புல் போடுவது என பல்வேறு பணிகள் இருக்கும். வீட்டில் மின்சாரம் இருக்காது. எங்கள் ஊரில் இரண்டு மூன்று வீடுகளில்தான் மின்சாரம் இருக்கும். அங்குதான் நாங்கள் மின் விளக்கினைப் பார்த்தோம். அவர்கள் வீடுதான் மாடிவீடு, அவர்கள் வீட்டில் தான் ரேடியோ இருந்தது. மற்றவர்கள் வீடுகள் அனைத்தும் தென்னங் கீற்றால் வேயப்பட்ட வீடுகள் தான். அவரவர் தோப்புக்களில் வீடுகளில் இருக்கும் பனைமரத்தை வெட்டி வீடு கட்ட பயன்படுத்திக் கொள்வார்கள். தங்கள் வீட்டு தென்னை மரங்களிலிருந்து விழும் மட்டையைச் சேமித்து வைத்து முடைந்து தங்கள் வீட்டுக் கூரையை வேய்ந்து கொள்வார்கள். விவசாயம் முற்றிலுமாக இயற்கை விவசாயமாக இருந்தது. ஆடுமாடுகள் இவைகளின் உரங்கள், பசுந்தாள் உரங்கள் மட்டும்தான். இரசாயன உரம் பற்றி எதுவும் யாருக்கும் தெரியாது. ஊரில் குளங்கள், குட்டைகளுக்குப் பஞ்சமே இல்லை. எங்கு பார்த்தாலும் இருந்தன. சில குளங்கள் ஆடுமாடுகளுக்கு குளிக்க, தண்ணீர் குடிக்க ஒதுக்கியிருப்பார்கள்; சில ஊரணிகள் மனிதர்கள் குடிக்கும் நீருக்காக ஒதுக்கியிருப்பார்கள். பெரும் ஏரிகள் விவசாயப் பாசனத்துக்கு பராமரித்து வைத்துக் கொள்வார்கள். எல்லாக் குளங்களும், ஏரிகளும், ஊரணிகளும் கிராம சமுதாயத்தின் கட்டுப்பாட்டிலேதான் இருந்தன. நீரைப் பாதுகாப்பதற்கும், பகிர்ந்தளிப்பதற்கும் சில வழிமுறைகள் வகுத்து செயல்படுத்தி வந்தனர்.

நீர் மேலாண்மை வழிமுறைகள் என்பது எழுதப்படாத ஆனால் காலகாலமாக நடைமுறையில் இருக்கும் நியதிகள். நீர் பங்கீட்டு முறை என்பது நாம் இன்று பேசும் சமூக நீதியை எல்லாம் உள்ளடக்கிய ஒன்று. எல்லா வீடுகளிலும் ஆடுகள் மாடுகள் இருக்கும். நிலம் இல்லாத கூலித் தொழிலாளிகள் கூட ஆடுமாடு வளர்ப்பார்கள். அதற்குத் தேவையான மேய்ச்சல் நிலம் பொது நிலமாக கிராமங்களில் இருந்தது. கோழி வளர்ப்பு என்பது அனைவர் வீட்டிலும் நடைபெறும் ஒரு செயலாக இருந்தது. மிகப்பெரிய வசதி படைத்தவர் வீட்டில்கூட இன்றுபோல் ஆடம்பர வாழ்வு கிடையாது. தேவைதான் பிரதானப்படுத்தப்பட்டு வாழ்வு முறை கட்டமைக்கப்பட்டிருந்தது. பெரும்பாலானவர்களுக்கு விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழில்களும்தான் வாழ்வாதாரமாக இருந்தது. சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு சாதிய ஏற்றத்தாழ்வுகளின் விளைவுகள் புரியவில்லை. என்னைப் போன்றவர்களுக்கு கிராமங்களில் இருக்கும் சாதியப் பாகுபாடும் தெரியும், பொருளாதாரம் சார்ந்த வகுப்புப் பிரிவினையும் தெரியும். எனக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு சிந்தனை இருந்தது. எப்படியாவது படித்து நல்ல அரசு வேலைக்குச் சென்று விடவேண்டும். பணமும், பதவியும்தான் இந்தியாவில் எடுபடும். எனவே பதவியுடன் ஊர் வர வேண்டும் என்று எண்ணி வெறிபிடித்து படிக்க ஆரம்பித்தேன்.

இன்று அந்தக் கிராமத்திற்குள் சென்று பார்த்தால் எங்குப் பார்த்தாலும் பெரிய பெரிய மாடி வீடுகள், அதன் முன்பகுதியில் ஒரு விலையுயர்ந்த கார் நிற்கும். ஆனால் வயல்களில் விவசாயம் இல்லை, ஏரி, குளங்களில் தண்ணீர் இல்லை. வீட்டுக்குத் தண்ணீர் குழாய் மூலம் வருகிறது. ஆடுமாடுகள் யாரும் வளர்ப்பதில்லை, அனைத்தும் எங்கிருந்தோ பாக்கெட்டில் வருகின்றன. அனைவரும் சுதந்திரமாக இருப்பதாகக் கூறுகிறார்கள். கிராமத்தில் இருந்த சமூக அமைப்புக்கள் தகர்க்கப்பட்டு விட்டன. சாதாரண பிரச்சினைக்கு காவல் நிலையம் செல்கின்றனர். பெருமளவில் புலம் பெயர்வு, அதன் மூலம் ஒரு பொருளாதாரம் உருவாக்கப்பட்டுள்ளது. நிறைய கோவில்கள், நியதிகள் அற்ற சுயநல வாழ்க்கை, பொது வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை. கடின உழைப்பிற்கு யாரும் தயாராக இல்லை. தற்சார்பு வாழ்க்கை முற்றிலும் சிதைக்கப்பட்டு, அரசை நம்பி வாழ்க்கை வாழும் பயனாளிக் கூட்டமாக கிராம வாழ்க்கை மாற்றப்பட்டுவிட்டது.

என் பள்ளி நாட்களில் வறுமை இருந்தது, மக்கள் ஏழைகளாக இருந்தார்கள். ஆனால் சுதந்திரமாக இருந்தார்கள். மதிப்புமிக்க வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அமைதி இருந்தது, சமூக வாழ்வு இருந்தது, சமூக ஒற்றுமை இருந்தது, அடக்குமுறையும் கூடவே இருந்தது. ஒருவருக்கொருவர் உதவியாய் வாழ்ந்து வந்தனர். பிறரின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொண்டனர். இன்று அனைத்தும் மாறி, சுயநலம் பேணும் மாந்தர்களாக மாறி நிற்கிறது சமூகம். என்னைப் போன்ற புலம் பெயர்ந்தவர்கள் போன இடங்களில் சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்கிறோம். இருந்தபோதும் கிராம வாழ்வு என்பது சிக்கல் நிறைந்ததாக, அமைதி இழந்ததாக, சமூக வாழ்க்கையைத் தொலைத்ததாகத்தான் உள்ளது என்பதை எவரும் மறுக்க இயலாது. இந்த விவரங்களை விளக்கிக் கொண்டிருந்தபோது, அந்தப் பேராசிரியர் குறுக்கிட்டு, இந்த விளக்கம் போதுமானது எனது உரையை ஆரம்பிக்க என்று கூறி அவர் உரையை ஆரம்பித்தார். அப்பொழுது என் அனுபவப் பகிர்வை எடுத்து சற்று விவரித்தார். அவர் கேட்ட கேள்வி நமக்கு ஞாபகம் தெரிந்த காலத்திலிருந்து இன்றுவரை நடக்கும் சமூக பொருளாதார வாழ்வியல் மாற்றங்களை நம் வாழ்வுடன் இணைத்து ஒரு ஆராய்ச்சியாளராக விவரிக்க வேண்டும் என்பதுதான். அதைத்தான் நான் எனக்குத் தெரிந்தவரை பகிர்ந்து கொண்டேன். மற்றவர்கள் தங்கள் ஆய்வின் மூலம் நடந்த மாற்றங்கள், பிரச்சினைகளை எடுத்து வைத்தனர். அந்தப் பேராசிரியர் என்னிடம் நீங்கள் மானுடவியல் படித்துள்ளீர்களா என்று கேட்டார். இல்லை என்றேன். வரலாறு படித்தவன் என்றேன். எந்த முறைமையை வைத்து வரலாற்றைப் புரிந்து கொள்வீர்கள் என்றார். நான் கூறினேன், காட்சிப்படுத்தி பார்த்து, புரிந்து கொள்ள முயல்வேன் என்றேன். அடுத்து உள்ளூர் வரலாற்றை உலக வரலாற்றுடன் பொருத்திப் பார்ப்பேன் என்றேன். ஒரு நிகழ்வை விளக்கிக் காட்டுங்கள் என்றார். உடனே நான் 1776ல் அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தின் போது பிரான்ஸில் என்ன நடந்து கொண்டிருந்தது, இங்கிலாந்தில் என்ன நடந்து கொண்டிருந்தது, இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதனை ஒன்றுடன் ஒன்று பொருத்திப் பார்ப்பேன் என்றேன். அப்படிப் பார்க்கின்றபோது நாடுகளுக்கிடையே இருக்கும் வேறுபாடுகளையும், வித்தியாசங்களையும், முரண்பாடுகளையும் பட்டியல் இட்டு விடுவேன் என்றேன். சிறப்பு என்று கூறிவிட்டு, நீங்கள் மதிப்பீடு செய்கின்றபோது, ஆய்வு செய்கின்றபோது முழுக்க முழுக்க தரவுகளை வைத்துத்தான் முடிவுக்கு வருவீர்களா என்றார். நான் தரவுகளைத் தாண்டி உள்ளுணர்வின் அடிப்படையிலும் விளக்கங்கள் அளிப்பதுண்டு, என்றேன்.

அடுத்து அந்தப் பேராசிரியர் தன் உரையை ஆரம்பித்தார். நான் இங்குக் கூறப்போவது ஒரு புது முறைமையியல். அந்த முறைமையியல் உங்களுக்கும் தெரிந்திருக்கிறது என்று கூறிவிட்டு ஆரம்பித்தார். இந்த முறைமை அதாவது ரிப்ளக்ஷன் Reflection என்பதை மையப்படுத்தியது. சமூகம் மாறிக் கொண்டே இருக்கிறது என்பதில் எந்த மாற்றமுமில்லை. சமீபகாலமாக மாற்றத்தின் வேகம் அதிகரித்திருக்கிறது என்பதையும் யாரும் மறுக்க இயலாது. ஆனால் இந்த மாற்றம் எந்த சமூகத்திற்கு வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் சாதகமாக இருக்கிறது, எந்த சமூகம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு இம்முறைமை உதவியாக இருக்கும் என்றார். குறிப்பாக இந்த முறைமை என்பது சிறு சமூகங்களில் ஏற்படும் மாற்றங்களைப் படம் பிடித்து புரிந்து கொள்ள உதவிடும் ஒரு முறைமை. இந்த முறைமை என்பதை சமூகவியல் படிப்பவர்கள் அல்லது மானுடவியல் படிப்பவர்கள் மட்டும் பயன்படுத்தப்படும் முறைமை அல்ல. ஓர் இலக்கியவாதி ஒரு சிறிய புதினத்தின் மூலம் ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையை விளக்கிட முடியும். எம்.என்.சீனிவாஸ் ஒரே ஒரு ஊரை எடுத்து அலசி ஆராய்ந்து ஒரு கோட்பாட்டையே உருவாக்கினார் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. செனகல் என்ற நாடு ஐரோப்பாவிற்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு ஆப்பிரிக்க தேசம். அதற்குப் பக்கத்தில் ஒரு சிறிய தீவு ஒன்று இருக்கிறது. செனகல் செல்வோர் எவரும் அங்குச் செல்லாமல் வரமாட்டார்கள். அங்கு ஒரு அருங்காட்சியகம் இருக்கிறது. அந்த அருங்காட்சியகத்தில் எப்படி ஆப்பிரிக்க தேசங்களிலிருந்து கருப்பின மக்களை ஆட்கள் வைத்து பிடித்து அந்தத் தீவில் வைத்து அவர்களை அடித்து பல வேலைகளுக்குப் பழக்கி பல நாடுகளுக்கு அனுப்புவார்கள் என்பதை தத்ரூபமாக விளக்கியிருந்தார்கள். அதைப் பார்ப்போர் நெஞ்சம் பதைபதைக்கும். எப்படி கருப்பின மக்களை வெள்ளையர்கள் விலங்குகள் போல் நடத்தி தங்களின் சுகபோக வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொண்டார்கள் என்பதை அந்த அருங்காட்சியகத்தைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். அங்கே ஒரு பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும். அது ஒரு சோகப் பாடல். அதாவது செனகலிலிருந்து கருப்பின இளைஞர்களை பிடித்துக் கொண்டுபோய் அந்தத் தீவில் அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தி வேலைக்குப் பழக்குவார்களாம். அப்பொழுது அந்த இளைஞர்கள் அழுவார்களாம். அந்தச் சத்தம் கரையோரம் குடியிருப்போருக்குக் கேட்குமாம். அதைக் கேட்டு கரையோரத்தில் வாழும் பெண் மக்கள் சோகமாகப் பாடும் பாட்டுத்தான் இன்று அந்த அருங்காட்சியகத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நல்ல திடகாத்திரமாக வளரும் கருப்பின இளைஞர்களைப் பிடித்துக் கொண்டு தாய் தந்தையர்களுக்கு ஒரு தொகையைக் கொடுப்பார்களாம். அப்படி இளைஞர்களைக் கொடுக்க விரும்பாத பெற்றோர்கள் அந்த வியாபாரிகள் வரும்போது தங்கள் குழந்தைகளை மறைத்து வைத்துக் கொள்வார்களாம். அந்த இளைஞர்களை வட அமெரிக்காவுக்கும் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் கப்பலில் கொண்டு செல்வார்களாம். செல்லும் வழி­யிலேயே பலர் இறப்பதும் உண்டாம். சென்றவர்கள் மீண்டும் வருவதும் இல்லையாம். ஒரு கொடிய வியாபாரம் எப்படி நடந்தது என்பதை ஒரு ஓவியக் கண்காட்சி விளக்கியிருக்கிறது. இதில் புள்ளி விவரங்கள் இருக்காது, வாழ்க்கை முறை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.

இப்படிப் படிக்கின்றபோது மக்களுடைய வாழ்க்கைமுறை எப்படியெல்லாம் மாற்றம் பெற்று வந்திருக்கின்றன என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். இதற்கு தரவுகள் என்பது புள்ளி விவரங்கள் அல்ல, நம் மனதில் பதிந்த ஞாபகங்கள் மற்றும் நினைவலைகள். ஒரு விவசாயி தன் விவசாயம் எப்படி மாற்றம் பெறுகிறது அதன் மூலம் அவன்தன் வாழ்வு எப்படி மாற்றம் பெறுகிறது என்பதைக் கூறமுடியும். ஆனால் காரண காரியங்களை அந்த விவசாயியால் கூற இயலாது. அதை ஆய்வாளர்கள் தரவுகளாக்கி சமகாலத்து சமூக பொருளாதார மாற்றத்துடன் ஒப்பிட்டு விளக்க வேண்டும். இந்தியாவில் ஒரு ஊடகவியலாளர் ஒரு விவசாயின் கடன்பற்றி விளக்க முயன்று அதன் மூலம் அந்தப் பகுதியின் விவசாயிகளின் வாழ்வாதாரம் பொருளாதாரம் அனைத்தையும் விளக்கி அதன் மூலம் எப்படி விவசா­யிகள் பல வகையில் சுரண்டப்படுகிறார்கள் என்பதை விளக்கி, அதிலிருந்து கொள்ளைகளில் உள்ள ஊழலை சுட்டிக்காட்டி எப்படிப்பட்ட கொள்கை வேண்டும் என்று பரிந்துரை செய்வார்.

அதே போன்று வரலாற்றுப்பதிவுகள் மற்றும் சில கதையாடல்களை வைத்து புனைவுகளுடன் புதினங்கள் உருவாக்கப்படுவது உண்டு. இதைக் கதையாடல்களாகக்கூட விளக்க முடியும். மிகவும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் ஒரு சமூகமாக தேவையான வசதிகளுடன் ஒரு மானுட வாழ்வு எப்படி வாழ வேண்டுமோ அப்படி மரியாதையுடன் வாழக்கூடிய மானுடக் கூட்டங்கள் உலகில் நிறைய இருக்கின்றன. அந்த மானுடக் கூட்டங்களுக்கு இந்தப் பொருளாதார வளர்ச்சி என்ற மந்திரச் சொல் தெரியவே தெரியாது. ஆனால் இந்தப் பொருளாதார வளர்ச்சியில் தோய்ந்து போனவர்கள் மானுடத்தின் மாண்புகளைப் பற்றிக் கவலைப்படாமல் பொருள் ஈட்டுதல் என்ற நிலைப்பாட்டை பின்புலத்தில் வைத்துச் செயல்படும்போது மானுடத்தின் பல பகுதிகள் அமைதியிழந்து நிற்கின்றன என்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது. அடிப்படையில் எவைகள் மாறின, எவை எவையெல்லாம் மாற்றம் பெறவில்லை, எவை எவை மக்களைப் பின்னுக்குத் தள்ளுகின்றன. இவைகளை மக்களின் வாழ்க்கை முறையைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். நவீனப்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்கள் மானுட வாழ்வு முறையை மிகப் பெரிய அளவில் மாற்றியமைத்துள்ளன.

தொழில் நுட்பங்கள் மிக எளிதாக மக்களைக் கவர்ந்து விடுகின்றன. அதே தொழில் நுட்பம் மக்களிடமிருக்கின்ற பிற்போக்குத் தனமான சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் மாற்ற இயலவில்லை என்பதையும் இன்றைய சமுதாயத்தில் பார்த்து வருகிறோம். சிவப்பிந்திய இனத்தின் தலைவனை வெள்ளை மாளிகைக்கு அழைத்தார் ஒரு அதிபர் பேச்சுவார்த்தைக்கு. அந்தத் தலைவர் கூறினான் என் காட்டுக்கு வா, எங்கள் வாழ்வு எவ்வளவு மேன்மையானது என்பதைப் புரிந்து கொள்ள.

நீ வாழ்வது ஒரு செயற்கை. நீ சிமெண்ட் மற்றும் இரும்புக் காட்டுக்குள் இருந்து கொண்டிருக்கிறாய். நீ நாகரீக வாழ்க்கை வாழ்வதாகக் கூறிக் கொண்டு, எங்களை மாற்ற முனைகின்றாய். இங்கு வந்து பார், எவ்வளவு உயர்வான மேன்மையான வாழ்வை வாழ்கிறோம் என்பதைப் புரிந்து கொள்வாய். எங்கள் காட்டில் அடிக்கும் காற்று, மரங்களும் விலங்குகளும் பறவைகளும் எழுப்புகின்ற ஒலி, இரவில் நிலவின் அழகு அனைத்தையும் அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இப்படி இயற்கையோடு இயைந்த வாழ்க்கையின் மேன்மையைச் சித்தரித்து எழுதினான் அந்த மனிதன். அந்தக் கடிதம்தான் சுற்றுச் சூழலியலாளர்கள் அடிப்படையாகக் கருதுவது.

எனவே மக்கள் வாழ்க்கை முறை பற்றி சிந்திக்கும்போது குறிப்பாக மாற்றம், வளர்ச்சி, மேம்பாடு என்று சிந்திக்கும்போது புள்ளி விவரங்களுக்குப் பதிலாக ஒரு சில மனிதர்களின் வாழ்க்கைச் சூழலை ஒரு புதினமாக்கி மக்களுக்குக் கொண்டு செல்லும்போது புதிய கருத்தாடல்களாகக் கொண்டு செல்ல வேண்டும். ஒற்றை மனிதரை வைத்து அந்த ஊரையே மதிப்பீடு செய்து விடமுடியும். இதற்கு ஆழ்ந்த நினைவாற்றலும், செய்திகளைத் தொடர்புபடுத்திப் பார்க்கும் முறைமையும் தெரிந்திருக்க வேண்டும். ஒரு துறையில் நீண்ட நாள் அனுபவம் பெற்ற மனிதர்களுக்கு இது எளிதாகச் சாத்தியப்படும். இந்த ஆய்வு முறை மூன்றாவது உலக நாடுகளில் மிகவும் தேவையான முறைமையும் கூட என்று தன் உரையை நிறைவு செய்தார்.

- க.பழனித்துரை

Pin It