தற்காலத்திய கல்விமுறையில் இலக்கியம், வணிகம், பொருளாதாரம், வரலாறு, அறிவியல், சமூகவியல், பண்பாட்டியல், மானிடவியல், பொறியியல் போன்ற பல்வேறு பிரிவுகள் இருந்தபோதிலும், இது சமூகம், அரசு, பொருளாதாரம் என்பதான தன்மைகளில் இயக்கம் கொள்கிறது. தற்போதைய கல்வியின் நோக்கம் பொருளாதாரம் என்ற போக்கில் செல்வதென்பது ஆபத்தானதும், அபத்தமானதும், மலிவானதாகவும் கூட கருதலாம். ஆனால் கல்வி என்பது அடிப்படையில் சமூக முன்னேற்றம், வளர்ச்சி என்றிரு தன்மைகளில் பல்வேறு இலக்குகளைக் கொண்டது. அதன்போக்கு தற்போது ஒற்றைப் புள்ளியை நோக்கிச் செல்வது எதிர்காலத்தின் சமூகநிலையைக் கேள்விக்குள்ளாக்கிவிடும் என்பதில் ஐயமில்லை. இத்தகைய சூழலில் சமூக முன்னேற்றம், வளர்ச்சி, மனித நடத்தை என்ற தன்மைகளில் அணுகுகையில் குழந்தைகளுக்கான கல்வியையும் நாம் மறுசுழற்சி செய்யவேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். விளையாட்டு முறையிலான குழந்தைக் கல்வி என்ற நிலை பிரதானப்பட்ட போதிலும் அதன் பயன் என்பது கேள்விக்குறியானது. விளையாட்டு மட்டுமே குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கும் சிந்தனைக்கும் சமூக நடத்தைக்கும் முழுவதுமாக வழிவகுத்திட முடியாது.

tamil childrenகுழந்தைகளுக்கான கல்விமுறையில் நாம் கடந்த முப்பது ஆண்டுக்கு முன்னரான கலைத்திட்டத்திற்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தற்போது விளையாட்டு முறை கல்வியில், குழந்தைகளின் நினைவுத்திறன், மனனம் செய்தல், ஒப்புவித்தல், பிழையின்றி எழுதுதல், பழம் பாடல்களை அறிந்து கொள்ளுதல், இயற்கை சார்ந்த பாடல்கள், பறவைகள், விலங்குகள் உள்ளிட்டவற்றை இலக்கியங்களில் தேடுவதற்கான சிந்தனையை ஊக்கப்படுத்துவதில்லை என்றே தோன்றுகின்றது. குழந்தைகளுக்கான இலக்கியங்கள் தமிழில் ஏராளமாக எழுதப்பட்டுள்ள போதிலும் அவற்றை வாசிப்பதும், குழந்தைகளுக்குக் கொண்டு செலுத்துவதிலும் தவறு உள்ளது. அதற்கான தளவாடங்களை ஏற்படுத்துவதிலும் கல்வி நிறுவனங்கள் தவறுகின்றன என்றே தோன்றுகிறது. ஆகவே, அவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டியதாக இச்சிறு கட்டுரை அமைகிறது.

பள்ளிகளில் குழந்தைகளுக்கான நூலகம்

அரசு ஆரம்பப் பள்ளிகள், தனியார் ஆரம்பப் பள்ளிகள், நர்சரி, பிரைமரி பள்ளிகள் போன்ற நிறுவனங்கள் குழந்தைகளுக்கான விளையாட்டுத் தளவாடங்களை வாங்குவதிலும் அதனை ஏற்படுத்தித் தருவதிலும் காட்டும் சிரத்தை, குழந்தைகளுக்கான நூலகங்களை அமைத்தல், குழந்தை படிப்பதற்கென்று குழந்தை எழுத்தாளர் எழுதிய குழந்தைகளுக்கான நூல்களைச் சேகரித்தல், என்பது மிகவும் அருகிவருகின்றது. குழந்தைகளுக்கான பள்ளிகள் தொடங்கப்படுகையில் அதன் விளம்பரங்களில் கூட நூலகங்கள் இருக்கின்றன. குழந்தைகளுக்குக் குழந்தை இலக்கியங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன என்பதான பதாகைகள் இருப்பதாகக் கூட தெரியவில்லை. நிறுவனம் தொடங்கி அதனுள் இயங்கும் கல்வியாளர்கள் நூலகங்கள் அமைப்பதற்கும், நூல்களைச் சேகரிப்பதற்கான சிரத்தைகள் எடுப்பதற்கும் தவறுகின்றனர்.

சில நிறுவனங்களில் நூலகம் தொடங்கி தற்போது கிடைக்கும் படங்கள், கார்ட்டூன், விளையாட்டுத் தொடர்பான நூல்கள் சேமித்து வைத்துள்ள போதிலும் அதனை ஒரு பாதுகாப்புப் பெட்டகமாகவே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். குழந்தைகள் அவற்றை எளிதாக எடுக்கவே, எளிதில் பயன்படுத்த கற்றுக்கொடுக்கும் கல்வியோ மிகவும் குறைந்து வருகின்றது என்பதைக் கல்வி நிறுவனங்களில் காணமுடிகிறது. எனவே, தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை அனைத்திலும் நூலகம் தொடங்கி தனியாக நூலகர்கள் பணி அமர்த்தப்படுவதோடு, குழந்தைகளுக்கான நூல்களை குழந்தைகள் அணுகுவதை எளிமைப்படுத்த வேண்டும். பள்ளிக்கல்வித் திட்டத்தில் நூலகம், நூலகப் பணியாளர் பற்றி இருந்தாலும், இன்று பல்வேறு பள்ளிகளில் நூலகமே இல்லாத நிலைதான். அனைத்துப் பள்ளிகளிலும் நூலகம் தொடங்கி நூலகர்களை நியமிக்க வேண்டும், அப்பொழுதுதான் குழந்தைகளுக்கான நூல்கள், இதழ்கள் வாங்கி பயன்படுத்தி, குழந்தைகளை உற்சாகப்படுத்தி குழந்தைகளிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்த முடியும்.

குழந்தைகளுக்கான ஆசிரியர்கள் - குழந்தை இலக்கியத்திற்கான ஆசிரியர்

ஆசிரியர்கள் என்பவர்கள் பெற்றோர்கள் தான். ஒவ்வொரு பெற்றோர்களும் ஆசிரியர்கள் தான் என்பது பொதுக்கருத்து. கல்வியாளர்களின் கருத்தும் கூட. உண்மையும் கூட. ஆனால், தற்காலத்திய ஆசிரியர்களிடம் விளையாட்டு முறையிலான கல்வியும், ஊடகம் சார்ந்ததான கல்வியும் கற்றல் முறையுமே உள்ளன. குழந்தை இலக்கியத்திற்கான நூல்கள், குழந்தை உளவியல் சார்ந்த நூல்கள், குழந்தையின் வளர்ச்சி, முன்னேற்றம், அறிவுத்திறன், மொழித்திறன் போன்ற தன்மைகளையும் அறிந்து அதற்கான முறை­யிலான கற்றலை உருவாக்கும் நோக்கிலான கற்பித்தல் குறைந்து வருகின்றது என்றே சொல்லமுடியும். ஆசிரியர்கள் தங்களுடைய பள்ளிகளில் குழந்தை இலக்கிய நூல்கள், மாத, வார இதழ்கள், கதைகள் உள்ளிட்ட நூல்களை வாங்குவதிலும், வாசிப்பதிலும் அவற்றை குழந்தைகளுக்குக் காட்டுவதிலும், வாசிக்கப்பழக்குவதிலும், அவற்றின் பயனை எடுத்துச்சொல்லுவதிலும், அவற்றினூடான அறிவை வளர்ப்பதிலும் சிரத்தை எடுப்பது குறைந்து வருகிறது. இத்தகைய முன்னெடுப்புகளில்தான் குழந்தைகளையும் குழந்தை இலக்கியத்தையும் வளச்சிப் பாதையில் செல்லுவதற்கு ஊக்கப்படுத்த முடியும். குழந்தை இலக்கிய நூல்களை வாங்கி வாசித்து அதன் மீதான அனுபவத்தைத் தங்களுடைய குழந்தைகளுக்குச் சொல்லுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஆசிரியர்களின் பங்களிப்புகளில் ஒன்றாகும்.

குழந்தை எழுத்தாளர்கள்

இருபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் குழந்தை இலக்கிய எழுத்தாளர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இருந்தனர். பாரதியார் தொடங்கி கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, அழ.வள்ளியப்பா, பெ.தூரன் உள்ளிட்ட நீண்ட பட்டியல் உண்டு. தற்காலத்தில் இவர்கள் எழுதிய நூல்களே மிகுதியாக உள்ளன. அவர்களின் தொடர்ச்சியாக அவர்களுக்குப் பிற்பாடே தற்போது எழும் சமூக மாற்றங்களை உட்புகுத்தி குழந்தைகளுக்கு எழுதும் இலக்கியங்கள் குறைந்து வருகின்றன. ஊடகங்கள் குழந்தைகளை ஒரு மாந்திரீக உலகத்தில் கொண்டு சென்று கொண்டிருப்பதை பெற்றோர்களும், ஆசிரியர்களும், எழுத்தாளர்களும் அங்கீகரிக்கின்றனர் என்றே உணர முடிகிறது. அவை தவறான பாதை என்றபோதும் அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு இத்தகைய சமூகத்திற்குப் பெரிதும் உள்ளது. குறிப்பாக குறிப்பிட்ட மூன்று தரத்தாருக்கு அதிகம் உள்ளது. அவற்றை மீட்டெடுக்க பழைய இலக்கியங்களைக் குழந்தைகளுக்கு வாசிக்கப்பழக்குவதும், புதிய இலக்கியங்களைத் தோற்றுவித்து அவற்றை குழந்தைகளுக்குக் கொண்டு செலுத்துவதுமே பிரதானமாக அமையும். அதில் ஆண் எழுத்தாளர்களே அதிக அளவில் குழந்தை இலக்கியம் படைத்தனர்.

தமிழில் குழந்தை இலக்கியம் படைக்கும் பெண் எழுத்தாளர்கள் இன்றும் குறைவாகவே உள்ளனர். குழந்தைகளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஆண்களை விட பெண்களுக்குத் தான் அதிகம் உள்ளது. ஆனாலும் குழந்தைகளுக்காகப் பெண்கள் எழுதுவது குறைவாகவே உள்ளது. இந்த நிலை மாறவேண்டும். பெண்கள் குழந்தை இலக்கியம் எழுத அதிக அளவில் வருவது குழந்தை இலக்கியத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும். பெரியவர்களுக்கு எழுதக் கூடிய எழுத்தாளர்கள் ஒரு நூலை (கவிதை, நாவல் போன்ற நூல்கள்) வெளியிடுவதை மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடுகின்றனர். விளம்பரப்படுத்துகின்றனர். விற்பனைக்குக் கொண்டு செல்லுகின்றனர். விருது கொடுத்துக் கௌரவிக்கின்றனர். பாராட்டுதலுக்கு உள்ளாக்குகின்றனர். அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அந்த நூல்கள் பற்றி விமர்சனங்களும் கருத்தரங்குகளும் ஏராளமாக நிகழ்கின்றன. ஆனால் குழந்தை இலக்கிய நூல்கள் எழுதும் படைப்பாளர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படுவது என்பது அவர்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் இல்லையென்றே தோன்றுகிறது. குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு அர்ப்பணிப்போடு உழைக்கும் எழுத்தாளர்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளிப்பதும், குழந்தைகளை அவ்விலக்கியங்களை வாசிக்கச் செய்தலும் அடிப்படைக் கடமைகளாகும்.

குழந்தை இலக்கியம் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சில செய்திகள்

குழந்தை இலக்கிய நூல்கள் குழந்தைகளின் கவனத்தைக் கவரும் வகையில் அட்டைப்படங்களுடள் இருத்தல் அவசியம். குழந்தை இலக்கிய நூல்கள் இன்று பெருமளவு வெளிவந்துள்ளன; கதை, பாடல், புனைகதை, நாடகம், மொழிபெயர்ப்புகள் போன்ற பல்வேறு வகைகளில் வெளிவந்திருக்கின்றன. தமிழில் முதல் சிறுவர் கதை நூல் கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்தகுரு கதையாகும். பின்னர் 1988 ஆம் ஆண்டு கொழும்பு நகரில் பிரோன்ஸ்வேல்டு என்பவரால் தொகுத்து வெளியிடப் பெற்ற குழந்தைக் கதைத் தொகுப்பு என்ற நூல் தமிழ் மொழியில் தோன்றிய சிறந்த கதைத்தொகுதியாகும். நாடோடிக் கதைகள், நாட்டார் வழக்காற்றியல் கதைகளை நூலாக்கம் செய்யும் முயற்சிகள் நடந்த அதே காலகட்டத்தில் குழந்தைகளுக்கான நூல்களும் மிகுதியாகத் தோன்றின. கதைகளைத் தொகுக்கவும் செய்தனர். அழ.வள்ளியப்பா, வை.கோவிந்தன், தி. ஜானகிராமன், தம்பி சீனிவாசன், ராஜம் கிருஷ்ணன், கல்வி கோபாலகிருஷ்ணன்,செல்லகணபதி,குழ.கதிரேசன், கி.ராஜநாராயணன், வாண்டு மாமா, லூர்து எஸ்.ராஜ் போன்ற எழுத்தாளர் குழந்தைகளுக்கான கதைகளை எழுதவும், பிறமொழியில் எழுதப்பட்ட குழந்தை இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்த்தும் தமிழில் குழந்தை இலக்கியத்திற்கான பணியை அவ்வப்போது செய்து வந்துள்ளனர். எஸ்.ராமகிருஷ்ணன், உதயசங்கர், விழியன், கொ.மா.கோ.இளங்கோ,

யூமா வாசுகி மற்றும் பலர் பிறமொழி குழந்தை இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்த்துத் தருகின்றனர்.

தமிழில் பயண நூல்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள் பெருமளவு வெளிவந்துள்ளன. குழந்தை இலக்கியத்தில் சிறப்பாகக் கருதுபவை குழந்தைகளுக்குப் பெரிதும் பயன்படுபவை தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியாரின் முயற்சியால் பெ.தூரனைத் தலைமை ஆசிரியராகக் கொண்டு பத்து தொகுதிகளாகத் தோன்றிய குழந்தை இலக்கிய களஞ்சியமாகும். இது தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் வெளியிடப்பட்ட தொகுப்பு நூல்கள் ஆகும். அதன் பிற்பாடுதான் குழந்தை

களஞ்சிய நூல்கள் பலரும் வெளியிட்டனர். மணவை முஸ்தபா உருவாக்கிய முப்பெரும் கலைக்களஞ்சியங்கள், சிறுவர் கலைக்களஞ்சியங்கள், இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம், இளையார் அறிவியல் கலைக்களஞ்சியம் ஆகியனவாகும். பூவண்ணன் அவர்கள் குழந்தைகள் கலைக்களஞ்சியம் என்று பத்து தொகுதிகளில் வெளீயிட்டுள்ளார்.

குழந்தைகளுக்கான பத்திரிகைகள்

குழந்தை இலக்கியத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியது குழந்தை இதழ்கள் ஆகும். 1951 ஆம் ஆண்டில் தான் உலக அளவில் முதல் சிறுவர் இதழ் ஜான் நியூஸரி என்பவரால் இங்கிலாந்தில் ‘தி லில்லி புட்டியன்’ என்று தொடங்கப்பெற்றது. தமிழில் முதல் குழந்தை இலக்கிய இதழ் ‘பால தீபிகை’ நாகர்கோவிலில் காலாண்டிதழாகத் தொடங்கப்பெற்றது. பின்னர் 1849 ஆம் ஆண்டு ‘நேசத்தோழன்’ என்னும் காலாண்டிதழ் பாளையங்கோட்டையில் வெளிவந்தது. 1956 ஆம் ஆண்டு ஜோஸப் பால்மோர் என்பவர் ‘பாலியர் மித்ரன்’ எனும் மாத இதழை வெளியிட்டார். இதுதான் முதல் மாத இதழாகும். பின் தமிழில் குழந்தை இதழ்கள் வளர்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெரும் பங்கு உண்டு. 1980 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஏராளமான குழந்தை இதழ்கள் பல்வேறு ஆசிரியர்கள், நிறுவனங்களாலும் வெளிவந்தன. காலங்கள் செல்லச் செல்ல குழந்தைகளுக்கென்று இதழ் வெளிவருவது குறைந்தது. தற்போது பதினைந்து இதழ்கள் மட்டுமே வெளிவருவதாகத் தெரிகிறது. தினசரி நாளிதழ்களான தினமலர், தினத்தந்தி, தி இந்து, தினமணி ஆகிய நாளிதழ்களில் குழந்தைகளுக்கான இணைப்பாக வெளியிட்டு வரும் இதழ்களே மிகுதியாக இருக்கிறது. குழந்தைகளுக்கென்று சில இதழ்கள் பெரிய எழுத்துக்களில் படங்களுடன் சில இதழ்கள் வெளிவருகின்றன.

குழந்தைக் கல்விக்கான ஊடகம்

குழந்தைகளுக்கான ஊடகம் தொடக்கத்தில் வானொலியாக இருந்தது. பின்பு தொலைக்காட்சி வெளிவந்த பின் குழந்தைகளுக்கென்று சிறுவர் நிகழ்ச்சிகளை பல ஆண்டுகளாக வழங்கி வருகின்றன. இவ்விரு கருவிகள் தோன்றிய காலம் முதலே குழந்தைகளுக்கான பங்களிப்புகளைச் செய்தவண்ணம் உள்ளன. தற்போது தனியார் தொலைக்காட்சி நிலையங்கள் பெருகிவிட்டதால் சிறுவர் நிகழ்ச்சிகளை பெரும்பாலும் ஒளிபரப்புகின்றன. அதில் வரும் நிகழ்ச்சிகள் குழந்தைகளைக் கவர்ந்து விற்பனைப் பொருள்களை அவர்கள் மீது சுமத்துகின்றனவே ஒழிய குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்குத் தேவையான செய்திகள் மிகக் குறைவாகவே உள்ளன. இத்தகைய தொலைக்காட்சிகளின் வழியாக, குழந்தைகளின் மொழித்திறனை வளப்படுத்துவது போலவும், குழந்தைகளை நூல்கள் வாசிக்கக் கற்றுக்கொடுக்கவும், காட்சி ஊடகங்கள் முயன்றால் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கும் பெரிதும் நலம் சிறக்கும்.

சின்னத்திரைகளில் குழந்தைகளைக் கொண்டு உருவாக்கப் பெறும் தொடர்களில் குழந்தைகளானது அழ.வள்ளியப்பாவின் நீலா மாலா தொடர், விக்கிரமாதித்தன் கதை போன்றவை தோற்ற காலத்தில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றன. தற்போது குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் வியாபாரமே. அறிவுப் பரப்புதல்களோ, கற்றுத் தருபவையோ மிகக் குறைவு. பொழுதுபோக்கு அம்சமாகவும் விற்பனைக் கூடமாகவும், புதிய விற்பனைப் பொருட்களை அறிமுகப்படுத்தி மடைமாற்றம் செய்வதுமான வேலைகளைச் செய்கின்றன.

ஆய்வுகள்

குழந்தை இலக்கியத்திற்கான ஆய்வுகள் பெருமளவு வெளிவர வேண்டும். தமிழ்மொழியில் குழந்தை இலக்கிய ஆய்வுகள் குறிப்பிட்ட படைப்பாளர்களின் படைப்புகளை எடுத்து ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ்மொழியில் ஆய்வுகள் சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரை மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் குழந்தைகள், குழந்தை இலக்கியம் தொடர்பான ஆய்வுகள் அரிதாகவே மேற்கொள்ளப்படுகின்றன. மேலைநாடுகளில் குழந்தை இலக்கியம் தொடர்பான ஆய்வுகள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பல்வேறு பொருண்மைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன. உதாரணமாக கலாச்சாரம், மொழி, பண்பாடு, சமூகவியல், உளவியல் போன்ற முறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் தமிழில் குழந்தை இலக்கிய ஆய்வுகள் என்பது குழந்தைப்பாடல்கள், கதைகள், நாவல்கள் என படைப்பாளிகளின் படைப்புகளான பொதுவான தலைப்புகளில் தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ் மொழியில் குழந்தை இலக்கிய ஆய்வை பல்வேறு தன்மைகளில் மேற்கொண்டு குழந்தை இலக்கிய ஆய்வுத்துறையை மேம்படுத்த வேண்டும்.

பதிப்பகங்கள்

இன்று தமிழில் பல்வேறு பதிப்பகங்கள் குழந்தை இலக்கியப் படைப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதில் பழனியப்பா பிரதர்ஸ், மணிவாசகர் பதிப்பகம், வானதி பதிப்பகம், ஐந்திணைப் பதிப்பகம், பாரதி புத்தகாலயம் ஆகிய பதிப்பகங்களில் ஆய்வு நூல்கள் வெளியிட்டு வருகின்றன. ஆனாலும் குழந்தை இலக்கிய நூல்களுக்கு முக்கியத்துவம் அளித்து பெருமளவு குழந்தை இலக்கிய நூல்களை வெளியிடுகின்றன. பாரதி புத்தகாலயம் புக்ஸ் பார் சில்ரன் என்ற பதிப்பு மூலம் கல்வி, குழந்தை இலக்கியம் தொடர்பான நூல்களை வெளியிட்டு வருகின்றது. இன்று பல பதிப்பகங்கள் குழந்தை இலக்கிய நூல்களை வெளியிடுகின்றன. பழனியப்பா பிரதர்ஸ் புத்தக நிலையம் குழந்தை இலக்கிய நூல்களை வெளியிட்டு குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிவருகின்றது. இந்திய அளவில் நேசனல் புத்தக டிரஸ்ட் இந்திய மொழிகளில் அனைத்து மொழிகளில் வெளிவரும் குழந்தை இலக்கிய நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுகின்றது. முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, விற்பனையாளர் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் சென்னை. இதன் வாயிலாக குழந்தைகள் இலக்கியத்திற்கு வலுசேர்க்கும் விதத்தில் சிறந்த நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வகையில் வசீலி சுகம்லீன்ஸ்கி இதயம் தருவோம், குழந்தைகள், குழந்தைகளுக்கு, ஷ.அமனஷ்வீலி குழந்தைகள் வாழ்க, அ.வி.பெத்ரோவ்ஸ்கி பருவ மற்றும் கல்வி உளவியல் போன்ற சிறந்த நூல்கள் குழந்தைகளைப்பற்றி அறிந்து கொண்டு குழந்தை இலக்கியம் படைப்பவர்களுக்கும், குழந்தைகள் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கும் சிறந்த நூல்களை ரஷ்யாவில் இருந்து முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்டு

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் பெரும் பங்காற்றுகின்றன. தமிழில் குழந்தைகள் நூல்கள் வெளிவருவதற்கும் அடித்தளமிட்டது முன்னேற்றப் பதிப்பகத்தின் குழந்தைகள் நூல்கள் என்று தான் கூற வேண்டும். குழந்தை உளவியல் குழந்தை இலக்கியம் தொடர்பாக ஆய்வு செய்பவர்கள், குழந்தை இலக்கிய செயற்பாட்டாளர்கள் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல்களை வெளியிட்டுள்ளது. ஆனால் தமிழில் இதனைப் போன்ற நூல்கள் வருவதற்கு முன்னோடி நூல்கள் ஆகும்.

முன்னேற்றப் பதிப்பகத்தின் வாயிலாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு தமிழுக்கு கதைகள், நாவல், சமூகஅரசியல், சமூகவிஞ்ஞானம், குழந்தை உளவியல், கல்வி, மனநலம் என அனைத்துத்துறை நூல்களையும் மொழிபெயர்த்து நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்து தமிழ் மொழிக்கு வளம் சேர்த்துள்ளது.

முடிபாகச் சில

குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு மத்திய மாநில அரசுகள் தனியாக நிதிகளை ஒதுக்கி நூலகங்கள் தொடங்கவும், நூல்களைத் தொகுக்கவும், அதற்கான கல்வி முறைகளை உருவாக்கவும் செய்தால் குழந்தைகளின் கல்விவழியாகக் குழந்தை இலக்கியம் வளம் பெறும். தற்போதுள்ள இலக்கிய சங்கங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆண்டுதோறும் குழந்தை இலக்கியத்திற்கான சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் போன்றவற்றை நடத்தவேண்டும். குழந்தைகளுக்கான கல்வியையும் குழந்தை இலக்கியத்திற்கான வளர்ச்சியையும் சிந்திக்காமல் சீர்படுத்தாமல் குழந்தைகள் தினம் போன்ற கொண்டாட்டங்களால் சிறிதும் பயனில்லை என்றே எண்ணமுடிகிறது. குழந்தை இலக்கியம் படைப்பாளர்களையும், கல்வியையும் ஊக்கப்படுத்த அவர்களுக்கென்று ஊக்கத்தொகை வழங்கினால் குழந்தை இலக்கியம் பலம்பெறும் என்று தற்போதைய கல்வியின் வழியாக அறிய முடிகிறது.

- த.நிர்மல் கருணாகரன்

Pin It