children story 450கதை கேட்பதில் ஆர்வமில்லாத சிறார்கள் யாரும் உலகத்தில் இருப்பார்களா என்ன? அவர்களுக்கு சுவையான கதைகளைச் சொல்வதற்குத்தான் இக்காலத்தில் ஆட்கள் குறைந்துவிட்டனர். சுமார் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பாட்டிமாரும் அம்மாமார்களும் படிக்காதவர்களாக இருந்தாலும் நிரம்பக் கதைகளைச் சொல்கிறவர்களாக இருந்தனர். குழந்தைகளுக்குக் கதைகளைச் சொல்லி உறங்கவைப்பது ஒரு வழக்கமாகவே அந்தக்காலங்களில் நடைமுறையில் இருந்தது.

முதல்நாள் தூங்குவதற்கு முன்புவரை கேட்டிருந்த கதையின் தொடர்ச்சியை மறுநாள் சொல்லச் சொல்லி குழந்தைகள் அடம் பிடிப்பதும் மறுபடியும் அவர்கள் அக்கதைகளைச் சொல்வதும் இப்படியாக தினந்தினம் கதைகளைச் சொல்லிக் குழந்தைகளை உற்சாகப்படுத்துவதும் உறங்கவைப்பதும் பெரும்பாலான வீடுகளில் நடந்து வந்தவைதான்.

கதைசொல்லிகளின் தாத்தாக்களும் பாட்டிகளும் அவர்களுக்குச் சொன்ன கதைகளை தங்கள் சந்ததியினருக்கு வழிவழியாகச் சொல்லி வந்த காலம் நவீன விஞ்ஞான காலத்தில் தடைபட்டுப் போனது.

கதைசொல்லும் நாட்டார் மரபு இன்றைக்கு மங்கி மறைந்துவிட்டபோதிலும் அந்த இடைவெளியை நிரப்பும்வண்ணம் இன்றைய காலத்திற்கேற்றவாறு புதிதுபுதிதான வடிவங்களில் விஞ்ஞானக் கதைகள், விளையாட்டுக் கதைகள், விழிப்புணர்வுக் கதைகள், அறிஞர்களின் கதைகள் எனப் பல்வேறு எழுத்தாளர்கள் பல மொழிகளில் சிறார்களுக்கான கதைகளை எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.

நம் காலத்துச் சிறார்களுக்கு அக்கதைகள் மகிழ்வூட்டுவதோடு அறிவுணர்ச்சியை அகலப்படுத்தவும் செய்கின்றன. தமிழில் சிறார்களுக்கான படைப்புகளை வெளியிடுவதற்கென்றே தனித்தனியான பதிப்பு நிறுவனங்களை பல பதிப்பகங்களும் உருவாக்கி சிறார் நூல்களை அதிகளவில் வெளியிட்டு வருகின்றன. அந்தளவிற்கு சிறார் இலக்கியம் இன்றைய அவசியத் தேவைகளில் ஒன்றாக மாறியிருப்பதோடு சிறார்களும் பல கல்வி நிறுவனங்களும் அவற்றை வாங்கிப் பயன்பெற்று வருவதையும் காணமுடிகிறது.

புதிய வடிவங்களில் புதிய பாணிகளில் பலவிதமாக கதைகள் ஒருபுறம் வந்தாலும் இப்பிரபஞ்ச வெளியில் பன்னெடுங் காலமாக உலவிக்கொண்டிருக்கும் காக்கா கதை, நரி கதை, நாடோடிக் கதை, நாட்டுப்புறக்கதை, பேய்க்கதை, ராஜாராணி கதை, திருடன் கதை, தந்திரக்கதை, ஏமாற்றுக்கதை, சாகசக்கதை, அரண்மனைக்கதை, குதிரைவீரன் கதை, கடவுளர் கதை, நீதிக்கதை, புராணக்கதை, தேவதைக் கதை போன்ற லட்சக்கணக்கான கதைகளின் மேல் சிறார்களுக்கு இயல்பாக ஏற்படும் ஆர்வமும் விருப்பமும் அலாதியானவை. குழந்தைகளுக்கு பாட்டிமார்களின் அல்லது செவிவழிக் கதைகளின் மீதான லயிப்பும் சுவாரஸ்யமும் வற்றிப் போவதேயில்லை என்பதோடு அக்கதைகளுக்கான மவுசு இன்றைக்கும் இருக்கிறது என்பதை குழந்தைகளுடனான கதைவழி உரையாடல்களின் வாயிலாகப் புரிந்துகொள்ளமுடியும்.

அவ்வகையில் சமீபத்தில் வெளிவந்து கவனம் பெற்றுள்ள ஒரு சிறார் நூலை பார்க்கலாம்.

‘குழந்தைகளுக்கான ஆப்பிரிக்கப் பழங்கதைகள்‘ என்ற தலைப்பில் நெஸ்லிங் புக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. (இது சிறார்களுக்கான நூல்களை மட்டும் வெளியிடுவதற்காக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தாரால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனமாகும்).

சுமார் முப்பதாண்டுகளுக்கு முன்புவரை சிறார் இலக்கியத்திற்காக சிரத்தையோடும் சீர்மையோடும் நூல்களை வெளியிட்டு வந்த சோவியத் ஒன்றியம் ஆங்கிலத்தில்  வெளியிட்ட அற்புதமான நூல்களில் இதுவுமொன்றாகும். எஸ்.பி.ஸாக்ஸ் என்பவர்

தொகுத்த இந்நூலை எம்.பாண்டியராஜன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இத்தொகுப்புக்கான முன்னுரையில்,

“நூலைப் படிக்கத் தொடங்கியதுமே குழந்தையாக உணரமுடிந்தது. ஆப்பிரிக்காவாக இருந்தாலும் சரி, அமெரிக்காவாக இருந்தாலும் சரி, குழந்தைகள் குழந்தைகள்தான். குழந்தைகளுக்கான கதைகளும்கூட அப்படித்தான். படிக்கும்போதே இந்தக் கதைகளில் பல கதைகள், ஏற்கனவே சில மாற்றங்களுடன், வெவ்வேறு வடிவங்களில் என்னுடைய அப்பத்தாவோ அம்மாவோ சொன்னவற்றையட்டி இருந்தன.’’ என்று மொழிபெயர்ப்பாளர் குறிப்பிடுகிறார்.

இக்கதைகளை வாசிக்கிற ஒவ்வொருவரும் மேற்கண்ட வரிகளின் உண்மைத்தன்மையை கண்கூடாக உணரமுடியும்.

இத்தொகுப்பில் சிறிதும் பெரிதுமாக மொத்தம் 42 கதைகள் இடம் பெற்றுள்ளன. கதைகள் எப்படி எங்கிருந்து யாரிடமிருந்து தோன்றின என்று கதைகள் உருவான கதைகளைப் பற்றி உலகெங்கும் ஏராளமான கதைகள் உள்ளன. அவ்வகையில் ஆப்பிரிக்கக் கதைகள் எவ்வாறு உருவாகின என்பதைச் சொல்லும் சுவாரஸ்யமான கதை இதுதான்.

தான் வாழும் பகுதியிலுள்ள எக்கச்சக்கமான வீடுகளுக்குச் சென்றுவரும் ஒரு சுண்டெலி தான் பார்த்த பல விசயங்களிலிருந்து கதைகளை உருவாக்குகிறது. அக்கதைகளைத் தன் குழந்தைகளாக நினைத்து அவற்றிற்கு விதவிதமான வண்ணங்களில் சட்டை களைப் போட்டுப் பார்த்து மகிழ்கிறது அந்த சுண்டெலி. அந்தக் கதைகள் சுண்டெலிக்கு ஒத்தாசை யாக வீட்டுவேலைகளையெல்லாம் செய்து வந்தன. சுண்டெலி வசித்து வந்த பழையவீட்டின் கதவை ஒருநாள் செம்மறி ஆடு ஒன்று உடைத்துவிடுவதால் கதைகள் எல்லாம் வெளியே வந்துவிட்டன. அதாவது சுண்டெலியின் குழந்தைகள்தான் இப்பவும் கதைகளாக இப்பூமியில் உலவிக்கொண்டிருக்கின்றன.

இத்தொகுப்பிலுள்ள கதைகள் சிறார்கள் மிகவும் விரும்பிப் படிக்கும் வகையில் அமைந்துள்ளதோடு மட்டுமல்லாது பெரியவர்கள் படித்துவிட்டு தங்கள் குழந்தைகளுக்கு சுவையாகச் சொல்லும் விதமாகவும் எளிமையாக சொல்லப்பட்டுள்ளன. குழந்தைகள் மிகமிக விரும்பும் இனிமையான உலகமான விலங்குகளைச் சுற்றியே பெரும்பாலான கதைகள் அமைந்துள்ளன. நாய், பூனை, முயல், ஆடு, கோழிக்குஞ்சு போன்ற வீட்டுவளர்ப்புப் பிராணிகள் தொடர்பான கதைகள் இத்தொகுப்பில் அதிகளவில் இடம்பெற்றுள்ளன.

  அவற்றோடு பருந்து, தவளை, குரங்கு, கழுதை, முதலை, நரி, சிங்கம் போன்ற விலங்குகள் தொடர்பான கதைகளும் நிறைந்துள்ளன. பொதுவாக நாம் படித்திருக்கிற அல்லது கேட்டிருக்கிற விலங்குகள் கதைகளுக்கும் இத்தொகுப்பிலுள்ள கதைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இக்கதைகள் அறிவுபூர்வமான எவற்றையும் முன்வைப்பதில்லை. நீதி போதிப்பதில்லை. குழந்தைகளின் மன உலகை குதூகலப்படுத்தவும் அவர்களது கற்பனைத்திறனுக்கு தீனி போடவும் மட்டுமே செய்கின்றன. இக்கதைகள். வழக்கமான சிறார் கதைகளில் காணப்படும் அறச் சிந்தனை, நீதி போதனை, குற்றத்திற்கான தண்டனை, நயவஞ்சகம், ஏமாற்று, பழிவாங்கல் போன்ற அம்சங்களை இக்கதைகள் முதன்மைப்படுத்தவில்லை என்பதே இவற்றின் சிறப்பம்சம் எனக் கூறலாம்.

பண்டைய நம்பிக்கைகள், பழங்காலத்தைய கற்பனைகளை அடிப்படையாகக் கொண்டுள்ள இக்கதைகளை விஞ்ஞானப் பார்வையுடனோ கல்வியறிவுக் கண்கொண்டோ ஆராயாமல் குழந்தைகள் வாசித்தால் இவை கதைகள் என்ற வகையில் அவர்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமான உணர்வைத் தருவதாக அமையும்.

உதாரணமாக, ‘பூனைகள் ஏன் சமையலறையில் பெண்களின் காலடியில் சுற்றிக்கொண்டு திரிகின்றன‘ என்பதற்கான காரணத்தைச் சொல்வதாக அமைந்துள்ள இக்கதையைக் கூறலாம்.

முன்னொரு காலத்தில் வாழ்ந்த பூனையன்று சிங்கம்தான் உலகத்திலேயே மிகுந்த பலசாலி என்று நினைத்துக்கொண்டிருந்தது. ஒருநாள் அந்த சிங்கத்தை ஒரு யானை கொன்றுவிட்டது. அன்றுமுதல் யானைதான் மிகுந்த பலசாலி என்று நம்பத் தொடங்கியது பூனை. அந்த யானையை ஒருநாள் ஒரு வேட்டைக்காரன் சுட்டுக்கொன்றுவிட்டான். அப்போது யானையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மனிதன்தான் மிகுந்த பலசாலி என்று தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டது. வேட்டைக்காரனின் வீட்டுக்குச் சென்ற  பூனை அவனிடமிருந்த துப்பாக்கியை அவனுடைய மனைவி வாங்கிச் செல்வதைப் பார்த்தது. யானையைக் கொன்றவனிடமிருந்து துப்பாக்கியை வாங்கிச் செல்லும் அவனது மனைவியே மிகப் பெரிய பலசாலி என்று நம்பி அந்தப் பெண்ணுடனேயே இருந்துவிடுவது என்று முடிவு செய்து அன்றிலிருந்து அடுப்பங்கரையிலேயே அவளோடு தங்கிவிட்டது.

இவ்விதமாக நம்பிக்கைகள் வாயிலாக அமைந்துள்ள கதைகள் இத்தொகுப்பில் நிறைய இடம் பெற்றுள்ளன. வெவ்வேறான காரணங்களை வெளிப்படுத்தும் வகையில் கீழுள்ள தலைப்பிலான கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான மன உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளன. இவற்றை வாசிக்கும் சிறார்களுக்கு கற்பனை ஆற்றலையும் சிந்தனை வளத்தையும் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்கித் தரவல்லன. 

‘பருந்துகள் ஏன் கோழிக்குஞ்சுகளைத் தின்கின்றன?‘, ‘நாயும் கோழியும் எவ்வாறு வீட்டு விலங்குகளாயின?‘, ‘பச்சோந்தி ஏன் தலையை ஆட்டிக்கொண்டே இருக்கிறது?‘, ‘முதலை ஏன் கோழிகளைத் தின்பதில்லை?‘, ‘நாய் ஏன் மனிதனின் நண்பனாக இருக்கிறது?‘, ‘மழையும் நெருப்பும் எதிரிகளாக இருப்பது ஏன்?‘, ‘சூரியனும் சந்திரனும் ஏன் வானத்தில் வசிக்கின்றனர்?‘ ஆகிய கதைகள் புதியதான பல சிந்தனைகளை குழந்தைகள் மனதில் உருவாக்கும் விதமானவை.

கதையைப் படித்துவிட்டு இன்னொருவருக்கு சுவாரஸ்யமாகக் கதை சொல்வதற்கான வாய்ப்பான பல கதைகளில் ஒன்றாக ‘உலகின் மிக நீண்ட கதை‘ எனும் கதையைப் பார்க்கலாம்.

உலகின் நீண்ட கதையை யார் சொல்கிறார்களோ அவருக்கு பரிசுப் பொருட்கள் தருவதாக ஒரு நாட்டு அரசன் அறிவிக்கிறான். அரசனிடம் செல்லும் சிறுவனொருவன் தான் உலகின் நீண்ட கதையைச் சொல்வதாகச் சொல்லிவிட்டுத் தொடங்குகிறான்.

ஒரு ஊரில் பெருந்தீனிக்காரன் ஒருவன் இருந்தான். அவனுக்கு எவ்வளவு சாப்பிட்டும் பசி அடங்கவேயில்லை. இதனைக் கேள்விப்பட்ட அந்நாட்டின் தலைவன் ‘அவனை என்னிடம் அழைத்து வாருங்கள், அவனுக்கு திருப்தியாக நான் சாப்பாடு போடுகிறேன்‘ என்று சொன்னான். அவனுக்காக பல்லாயிரக்கணக்கான பாத்திரங்களில் இறைச்சி. சூப், பழங்கள் எல்லாவற்றையும் கொண்டு வரச் சொல்லி அந்தப் பெருந்தீனிக்காரனிடம் கொடுத்தான். அவன் சாப்பிடத் தொடங்கினான், சாப்பிட்டான், சாப்பிட்டான் என்று கதையைச் சொன்னான் சிறுவன்.

கதையைக் கேட்ட அரசன் ‘அப்புறம் என்ன நடந்தது‘ என்று கேட்டான்.

‘சற்று பொறுங்கள் மன்னரே, இப்பொழுதுதானே முதல் பானையை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான், இன்னும் பல்லாயிரம் பானைகள் இருக்கின்றனவே‘ என்றான்.

இப்படியாக மன்னர் கேட்கும்போதெல்லாம் அவன் சாப்பிட்டான், சாப்பிட்டான், தண்ணீர் குடித்தான், சாப்பிட்டான் சாப்பிட்டான் என்றே சொல்லிக்கொண்டிருந்தான். அரசனுக்குப் புரிந்துவிட்டது. அவன் சாப்பிட்டு முடியும் வரை கதை முடியாது, எனவே இதுவே உலகின் மிக நீண்ட கதை என்று சொல்லி பரிசுகளை அச்சிறுவனுக்குக் கொடுத்தான் அரசன்.

உலகின் நீண்ட கதையைப் போலவே பொதுவில் எல்லாக் கதைகளுமே முடிவில்லாதவை. ஒரு கதை வேறொரு கதையாக மாறி அந்தக் கதை மறுபடியும் வேறொரு கதையாக மாறி மாறி உலகெங்கும் பயணித்துக்கொண்டே இருக்கின்றன. ஒரு கதை பிறந்த இடத்திலிருந்து பயணப்பட்டு திரும்பவும் புறப்பட்ட இடத்திற்கே வரும்போது முழுமுற்றாக  மாறி யிருந்தாலும் அப்போதும் அக்கதை இன்னும்பல கதைகளை உருவாக்குகிற இன்னொரு ஆதிக்கதைதான்.

சோவியத் குடியரசு உலக மக்களுக்கு வழங்கிய அருஞ்செல்வங்களில் குறிப்பிடத்தக்கதான புத்தகங்கள் கணக்கிலடங்காதவை. அவற்றின் வடிவமைப்பும் அச்சாக்கமும் அசாத்தியமானவை. இன்றைக்கு சந்தையில் கிடைக்க வாய்ப்பில்லாத அப்படியான ஒரு நூலைத் தேர்வு செய்து கதைகளுக்கேற்ற சித்திரங்களை பொருத்தமாக அங்கங்கே இணைத்து தரமான மொழிபெயர்ப்பில் அனைவரும் வாசிக்கும்

வண்ணம் எளிமையான நடையில் தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கியிருக்கும் மொழிபெயர்ப்பாளர் எம்.பாண்டியராஜன் மற்றும் நெஸ்லிங் பதிப்பகத்தாரை  பாராட்டியே தீரவேண்டும்.

குழந்தைகளுக்கான ஆப்பிரிக்க பழங்கதைகள்

தமிழில் : எம். பாண்டியராஜன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41- பி, சிட்கோ இண்ட்ஸ்ட்ரியல் எஸ்டேட்

அம்பத்தூர், சென்னை - 600 098.

தொலைபேசி எண்: 044 - 26359906

விலை : ` 165/-

Pin It