சமூகத்தில் நிலவும் பாலின வேறுபாட்டின் தாக்கம் தமிழ்க் குழந்தை இலக்கியத்தில் பிரதிபலித்து உள்ளது. வீட்டின் ஓரத்தில் கனி தரும் மரமாக பெண் இருக்கிறாள் என்று பைபிளும், பெண் குடும்பத்தின் பெருமை என்று குரானும், தற்காத்து தற்கொண்டான் பேணி என்று வள்ளுவமும் கூறுவதிலிருந்து சமூகத்தில் ஆண் - பெண் பாலின சமத்துவமின்மை நிலவுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

பிள்ளைத் தமிழ் என்பது இறைவன் அல்லது சான்றோரின் பிள்ளைப் பருவத்தைப்பாடும் இலக்கிய மாகும். பிள்ளைத் தமிழில் பத்துப் பருவங்கள் பாடப் படுகின்றன. பாலின வேறுபாடு பிள்ளைத் தமிழிலே ஆரம்பித்து விடுகிறது. முதல் ஏழு பருவங்கள் ஒன்றாக இருப்பது எட்டு, ஒன்பது, பத்தாவது பருவங்கள் பெண் குழந்தைக்கு அம்மானை, நீராடல், ஊஞ்சல் என்று வேறுபடுகிறது.

குழந்தைகளுக்கான தாலாட்டுப் பாடல்களிலும் பாலின வேறுபாட்டின் தாக்கம் காணப்படுகிறது.

யானைப் படைகொண்டு சேனை பல வென்று உலகை ஆளப் பிறந்தவனாக ஆண் குழந்தை பாடப் படுகிறான். பெண் குழந்தை வீட்டின் பெருமையாகப் பாடப்படுகிறாள்.

நாடோடிப் பாடல்களிலும் ஆண் குழந்தைகளின் உயர்வுதான் பேசப்படுகிறது.

நாடோடிக் கதைகளில் பெண், இளவரசியாக சிறைபிடிக்கப்படுகிறாள். அவளை மீட்பவனாக இளவரசன் இருக்கிறான். பெண் சூனியக்காரியாக தீமை செய்கிறாள் அல்லது தேவதையாக நன்மை செய்கிறாள்.

‘தோசையம்மா தோசை

அம்மா சுட்ட தோசை

அரிசி மாவும் உளுந்து மாவும்

கலந்து சுட்ட தோசை

அப்பாவுக்கு நான்கு

அம்மாவுக்கு மூன்று

அண்ணனுக்கு இரண்டு

பாப்பாவுக்கு ஒன்று

தின்ன தின்ன ஆசை

திருப்பிக் கேட்டா பூசை’

என்ற குழந்தைப் பாடல் பள்ளியிலும் வீடுகளிலும் எல்லா குழந்தைகளும் பாடுவது. உணவில் கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள சமத்துவமின்மையை இப்பாடல் சுட்டிக் காட்டுகிறது. அம்மாவுக்கும் பாப்பாவுக்கும் உணவு குறைப்பு என்பது உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு என்பதோடு சம்பந்தப் பட்டது. எண்கள் கற்பிப்பதற்கான பாடல் என்று கூறப்பட்டாலும் மறைந்திருக்கும் உபதேசம் அது தான்.

அழ. வள்ளியப்பாவின் பிரபல பாடலான ‘வட்டமான தட்டு’வில் ‘கிட்டு நான்கு லட்டு, பட்டு நான்கு லட்டு’ என்று பாலின வேறுபாடின்றிக் கூறப் பட்டிருந்தாலும் அது எண்கள் கற்பிப்பதற்கான பாடல்தான்.

தமிழ்க் குழந்தை இலக்கியத்தில் பாலின வேறு பாட்டின் தாக்கத்தை மூன்றாக வகைப்படுத்த முடியும். ஆணாதிக்கக் கருத்தை ஏற்றுக்கொள்வதாக ஒரு வகை இருக்கிறது. பாலின சமத்துவத்திற்கு குரல் கொடுப்பதாக இரண்டாவது வகை இருக்கிறது. மூன்றாவது வகை ஆணை விட பெண்ணை உயர்த்திக் காட்டும் பெண்ணிய பார்வையில் இருக்கிறது.

அழ.வள்ளியப்பாவின் சில பாடல்கள் மரபான ஆணாதிக்கக் கருத்தை ஏற்றுக் கொள்ளும் விதமாக அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

‘மலரும் உள்ளம்’ தொகுதியில் வரும்

‘அழகு’ என்ற பாடலில்,

‘நாட்டுக்கு அழகு வளமை

நாவிற்கு அழகு இன்சொல்

....................’

என்று சொல்லிக் கொண்டு வரும் குழந்தைக் கவிஞர்

‘ஆணுக்கு அழகு வீரம்

பெண்ணுக்கு அழகு கற்பு’

என்று கூறுகிறார். ஆண் என்றால் வீரம், பெண் என்றால் கற்பொழுக்கம் என்கிற பழமைக் கருத்தை வலியுறுத்துகிறார். பெண்ணுக்கும் வீரம் தேவை, ஆணுக்கும் கற்பு தேவை என்பதுதான் சரியாக இருக்க முடியும் இல்லையா!

பாலின சமத்துவமின்மையின் காரணமாக ஆண் குழந்தைக்கு ஒரு பண்பாடும் பெண் குழந்தைக்கு ஒரு பண்பாடும் முன் வைக்கப்படுகிறது. இந்த வேறுபாடு அவர்கள் பயன்படுத்தும் பொருள் களிலும் எதிரொலிக்கிறது.

‘பட்டணம் போகிற மாமா’ என்கிற அழ.வள்ளியப்பாவின் பாடலில் மாமா வாங்கி வரும் பொருளாக ‘பெண்ணுக்கு ரப்பர் வளையல், பையனுக்கு சைக்கிள்’ என்பதாக இருக்கிறது.

‘மல்லிகை’ என்ற ஒரு பாடலில் அழகு மல்லிகையை மணமுள்ள மலரை பெண்கள் தலையில் சூடுகிறார்கள். ஆண்களால் சூட முடிய வில்லை என்று வருந்துவதாகக் கூறப்படுகிறது.

ஆண் குழந்தை என்றால் அவர்கள் விளை யாட்டு வேறு. பெண் குழந்தை என்றால் அவர்கள் விளையாட்டு வேறு என்பது பாலின வேறுபாட்டின் பண்பாடாக இருக்கிறது.

தம்பி சீனிவாசனின் ‘சவாரி’ என்ற பாட்டில் ஆண் குழந்தைகளின் விளையாட்டு குதிரை ஏற்றம், யானை ஏற்றம் என வருகிறது. இது வீரத்தோடு சம்பந்தப்பட்டது.

‘குதிரை எதற்கு? யானை எதற்கு?

குஷியாகச் சவாரி செய்வோமே.

எதிரே நிற்கும் எங்கள் அண்ணன்

என்னை ஏற்றிச் செல்வானே!’

‘சொப்புப் பெட்டி’ என்கிற தம்பி சீனிவாசனின் பாட்டு சோறு பொங்கி விளையாடும் பெண் குழந்தை பற்றியது.

‘அடுப்பு வேணும், துடுப்பு வேணும்

அண்டா செம்பு குடமும் வேணும்

தட்டு வேணும், முறமும் வேணும்

சட்டி வாளி கிண்ணம் வேணும்

அரிசி வேணும், பருப்பு வேணும்

அல்வா ஆக்க சீனி வேணும்

பெட்டி வேணும், எல்லாம் வைக்கப்

பெரிய சொப்புப் பெட்டி வேணும்’

வீரம் சம்பந்தமான ஆண் குழந்தை விளை யாட்டும் சமையல் சம்பந்தமான பெண் குழந்தை விளையாட்டும் பாலின வேறுபாட்டின் அடையாளந் தானே!

பாலின வேறுபாட்டின் அடிப்படையில் வகுக்கப்படும் ஆண் - பெண் பண்பாட்டு வேறுபாடு ஆண் குழந்தைக்கு படிப்பும் வேலையும் என்றும் பெண் குழந்தைக்கு பூவும் பொட்டும் நடனமும் பாட்டும் என்பதாகவும் இருக்கிறது.

‘மாப்பிள்ளையும் பெண்ணும்’ என்கிற அழ.வள்ளியப்பா பாடல் இவ்வாறு கூறுகிறது. கேலி செய்வதாக அமையும் பாட்டு இது.

‘பள்ளிக்கூடம் போனதில்லை.

படித்துப் பட்டம் பெற்றதில்லை.

மெள்ளக் கூட நடப்பதில்லை.

வேலை எதுவும் செய்வதில்லை.

என்ன மாப்பிள்ளை? - இவர்

என்ன மாப்பிள்ளை?

சடையில் பூவும் வைக்கவில்லை.

தலையைக் குனிந்து கொள்ளவில்லை.

நடனம் ஆடத் தெரியவில்லை.

நலுங்குப் பாட்டும் புரியவில்லை.

என்ன பெண்ணடி? - இவள்

என்ன பெண்ணடி?’

‘மலரும் மொட்டுகள்’ - என்கிற கவிஞர் இளம் பாரியின் பாடல் பெண் குழந்தையின் தேவையை இவ்வாறாக வகைப்படுத்துகிறது.

‘பொன்னும் பொருளும் தேவையோ?

புதிய ஆடை வேண்டுமோ?

சின்னச் செப்பில் ஆசையோ?

செல்வமே நீ சொல்லுவாய்,’

கவிஞர் தமிழவேள் கூட ‘சின்னப் பாப்பா’ பாடலில் இவ்வாறே வகைப்படுத்துகிறார்.

‘சின்னச் சின்னப் பாப்பா

சிங்காரப் பாப்பா

பூ வேணுமா உனக்குப்

பூ வேணுமா?

அழகான ரோஜா

வெள்ளை நிற முல்லை

காலை மலரும் தாமரை

மணக்கும் பவழ மல்லிகை’

என்று பெண் குழந்தையின் தேவை பூக்கள் என்று பாடுகிறார். ஆண் குழந்தையின் தேவை புத்தகமாக இருக்கிறது.

‘தம்பி, தம்பி புத்தகம் படி’ என்று அகநானூறு, புறநானூறு, ஆத்திசூடி, திருக்குறள், சிலப்பதிகாரம் என்று நூல்களை அடுக்கிக் காட்டி பாடுகிறார்கள்.

இது தமிழ்க் குழந்தை இலக்கியத்தில் பாலின வேறுபாட்டின் தாக்கம் காரணமாகவே நேருகிறது.

கோ.பெரியண்ணனின் சிறுவர் இன்னிசைப் பாடல்களும் இதே ராகத்தில்தான் ஒலிக்கிறது.

‘பள்ளிக்குச் சென்றிடுவாய் சின்ன பாப்பா!

பாடங்களை படித்திடுவாய் சின்ன பாப்பா!

வீட்டு வேலை செய்திடுவாய் சின்ன பாப்பா!

விரும்பிப் பாடி மகிழ்ந்திடுவாய் சின்ன பாப்பா!’

பெண் பிள்ளைக்கு புத்திமதி வேறு விதம்தான்.

‘நூலகம்’ பாடலில் பெரியண்ணன்,

‘வீணாய்க் காலம் போக்காமல்

விரும்பி நூலகம் சென்றிடடா - தம்பி

தூணாய் நின்று நம் நாட்டை

தூய அறிவால் உயர்த்திடடா!’

ஆண் பிள்ளைக்கு புத்திமதி சொல்வது வேறு விதம்தான். அறிவு சார்ந்தும் சமூகம் சார்ந்தும் ஆணுக்கு அறிவுரை வருகிறது. பெண் பிள்ளையை பள்ளிக்குப் போய் படி என்று சொன்னாலும் வீட்டு வேலையையும் கற்றிடுவாய் என்று சமையலறைக்குள் தான் அடைக்கிறார்கள். அதில் புரட்சிக் கவிஞர் கூட விதி விலக்கில்லை. ‘பெண்ணுக்கு கல்வி வேண்டும் - குடித்தனம் பேணுதற்கே’ என்கிறார்.

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் ‘பள்ளிப் பறவைகள்’ பாடல் தொகுப்பில் வரும் பாடல்களில் இவ்வேறுபாடு கூர்மையாக வெளிப்பட்டுள்ளது.

‘தம்பி! நீ தான் நாளை தலைவன்!

வெம்பிய கனி போல் வீணாகாதே!

நம்பிக்கை வை நீ ! நாட்டை உயர்த்துவாய்!’

என்று தம்பிகள்தான் முன் நிறுத்தப்படுகிறார்கள். எங்கும் தங்கைகள் முன் நிறுத்தப்படுவதில்லை. அரசியலிலும் சமூகப் பணிகளிலும் தங்கைகள் விலக்கப்படுவது தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் அடிநாதமாக இருக்கிறது.

தம்பிகளுக்கே நிறைய கருத்துக்களைக் கூறும் பாடல்களை எழுதும் பெருஞ்சித்திரனார் ‘தமிழ்த் தம்பியே உலகைத் திருத்தடா!’ என்ற பாடலில்,

‘தம்பியே இது கேள்! தங்கையே இது கேள்!

செம்பொன் மணி போல் சில உரை சொல்வேன்’

என்று ஒரே ஒரு பாடலில் மட்டும் தங்கையைச் சேர்ந்துள்ளார்.

தங்கைகள் வெளியிற் செல்ல நேர்ந்தால் தம்பிகளின் பார்வை அணுகாதபடி முக்காடிட்டுச் செல். அது உன் பெண்மையைப் பாதுகாக்கும் கருவி என்று ‘தோகையர் உபதேசம்’ என்கிற இஸ்லாமிய குழந்தை இலக்கிய நூல் உபதேசம் செய்கிறது.

‘ஆண் பிள்ளைகள் பார்வை

அணுகா முக்காடிட்டு

வீண் காரியங்களைச் செய்ய

விரும்பாதே புத்திரியே’

என்கிறது.

‘பெண் புத்தி மாலை’ என்கிற நூல்,

‘வீணான பேச்சுக்கு வாழ்நாளை

மாய்க்காதே மயிலே - கண்ணிற் காணா

காணாப் பிறைக்குக் கையேந்தி

நிற்காதே குயிலே’

என்று பெண் குழந்தைக்கு அடக்கத்தை உபதேசிக்கிறது.

பாலின சமத்துவத்திற்கான குரலாக பெண் கல்வி குறித்தான சிறுவர் பாடல்கள் வெளிப்பட்டு உள்ளன.

எழுபது ஆண்டுகளுக்கு முன் பாரதிதாசன் ‘தலை வாரிப் பூச்சூடி உன்னைப் பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை... படியாத பெண்ணாயிருந்தால் - கேலி பண்ணுவார்...’ என்று பெண் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய விஷயத்தைத்தான் ‘கேளு பாப்பா கேளு’ என்ற தனது சிறுவர் பாடலில்

‘எழுதப் படிக்கத் தெரியணும் பாப்பா

இல்லேன்னா எதிர்காலம் பாழாகும் பாப்பா’

என்று இப்போதும் உதயசங்கர் பாடவேண்டி யிருக்கிறது.

‘பள்ளிக்கூடம் போகாமலே மாரியம்மா

தீப்பெட்டி கம்பெனிக்கு

போனாளே மாரியம்மா’

என்று பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப் பட்டிருப்பதையும் பாடுகிறார் உதயசங்கர்.

பாலின சமத்துவத்திற்கான திறவுகோல் பெண் கல்விதான். அந்த முனைப்போடு சில சிறுவர் பாடல்கள் வந்துள்ளன.

கவிஞர் தமிழ் ஒளி ‘கல்வி’ பாடலில் தாய் மகளுக்குக் கூறுவது போல் இவ்வாறு வலியுறுத்து கிறார்.

‘வீட்டுக்கேற்ற விளக்கம்மா

வேண்டும் கல்வி உனக்கம்மா!

பாட்டுக் கேற்ற பண்ணம்மா!

படிக்க வேண்டும் பெண்ணம்மா.’

சென்னை வானொலி மூலம் தமிழ்நாட்டின் காற்றில் கலந்த பாடல் ஈரோடு தமிழன்பனின்,

‘பாடசாலை போக வேண்டும்

பாப்பா எழுந்திடு - செல்வப்

பாப்பா எழுந்திடு - அன்புப்

பாப்பா எழுந்திடு - அழகுப்

பையை நீயும் கையில் தூக்கிப்

பார்த்து நடந்திடு’

என்ற பாடலாகும்!

நகை மோகம் பெண்களுக்கான சாபம், பாப்பாக்களின் மனங்களிலிருந்தே அந்த ஆசையை அகற்றிட வேண்டுமென்பதற்காகப் பாடப்பட்ட சிறுவர் பாடல்களில் குறிப்பிடத்தக்கது கவிஞர் தமிழ் ஒளியின் ‘நகை வேண்டாம் பாப்பா’ என்ற பாடல்.

‘பச்சைக் கிளிக்கு நகையில்லை!

பாடுங்குயிலுக்கு மணியில்லை!

இச்சை மைனாப் பறவைக்கும்

ஏதும் கழுத்தில் நகையில்லை1

கச்சை சதங்கையில்லாமல்

காட்டில் ஆடும் மயிலுக்கும்

உச்சிக் கொண்டை நகையில்லை!

உனக்கேன் பாப்பா நகையெல்லாம்!’

பாரதிதாசனின் சிறுவர் பாடல்களிலும் நகைக்கு எதிரான உணர்வு அழுத்தமாகப் பதிவாகியிருக்கிறது.

‘அம்மா என் காதுக்கொரு தோடு - நீ

அவசியம் வாங்கி வந்து போடு!

........................................’

ஆபரணங்கள் இல்லையானால் - என்னை

யார் மதிப்பார் தெருவில் போனா?

என்று மகள் தாயைக் கேட்கிறாள்,

‘கற்பது பெண்களுக்கா பரணம் - கொம்புக்

கல் வைத்த நகை தீராத ரணம்’

என்று தாய் பதிலளிக்கிறாள்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பே பாலின சமத்துவத் திற்கான துணிச்சலான, முற்போக்கான பதிவு மகாகவி பாரதியினுடையது. மகள் சகுந்தலாவுக்காக அவர் எழுதிய ‘பாப்பா பாட்டு’ பெண் குழந்தை களுக்குரியது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

சமூக உணர்வு, மொழி உணர்வு, நாட்டுப் பற்று, இயற்கையின் மீது அன்பு கொள் என்று பெண் பிள்ளைகளுக்குக் கூறும் பாரதி,

‘பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்

பயங் கொள்ள லாகாது பாப்பா

மோதி மிதித்து விடு பாப்பா - அவர்

முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா’

என்று முன்பில்லாத புதுமையாக அவர்களுக்கு வீரத்தை அணிகலனாக்குகிறார்.

மூன்றாவது வகையான பெண்ணிய பார்வையில் சிறுவர் இலக்கிய படைப்புகள் பெண் பிள்ளையை உயர்வுபடுத்தியும் பெண் பிள்ளைகளின் பிரச்சனை களை முதன்மைப்படுத்தியும் வந்துள்ளன.

‘நிலவுக்குச் செல்வோம்’ என்ற கவிஞர் வெற்றிச் செழியனின் பாடல் வளர்மதி என்கிற பெண் குழந்தையை முதன்மைப்படுத்தி பாடுகிறது.

‘வண்ண வண்ணக் கனவுடனே வளர்மதி வந்தார்

வானில் பறந்து செல்கிற ஊர்தியை செய்தார்’

என்று வான்வெளிக்கு சென்றுவந்ததைப் பாடுகிறது.

‘விந்தை உலகில் விண்ணி’ என்கிற வெற்றிச் செழியனின் நாவல் விண்வெளியில் ஒரு செயற்கை நிலாவுக்கு சுற்றுலா செல்லும் குழுவிற்கு விண்ணி என்கிற பெண் பிள்ளை தலைமை தாங்குவதைப் பற்றி கூறுகிறது.

தமிழ்நாட்டில் பெண்ணியவாதிகள் குழந்தை பாலியல் துன்புறுத்தல் (Child Sexual abuse) பற்றி வெகுகாலமாகப் பேசி வருகிறார்கள். யெஸ்.பாலபாரதி எழுதிய ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்கிற நாவல் இப்பிரச்சினைப் பற்றி பேசுகிறது. குழந்தை களின் அந்தரங்கப் பகுதி மீது அந்நியர்களின் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் (Good Touch, Bad Touch) பற்றி எச்சரிக்கை செய்யும் உள்ளடக்கம் தமிழ்க் குழந்தை இலக்கியத்தில் புதிய வரவாகும்.

குழந்தை இலக்கியத்தில் எதை எழுதக் கூடாது என்பது முக்கியம் என்று குழந்தை இலக்கியத்தின் பிதாமகர் அழ.வள்ளியப்பா கூறுவார். எவரும் எழுதத் தயங்குகிற குழந்தைகளின் மீதான பாலியல் அத்து மீறலை பால பாரதி தொட்டிருப்பது வரவேற்கத் தக்கது. பெரும்பான்மையாக பெண் குழந்தைகளின் மீதே அத்துமீறல் நடக்கிறது. அதனால் இந்நாவல் பூஜா என்கிற சிறுமிக்கு நேர்ந்ததைக் கூறுகிறது. தமிழ்க் குழந்தை இலக்கியத்தில் பாலின வேறு பாட்டின் தாக்கம் குறித்து இன்றும் பேச வேண்டிய பரப்புகள் இருக்கின்றன. பெண் சிறுவர் இலக்கிய படைப்பாளிகள் என்ன சொல்லுகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். இக்கட்டுரையில் பாடல்களில் வரும் செய்திகள் குறித்தே அதிகம் பேசப்பட்டிருக்கிறது. சிறுகதை, நாவல், கட்டுரை, திரைப்படம், நாடகம் போன்ற பிரிவுகள் உள்ளன. இத்தலைப்பில் அவற்றில் வரும் கருத்துகள் குறித்துப் பின்னர் பார்ப்போம்.

Pin It