செய்யுள் கற்பித்தல் நீண்ட நெடிய மரபு கொண்டது. செய்யுளை ஓதுவதற்கேற்ப அருஞ்சொற்பொருளைச் சுட்டல், சந்தி, புணர்ச்சி விதிகளால் செய்யுளைப் பிரித்துக் காட்டல் பதப்பொருளைத் திரட்டிப் பொழிப்புரை தருதல், போன்ற படிநிலைகள் செய்யுள் கற்பித்தலில் உள்ளன. நமது குழந்தைகள் நமது செய்யுள் பாடல்களைக் கற்க வேண்டி ஔவையார் போன்ற புலவர் நேர்த்தியான, எளிமையான பாடல்கள் உருவாக்கி உள்ளனர்.

1)           ஆத்திசூடி

2             கொன்றை வேந்தன்

3)           மூதுரை

4) நல்வழி

5)           வெற்றி வேற்கை

6)           நன்னெறி

7)           உலகநீதி

erilanthamizhஇவற்றுள் முதல் நான்கு நூல்கள் ஔவையாராலும் ஐந்தாவது நூல் அதிவீரராம பாண்டியராலும், நன்னெறி சிவப்பிரகாசராலும் உலகநீதி உலோகநாதராலும் படைக்கப்பட்டன. இவைதாம் இங்கு ஏழிளந்தமிழ் என்று சுட்டப்பெறுகின்றன. இத்தொகுப்பினுள் அடங்கியுள்ள செய்யுட்களுக்கு பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் உரை எழுதியுள்ளார். அவரது உரையும் செய்யுள் நுட்பமும் கற்பித்தல் கோட்பாடுகளை உள்ளடக்கியுள்ளன (Pedogogic principles). இப்பாடல்களில் வரும் கருப்பொருளை (thematic or idea-tional content)) பௌத்த, சமண சமய அறக்கோட்பாட்டுடனும், திருக்குறள் போன்ற தமிழ் அறநூல்களுடனும் ஒப்புநோக்கிக் காணலாம். ஔவையார் என்ற பெயரே பௌத்தத்தோடு தொடர்புடைய பெயரோ?

அரிச்சுவடி அறிமுகம்:

"அறஞ் செய விரும்பு" என அறக்கருத்துகளைப் பட்டியலிடும்போதே அவற்றுடன் அரிச்சுவடியையும் கலந்து வழங்குகின்ற முறை மிகவும் கவனிக்கத் தக்கது. "அறஞ் செய விரும்பு" முதல் "அஃகஞ் சுருக்கேல்" என்பது வரை உயிரெழுத்துகள். அறஞ் செய விரும்பு என்பதனை அடுத்து ஆறுவது சினம் வருவதால் அ குறில் என்பதும் ஆ நெடில் என்பதும் வேறுபடுத்திக் காட்டப்படுகிறது. உச்சரிப்புப் பயிற்சி இந்த இணைகளைக் (pair of words) கொண்டு கற்பித்து விடலாம்.

"கண்டொன்று சொல்லேல்" முதல் "அனந்த லாடேல்" வரை மெய்யெழுத்துகளை அறிமுகம் செய்யும் பாடல்கள் அமைந்துள்ளன.

மொழி முதல் வரும் மெய்கள் (Initially occuring consonants), மொழி முதல் வாரா மெய்கள் (Initially non-occurring consonants) என்ற நிலையில் பாடல்கள் ஆக்கப்பட்டுள்ளவற்றை நிதானிக்கலாம். மெல்லின எழுத்துகளில் ஞகரம், நகரம், மகரம் ஆகிய மூன்றும் சொல் முதல் வரும்.

"ஞயம் பட வுரை"

"நன்றி மறவேல் "

"மன்று பறித்துண்ணேல்"

மற்ற மூன்று மெய்யெழுத்துக்கள் மொழி முதல் வாரா. எனவே அவற்றை இடையில் வைத்து செய்யுள் அமைந்துள்ளன.

"இணக்கமறிந் திணங்கு"

"அனந்த லாடேல்"

எழுத்து தன்னையே சுட்ட முதலில் வரலாம்.இதனை உணர்த்த "ஙப்போல் வளை" என்ற செய்யுள் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறே இடையின யெழுத்துகள் வருகை முறையையும் (distribution) கவனிக்கலாம். உயிர், மெய் எழுத்துகளைத் தொடர்ந்து உயிர்மெய் எழுத்துக்கள் அணி வகுக்கின்றன.

"கடிவது மற

காப்பது விரதம்

கிழமைப் படவாழ்

கீழ்மை யகற்று

குணமது கைவிடேல்

கூடிப் பிரியேல்"

க, கா, கி, கீ, கு, கூ என உயிர்மெய் எழுத்துக்கள் வரிசையில் உள்ளன.

ஔவையார் படைத்த கொன்றை வேந்தன் தொகுப்பிலும் உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்கள், என்ற நிரலில் செய்யுள்கள் அமைந்துள்ளன. "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" / "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" / "இல்லற மல்லது நல்லற மன்று" / "ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்" இங்கும் நெடுங்கணக்கு அறிமுகப்படுத்தி இருப்பதை அறிக!

சொற்களஞ்சியம்:

ஏழிளந்தமிழ் பாடல்களில் சொற்கள் எளிமையும் கடினமும் கொண்டு விளங்குவதனைக் காணலாம். அறம், சினம், ஆலயம், ஐயம், தேட்டை, ஈயார், போன்ற புதுச்சொற்களைக் கற்பிக்க வாய்ப்புள்ளது. தந்தை, தாய், அன்னை, பிதா போன்ற உறவுமுறைச் சொற்கள் அறிமுகப்படுத்தலாம்.

யானை, பூனை, பாம்பு, தேரை போன்ற விலங்குகளின் பெயர்கள் சொல்லிக் கொடுக்கலாம். தென்னை முதலாய மரங்களைக் கற்பிக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கேற்ற சொற்தேர்வுக்கும் பலவித பொருள் உறவுகளை (Sense relations) தொடர்பு படுத்திக் காட்டவும் முடியும். ஒரு சொல் பல பொருள், பல சொல் ஒரு பொருள், எதிர்ச்சொல், ஆகுபெயர் போன்றவற்றைப் பொருள் உறவுகள் என்பர்.

எளிய வாக்கியங்கள்:

தமிழ் மொழி அமைப்பில் இரு வகையான வாக்கியங்கள் எளிமையான அமைப்பைக் கொண்டவை. ஒன்று: 1) பெயர்+பெயர் (பயனிலை) எண்ணற்ற வாக்கியங்களை இவ்வமைப்பில் உருவாக்கலாம். ஆத்திசூடியில் உள்ள பாடல்களில் பெரும் பகுதியை இந்த அமைப்பில் அடக்கலாம். எடுத்துக்காட்டாக:

"ஏற்பது இகழ்ச்சி"

இச்செய்யுளில் 'ஏற்பது' என்பதும் 'இகழ்ச்சி' என்பதும் தொழிற்பெயர் தாம்.முதலில் வருவது எழுவாயாகவும், இரண்டாவது வருவது (பெயர்)பயனிலையாகவும் தொழிற்படுகின்றன. இம்மாதிரியான வாக்கியங்கள் வினையற்ற வாக்கியங்கள்.

'ஆறுவது சினம்'

'காப்பது விரதம்'

'ஏவாமக்கள் மூவாமருந்து'

'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்'

'மோனம் என்பது ஞான வரம்பு'

இவை யாவும் வினையில்லா வாக்கியங்கள்.

எளிய வினையோடமைந்து உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வரும் செய்யுள் பலப்பல.

‘ஐய மிட்டுண்'

‘ஒப்புர வொழுகு'

‘ஙப்போல் வளை'

‘ஞயம்பட வுரை'

‘இயல்வது கரவேல்'

எளியவற்றிலிருந்து கடினத்தை நோக்கிச் செல்வது கற்பித்தல் விதி. இவ்விதியை நமது பாரம்பரிய குழந்தைகளுக்கான பாடல்களில் பயன்படுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது.

திருப்புரை (Repetition):

எழுத்து, அசை, சீர், சொல், தொடர், வாக்கியம் ஆகிய மொழிக்கூறுகளைத் திருப்புரையாகப் பயன்படுத்துவது இலக்கிய உத்தியாகும். ஏழிளந்தமிழ் இவ்வுத்தியை வெற்றிகரமாகக் கையாண்டுள்ளது. ஆத்திசூடியில் -ஏல் என்னும் எதிர்மறை ஒட்டு திரும்பத் திரும்ப வந்து ஓசை நயம் பயக்கின்றது. எ-கா:

"மறவேல் / இடங்கொடேல் / விளம்பேல் / பேசேல் /இகழேல்"

அவ்வாறே கொன்றை வேந்தன் செய்யுள்களில் முதற் சீரும் மூன்றாவது சீரும் எதுகை பெற்று வருவது ( இரண்டாம் எழுத்து திருப்புரையாக ) ஓசை இன்பம் தருவதோடு சொல்ல வரும் கருத்தையும் வலியுறுத்துவதாய் அமைந்துள்ளன. எ-கா :

"அன்னையும் -------- முன்னறி

ஆலயம்--------- சாலவும்

இல்லறம்-------- நல்லறம்

ஈயார்------------ தீயார்

ஏவா---------- மூவா "

திருப்புரை உத்தி எளிதாக மனப்பாடம் செய்வதற்கும் ஏதுவாக அமைகிறது. மூதுரையில் அடிதோறும் எதுகை அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. ‘வேண்டாம்' என்ற சொல் திருப்புரையாக வந்து சில பாடல்கள் அமைந்துள்ளன. "ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்" என்ற பாடலில் வேண்டாம் என்ற சொல் திருப்புரையாக வந்து ஒழுங்கமைவு தருகின்றது. இப்படிப் பல கோணங்களிலும் ஒலி, ஓசை நயம் ஆகியவற்றைக் கற்பிக்க ஏழிளந்தமிழ் வழிவகை செய்கிறது.

கருத்து வளம்:

என்றும் எல்லா மக்களுக்கும் பொருந்தும் படியான நல்ல வாழ்க்கைக்குத் தேவையான வளமான கருத்துகளை ஏழிளந்தமிழ் வாரி வழங்குகின்றது. நல்லவற்றைத் தேர்வு செய்து குழந்தைகட்கு வழங்கலாம். கல்வி, வேளாண்மை, விருந்தோம்பல், சுற்றத்தோடு வாழ்தல், அறம் செய்தல், தீயவற்றினின்றும் விலகியிருத்தல், தாய் தந்தை பேணுதல் போன்ற கருத்துகள் கொண்ட பாடல்கள் உள்ளன. "ஆற்று வெள்ளத்தினால் உண்டாகும் மேடும் பள்ளமும் போலச் செல்வம் வளரும் குறையும் ; ஆதலால் வந்து இருப்பவர்களும் குச் சோறு இடுங்கள்; தண்ணீரும் கொடுங்கள். அதனால் மனம் தூய்மையுற்று விளங்கும் "(நல்வழி). பொருள் இருக்கும் போதே அறத்தைச் செய்க என்பதை வலியுறுத்தும் இப்பாடல் போல பல உள்ளன. "அறஞ் செய விரும்பு" என்ற ஒற்றை வரிப் பாடல் முதல் நான்கு வரி வெண்பா வரை பாடல்களை அளவு கருதித் தேர்வு செய்யலாம்.

இலக்கிய வளம்:

ஏழிளந்தமிழில் உள்ள பாடல்கள் இலக்கிய வளமும் நலமும் பெற்று மிளிர்கின்றன. சொல்ல வரும் செய்தியை நேரடியாகப் பளிச்சென்று சொல்லுதல் பல பாடல்களில் காண்கின்றோம். "சீரைத் தேடின் ஏரைத் தேடு" சிறப்பாக வாழ விரும்பின் உழு தொழிலைச் செய் என்று நேரடியாக சொல்ல வந்ததைச் சொல்லுதல். இதற்கு மாறாக குறிப்பாகப் பொருளை உணர்த்துவதும் சில செய்யுள்களில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக," யானைக்கில்லை தானமும் தருமமும்" யானைக்கு நீண்ட கை இருப்பினும் அது தானமும் தருமமும் செய்வதில்லை. செல்வம் பெருகி இருப்பவரெல்லாம் தானம் செய்வதில்லை.செய்வதற்கு மனம் வேண்டும். சொன்னதைக் கொண்டு சொல்லாததைக் குறிப்பால் உணர்தல் செய்யுள் பயிற்றுவித்தல் பாற்படும்.

இப்பாடல்களில் உவமையும் உருவகமும் அமைந்த பாடல்கள் உள்ளன.

"பொன்னின் குடமுடைந்தாற் பொன்னாகும் என்னாகும் / மண்ணின் குடமுடைந்தக் கால்",

"அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவை போல்",

மடைத்தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி யிருக்குமாம் கொக்கு",

நற்றா மரைக்கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல்"

இப்படிச் சிறந்த உவமைகளைத் தேர்ந்தெடுத்துக் கற்பிக்கலாம்.

சேர்க்கை விதிகள்:

பேரா.வ.சுப.மாணிக்கனார் தமிழுள்ளம் கொண்டவர். குழந்தைகளுக்காயினும் சந்தி, புணர்ச்சி விதிப்படி செய்யுள் கற்பிக்கப்பட வேண்டும் என்பது அவரது அவா. செய்யுளை எளிமைப்படுத்துகிறோம் என்று சீரையும் அசையையும் குலைப்பது அவருக்கு உடன்பாடன்று. இரட்டைக்காப்பியங்கள் பதிப்புரையில் முன்னுரையில் இதனை வலியுறுத்துவார்.

உயிர் முன் உயிர்

உயிர் முன் மெய்

மெய் முன் உயிர்

மெய் முன் மெய்

குற்றுயிர் முன் உயிர்

குற்றுயிர் முன் மெய்

இவை அடையும் மாற்றங்களைக் குழந்தைகள் கற்க வேண்டும் என்பதே அவரது அறிவுரை.

1) ஞயம்பட வுரை (உரை)

2) இல்லற மல்லது நல்லற மில்லை

3) உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு.

4) குற்றம் பார்க்கிற் சுற்ற மில்லை

5) புணைமீ தல்லது நெடும் புனல் ஏகேல்.

புணை மீது அல்லது என்றோ; குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்றோ எளிமைப்படுத்தி அச்சிட்டுக் கற்பதை அவர் பரிந்துரை செய்யவில்லை. ஒரு சில விதிகள், தான். அவற்றை மாணவர்களுக்குத் தொடக்கத்திலேயே கற்பிக்க வேண்டும்.

முடிவுரை:

ஏழிளந்தமிழில் குழந்தைகளுக் கேற்ற அருமையான பாடல்கள் உள்ளன. அவை நமது பழைய புலவர்களால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டவை. எளிமையை மனதில் கொண்டு படைக்கப்பட்ட வை. பண்டை தமிழ்ச் செய்யுட்களைக் கற்கச் சாளரங்களாக விளங்குகின்றன.தற்கால குழந்தைக் கவிஞர்களின் பாடல் மிகவும் எளிதானவை. மொழி கற்பிப்பது தனி மனிதனின் மொழி நடத்தையை மாற்றியமைப்பது மட்டுமன்று. அது ஒரு மொழி வளர்ச்சியோடு தொடர்புடைய நடவடிக்கையுமாகும். நமது செய்யுள், இலக்கியங்களைக் கற்பதும் கற்பிப்பதும் நல்ல மனப் பாங்கு உருவாக அடிப்படையாக அமையும். குழந்தைகளுக்கு இளமையிலே இதனை ஏற்படுத்த வேண்டும். ஏழிளந்தமிழ் இதற்கு உற்ற துணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

குறிப்பு:

தஞ்சை பேரா.மு இளமுருகன் இல்லத் திருமண ‘விழாவில்' ஏழிளந்தமிழ்' நூல் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. இக்கட்டுரைக்கு இந்நூலே தரவுத்தளம். அவர்க்கு நன்றி.

துணை நூல்கள்:

1)           ஏழிளந்தமிழ், (2023) வெளியீடு: ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, தஞ்சாவூர்.

2)           சிவத்தம்பி, தமிழ் கற்பித்தலில் உன்னதம். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் லிமிடெட், சென்னை

- ஆ.கார்த்திகேயன்

Pin It