கோவை மாநகரம் என்று தான் பேர். இரவு 11 மணிக்கு சாலையில் ஆட்கள் இல்லை. குளிர் வேறு. இரண்டு நாட்களின் அலைச்சல் வேறு. பேருந்து விட்டு இறங்கியதும் பெரிதாய் ஆனது போன்ற பிரமிப்பு. மெல்ல நிலவில் நடப்பதாக நினைப்பு. பைக்கை ஸ்டாண்டில் இருந்து எடுத்து கொண்டு வீடு நோக்கிய தனித்த பயணம். இரவும் குளிரும்... அயர்ச்சியும் சோர்வுமாக வண்டி சாலையில். நானோ மனமென்னும் பாலையில்.

வீடடைகையில் நள்ளிரவு 12. குளித்து.... படுக்கையில்... விழித்தே தூங்கலாம் போல. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். நடப்பவைகளின் வழியே நடந்து கொண்டிருப்பது எல்லாம் தான் நாம்.

ஹேங் ஓவர்

தூக்கத்தில் ஒரு டஸ்கி கனவு. கனவில்லை என்றால் கண்கள் இரவில் என்னாகும்.

அப்படி ஒரு முடிவு எடுத்திருக்க கூடாது. ஆனாலும் அதில் ஓர் அனுபவம்.

தேனி to திருப்பூர் பேருந்தில் அன்பன் விவெ உடன் பேசிக் கொண்டே பயணம். பொதுவாக கோவை பேருந்தில் என்னோடு வந்து.. விவெவுக்கு நிகழ்ந்திருக்க வேண்டியது. இந்த பக்கம் நான் அந்த பக்கம் விவெ என்று ஒரு சின்ன நிகழ் மாற்றம். சித்திரம் எனக்கு. வெறும் தூக்கம் தான் விவெக்கு. ஹாஹ்...

வாரா நதியில் கால் நனைக்க காத்திருப்பது போல... தாராபுரம் பேருந்து நிலையத்தில் நிற்பது... புதிது. இரவு நேரம் கூடுகிறது. இரவு பாரமும் கூடுகிறது. வேடிக்கை மனம் கொண்டதால் விதியை கவனிக்க ஆரம்பித்தேன்.

ஒரு தள்ளுவண்டி பழக்கடை. பெருந்தோழிகள் போல. நின்று விற்றுக் கொண்டிருந்தவளுக்கு... அருகே... குண்டு குண்டென... சிவப்பு சேலையில்... கட்டை உடல்வாகில்... கம்பீர நடையில் வந்து நின்றாள்...ஒன்றரைத்தி.

வண்டியில் இருந்த ஒரு கொய்யா பழத்தை எடுத்து படக்கென்று கடித்துக் கொண்டாள். கடைக்காரி அர்த்தத்தோடு பார்த்தாள்.

"நேரம் என்னாகுதுனு பாத்தியா... இனி யார் வந்து வாங்க போறா.. கிளம்பு போலாம்..." என்றாள்.

பேசும் போது அவள் தோளில் இவள் தட்டிய லாவகம் கண்டிப்பாக 5 வயதில் இருந்தே இருவரும் தோழிகளுக்காகத்தான் இருக்க வேண்டும். அத்தனை அன்னியோன்யம். கடை பூட்டப்பட்டது. குண்டு அம்மணியின் டிவிஎஸ்- ல் பின்னால் கடைக்காரி ஏறிக் கொண்டு அவள் தோள் பற்ற... முறுக்கு கைகளின் வழியே ஒரு முறுவலித்த முறுக்கு. அது அத்தனை ஸ்டைலிஷ் ஆக இருந்தது. ஒரு காலில் தரையில் வட்டமடித்துக் கொண்டு வண்டி பேருந்து நிலையத்தை விட்டு நகர்ந்த காட்சி... ஒரு அசல் திரைக்கதையின் ஆரம்ப காட்சி போல ஆஹா என்று புன்னகைத்துக் கொண்டேன்.

கண்கள் எதற்கோ திரும்ப மீண்டும் ஒரு திருப்பூர் பஸ். இது நான்காவது பஸ். ஆளே இல்லாத திருப்பூருக்கு எதற்கு ஐந்து நிமிடத்துக்கு ஒரு பேருந்து. ஆளாய்... பேயாய் பறந்து கொண்டிருக்கும் கோவை வாசிகளுக்கு பேருந்தே இல்லை. நேரம் ஓட நெற்றியில் நின்று எட்டி பார்க்கிறேன்.

ஒரு டஸ்கி வண்ண பெர்சிய பெண். அப்படித்தான் நான் நம்பினேன். கண் மை அப்பிய கண்களில் கொஞ்சம் சோர்வும் நிறைய ஆர்வமும். தலை வரை போர்த்தியிருந்த கறுப்பாடையில்... கவிதையை எங்கோ மறைத்திருக்கிறாள்.

ஏதோ நம்பிக்கை. அந்த கொஞ்சம் இருளில் அவள் ஒளியாய் மின்னியது போன்ற சித்திரம். இன்னும் எனக்கான பேருந்து வராதது குறித்த கவலையை யாரோ விட்டது போல நானும் விட்டிருந்தேன். அவள் கண்கள் நான்கு முறைக்கு ஒரு முறை என் பக்கம் வருவதை என் பிராபபலிட்டி சரி என்றது. வெட்கம் விட்டு புன்னகைத்து விடலாமா என்று கூட தோன்றியது. குல்லா... பிடரி முடி.. இரவில் என்னை தீவிரவாதியாக காட்டலாம். பொதுப்புத்தி. ஒதுங்கி நின்று கொண்டேன். மீண்டும் கண்கள் பேருந்தை துழாவுகிறது. AC பேருந்தெல்லாம் வருகிறது. யாருக்கு வேண்டும். கூட்டம் வழிய படியில் கூட தொங்கும் காட்சி பதைபதைக்க வைக்கிறது. என்னடா இது என்பது போல ஒரு தடுமாற்றம்.

ஒரு மணி நேரம் தாராபுரத்தில் பாலைவனம் கடந்தேன். ஆனாலும் நீருள்ள கிணறென ஒரு சிரிய தேவதை கண்களில் தாகம் தீர்த்தாள். ஒற்றை புயலென வந்த பேருந்தில் நிற்கவும் இடமில்லை. ஆனாலும் தோன்றியது. பேருந்து நிலையத்தில் நிற்பதற்கு... பேருந்துக்குள் நின்றால் ஊர் போய் சேர்ந்து விடலாம். இடது தோளில் பேக். கையில் புத்தகங்கள். ஏறி நின்று ஒடிந்து நெளிந்து வளைந்து கிடைத்த சந்தில்... அனிச்சையாய்... ஆண் இச்சையாய்... முன்னால் தேடினேன். அவளும் அப்படித்தான் முன்னால் ஏறி நின்று... அதே கணம் அதே நான் போல... தேடினால் என்று சொல்ல இயலாது. பார்த்தாள். வாய் எதையோ மென்று கொண்டே இருந்தது. மெல்லும் வாயை மனதால் மெல்ல கொறித்தேன்... கூட்டத்து அணில்... என் இரட்டை கண்களிலும் ஒற்றை இதயத்திலும். பேருந்து பல்லக்கானது இப்படித்தான். பாடல் இல்லாத... கூட்டம் நிறைந்து வழிந்த... நிற்கவும் முடியாத... உடலில் சோர்வு கொந்தளித்தவனுக்கு ஒரே ஆறுதல் அந்த நீண்ட டஸ்கி முகமும்... கண் மை அப்பிய பெர்சிய மூக்குத்தி முகமும் மட்டும் தான்.

"கணுக் காலெல்லாம் கொலுசிருக்க
மனக்கால்கள் பின் நகர கண்டேன்...
தாராபுர பஸ் ஸ்டேண்டில்
காத்திருக்கும் ஹார்மோனியமாய் நின்றேன்..."

பரோட்டாவும் கலக்கியும்

நிகழ்ச்சி 3 மணிக்கு முடிய... கிளம்பி அறைக்கு சென்று... தம்பி காதலாராவை மழையிடம் ஒப்படைத்து விட்டு... மனம் நிறைய தேனி வாசத்தோடு கிளம்பினோம். பசி என்று ஒன்றை நினைவூட்டியது எந்த கனமோ என தெரியவில்லை. 4 மணிக்கு என்ன உண்பது. சுட சுட பரோட்டா. சிக்கன் குழம்பு. கூட கலக்கி. வாய் அசைய மனம் மௌனமாய் இரண்டு நாட்களில் நடந்த பலதை... பழாப்பழம் உரிப்பது போல சிறுக சிறுக முள் அகற்றி ருசித்துக் கொண்டிருந்தது.

டியர் சுகன் சேகுவேரா எங்களை திருப்பூர் பேருந்தில் ஏற்றி விட்டு... அவன் சேலம் பேருந்தில் தொற்றிக் கொண்டான். போகிற போக்கில் போய் கொண்டேயிருக்கும் லாவகம் வாய்ந்த தனியன். இனியன்.

ஞாயிறு காலை இனி காலத்துக்கும் அது ஞாபக காலை

எழும் போதே தம்பி காதலாராவுக்கு மீண்டும் உடல்நிலை சரி இல்லை. அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரி சென்று ட்ரிப்ஸ் இறக்கி... பிறகு நாங்கள் ஒவ்வொருவராய் அறை வந்து குளித்து தயாராகி... பிறகு அவனையும் அழைத்து வந்து அறையில் படுக்க வைத்து விட்டு... பக்கத்திலேயே ஜூஸ் வாங்கி வைத்து விட்டு... வேறு வழியின்றி கிளம்பினோம். நீங்க போங்க நான் பார்த்துக்கறேன் என்று மன உறுதியோடு சொன்னான். பாதி மனதோடு கிளம்பினோம். நிகழ்வு அரங்கம் செல்கையில் மணி 10.30. நிகழ்ச்சி ஆரம்பித்திருந்தது. வழக்கம் போல பரதநாட்டியம். ஏனோ மனம் ஒன்றவே இல்லை. தம்பி உடல்நிலை சரி இல்லாமல் அறையில் இருப்பது நெருடிக் கொண்டே இருக்க... நிகழ்வுக்கு உறவினர் வீட்டில் இருந்து வந்துவிட்டிருந்த மழை.... "எங்கே காதலாரா...?" என்று கேட்கிறாள்.

ஒருவழியாக சமாளித்து நிகழ்ச்சியில் ஒன்ற ஆரம்பித்தோம். அடுத்தடுத்து தலைமை உரை... சிறப்புரை... வாழ்த்துரை என்று "மேடை"யின் இந்தாண்டு விழாவும் சிறப்பாக பற்றிக் கொள்ள ஆரம்பித்தது. எந்த பக்கம் உரசினாலும் தீ பற்றும் அலெக்ஸ் பாண்டியன் தான் நம் தம்பிகள். மேடையின் தோழர்கள் அனைவரும் கை கோர்த்து செயல் பட்டது செந்நிற நதியின் அந்தாதி.

மொத்தத்தில் அல்லது யுத்தத்தில் " தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை" ஜொலித்தது.

நிகழ்வு ஆரம்பித்த சில மணித்துளிகளிலேயே என்னுடைய "இன்னொரு நான்" சிறுகதை தொகுப்பு வெளியீடு. எனக்கு இன்ப அதிர்ச்சி தான். வெளியிட போகிறோம் என்பதை நான் மறந்தே இருந்தேன். வெகு நுட்பமாக எனது இருபது கதைகளில் ஒன்பது கதைகளை தேர்ந்தெடுத்து.... அதற்கு அட்டகாசமான அட்டைப்படம் போட்டு... அவர் எடுத்த என் புகைப்படத்தையே பின் அட்டையில் போட்டு மஞ்சள் நதியில் மிதக்க விட்டு விட்டார். நீச்சல் மறப்பது பற்றியா இந்த பயணம். நதி காண்பது பற்றி தானே. நான் இன்னொரு நானாகவே நிகழ்ந்தேன். ஒரு பக்கம் இன்குலாப் விருதும் இன்னொரு பக்கம் "இன்னொரு நான்" நூலும் இந்த வருடமும் நான் வாழ்ந்தே இருக்கிறேன்.

நன்றி விசாகன் சாருக்கு. நன்றிகள்... என்னோடு எப்போதும் இருக்கும் எம்மவர்களுக்கும். வெயிலிக்கு மயிலின் முத்தங்கள்.

"தோழர்- இயக்குனர் ராசி அழகப்பன்" எளிமையாக எழுதுங்கள் என்பதை எளிமையாகவே விளக்கினார். கம்பீர குரலில் கசடற வந்து விழுந்து கொண்டிருந்த... எழுந்து கொண்டிருந்த வார்த்தை வாக்கியங்கள் அனுபவ வீரியங்கள். ரசித்தோம். கருத்துக்களை ருசித்தோம்.

பேசிய யாவருமே... நேரம் கருதி மிக சுருக்கமாக அதே நேரம் மனதுக்கு நெருக்கமாக பேசி அமர்ந்தார்கள். ஒரு கட்டத்துக்கு பின் எங்கள் அணி மேடைக்கு அருகே உதவிகள் செய்ய வந்து விட்டிருந்தது. மாலை எடுத்து தரவும்... விருதுகளை சரி பார்த்து... அடுத்தடுத்து எடுத்து கொடுக்கவும் என்று... விழா குழுவாகி இருந்தோம்.

தஞ்சை பிரகாஷ் நினைவு விருது தம்பி "காதலாரா"வுக்கு பதில் அவன் இணையர் "மழை" வாங்கி கொள்ள.. மனம் நெகிழ்ந்த தருணம் அது. அன்பன் "விவெ" தன் முதல் விருதை மனம் நிறைந்து வாங்கிக் கொண்டது மகத்தான எதிர்காலத்தின் முதல் படி என்று நம்பினேன். இனிய நெருங்கிய நண்பர் "அம"ரின் விருதை நான் வாங்கினேன். டியர் "சுகன் சேகுவேரா" தன் விருதோடு தன் ஆசான் அண்ணன் "கோபி சேகுவேரா" விருதையும் சேர்த்து வாங்கிக் கொண்டு இறங்கினான்.

தோழி பூங்கொடி... கண்ணம்மா ரியா... மற்றும் விஜிக்கா விருதுகளை நான் வாங்கிக் கொண்டேன். தம்பி ஜெய்.... தோழர் மகேஷ் சிபி வருகை உவகை.

அதே நேரம் எனக்கான இன்குலாப் நினைவு படைப்பாக மேன்மை விருதையும் பெற்றுக் கொண்டேன். நிற்காதே ஓடு... ஓடு என்று விரட்டும் விதமாகத்தான் அந்த விருது என்னிடம் கண் சிமிட்டி பேசியது. காது குவித்து கேட்டுக் கொண்டேன். வாய் மூடி இருப்பதும்... காது திறந்து இருப்பதும் தான்... கால தேவை என்பதை சமீப வாழ்வு முறை கற்றுத் தந்திருக்கிறது.

எழுத்தாய் மட்டுமே பழகிக் கொண்டிருந்த பல முகங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு. ஓடி ஓடி வந்து... கை பிடித்து... கண்கள் படித்து... பேசிய சிலாகிப்பு. மனம் நிறைய மௌனம் விடுத்து... சிரித்து... உரையாடியது.... சித்தார்த் சார் எங்களோடு அமர்ந்திருந்தது.. புகைப்படம் எடுத்து கொண்டது... தெரிந்தவர் தெரியாதவர் என்று எந்த பாகுபாடும் இல்லை. இந்த விழாவில் சொந்தம் கூடியது என்று தான் சொல்ல வேண்டும். நிகழ்வை தோழி அம்பிகாவும்... விசாகன் சாரும்... தோழர் லட்சுமி விசாகனும் முன்னிருந்து நகர்த்திய லாவகம் கனக்கச்சிதமான திட்டமிடுதலின் செயல் வடிவம்.

வழக்கம் போல ஒற்றை யானை விசாகன் சார் தான். நிகழ்த்துக் கலைஞன்... இலக்கிய இளைஞனும் தான். உடன் நிற்பதில் பெருமிதம் தான். அம்பிகாவின் இருத்தல் மேடையின் பலம். எத்தனை எத்தனை எழுத்தாளர்கள்.. கவிஞர்கள்... கலைஞர்கள்... என்று இந்த சங்கமம் ஒரு பண்பட்ட இலக்கிய சித்திரமாக இருந்தது.

ஓடி ஓடி புகைப்படம் எடுத்த "செல்வம்" சார்.. சிம்ப்ளி சூப்பர்ப். கேமரா கிளிக் செய்வதற்கு முன் அவர் புன்னகை நம்மை கிளிக்கி விடுகிறது.

வயதில் மூத்தவர்.... "ஜெயந்தி சீனிவாசன்" அம்மையார்... அவராகவே வந்து அறிமுகம் செய்து கொண்டு... உற்சாகத்தோடு பேசி... நம்பிக்கையோடு பார்த்து... நாம் தொடர்ந்து பேசணும்... என்று சொல்லி...அலைபேசி எண் வாங்கி சென்றார். கையெடுத்து கும்பிட்டோம். என்ன ஒரு வாழ்க்கை தத்துவம். இலக்கியம் என்ன செய்யும் என்று இனி கேட்போருக்கு இதோ இலக்கியம்... இந்த முதுமையையும் இளமையாக்கும்...இந்த வயதிலும் வாழ்வைத் தேடி ஓட செய்யும். ரசனையை வளர்த்தெடுக்கும். நம்பிக்கையை மீட்டெடுக்கும் என்று சொல்லலாம்.

நேரம் ஓடிக் கொண்டே இருக்க.. கூட்டம் முழுக்க மலர் மாலைகள். புன்னகை பூக்கள். பிருந்தாவன தோட்டம். அல்லி மலர்வன கொடி படர்தல்.

திருஷ்டிக்கு சில முகஸ்துதிகள் இல்லாமல் இல்லை. மன கஷ்டத்துக்கு சில முகங்கள் இல்லாமல் இல்லை. எல்லாம் கடக்க தெரிந்த இவனுக்கு சில எல்லைகளையும் கடக்க தெரியும் தானே. ஹாஹ்.

மேடையின் தலைவர் பாஸ்கரன் சார் ஆட்டோ பிடிக்க... புத்தகத்தோடு... புத்துயிரோடு ஓடோடி வந்து அவரோடு இணைந்து கொண்டோம். அறைக்கு செல்ல. பிறகு அமைதிக்கு செல்ல.

முந்தின நாள் இரவு

எப்போதும் சுவாரஷ்யம் தான். அன்பன் "விக்கி"யின் புன்னகை இப்போதும் பூத்திருக்கிறது. குழுவின் கூட்டம் கொண்டாட்டம் தான். மற்றபடி நடந்தவையெல்லாம் சென்சார். ஹாஹ்.

முந்தின நாள் சனி நிகழ்வில் - பகலில் இரண்டு சந்திரன்கள்... இரண்டு சூரியன்கள்.

காலை முதல் அமர்வில்... "செல்வம்" சாரின் புகைப்பட யுக்தி.. கண்கள் மட்டுமா சிமிட்டியது. மூளையும் தான். போட்டோஸ் என்பது வெறுமனே போட்டோஸ் இல்லை. அது கால பதிவு என்றார். உதாரணம் சொன்னார். உண்மைகள் சொன்னார். போட்டோ... தன் உள்ளம் திறக்க நிழல் கூட வேண்டும் என்றார். வெளிச்சத்தின் உச்சத்தில் வெளிச்சத்தின் மிச்சத்தில் வெளிச்சத்தின் அச்சத்தில் எல்லாம் எல்லாம் போட்டோக்கள் தான் என்றார்.

அடுத்து "மேகா அருணாச்சலம்" அவர்கள் திரைமொழி பேசினார். திரைமொழி எனக்கு இயல்பென்றாலும்... அவர் மொழி அதில் வல்லமை கொண்டிருந்தது. மௌனமான குரலில் பெரும் பேஸ். நிறைகுடம் ஒருபோதும் ததும்பாது. உதாரணம் இவர். அருகுவதற்கு மெல்லினம். மேடையில் நிற்கையில் வல்லினம். சொல்லினம் எல்லாம் தீர்க்க வனம். தீராத நதி போல உலக சினிமாக்களின் வரிசை. உள்ளே சினிமா நெருக்கம் என்பதால் எனக்கு அவர் சொன்னவைகள் யாவற்றிலும் சித்திர சிறகு தான்.

அடுத்து உணவுக்கு பிறகு "தோழர் சந்திரமோகன்" நிகழ்த்திய நாடகம் பற்றிய உரையாடல். நாடகம் போலவே.

இடையிடையே எழுத்தாளர் முத்து விஜயன் அவர்களின் குறுக்கு கேள்விகள் தேவையாகவும் இருந்தது. கேள்விகளற்ற பதிலில் யாருக்கு என்ன இருக்கிறது.

மனிதன் காலம் இடம் மூன்றும் வேறொன்றில் நிற்க நடக்க இயங்க முயற்சிப்பது நாடகம் என்றார். ஆனால் ஒரு கேள்வியை கேட்டு விட்டு அதற்கான பதிலுக்கு ஆடியன்ஸிடம் காத்திருக்கும் நேரம்... நொடிகளாக இருப்பினும் அயர்ச்சியை உண்டு பண்ணியது. மற்றபடி நிறைய தெரிந்திருக்கிறது. ஆதலால் கொஞ்சம் டிஸ்டிரேக்சன் கூட. சட் சட்டென கிளை விட்டு போய் விடுவது அவருக்கு வழக்கமாக இருக்கலாம். நமக்கு சற்றே சோதனை. நாடகத்தின் தேவை என்ன என்று நான் எடுத்துக் கொடுத்த இடத்தில் அந்த நிகழ்வு சிறப்பாய் முடிந்திருந்தது. நாடகம் பற்றிய புரிதல் முன்பே நமக்கு இருப்பினும் தொழில் நுட்பத்தோடு இந்த அமர்வு தோளில் ஏறிக் கொண்டது.

அடுத்து " ந. முருகேசபாண்டியன்" அவர்களின் உரை. பின் நவீனத்துவம் என்பது என்ன.

மேடையை வட்டமாக்கி விட்டார். வட்டத்தின் உணர்ச்சி தெரிந்தவர். வட்டத்தின் வேள்வி புரிந்தவர்.

நிறைய விவாதங்கள். நான் மட்டுமே என்ன பேச.. நீங்களும் பேசுங்க என்று போட்டு வாங்குவதில் கில்லாடியாக இருந்தார். நவீனத்துவத்தின் அடுத்த கட்டம்... கட்டுடைப்பு... ஒன்றை வேறொன்றாய் காணுதல்... மாற்று சிந்தனை... என்று அவர் பேசியதில் இருந்து பின் நவீனத்துவத்தை நாம் புரிந்து கொண்டது... அது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு உருவகத்தை... மாற்று பார்வையைத் தருவது. எது ஒன்றும் அதுவாகவே அங்கே நின்று விடுவதில்லை. அது இன்னொன்றாக இன்னொரு முறையும் மாறும். சிம்பிளி அடிப்படைவாதத்தில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ளும் கால கண்கள் அதற்கு உண்டு.... இப்படி புரிந்து கொள்ள....

அன்றைய நிகழ்வு எனது நன்றியுரையோடு முடிவுற்றது.

இடையே ஒரு சிறு சித்திரம்

ஒரு கடையில் தேநீர் குடிக்க நேர்ந்தது. அந்த கடையில் தேனீர் தயாரித்தவருக்கு கிடாய் மீசை. நிறுத்தி நிதானமாக அவர் தேனீர் தயாரித்த காட்சி ஒரு நிகழ்த்துக் கலையாய் இருந்தது. ஒரு நாடகத்தில் நுழைந்து விட்டது போன்று தான் நம்பினேன். மனிதன் காலம் இடம் மூன்றும் வேறொன்றில் நிற்க நடக்க இயங்க முயற்சிப்பது நாடகம் என்று நேற்று மதியம் கேட்டது நினைவுக்கு வந்தது. எதை எதை எவ்வளவு சேர்க்க வேண்டும் என்று பார்த்து பார்த்து வெகு இயல்பாக நிதானமாக அவர் செய்த போதே தெரிந்து விட்டது இந்த தேனீர்க்கு ஒரு பத்தி ஒதுக்க வேண்டும் தான் போல என.

சர்க்கரை கம்மியாக என்று சொன்னதை காது கொடுத்து கேட்டு... கண்கள் வழியே....அவர் கைகளுக்கு கொண்டு சென்று பிறகு சர்க்கரையை அளவோடு எடுத்து அழகாக போட்டு டிகாஷன் பிழிந்து... கண்ணாடி கோப்பையில் அவர் தேநீரை நீட்டிய போது.... தோன்றியது... இவர் நிஜமாலுமே டீ மாஸ்டர்.

முந்தின இரவும் அதற்கு முந்திய பயணமும்

தேனி நிகழ்ச்சிக்கு இரண்டு நாள் பயணமாக வெள்ளி காலை முதலே தயாரிப்பு வேலைகள் நடந்தன. சிங்கநல்லூர்க்கு வெள்ளி மாலை 3.30 க்கு சென்று விட்டிருந்தேன். காதலராவும் மழையும் அடித்து பிடித்து பாப்பாவோடு 4 மணிக்கு வந்திருந்தார்கள். அப்போதே அவன் உடலில் சூடு கண்டோம். ஆனாலும் பயணம் எங்களை வழக்கம் போல பேச வைத்தது. பேசி பேசி களைத்த போது... தேனி தேன் மொழியோடு எங்களை வரவேற்றது. "தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை" யின் 8ம் ஆண்டு நிகழ்வுக்கு ஆவலாக வந்திருப்பது குறித்து பெரும் மகிழ்வு நமக்கு.

"தென்மேற்கு பருவக்காற்று தேனி பக்கம் வீசும் போது சாரல்...." முணுமுணுத்துக் கொண்டேன்.

- கவிஜி

Pin It