கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் எதிரிகளே தென்படவில்லை என்பது மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதலமைச்சர் ஜெயலலிதா பெருமிதத்துடன் பயன்படுத்திய சொற்றொடர். சரியாக ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போது தன்னுடைய நிலைப்பாட்டை அடியோடு மாற்றிக்கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. எதிரிகள் இருப்பதை முதலில் ஒப்புக் கொண்டிருக்கிறார். எதிரிகள் யார் என்பதை எல்லோருக்கும் தெளிவுபடுத்தியிருக்கிறார். கூடவே, எதிரிகளை எதிர்கொள்ளப் போகும் உத்திகள் பற்றியும் பேசியிருக்கிறார். எல்லாவற்றுக்கும் ஒரே காரணம்தான். டிசம்பர் பெருவெள்ளம்.

கடந்த நான்கரை ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் மீது எந்தவிதமான அதிருப்தியும் இல்லை. முதலமைச்சர் ஜெயலலிதாவின் தேர்ந்த நிர்வாகத்தாலும் துல்லியமான செயல்பாடுகளாலும் தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் சிறப்பாக இருக்கிறது, சட்டம் ஒழுங்கு அற்புதமாக இருக்கிறது. இப்போது தேர்தல் வைத்தாலும் இருநூறுக்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றி அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்றெல்லாம் அதிமுகவினர் அல்ல, ஊடகங்களும் ஊடகங்களில் வரும் பெரும்பாலான மூத்த பத்திரிகையாளர்களும் அரசியல் விமரிசகர்களும் உரத்த குரலில் முழங்கிக்கொண்டிருந்தனர்.

குறிப்பாக, ஆளும் அரசையோ, ஆளுங்கட்சியையோ விமரிசிக்க வேண்டியவர்கள் எதிர்க்கட்சியான திமுகவின் செயல்பாடுகள், திமுகவின் கடந்தகால - நிகழ்கால - எதிர்கால நிகழ்வுகள் பற்றியே பேசிக்கொண்டிருந்தனர்.

flood 600இத்தகைய முழக்கங்கள் வந்துகொண்டிருந்த சமயத்தில்தான் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியானது. ஜெயலலிதா சிறைசெல்லவேண்டியிருந்தது. ஆளும் அதிமுகவினரே சாலைகளில் இறங்கி, தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற இடங்களில் எல்லாம் போராட்டம், ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

அண்டை மாநிலங்களில் இருந்து பல்வேறு நெருக்கடிகள் வந்தன. ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அதற்காகத் தமிழக அரசிடமிருந்து அழுத்தமான கண்டனங்கள் வரவில்லை.

கர்நாடகாவில் மேகேதாட்டு அணை கட்டுகிறோம் என்ற பெயரில் தமிழக விவசாயிகளின் எதிர்காலத்துக்கு வேட்டு வைக்கும் முயற்சிகளைத் தொடங்கியது கர்நாடக அரசு.

முல்லை பெரியாறு அணை தொடர்பாக அரசியல், சட்ட ரீதியான நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டிருந்தது கேரள அரசு. அண்டை நாடான இலங்கை, தமிழக மீனவர்கள் மீது அறிவிக்கப்படாத யுத்தத்தைத் தொடர்ச்சியாக நடத்திக்கொண்டிருந்தது.

திமுக ஆட்சி முடியும்போது இருந்த ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் தமிழர்களின் அவமானச் சின்னம் என்று விமரிசித்த ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகத்தின் கடன்தொகை இரண்டு லட்சம் கோடியைத் தாண்டி ஏழெட்டு மாதங்கள் ஆகிவிட்டதாகப் பொருளாதார வல்லுநர்கள் வருத்தம் தெரிவித்தனர். போதாக்குறைக்கு, அதிமுக ஆட்சியின் மீது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தன. காங்கிரஸ் தரப்பில் ஆளுநரிடம் ஊழல் புகார் பட்டியலே தரப்பட்டது.

இத்தனை பிரச்னைகள் இருந்தாலும்கூட, தேர்தல் களம் என்று வந்தால் அதிமுகவே வெல்லும். அந்தக் கட்சியே பெருங்கட்சி. தவிரவும், எதிர்க்கட்சியான திமுக பலவீனமாக இருக்கிறது என்ற நிலைப்பாட்டிலிருந்து இறங்கிவர எந்தவொரு பத்திரிகையாளரும் நடுநிலையாளரும் தயாராகவில்லை. அத்தகைய நடுநிலையாளர்களையும் பத்திரிகையாளர்களையும் மட்டுமின்றி, முதலமைச்சர் ஜெயலலிதாவையும் இறங்கிவர வைத்திருக்கிறது சமீபத்திய வெள்ளப்பெருக்கு.

2015 நவம்பர் மாத மத்தியில் சாதாரணமாகப் பெய்யத் தொடங்கிய மழை டிசம்பர் தொடக்கத்தில் பெருமழையாக உருவெடுத்தது. அது சென்னையின் பிரதான ஏரியான செம்பரம்பாக்கம் ஏரியை நிறைத்தது. விளைவு, செம்பரம்பாக்கம் ஏரி திடீரென திறந்து விடப்பட்டது. மக்கள் அயர்ந்து தூங்கும் இரவு நேரத்தில் ஏரி திறக்கப்பட்டதால், பொதுமக்கள் பரிதவித்துப் போயினர். ஒட்டுமொத்த சென்னையே வெள்ளக்காடாக மாறியது. சென்னை மட்டுமின்றி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களும் கனமழைக்கும் பெருவெள்ளத்துக்கும் இரையாகின.

பெருவெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களைப் பாதுகாப்பதிலும் அவர்களை மீட்டெடுப்பதிலும் நிவாரணப் பணிகளைச் செய்வதிலும் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக ஊடகங்கள் முதன்முறையாக உரத்த குரல் எழுப்பின. என்றாலும், தன்னார்வத் தொண்டர்களும் அமைப்புகளும் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.

என்னதான் தன்னார்வத் தொண்டர்கள் சிறப்பான முறையில் பணிகளைச் செய்தாலும்கூட, பொதுமக்கள் அதிகம் எதிர்பார்த்தது அரசாங்கப் பணிகளைத்தான். அரசால் மட்டுமே விரிவாகவும் விரைவாகவும் நடவடிக்கை எடுக்கமுடியும் என்று நம்பினர். அதில் சிக்கல்கள் எழுந்தபோது அவர்களுடைய எதிர்பார்ப்புகள் எல்லாம் ஏமாற்றமாக மாறி, ஒருகட்டத்தில் அதிருப்திக்குரலாக உருவெடுத்தன. அந்தக் குரல்களை எல்லாம் இயன்றவரைக்கும் ஊடகங்கள் பதிவுசெய்தன. 

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிமுக அரசின் மீது அடுக்கடுக்கான விமரிசனங்களை முன்வைத்தனர். அந்த விமரிசனங்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவைக் கொஞ்சம் போல அசைத்துப் பார்த்தன. விளைவு, வெள்ளச் சேதப் பகுதிகளை விமானத்தில் சென்று பார்த்தார். அதன்பிறகு வாட்சப் வழியாக மக்களுக்கு உருக்கமான உரை ஒன்றை நிகழ்த்தினார்.

”உங்களுக்காக நான். உங்களோடு எப்போதும் நான் இருக்கிறேன். எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது. எனக்கென்று உறவினர் கிடையாது. எனக்குச் சுயநலம் அறவே கிடையாது. எனக்கு எல்லாமும் நீங்கள்தான். என் உள்ளமும் இல்லமும் தமிழகம்தான். அம்மா என்ற ஒரு சொல்லுக்காகவே என் வாழ்நாள்களை உங்களுக்காக அர்ப்பணித்து உழைத்துக் கொண்டிருக்கிறேன்.” என்று வாட்சப்பில் பேசினார் முதல்வர் ஜெயலலிதா. அந்த உரை நவீனத் தொழில்நுட்பம் வழியாக சாதாரணப் பொதுமக்களின் செவிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டன.

வெள்ளச்சேதம் குறித்தும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் குறித்தும் விமரிசனங்கள் எழுந்தபோது தலைமைச் செயலாளர் உள்ளிட்ட துறைசார் உயரதிகாரிகளின் வழியாக விளக்கம் கொடுத்தது தமிழக அரசு. இரும்புத்தலைவி என்று அதிமுகவினராலும் மூத்த அரசியல் விமரிசகர்கள் சிலராலும் ஆராதிக்கப்படும் முதல்வர் ஜெயலலிதா, வெள்ளச்சேதம் ஏற்படுத்திய வெப்பத்தை எதிர்கொள்ள அதிகாரிகளை முன்னிறுத்தியது வியப்பூட்டும் நிகழ்வு. இது ஜெயலலிதாவின் இயல்பான செயல்பாடுகளில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது.

அடுத்து, அதிமுக செயற்குழு - பொதுக்குழு கூடியது. விரைவில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் குறித்த தீர்மானங்களை நிறைவேற்றும் நோக்கத்துடன் நடந்தேறிய நிகழ்வு அது. அதில் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வியூகங்கள் வகுப்பது உள்ளிட்ட முடிவுகளை எடுக்கும் அதிகாரங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு வழக்கம்போல வழங்கப்பட்டன. அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுள் முக்கியமானது, திமுகவின் வாரிசு அரசியல் தலையெடுக்காத வகையில், ஜனநாயகம் காக்கப் போராடவேண்டும் என்று அதிமுகவினருக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானம்.

அந்த இடத்தில்தான் அதிமுக தன்னுடைய அரசியல் எதிரியை பகிரங்கமாக ஒப்புக்கொண்டது. தனக்கான எதிர்க்கட்சி திமுக என்பதைப் பதிவுசெய்ததோடு, ”வாரிசு அரசியல் தலையெடுப்பு” என்றதன்மூலம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினைத் தன்னுடைய அரசியல் எதிரியாக முதலமைச்சர் ஜெயலலிதா வரித்துக்கொண்டிருக்கிறார் என்பது வெளிப்படையானது. தவிரவும், அந்த உரையில் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பற்றி எந்தவொரு குறிப்பும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

அந்தத் தீர்மானங்களின் நீட்சியாக ஜெயலலிதா ஆற்றிய உரை வேறுசில செய்திகளையும் சொல்லியிருக்கிறது. குறிப்பாக, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்த ஜெயலலிதாவின் உள்ளக்கிடக்கை அவருடைய உரையில் எதிரொலித்தது.

ஒவ்வொரு தேர்தலிலும் அவ்வப்போது உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேர்தல் வியூகங்களை நான் அமைத்து வருகிறேன். தேர்தல் களத்தில் வெற்றி பெற நாம் பல்வேறு உத்திகளைக் கடைபிடிக்க வேண்டும். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப நான் சரியான முடிவை எடுப்பேன் என்று பேசியிருக்கிறார் ஜெயலலிதா.

அதன் அர்த்தம், கடந்த மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டது போலவே சட்டமன்றத் தேர்தலையும் தனித்தே எதிர்கொள்ள அவர் தயாராக இல்லை, அந்த உத்தி எதிர்காலத்தில் பலனளிக்காது, வெற்றியைக் கொடுக்காது என்பதுதான்.

உண்மையில், தமிழகத்தில் திமுக தவிர்த்த ஏனைய பிரதான கட்சிகளான தேமுதிக, மதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட எவரும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இல்லை. அதேசமயம், தமிழ் மாநில காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி இரண்டும் அதிமுகவுடனான கூட்டணி வாய்ப்பை நிராகரித்துவிடவில்லை.

முக்கியமாக,  பாஜக - அதிமுக கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகளையும் முற்றாக மறுத்துவிட முடியாது. ஏனென்றால், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மத்திய அரசு குறித்த அழுத்தமான விமரிசனங்கள் இல்லை. ஆக, இதுபோன்ற கட்சிகளுக்குக் கூட்டணி சமிக்ஞை காட்டியிருக்கிறார் ஜெயலலிதா என்பதுதான் அவருடைய பொதுக்குழு உரை சொல்லும் அரசியல் செய்தி. அதன்மூலம், தேர்தல் களத்தைத் தனித்து எதிர்கொள்ள அதிமுக தலைமை தயாராக இல்லை என்பது தெளிவாகியிருக்கிறது.

மேலும், பொதுக்குழுவில் ஜெயலலிதா ஆற்றிய உரையில் சற்றேறக்குறைய அறுபது சதவிகிதத்தை வெள்ளச்சேதமும் திமுக எதிர்ப்புமே ஆக்கிரமித்திருந்தன. தவிரவும், ”இனி தோல்வியில்லை, வெற்றிதான்” என்றும், ”இனி சிறுமையில்லை, பெருமைதான்” என்றும் முழங்கியிருக்கிறார். இங்கே தோல்வி, சிறுமை என்ற பதங்கள் எதைக் குறிக்கின்றன என்பது அவருக்கே வெளிச்சம். ஆகக்கூடி, ஆளும் அரசையும் ஆளுங்கட்சியையும் ஆகப்பெரிய மழையானது அசைத்து விட்டது என்பதில் அய்யமில்லை!

Pin It