திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு அரசு ஒழுங்காகச் செயல்படவில்லையாம். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப் படவில்லையாம்; இவ்வாறு சொல்லிக் கொண்டு, மக்களால் தூக்கி எறியப்பட்ட அ.தி.மு.க, மாவட்டங்கள் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது.

அ.தி.மு.க ஆட்சியில் என்ன நடந்தது என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் ஆட்சியில் கட்டியக் கட்டிடங்கள் பெயர்ந்து விழுகின்றன.அவர்கள் ஆட்சியில் கட்டியப் பாலங்கள் இடிகின்றன அல்லது வெள்ளத்தில் இழுபட்டு ஓடுகின்றன.

அவர்கள் ஆட்சியில் ஊழல்களுக்குப் பஞ்சமில்லை. இன்று துடிக்கிறார்கள் பழிவாங்கும் நோக்கம் என்று. அவர்கள் ஆட்சியில் நடந்தது கொடநாடு கொலைகள். இன்று பதறுகிறார்கள் விசாரணையைக் கண்டு.

அவர்கள் ஆட்சியில் மக்கள் பணிகளைப் பார்க்காமல், அடிமையாக பா.ஜ.கவைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சொல்கிறார்கள், தளபதியின் ஆட்சி சரியில்லையாம்.

ஸ்டாலின் முதல்வராகப் பெறுப்பேற்றவுடன் குடும்ப அட்டைக்கு 4000 ரூபாய், பேருந்துகளில் பெண்கள் - குழந்தைகளுக்குக் கட்டணமில்லாப் பயணம், பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் போன்ற தி.மு.கழகத் தேர்தல் அறிவிப்புத் திட்டங்கள் தொடங்கி இன்று வரை மக்கள் நலப்பணிகளைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறார், அவர்.

கொரோனா உச்சத்தைத் தொட்டுத் தலைவிரித்தாடிய போது அதைக் கட்டுக்குள் கொண்டு வந்தது தி.மு.கழக அரசு. வரலாறு காணா மழை வெள்ளப் பாதிப்பின் போது அ.தி.மு.கவைப்போல வானத்தில் பறந்து பார்க்காமல், மக்களைத் தேடி வெள்ளத்தில் நடந்து சென்று பார்த்தவர், பாதுகாத்தவர் முதல்வர் ஸ்டாலின்.

முப்படைத் தளபதி பிபின் ராவத், இராணுவ வீரர்கள் விபத்தில் இறந்த போது நீலகிரிக்கு நேரில் சென்று உதவிகளைச் செய்து, இன்று தென் மண்டல லெப்டினன் கர்ணலால் “நமது முதல்வர்” என்று பாராட்டப்பட்டவர், ஸ்டாலின்.

அவ்வளவு ஏன்! நீதிமன்றத்தில் நீதிபதி சொல்கிறார், “ஒரு முதலமைச்சர் செய்யவேண்டிய வேலை நேரத்தை விட கூடுதலாகப் பணி செய்கிறார் தமிழ்நாடு முதல்வர்” என்று.

“இருட்டில் இருந்து கொண்டு உலகளப்பார்” என்று கவியரசர் கண்ணதாசன் சொன்னது போல, உலகளந்து கொண்டிருக்கும் இரட்டை இலையின் போராட்டம், அவர்கள் கால ஆட்சியை மக்கள் முன் அம்பலப்படுத்திக் கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் போராட்டமாம், போராட்டம்.

சூரியனின் ஆட்சியில், இலை வாடும், வதங்கும். இது மக்களின் தீர்ப்பு!

Pin It