“புதிதாகப் பொறுப்பேற்றாரா அல்லது புதிதாகப் பிறந்தாரா?!” என்றார் தோழர் சுபவீ. முதல்வரின் ஒவ்வொரு நகர்வும் உள்ளபடியே அனைவரின் மனதில் எழுப்பும் கேள்வி இதுதான். 08.09.2021 அன்று காலை “இந்தியக் குடியிரிமைத் திருத்தச் சட்டம், 2019”-ஐ ரத்து செய்யக் கோரும் அரசினர் தனித் தீர்மானத்தை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்மொழிந்து, பேரவையின் பேராதரவுடன் நிறைவேற்றி உள்ளார்.

refugees 700குடியுரிமைத் திருத்தச் சட்டம், 2019 மசோதாவாகத் தாக்கல் செய்யப்பட்டு அவசர அவசரமாகச் சட்டமாக்கப் பட்டபோதே இந்த நாட்டின் அனைத்து ஜனநாயக முற்போக்கு அமைப்புகளும் அதனை எதிர்த்து மாபெரும் போரட்டங்களை, தொடர் விவாதங்களை எழுப்பின. ஷாஹீன்பாகுகள் எங்கும் இசுலாமியப் பெருமக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு தங்களுக்கு நேரவிருக்கும் பேராபத்துக்கு எதிராக முற்போக்கு ஆற்றல்களுடன் இணைந்து போராட்டங்களை ஒருங்கிணைத்தனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு.ஸ்டாலின் அவர்கள் தலைமையில்  நீண்ட  நெடிய பேரணிகள் நிகழ்த்தப் பெற்றன.  பல மாதங்கள் நீடித்த அந்தப் போரட்டங்கள், 2020-இல் கொரோனாப் பெருந்தொற்றுப் பரவல் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு நடைமுறைக்கு வந்த பின்பே, வேறு வழியின்றி ஓய்ந்தன. 

போராட்டங்களின் விளைவாகச் சட்டப் பாதுகாப்புடன் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்த இருந்த தேசியக் குடியுரிமைப் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடுகள் உருவாக்கல் பணி பல மாநிலங்களில் நிறுத்திவைக்கப் பட்டதாகத் தெரிகிறது. அணுக்கமாக என்னென்ன வேலைகள் நடக்கின்றன என்பது பாதிப்புகள் வெளிப்பட்டால்தான் நாம் தெரிந்து கொள்ள இயலும்.

இந்திய அரசியலமைப்பின் 14வது பிரிவின்படி இந்திய நிலப்பரப்பில் வாழும் எந்தக் குடிமகவும் சாதி, மத, இன, மொழி வேறுபாடின்றி சமமானச் சட்டப்படியானக் குடியுரிமை உடையவர்கள். 1955 குடியுரிமைச் சட்டம் அப்படித்தான் சொல்கிறது. தற்போதைய இந்துத்துவ ஒன்றிய அரசு இந்த நிலப்பரப்பில் இசுலாமியர்களின் தமிழர்களின் எண்ணிக்கையைக் கொஞ்சம் குறைத்து ஹிந்தி பேசும் இந்துக்களின் விகிதாச்சாரத்தைக் கூட்ட முடியுமா என எண்ணுகிறது. அந்தக் குறுகிய நோக்கத்துக்கு எடுத்துக் கொண்ட ஆயுதம்தான் இந்தத் திருத்தச் சட்டம்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம், “பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னர் இந்தியாவிற்குள் புலம்பெயர்ந்து குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள்,பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள்” ஆகியோருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்கிறது. இசுலாமியர் இதில் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டுள்ளனர். அது மட்டுமா? புலம் பெயரும் அண்டை நாடுகளின் பட்டியலில் இலங்கை வெகு கவனமாக விடுபட்டிருக்கிறது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய்! ஒரு திருத்தத்தால் இரண்டு எதிரிகளைக் குறைக்கும் இராஜ தந்திர நடவடிக்கை அல்லவா? ஆயினும் என்ன செய்ய? எந்தத் தந்திரமும் உண்மைக்கும் நீதிக்கும் புறம்பாக அமைவதை சமூக நீதியின் மைந்தர்கள் ஒருபோதும் பொறுத்துப் போகப் போவதில்லை.

அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மைக்கு எதிராக இசுலாமியர்களை ஒதுக்கும் இந்தச் செயலை பா.ஜ.க ஆளாத எல்லா மாநிலங்களும் எதிர்த்தன. வடகிழக்கு மாநிலங்கள் போர்க்கோலம் பூண்டன. உக்கிரமானப் போராட்டங்களை ஒருங்கிணைத்தன. இன அழிப்பு நடவடிக்கைகளால், இலங்கையிலிருந்து  தாயகம் நோக்கித் தப்பி வரும் ஈழத் தமிழர்களின் உரிமைகள் இழக்கும் ஆபத்தை நாம் மட்டுமே உணர முடியும். அவ்வகையில் இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அதை அன்றே உணர்ந்திருந்தார்.

இந்தச் சட்டத்திற்கு எதிராக முன்னாள் அ.தி.மு.க  அரசு தீர்மானம் நிறைவேற்றாமல் இசுலாமியரைச் சமாதானப்படுத்தும் முயற்சிகளையும், பொய்யான உறுதிகளையுமே அளித்தது. ஈழத் தமிழர்கள் பற்றி அவர்கள் வாய் திறக்கவும் இல்லை. ஆனால் எவ்வித உறுதிமொழியாகவோ, தேர்தல் வாக்குறுதியாகவோ கூடப் பதிவாகவில்லை என்றாலும் தன் நெஞ்சில் வைத்த ஒரு கடப்பாடாக இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வைக்க ஒரு தொடக்கப் புள்ளியாக ஸ்டாலின் அவர்கள் இந்த அரசு தனித் தீர்மானத்தை நிறைவேற்றிக் காட்டி உள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் அந்த நாட்டில் வாழ முடியாமல் தமிழகம் தப்பி வந்து முகாம்களிலும், வெளியிலும் வாழந்து வருகிறார்கள். மீண்டும் இலங்கைக்குத் திரும்ப விரும்பாமல், இங்கு குடியுரிமைப் பெற்று வாழலாம் என நினைப்பவர்களின் உரிமையை இந்தச் சட்டம் பறிப்பதையும், இலங்கைத் தமிழர்களைப் பற்றி கவலைப்படவில்லை என்பதைவிட அவர்களை வஞ்சிக்கும் செயலைச் செய்வதாக முதல்வர் அத்தீர்மானத்தை எதிர்க்க வேண்டியக் காரணங்களை விளக்கியுள்ளார்.

வரலாற்றில் தங்கள் முயற்சியின்றித் தானே உருவான இந்த நல்வாய்ப்பையும், தீர்மானத்துக்கு முன்னதாகவே வெளிநடப்பு செய்து, இழந்துள்ளனர் அ.தி.மு.க அடிமைகள்.

இந்தத் திருத்தச் சட்டத்தின் படி தேசியக் குடியுரிமைப் பதிவேடும், தேசிய மக்கள்தொகைப் பதிவேடும் உருவானால், இந்த நிலப்பரப்பில் வாழ்ந்த, வாழும் சான்றுகளைத் தர இயலாத எண்ணற்ற எளிய மக்கள், அரசின் எந்தத் திட்டங்களிலும் பங்கு பெறாத கோடானு கோடி மக்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கப் போராட வேண்டி வரும். இந்தச் சட்டம் நடைபெறும் மோடி அரசின் குறுகிய நோக்கங்களை நிறைவேற்றப் பயன்படுவதை நாம் தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும். அதற்கான முதல் கல்லை எறிந்து, இந்திய ஒன்றியத்தின் முதன்மையாகப் போற்றப்படும் முதலமைச்சராக மட்டுமல்ல, முதன்மையாகப் பின்பற்றப்படும் முதல்வராகவும் திரு.ஸ்டாலின் உயர்ந்துள்ளார்!

Pin It