1.ரகசிய வாக்கெடுப்பு கூடாதா?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதுவரை ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அப்படியிருக்க இப்போது மட்டும் ஏன் ரகசிய வாக்கெடுப்பு? ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால், கொறடாவின் ஆணையை மீறியவர்கள் யார் யார் என்று எப்படித் தெரியும்?

மேற்காணும் வினாக்கள் நியாயம் போலத் தெரியலாம். ஆனால் உண்மை வேறு மாதிரி இருக்கிறது.

இதுவரையில் தமிழகத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பது உண்மைதான். இதுவரை அப்படி ஒன்று கோரப்படவில்லை என்பதும் உண்மை. அவ்வாறு கோரிக்கை எழுந்தால் , அதனை ஏற்கவே கூடாது என்று விதிகள் ஏதுமில்லை என்பதும் உண்மை.

சாதாரண சூழலில்தான் சாதாரண விதிகள் பொருந்தும். இப்போது ஓர் அசாதாரண சூழல் நிலவுகின்றது. இதுபோல் நிலைமைகள் இருந்த நேரங்களில் எல்லாம் வேறு விதமாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 1998 இல், உ.பி.யில் ஒரே கட்சியைச் சேர்ந்த கல்யாண் சிங் மற்றும் ஜெகதாம்பிகா பால் ஆகியோரிடையே பிளவு ஏற்பட்டபோது, கூட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு (composite trust vote) எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் கூறியது. அது ரகசிய வாக்கெடுப்புதான்.

stalin Dmk memb 600

அந்த வாக்கெடுப்பு அந்த இரு பிரிவினருக்கு இடையில் மட்டுமே நடக்கும். அவர்களுள் கூடுதல் உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ, அவர்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார். ஒருவேளை அவர்களின் வாக்குகள் பிரிந்து, முதன்மை எதிர்க்கட்சியின் எண்ணிக்கையை விடக் குறைந்திருக்குமானால், தனிப் பெரும் கட்சியாக உள்ள எதிர்க்கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். ஏன் இந்த நடைமுறை இங்கு பின்பற்றப்படவில்லை?

ரகசிய வாக்கெடுப்பில், கொறடா ஆணை நிறைவேறியுள்ளதா என்று தெரியாது எனக் கவலைப்படுகின்றனர். முதலில் அவர்களுக்குள் ரகசிய வாக்கெடுப்பு நடந்திருக்குமானால், இந்தக் கேள்வியே எழாது. அது மட்டுமின்றி, இப்போது வெளிப்படையாக நடந்த வாக்கெடுப்பில், எதிர்த்து வாக்களித்த 11 பேர் மற்றும் அவைக்கே வராத ஒருவர் மீது ஏன் எந்த நடவடிக்கையும் இல்லை? பன்னீர்செல்வம், பாண்டியராஜன் ஆகிய இருவரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டு விட்டதால் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க இயலாது. சரி, மற்றவர்கள் மீதும் நடவடிக்கை இல்லையே எதனால்?

கட்சிக்கு எதிராகவும், பன்னீருக்கு ஆதரவாகவும் செயல்படும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் கட்சி நடவடிக்கை இல்லை. என்ன காரணம்?

2. மக்கள் செல்வாக்கு யாருக்கு உள்ளது?

சென்ற தேர்தலில், அ.தி.மு.க. அணி 1.75 கோடி வாக்குகளையும், தி.மு.க. அணி 1.71 கோடி வாக்குகளையும் பெற்றிருந்தன. இப்போது அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டு விட்டது. 11 உறுப்பினர்கள் கட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஒருவர் இறந்து விட்டார். ஒருவர் அவைக்கு வரவில்லை. எனவே அவர்கள் வாங்கியிருந்த வாக்குகளில் ஏறத்தாழ 10 லட்சம் வாக்குகள் அதிகாரப்பூர்வமாகப் பிரிந்துவிட்டன. மேலும் பல லட்சம் வாக்குகள் அவர்களை விட்டுப் போய்விட்டன என்பது வெளிப்படை. இந்த சூழலில், மிகுதியான மக்களின் செல்வாக்குப் பெற்றுள்ள கட்சி தி.மு.க.தானே?

3.எதிர்க்கட்சிகள் இல்லாமல் வாக்கெடுப்பு நடந்ததில்லையா?

1972இல் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறியபின், இப்படி ஒரு நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடந்தது. அன்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெளியேறிவிட்டன. அப்போது ஆளும் கட்சி மட்டுமே வாக்களித்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது.

அன்று நடந்த அந்த வாக்கெடுப்பு செல்லுமென்றால், இப்போது நடந்த வாக்கெடுப்பும் செல்லும்தானே என்று கேட்கின்றனர். இரண்டுக்கும் இடையில் மிக முதன்மையான ஒரு வேறுபாடு உள்ளது. அன்று எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இன்றோ, தி.மு.க. வெளியேற்றப்பட்டது.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் காலமும், மக்களும் விடை சொல்லட்டும்!    

Pin It