தமிழ்நாட்டைக் காக்கும் பொறுப்பும், கடமையும் திமுகவுக்கு அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டைச் சீரழிய விடக் கூடாது. தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். விரைவில் வரலாம், 3 மாதங்கள் கழித்தும் வரலாம், 6 மாதங்கள் கழித்தும் வரலாம்' என்று தலைவர் ஸ்டாலின் அவர்கள் பேசினார். சட்டம், ஒழுங்கு சீர்கேடு அடைந்திருக்கிறது. குழந்தைகள் - பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் பெருகிக் கொண்டு இருக்கின்றன. போதைப் பொருள்கள் விற்பனை சரளமாகி நாடு சீரழியும்போது அதுகுறித்துப் பேச வேண்டிய முதல்வர் விஜய் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார். செய்தியாளர்களைக் கண்டால் ஓடி ஒளிந்து இருப்பதெல்லாம் சரியாம். ஆனால் திமுகழகத் தலைவர் ஆட்சி கவிழும் என்ற நிலை வரும் என்று சொன்னால் மட்டும், ஸ்டாலின் அரசியல் உயரத்தைப் பற்றிப் பேசுகிறார் மு.வீரபாண்டியன். சரி! கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் உயரம் அன்றும், இன்றும் என்ன என்பதை அவர் அறியாமல் இருக்க மாட்டார், என்றாலும் நினைவூட்டுவது நம் கடமை.
1936ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில், திருத்துறைப்பூண்டியில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை தொடங்கப் படுவதற்கு முன்னால், இந்திய அளவில் கம்யூனிஸ்ட்டுகளின் செயல்பாடுகளை தடுக்க 1923ஆம் ஆண்டு, பெஷாவர் சதி வழக்கு, 1924இல் கான்பூர் சதி வழக்கு, 1929இல் மீரட் சதிவழக்கு என்றும், தலைமறைவு வாழ்க்கை என்றும், போராட்டங்கள்,கைது - சிறை என்றும் வளர்ந்தது கம்யூனிஸ்ட் இயக்கம். ம.சிங்கார வேலர், ப.ஜீவானந்தம், எஸ்.வி. காட்டே, பி.சுந்தரய்யா, பி.ராமமூர்த்தி, பி.சீனிவாசராவ், கே.முருகேசன், நாகர்கோயில் சி.பி.இளங்கோ, திருத்துறைப்பூண்டி முருகேசன் போன்ற தன்னலமற்ற தோழர்களால் வளர்ந்தது கம்யூனிஸ்ட் இயக்கம். 1952 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தலில் 131 இடங்களில் போட்டியிட்டு, 62 இடங்களில் வெற்றி பெற்றது கம்யூனிஸ்ட் கட்சி.
அவ்வளவு உயரத்தில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி 2026ஆம் ஆண்டில் 5 தொகுதியில் போட்டியிட்டு திருத்துறைப்பூண்டி, தளி ஆகிய இரண்டில் மட்டும் வெற்றி பெற்ற, கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் உயரம் குறைந்து போனது ஏன் என்ற கேள்விக்கு தோழர் வீரபாண்டியன் தான் பதில் சொல்ல வேண்டும்.
இங்கே இவர்!
'எங்களை அடித்தால் திருப்பி அடிப்போம்' என்று திமுகவைப் பார்த்து ஏன் பதற்றப் படுகிறார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்?
1967ஆம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டு மக்களிடம் அல்லவா மாறிமாறி அடிவாங்கிக் கொண்டு இருக்கிறது? காங்கிரஸ் கட்சியின் வரலாறு அவருக்குத் தெரியவில்லையோ?
1952 ஆம் ஆண்டு சென்னை மாகாணச் சட்டமன்றத் தேர்தலில் 152 இடங்களில் வென்றது காங்கிரஸ். அதே தேர்தலில் முதன்முதலாகக் கட்சி அங்கீகாரம் இல்லாததால் சுயேட்சைகளாகப் போட்டியிட்டு 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது திமுகழகம்.
1967ஆம் ஆண்டு நிலைமை தலைகீழாக மாறி 138 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது திமுகழகம். 'மக்கள் கொடுத்த பலமான அடியால் 152 இல் இருந்து சடசடவெனச் சரிந்து 51 ஆகி, அதுவும் 2026, இப்பொழுது 5 ஆகச் சுருண்டு போனது காங்கிரஸ். மக்கள், வாக்குகளால் கொடுத்த அடிகளை வாங்கிக் கொண்ட காங்கிரஸ், திமுகவிடம் எங்கப்பன் குதிருக்குள் இல்லை, திருப்பி அடிப்போம் என்று திமுகவிடம் வாலாட்டுகிறது.
திமுகவைப் பொறுத்தமட்டில் காங்கிரஸ் ஒரு கொசுறு. கொசு துள்ளக் கூடாது. அடிப்பார்கள் மக்கள். வேடிக்கை பார்க்கும் தி.மு.கழகம்!
- எழில்.இளங்கோவன்