அண்ணா அறிவாலயத்தில் 23-05-2026 அன்று திமுக இளைஞர் அணிபொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்,

"பாஜகவின் தொடர் வெற்றிக்கு மோடியும் அமித்ஷாவும் தான் காரணமென நினைத்திருந்தேன். ஆனால், அதற்கு முதன்மையான காரணம் காங்கிரஸ்." என்று பேசியிருந்தார். தலைவர் ஸ்டாலின் அவர்கள் காங்கிரஸ் கட்சியைப் 'போலி மதச்சார்பின்மை' என்று சொல்லியிருந்தார்.congress rss manickam tagoreஇவர்களின் இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலைச் சொல்லாமல், திமுக, அதிமுக, பாஜக கூட்டுசேர்ந்து நடிகர் விஜயை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க முயற்சி செய்தார்களாம், அதனால் காங்கிரஸ் தவெகவுக்கு முட்டுகொடுத்து இவர்கள் மந்திரிகள் ஆகிவிட்டார்களாம், சொல்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர்.

தலைவர் ஸ்டாலின் சொன்னதுபோல காங்கிரஸ் ஒரு 'போலி மதச்சார்பின்மை' என்பதை மாணிக்கம் தாகூர் ஏற்றுக் கொள்கிறாரா, இல்லையா?

நேரு அமைச்சரவையில் இந்தியாவின் முதல் துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமாக பதவிவகித்த காங்கிரஸ் தலைவர் வல்லாய் பட்டேல், 1948 செப்டம்பர் 11ஆம் நாளிட்ட கடிதத்தில், ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கருக்கு இப்படி எழுதுகிறார் :

 "காங்கிரசில் சேர்வதன் மூலமே ஆர்எஸ்எஸ் காரர்கள் தங்களின் தேசபக்தி முயற்சிகளை மேற்கொள்ள முடியுமே ஒழிய, தனியாக இருப்பதன் மூலமும், காங்கிரசை எதிர்ப்பதன் மூலமும் அல்ல...", மதச்சார்பின்மை பேசும் மாணிக்கம் தாகூரால் இதை மறுக்க முடியுமா?

நேரு அவர்கள் வெளிநாட்டுப் பயணம் சென்றிருந்தபோது, 1949 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் நாள் காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி கூடி, 'ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாகச் சேரலாம்' என்று தீர்மானம் இயற்றினார்களா, இல்லையா ?

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக சி.என்.ஸ்டீபன் 1983இல் அறிவித்தார் : 'காங்கிரஸ் பண்பாடும், இந்து பண்பாடும் ஒத்த தன்மையுடன்தான் செயல்படுகின்றன'. அன்றைய காங்கிரஸ் தலைவர் இந்திரா காங்கி அதை மறுக்கவில்லை. மாறாகத் தம்மை ஓர் உண்மையான இந்துவாகக் காட்டிக்கொள்ள எல்லா முயற்சிகளையும் செய்தார். உதாரணமாக 1983 நவம்பர் 11ஆம் தேதியன்று குருச்சேத்திரத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசுகையில் சிறுபான்மை மதத்தினர் (முஸ்லிம்கள்) தாங்கள் பிறந்த மண்ணிற்கு ஆற்றவேண்டிய கடமைகள் பற்றி அவர்களுக்கு நினைவூட்டினார்.

காஷ்மீரைப் பற்றிக் குறிப்பிடுகையில் மற்றொரு தர்மயுத்தத்திற்கான சூழ்நிலை உருவாகி வருவதாகக் குறிப்பிட்டார். அதற்குச் சிலநாள்களுக்கு முன் ஆரியசமாஜம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இந்திரா, 'நமது மதமும், நமது மரபும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன' என்றார். (இந்து இந்தி இந்தியா: எஸ்.வி.ராஜதுரை, பக்: 41).

இந்திராகாந்தி மறைவுக்குப்பின் பிரதமர் பதவிக்கு வந்த ராஜீவ் காந்தியும் ஆர்.எஸ்.எஸ்ஸைத் 'தாஜா' செய்து வந்தார். 1989 இல் நடந்த பொதுத் தேர்தலில் ராஜீவ் காங்கிரசை ஆதரித்து வேலை செய்தது ஆர்எஸ்எஸ் என்பது நினைவிருக்கலாம். ராஜீவ் ஆட்சியைக் குறித்து ஆர்எஸ்எஸ் பிரமுகர் சுவாமி சின்மையானந்தா 1985 மே 18 இல் சென்னையில் கூறியதாவது : 'முப்பது ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டு வந்த போலி மதச்சார்பின்மை என்ற மரபு மத்திய அரசாங்கத்தில் புதிய ஆட்சி வந்துள்ளதால் முறிக்கப்பட்டுள்ளது'. (அதே நூல்: 50)

ஏதோ காங்கிரஸ் தான் மதச்சார்பின்மையைப் பின்பற்றுகிறது, திமுக - பாஜகவுடன் ரகசிய உறவில் இருக்கிறது என்று பிதற்றிக் கொண்டு இருக்கும் மாணிக்கம் தாகூர், கடந்தகால அவரின் காங்கிரஸ் கட்சி ஆர்எஸ்எஸ் உடன் எப்படி உறவாடியது என்ற வரலாறைத் தெரிந்து கொண்டு பேச வேண்டும்.

நேருவின் ஆட்சிக் காலத்தில் இந்தி திணிப்புக்குக் கால்கோல் நடப்பட்டது. 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்

 குலாம் நபி ஆசாத்தால் நீட் நுழைவுத் தேர்வு திட்டம் முன்மொழியப்பட்டது. இவை பாஜகவின் கொள்கைத் திட்டம் என்பதை மாணிக்கம் தாகூர் மறந்துவிடக் கூடாது.

காங்கிரசில் காந்தியடிகள், ஜவகர்லால் நேரு இருவரால் மட்டுமே மதச்சார்பின்மை பேசப்பட்டதே ஒழிய, அடிப்படையில் காங்கிரஸ் என்பது ஒரு மறைமுகமான ஆர்எஸ்எஸ் தான்.

- எழில்.இளங்கோவன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.