அது கரூர், பொழுது இரவு...?
ஆட்சித் தலைவர் பாதிக்கப்பட்ட மக்களைக் காண ஓடோடி வருகிறார். ஆளுங்கட்சியின் மக்கள் பிரதிநிதிகள், எதிர்க்கட்சியின் பொறுப்பாளர்கள், பொதுவான இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள், எனஒரு பெருங்கூட்டம் விபத்து நடந்த இடத்தில் இருந்து மருத்துவ மனைகளுக்கு பறந்தோடுகின்றன. பதபதைப் போடும், வழியும் கண்ணீரோடும், பதட்டத்தோடும் தூக்கத்தைக் தொலைத்துக் கொண்டு செத்துப் போன ஒவ்வொரு உயிரையும் தன் வீட்டு உயிராய் உறவாய் கருதி கதறித் துடித்தபடி பரிதவிக்கிறது.
அந்த ஆணவ நடிகனால் இறந்து போனவர்களின் எண்ணிக்கை 41 ஆகிவிட்டது. குற்றுயிராய்க் கிடப் பவர்களைக் காப்பாற்றப் பக்கத்து மாவட்டங்களில் இருந்து கூடுதல் மருத்துவர்கள் வரவழைக்கப்படுகின்றனர். சுகாதாரத் துறை அமைச்சரும், பக்கத்து மாவட்டத்திலிருந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரோடு மீட்புப் பணிகளையும், சிகிச்சைப் பணிகளையும் கண்காணித்து மக்களுக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் ஏற்படுத்து கிறார்கள். இத்தனையும் ஒரே இரவில் நடக்கிறது. ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் மக்களைப் பாதுகாத்திடும் பணியில் களத்தில் நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் திராவிடமாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான்.
இரவோடு இரவாக அதிகாலை 3 மணிக்குக் கரூர் மருத்துவமனைக்கு வந்த முதலமைச்சர் இறந்து போனவர்களுக்கு கனத்த மனதோடும், இறுகிய முகத்தோடும் மலர் வளையங்களை வைத்து அஞ்சலி செலுத்தினார். பெற்றவர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறி அரசின் சார்பில் நிவாரண உதவிகளையும் அறிவிக்கிறார்.
ஆனால், இக்கொடுமைக்குக் காரணமான நடிகக் கும்பலின் ஒருவன்கூட மக்களைத் தேடி மருத்துவமனைக்கு வரவில்லை, ஓடி ஒளிந்து கொண்டனர்.
எப்போதும் தமிழ்நாட்டின் தனித்தன்மையை, தமிழ்நாட்டின் அடையாளத்தைச் சிதைத்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி ஆடிக் கொண்டிருக்கும் டில்லி வாலாக்களும், உச்சிக் குடுமிகளும், மக்களின் கருத்தில் விஷம் கலக்க முடியுமா? மக்களின் கோபத்தைத் தூண்டி அரசின் மீது திருப்பி விட முடியுமா? என்று தமது குல வழக்கப்படி சூழ்ச்சி வலையைப் பின்னுகிறது அக்கிரகாரம்.
செந்தில்பாலாஜி எப்படி உடனே வந்தார்? முதலமைச்சர் ஏன் இரவோடு இரவாக வர வேண்டும்? விடிவதற்குள் ஏன் பிரேதப் பரிசோதனை செய்தார்கள்? என்கிற முட்டாள் தனமான வினாக்களை எழுப்புகிறது அந்தக் கூடாரம். கூட்டத்தைத் திரட்டி வைத்து, சோறு தண்ணீர் இல்லாமல் காக்க வைத்து, நெரிசலை உண்டாக்கியது யார்?
கட்டுப்பாடற்ற தற்குறிக் கூட்டத்தில் குழந்தைகள், சிறார்கள், பெண்கள் எல்லோரும் மூச்சுத் திணறிச் சாவதற்கு யார் காரணம்?
ரசிகர்களின் சாவுக்கு இரங்கலும், ஆறுதலும் கூட சொல்லாமல், தலை தெறிக்க ஓடிப் போய் விமானம் பிடித்து இரவோடு இரவாக வீட்டுக்குள் போய் பதுங்கிக் கொள்கிறவன், ஒரு தலைவனா?
நூறாண்டுகளாய் நாம் நடந்து வந்த பாதையில் முளைத்திருக்கும் பார்ப்பனியக் களைகள் நிறைந்து விட்டன. அதனைக் களைய வேண்டும். அதுவரை பார்ப்பனியமும், டில்லியும் இப்படித்தான் கரூர் வழியாகத் தமிழ்நாட்டில் நுழையப் பார்க்கும். ஆனால் அது நடக்காது.
சுயமரியாதை என்பது வெறும் சொல் அன்று. அது, ஒரு வரலாறு ! நினைவில் கொள்வோம்!
- காசு.நாகராசன்