ஒவ்வொரு முறையும் கொளத்தூர் தொகுதிக்கு போகும்போதெல்லாம் மக்களை சந்திக்கும் போது மிகவும் உற்சாகம் பெறுவதாக மு.க ஸ்டாலின் பெருமையுடன் கூறுவார்; மிகவும் கவலை எடுத்து தனது தொகுதியை வளர்த்தெடுத்து அடுக்கடுக்கான திட்டங்களைக் கொண்டு வந்தார். அதே கொளத்தூர் தொகுதி இன்று முதல்வரை கைவிட்டதை அறியும்போது இதயம் வலிக்கிறது.
தனது ஐந்தாண்டு ஆட்சியை சாதனைகளின் சரித்திரம் ஆக்கினார் மு. க.ஸ்டாலின். இந்திய வரைபடத்தில் தமிழ்நாட்டை பல்வேறு துறைகளில் முதலிடத்தில் கொண்டு வந்த நிறுத்தினார். ஒன்றிய ஆட்சி வஞ்சகத்தை இவரைப் போல் துணிவுடன் வேறு எந்த மாநில முதல்வரும் எதிர் கொள்ளவில்லை.
இவர் செயல்படுத்திய பெண்களுக்கான உரிமை திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியாவின் பல்வேறு மாநிலங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தமிழ்நாட்டுப் பெண்களுக்கு கிடைத்த உரிமை பல்வேறு மாநில பெண்களுக்கும் இவரால்தான் கிடைத்தது.
பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்கும் ஆளுநரின் அத்துமீறல்களிலிருந்து மாநில உரிமைகளை காப்பாற்றுவதற்கும் இவர் மேற்கொண்ட சட்டப் போராட்டங்களும் ;அதில் கிடைத்த வெற்றிகளும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் உரிமைகளை கிடைக்கச் செய்தன.
புதிய புதிய மக்கள் நலத்திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார். அந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு மிக நேர்த்தியான செயல் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.இதை பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு குழுவினர் வந்து நேரில் கண்டறிந்து தங்கள் மாநிலங்களில் பின்பற்றினர்.
இப்படி இவர் நடத்திய ஆட்சி தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல; ஏனைய மாநிலங்களுக்கும் பயன்களை. கிடைக்கச் செய்தன. கொள்கை மாறுபாடு கொண்டவர்களையும் அவர் நேசித்தார்; அவர்களுக்கு பாராட்டுகளையும் விருதுகளையும் வழங்கினார்.
தமிழர் நாகரிகத்துக்கு முந்தையது கங்கைச் சமவெளி நாகரிகம் என்ற ஆரிய வரலாற்றுப் புரட்டை உடைத்த கீழடி நாகரீக ஆய்வுகளுக்கு ஆதரவாக நின்றார். அதற்கான அருங்காட்சியகத்தை உருவாக்கி ஆரிய புரட்டுகளுக்கு பதிலடி தந்தார்.
இந்தியாவிலேயே ஒன்றிய ஆட்சியின் மதவாத அரசியலுக்கும் மாநில உரிமை பறிப்புக்கும் எதிராக இவரது குரல் மட்டும் தான் சிங்கமாக கர்ஜித்தது. இந்தியாவிலேயே மு.க.ஸ்டாலின் ஒருவர் மட்டும்தான் பாஜகவின் அரசியலுக்கு கடும் நெருக்கடி தந்து வருகிறார் என்று எதிரிகளே ஒப்புதல் வாக்குமூலம் தந்தார்கள்.
நாடாளுமன்றத்தில் ஒன்றிய ஆட்சியை மைனாரிட்டியாக மாற்றி அமைத்த பெருமை தமிழ்நாட்டிற்கு உண்டு; ஒரு இடத்தில் கூட நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறாமல் தடுத்து நிறுத்தினார் மு.க.ஸ்டாலின். அதனால் தான் தொகுதி "மறுவரையறை" சதி தடுத்து நிறுத்தப்பட்டு அதன் பயன் தென்னகம் முழுவதற்கும் கிடைத்தது.
ஆக தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் உரிமை மீட்பராக; வழிகாட்டியாக செயல்பட்டு திராவிட மாடலுக்கு மகுடம் சூட்டினார்.
அரசியல் ரீதியாக எந்த ஒரு குற்றச்சாட்டையும் சுமத்த, முடியாமல் தீய சக்தி என்ற வெற்று முழக்கத்தோடு திரைப்பட பிம்பம் வழியாக கட்டமைக்கப்பட்ட மலிவான எதிர்ப்பு இப்போது வெற்றி பெற்று இருக்கிறது.
அடுத்த ஐந்தாண்டு காலம் தமிழ்நாட்டு மக்களின் கதி என்ன ஆகுமோ? என்று அச்சமாக இருக்கிறது. வளர்ச்சிக்கான திட்டங்கள் சீர்குலைந்து போய்; தமிழ்நாட்டை பின்னுக்குத் தள்ளி விடுமோ? என்பது பற்றி எந்த கவலையும் இல்லாமல் திரைப்பட பிம்பம் என்ற மாய வலையில் சிக்கிய வாக்காளர்கள் திமுக ஆட்சி தொடரவிடாமல் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்.
இந்த மக்கள் தீர்ப்பை வரவேற்போம் என்று சொல்வதற்கு நாம் தயாராக இல்லை. இந்த தீர்ப்பை மாற்றி எழுதுவதற்கு மக்களை தயார் செய்வோம்! அதற்கான களத்தை தீவிரப்படுத்துவோம்! தமிழ்நாட்டின் பெருமையாக நிமிர்ந்து நிற்கும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு முன்பை விட இன்னும் தீவிரமான ஆதரவை வழங்க உறுதி ஏற்போம்.
மு.க.ஸ்டாலின் அவர்களே! "லட்சியங்களும் கொள்கைகளும் தான் எனக்கு முக்கியமே தவிர வெற்றி தோல்விகள் மட்டுமல்ல"என்று நீங்கள் இப்போது வெளியிட்டுள்ள அறிக்கை உங்களின் தலைமைப் பண்புக்கு மகுடம் சூட்டி இருக்கிறது.
களத்தில் தோற்கலாம்; போராட்டம் தொடர்கிறது!
- விடுதலை இராசேந்திரன்