காங்கிரஸ் கட்சியை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பொதுவெளியில் எழுப்பி வருகிற கருத்துகளும், அதைத் தொடர்ந்து நடைபெறுகிற சமூக ஊடக விவாதங்களும், நமக்குக் கொஞ்சம் கவலையை, கோபத்தைத் தூண்டிய நிலையில்,
கடந்த நான்காண்டுகளாக, ஆளுநர் மூலம் ஒன்றிய அரசு கொடுத்து வருகிற சட்டவிரோத நெருக்கடிகள், நிதிப்பகிர்வில் ஒன்றிய பாஜக அரசின் பாரபட்சமான அணுகுமுறை, மொழித்திணிப்பு, மதவாத வெறுப்பு அரசியல், மாநிலங்களைச் சிதைக்கும் தொகுதி வரையறை என்று கடுமையான நெருப்பாற்றைக் கடந்து சமரசமற்ற கொள்கை உறுதியோடு தமிழ்நாட்டு அரசை வழிநடத்தி வருகிறார் 'திராவிடமாடல்' முதலமைச்சர் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரகள்.
தமிழ்நாடு அரசு அமைத்த வல்லுனர் குழு மாநில - ஒன்றிய அரசுகளின் உறவு குறித்த ஆய்வு அறிக்கையை மாண்புமிகு நம் முதலமைச்சரிடம் பிப்ரவரி 16 ஆம் நாள் வழங்கியிருக்கிறது. அந்த அறிக்கையின் விவரங்களையும் தேவையையும் 18.02.2026 அன்று சட்டமன்றத்தில் உரையாக ஆற்றி, அறிக்கையை அவையிலே வழங்கி இருக்கிறார் அவர்.
மாநில சுயாட்சி என்கிற முழக்கத்தை இந்திய ஒன்றியத்திலேயே முதன் முதலாக எழுப்பியது திமுக தான். 1952 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் தேர்தலில் பங்கேற்காத நிலையிலும், திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்து அதை ஆதரிக்கிறவர்களுக்கு திமுகழகம் தேர்தலில் ஆதரவு தரும் எனச் சொல்லி, 44 சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றியை திராவிடநாடு கோரிக்கையின் வாயிலாக உறுதிப்படுத்தியது திமுக.
தொடர்ந்து, 1962 பிரிவினைத் தடைச்சட்டத்தின் காரணமாக திமுகழகத்தின் திராவிடநாடு கோரிக்கையை வடிவம் மாற்றி, 1963 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்திலேயே மாநில சுயாட்சி குறித்த முழக்கத்தை எழுப்பினார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
1967 ஆம் ஆண்டு திமுகழகத்தினுடைய தேர்தல் அறிக்கையில் மாநில சுயாட்சி வலியுறுத்தப்பட்டது. பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் 1969 ஆம் ஆண்டு நீதியரசர் ராஜமன்னார் தலைமையில் ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகள், அதிகாரங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வழங்குவதற்கான வல்லுநர் குழுவை அமைத்தார்.
அத்தோடு "மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி" என்கிற முழக்கத்தையும், அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்கிற உணர்ச்சியோடு வடித்துக் கொடுத்தார் தலைவர் கலைஞர்.
1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சிக்கான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றினார் கலைஞர் அவர்கள்.
தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு திமுகழகத்தை தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பிலே அமர்த்தியபோது இந்த ஆட்சிக்கு ' திராவிடமாடல் ஆட்சி' என்று பெயர் சூட்டி, இந்த ஆட்சியின் நோக்கத்தையும் , திசை வழியையும் அடையாளம் காட்டினார் அவர்.
ஒன்றிய பாஜக அரசால் மறுக்கப்பட்ட மாநில உரிமைகளை, சட்டப் போராட்டத்தின் மூலம் பாதுகாத்து, தமிழ்நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கிற முதலமைச்சர், மாநில - ஒன்றிய அரசுகளின் இன்றைய காலகட்ட சூழலுக்கு ஏற்ற உறவு நிலை, அதிகாரப்பரவல் , பறிக்கப்பட்ட உரிமைகள் ஆகியவை குறித்து ஆராய்வதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் அவர்களுடைய தலைமையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி, தமிழ்நாடு அரசின் மேனாள் திட்டக்குழு உறுப்பினர் முனைவர் நாகநாதன் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்தார்.
அந்தக் குழுவின் அறிக்கையை 18- 2- 2026 அன்று சட்டமன்றத்தில் முன்வைத்து அந்த அறிக்கையின் மீதான முன்னுரையையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆற்றி இருக்கிறார்.
வரலாற்றில் அரசியல் சமூக தளத்தில் ஆற்றப்பட்ட பல்வேறு உரைகள் தலைசிறந்த உரைகளாக பேசப்படுகின்றன. தமிழ்நாட்டு அரசியலில், திராவிட இயக்க வரலாற்றில் டாக்டர் டி எம் நாயர் அவர்களின் ஸ்ப்பர்டாங் சாலை உரையும், தந்தை பெரியார் அவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்ட கடற்கரை உரையும், பேரறிஞர் அண்ணா அவர்களின் ராபின்சன் பூங்கா உரையும், தலைவர் கலைஞர் அவர்களின் மதுரை ஜான்சி ராணி பூங்கா உரையும் திராவிட இயக்க வரலாற்றில் சிறப்பான உரைகள். அந்த உரைகளுக்கு நிகராக, வரலாறு கொண்டாடக்கூடிய ஓர் உரையை தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ஆற்றியிருக்கிறார் .
நடைபெறுகிற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் என்பது மாநில உரிமைகளை மீட்பதற்கான போராட்டக் களம் என்பதாக நாம் எடுத்துக் கொண்டு, ஸ்டாலின் தொடரட்டும்...
தமிழ்நாடு வெல்லட்டும்! என்கிற நோக்கத்தோடு செயல்படுவோம்! வெல்வோம் ஒன்றாக!!
- காசு.நாகராசன்