இன்னும் ஆரேழு மாதங்களில் முதலமைச்சராக முடிசூடிவிட வேண்டும் என்று ஏகப்பட்ட கனவுகளில் இருக்கிறார், ஒரு 'தீர்க்கதரிசி'. அவர் காஞ்சிபுரத்திற்குப் போய் தான் ஆட்சிக்கு வந்தால் செய்வதாகக் கூறிக் கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் ஆஹா... மகா தீர்க்கதரிசனம்!
எல்லோருக்கும் நிரந்தரமான வீடு இருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள், கண்டிப்பாகக் காரும் இருக்க வேண்டும். சரி! அப்படியானால் இப்பொழுதென்ன வீடு இல்லாமல், மோட்டார் சைக்கிள் இல்லாமலா மக்கள் சாலையில் திரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று கேட்டுவிடாதீர்கள்,தீர்க்கதரிசி கோபித்துக் கொள்வார்.
திமுகழக ஆட்சியில் கலைஞர் உருவாக்கிய குடிசை மாற்றுவாரியம், சமத்துவபுரங்கள் வழியாக, இன்று கலைஞரின் கனவு இல்லத் திட்டம் வரையும் ஒரு லட்சம் வீடுகளும், கிராமப்புற ஏழை மக்களுக்காக 'சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்' என்று நடைபெற்றுக் கொண்டு இருக்கும் சிறப்பான திட்டங்களை அவருடன் இருக்கும் ஞானசூனியங்கள் யாரும் சொல்லவில்லையோ, இந்த தீர்க்கதரிசிக்கு? அதுமட்டுமல்ல மோட்டார்சைக்கிள் இல்லாத வீடுகளே இன்று இல்லை. அதிலும் கிராமங்களில் எல்லாம் அவை புல்லுகட்டு கொண்டு செல்லும் அளவுக்குப் புழக்கத்திற்கு வந்துவிட்டது. அத்துடன் நடுத்தர மக்கள் வீடுவரை காரும் வந்துவிட்டது. இது கூடத் தெரியாமலா இருக்கிறார், அந்த வருங்கால முதலமைச்சர்?
ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் டிகிரி படித்திருக்க வேண்டும், வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், கல்விப் பாடத்திட்டத்தில் சீர்திருத்தம், அதுமட்டுமல்ல அரசு மருத்துவமனைகளுக்கு பயமில்லாமல் மக்கள் சென்று வர வேண்டும், என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். அடடே! என்ன தீர்க்க தரிசனமான வார்த்தைகள்?
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, 38 மாதிரிப்பள்ளிகள், தகைசால் கல்வி, உயர் தொழில்நுட்ப ஆய்வகம், குழந்தைகளுக்குக் காலை, மாலை உணவுத்திட்டம் என அவர். ஆற்றியுள்ள கல்விப்பணியும், அதனால் கல்வியின் தரம் இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் இருக்கிறது என்று ஒன்றிய அறிக்கையில் சொல்லி இருக்கிறதே!
வருங்கால 'ஆச்சரியக் குறி' முதலமைச்சரான அந்த தீர்க்கதரிசி, கோடியில் ஒரு வார்த்தை போல, மக்கள் பயமில்லாமல் அரசு மருத்துவ மனைகளுக்குச் செல்லவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். இப்பொழுது என்ன மக்கள் பயந்து, பயந்து, முக்காடு போட்டுக்கொண்டு, இருட்டுப்பட்ட பின்னர் ஒவ்வொருவராக மக்கள் மருத்துவ மனைகளுக்குள் நுழைகிறார்களா என்று நீங்கள் கேள்வி கேட்கப்படாது!
அதுதான் சமூக ஊடகங்கள் தற்குறி, தற்குறி என்று கிழித்துக் கொண்டு இருக்கின்றனவே. ஆனாலும் ஏதோ திமுகதான் அப்படிச் சொல்வதாகச் சொல்லி, ஒரு ஆச்சரியக் குறியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார் அந்த தீர்க்கதரிசி. திமுகவுக்கு இதுதான் வேலையா? எந்தப் பைத்தியமாவது தன்னைப் பைத்தியம் என்று சொல்லுமா? இதுவும் அப்படித்தான் போலத் தெரிகிறது!
எல்லாம் 'தாமரை'யின் அஜெண்டா.
"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு" என்பார் பெரும் புலவர் திருவள்ளுவர்.
இது அரசியலுக்கும் பொருந்தும். அரிச்சுவடி கூடத் தெரியாமல் முதல்வராகும் சினிமாக் கனவுகளுக்குப் பொருந்தாது.
- தென்பாண்டியன்