கரூர் துயர நிகழ்வு நிகழ்ந்த அன்றே தமிழ்நாடு அரசிடம் அறிக்கை கேட்டிருக்கிறார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா. ஆளுநர் ரவியும் அறிக்கையைக் கேட்டிருக்கிறார்.

தமிழ்நாடு பா.ஜ.க. முன்னாள் தலைவர்கள் தமிழிசையும், அண்ணாமலையும் கரூர் சம்பவத்திற்குக் காவல்துறைதான் காரணம் என்று விஜய்க்கு ஆதரவாகப் பேசியிருக்கிறாரகள்.

ஜே.பி.நட்டா முன்னாள் நடிகை ஹேமமாலினி தலைமையில் அனுராக் தாக்கூர், தேஜஸ்விசூர்யா, பிரஜ்லால், அபராஜிதா சாரங்கி, ரேகாசர்மா, சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஷிண்டே, தெலுங்கு தேசக் கட்சியின் புட்டா மகேஷ் ஆகியோர் அடங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களை உண்மையறியும் குழுவாக அனுப்பி இருக்கிறார் கரூருக்கு. இவர்கள் அனைவரும் காவிகள்.

குஜராத்தில் 30-10- 2022 அன்று மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றுக்கு மேல் இருந்த பாலம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கானோர் ஆற்றில் மூழ்கி இறந்தார்கள்.

 03-05-2023 அன்று தொடங்கிய கலவரத்தால் மணிப்பூரில் துப்பாக்கிச் சூடுகள், பாலியல் வன்கொடுமை, பெண்கள் நிர்வாணம், உயிர்பலிகள் என்று இன்றுவரை தொடர்கிறது வன்முறைகள்.

உத்தரப் பிரதேசத்தில் 29-01-2025 அன்று நடைபெற்ற பிரயாக்ராஜ் கும்பமேளாவில் நெரிசலில் சிக்கி, பி.பி.சியின் தகவலின்படி 82 பேர் மரணம் அடைந்துள்ளார்கள்.

இங்கெல்லாம் அறிக்கை கேட்கவில்லை அமித்ஷா. உண்மை அறியும் ஒரு குழுவையும் நட்டா அனுப்ப வில்லை. இப்பொழுது தமிழ்நாட்டைக் குறிவைக்கிறது காவிக் கூட்டம்?

தமிழ்நாட்டில் பாஜக கனவு பலிக்காது. எனவே விழி பிதுங்கியிருந்த அதற்கு, நடிகர் விஜய் மாட்டிக் கொண்டார். கரூரைப் பிடித்துத் தொங்கத் தொடங்கிவிட்டது பாஜக.

அந்த தைரியத்தில் தனி வீடியோவில் விஜய், "சி.எம்.சார் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என்னை என்னவேண்டுமாலும் செய்யுங்க. தொண்டர்கள் மீது கைவைக்க வேண்டாம்" என்று நடிக்கிறார். தொண்டர்களைக் கரூர் நடுவீதியில் விட்டுவிட்டுத் தலைதெறிக்க சென்னைக்கு ஓடிவந்தது தெரியாதா? விஜயின் பாஜக சாயம் வெளுத்து விட்டது.

பாஜக வளைக்க நினைக்கிறது; விஜய் பூச்சாண்டி காட்டுகிறார். என்னதான் இவர்கள் 'சர்க்கஸ்' செய்தாலும் தி.மு.கவை அசைக்கக்கூட முடியாது இவர்களால்.

- கருஞ்சட்டைத் தமிழர்