நீதிபதி அனிதா சுமந்துக்கு குவியும் கண்டனம்

அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா ஆகியோர் சனாதனத்திற்கு எதிராக பேசியது சட்டத்திற்குப் புறம்பானது என்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், சனாதன தர்மத்தை தூக்கிப் பிடிப்பதற்காக அந்த தீர்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டார். இந்த தீர்ப்பின் நகல் கடந்த மார்ச் 7ஆம் தேதி இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது. திடீரென்று அடுத்த தினமே அந்த தீர்ப்பு இணையதளத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டது. மார்ச் 9 ஆம் தேதி பல்வேறு திருத்தங்களுடன் அந்த தீர்ப்பு மீண்டும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சனாதனம் பற்றிய கருத்துக்கள் அதில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

anitha sumanthசனாதனம் பற்றி குப்புசாமி சாஸ்திரியின் ஆய்வு மையத்தில் உள்ள பேராசிரியரின் கருத்தை நீதிமன்றம் கேட்டதாகவும், அவர்கள் தந்த விளக்கத்தின் அடிப்படையில் “சனாதன தர்மம் பிராமண - வைசிய - சத்திரிய - சூத்திர வர்ணாசிரம தர்மத்திற்கு எந்தத் தொடர்பும் கிடையாது, சனாதன தர்மம் வாழ்க்கையின் விழுமியங்களை பேசுகிறது. அது ஏற்றத்தாழ்வுகளை பேசவில்லை” என்று அந்த நிறுவனம் தங்களிடம் கூறிவிட்டதாக தீர்ப்பில் நீதிபதி அனிதா சுமந்த் சுட்டிக்காட்டி இருக்கிறார். இப்போது அது திருத்தப்பட்டிருக்கிறது.

அது என்ன திருத்தம் என்றால், சனாதன தர்மம் பிராமண - வைசிய - சத்திரிய - சூத்திர என்ற பேதங்களை மட்டுமே பேசவில்லை, அது வேறு ஒழுக்க விழுமியங்களையும் பேசுகிறது. எனவே இந்த சனாதன தர்மம் பிராமண - வைசிய - சத்திரிய - சூத்திர என்ற பேதங்களையும் பேசுகிறது என்பதை மறைமுகமாக திருத்தப்பட்ட இந்த தீர்ப்பு ஒத்துக்கொண்டுள்ளது.

இரண்டாவதாக ஜாதி அமைப்பு ஒரு ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகத்தான் தொடங்கப்பட்டது என்ற ஒரு கருத்தையும் நீதிபதி முன்வைத்துள்ளார். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் தான் ஜாதி அமைப்பு உருவானது என்பதற்கு இவர்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என்ற கேள்வி எழும் காரணத்தால் அண்மைக்காலத்தில் தான் ஜாதி தோன்றியது என்று தீர்ப்பை திருத்தி மாற்றியமைத்திருக்கிறார்கள்.

மற்றொன்று இந்துமதத்தில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் அந்த பிரிவுகள் கூறுகிற கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடுகள் இல்லை. எல்லா கருத்துகளும் ஒன்றுக்கொன்று ஒத்து போவதுதான் என்று வேலுக்குடி கிருஷ்ணன் என்ற மதப் பிரச்சாரகர் யூடியூப் ஒன்றில் ஆற்றிய உரையை நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார். வேலுக்குடி கிருஷ்ணனின் யூடியூப் உரைகள் முற்றாக அந்த தீர்ப்பில் இருந்து அகற்றப்பட்டு முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனின் கருத்தை அந்த தீர்ப்பில் சேர்த்துள்ளனர். தீர்ப்பு ஏற்கனவே 107 பக்கங்களை கொண்டிருந்தது, ஆனால் திருத்தப்பட்ட பிறகு 102 பக்கங்களாக குறைந்துள்ளது. ஆனால் முகப்பு பக்கத்தில் 107 பக்கங்களுக்கு கொண்ட அட்டவணை, அப்படியே திருத்தப்பட்ட தீர்ப்பில் இடம்பெற்றிருக்கிறது. தற்போது இது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒரு வழக்கில் மட்டும் இரண்டு தீர்ப்புகள் வந்திருக்கிறது.

மற்றொன்று சனாதன தர்மம் என்பது இந்துக்களுக்கு மட்டுமே உரித்தானது. அது இந்துக்களால் பின்பற்றப்படும் வாழ்க்கை நெறி என்பதையும் இந்த தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இணையதளத்தில் ஒரு தீர்ப்பை வெளியிட்ட பிறகு நீதிபதியால் அந்த தீர்ப்பில் ஒரு திருத்தைக்கூட மாற்றமுடியாது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஏற்கனவே தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் பசுமை தீர்ப்பாயத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்ட போது தொடரப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதியாக இருந்தவர் அதில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்ற போதும், அந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்துதான் மாற்றங்களை கொண்டுவந்தார் என்று சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இப்போது மாற்றங்களை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கருதியிருந்தால், அதை மீண்டும் பட்டியலிட்டு விசாரணைக்கு உட்படுத்தி உரிய வழக்கறிஞர்களிடம் தீர்ப்பு நகலை கொடுத்து அதற்கு பிறகே மாற்றங்களை செய்ய வேண்டுமே தவிர இவர்கள் தன்னிச்சையாக தீர்ப்பை மாற்றி எழுத முடியாது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இவர்கள் தன்னிச்சையாக சனாதனத்திற்கு விளக்கம் சொல்லுவார்கள், தன்னிச்சையாக சனாதனம் வேறு வருணாசிரமம் வேறு என்று சொல்லுவார்கள். தன்னிச்சையாக ஜாதி தோன்றிய காலத்தை நிர்ணயம் செய்வார்கள், தன்னிச்சையாக ஜாதிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூறுவார்கள், தன்னிச்சையாக இவர்கள் எழுதிய தீர்ப்பை இவர்களே மாற்றிக்கொள்வார்கள். ஆக சனாதன தர்மம் என்பது தன்னிச்சையாக ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்காக செய்யும் சர்வதேச தில்லுமுல்லுகள் என்பதைத்தான் இந்த தீர்ப்பின் மாற்றங்களும் திருத்தங்களும் உணர்த்துகிறது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It